in ,

ஹோம் ஸ்வீட் ஹோம் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்… 

‘சிவகாமி’ முதியோர் இல்லம் அன்று விழாக்கோலம் பூண்டிருந்தது, காரணம் அன்று வத்ஸலா அங்கிருந்து விடைபெற்று தன் மகனுடன் அமெரிக்கா போவது தான்.

பொதுவாக எல்லோருக்கும் வீட்டிலிருந்து இந்த மாதிரி முதியோர் இல்லங்களுக்கு வரும் போது தான் முகம் ‘உம்’மென்று இருக்கும். ஆனால் வத்ஸலாவிற்கு இந்த இல்லத்திலிருந்து, தன் மகனுடன் அமெரிக்கா போவதற்கு முகம் சந்தோஷமாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அந்த முகத்தில் ஏனோ எந்த உணர்ச்சிகளும் இல்லை!

வத்ஸலா எம்.ஏ. பி.எட். ஒரு ரிடையர்ட் ஹைஸ்கூல் டீச்சர். அவள் கணவர் வெங்கடேசன் ரெயில்வேயில், எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவராக இருந்தவர். அவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள், மூன்றாவதாக ஒரு பெண்.

மூவருக்குமே வெளிநாடுகளில் பணிபுரிந்து டாலர்களில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை சிறு வயதிலிருந்தே ஊன்றியிருந்தது. காரணம் அவர்கள் பெற்றோர்கள் மட்டுமல்ல, சுற்றுப்புறமும் அதற்குக் காரணம்.

அவர்கள் வசித்த அந்த ரெயில்வே காலனியில் அடிக்கடி ஏதாவது ஒரு வீட்டிலிருந்து ஒரு பையனோ அல்லது பெண்ணோ வெளிநாடு போவதும் அந்தக் குடியிருப்பில் உள்ள மற்றவர்கள் அதையே சில நாட்களுக்குப் பெருமையாகப் பேசுவதும் வழக்கமாக இருந்தது.

அந்த வெளிநாட்டுப் பெருமையும் டாலர்களின் கனவும் அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் பசுமரத்தாணி போல் ஆழப்பதிந்தது. அதையே குறிக்கோளாக வைத்து நல்ல மதிப்பெண்கள் பெற்று, படிப்பதற்காகப் பின்னர் வேலைக்காக என்று வெளிநாடுகளுக்கு ஒவ்வொருவராக இரை தேடும் பறவைகளாகப் பறந்து விட்டனர்.

மற்றவர்களிடம் பிள்ளைகளைப் பற்றிப் பெருமையாகப் பேசினாலும் பிள்ளைகள் யாரும் இல்லாத வெறுமையை, அந்தத் தனிமையை யாரால் நிரப்ப இயலும்? அந்தத் தனிமை என்னும் கொடுமையிலிருந்து யார் காப்பாற்றுவார்கள்?

தனிமையின் மனஅழுத்தமா? வயது முதிர்ந்ததாலா? ஏதோ ஒரு காரணத்தால், வத்ஸலாவைத் தனிமையில் விட்டு, அவள் கணவர் வெங்கடேசன் போய் சேர்ந்து விட்டார்.

அமெரிக்காவில் இருந்தும், ஆஸ்திரேலியாவில் இருந்தும், லண்டனில் இருந்தும் இரை தேடச் சென்ற பறவைகள் திரும்பின. புரியவில்லையா? அவர்கள் பெற்ற மும்மூர்த்திகளும் வந்து தந்தைக்கு செய்ய வேண்டிய கடமைகளை முடித்து விட்டுச் சென்றனர்.

அவர்கள் மூவரும் முடிவு செய்து பணம் கொடுத்துத் தங்கும் ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் வத்ஸலாவைச் சேர்த்து விட்டுச் சென்றனர். வத்ஸலாவின் பென்ஷன் பணத்திலிருந்து தேவையான பணம், ஆட்டோமேட்டிக்காக முதியோர் இல்லத்திற்கு சேர்ந்து விடும். அவள் கணவனின் குடும்பநல ஊதியம் (பேமலி பென்ஷன்) முழுவதுமாக வத்ஸலாவின் கணக்கில் சேர்ந்து விடும்.

வத்ஸலா இந்த முதியோர் இல்லத்தில் சேர்ந்தும் பத்து வருடங்கள் ஆகி விட்டன. அவள் இந்த இல்லத்தில் பணம் கட்டித் தங்கியிருந்தாலும், ஒவ்வொரு வேளையும் சரியான நேரத்தில் சாப்பாடு, மருத்துவ வசதி எல்லாம் கிடைத்து விட்டாலும், வத்ஸலாவால் அமைதியாக ஒரே இடத்தில் உட்கார முடிவதில்லை.

அந்த ஹோமில் அவள் தங்கியிருந்த அபார்ட்மென்ட்டிற்குப் பக்கத்தில் ஒரு புகழ் பெற்ற கதாசிரியர் இருந்தார். அவருடைய நாவல்கள் வத்ஸலாவிற்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு வயது எண்பத்தி ஐந்து என்று சொன்னார்.

முதுமையின் காரணத்தால் அவருக்கு தலை லேசாக ஆடும். விரல்கள் எல்லாம் நடுங்கும். பேனாவைப் பிடித்து எழுத முடிவதில்லை. “ஐ பேட், லேப் டாப் எல்லாம் வைத்திருந்தும் உபயோகப்படுத்த முடிவதில்லை” என்றும் வருத்தப்பட்டுக் கொண்டார்.

வத்ஸலா அவருடன் சில நாட்களில் மாலை நேர வாக்கிங் போவதுண்டு. சில நாட்களில் அங்கு தங்கியிருந்த மங்களம் மாமியுடனும் வாக்கிங் போவது வழக்கம்.

நாவலாசிரியர் மூலமாக இலக்கியங்கள், உலக வரலாறு, சில பெரியோர்களின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றைத் தெரிந்து கொண்டாள்.

உதாரணத்திற்கு லிங்க்கன், காந்திஜி, மண்டேலா போன்றவர்களின்  வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் சுவைபட சொல்வதோடு அவர்கள் சம்பந்தமான புத்தகங்களும் வத்ஸலாவிற்குப் படிக்கக் கொடுப்பார்.

எல்லா வேளைக்கும் உணவு டேபிளிற்கே வந்து விடுவதால் அவள் அவருக்கு நிறைய நேரங்களில் அவர் சொல்லும் கதைகளையோ அல்லது கட்டுரைகளையோ ‘ஆன் லைனில்’ டைப் செய்து அவர் சொல்லும் வார இதழ்களுக்கோ, மாத இதழ்களுக்கோ ஆன்லைன் மூலமாகவே அனுப்பி விடுவாள்.

மங்களம் மாமி கொஞ்சம் வம்பு தான், ஆனால் லௌகிகமான உலக விஷயங்கள் அவளுக்கு அத்துபடி. அந்த ஹோமில் உள்ள எல்லா கேரக்டர்களையும் நன்றாக, ஏன் கொஞ்சம் விவரமாக விவரிப்பாள். சில நேரங்களில் வத்ஸலாவிற்கு எரிச்சல் கூட வரும், ஆனால் வெளியில் காட்ட மாட்டாள். இப்படியும் சில மனிதர்கள் என்று நினைத்துக் கொள்வாள், ஆனால் அவளிடமிருந்தும் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வாள்.

வாரத்தில் ஒரு நாள் அந்த ஹோமில் உள்ள எல்லோருக்கும் டெம்ப்ரேச்சர், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு, இரத்த அழுத்தம் எல்லாவற்றையும் ஒரு டாக்டரும், நர்ஸும்  வந்து பரிசோதனை செய்து, அழகாக ரெகார்ட் செய்து வைப்பார்கள். அப்போது வத்ஸலா அவர்கள் கூடவே இருந்து அவர்கள் சொல்வதை செய்து உதவி செய்வாள்.  அதனால் அவர்கள் வரும்போது வத்ஸலாவும் பிசியாகி விடுவாள். அந்த டாக்டரும் நர்சும் வரும்போதே “வத்ஸலா மேடம்” என்று அழைத்துக் கொண்டே தான் வருவார்கள்.

சமையல் அறையிலும் தன் அனுபவத்தை வெளிப்படுத்துவாள். அங்கே சமையலுக்கே இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் வத்சலா அங்கே போனால் அவளுக்கென்று சில வேலைகள்  இருக்கும். சமையலில் எந்த வேலையும் இல்லையென்றால் ‘சிங்க்’கில் இருக்கும் அழுக்கப் பாத்திரங்களையாவது கழுவிப் போட்டு விட்டு வருவாள்.

அவர்கள் சீனியர் சிட்டிசன் ஹோமிற்குப் பக்கத்தில், அதே காம்பௌண்டிற்குள் இன்னொரு இரண்டடுக்கு கட்டிடமும் இருந்தது. அதில் ‘ஹோம் பார் டெஸ்டிடியூட் விமன் அண்ட் சில்ட்ரன்’ என்ற எழுத்துக்கள் பெரியதாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

மங்களம் மாமி தான்  அங்கே தங்கியிருக்கும் கணவனால் கை விடப்பட்ட பெண்கள் பற்றியும், பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட அனாதை குழந்தைகளைப் பற்றியும் கதைகதையாகச் சொன்னாள். மங்களம் மாமி கூறிய கதைகளைக் கேட்ட அன்று இரவு முழுவதும் வத்ஸலாவிற்குத் தூக்கம் வரவில்லை.

அடுத்த நாளே அவள் ஓய்வூதியத்திலிருந்து மீதியிருந்த தொகையில் ஒரு சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் அந்தக் குழந்தைகளுக்காகவும், அந்தப் பெண்களுக்காகவும் அனுப்பிவிடுவாள்.

இப்படி அந்த ஹோமில் ஒவ்வொரு அடியிலும் தன் ஞாபகங்களைப் பதித்திருந்தாள் வத்ஸலா. பத்து ஆண்டுகளாக அந்த ஹோமில் ஒவ்வொரு தூணிலும் துரும்பிலும் அவள் நினைவுகள் பதிந்திருக்கும்.

அவள் இங்கிருந்து பிரிந்து போவது என்பது ஒரு பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி வேறோர் இடத்தில் நடுவது போல் இருந்தது.  ‘கேட்காத கடனும் பார்க்காத பயிறும் பாழ்’ என்று சொல்வது போல், பார்க்காத உறவும் பாழ் தானோ?

ஏனோ, வத்ஸலாவால் மகனுடனும், மருமகளுடனும் ஒன்றி இருக்க முடியவில்லை. யார் மேலும் தவறு சொல்ல முடியவில்லை. யாரிடமும் தவறும் இல்லை, ஏதோ அந்நியர் வீட்டில் இருந்தாற் போல் இருந்தது.

வீட்டில் எல்லா சௌகர்யங்களும் இருந்தன. இவள் கேட்டது எல்லாம் உடனுக்குடன் வாங்கி வைத்து விடுகிறார்கள் மகனும் மருமகளும். எல்லாம் இருந்தும் எதுவுமில்லாது போல் இருந்தது வத்ஸலாவிற்கு.

அருகில் அமர்ந்து பேசுவதற்கு இருவராலும் முடியவில்லை. காலை ஏழு மணிக்கெல்லாம் மகன் ஷியாம் காரை எடுத்துக் கொண்டு அலுவலகம் ஓடி விடுகின்றான். எட்டாம் வகுப்பும் பத்தாம் வகுப்பும் படிக்கும் பேரனும் பேத்தியும், அவர்களே அவர்களைத் தயார் செய்துக் கொண்டு, ஏதோ சீரியலில் காய்ச்சாத பாலை ஊற்றி சாப்பிட்டு, ஆளிருந்தாலும் இல்லையென்றாலும் ‘பை’ என்று ஒரு குரல் கொடுத்துவிட்டு ஸ்கூல் பஸ்ஸில் ஏறி ஓடி விடுகிறார்கள்.

மருமகளும் அதே கதி தான். அவளும் எட்டு மணிக்கெல்லாம் ஒரு கார் எடுத்துக் கொண்டு போய் விடுவாள். பறவைகள் கூடு தேடி வருவது போல் மகனும் மருமகளும் இரவு ஏழு மணிக்குத் தான் வீட்டிற்கு வருவார்கள். பேரனும் பேத்தியும் நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்தாலும் ப்ரிஜ்ஜிலிருந்து எதையோ எடுத்து, மைக்ரோஒவனில் சூடு செய்து, கையில் செல்போனும், காதில் ஹெட் போனுமாக ‘ஹாய்’ என்று சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்.

அந்த குழந்தைகள் என்ன செய்வார்கள்? அவர்களுக்கு நம் தமிழ் தெரியாது, நாம் பேசும் ஆங்கிலத்தின் உச்சரிப்பு அவர்களுக்குப் புரியாது. எதற்கு சம்பாதிக்கிறார்கள், எதைத் தேடி ஓடுகிறார்கள் என்றே புரியவில்லை.

வீசுகின்ற குளிர் காற்றில், வத்ஸலா வழக்கம் போல் விழித்துக் கொண்டாலும் போர்வையை உதறி விட்டு வரமுடியவில்லை. அவள் மனம் படுத்துக் கொண்டே சென்னையைத் தான் நினைக்கும்.

அந்த ஹோமில் காலையில் எழும் போதே காபி சூடாக பிளாஸ்கில் வந்து விடும். சிறிது நேரத்தில் இரண்டு விதமான டிபன் இட்லியும் இடியாப்பமும் அல்லது பொங்கலும் பூரியும் என்று சுடச்சுட வந்து விடும். மத்தியான உணவும், இரவு உணவு எல்லாம் அப்படியே.

இங்கே அமெரிக்காவில் இவளுக்கு வேண்டியவற்றை இவளே தான் தயார் செய்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ‘டோர்டேஷ்’ மூலம் வாங்க வேண்டும். ஆனாலும் இவளுக்குப் பிடிக்கவில்லை.

நம் சாப்பாட்டிற்கு மட்டுமா ஏங்கினாள்? எப்போது பார்த்தாலும் குளிரிக் கொண்டேயிருக்கும் இங்கே வந்து ஏன் மாட்டிக் கொண்டோம் என்று இருந்தது. யாருடனாவது ஆசை தீர தமிழில் பேச வேண்டுமென்று மனம் ஏங்கியது.

நல்ல வெயிலில் வேர்வை வழிய நடக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் குழந்தைகள் விளையாடும் சப்தம் வேண்டும், மனிதர்களின் பேச்சுக் குரல் எல்லாம் வேண்டும் என்று மனம் ஏங்கியது. அவ்வளவு ஏன், சென்னையில் எங்கு பார்த்தாலும் தூசு என்று சொல்வார்களே, அந்த தூசிற்குக் கூட மனம் ஏங்கியது.

ஒரு வழியாக மகனிடமும் மருமகளிடமும் தனக்கு அங்கே பொருந்தவில்லை என்று கூறி விடைபெற்று ‘தாய் மண்ணே வணக்கம்’ என்று கூறி சென்னை வந்து சேர்ந்தாள் வத்சலா. அங்கிருந்து சிவகாமி முதியோர் இல்லத்திற்கு வந்து சேர்ந்து விட்டாள்.

எல்லோரும் அமெரிக்கா சொர்க்கம் என்று சொல்கிறார்கள். அம்மாவிற்கு மட்டும் ஏன் பிடிக்க வில்லை என்று மகனும் மருமகளும் குழம்பிக் கொண்டு இருந்தார்கள். மங்களம் மாமி ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.

‘இது முதியோர் இல்லம் இல்லை, ஹோம் ஸ்வீட் ஹோம்’ என்று நினைத்துக் கொண்டாள் வத்ஸலா.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வானமடி நீ எனக்கு ❤ (பகுதி 7) – ராஜேஸ்வரி

    லோகன் (குறுநாவல் – இறுதிப்பகுதி) – சின்னுசாமி சந்திரசேகரன்