in

கனவிலும் உன் நினைவே….! (சிறுகதை) – ✍ ரா. பரத்குமார், தமிழ்த்துறை விரிவுரையாளர், ஒட்டன்சத்திரம்

கனவிலும் உன் நினைவே....!

ரவு இரண்டு மணி. பொழுது விடியவேக் கூடாது என்ற எண்ணம் என்னில் அச்சத்துடன் புதைந்து கிடந்தது.

மெஸ் ஹாலில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் புத்தகத்தக் கையில வச்சிக்கிட்டுத் தனியா உக்காந்து படிச்சேனோ இல்லையோ, மத்த பசங்களக் கண்டபடி திட்டிக்கிட்டே இருந்தேன்

விடிஞ்சா நமக்குத் தேர்வுனு எந்த நாய்க்காவது பயம் இருக்கா? சனியனுக…. படிக்கிறதும் இல்ல படிக்க விடுறதும் இல்ல, விடிய விடிய ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். தேர்வு எழுதி முடிச்சதும் ஆடுது, தேர்வு எழுதி முடிக்காததும் ஆடுது. எப்படியோ நாம தப்பிச்சு ஓடி வந்தாச்சு

“சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே”னு படிக்கத் தொடங்கியதும், திடீர்னு ஓர் அலறல் சத்தம். வேறென்ன, என் போன் தான்

ராத்திரி இரண்டேகாலுக்கு யாரு கூப்பிடறான்னு பாத்தா, வேதியல்துறை நண்பன் விக்னேஷ். போன எடுக்கலாமா வேணாமானு யோசனை. அட…. அதுக்குள்ள மெஸ் ஹால்ல உக்காந்திருந்த மற்ற படிப்பாளிகள் எல்லாம் வித்தியாசமா என்னையே பாக்குறானுக

சரி ஃபோன எடுப்போம். என்னதான் சொல்றான்னு பாப்போமுன்னு ஃபோன எடுத்தேன்.

“மச்சி எங்கடா இருக்க? எங்களுக்கு எக்சாம் முடிஞ்சிருச்சு, எஞ்சாய்ப் பண்ணீட்டு இருக்கோம். நீயும் வாடா”னு சொல்லிக் கடுப்பேத்துறான்

‘வர்ரேன் மாப்பு…. நீங்க எஞ்சாய்ப் பண்ணுங்க’னு வாய் சொல்லுது, மனசு திட்டுது, கை அது பங்குக்குத் தொலைபேசியத் துண்டிச்சிட்டுத் தூக்கிப் போடுது.

மீண்டும் தொல்காப்பியப் பயணம் தொடர்கிறது. நேரம் சரியாக 3 மணி, தூக்கம் சொக்குது. சரி காலைல தொடரலாமுன்னு தூங்கப் போனேன்

எங்க அறையில என்னைத் தவிர மற்ற எல்லாரும் வேதியல் துறை. தேர்வு முடிஞ்ச சந்தோசத்துக்கு, அறைல இருந்த பொருட்கள் எல்லாம் என்ன பாவம் செஞ்சுச்சோ தெரியல. எல்லாம் கண்டபடி செதறிக் கெடக்கு. எல்லாரும் நல்லாத் தூங்கிட்டானுக

சரி…. லைட்டப் போட்டு எழுப்பிவிட வேண்டாமேனு செதறிக் கெடக்குற பொருளோட பொருளா, ஒரு ஓரமாப் போய்ப் படுத்துட்டேன். மொரட்டுத் தூக்கம்….!

விடிய விடியக் கண்ணக் குத்திப் படிச்சிட்டு விடிஞ்சதும் தேர்வுக்குப் போகாத அளவுக்குத் தூக்கம் துக்கமா ஆகீருச்சு. அப்படி ஒரு தூக்கம்…! ஏதோ பக்கத்து அறையில எவனோ கத்துற சத்தம், அலாரம் மாதிரி எழுப்பி விட்டுச்சு

எழுந்து பாத்தா மணி ஒன்பதே கால். எங்க அறைல ஒருத்தன் கூட எழுந்திரிக்கல. விடிய விடிய ஆட்டம் போட்ட களைப்பு, எல்லாரும் எரும மாடுக மாதிரித் தூங்குறானுக

தேர்வு வேற ஒன்பதரைக்கு இருக்கு. இவனுகள வந்து கவனிச்சுக்கலாமுன்னு வாளியத் தூக்கிட்டுக் குளிக்க ஓடுனேன். என்னோட நேரம், தண்ணி வரல

பக்கத்து விடுதிக்கு ஓடிப் போய்க் குளிச்சிட்டு ஓடோடி வந்தா, “என்ன மாப்ள, இவ்வளவு அவசரமா எங்க கெளம்பிட்ட? நைட் எங்கடா போன? ஃபோன் பண்ணா வர்ரேன் வர்ரேன்னு சொல்லிட்டு வரவே இல்ல?”னு ஆயிரத்தெட்டுக் கேள்விய அடுக்கடுக்கா வச்சான் விக்னேஷ்

இவன என்ன செஞ்சாப் பரவாயில்லன்னு யோசிச்சுக்கிட்டே கால்ல சுடுதண்ணியக் கொட்டிக்கிட்ட மாதிரி அவசர அவசரமாச் சட்டையப் போட்டுக்கிட்டு இருந்தேன்.

“ஏன்டா ஒரு மாதிரியா இருக்க? இவ்வளவு அவசரமா எங்க மச்சி போற?” என மீண்டும், வரிசையாய் வந்தன வினாக்கள்

தேடிப் புடிச்சு ஐ.டி.கார்டு, ஹால் டிக்கெட், பேனா எல்லாத்தையும் எடுத்தவுடன் தான் இன்னைக்கு எனக்குத் தேர்வு இருக்குனு அவனுக்கு ஞாபகம் வந்திருக்கு போல. பரவாயில்ல, இப்பவாவது ஞாபகம் வந்துச்சே

“இன்னைக்கு எக்சாமா மாப்ள?”னு கேட்ட அவன, கோபத்தோட ஒரு பார்வ பாத்துட்டு ஒரே ஓட்டமா ஓடினேன்

ஒரு வழியாத் தேர்வு அறைக்கு வந்து சேந்துட்டேன். ஆனா மணிதான் ஒன்பதே முக்கால் ஆகிருச்சு

“யாருப்பா நீ? இவ்வளவு சீக்கிரமாவே எக்சாமுக்கு வந்துட்ட?” அந்த ஹால் சூப்பர்வைசர் கிண்டலாக் கேட்டார்   

“மதியப் பரிட்சைக்கு இப்பவே வந்திட்டியா?”னு வேற ஒரு கேள்வி, எரியிற திய்யில எண்ணெய ஊத்துற மாதிரி. சில நொடிகள் மௌன மொழியில் பதில் சொன்னேன்

இரண்டொரு வினாடிகளுக்குப் பிறகு, “சரி சரி…. நீ எந்த டிப்பார்ட்மெண்ட்?” அப்படினு கேட்டார்

“சார் நான் தமிழ்த்துறை முதலாம் ஆண்டு. கொஞ்சம் தாமதமாகிருச்சு, மன்னிச்சுக்கோங்க. விடுதியில தண்ணி வரல, நா ஒருத்தந்தா விடுதில இருக்கேன்” அது இதுனு என்னென்னவோ சொல்லிப் பாத்தும், அவர் என்னை தேர்வு எழுத அனுமதிக்கல

ஆயிரத்தெட்டுக் கேள்வியக் கேட்டுட்டு, “டூ லேட், நெக்ஸ்ட் டைம் எழுதிக்கோ”னு ஒரே வரில சொல்லிட்டாரு

இதுக்கா இத்தன கேள்வி கேட்டீங்கன்னு மனசுக்குள்ள எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். இவர் கேட்ட வினாக்களை விடத் தேர்வு வினாக்கள் குறைவாகத் தான் இருந்திருக்கும்.

முன்னாடி நாள் முழுக்கப் படிச்சது, மூணு மணி வரைக்கும் முழி பிதுங்கப் படிச்சது, எல்லாம் மூவாயிரம் பேரு தேர்வு எழுதுற காட்சியப் பாக்கவா? ச்சே என்ன பொழப்பு? கண்டதெல்லாம் மண்டைக்குள்ள போட்டுக் கொழப்பிக்கிட்டே, மீண்டும் விடுதிய நோக்கி விறுவிறுன்னு நகர ஆரம்பிச்சேன்.

ஒரு வழியா அறைக்குப் பக்கத்துல வந்தாச்சு. என்னோட அறைக்குள்ள நொழஞ்ச உடனே, ஒரு நொடி யாரோ புது மனுஷனப் பாக்குற மாதிரி என்னப் பாக்குறான் என்னோட அறை நண்பன் ஸ்ரீதர்.

“மச்சா…. நீ எக்சாமுக்குப் போயிருக்கன்னு விக்கி சொன்னான். ன்னடான்னா 10 மணிக்கே வந்துட்ட, எக்சாம் கஷ்டமா டா?”னு கேட்டான் அந்தப் புண்ணியவான்

“இல்ல மாப்ள, கால் மணி நேரந்தான் டா தாமதமாப் போனேன். ஹால் சூப்பர்வைசர் ‘டூ லேட்’னு ஒரே வார்த்தைல தொரத்தி விட்டுட்டாரு டா. நானும் என்னென்னவோ சொல்லிப் பாத்தேன், உள்ள விடலடா” சோகமா சொல்லிட்டு ஒரு ஓரமா போய் உக்காந்தேன்.

ஸ்ரீதர் யாருக்கோ போனைப் போட்டு, “மச்சி எங்கடா இருக்க? சரி சரி, சாப்டுட்டுக் கொஞ்சம் சீக்கிரமா ரூமுக்கு வா. இன்னைக்கு ஒரு சம்பவம் நடந்துருச்சு”னு சொல்லிக்கிட்டு இருந்தான்.

என்னப் பத்தித் தான் சொல்றான்னு தெரிஞ்சும், யாருகிட்டச் சொன்ன எதுக்குச் சொன்ன ஏன் சொன்னன்னெல்லாம் கேக்க மனசு வரல. ஒடம்பு மட்டும் தான் இங்க, மனசெல்லாம் தேர்வு அறைல தான். தேர்வு அறை வீடுனு மனசு மட்டும் அங்கயும் இங்கயும் அலைமோதிக்கிட்டே இருந்துச்சு.

ஆயிரத்தெட்டுக் கேள்வி வேற…. எந்தக் கேள்வி வந்திருக்குமோனு ஒரு பக்கம், வீட்டுக்குத் தெரிஞ்சா வெளக்கமாத்துலயே அடிப்பாங்களேனு பயம் இன்னொரு பக்கம்

இதையெல்லாம் விட, இவனுக ஓட்டுறதுக்கு இன்னைக்கு நாம சிக்கிட்டோமேன்ற வருத்தம் தான் ரொம்பப் பெருசா இருந்துச்சு

உணவுத் தட்டோடு அறைக்குள் வந்தான் விக்கி. “என்ன மாப்ள எதுக்கோ கூப்ட்ட? ஏதோ சம்பவமுன்னு சொன்ன, ஏதாவது பிரச்சினையா?” என கேட்டபடி, விக்னேஷின் பார்வை மெல்ல என் பக்கம் திரும்பியது

“டேய் பரத், நீ என்னடா இங்கிருக்க? கைல ஐ.டி.கார்டு, ஹால் டிக்கெட், பேனா எல்லாம் எடுத்துக்கிட்டுப் போன, இன்னைக்கு உனக்கு எக்சாமுன்னு நெனச்சேன். நீ இங்க உக்காந்து வேடிக்க பாத்துக்கிட்டு இருக்க”னு கேட்ட விக்னேஷிடம், நானாச் சொல்றதுக்கு முன்னாடி நடந்த சம்பவத்தையெல்லாம் ஸ்ரீதரே மனப்பாடப் பாடல் மாதிரி ஒப்பிச்சான்

மூஞ்சீல பெருசா ஆச்சரியக்குறியத் தொங்க விட்டுக்கிட்டு, “அப்படியா மச்சா?”னு கேட்ட விக்னேஷ்கிட்ட

நான் சோகமா, “ஆமா டா”னு சொல்ல

“ஓவரா படிச்சா இப்படித் தான் ஆகும்”னு ஓட்ட, கோபத்தில் அவனைத் நான் கண்டபடி திட்ட, சண்டை முத்திருச்சு

அவனும் நானும் தேர்வின் போது சேர்ந்தே படிப்போம், ஆனால் நேற்றே அவனுக்குத் தேர்வு முடிந்து விட்டது. அதனால், அவனும் நீண்ட நேரம் தூங்கிவிட்டான், என்னையும் எழுப்பிவிடவில்லை. எனக்குத் தேர்வு இருப்பதையும் மறந்து விட்டான்

கோபத்தில் ஸ்ரீதரிடம், “விக்கி சரியான சுயநலம் டா, அவனுக்கு எக்ஸாம்னா என்னையும் சேத்து எழுப்பி விடுவான். இன்னைக்கு எனக்குத் தான எக்ஸாம், அதனால அவனும் படிக்கல, என்னையும் படிக்குறதுக்கு எழுப்பி விடல. எக்ஸாம் எழுத முடியாததுக்கு அவனும் தான் காரணம்” என்று எங்கெங்கோ இருந்த கோபத்தையெல்லாம் வார்த்தைகளாக ஸ்ரீதரிடம் கொட்டி விட்டேன்.

கோபத்துல என் கன்னத்துலயே ஓங்கி ஒரு வீசு வீசிட்டான் விக்கி. சில நொடிகள் ஹால் சூப்பர்வைசர்கிட்டப் பேசுன மாதிரி, மீண்டும் மௌன மொழியில பேசுனேன்

“என்ன மச்சா, என்னப் பாத்து இப்படிச் சொல்லிட்ட?”னு விக்கி சொன்ன உடனே, கண்ணு வேர்த்துடுச்சு. கலங்கிய கண்களை மூடிக் கொண்டு, இருவரும் கட்டித் தழுவிக் கொண்டோம்.

மூடியக் கண்கள் விழித்துக் கொள்ள, விழித்த பின்னும் இருளாய்த் தெரிந்தது. கும்மிருட்டில் தேடிக் கண்டுபிடித்த தொலைபேசியில் பார்த்தேன், நானும் விக்கியும் இருந்த வால் பேப்பரை

மணி 03:28am, தேதி 01.12.2020. அப்போது தான் உணர்ந்தேன். நான் முதுகலை முதலாம் ஆண்டு முடித்து மூன்று ஆண்டுகள் முழுமையாக முடிந்து விட்டன என்பதை….!

கல்லூரி வாழ்வில் என்றோ நடந்த சம்பவம், அச்சு பிசகாமல். கனவாய் வந்ததை உணர்ந்து ஆச்சர்யமாய் எழுந்து அமர்ந்தேன்

அன்று ஒன்றுமில்லாத விசயத்திற்கு எப்படி அடித்துக் கொண்டோம், இன்று அவன் ஒரு இடத்தல் நான் ஒரு இடத்தில இருக்கிறோம் என நினைத்தேன் 

அதே நேரம், வாட்ஸப்பில் ஒரு செய்தி, என் நண்பன் விக்கியிடமிருந்து

“ஹாய் டா மச்சான், என்னமோ திடீர்னு உன் ஞாபகம் வந்தது, எப்படி இருக்க?” என கேட்டிருந்தான் 

மெல்லிய சிரிப்புடன் அவனது எண்ணுக்கு அழைக்கும் பொத்தானை அழுத்தினேன்

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

#ad

      

        

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. ஹாய் …அற்புதமான காலேஜ் இளமை மன நினைவுகள் என்றும் நீங்காத ஏக்க பெருமூச்சு விட வைத்து விட்ட கதை …அருமை அருமை..அழகான சிறுகதை…

  2. பரத் மிகவும் அழகானத்தருணங்களை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள் படிக்கும் போதே மிக மிக அருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது வாழ்த்துக்கள்

இளமை எனும் பூங்காற்று (சிறுகதை) – ✍ பவானி உமாசங்கர்

பனீர் பட்டர் மசாலா – ✍ ராஜதிலகம் பாலாஜி