2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அத்தியாயம் 1 அத்தியாயம் 2 அத்தியாயம் 3 அத்தியாயம் 4
அத்தியாயம் 5 அத்தியாயம் 6 அத்தியாயம் 7 அத்தியாயம் 8
“சார்…சார்… அங்க பாருங்க ரெண்டு படகுக வருது” முருகன் கூவினான்.
திரும்பிப் பார்த்த “வரட்டும்… வரட்டும்” என்றபடி, கோபியிடம் சென்று, “நீங்களும் உங்க ஆட்களும் எங்க கூட வரணும்…” என்றார்.
“நிச்சயமா வர்றோம்” என்ற கோபி, “சார்… இதுவரைக்கும் இந்த ஊர் ஜனங்களுக்கு எத்தனையோ கெடுதல்கள் செஞ்சிருக்கோம்… அதுக்கு பிராயச்சித்தமா எங்களால் முடிஞ்ச உதவிகளைச் செய்யறோம் சார்” என்றான்.
ஆறுமுகம் அவன் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.
படகுகள் இரண்டும் இல்லம் இருக்கும் மேட்டுப் பகுதிக்குக் கீழே தண்ணீரில் மிதந்தபடி நிற்க, எல்லோரையும் அழைத்துக் கொண்டு மேட்டுப் பகுதியிலிருந்து இறங்க ஆரம்பித்தார் ஆறுமுகம். அப்போது வேக வேகமா வந்த வாட்ச்மேன் வடிவேல், “ஆறுமுகம் சார்… நீங்க இங்கியே இருங்க… நாங்க பார்த்துக்கறோம்” என்றார்.
ஆறுமுகம் யோசிக்க, வேன் டிரைவர் டேவிட்டும், “ஆமாம் சார்… அதுதான் சரி… எனக்கென்னமோ இன்னும் கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் இங்கு வருவார்கள்ன்னு தோணுது… அதனால நீங்க இருந்து வர்றவங்களை கவனிங்க நாங்க போய் தண்ணில தவிக்கற மக்களைக் கூட்டிட்டு வர்றோம்” என்றான்.
“ஓ.கே.” என்ற ஆறுமுகம், கோபியைப் பார்த்து, “கோபி சார்… முதல்ல ரயில்வே லைனுக்குப் பக்கத்துல இருக்கற ஸ்லம் ஏரியா போய் அங்கிருக்கற மக்களைக் கூட்டிட்டு வாங்க” என்றான்.
மகிழ்ச்சியோடு தலையாட்டினான் ரவுடி கோபி.
படகுகளை அனுப்பி விட்டு, மக்கள் உணவருந்தும் இடத்திற்கு வந்தார் ஆறுமுகம். அங்கு எல்லோரும் சாப்பிட்டு முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
சமையல்கட்டிற்கு சென்று சாப்பாட்டு இருப்பைச் சோதித்த ஆறுமுகம் அங்கிருந்த சமையல்காரரிடம் கேட்டார். “இன்னும் எத்தனை பேருக்கு வரும் இந்தச் சாப்பாடு?”
“ஆகும்ங்க சார்… இன்னும் இருபத்தியஞ்சு… முப்பது பேர் வந்தாலும் தாங்கும் சார்”
“ஓ.கே.!… ஓ.கே.!” என்றபடி அங்கிருந்து நகர்ந்து மளிகைப் பொருட்கள் பகுதிக்கு வந்த ஆறுமுகத்தின் காதுகளில் யாரோ விசும்பலோடு அழும் ஓசை கேட்க, சுற்றும்முற்றும் பார்த்தார். அந்த ஓசை பின்புறம் பாத்திரங்கள் கழுவும் பகுதியிலிருந்து வர, குழப்பத்துடன் சென்று பார்த்தார்.
அங்கே!
தன் மகன் ராஜாவை மடியில் கிடத்திக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்தாள் சரஸ்வதி.
ராஜா பிறப்பிலேயே கோணலான முகத்துடனும், மேல் மற்றும் கீழ் உதடுகளில் பெரிய பிளவோடும் பிறந்து விட்ட பரிதாப ஜீவன்.
“ச…ர…ஸ்…வ…தி” மெல்ல அழைத்தார் ஆறுமுகம்.
சட்டென்று எழுந்து அவசர அவசரமாய்க் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “சா…ர்” என்றாள் கரகரத்த குரலில்.
“கொஞ்சம் என் கூட வாம்மா” சொல்லி விட்டு ஆறுமுகம் முன்னே நடக்க, ராஜாவைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தாள் சரஸ்வதி.
நேரே தன் அறைக்குச் சென்ற ஆறுமுகம், தன் இருக்கையில் அமர்ந்தார். “ம்… நீயும் உட்காரும்மா” எதிரிலிருந்த இருக்கையை அவர் காட்ட,
“இல்ல சார்!… பரவாயில்லை சார்”
“சரஸ்வதி… இன்னிக்கு மட்டுமில்லை… பல தடவை நீ தனியா உட்கார்ந்து அழறதை நான் பார்த்திருக்கேன்!… ஆனா அப்பவெல்லாம் நான் உன்னை விசாரிச்சதில்லை!… ஏன்னா?… இந்த இல்லத்துல இருக்கற எல்லோருமே வாழ்க்கைல ஏதோவொரு விதத்துல பாதிக்கப்பட்டுத்தான் இங்க வந்து அடைக்கலமாகறாங்க!… அவங்கெல்லாம் அப்பப்ப தங்களோட கசப்பான அனுபவங்களை அசை போட்டு அழுவாங்க!… அது ஒரு வகையான சுய ஆறுதல்!… அதனாலதான் நான் யார் அழுதாலும் கூப்பிட்டு ஆறுதல் சொல்றதில்லை!…”
அவள் அமைதியாய் நிற்க,
“அப்ப… இன்னிக்கு மட்டும் ஏன் சார் என்னைக் கூப்பிட்டு விசாரிக்கறீங்க?”ன்னு கேளு சரஸ்வதி” ஆறுமுகமே எடுத்துக் கொடுத்தார்.
அவள் கேட்டாள்.
“காரணம் இருக்கு!… இன்னிக்கு ஒரு விஷயத்தை நான் கவனிச்சேன்!… அந்த கோபியைப் பார்த்ததும் உன் முகம் கோபக்கனலாய் எரிந்ததையும், வேக வேகமாய் நீ ராஜாவைத் தூக்கிக் கொண்டு போனதையும் நான் கவனிச்சேன்!… அப்பவே புரிஞ்சுக்கிட்டேன்… உன்னோட கடந்த கால கசப்பு வாழ்க்கையில் அந்த கோபிக்கும் பங்குண்டுன்னு… சொல்லும்மா… என்ன பிரச்சினை உனக்கு?… இந்த ராஜா யார்?… அவனோட அப்பா யார்?… கழுத்தில் தாலி இல்லாத உன் கையில் ஒரு மகன் எப்படி வந்தான்?… சொல்லும்மா”
ஆறுமுகத்தின் ஆறுதலான பேச்சு சரஸ்வதியின் சோகச் சேற்றை மேலும் கிளறி விட, மீண்டும் அழுதாள். அவள் அழுது முடிக்கட்டும் என்று நிதானமாய்க் காத்திருந்த ஆறுமுகம், அவள் ஓய்ந்ததும் மீண்டும் கேட்டார். “சொல்லும்மா…”
கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் தீவிரமாய் யோசித்த சரஸ்வதி சொல்ல ஆரம்பித்தாள்.
“அப்ப… நான் பிளஸ் டூ படிச்சிட்டிருந்தேன்!… என்னோட சொந்த ஊர் மதுரை…. எங்கப்பா அங்கே தையல் கடை நடத்திட்டிருந்தார்… அவருக்கு ஒரே மகள் நான்!… எங்கம்மா சீக்காளி… எப்பவும் படுத்த படுக்கையாவே இருப்பாங்க!…”
*****
மதிய நேரம், வழக்கத்தை விட சற்று அதிகமாகத் தன் தாயார் இரும, படித்துக் கொண்டிருந்த பாட புத்தகத்தை அப்படியே கவிழ்த்து வைத்து விட்டு, எழுந்து தாயின் கட்டிலருகே வந்தாள் சரஸ்வதி.
“ம்மா… ஏம்மா இப்படி இருமறே?… மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிடறியா?… இல்லை அப்படியே வெச்சிருக்கியா?” கேட்டவாறே கட்டிலுக்கு அருகிலிருந்த சிறிய மேசையைத் திறந்து பார்த்த சரஸ்வதி கடும் கோபமானாள்.
“நெனச்சேன்… நெனச்சேன்… நீ இப்படி ஏதாச்சும் செய்வே!ன்னு நெனச்சேன்!… ஏம்மா காசு குடுத்து மருந்து மாத்திரையெல்லாம் வாங்கறது எதுக்கு?… இப்படிப் போட்டு பத்திரப்படுத்தி வைக்கறதுக்கா?… அதுகளை ஒழுங்கா சாப்பிட்டாதானே நோய் முணமாகும்?” தாயைத் திட்டியபடியே நாலைந்து மாத்திரைகளை உரித்துக் கையில் வைத்துக் கொண்டு, “ம்… எந்திரி…” என்றாள் சற்றுப் பெரிய குரலில்.
முனகிக் கொண்டே எழுந்து படுக்கையில் அமர்ந்த அவள் தாய் சோலையம்மா, “ஏண்டி என்னைத் தொந்தரவு பண்றே?” சிரமப்பட்டுப் பேசினாள்.
“தொந்தரவா?… உடம்பு குணமாக மாத்திரை குடுக்கறது தொந்தரவா?”
“ஹும்… எத்தனை மாத்திரை மருந்து சாப்பிட்டாலும் குணமாகாத கட்டைடி இது!… என்னைக் கூட்டிட்டு போக எமன் வந்திட்டிருக்கான்… கூடிய சீக்கிரமே போயிடுவேன்… அப்புரம் எதுக்கு இந்த மருந்து மாத்திரைகளை விழுங்கணும்?”
“த பாரு… இப்படியெல்லாம் பேசினே… அப்புறம் அம்மான்னு கூடப் பார்க்காம அறைஞ்சு போடுவேன்!… மொதல்ல இதுகளை முழுங்கு” அதட்டினாள்.
தனக்காக இல்லாவிட்டாலும், தன் மகளுக்காக அவன் தந்த மாத்திரை விழுங்கித் தொலைத்தாள் சோலையம்மா.
“சரி… அப்படியே படுத்திரு… நான் அப்பனோட டெய்லர் கடைக்குப் போயி மதிய சாப்பாட்டைக் குடுத்திட்டு வந்திடறேன்!… என்ன?” சொல்லி விட்டு தந்தைக்கான மதிய உணவை டிபன் கேரியரில் அடைத்துக் கொண்டு கிளம்பினாள் சரஸ்வதி.
இவள் போன போது அப்பாவிடம் அந்த இளைஞன் பரிதாபமாய்க் கெஞ்சிக் கொண்டிருந்தான். “நாளைக்கு என்னோட பிறந்த நாள்… எப்படியாவது இந்த சட்டையை தைச்சுக் கொடுங்க டெய்லர்… ப்ளீஸ்”
“என்னப்பா இப்பவே மதியம் ஆயிடுச்சு… இப்பக் குடுத்திட்டு, நாளைக்குக் காலைல வேணும்னு கேட்கறியே?… எப்படி முடியும்?… பேசாம வேற எதாச்சும் டெய்லர் கிட்டப் போய்க் குடு” சரஸ்வதியின் தந்தை சோமண்ணா சொல்ல,
“சார்… நானும் நாலஞ்சு கடைகள் முயற்சி பண்ணிட்டுத்தான் இங்கே வந்தேன்!… அவங்கெல்லாம் ஏற்கனவே தைக்க வேண்டியது நிறைய இருக்கு… அதனால இப்போதைக்கு முடியாதுன்னுட்டாங்க… ப்ளீஸ்”
“ஓ… அப்ப நான் மட்டும் தைக்க துணியே இல்லாம ஈ ஓட்டிக்கிட்டிருக்கேன்!ன்னு சொல்றியா?” சோமண்ணா கோபமாய்ப் பேச,
“அய்யய்ய… நான் அப்படிச் சொல்லலைங்க…” அழுது விடுபவன் போலானான்.
சரஸ்வதிக்கு அந்த இளைஞன் மீது ஒரு பரிதாபம் ஏற்பட, “அப்பா… அவர்தான் இவ்வளவு தூரம் கெஞ்சறார் அல்ல?… ஒரு சட்டைதானே தைச்சுக் குடுங்களேன்” என்றாள்.
அப்போது அந்த இளைஞன் நன்றியோடு அவளைப் பார்த்த பார்வை, அவளுக்கு ரசாயண மாற்றங்களை ஏற்படுத்தி விட, வெட்கத்துடன் தலை குனிந்தாள். “யார் இவன்?… இவன் பார்வை ஏன் எனக்குள் என்னமோ செய்யுது?” குழம்பினாள்.
“சரிம்மா… நீ சொல்றதுனால வாங்கிக்கறேன்” என்ற சோமண்ணா, அந்த இளைஞன் பக்கம் திரும்பி, “நாளைக்குக் காலைல… ஒரு… ஒன்பதரை மணிக்கு வந்து வாங்கிட்டுப் போ” என்றார்.
“சரிங்க…” சொல்லி விட்டுத் திரும்பி நடந்தவன், மீண்டுமொருமுறை சரஸ்வதியைப் பார்த்து விட்டுச் செல்ல,
வாழ்நாளில் இதுவரை அனுபவித்திராத ஒரு புது அனுபவத்தை அவள் உணர்ந்தாள்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings