in

கழநியும்  கணினியும் (மரபுக் கவிதை) – ✍ பாவலர் கருமலைத்தமிழாழன்

கழநியும்  கணினியும் (மரபுக் கவிதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பழநிமலை   முருகனவன்  பெற்றோர்  தம்மைப்

          பணியாமல்   உலகைவலம்  வந்த  போல

கழநிதனைப்  புறக்கணித்துக்  கணினி  யொன்றே

          கல்வியெனக்  கற்கின்றார்  இளைஞ  ரெல்லாம் !

உழவுதனைத்  துறந்துவிட்டுக்  கணினிக்  குள்ளே

          உலகத்தைத்  தேடுகின்றார்  வயிற்றுக்  காக

பழம்தன்னை   விட்டுவிட்டு காயை   உண்ணும்

          பரிதாப   நிலைக்கவரைத்  தள்ளும்  நாளை !

 

விண்மீது  பறப்பதற்கும்  அடுத்த  கோளில்

          வியக்கின்ற  படிகாலை  வைப்ப  தற்கும்

மண்ணிற்குள்  மறைந்திருக்கும்  வளங்கள்  தம்மை

          மண்மீது  அமர்ந்தபடி  சொல்வ  தற்கும்

எண்ணற்ற   தொழிற்சாலை  இயக்கு  தற்கும்

          எட்டியுள்ள   நாடுகளை  இணைப்ப  தற்கும்

வண்ணவண்ண   கணினிகள்தான்   இருந்த  போதும்

          வாய்க்குணவை  அளிப்பதற்குக்கழநி  வேண்டும் !

 

ஊர்தன்னை  மாற்றிடலாம்   மாடி  கட்டி

          உயரத்தில்   அமர்ந்திடலாம் ; உவகை  கொஞ்சும்

சீர்வாழ்வைப்  பெற்றிடலாம்;   நாக  ரீக

          சிறப்போடு   திகழ்ந்திடலாம்;  கணினி  கொண்டு

பார்தன்னில்  புதுமைகளைப்  படைத்த  போதும்

          பசிக்கின்ற  வயிற்றுக்கே   உணவாய்  ஆமோ

வேர்போன்ற   விவசாயம்   இல்லை  யென்றால்

          வெற்றியெனும்  அறிவியலும்  வெறுமை  தானே !

                   

பொறுமையே   சாதனை  செய்யும்

அகந்தன்னில்  பொறுமையின்றேல்  அமைதி  கெட்டே 

ஆத்திரத்தில்  கடுஞ்சொல்லை  நாக்கு  வீசும் 

முகமெல்லாம்  சினத்தாலே  சிவந்து  போகும் 

முன்நிற்போர்  யாரெனினும்  பகையாய்த்  தோன்றும் ! 

பகலவனைக்  கருமேகம்  மறைத்தாற்  போன்று 

பண்பொழுக்கை  மறைத்துத்தீ  வன்மன்  தோன்றும் 

தகவுடைய  செயலெதுவும்  நடப்ப  தற்குத் 

தடையாகிச்  சாதனைகள்  கனவாய்ப்  போகும் ! 

 

தோல்விகள்தாம்  வந்தபோது  பொறுமை  யாகத் 

தோல்விவந்த  காரணத்தை  ஆயும்  போதே 

தோல்விகளேன்  வந்ததென்று  புரிவ  தோடு 

தோல்விகளை  வெற்றியாக்கும்  வழியும்  தோன்றும் ! 

பொல்லாத  நேரமென்று  எதுவு  மில்லை 

பொறுமையின்றிச்  செய்வதுவே  கெடுத  லாகும் 

நல்லநல்ல  சாதனைகள்  புரிவ  தற்கு 

நாம்தளர்ந்து  போகாமல்  முயல  வேண்டும் ! 

 

பலமுறைதாம்  தோல்விகளைக்  கண்ட  போதும் 

பதறாமல்  பொறுமையாக  மீண்டும்  மீண்டும் 

தளராமல்  எடிசன்தான்  முயன்ற  தாலே 

தரணிபோற்றும்  மின்விளக்கைப்  பெற்றோம்  நாமும் ! 

உலகத்தில்  சாதனைகள்  புரிந்தோ  ரெல்லாம் 

உள்ளத்தில்  பொறுமையுடன்  முயன்ற  வர்தாம் 

நிலம்தன்னில்  சாதனைகள்  செய்வ  தற்கு 

நிறைபொறுமை  இருக்கவேண்டும் நம்மி  டத்தே !  

 

இளைஞனே  எழுந்து  வா

புதியஓட்டம்   குருதியிலே  புகுத்திச்   செல்வோம் 

புதுமைகளைக்   கண்டளிக்க  விரைந்து  செல்வோம் 

விதியென்றே   அமர்ந்திருந்தால்   வந்தி  டாது 

வினைகளாற்ற   வாய்ப்புகளோ   அழைத்தி  டாது ! 

குதித்துவரும்  அருவிதடை   தகர்த்துக்  கொண்டு 

குன்றின்கீழ்   ஆறாகப்   பாய்தல்  போல 

பதித்திடுவோம்   புதியபாதை   வெற்றி  தன்னை 

பறித்திடுவோம்   இளைஞனேநீ  எழுந்து   வாவா !  

 

மூடத்தைப்   பழமையினை   மூலை   வைப்போம் 

முன்னேறப்  பகுத்தறிவில்   காலை   வைத்தே 

வேடத்தைக்  கலைத்திடுவோம்  சாதி   என்னும் 

வேண்டாத   சட்டையினைக்   கழற்றி  வைப்போம் ! 

மாடத்தில்   ஏற்றிவைக்கும்  விளக்கைப்   போல 

மனத்தினிலே   பொதுமையெண்ணம்   ஏற்றி  வைத்து 

நாடதனில்   இருப்பதினைப்  பிரித்த   ளித்து 

நல்வாழ்வை   அளிப்பதற்கே   எழுந்து  வாவா ! 

 

நேர்நின்று   கயமைகளைத்   தட்டிக்  கேட்டு 

நேர்மையினை  நீதியினைக்  கட்டிக்   காத்தே 

ஊர்காப்போர்   ஊழல்கள்  புரியும்  போதோ 

உதைத்தவரை   விரட்டுதற்கு  முன்னே  நிற்போம் ! 

நீர்நிலையை   வயல்வெளியைக்  காற்றைக்  காட்டை 

நீலவானைத்   தூய்மையாகப்   பாது  காத்து 

வேர்போன்ற  மனிதத்தை  நெஞ்சில்  வைத்து 

வேற்றுமைகள்  தகர்த்திடுவோம்  இளைஞா  வாவா ! 

 

பிப்ரவரி 2022 சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காகிதக் கப்பல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    பாவத்தின் சம்பளம் (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு