நவம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17
பாலை நிலத்தின் பால் நிலவாய்..
கருங்கடலின் கார்முகிலாய்..
காற்றில்லாத முல்லை வனமாய்..
மழை பொழியாத மலை நிலமாய்..
வாடிப் போன வயல் வெளியாய்..
வதங்கித் தான் போனேனடி,
வஞ்சி உந்தன் கடைக்கண் பார்வை யின்றி!!
அரங்கேற்றம் முடிந்த ஆசுவாச நிலையோ? தேர்வெழுதி விட்டு முடிவுக்குக் காத்திருக்கும் மாணவனின் நிலையோ? அபி இப்பொழுது எந்நிலையில் இருந்தாளென அவளுக்கே தெரியாத பொழுது, அவள் பதிலேதும் கூறாது சிலையெனச் சமைந்திருக்கையில் மற்றவர்க்கு என்ன தோன்றுமாம்.
மற்றவர் அனைவரையும் ஒருகணம் பார்த்துவிட்டு, அருகிலிருந்த அபியை தோள் தொட்டு அசைத்தான் கிருஷ்ணா.
அதில் திகைத்து விழித்துத் திரும்பிப் பார்த்து, நிதர்சனத்தைக் கையிலெடுத்தவள்… நிதானத்துடன் தனுவைப் பார்த்து “நாம எப்போ கிளம்பனும்?” என்று மட்டும் கேட்டு வைத்தாள்.
அவளின் மனநிலை பற்றிய யோசனையின்றி, “நீ போன் பண்றதுக்குக் கொஞ்ச நேரம் முன்னாடி தான் எனக்கு ஹாஸ்பிடல்ல இருந்து கால் வந்துச்சு. அப்பத் தான் உன் அம்மா கண் முழிச்சதா சொன்னாங்க. இப்ப அவங்களுக்குக் கொஞ்சம் டெஸ்ட் எல்லாம் எடுக்க வேண்டிருக்கு, அதெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. நாம இன்னும் ஒரு மணிநேரத்துல கிளம்பலாம்” என்று தருண் கூறியதும், யாரையும் ஏறெடுத்தும் பார்க்காது விறுவிறுவெனத் தனது தனியறைக்கு வந்தவள், முதலில் கண்ணீரையே கொட்டினாள்.
இத்தனை நாளின்றி இன்று தன் தாய், அவளுக்கு இருக்கும் ஒரே சொந்தமாய் அவர் உயிர்த்தது, அவளையே உயிர்ப்பித்தது போலல்லாமல் எப்படி இருக்குமாம்.
எனவே தருண் கூறியது போலச் சரியாக ஒரு மணிநேரத்தில் தயாராகி அறையை விட்டு வெளியே வரவும், குடும்பம் மொத்தமும் அவளுக்கென அவளுக்கு முன்பாகவே தயாராகியிருக்கக் கண்டாள்.
அவள் மனநிலையை உணர்ந்து அவளுக்குத் தனிமையை அளித்தவர்கள் தானே அவர்களும். அது மட்டுமின்றித் துளசி அவர்கள் வீட்டுப் பெண்ணல்லவா… அவர்களின் ரத்தமும் சதையுமான உயிரல்லவா இன்று மறுஜென்மம் எடுத்தார் போல மீண்டும் உதித்திருக்கிறது.
அபிக்கு இருக்கும் பேராவல் அவர்களுக்கும் இருக்கத் தானே செய்யும். எனவே அனைவரும் கிளம்ப… தருண், தனுவுடன் அபியும் கிருஷ்ணாவும் ஒரு காரில் வர, மற்ற நால்வரும் இன்னொரு காரில் வந்தனர்.
செல்லும் வழியில் இரண்டு வாகனங்களும் பேரமைதியில் தான் இருந்தன. ஒவ்வொருவர் மனமும் காரை போட்டு இறுக்கிய கற்சுவராய் இறுகிப் போய்த் தான் கிடந்தது.
இறுதியாக மருத்துவமனைக்குச் சென்றடைந்ததும், அங்கே அந்தத் தனி ICUவிற்குள்ளே செல்ல அனைவரின் கால்களும் கொஞ்சம் தயங்கிப் பின் முன்னேறிய நொடியில், அனைவரையும் தடுத்து அபியை மட்டும் உள்ளே செல்ல விட்டான், அவனவளின் மனம் புரிந்த அவளவன், வம்சி கிருஷ்ணன்.
அறைக்குள்ளே… நடுங்கும் விரல்களுடன், அந்த விரலில் சிக்கித் தவிக்கும் அவள் சுடிதாரின் துப்பட்டாவுடன்… மெல்ல மெல்ல செல்லுகையில், அதுவரையிலும் கூடக் கண்மூடிப் படுத்திருந்த துளசி, யாரோ அறையினுள் வரும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தவர், வருவது தனது லயா என்கையில் அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தார்.
அவரது பதட்டம் கண்டும், உடல்நிலையை மனதில் கொண்டும் வெகுவேகமாய் அவரருகில் சென்று அவரின் முகத்தைப் பார்த்தவளுக்கு, பளிங்கெனச் சிரிக்கும் அந்த முகத்தில் இப்பொழுது அடிபடாத பிரதேசமே இல்லை என்பது போல… எவ்வளவு தான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்திருந்த பொழுதும், அந்தத் தழும்பும் கூட இன்னமும் முழுதாகக் குணமாகவில்லையே.
அப்படிப்பட்ட முகத்தைக் காண்கையில் , அதுவும் மீண்டு திரும்பிய உயிரோட்டத்துடன் பார்க்க, அடிவயிற்றின் சோகமெல்லாம் வார்த்தையாய்… வார்த்தையின் வலியாய்… வலியின் அழுகையாய் வந்து கொட்டி விடாதாமா அவளுக்கு?
கொட்டி விடத்தான் செய்தாள் பெண். “அம்மா”வெனப் பெருங்குரலெடுத்து அழப் போனவளை, வாய்ப் பொத்தி இருகரம் கொண்டு இறுக்க அணைத்திருந்தது அந்தத் தாய் மனம்.
ஆம்… தான் எத்தனை எத்தனை வலியிலிருந்தாலும், தன் மகவின் சிறுசிராய்ப்பு தாங்குமா எந்தத் தாய்க்கும்? அது போலத் தான், இத்தனை நாள் தான் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததெல்லாம் மறந்து… தானில்லாமல் இத்துணை நாட்கள் என் குழந்தை எத்துனை கஷ்டப்பட்டிருக்குமோ என்றே பரிதவித்தது.
இதிலும் தன் கணவரும் ஆருயிர் மகளும் இறந்துவிட்டதெல்லாம் அவரிடம் இதுவரை எவரும் வெளிப்படுத்தாத விஷயங்கள். ஆனால், லயாவிற்கும், ரதிக்கும் என்று தான் வித்தியாசம் கண்டிருக்கிறார் அவர்? எனவே தான் இப்பொழுது லயாவைப் பார்க்கவே, அவள் வருத்தமே முன் நின்றது அவருக்கு.
அவளும் அவருக்காகவே, தன்னைச் சமனப்படுத்திக் கொண்டவள்… அவரது முகத்தை மீண்டும் மீண்டுமாய் அமைதியாகப் பார்த்தாள். அவரது முகத்தைப் பார்த்த அந்தக் கண்களின் வலி புரியாதா துளசிக்கு? மறுநொடி அவரின் மடி மீது லயா.
சில நொடிகள் அந்த ஸ்பரிசம்… தனது இந்தத் தாயாவது தன்னுடன் இன்னும் இருக்கிறாரே… அதுவும் எப்படி எமனை சந்தித்து மீண்டு வந்திருக்கிறாரே… என்ற உணர்வில் அபியும், அபி இத்தனையாய் வருந்தவும், இத்தனை இத்தனையாய் அழவும்.. அவளை விட்டு எதனை நாட்கள் தான் இப்படி உணர்வின்றி இருந்தேனோ என்ற புரிதலில் அவரும் இருந்திட்டனர்.
பின்னர் இருவருமே சமனப்பட்டு, அபி எழுந்து அமர்ந்த பின்னர்த் தான் அதுவும் எதேச்சையாகத் தான் துளசி கேட்டார்.
“அப்பாவும், ரதியும் எங்கடா?” என்றிட, காலடியில் பூமி பிளந்தது லயாவிற்கு. சற்று முன்னர் தான் நின்றிருந்த கண்ணீர் சுரப்பிகளுக்கு மீண்டும் வேலையும் வந்தது.
அவளது அழுகையைப் பார்த்த துளசிக்கோ, பிரளயத்தை விடவும் வேறேதோ பயங்கரமான செய்தி வரப் போகிறது என்ற பயப்பந்து ஒன்று உருண்டு… அது முதுகுத்தண்டிற்குச் சென்று அங்குச் சில்லிப்பை உண்டாக்கியது.
இருந்தாலும் எச்சூழ்நிலையிலும் நிதானத்தைக் கைவிடாதவராக, “என்னாச்சு லயாம்மா? எதுன்னாலும் சொல்லு?” என்று கேட்க, அப்பொழுது தான் அவள் ஒரு அலைப்பேசியை எடுத்துக் காண்பித்தாள்.
அதைப் பார்த்ததுமே அவருக்குப் புரிந்து விட்டிருந்தது, அது ரதியின் அலைபேசிதான் என்பது. அவளது அலைபேசி மட்டுமே இவளிடம் என்றால்… அவளெங்கே? என்ற ஆகப் பெரும் கேள்வியும், அதிபெரும் அச்சமும் அவரது நெஞ்சை அடைத்து மூச்சுப் பிடித்துக் கொண்டாலும், கேள்வியான பார்வை தவிர வேறில்லை அவரிடம்.
அவரது இந்தத் திடத்தைக் கண்டவளுக்கு மனம் பிரமித்தாலும், இவ்வாறு உடல் நொந்து, மனம் கனத்திருக்கும் இந்நிலையில் அவரை மேலும் சோதிக்கிறோமோ என்று தானே இருக்கும்?
எனவே மீண்டும் தயங்க தான் செய்தாள் பெண். அவரது உடல்நிலை கருதி அபி இப்பொழுது உடனடியாக உண்மை உரைக்காவிட்டாலும் கூட, இதோ வெளியில் காத்திருப்பவர்கள் துளசியைச் சந்தித்தால் போதுமே அவர் மனம் உடைந்து நொறுங்குவதற்கு.
அதற்கு அவளே… இல்லையில்லை… ரதியின் வாய் மொழி வழியாகவே அவர் உண்மையை உணரட்டுமே என்றிருந்தது அவளுக்கு.
எனவே தான் கண்ணீர் மழை இமை குடையைத் தாண்டியும் வழியும் கண்களுடன் அவரை இரு கணம் நோக்கியவள்… அந்தச் சூழ்நிலையின் கணம் தாங்காது அதே இமைகளைத் தாழ்த்தி, அந்த அலைபேசியை உயிர்ப்பித்து அதில் ரதி கடைசியாக உதிர்த்த வார்த்தைகளைக் காற்றில் கசிய வைத்தாள்.
அபி ரதி.. ஆசை ஆசையாய் மணம் பூண்டு.. அதன் காதலில் அதிபூரித்து.. துளசியின் கருவில் விழுந்த முதல் வித்து.. திருமணம் ஆன அடுத்த மாதமே கருவுற்ற மகவு.. காதலாய் கசிந்து கருவாய் ஜனித்தவள்.
கருவில் வளர்கையிலே ஒவ்வொரு நொடியையும்.. அவளுடனே கழித்தது. முதல் அசைவை உணர்ந்து.. அந்தச் சிறுபிஞ்சின் பாதத்தின் உந்துதலைத் தேடித் தேடித் தாங்கி, கணம் கணம் ஆவலுடன் பேசி.. கற்று.. கற்பித்து.. பிரசவவலியே எடுக்காமல் நாட்கள் கடந்து போக, மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டுமெனக் கூறியதும், அதில் கதறி.. உடைந்து அழுது, அந்த அழுகை அந்தக் குழந்தைக்குப் புரிந்ததோ என்னவோ, அப்பொழுதே தாயின் மனவேதனை பொறுக்காது கர்ப்பவாசல் திறந்து தன்னால் தாய்பட்ட அத்தனை அத்தனை வலிக்கும் அவளது ஒரு சிரிப்பிலேயே மருந்திட்டவள்.
அப்பொழுது மட்டுமா? அதன் பின்னர் வந்த நாட்களில், துளசிக்கு தாய் வீட்டு உறவென்பதே சுத்தமாக, சுடுநீர் ஊற்றிய சிறுசெடியாய் மரித்துப் போக, சிறுவயதில் தனது விளையாட்டுத் தனங்களிலால் எப்படித் தன் தாயின் புன்னகையை வாட விடாது பார்த்துக் கொண்டாளோ, அது போலவே கொஞ்சம் வளர்ந்ததும்.. விவரம் உணர்ந்ததும் தாய்க்கு தாயெனவே மாறிய தாயுமானவள் அவளென்று உரைத்தால் அதுவும் தகும் தானே.
அப்படிப்பட்டவள்… இப்பொழுது வெறும் குரலாக மட்டுமே. காற்றில் கரைந்து கொண்டிருப்பது ரதியின் வார்த்தைகள் மட்டுமல்ல, அவளது உயிரும் தான் என உணர அந்தத் தாய்க்கு வெகுநேரம் பிடிக்காது தானே.
அதை உணர்ந்த நொடி, அவரது வலக்கண்ணிலிருந்து குபுக்கென ஒரு துளி சூடாகக் கன்னத்தில் தரை இறங்குகிறது.
அதையும் கட்டுப்படுத்திக் கொண்டு அவர் அந்தக் குரலை தனது உதிரம் கடைசியாக உதிர்த்த வார்த்தைகளை உள்வாங்க முனைய, “அம்மா..” என்றழைக்கிறது ரதியின் குரல்… அலைபேசியில்.
“அம்மா… எனக்கு இப்ப என்னவெல்லாமோ சொல்லணும்னு தோணுதும்மா, ஆனா என்ன சொல்றதுன்னு தெரியல. அம்மா.. பயமா இருக்கு மா. நான் உங்கள விட்டுட்டு போய்டுவேன்னு இங்க பேசிக்கறாங்க. அழுகையா வருது. மறுபடியும் உங்க மடில சாஞ்சுக்க, உங்க கையால சாப்பாடு ஊட்டி விட, உங்ககிட்ட தலை வாரிக்க, அப்படித் தலை வாரும்போது நான் அசைஞ்சா செல்லமா கொட்டுவீங்களே.. அந்த மாதிரி ஒரு கொட்டு வாங்க.. உங்க புடவையோடு வாசம் பிடிக்க.. ன்னு ஆசையா இருக்கும்மா. ஆனா மறுபடியும் இதெல்லாம் செய்யவே முடியாதாம்மா.. அதைவிட.. அப்பா.. நம்ம அப்பா.. இல்லம்மா” என்கையில் அந்தக் குரல் உடைந்து வெடித்திருந்தது .
அதோடு அந்த முதல் ரெகார்டிங் முடிந்திருக்க, அடுத்து மீண்டுமாய் மற்றொரு வாய்ஸ் ரெகார்டிங்கை ஆன் செய்தாள் லயா. இப்பொழுது குரல் கொஞ்சம் சமாதானமாகியிருந்தது.
“சாரி மா… அப்ப அழுகையை அடக்க முடில. இது… இது என்னோட மரண வாக்குமூலமா எடுத்துக்கலாம். நம்ம அப்பா இப்ப இல்ல.. என்னோட அம்மாவும், தங்கை லயாவும் நடந்த கார் விபத்துல சுயநினைவில்லாம இருக்காங்க. நானும்.. என்னோட உயிரும் ரொம்ப நேரம் தாக்கு பிடிக்காது. அதனால என்னோட அம்மாவுக்காகவும், என் தங்கைக்காகவும், நானே இந்தப் பொய்யச் சொல்லப் போறேன்.
ஏன்னா.. என் அப்பா வீட்டுப் பக்கம் எங்களுக்கு யாரும் இல்ல. இப்ப தான் என் அம்மா வீட்டுச் சொந்தங்கள் எல்லாம் எங்களுக்குச் சேர ஆரம்பிச்சு இருக்கு. இந்த நேரத்துல என் அப்பாவும் இல்லாம, நானும் இல்லாம என் தங்கையோட என் அம்மா அவங்க அப்பா வீட்டுக்கு போனா, என் அம்மாவுக்கோ, என் தங்கைக்கோ அவங்ககிட்ட ஆதரவு இருக்குமான்னு எனக்குத் தெரில.
ஆமாம்மா.. நீங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ரொம்பக் கஷ்டத்துல இருப்பீங்க, இதுல அவங்களும் உங்கள வேதனைப் படுத்திட வேணாம். அதனால தான் நான் இந்தப் பொய்ய இங்க சொல்லியிருக்கேன். அதாவது.. நான் லயா.. இப்போ சுயநினைவில்லாம படுத்திருக்கறது தான் ரதி. லயா தான் சாகப் போறா.. எல்லாருக்கும் உங்க மகள்னு தெரிஞ்ச ரதின்ற பேர லயா ஏத்துக்கப் போறா. சோ இனி மத்தவங்களுக்கு லயா இறந்துட்டதா இருக்கட்டும். ரதி.. உங்க பொண்ணு உயிரோட இருக்கறதா இருக்கட்டும்” என்று கூறியவள்…
இறுதியாக, “அம்மா.. இப்ப உங்க மடில தான் மா படுத்திருக்கேன்.. என்.. என்னோட கடைசி ஆச. நான் ஏதாவது தப்பு பண்ணியிருந்தா மன்னிச்சுக்கோங்க மா.. உங்க அப்பா அம்மா லயாவ ஏத்துக்கணும்னு தான் நான் இந்தப் பொய் சொன்னேன். இது நம்ம லயாக்கும் புரிய வைங்க மா.. லவ் யூ மா.. லவ் யு லாட் லயா மா. நீங்க அழவே கூடாதும்மா.. அப்படி அழுதா தான் நான் செத்துட்டேன்னு அர்த்தம்.
இப்போ என்ன உங்க ரெண்டு பொண்ணுங்களும் இனி ஒரே உருவத்துல, ஒரே உடம்புல இருக்கப் போறாங்க.. லயாக்குள்ள நானும் இருப்பேன் மா.. நாங்க ரெண்டு பெரும் உங்கள எப்பவும் சந்தோசமா வச்சுப்போம் அம்மா. நீங்க எப்பயும் சிரிசிட்டே இருக்கணும். அப்பறம் கடைசியா.. என் ஆச தீர உங்கள ‘அம்மா’ன்னு கூப்பிட்டுக்கறேன்.. அம்மா..அம்மா.. நான் போறேன் மா.. நீங்க தான் இந்த உலகத்துலயே பெஸ்ட் அப்பா.. அம்மா…” என அந்த இரண்டாவது வாய்ஸ் ரெகார்டிங் முடிந்தது
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தத் தாய்க்கு இதயம் நின்று விடாதா என்ன? ஆனால் அவர் அந்நிலையெல்லாம் கடந்திருந்தார். அதுவரை அந்த அலைபேசியையே பார்த்திருந்தவர், மீண்டுமாய் விழி உயர்த்தி லயாவைப் பார்க்க, எப்படி இருக்குமாம் அவளுக்கு.
சிலுவையில் அறையப்பட்டால் கூட இவ்வளவு வலிக்காது போலிருக்கிறது.. நரசிம்மனின் நகம் கிழித்தால் கூட இப்படி இதயம் சுக்களாய் கிழிந்திருக்காது. காற்றில்லாத விண்வெளியில் தூக்கி வீசியிருந்தாலும்… மூச்சுக்கு இத்தனை தவிப்பிருக்காது.
என்ன தான் மரணப்படுக்கையில் ஒருத்தி சொன்னாளென்றாலும், அதை நீயும் ஏன் ஏற்றாய் என்று துளசி கேட்டால், அந்த நிமிடம், அந்த வினாடியே உயிர் நின்று விடவா என்று ஊசலாடிக் கொண்டிருந்தது.
ஆனால்.. “ரதிம்மா…” என்று அவளை அழைத்து.. அவளது உயிர் மீண்டுமாய் அவளது நெஞ்சுக்குள் குடிபுகச் செய்தார்.
அவள் அதிர்வுடன் அவரை நோக்கும் பொழுதே கண்களை இறுக்க மூடி வடியும் விழிநீரை உள்ளே இழுத்தவர்… ஒரு ஆழ்ந்த மூச்செடுத்துப் பின்னே விழி திறந்து, “அவ இவ்வளவு சொன்னதுக்கு அப்பறமும் நான் அழுதா… அப்பறம் அது நானே அவளைக் கொன்னுட்டா மாதிரி தான டா?” எனக் கூறிவிட்டு, ஒரு கணம் குனிந்து கோர்த்திருந்த தனது விரல்களைப் பார்த்தவர்..
“நானே என் ரதிய கொல்ல மாட்டேன். இனி நீ தான் எனக்கு லயாவும் ரதியும் கூட. எனக்கு நெஞ்சு வெடிக்கற மாதிரி தான் இருக்கு.. என் புருஷன்.. நம்ம அப்பா.. அவரு ஆக்சிடன்ட் ஆனப்பவே அவரைப் பார்த்தேன்.. அந்த அறைகுறை மயக்கத்துலயே எனக்கு அவர் பிழைப்பாரானு சந்தேகம் இருந்துச்சு.. ஆனா.. இவ.. வாழ வேண்டிய குருத்து..” என்று விட்டு மீண்டும் மௌனிக்க…
அந்த நிமிடம், வெளியே இருந்து துளசியின் உடல்நிலையை மீண்டும் பரிசோதிக்க அறைக்குள் வந்த நர்சோ… “என்னம்மா.. உன் அம்மா உனக்கு மறுபடியும் கிடைச்சுட்டாங்களா? சந்தோசம் தான?” எனக் கேட்க
அபியோ, “நிஜமாவே என் அம்மா மறுபடியும் நல்லபடியா எனக்குக் கிடைச்சுட்டாங்க சிஸ்டர்..” என்று புன்னகையுடன் கூடிய அர்த்தப் பார்வையொன்றை தன் தாயிடம் வீசியபடி கூறினாள் பெண்.
அதில் மனநிறைவுற்ற நர்ஸும்.. “ஹ்ம்ம்.. அப்போ அம்மாவும் பொண்ணும் கதை பேசி முடுச்சுட்டா, வெளில இருக்கறவங்களை எல்லாம் உள்ள வர சொல்லலாம்ல? அம்மாவும் அவங்க மருமகனை பார்ப்பங்கள்ல?” என்று இத்தனை நாள் அபி மருத்துவமனைக்கு வந்து போனதில் அந்த நர்ஸுடன் ஏற்பட்ட பழக்கத்தில், அவரும் சகஜமாய் வினவி விட்டு வெளியே செல்ல, மீண்டுமாய் ஒரு பேரதிர்வு துளசிக்கு.
அந்த அதிர்வை பார்வையால் படம் பிடித்துக் கண்களின் வழியே அபியை நோக்க, அவளோ தன் கழுத்தத்திலிருந்த மஞ்சள் சரடை கையில் ஏந்தியபடி, இரு கரங்களையும் கூப்பி அவரை இறைஞ்சிக் கொண்டிருந்தாள்.
அதே நேரம்.. வெளியே நின்றிருந்த அனைவரும் அந்த அறைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தனர்.
(தொடரும் – சனிக்கிழமை தோறும்)
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17
GIPHY App Key not set. Please check settings