in ,

கனவு மெய்ப்பட வேண்டும் (சிறுகதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை 

கனவு மெய்ப்பட வேண்டும்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 36)

காலையில் பில்டர் காபி குடித்துக் கொண்டு, இந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருந்த சிவராமன் மனமெல்லாம், அலைபேசி அழைப்பை எதிர்நோக்கியே இருந்தது. வங்கியில் மேலதிகாரியாகப் பணிபுரியும் சிவராமன், இருபது வருடங்களுக்குப் பிறகு, சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறான்.

அலைபேசி அழைத்தது. ஆர்வமுடன் அலைபேசியை எடுக்க “எப்படிடா இருக்க சிவராமா?” என்ற கல்லூரி நண்பன் சரவணன் குரல் மகிழ்ச்சியில் தள்ளியது

“நம்ம நண்பர்களெல்லாம் எப்படிடா இருக்காங்க? குறிப்பா கார்த்திக்”

“எல்லாரும் நல்லா இருக்காங்கடா. கார்த்திக் எப்படி இருக்கான்னு இன்னிக்கு மாலையிலே நீயே பார்க்கப் போறே” என்றான் சரவணன்

கார்த்திக் சிவராமனின் நெருங்கிய நண்பன்

“நீ சென்னைக்கு மாற்றலாகி வந்திருப்பது தெரிந்ததும் இன்றைக்கே பார்க்க வேண்டும் என்றான் கார்த்திக். பெசன்ட் நகரில் உள்ள  ‘கிருத்திகா பவன்’ சிற்றுண்டி விடுதியில மாலை 7 மணிக்கு நமக்கு இரவு விருந்து கார்த்திக்குடன்” என்றான் சரவணன்

சிவராமன் மனது, முப்பது வருடங்களுக்கு முன்னால், கல்லூரியின் கடைசி நாள், நண்பர்களிடையே நடந்த  உரையாடலை நினைவு கூர்ந்தது.

#ads – Best Deals in Amazon 👇


முப்பது வருடங்களுக்கு முன்னால்…

நண்பர்கள் தங்களுடைய கனவுகள், எதிர்பார்ப்புகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மேல் படிப்பில் மனதைச் செலுத்திய சிலர் அதற்குச் செய்ய வேண்டியதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

மற்றவர்கள் அரசு, பொதுத் துறை, தனியார் துறை, வங்கிகள் ஆகியவற்றின் வேலை  வாய்ப்புக்கள் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள்

கார்த்திக்கின் சிந்தனை வித்தியாசமாக இருந்தது. “எனக்கு ஒரு அலுவலகத்தில சேர்ந்து வருடம் ஐம்பதோ, நூறோ இன்க்ரிமென்ட் வாங்கி ஆயுசு முழுவதும் உழைப்பது பிடிக்காது. நியாயமாவும், நேர்மையாவும் உழைத்துப் பணக்காரன் ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம்.  இந்தக் கனவு மெய்ப்பட வேண்டும். அதற்கேற்ப நான் உழைக்க வேண்டும்”

சிவராமன், பொதுத்துறை வங்கியில் சென்னைக் கிளையில் வேலையில் அமர்ந்தான்

திர்பாராத விதமாக கார்த்திக்கை சந்தித்த போது, “கார்த்திக்… நான் இப்போது வங்கியிலே வேலைக்குச் சேர்ந்து விட்டேன். உன்னுடைய கனவு என்ன ஆயிற்று?” என்றான்

“சிவா, பிரபலமாகறத்துக்கும், பணக்காரனாகறத்துக்கும் சிறந்த வழி சினிமா தான். நான் சினிமாவில சேருவதென்று முடிவு பண்ணி விட்டேன். தினமும் உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம் போகிறேன். சிவாஜி, ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இவர்கள் எல்லாரும் முதல் படத்திலேயே கதாநாயகனா நடித்து முன்னுக்கு வந்தவர்கள். நானும் அப்படி வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இப்போது பிரபல டைரக்டர்கள், தயாரிப்பாளர் எல்லோரையும் போய் பார்த்து வருகிறேன்”

கார்த்திக் நன்றாக மாறியிருந்தான். அவனுடைய நடை, உடை, ஹேர் ஸ்டைல் எல்லாமே மாறியிருந்தது. “நீ இப்பவே ஹீரோ மாதிரி இருக்கே” என்றவுடன், அவன் முகம் பிரகாசமானது

“நீ தினமும் தினத்தந்தி பார்த்துக்கிட்டு இரு, கூடிய சீக்கிரமே என்னுடைய படத்தைப் போட்டு புதிய சினிமா படம் விளம்பரம் வரும்” என சொல்லிவிட்டு வேகமாகச் சென்றான் கார்த்திக்

ரு வருடம் கழிந்தது. அண்ணாசாலை உணவு விடுதி ஒன்றில் தற்செயலாக கார்த்திக்கை பார்த்தான் சிவராமன். மிகவும் மாறியிருந்தான், முன்பு பார்த்த ஹீரோ போல இல்லை

“என்னப்பா என்ன ஆச்சு உன்னோட சினிமா கனவு?” என்றான் சிவராமன்.

“சினிமாவைப் பத்திப் பேசாதப்பா. சும்மாவா சொன்னாங்க சினிமா கனவுத் தொழிற்சாலைன்னு.  எல்லாம் பொய், பித்தலாட்டம்” என்றான்

சிறிது மவுனத்திற்குப் பிறகு கார்த்திக் சினிமா அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தான்

“பெரிய டைரக்டர்’கிட்ட அசிஸ்டெண்டா சேர்ந்தேன். பாக்கியராஜ், பாண்டியராஜ், பார்த்திபன் எல்லாரும் அப்படி வந்தவங்க தான்”

“அன்னித்த ஷூட்டிங்’க்கு என்ன சீன் அப்படினு நடிக்க வருகிறவர்களுக்கு சொல்லணும். டயலாக் கொடுத்து சரியா பேசறாங்களான்னு பார்க்கணும். சீன் கண்டிநுயூட்டி பார்க்கணும். ஆரம்பத்தில நல்லா தான் இருந்தது. ஒரு சீன்ல வரதுக்குக் கூட வாய்ப்பு வரலை”

“திடீர்ன்னு ஒரு நாளைக்கு டைரக்டர் கூப்பிட்டு ஹீரோயினுக்கு அப்பாவா நீ நடிக்கிறே, நாளைக்கு ஷூட்டிங் அப்படின்னு சொன்னார்.”

“அடுத்த நாள் ஷூட்டிங். முதன் முதலா கேமரா முன்னால நிக்கப் போகிறேன். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ராத்திரி தூக்கமே வரவில்லை. ஷேவ் பண்ணி, நல்ல சட்டை பேண்ட் போட்டுக்கிட்டு காலையில சீக்கிரமே ஸ்டுடியோவுக்குப் போயிட்டேன்”

“என்னப்பா, ஹீரோ மாதிரி வந்திருக்கே. நீ நடிக்கப் போறது ஹீரோயினோட வயசான அப்பா வேஷம், அவர்  துறைமுகத்தில மூட்டை தூக்கிறவரு.”

“சொல்லி விட்டு புதுச் சட்டையை அங்கங்கே கிழிச்சாங்க. முகத்தில கருப்புப் பொடியை திட்டு திட்டா போட்டாங்க. என்னை வயசானவனா மாத்தினாங்க”

“கார்த்திக், படத்தில இது முக்கியமான சீன். சொதப்பிடாதே. சீன் என்னன்னு சொல்றேன். கவனமா கேட்டுக்க” அப்படின்னு ஒரு உதவி டைரக்டர் சொன்னார்.

“ஹீரோயினோட அப்பா துறைமுகத்தில வேலை முடிஞ்சு, தெருவில நடந்து வந்துகிட்டிருக்கார். எதிர்புறத்தில வேகமா வந்த கார் அவர் மேலே மோதி கீழே விழுந்துடறார். எல்லோரும் சும்மா வேடிக்கை பார்த்திக்கிட்டு இருக்கும் போது, ஹீரோ வந்து கீழே விழுந்தவரை தூக்கிக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேர்க்கிறார்

அப்பாவுக்கு ஆக்ஸிடண்ட் அப்படின்னு தெரிஞ்சு ஹீரோயின் பதறி ஓடி வராங்க. இவரு மட்டும் ஆஸ்பத்திரியில சமயத்தில சேர்த்திருக்கலைனா, நீ உங்க அப்பாவை உயிரோட பார்த்திருக்க முடியாது அப்படின்னு டாக்டர் சொல்றார். ஹீரோயின் நன்றியோட ஹீரோவைப் பார்க்க அவங்களுக்கு காதல் உண்டாகிறது. அப்பாவை ஆஸ்பத்திரி படுக்கையில அம்போன்னு விட்டுட்டு இரண்டு பேரும் ஆல்ப்ஸ் மலை மேலே டூயட் பாடப் போயிடறாங்க” என்று சொல்லி முடித்தான் கார்த்திக்

“கொஞ்ச வினாடியானும் திரையில வரேன் அப்படிங்கிற சந்தோஷத்தில ராஜநடை போட்டு நடந்து வந்தேன். கட், கட்ன்னு சொல்லி டைரக்டர் சீனை கட் பண்ணிட்டார்”

“கார்த்திக், மூட்டை தூக்கி வேலை முடிஞ்சு களைச்சு வர. அதுக்கேத்த மாதிரி நடந்து வா” என்றார். சொன்ன மாதிரி நடிச்சுக் கொடுத்தேன்

“வாழ்த்துக்கள், ஒரு படத்தில தலையை காட்டிட்ட. அப்புறம் ஏன் வேலையை விட்டுட்டே” என சிவராமன் கேட்க

“இங்கதாம்பா க்ளைமாக்ஸ். என்னோட நண்பர்களோட படம் பார்க்கப் போனேன். ஆவலோட எதிர்பார்த்திருந்த என்னுடைய சீன் வரவில்லை. அப்புறம் தான் தெரிந்தது. படத்தோட நீளத்தை குறைக்கணும் அப்படின்னு ஆக்ஸிடெண்ட் நடக்கிற சீனை கட் பண்ணிட்டாங்க. வெறுத்துப் போய் சினிமாவே வேண்டாம் அப்படிங்கற முடிவோட வெளியே வந்துட்டேன்”

“இப்ப நீ என்ன பண்ணிட்டு இருக்கே கார்த்திக்”

“வேலைக்கு அலைஞ்சிக்கிட்டு இருந்த போது கணேசன் சாரைப் பார்த்தேன். உனக்குத் தெரியுமா சிவா, நம்ம நாட்டில பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு. ஆனால், பெரும்பாலான இடங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. வசதிகள் இருந்தா சுற்றுலா பயணிகள் வருவது அதிகமாகும். இதனால் அந்த ஊரும் முன்னேறும்”

“கணேசன் சார் அவரோட சொந்த முயற்சியில் கொடைக்கானல், ஊட்டி இரண்டு இடத்திலேயும் தங்கும் விடுதி, சிற்றுண்டி சாலை இதெல்லாம் கட்டுவதற்க்கு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார். அவரும் பணம் போட்டு, பொது மக்கள்’கிட்டேயும் பணம் வாங்கி பண்ணிக்கிட்டு இருக்கிறார். இந்த திட்டத்தில பணம் போடறவங்களுக்கு 25 சதவீதம் வட்டியும், முதலீடு பண்ண ஆளை  கொண்டு வரவங்களுக்கு ஊக்கத் தொகையா 10 சதவீதமும் தருகிறார்”

சிவராமன் மனதில் ‘இது ஏமாற்று வேலை’ என்று தோன்றியது. ஆனால் புத்திமதியை கேட்கும் மனநிலையில் கார்த்திக் இல்லை  என புரிந்தது

“நான் இரண்டு லட்சம் முதலீடு செய்திருக்கிறேன். நண்பர்கள் என் மூலமாக ஐந்து லட்சம் முதலீடு செய்தார்கள். அதற்கான  ஊக்கத் தொகை ரூபாய் 50000 கிடைத்தது. மாதா மாதம் 25000, 30000 சம்பாதிக்க முடியும் அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவா, நீயும் ஏதாவது முதலீடு செய்”

“இல்லை கார்த்திக், பொதுத்துறை வங்கியிலே வேலை செய்யும் போது இந்த மாதிரி தனியார் நடத்தற பிஸினஸ்ல பணம் போடக் கூடாது” என்று கூறி நழுவினான் சிவராமன்

“நாட்டுக்கு நல்லது செய்யணும்னு கிளம்பறவங்களை நீங்க நம்ப மாட்டீங்க” என்று சொல்லி விட்டு கோபத்துடன் சென்றான் கார்த்திக்.

மாதங்கள் ஒடின. கார்த்திக்கை ஒரு நாள் கோயிலில் சந்தித்தான் சிவராமன்

சிவராமனைப் பார்த்தவுடன் ஓடி வந்த கார்த்திக், “என்ன சிவா, பொதுத்துறை வங்கியிலே வேலை செய்யற உனக்கு பணம் முதலீடு பண்ணற விஷயத்தில நல்லது எது, கெட்டது எதுன்னு தெரியாதா? நீ ஏன் சொல்லவில்லை” என்றான் கார்த்திக் படபடப்பாக

மேலும், “அந்த கணேசன் சரியான மோசடிப் பேர்வழி. என்னோட நல்ல காலம் நான் கம்பி எண்ணாம தப்பித்தேன்” என்றான்.

“கணேசன் பண்ணினது பொன்சி முறைமை என்ற மோசடி. இந்த மோசடியை முதலில் செய்து முதலீடு செய்தவர்களை ஏமாற்றியது சார்லஸ் பொன்சி என்கின்ற இத்தாலிய நாட்டுக்காரர்

பணத்தை முதலீடு செய்யறவங்களுக்கு, அவங்களுக்கு சேர வேண்டிய வட்டி அல்லது போட்ட முதலை திருப்பித் தருவதற்கு லாபத்திலிருந்து கொடுக்க மாட்டாங்க. புதுசாக சில பேரை சேர்த்து அவங்களோட முதலீடை வைத்து வட்டியோ முதல் போட்டதையோ கொடுத்துடுவாங்க, வந்த முதலீட்டை வைத்து ஒரு வேலையும் நடந்திருக்காது 

அதனால கையில் லாபம் இருக்காது. மத்தவங்க முதலீடு செய்யறதக்கு குறுகிய காலத்திலே, அதிக வட்டின்னு ஆசை காட்டுவாங்க. ஒரு நாளைக்கு சேர்த்த பணத்தோட தலைமறைவாய் போயிடுவாங்க

கணேசன் இந்த மோசடியை இரண்டு, மூன்று வருடமாகவே பண்ணிக்கிட்டு இருக்கார். பணம் நிறைய சேர்ந்ததும் பணத்தோட ஆசாமி அம்பேல். அவரை நம்பி கைக் காசை போட்டு, மற்றவங்களையும் போட வைச்சவங்க போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டு இருக்காங்க

என் மூலமா முதலீடு பண்ணினவங்க என்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா நண்பர்கள். என்னோட நிலைமையை புரிஞ்சிக்கிட்டு, அவங்க போட்ட பணத்தை மட்டும் கொஞ்சம் கொஞ்சமா கொடுனு சொன்னாங்க. போலீஸ்ல புகார் பண்ணலை. நானும் பணத்தை சின்ன சின்ன தவணையாக திருப்பிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன்” என புலம்பினான் கார்த்திக்

“அடுத்து என்ன செய்யறதா உத்தேசம்” என சிவராமன் கேட்க

“நான் இனி மேல் யாரையும் நம்பறதாக இல்லை சிவா. யாரை நம்பலாம், யாரை நம்பக்கூடாதுனு கண்டுபிடிக்கிற பக்குவம் எனக்கு இல்லைனு நினைக்கிறேன். பங்கு சந்தையிலே முதலீடு பண்ணி சம்பாதிக்கிறதுனு முடிவு பண்ணி இருக்கேன். அகலக் கால் வைக்காமல் நல்ல ஆராய்ச்சி பண்ணி பங்கு சந்தையில முதலீடு செய்தால் காசு பார்க்க முடியும் அப்படின்னு நம்பிக்கை இருக்கு” என்றான் கார்த்திக்

சிவராமன் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டான். கார்த்திக்குடன் தொடர்பு இருக்கவில்லை. இரண்டு வருடம் கழித்து சென்னைக்கு மாற்றலாகி வந்தவன், அவனுடைய  வங்கி கிளையில் கார்த்திக்கைப் பார்த்தான்

“சிவா, ‘கார்த்திக் மேன்பவர் ஏஜன்ஸிஸ்’னு புதுக் கம்பெனி ஆரம்பிச்சிருக்கேன். கம்பெனிக்கு வங்கிக் கணக்கு ஆரம்பிக்கணும்” என்றான்

கார்த்திக் வங்கிக்கு வந்த வேலை முடிந்ததும் இருவருமாக மதிய உணவிற்கு சிற்றுண்டி சாலைக்குச் சென்றார்கள்

“பங்குச் சந்தை வியாபாரம் என்ன ஆச்சு கார்த்திக்?” என சிவராமன் கேட்க

“நடுத்தர வர்க்கத்திற்கு பங்குச் சந்தை கஷ்டம் தான். அதிர்ஷ்டம் இருந்தா வரும், இல்லைன்னா பூஜ்யம் தான். பங்குச் சந்தை வியாபாரம் ஆரம்பத்தில  நல்லா இருந்தது. பங்கு அதிக விலைக்கு விற்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது

ஐம்பது அல்லது நூறு பங்குக்கு மேலே வாங்க மாட்டேன். பத்து சதவிகிதம் மேலே போனால் விற்று விடுவேன், விலை குறைய ஆரம்பித்ததுனா விற்று விடுவேன். அதனால் நஷ்டம் இல்லாமல் ஓரளவு பணம் வந்துக்கிட்டு இருந்தது

மனதில் இருந்த சாத்தான் சொல்லிற்று, சிறிய அளவு பங்குகள் வாங்கி வியாபாரம் பண்ணினால் பணம் சம்பாதிக்க இந்த ஜன்மம் போதாது.  துணிஞ்சு ஐநூறு, ஆயிரம் பங்குகள் வாங்கி விற்றால் லாபம் நிறைய வரும்னு

ஐநூறு, ஆயிரம் பங்குகள் வாங்க ஆரம்பித்தேன். பத்து சதவிகிதம் விலை ஏறினால் விற்காமல் 25 சதவிகிதம் ஏறட்டும்னு காத்திருந்தேன். பங்கு விலை குறைந்தால் விற்காமல், நஷ்டத்திற்கு விற்பது புத்திசாலித்தனம் இல்லை என்று நினைக்க ஆரம்பித்தேன்

புதியதாக ஒரு கம்பெனி பங்கு சந்தைக்கு வந்தது. பங்கோட முகமதிப்பு பத்து ரூபாய். ஒரு வருடத்தில இந்த பங்கோட விலை நூறு ரூபாய் தாண்டி விடும் என்று சந்தையில் செய்தி பரவியது. பங்கு விலை முப்பத்தஞ்சு ஆயிற்று, ஆயிரம் பங்குகள் வாங்கினேன். பங்கு விலை நாற்பத்து ஐந்து ரூபாய் ஆக உயர்ந்தது, இன்னொரு ஆயிரம் வாங்கினேன்

ஐந்து மாதத்தில பங்கு விலை தொன்னூற்று ஐந்து ரூபாய் ஆகியது. எண்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கின பங்கோட சந்தை விலை, ஒரு லட்சத்து தொன்னூறு ஆயிரம் ஆக உயர்ந்தது”

சிவராமனுக்கு சஸ்பென்ஸ் தாங்கவில்லை. “என்ன ஆயிற்று, விற்றாயா?” எனக் கேட்டான்

“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஒன்றுமில்லை அப்படின்னு சும்மாவா சொன்னாங்க. பங்குச் சந்தையிலே மோசடி செய்ததாக ஹர்ஷத் மேத்தா என்கிற  பெரிய பங்குச் சந்தை புரோக்கர் கைது செய்யப்பட்டார். பங்கு சந்தையில் சிலரின் உதவியுடன் செயற்கையாக சில பங்குகளின் விலையை உயர்த்தியிருக்கிறார்கள்

இன்னும் உயரும் என்று தகவல் பரப்பியிருக்கிறார்கள். இதில் நான் வாங்கிய 2000 பங்குகள் அடக்கம். பங்குகள் விலை சரிந்தது. எண்பதாயிரம் ரூபாய்க்கு வாங்கின இரண்டாயிரம் பங்குகளோட சந்தை விலை பதிநான்காயிரம் ஆனது

புது வெள்ளம் பழைய வெள்ளத்தை அடித்துக் கொண்டு போனது போல் சில நல்ல பங்குகள் விலையும் குறைந்தது. ரொம்ப நஷ்டம் இல்லாமல் விற்க முடிந்த பங்குகளை விற்றுவிட்டு ‘மேன் பவர் ஏஜன்ஸி’ ஆரம்பித்தேன்

அலுவலகங்களின் தேவைக்கேற்ப ப்யூன், கார் டிரைவர், டைபிஸ்ட், ஹோட்டல்களுக்கு சர்வர் ஏற்பாடு பண்ணிக் கொடுக்கிறோம். ஏஜன்ஸியில் பதிவு பண்ணுவதற்குப் பணம் வாங்குவதில்லை. வேலைக்கு சேரும் இடத்தில் சம்பளத்தில் 10 சதவிகிதம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்” என்றான் கார்த்திக்

துக்கப்புறம் வேலை உயர்வில் சிவராமன் டெல்லிக்கு மாற்றப்பட, செல்வதற்கு முன் சரவணன், கார்த்திக் இருவரையும் ஹோட்டலில் சந்தித்தான்

கார்த்திக் மாறியிருந்தான், சிரிப்பு அவனிடமிருந்து விடை பெற்றது போலிருந்தது

“ஏன், கார்த்திக்… ஏதேனும் பிரச்சனையா?” என சிவராமன் கேட்க

“படிப்பு முடிந்து பத்து வருடம் ஆகிவிட்டது சிவா, கூடப் படித்த நண்பர்கள் நிலையான வாழ்க்கையில் இருக்க நான் புறப்பட்ட இடத்திலேயே நிற்கிறேன். அம்மாவிற்கும், அப்பாவிற்கும் என்னைப் பத்திய கவலை. நிலையான வேலை தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன்”

“மேன் பவர் ஏஜன்ஸி என்ன ஆயிற்று” எனக் கேட்டான் சரவணன்.

“ஏஜன்ஸி வேலையில் நிரந்தர வருமானம் இல்லை. சில மாதங்கள் பணவரவு நன்றாக இருந்த்து, ஒரு சில மாதங்களிலே வருமானமே இருக்காது. தேர்தல் வந்தப்ப கூட்டத்துக்கு 100, 200, 300 ஆட்கள் ஏற்பாடு பண்ணித் தரச் சொன்னார்கள், பணம் நிறைய என்பதால் சம்மதித்தேன். அனுப்பும் ஆட்கள் முன்வரிசையில் அமர்ந்து வாழ்க, ஒழிக கோஷம் எழுப்புவார்கள்

இந்த கூட்டம் அரசியல் கூட்டத்திற்கு முக்கிய தேவை. கட்சி பாகுபாடு இல்லாமல் ஆட்கள் ஏற்பாடு செய்து கொடுத்தேன். பணமும் உடனே வந்து விடும். அப்ப தான் அந்த சம்பவம் நடந்தது” என சொல்லி விட்டுச் சிரித்தான் கார்த்திக்

“நீ ரசித்து சிரிக்கிற மாதிரி என்ன நடந்தது?” எனக் கேட்டான் சரவணன்.

“ஒரே நாளில் இரண்டு கட்சிகள் ஆட்கள் கேட்டிருந்தார்கள். நாங்கள் கட்சி கூட்டத்துக்கு ஆள் அனுப்பும் போது தலைவர் பெயர், என்ன கோஷம் என்று விவரங்கள் வாங்கி வைத்திருப்போம்

அன்றைக்கு நடந்த இரண்டு கட்சி கூட்டமும் தொலைவிலே இருந்தது. வண்டி ஏற்பாடு செய்திருந்தோம். வண்டி டிரைவர்கள் இரண்டு பேருக்கும் விலாசம் கொடுக்கும் போது விலாசங்கள் மாற, இரண்டு குழுக்களும் இடம் மாறிப் போய் விட்டது”

“அய்யய்யோ, இது பெரிய அனர்த்தம் அல்லவா?”

“கூட்டத்தில் பெரிய ரகளை. கூட்டத்திற்கு தலைமை தாங்க வருகின்ற  தலைவரை ஒழிக சொல்லி, அவரோட எதிர்கட்சித் தலைவரை வாழ்க சொல்லி, கோஷங்கள் மாறி விட்டன. தலைவர்கள் கோபித்துக் கொண்டு செல்ல, கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்கு மண்டகப்படி. எங்கள் ஏஜன்சி மூலமாக ஆட்களை ஏற்பாடு செய்யக் கூடாது என்று தலைமை உத்தரவு போட்டது

கட்சிக்காரர்கள் பணம் கொடுக்க மறுத்து விட்டார்கள். எல்லோருக்கும் நான் பணம் கொடுக்க வேண்டி வந்தது. எங்க ஏஜன்ஸிக்கு கொடுக்க வேண்டிய பாக்கியையும் கொடுக்கவில்லை, பயங்கர நஷ்டம். அரசியல் கட்சிகளை நம்பி தொழில் பண்ணி நஷ்டத்தில் முடிந்தது

பணக்காரன் ஆகணும் என்ற கனவு கலைந்து விட்டது. மாதச் சம்பளம் வருகிற மாதிரி நிரந்தர வேலை வேண்டும். அப்பா, அம்மாவிற்கு மனநிம்மதி கொடுக்க வேண்டும். இதுதான் என்னோட ஆசை”

கார்த்திக்கின் விரக்தி சிவராமனையும், சரவணனையும் வெகுவாகப் பாதித்தது.

வேலை உயர்வில் டெல்லி சென்ற சிவராமன், இப்போது அவனுடைய விருப்பப்படி சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறான்

மாலை 6:45 மணிக்கு சிவராமன் பெஸன்ட் நகர் ‘கிருத்திகா பவன்’ அடைந்தான். சரவணன் காத்துக் கொண்டிருந்தான்

தனி குளு குளு அறையில் அவர்களை அமர வைத்த ரெஸ்டாரண்ட் மேனேஜர் “சார் பத்து நிமிடத்தில வந்திடுவார்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

ஹோட்டல் சிப்பந்தி சூடான காப்பியுடன், தின்பதற்கு மிக்ஸர், வறுத்த முந்திரிப் பருப்பு ஆகியவற்றை கொண்டு வந்து வைத்தார்

“என்ன சரவணன், உபசரிப்பு எல்லாம் தடபுடலாக இருக்கு” என்றான் சிவராமன்.

“முதலாளியோட பால்ய நண்பர்கள் வந்திருக்காங்க அப்படின்னா உபசாரம் பலமாகத் தானே இருக்கும்”

“என்ன சொல்ற நீ, கார்த்திக் இந்த ஹோட்டல் முதலாளியா?” ஆச்சரியமடைந்தான் சிவராமன்

“இது மட்டும் இல்ல சிவா, கிருத்திகா ஹோட்டல் கிளைகள் சென்னையில நான்கு இருக்கு. எல்லாத்துக்கும் முதலாளி கார்த்திக். தென் இந்திய ஹோட்டல் குழுமத்தின் தலைவர் கார்த்திக்”

“இது எப்படி சாத்தியமாயிற்று” என்றான் சிவராமன்.

“இந்தக் கதையை நானே சொல்றேன் சிவா” என்று சொல்லியபடியே உள்ளே நுழைந்தான் கார்த்திக்

கார்த்திக் மாறியிருந்தான். முகத்தில் தன்னம்பிக்கையும், நினைத்ததை முடித்ததில் திருப்தியும், செல்வச் செழிப்பினால் ஏற்பட்ட களையும் தெரிந்தது.

“சிவா… எனக்குத் தெரியும். உன் மனதில் ஓராயிரம் கேள்விகள். விருந்தின் போது இதைப் பற்றிப் பேச வேண்டாம். விருந்து முடிந்த பின் உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்” என்றான் கார்த்திக்

கல்யாண விருந்து போன்ற தடபுடலான விருந்து நடந்து முடிந்தது. சிப்பந்திகள் சென்ற பின் சாய்வு இருக்கைகளில் அமர்ந்த நண்பர்களிடம், கார்த்திக் தான் ஹோட்டல் தொழிலில் நுழைந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்

“மனித சக்தி நிறுவனத்தின் மூடு விழாவிற்குப் பிறகு வேலை தேட ஆரம்பித்தேன். வேலை கிடைப்பதன் சிரமம் புரிய ஆரம்பித்தது. நேர்காணலில், ‘முன் அனுபவம் உண்டா?’ என்ற கேள்விக்கு என்னிடம் விடையில்லை. பத்து வருட வாழ்க்கையை வீணடித்து விட்டாதாக உணர்ந்தேன்

கணிப்பொறி தவிர புதியதாக எதையும் கற்றுக் கொள்ளாதது குறையாக இருந்தது. என்னிலும் சிறியவர்கள் ஆனால் என்னை விடப் படித்தவர்களுடன் போட்டி போட நேர்ந்தது. அந்த சில மாதங்கள் நரக வேதனை அனுபவித்தேன்”

சிறிது நேரம் பழைய வாழ்க்கைப் பற்றிய நினைவில் மூழ்கியிருந்த கார்த்திக் தன் அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தான்.

“தற்செயலாக மைலாப்பூர் காயத்ரி பவன் ஹோட்டல் அதிபர் ராமநாதன் சார் அவர்களைப் பார்த்தேன். அவருக்கு, ஹோட்டல் சிப்பந்திகள், மனித சக்தி நிறுவனத்தின் மூலம் ஏற்பாடு செய்திருக்கிறேன்

என் நிலையைக் கேட்ட ராமநாதன் சார், அவருடைய ஹோட்டலுக்கு கணிப்பொறி தெரிந்த நபர் தேவை என்றும், ஹோட்டல் மேலாளராக பணி ஏற்று முழு நிர்வாகத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள் என்றார்

இது என் வாழ்வில் திருப்பு முனை என்று மனதில் தோன்ற, வேலையில் சேர்ந்தேன். மூன்று மாதத்தில் ஹோட்டல் தொழில் பற்றி ஓரளவு புரிதல் ஏற்பட்டது”

“நீ சேர்ந்த போது ஹோட்டலின் நிலைமை எப்படி?” என்றான் சிவா.

“சுமாரான இலாபம்… விற்காமல் தேங்கும் உணவுப் பொருட்கள் சில நாட்களில் அதிகமாக இருந்தது. மூலப்பொருட்கள் தேவைக்கும் மேல் வாங்குவதாகத் தோன்றியது. ஹோட்டலின் கணீணீயில் நிர்வாகத்தின் எல்லா வரவு செலவுகளையும் பதிவிட்டேன். இதனால் அவ்வப்போது லாப, நஷ்ட நிலையை அறிந்து கொள்ள முடிந்தது

கணிணி மூலமாக உணவுப் பொருட்களின் விற்பனை விவரங்கள் அறிந்தேன்.  இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நாளுக்கு எந்த உணவு வகைகள், எத்தனை சமைக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடிந்தது

திட்டமிடுதலால் உணவு வீணாவது பெருமளவு தடுக்கப்பட்டது. மேலும் மூலப் பொருட்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்வது எளிதானது. இதனால் பணம் மிச்சமானதுடன் அதிகமான மூலப்பொருட்கள் தேங்காமலும் தடுக்கப்பட்டது

மாலை வேளைகளில் இளைய தலைமுறைக்காக விரைவு உணவு வகைகள் தயாரிக்க ஆரம்பித்தோம். இந்த நடவடிக்கையினால் முதல் வருடத்திலேயே லாபத்தில் கணிசமான முன்னேற்றம் தெரிந்தது. மூன்று வருடம் காயத்ரி பவனில் பணி புரிந்தேன்”

“நீ எப்படி இந்த க்ருத்திகா பவன் ஆரம்பித்தாய்?” என்றான் சிவராமன்

“பெசன்ட் நகரில் ஹோட்டல் ஒன்று விலைக்கு வந்தது. ராமநாதன் சார், என்னை வாங்கச் சொன்னார், பங்குதாரர் ஆவதாகவும் கூறினார். வங்கிக் கடனுக்கு வழி செய்தார். அவர் கைதூக்கி விட்ட வேளை ‘கிருத்திகா பவன்’ என்ற பெயருடன் ஹோட்டல் நன்றாக நடந்து கொண்டிருக்கிறது. ஐந்து வருடத்தில் வங்கிக் கடனை அடைத்ததுடன், ராமநாதன் சார் போட்ட பணத்தையும் வட்டியுடன் திருப்பிச் செலுத்தி விட்டேன்”

“கிருத்திகா பவனுக்கு கிளைகள் இருக்கிறது அல்லவா” என்றான் சரவணன்.

“ஆமாம் சரவணன். பெசன்ட் நகர், திருவல்லிக்கேணி, தியாகராய நகர், அண்ணா நகர் ஆகியவற்றில் கிளைகள். மைலாப்பூரில் ராமநாதன் சாருடைய காயத்ரி பவன் என்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளது”

“விரும்பிப் போனால் விலகிப் போகும் என்பார்கள். என்னுடைய விஷயத்தில் அது உண்மையாயிற்று. பணம் வேண்டும் என்று விரும்பி ஓடினேன். அது சோர்வையும், மனக் கஷ்டத்தையும் தந்தது

விலகிப் போனால் விரும்பி வரும் என்ற கூற்றுப் போல, வாழ்க்கைக்குத் தேவையான பணம் வந்தால் போதும் என்ற மனம் வந்த போது, தொழில் செழிக்க, பண வரவும் அதிகமாகியது”

“கார்த்திக்… நேர்மையாக உழைத்துப் பணக்காரன் ஆக வேண்டும் என்ற உன் கனவு மெய்ப்பித்து விட்டது. வாழ்த்துக்கள்” என்றான் சிவராமன்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

 

                                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. கார்த்திக் பலவித அனுபவங்களையும் பெற்றுக் கடைசியில் முன்னுக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

நேரு பார்க் (சிறுகதை) – ✍ மதுசூதன்.எஸ், பெங்களூர்

‘சஹானா’ இணைய இதழ் & ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ இணைந்து வழங்கும் – தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் 2021