in

காகிதக் கப்பல் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

காகிதக் கப்பல் (சிறுகதை)

     பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

லுவலகம் முடிந்ததும் உடனே வீட்டிற்கு போக விருப்பம் இல்லை கோபிக்கு. சில மணி நேரங்கள் நயனாவுடன் பீச்சில் செலவிட விரும்பினான்.

கோபி வருமான வரித்துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறான். அதே பிரிவில் கணினி ஆப்பரேட்டராகப் பணிபுரிகிறாள் நயனா, வட இந்தியப் பெண். நல்ல அழகு.

அழகு மட்டுமல்ல, நுனி நாக்கில் தவழும் அழகான ஆங்கிலத்தில் யாரையும் அடிமையாக்கி விடுவாள். அவள் அழகிலும் , அறிவிலும் மயங்கிய ஆண்களில் கோபியும் ஒருவன். திருமணம் என்று ஒன்று நடந்தால், நயனாவுடன் தான் என்ற எண்ணம் இப்போது அவன் மனதில்.

அலுவலக நேரம் போக மற்ற நேரத்தில் ஒரு நண்பர் மூலமாக தொலைக்காட்சி நாடகங்களிலும் இப்போது நடிப்பதற்கு வாய்ப்பு வருகிறது என்று பெருமையுடன் கூறி வருகிறாள்.

கோபி எப்போது பார்த்தாலும் நயனாவுடன் சுற்றுவது, அவன் நண்பன் சுரேஷிற்கு துளியும் பிடிக்கவில்லை.  சுரேஷ் அதே அலுவலகத்தில் வேறொரு பிரிவில் கண்காணிப்பாளராக பணிபுரிகிறான்.

“காகிதக் கப்பல் பார்க்கத்தான் அழகு, பயணத்திற்கு உதவாது. அது போலத் தான் அவளும். பணத்திற்காக அலைபவர்கள் எந்த வாழ்க்கையிலும் திருப்தி அடைய மாட்டார்கள். மேலும் நீ வாங்கும் சம்பளம் அவள் உதட்டு சாயத்திற்குக் கூட காணாது” என்பான்.

“டேய்! அவள் சின்னப் பெண். ரொம்ப அழகாக இருக்கிறாள். அழகிற்கு அழகு செய்து கொள்கிறாள். இதில் என்ன தவறு?” என்றான் கோபி.

“போடா இடியட் ! அவளே மத்திய அரசுத் துறையில் பணிபுரிகிறாள். சௌகரியமாக, சந்தோஷமாக வாழ இந்த சம்பளம் தாரளமாகப் போதும். அப்படியிருக்க ஏன் டி.வி.யில் நடிக்க ஆசை?” என சுரேஷ் கேட்க

“அதெல்லாம் கலைச்சேவை கண்ணா, உனக்குப் புரியாது” என்று சொல்லி சிரித்தான் கோபி.

“சேவையுமில்லை, இடியாப்பமும் இல்லை. பணத்தாசை. மேலும் அவளைப் பற்றி கேள்விப்படுவது எதுவும் நன்றாக இல்லை. பைல் மூவ்மென்டிற்குக் கூட பணம் வாங்குவதாக கேள்வி. எதற்கும் நீ கொஞ்சம் அளவோடு பழகு”

“நான் பார்த்துக் கொள்கிறேன், நீ கவலைப்படாதே” என்று நண்பனை சமாதானப்படுத்தினான் கோபி.

நயனாவுடன் பீச்சில் சிறிது நேரம் இருந்து விட்டு ஏதோ ஒரு ரெஸ்டாரன்டில் இரவு டின்னரும் முடித்து விட்டு வீடு திரும்பினான். மணி பதினொன்று.!

“நான் வேண்டுமானால் வீடு வரை துணைக்கு வரட்டுமா? இவ்வளவு லேட் ஆகிவிட்டதே, ஏதாவது திட்டுவார்களா?” என்றான் தயக்கத்துடன்.

“நோ நோ… என் சுதந்திரத்தில் யாரும் தலையிட மாட்டார்கள்” என்றாள் சிரித்துக் கொண்டே.

முதல் முறையாக அவள் தைரியமும், சுதந்திர போக்கும் அவன் மனதில் லேசாக உறுத்தியது.

மிகவும் நேரமானதால் கோபியின் அப்பா கோபித்துக் கொண்டார்

“நீ பைக் எடுத்துக் கொண்டு ஊரெல்லாம் சுற்றி விட்டு இவ்வளவு லேட்டாக வந்தால் பயமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ஆக்ஸிடன்ட்! ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நாளை உன் பாட்டியைப்  பார்க்க திருவள்ளூர் போகிறோம்.  உன் மாமா ஒரு மாத விடுமுறையில் குடும்பத்துடன் வந்திருக்கிறானாம். அதனால் எங்களுக்கு நாளை காலையில் அங்கு போக ஒரு கால் டாக்ஸி ஒன்று ஏற்பாடு செய்து விடு” என்றார்.

தன் திருமண விஷயமாகவும், நயனாவுடன் தன் காதல் பற்றியும் எப்படியாவது வீட்டில் உடனே தெரிவித்து விட வேண்டும் என்று முடிவு செய்தான் கோபி. அதற்கு முன் நயனாவுடன் இந்த விஷயத்தைப் பேசி முடிவு செய்ய வேண்டும் என்று உறுதி கொண்டான்.

ஆனால் அன்று அலுவலகம் போனவுடன், அவனுடைய மேலதிகாரி உடனே வரச் சொல்லி இன்டர்காம் மூலம் கூப்பிட்டார். அதிகாரியின் அறையில் சுரேஷும் இருந்தான்.

ஒரு முக்கியமான கட்சி பிரமுகர் வீட்டில் நடத்தப் போகும் ரெய்டு பற்றி விவரித்து விட்டு அது சம்பந்தப்பட்ட கோப்புகளையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு மிகவும்  ரகசியமாக இருக்க வேண்டும் என்றும், இன்னும் ஒரு மணி நேரத்தில் கிளம்ப வேண்டும் என்றும் எச்சரித்தார்.

தன் இருக்கையில் அமர்ந்து கோப்புகளைப் தீவிர யோசனையுடன் படித்துக் கொண்டிருந்தான் கோபி. அப்போது மெதுவாக அவன் தோள் மேல் கை வைத்தான் சுரேஷ்.

“சுரேஷ், கிளம்பலாமா?” என கோபி கேட்க

“கிளம்பலாம், கொஞ்சம் அங்கே பார்” என்று நயனாவின் பக்கம் கண்களைக் காட்டினான்.

யாரோ முகம் தெரியாத ஆள் அவளுடன் மிக நெருக்கமாக அவளின் ஒரு கையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

“யார் சுரேஷ் அவன்?” என கோபி கேட்க

“யாரோ டி.வி. நாடகங்களில் நடிக்க ஆள் எடுப்பவர்” என்றான் சுரேஷ்.

அவளின் கவர்ச்சியான உடையும், வேறு ஆடவனிடம் காட்டும் நெருக்கமும் கூட அவன் மனதை உறுத்தவில்லை.

“எவ்வளவு இன்னஸன்டாக, குழந்தை மாதிரி இருக்கிறாள்” என்றான் கோபி, தன் நண்பனிடம்.

“அது சரி” என்று கேலியாக சிரித்தான் சுரேஷ்.

நயனா தன் இருக்கையில் இருந்து எழுந்து கோபி அருகில் வந்து கை கொடுத்து, “பெஸ்ட் ஆஃப் லக்” என்று சொல்லி லேசாக சிரித்தாள். சுரேஷிற்கு என்னவோ அவள் கேலியாக சிரிப்பது போலவே இருந்தது.

ரெய்டிற்கு போன இடத்தில் இவர்களால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் கொடுத்தால் வாங்கிக் கொள்ளும் நிலையில் இருப்பது போல் பஞ்சபரதேசிகளாகக் காட்சியளித்தார்கள்.

ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்கள் வேஷத்தை நம்பவில்லை. எப்படியோ யார் மூலமோ ரெய்டு வரும் விஷயம் தெரிந்து, எல்லா சொத்துக்களையும், சொத்து சம்பந்தப்பட்ட பேப்பர்களையும் மறைத்து விட்டனர் என்று உறுதியாக நம்பினார்கள்.

நயனா தான் எப்படியோ விஷயம் தெரிந்து காசுக்கு விலை போயிருக்கிறாள் என்று எல்லோரும் குற்றம் சாட்டினர். கோபிக்கு தலை பிய்த்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. யாருடைய குற்றச்சாட்டிற்கும் நயனா கவலைப்பட்டது போல் தெரியவில்லை.

வீட்டில் மாமாவின் குடும்பம் வந்திருந்தது. மாமாவிற்கு அவர்கள் பெண் வத்ஸலாவை கோபிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் கோபி தான் நயனாவை நினைத்துக் கொண்டு எதற்கும் பிடி கொடுக்காமல் இருந்தான்.

கண்டதையும் யோசித்துக் கொண்டு பைக்கில் வேகமாக வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தான். அப்போது கூட அவன் மனம் நயனாவைப் பற்றித் தான் ‘எப்படி அவளைத் திருத்துவது?’ என்று தான் யோசித்துக் கொண்டிருந்தது.

காதலுக்கு கண்ணில்லை அல்லவா? அதனால் எதிரில் வரும் தண்ணீர் லாரியும் அவன் கண்களுக்குத் தெரியவில்லை. கண் மூடித் திறப்பதற்குள் பெரிய இடி சப்தம் தான் கேட்டது. பிறகு எதுவும் தெரியவில்லை.

கண் திறந்து பார்க்கும் போது மருத்துவ மனையில் அம்மாவும், அப்பாவும் கண்கள் கலங்க நின்று கொண்டு இருந்தனர். வத்ஸலாவும் வருத்தத்துடன் நின்று கொண்டிருந்தாள்.  குளுக்கோஸும், அதில் சில மருந்துகளும் ஏறிக் கொண்டிருந்தன.

மூன்று மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்றான். உடம்பு பழையபடி குணமாகி விட்டது. ஆனால் வலது கால் மட்டும் தாங்கித் தாங்கி கொஞ்சம் சாய்ந்து தான் நடந்தான்.

மருத்துவ விடுப்பு முடிந்து வேலையில் சேர்ந்த முதல் நாள் நயனா வந்து நலம் விசாரித்தாள். அதன் பிறகு அவள் அவனை லட்சியம் செய்யவில்லை. வேலையே இல்லையென்றாலும் மிகவும் பிசியாக இருப்பது போல் காட்டிக் கொண்டாள்.

கோபி தன் வளைந்த காலைப் பார்த்து பெருமூச்சு விட்டான். எவ்வளவு நாட்கள் இவனுடைய பைக்கில் ஹோட்டல், சினிமா என்று நள்ளிரவு வரை சுற்றியிருப்பாள். எல்லோருக்கும் காலம் பாடம் சொல்லிக் கொடுக்கும் என்றால், எனக்கு என் கால் பாடம் சொல்லிக் கொடுத்தது என்று தன் காலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

இவனுடைய வேதனையைப் பொறுக்க முடியாமல் ஒரு நாள் நயனாவிடம்  கோபிக்காக வாதாடினான் சுரேஷ்

அவள் கேலியாக சிரித்தாள்.

“என் சொந்த விஷயத்தில் தலையிடுவது தப்பு, அதை விட பெரிய தவறு ஒரு நொண்டிக்காக வாதாடுவது: என்று ஏளனம் செய்தாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு மிகுந்த சலிப்புடன் வீடு திரும்பினான் கோபி.  அங்கே அவன் மாமாவின் குடும்பம் வந்திருந்தது.

இரவு சாப்பாடு வத்ஸலா தான் பரிமாறினாள். ஆனால் அவள் வழக்கம் போல் சிரித்த முகமாக இல்லாமல் ஏதோ சிந்தனையாக இருந்தாள்.

சாப்பாடு முடிந்த பின்னர் எல்லோரும் ஹாலில் சோபாவில் அமர்ந்தனர். மாமா தான் பேச்சை  தொடங்கினார்.

“கோபி, நாங்கள் நாளை எங்கள் ஊருக்குப் போகலாம் என்று இருக்கிறோம்” என்றார்.

“என்ன அவசரம் மாமா? ஒரு வாரம் இருந்து விட்டுப் போகலாம்” என்றான் கோபி.

“ஒரு வாரம் எல்லாம் முடியாது கோபி, ஆபிசில் வேலை நிறைய இருக்கிறது.  ஏப்ரல் மாதம் முடியும் வரை அரசாங்க அலுவலகங்களில் வேலை நிறைய இருக்கும் அல்லவா?” என்றார் மாமா.

“வத்ஸலாவை அழைத்துச் செல்லலாம் என்று வந்தோம். ஆனால் அவள்  என்ன சொன்னாலும் எங்களோடு  வர மறுக்கிறாள்” என்றார் மாமி.

ஏன் என்று கேட்பது போல் வத்ஸலாவைப் பார்த்தான் கோபி. அவள் கோபியை உறுத்துப் பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டாள். அடுத்த நாள் காலை வத்ஸலாவைத் தவிர்த்து மாமாவின் குடும்பம் ஊருக்கு சென்று விட்டது.

வத்ஸலாவைத் தனிமையில் சந்தித்த கோபி ஏன் அவள் பெற்றோருடன் ஊருக்குப் போகவில்லை என்று கேட்டான். அவளோ, தலையில் அடித்துக் கொண்டாள்.

“தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது” என்று கூறி விட்டு அவனுக்கு அழகு காட்டி விட்டு தன் சுருண்ட நீண்ட பின்னல் அசைய வழக்கம் போல் உள்ளே சென்று விட்டாள்.

“என்ன சொல்கிறாள் இந்தப் பெண்?  நான் எங்கே தூங்குவது போல் நடிக்கிறேன்? புரியாமல் பேசினால் மிகவும் அறிவாளிகள் என்று அவர்களே நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது?” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு வெளியே வந்தான்.

வீட்டிற்கு வெளியே நின்ற அவனுடைய பைக்கைப் பார்த்து கோபம் கோபமாக வந்தது. ஒரு காலால் எட்டி உதைத்தான்.

‘என்னை நொண்டியாக்கி விட்டு இது என்ன ஜோராக நிற்கிறது ‘ என்று முனகிக் கொண்டு அலுவலகம் சென்றான்.

ஆபிஸிலும் வத்ஸலா சொன்ன ‘தூங்குவது போல் நடிக்கிறேன்’ என்ற வார்த்தையே காதில் ஒலித்துக் கொண்டு இருந்தது. சுரேஷ் கூட அவனை ஒரு மாதிரியாகப் பார்த்து காரணம் கேட்டான்.

வத்ஸலா ஊருக்குப் போக மறுத்ததையும், காரணம் கேட்டால் தூங்குவது போல் நடிக்கிறேன் என்று கூறியதையும்  அவனிடம் சொன்னான்.

சுரேஷ் உதட்டைக் குவித்து விசில் அடித்து விட்டு சிரித்தான்.

“டேய் பூல்! உனக்கு இன்னுமா புரியவில்லை? நீ காகிதக் கப்பலுக்காக தவம் இருந்தாய், ஆனால்  கடவுள் உன் வாழ்க்கை பயணத்திற்கு ஒரு உறுதியான கப்பலையே பரிசளித்து இருக்கிறார். என்ஜாய்” என்று வத்ஸலாவின் மனதைப் புரிய வைத்தான். ஆனால் கோபியால் நம்ப முடியவில்லை.

கோபிக்கு  இப்போதெல்லாம் அலுவலகப் பணி முடிந்ததும் நேரே வீடு தான். டைனிங் டேபிளில் அரிசி உப்பு மாவும் காபியும் கொண்டு வந்து வைத்தாள் வத்ஸலா.

“அம்மா, அப்பா எங்கே?” என கோபி கேட்க

“இருவரும் கோயிலிற்கு போயிருக்கிறார்கள்” என்றாள் வத்ஸலா.

“நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் வத்ஸலா”

“ஏன், இப்போது கூட பேசிக் கொண்டு தான் இருக்கிறோம்” என்றாள் இடக்காக.

அவளை முறைத்து பார்த்தான்

“என் கேள்விக்கு மட்டும் பதில் சொல். நீ ஏன் உன் அம்மா அப்பாவுடன் ஊருக்குப் போகவில்லை, என்னை ஏன் தூங்குவது போல் நடிக்கிறேன் என்றாய்?” என்று கேட்டான்.

“என் உள்ளம் உங்களுக்குப் புரியவில்லையா?” என்றாள் தலை கவிழ்ந்து.

“நீ என்ன சொல்கிறாய்? உன் உள்ளத்தில் எனக்கு இடம் உண்டு என்று சொல்கிறாயா?”

கண்களில் நீர் பெருக ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“எனக்கு ஒரு கால் ஊனம், உனக்கு தெரியவில்லையா? பல வருடங்கள் நான் காதலித்த பெண்ணே என் கால் ஊனம் என்று கேலி செய்து என்னை உதறி எறிந்தாள். உன்னை நம்ப சொல்கிறாயா?”

“நம்பினார் கெடுவதில்லை. நீங்கள் தானே அவளைக் காதலித்தீர்கள், அவள் ஒன்றும் உங்களை விரும்பியதாக சொல்லவில்லையே. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கப் பார்த்தீர்களே! அப்போது தான் நீங்கள் ஊனம், இப்போது இல்லை. எனக்கு உங்கள் நேர்மை மிகவும் பிடிக்கும். என்னை ஏற்றுக் கொள்வீர்களா?” என்றாள்

உணர்ச்சிப் பெருக்கில் அவள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தவன், அவள் கைகளை ஆதரவாகப் பற்றிக் கொண்டான்.

பிப்ரவரி 2022 சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

                                                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சகுனம் (சிறுகதை) – ✍ கண்மணி

    கழநியும்  கணினியும் (மரபுக் கவிதை) – ✍ பாவலர் கருமலைத்தமிழாழன்