2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3
இல்லத்தை அடைந்ததும் பேருந்து நிலையத்தில் ரவுடி கோபி செய்த அநியாயத்தை அப்படியே ஒப்பித்து விட்டுப் பொங்கினான் வேன் டிரைவர். “அட… போயும் போயும்… இந்த ஊனமுற்றவர்கள் காசையா கொள்ளையடிக்கணும்?… த்தூ… இதுக்கு பதிலா… போய் பிச்சையெடுக்கலாம்… இவனெல்லாம் ரவுடியாம்!”
ஆறுமுகமும் இம்முறை ஆடிப் போனார். “ச்சை… இந்த ரவுடி கோபியோட அழிச்சாட்டியம் வர வர ரொம்ப அதிகமாயிட்டே போகுது… அவன் ஆட்டத்தை எப்படி நிறுத்தறது?”. முகத்தில் கவலை ரேகைகள்.
வழக்கம் போல் வாட்ச்மேன் பெரியவரிடம் சென்று விஷயத்தைச் சொல்லி விட்டு, “அய்யா… எனக்கென்னமோ பேசாம போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிடறதுதான் நல்லதுனு தோணுது” என்றார்.
“ஆறுமுகம் நான் அன்னிக்கு சொன்னதையேதான் இன்னிக்கும் சொல்றேன்… அந்த கோபி அரசியல் செல்வாக்கு உள்ளவன்… போலீஸை எப்படிச் சமாளிக்கறதுனு அவனுக்கு நல்லாவே தெரியும்”
“அப்ப இதுக்கு என்னதான் தீர்வு?…” இரண்டு கைகளையும் விரித்துக் காட்டிக் கேட்டார் ஆறுமுகம்.
“வேணா இப்படி முயற்சி பண்ணிப் பார்க்கலாம்” மேவாயைத் தேய்த்தபடி வாட்ச்மேன் வடிவேல் சொல்ல,
“எப்படி?” ஆர்வமாய்க் கேட்டார் ஆறுமுகம்.
“டவுன்ல இருக்கற நம்ம டிரஸ்டோட ஹெட் ஆபீஸ்ல சொல்லி அங்கிருந்து அவங்களை கம்ப்ளைண்ட் பண்ணச் சொல்லலாம்… ஊனமுற்றவர்கள் டிரஸ்ட்டில் இருந்து கம்ப்ளைண்ட் போகும் போது நிச்சயம் போலீஸ் ஏதாவதொரு ஆக்ஷன் எடுத்தாகணும்”
“ஓ.கே…. நாளைக்கே நான் டவுனுக்குப் போய்… ஹெட் ஆபீஸ்ல மேனேஜிங் டிரஸ்டிகிட்டப் பேசறேன்” ஒரு நம்பிக்கையோடு அங்கிருந்து நகர்ந்தார் ஆறுமுகம்.
அன்று இரவு முழுவதும் ரவுடி கோபி பற்றிய நினைவுகளே மனமெங்கும் நிறைந்து அவன் உறக்கத்தைக் கெடுத்து விட, அதிகாலையிலேயே வேன் டிரைவரை வரவழைத்துக் கிளம்பினார்.
“போகும் வழியில் வேன் டிரைவர் டேவிட் கேட்டான். “ஆறுமுகம் சார்… நீங்க மட்டும் ஒரு வார்த்தை “ம்”ன்னு சொல்லுங்க… என் மச்சினன்கிட்ட சொல்லி இந்த கோபியை ஒரு தட்டு தட்டச் சொல்றேன்”
“ஏம்பா… உன் மச்சினன் நல்லா இருக்கறது உனக்குப் பிடிக்கலையா?” சிரித்தவாறே சொன்னார் ஆறுமுகம்.
“அண்ணே… உங்களுக்கு என் மச்சினனைப் பற்றித் தெரியாது…. கந்து வட்டி வியாபாரம் பண்ணிட்டிருக்கற ஆளு… எப்பவுமே கூட அஞ்சாறு அடியாளுகளை வெச்சிருப்பான்… அவனுகளை அடிதடிக்குன்னே கறி சோறு போட்டு வளர்த்திட்டிருக்கான்…” சாலையின் குறுக்கே நடந்த ஒரு மூதாட்டிக்காக வேனின் வேகத்தை மட்டுப்படுத்தி மீண்டும் வேகமாக்கினான் டிரைவர்.
“வேண்டாம்ப்பா… அது வேற மாதிரிப் பிரச்சினை ஆயிடும்!… நாம நடத்திட்டிருக்கற மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு இல்லமும்… இந்த டிரஸ்டும்… ஊர்ல இருக்கற பெரிய மனுஷங்க கொடுக்கற நன்கொடைலதான் நடந்திட்டிருக்கு… கொஞ்சம் தணிஞ்சு பணிஞ்சு போய்த்தான் ஆகணும்பா!… நாம பாட்டுக்கு அந்த மாதிரியான நடவடிக்கைகள்ல ஈடுபட்டோம்… அப்புறம் நம்ம டிரஸ்ட் மேலே மக்களுக்கு இருக்கற நன்மதிப்புப் போயிடும்!… டொனேஷன்ஸ் நின்னிடும்!… அது இங்கிருக்கற மாற்றுத் திறனாளிகளோட வாழ்வாதாரத்தையே பாதிச்சிடும்” ஆறுமுகம் நிதானமாய்ச் சொல்ல,,
“அடப் போங்க சார்… நீங்க இப்படியே பேசிட்டிருங்க… அவனுக ஆடற ஆட்டத்தை ஆடிக்கிட்டே இருப்பானுக”
அப்போது வேனில் இருந்த எஃப்.எம்.ரேடியோவில் அந்தச் செய்தி ஒலிபரப்பானது.
“வானிலை அறிக்கை… தூத்துக்குடி பகுதியில் நாளை மறுநாள் தொடங்கி இரண்டு நாட்களுக்கு மிதமானது முதல் கனமான மழை பெய்யக் கூடுமென வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது”
“எனக்கு இந்த வானிலை அறிக்கைகளைக் கேட்கும் போதெல்லாம் சிரிப்புத்தான் சார் வருது!… இவனுக “மழை வரும்!”ன்னு சாதாரணமாச் சொன்னா… மழையே வராது!… “வறண்ட வானிலை நிலவும்!”ன்னு சொன்னா மழை வரும்!… “மிதமான மழை பெய்யும்!”ன்னு சொன்னா கனமழை கொட்டும்”
ஆனால், அவன் வார்த்தைகளைப் பொய்யாக்கும் விதமாய் அடுத்த விநாடியே வானில் கரு மேகங்கள் கூடி, தங்களின் அடுத்த செயல்பாடு குறித்து விவாதிக்க ஆரம்பித்தன.
“என்னமோ சொன்னே?… பார்த்தியா வானத்தை?…” ஆறுமுகம் சொல்ல,
“ஹி… ஹி…” அசடு வழிந்தான் டிரைவர் டேவிட்.
சரியாக காலை பதினோரு மணி வாக்கில் டிரஸ்ட் அலுவலகத்தை அடைந்தவர்கள், ரிசப்ஷனைத் தொட்டு, “மேடம் நாங்க கரட்டு மேடு மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு இல்லத்திலிருந்து வர்றோம்!… மேனேஜிங் டிரஸ்டியைப் பார்க்க முடியுமா?” ஆறுமுகம் கேட்டார்.
“என்ன விஷயமாப் பார்க்கணும்?” அப்பெண் காதுத் தொங்கட்டான் ஆட, கேட்டாள்.
“வந்து எங்க இல்லத்துல ஒரு பிரச்சினை… அது சம்மந்தமா பேசணும்!” தயக்கத்துடன் சொன்னார்.
“அப்ப… நீங்க மொதல்ல செகரட்டரியைப் பாருங்க!… அவர் கிட்டே உங்க பிரச்சினையைச் சொல்லுங்க!… அவரே தீர்த்து வைப்பார்!…”
“ஓ.கே.மேடம்” என்று சொன்ன செகரட்டரி அறையைத் தேட,
“அதோ அந்த மூணாவது ரூம்” ரிசப்ஷன் பெண் நெயில் பாலீஸ் விரல்களைக் காட்டிச் சொன்னாள்.
அறையின் கதவை லேசாய்த் தட்ட, உள்ளிருந்து , “யெஸ் கம் இன்” என்ற குரல் வர, ஆறுமுகமும், டிரைவரும் நுழைந்தனர்.
தலையைத் தூக்கி ஆறுமுகத்தைப் பார்த்த செகரட்டரி, “அடடே… ஆறுமுகம்… வாப்பா!…” என்று வாயெல்லாம் பல்லாக வரவேற்றபடி எதிரே இருந்த குஷன் இருக்கையைக் காட்ட, ஆறுமுகம் அமர்ந்தார். செகரட்டரியின் வழுக்கை மண்டையில் மேலேயிருந்த டியூப் லைட் வெளிச்சம் அப்பட்டமாய் பிரதிபலித்தது.
டிரைவர் மட்டும் நின்றபடியே இருக்க, “அட நீயும் உட்காருப்பா” என்று செகரட்டரி சொன்னதும் தயங்கித் தயங்கி உட்கார்ந்தான் அவன்.
“சொல்லு ஆறுமுகம்… என்ன திடீர் விஜயம்?… காரியமில்லாம நீ வர மாட்டியே?”
“ஒரு சின்ன பிரச்சினை….” மெல்ல ஆரம்பித்தார்.
“எங்கே இல்லத்திலா?… பசங்க ஏதாச்சும் வில்லங்கம் பண்ணிட்டாங்களா?” திடீரென்று முகத்தை சீரியஸாக்கிக் கொண்டு கேட்டார் செகரட்டரி.
“நம்ம பசங்களால எந்தப் பிரச்சினையும் இல்லை!… வெளி ஆள் ஒருத்தன்தான் ரொம்பத் தொல்லை தர்றான்…” ஆறுமுகம் சொல்ல, உடனிருந்த டிரைவர் டேவிட் தன் தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
“வெளி ஆள் பிரச்சினை பண்றானா?… யாரவன்?… போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ண வேண்டியதுதானே?” செகரட்டரி கோபமாய்ச் சொல்ல,
“இல்லை சார்… அந்த சுற்று வட்டாரத்துல இருக்கற எந்த ஸ்டேஷன்ல அவன் மேலே கம்ப்ளைண்ட் பண்ணினாலும்… அது வெத்து வேட்டாய்த்தான் போகும்… அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கும் உள்ள ஆள்” ஆறுமுகம் பவ்யமாய்ச் சொன்னார்.
“ஓ.கே…. நீங்க உங்க கைப்பட ஹெட் ஆபீஸுக்கு ஒரு புகார்க் கடிதம் எழுதிக் கொடுங்க… அதை எங்கே?… யாருக்கு?… அனுப்பினா வேலையாகுமோ அங்கே நான் அனுப்பி ஃபாலோ பண்றேன்” கடுமையான முகத்துடன் சொன்னார் செகரட்டரி.
ஆறுமுகம் இல்லத்திற்குத் திரும்பி வரும் போதே வானம் லேசாய்த் தூறல் போட ஆரம்பித்திருந்தது.
“என்னமோ சொன்னே?… வானிலை அறிக்கையெல்லாம் சரியான டுபாக்கூர்ன்னு… பார்த்தியா அவங்க சொன்ன மாதிரியே மழை ஆரம்பிச்சிடுச்சு?” ஆறுமுகம் கார் ஜன்னல் வழியாக வானத்தைப் பார்த்துக் கொண்டே சொல்ல,
“அட… நீங்க வேற எங்கியோ மழை நல்லா அடிக்குது!… அதோட சாரல் இங்க விழுது அவ்வளவுதான்…” தன் கருத்தில் உறுதியாய் நின்றான் டிரைவர் டேவிட்.
அவர்களது வேன் இல்லத்தை அடைந்து போர்ட்டிகோவில் நிற்கும் போது லேசாய்த் தூறிக் கொண்டிருந்த வானம் பெருமழையை ஏவி விட்டுச் சிரித்தது.
அவர்களுக்கு அப்போது தெரியாது அந்த மழைதான் இந்த தூத்துக்குடியின் சரித்திரத்தில் ஒரு பெரும் நிகழ்வாக மாறப் போகின்றதென்று.
மதியம் இரண்டு மணி வாக்கில் தொடங்கிய மழை, சற்றும் ஓய்வெடுக்காமல் இரவு முழுவதும் பெய்து கொண்டேயிருக்க, நடு இரவில் கண் விழித்து ஜன்னல் வழியே வெளியே பார்த்த ஆறுமுகம் லேசாய்ப் பீதியானான். தூரத்தில் தெரிந்த ஏரி அதீத கொள்ளளவுடன் தளும்பிக் கொண்டிருந்தது.
“அடக் கடவுளே… நான் இங்க வந்து சேர்ந்த இந்த அஞ்சு வருஷத்துல இப்படி அந்த ஏரி நெறைஞ்சு பார்த்ததேயில்லையே…”
மீண்டும் படுக்கையில் சென்று விழுந்தவன், அடுத்த ஐந்தாவது நிமிடமே கனவிற்குள் விழுந்தான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings