sahanamag.com
Short Story Contest 2021 Entries சிறுகதைகள்

நேரு பார்க் (சிறுகதை) – ✍ மதுசூதன்.எஸ், பெங்களூர்

இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 35)

“டேய் பத்ரி, நம்ம க்ளாஸ் படிச்சானே ரகுராமன், அவன் நேத்து தவறிட்டான்டா” ஒரு வித பதற்றம் கலந்த சோகத்துடன் சொன்னான் தாமு

“எந்த ரகுராமன்டா?”

“அதான் இரண்டாவது பெஞ்சுல முத ஆளா உக்காந்திருந்தானே, சுருட்டை முடி ரகுராமன். நாம கூட சுருட்டைனு கூப்பிடுவோமே”

“யாரு? சரியா ஞாபகம் வரலை, வேற அடையாளம் சொல்லு”

“டேய் பத்ரி நம்ம டிராயிங் வாத்தியார் பொண்ணு லூர்து மேரி பின்னாலயே சுத்தினானே. இது விஷயமா நம்ம கனரா பேங்க் குமாருக்கும் அவனுக்கும் சண்டை வந்தது, மேல் கிரௌண்டுல அடிச்சிகிட்டானுங்க. அப்ப அந்த பக்கமா வந்த வெங்கடாசலம் வாத்தியார் அதைப் பார்த்துட்டு இரண்டு பேரையும் விலக்கி விட்டது ஞாபகம் வரல?”

“அட ஆமாண்டா, இப்போ தான் ஞாபகம் வருது. ஆமா என்னாச்சு அவனுக்கு?”

அரைகுறையாகத் தான் ஞாபகம் வந்தான் ரகுராமன். எண்பதுகளின் துவக்கத்தில் பள்ளிப் படிப்பு முடிந்து விடைபெறுகிற போது அவனைப் பார்த்தது, அதன் பிறகு சந்திக்க வாய்ப்பே கிடைக்கவில்லை

“நேத்து ஆபீஸ் விட்டு வந்தவுடனே களைப்பா இருக்கு, நான் ஒரு மணி நேரம் தூங்கறேன்னு அவன் வொய்ஃப்’கிட்ட சொல்லீட்டு போய் படுத்தவன் தான். கார்டியாக் அரெஸ்டு”

“அடப் பாவமே. எத்தனை குழந்தைங்க? அவங்க என்ன பண்றாங்க?”

“இரண்டு பசங்க. மூத்தவன் MBA படிச்சிட்டு ஒரு சென்னையில ஒரு கம்பெனியில HRஆ இருக்கான். சின்னவன் ஃபைனல் இஞ்சினியரிங். சரி நான் கிளம்பறேன், சுதா காத்துகிட்டு இருப்பா. ஏதோ கடைக்கு போகனும்னு சொல்லீட்டு இருந்தா”

தாமு வண்டியில் தெரு மூலை திரும்புகிற வரையில் அவனையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கண் மறைந்ததும் தான் யோசிக்க ஆர்மபித்தேன். சம வயதுக்காரர்கள் இறந்த செய்தி வரும் போது கொஞ்சம் ஆடிப் போய் விடுகிறது மனது.

இப்படித் தான் அப்பாவிற்கும் தோன்றியது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

ரகுராமனைப் போல இப்படித் தான் பல நண்பர்களின் தொடர்பு விட்டுப் போய் விட்டது. பணி நிமித்தமாக பெங்களூருக்கு மாற்றலாகி ஜெயநகரில் ஒரு சிறிய வீடு பார்த்து, வேலை செய்த நிறுவனத்தில் சாதாரண க்ளர்க்காக சேர்ந்து பதவி உயர்வு பெற்று துணைப் பொதுமேலாளராகப் பணி ஒய்வு பெற்று, மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியது

இதற்கிடையே திருமணம், குழந்தைகள், அவர்கள் திருமணம் என்று வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமாக காலம் நகர்த்திக் கொண்டேயிருந்தது எல்லாம் நினைவுக்கு வந்து போனது

நல்லவேளையாக தாமுவும் விஸ்வமும் பாஸ்கியும் இத்தனை வருடங்களாகியும் தொடர்பிலிருக்கிறார்கள். பெங்களூருக்குக் குடி பெயர்ந்தும் கடிதப் போக்குவரத்து இருந்தது. இரண்டு முறை விஸ்வம் குடும்பத்தோடு பெங்களூர் வந்திருந்தான்.

விஸ்வம் ஜவ்வரிசி வியாபாரம். அவன் குடும்ப வியாபாரம் அது.  விஸ்வத்திற்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் தன் தகப்பனுக்கு ஒத்தாசையாக வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறான்.

மகளுக்கு போன வருடம் தான் திருமணமாயிற்று. மாப்பிள்ளை திருச்சிக்காரர். வயலூருக்கு அருகில் நிலபுலன்கள் நிறைய. நல்ல இடம். பெண்ணைத் தாங்குகிறானாம் மாப்பிள்ளை. மகனுக்கு அடுத்த வருடத்திற்குள் மணம் முடிக்கும் திட்டத்தில் இருக்கிறான் விஸ்வம்.

தாமு இன்சுரன்ஸ் கம்பெனியில் நல்ல வேளையிலிருந்தான். அடிக்கடி ட்ரான்ஸ்ஃபரில் ஊர் சுற்றிக் கொண்டே இருப்பான்.

தாமுவிற்கு ஒரே மகன். மும்பையில் ஏதோ அரசு உத்யோகம். திருமணமாகி விட்டது. மருமகள் குஜராத் பெண். ஆனாலும் நல்ல சுபாவம். இப்படி ஸ்நேகத்துடன் மருமகள் அமைவதற்கு தாமுவும் சுதாவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

பாஸ்கி பெரிய ஆடிட்டர். தொட்டதெல்லாம் பொன் என்பார்களே அப்படி. நல்ல சம்பாத்யம். சமூகத்தில் நல்ல பெயர். என்ன உயரத்தில் இருந்தாலும் எங்களிடம் அவன் அதே பாஸ்கி தான்.

பலர் காசு கொஞ்சம் வந்தவுடன் நிறம் மாறிவிடுகிறார்கள். இவன் அப்படியல்ல. ஆரம்பத்தில் பழகிய அதே ஸ்நேகம். அதே பாஸ்கி, அதே ‘டேய் வெங்காயத்தான்’ என்று அழைக்கும் அதே உரிமை.

பாஸ்கிக்கு இருக்கும் ஒரே குறை குழந்தை வரன் இல்லாதது. அவன் மனைவி ஜானகி ஒரு சாந்த சொரூபி. அவள் மணக்க மணக்க செய்து தரும் அந்த ரவா கேசரிக்காகவே நான் பாஸ்கி வீட்டுக்குப் போன காலம் உண்டு.

எல்லா வசதிகள் இருந்தும் வாரிசில்லாமல் இருப்பது ஒரு வருத்தம் அவர்களுக்கு. ஒரு குழந்தையை தத்து எடுக்கலாம் என்று கூட நினைத்தார்கள். ஆனால் அந்த முடிவை மாற்றிக் கொண்டு வசதியில்லாத தன் தம்பி குடும்பத்தை பாஸ்கி தான் பராமரித்து வருகிறான்.

தம்பி மகள் வர்ஷினியை இவன் தான் இஞ்சினியரிங் படிக்க வைக்கிறான். அவள் பெரும்பாலும் இவர்கள் வீட்டில் தான் இருப்பாள். நாளை வர்ஷினிக்குத் திருமணம் என்றால், இவன் தான் எல்லாம் செய்வான் என்பதும் எனக்குத் தெரியும்.

இருப்பது ஒரே ஊரானாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் நாங்கள் சந்திப்பது. அதுவும் நான் தான் அந்த சந்திப்பு நிகழ முன்னெடுக்க வேண்டும். எங்கேயாவது ஒரு ஓட்டலில் அல்லது நேரு பார்க்கில் வழக்கமாக அமரும் புல்தரையில்.

விஸ்வம் சரியான நேரத்தில் வந்து விடுவான். கடையைப் பார்த்துக் கொள்ள ஆள் இருக்கிறது. நானும் தாமுவும் ரிட்டையர்டு. கால தாமதமாகாது. இந்த பாஸ்கி வருவதற்கு நேரம் பிடிக்கும். திடீரென க்ளையன்ட் வந்து விடுவார்கள். எப்படியாவது அட்ஜஸ்ட் செய்து ஒரு அரை மணி தாமதமானாலும் வந்து விடுவான்.

முதலில் பாஸ்கி தான் ஆரம்பிப்பான். அவனுக்கு விஸ்வத்தை  சீண்டுவது அத்தனை இஷ்டம்

“என்னடா மாப்ள சியாமளாவைப் பார்த்தியா? எப்படி இருக்கா?”

உடனே  பாஸ்கியை ஒரு கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்குவான் விஸ்வம். ‘சியாமளா சியாமளா’ என்று உருகி உருகி பின்னால் ஓடினான். அது ஆரம்பத்தில் சற்று பிகு செய்தது. அப்புறம் அதற்கும் ஒரு இது வந்து விட்டது போல. இவன் காதலை ஒத்துக் கொண்டது.

மூன்று ஆண்டுகள் காதல். திடீரென திசை மாறியது. சியாமளா வீட்டில் வேறு யாருக்கோ திருமணம் செய்து வைத்தார்கள். விஸ்வம் எவ்வளவு முயற்சி செய்தும் கை கூடவில்லை. கொஞ்ச நாள் மட்டும் சோகமிருந்தது. அப்புறம் பத்மா, பூரணி என்று துரத்த ஆரம்பித்தான்.

“டேய் சியாமளாவைப் பாத்து ஒரு ஆறு மாசம் இருக்கும்டா” என்று ஆரம்பித்து என்னவோ இன்னும் அந்தப் பெண் இவனை நினைத்து உருகுவதைப் போலக் கதை விடுவான்.

இது பொய்யென்று எங்களுக்குத் தெரிந்தாலும் அவன் கதை விடுவதைக் கேட்டுக் கொண்டு தானிருப்போம். நடுவில் வேண்டுமென்றே பாஸ்கி தானும் சியாமளாவை அப்போது காதலித்தாகச் சொல்லுவான். வேண்டுமென்றே வர்ணிப்பான்.

இது விஸ்வத்தை இன்னும் வெறியேற்றும். இன்னும் நாலைந்து கெட்ட வார்த்தைகளில் திட்டுவான். அடுத்தது,மெல்ல தாமுவைச் சீண்டுவோம். எங்கள் க்ளாஸ்மேட் கோமதி  மீது இவன் அந்தக் காலத்தில் கவிதைகள் எழுதினான்.

ஒரு முறை தன் காதலை சொல்கிறேனென்று ஒரு கவிதையை எழுதித் தர அந்தப் பெண் இவனை சகட்டு மேனிக்குத் திட்டி விட்டது. இது நடந்து ஏறத்தாழ நாற்பது வருடங்களாகியிருக்கும்.

கோமதி பேரன் பேத்தி எடுத்திருப்பாள். இருந்தாலும் இப்படி பழைய விவகாரங்களைப் பேசி ஒருவரை ஒருவர் கலாட்டா செய்து கொள்வது எங்கள் சந்திப்பில் அடிக்கடி நடக்கும்.

அப்புறம் அந்தக்கால கிரிக்கெட், இந்தக் கால அரசியல் என்று ஒரு இரண்டு மணி நேரம் ஓடிவிடும். எத்தனை வயதானாலும் பால்யத்திலிருந்து பழகிய ஸ்நேகிதர்களோடு,  நடந்த விஷயங்களை அசை போடுவது எவ்வளவு பெரிய ஆனந்தமான விஷயம் தெரியுமா?

நாங்கள் அனைவரும் சந்தித்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டது. இந்த முறை ஞாயிறன்று சாரதி கஃபேயில் டிஃபனை முடித்துவிட்டு நேராக நேரு பார்க்கில் சந்திப்பதாக முடிவெடுத்தோம்.

தோ அந்த ஞாயிறும் வந்து விட்டது. எல்லொரும் சொன்ன நேரத்தில் வந்தாயிற்று. நான் வழக்கம் போல இட்லி மசால் தோசை, தாமு அவனுக்குப் பிடித்த சாம்பார் வடை

பாஸ்கி உணவுப் ப்ரியன். இட்லி முடித்து பூரி ஒரு செட் முடித்து ரவா தோசையும் சேர்த்துக் கொண்டான். விஸ்வம் இரண்டு சாதா தோசைகள்.

டிஃபன் முடித்ததும் நேரு பார்க்கில் கூட்டமில்லாத பகுதியில் புல் தரையில் அமர்ந்து கொண்டோம். வழக்கம் போல பேச்சு ஆரம்பித்தது விஸ்வம் தன் திருப்பதி பயணத்தைப் பற்றிச் சொன்னான்.

தாமு தன் மச்சினன் வாங்கித் தந்த மொபைலைக் காட்டினான். பாஸ்கி எப்போதும் போல க்ளையன்டுகள் புராணம். இதற்கு நடுவே நான் என் புத்தக வாசிப்புகளைப் பற்றி பேசினேன்.

இந்த முறை சியாமளா பற்றி விஸ்வமே ஆரம்பித்தான். இவன் தொடங்கியதும் பாஸ்கி எதற்கு சிரித்துத் தொலைத்தான் எனத் தெரியாது, விஸ்வத்துக்கு கோபம் வந்து விட்டது. உடனே கத்த ஆரம்பித்தான்.

அந்தப் பக்கம் போன இரண்டு சிறுவர்கள் எங்களை வித்யாசமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள்.  இருக்காதா பின்னே? இந்த வயதில் சண்டை போட்டுக் கொண்டால் சிறுவர்களுக்கு ஆச்சர்யம் தானே. எப்படியோ சமாதானம் ஆனான் விஸ்வம்.

பேச்சுக்கு நடுவே தாமு,  “டேய் என் மகன் எங்களை பாம்பேக்கே Once for all வரச் சொல்றான்டா. இங்கே இருந்தது போதும் என்கிட்ட வந்து இருங்க. பேரன் கூட விளையாடிட்டு  சந்தோஷமா இருங்கன்றான். என்ன செய்ய?”

“தாமு… ஒரு கட்டத்துல சில மாற்றங்கள் தேவை. நீங்க இரண்டு பேரும் இங்கே தனியா தான இருக்கீங்க. பையன் மருமகள் கூட கொஞ்ச நாள் போய் இருங்க. ஒரேடியா இருக்கனும்னு  கூட அவசியம் இல்லை. ஒரு ட்ரையல் தான்.

நம்ம கால வாழ்க்கை முறை வேற நம்ம பசங்க கால முறை வேற. அவங்க கூட ஒட்ட கொஞ்ச நாளாகும். சில விஷயங்கள் பிடிக்காது. அனுசரிச்சு போங்க. இதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்டா. வயசாகும் போது இந்தாப்பா நான் இருக்கேன் என்னை புடிச்சிக்கோ. நீ விழ மாட்டேன்னு சொல்ற மகனோ இல்லை அம்மா உன் மடியில நான் கொஞ்ச நேரம் படுத்துக்கவான்னு கேக்கற மகளோ இருக்கணும்டா.

மகன் கூட கத்தி சண்டை போட்டாலும், ‘அவன் சாப்பிட்டானாடி’னு நாம கேக்கறதும், அவன் தன் அம்மாகிட்ட வந்து ‘அப்பா சாப்பிட்டாராமா, B.P மாத்திரை போட்டுகிட்டாரா’னு அனுசரணையா கேக்கறதுக்கு மகன் இருக்கறதுக்கும் அதிர்ஷ்டம் செஞ்சிருக்கணும்டா” என்று சொல்லச் சொல்ல, உடைந்து அழுதே விட்டான் பாஸ்கி

இப்படி அழுகிற பாஸ்கியை நாங்கள் பார்த்ததே இல்லை. நான் மெல்ல பாஸ்கியை தட்டிக் கொடுத்தேன். தாமு எழுந்து வந்து பாஸ்கியைக் கட்டிக் கொண்டான். விஸ்வம் பாஸ்கி கண் கலங்கியதை பார்க்க சகிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

பாஸ்கிக்கு எத்தனை வலி இருந்திருந்தால் இப்படி அழுவான் என்று உணர முடிந்தது.  கூடச் சேர்ந்து சிரிப்பதற்கு நல்ல நண்பர்கள் எப்படித் தேவையோ, உடைந்து அழுவதற்கும் நண்பர்கள் தேவை

எப்பேர்ப்பட்ட பாரம் இருந்தாலும் ஒரு முறை அழுது தீர்த்துவிட்டால் பாரம் இறங்கிவிடுகிறது. அதற்கு நல்ல சாய்ஸ் நல்ல நண்பன் தான். நானும் தாமுவிடம் இப்படி உடைந்து அழுதிருக்கிறேன்

“டேய் பத்ரி நீ ஜெயிக்கப் பிறந்தவன்டா, நீ தான்டா எனக்கு ஒரு ரோல் மாடல். நீயே அழுதா எப்படி? வலி தாங்கப் பழகு” என்று ஆறுதல் சொன்ன சமயங்களும் உண்டு.

நிலைமை சகஜமாக சற்றுத்  நேரம் பிடித்தது. விஸ்வம் பாஸ்கியை அழைத்துக் கொண்டு தம்மடிக்க வெளியே போனான்.

அவர்கள் போனதும் நானும் தாமுவும் எதையோப் பேசிக் கொண்டிருந்தோம். அவன் அநேகமாக மகனுடன் போய் நிரந்தரமாகத் தங்க வாய்ப்புகள் அதிகமிருப்பதாகப்பட்டது

தாமு மும்பைக்கு குடி பெயர்ந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டது. வாட்ஸ் அப் வீடியோ காலில் பேசுவான். அவனும் சுதாவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். ஒரே மருமகள் புராணம் தான்

ஒரு நாள் விடியற்காலை பாஸ்கியின் ஃபோன். முதலில் பேச்சே வரவில்லை. தேம்பி அழுகிற சத்தம் தான் வந்தது

“டேய் பாஸ்கி என்னாச்சு? என்ன விஷயம்?” 

ஒரு வழியாக சுதாரித்துத் கொண்ட பாஸ்கி, “டேய் பத்ரி, விஸ்வம் நம்மள விட்டுப்  போயிட்டான்டான்”னு சொன்னவுடன், மீண்டும் அழ ஆரம்பித்து விட்டான்.

“அய்யோ, அடக் கடவுளே. டேய் என்ன ஆச்சுடா? என்ன ஆச்சு?” என்னால் கட்டுப்படுத்த முடியாமல் நானும் கதற ஆரம்பித்தேன்

“டேய்… நேத்து நைட்டு பெங்களூர்ல இருந்து கார்ல வந்துகிட்டு இருக்கும் போது கிருஷ்ணகிரி பக்கத்துல ஆக்ஸிடென்ட். இவனும் டிரைவரும் ஸ்பாட் அவுட். ஒரு கால் மணி நேரம் முன்னால தான் அவன் மச்சினன் ஃபோன் பண்ணி சொன்னான்” என்று அழுகையை நிறுத்தாமல் தேம்பியவாறு பேசினான் பாஸ்கி

“நான் இன்னும் ஒரு மணி நேரத்துல வர்றேன் ரெடியா இரு”னு சொல்லீட்டு ஃபோனைத் துண்டித்தான்

எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பித்தது. பேச்சே எழவில்லை. நாக்கு மேலே ஒட்டிக் கொண்டது போலிருந்தது. அப்படியே சேரில் சாய்ந்தேன். என் பேச்சுக் குரல் கேட்டு எழுந்து வந்த மனைவியிடம் அழுதபடி சொன்னேன்

“விஸ்வம் ஈஸ் நோ மோர்”

அவளும் அப்படியே விக்கித்துப் போனாள்.

நானும் பாஸ்கியும் கிருஷ்ணகிரி விரைந்தோம். பாஸ்கி பதட்டத்தில் இருப்பதால் காரோட்டவில்லை. டிரைவரை வரச் சொல்லியிருந்தான். போகும் போது விஸ்வத்தைப் பற்றியே பேச்சு.

நடுவில் தாமுவை அழைத்து விவரத்தை சொன்னவுடன் அவனும் நொறுங்கிப் போனான். பாஸ்கி வழக்கத்தை விட சிகரெட் அதிகம் பிடித்தான். 

மருத்துவ ஃபார்மாலிட்டிஸ் முடிக்க பாஸ்கி இருந்தது விஸ்வம் உறவினர்களுக்கு உதவியாக இருந்தது. சடலத்தை வாங்கிய போது எங்களை மறந்து கதறிவிட்டோம்.

“இப்படியாடா விஸ்வம் உன்னைப் பார்க்க வேண்டும்” என்று நெஞ்சு நெஞ்சாக அடித்துக் கொண்டு அழுதான் பாஸ்கி. எங்கள் நால்வரில் நான் தாமுவிடம் எப்படி சற்று நெருக்கமோ, அப்படித் தான் விஸ்வத்திடம் பாஸ்கி நெருக்கம்

விஸ்வம் போய்ச் சேர்ந்து ஒரு மாதம் ஆயிற்று.  நடுவே மூன்று முறை அவன் வீட்டிற்குப் போய் நலம் விசாரித்து விட்டு வந்தேன். பாஸ்கி மூன்று நாட்களுக்கு ஒரு முறை போகிறானாம்.

இதெல்லாம் கொஞ்ச நாள் இருக்கும். அப்புறம் குறைந்து விடும். இது தானே யதார்த்தம்.

நாளடைவில் விஸ்வம் நினைவிலிருந்து மறையத் தொடங்கினான். பாஸ்கி அவன் பணிகளில் பிஸியாகி விட்டான். அவனைப் பார்த்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இரண்டொரு முறை ஃபோனில் பேசியதோடு சரி. தாமு ஃபோனில் அழைப்பது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது.

நண்பர்களை  சந்திக்கும் நேரு பார்க் போக வேண்டும் என்று தோன்றியது. நான் மட்டும் போயிருந்தேன். நாங்கள் வழக்கம் போல அமரும் இடத்தில் அமர்ந்தேன் . பாஸ்கி விஸ்வத்திடம் சியாமளாவைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

“டேய், அந்தக் கால சியாமளா அழகிடா. ஒரு நாள் என்னாச்சு தெரியுமா?”னு பாஸ்கியிடம் சொல்லிக் கொண்டிருந்தான் விஸ்வம். நானும் தாமுவும் கேட்டுக் கொண்டிருந்தோம்.  

கண்ணீரை துடைத்துக் கொண்டே, “டேய் பத்ரி, போன வாரம் கூட பஜார்ல சியாமளாவைப் பார்த்தேண்டா” என்று சொல்கிற விஸ்வத்தை அங்கேயே விட்டு விட்டு, இருட்டுக் கட்டுகிற நேரத்தில் நான் நேரு பார்க்கை விட்டு கிளம்புகிறேன்

அறுபது வயது நெருங்குபவர்கள் அழக் கூடாது என யார் சொன்னது?

நான்  இறந்த பிறகு பத்ரி  அங்கே வருவான். அவனுக்குப் பின தாமு வருவான். நேரு பார்க்கில் யாரவது உட்கார்ந்து பழைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்பார்கள்

யாரவது  பால்ய ஸ்நேகிதர்களைப் பற்றியும்  பார்க்கைப் பற்றியும் எப்போதாவது ‘நேரு பார்க்’ என்ற தலைப்பில் எழுதுவார்கள்  அங்கிருக்கும் மரங்களும் புதர்களும் தலைமுறை தலைமுறையாக கதைகளை கேட்டுக் கொண்டே  இருக்கும்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Best Deals in Amazon 👇


 

#ads  தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

 

             

                         

  

 

                                    

Similar Posts

One thought on “நேரு பார்க் (சிறுகதை) – ✍ மதுசூதன்.எஸ், பெங்களூர்
  1. ஒரு வயதுக்கு மேல் சம வயது உடையவர்களின் இறப்பு செய்தி கேட்கும் போது ஒரு பயம் வந்து போகும். என்ன தான் தைரியமாக இருந்தாலும் இந்த உணர்வு களை தடுக்க முடியவில்லை. இந்த கதை படிக்கும் போதும் அந்த உணர்வு எழந்தது. யதார்த்தமான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!