in ,

லோகன் (குறுநாவல் – இறுதிப்பகுதி) – சின்னுசாமி சந்திரசேகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

இருள் வாழ்க்கை

லோகனின் அந்த அந்தமான் பயணம், அவன் உற்சாகத்தை முழுதும் வடித்துவிடும் என்று அவன் கனவில் கூட நினைக்கவில்லை. ஹோட்டலில் ரூம் போட்டவுடன், குளிக்கக் கூடச் செய்யாமல், பரபரப்பாக லாவண்யாவின் அலுவலகத்தை அடைந்தான். மூன்று மாதங்களுக்கு முன்பு அவளைப் பார்த்திருந்த அவனுக்கு, அவளின் இந்த மூன்று மாதப்பிரிவு, மூன்று வருடங்களைப் போல் இருந்தது.

‘லாவண்யா லெப்ட் த ஜாப்’ என்று கூலாகக் கூறிய வரவேற்பாளர், தற்போது அவளைப் பற்றிய எந்தத் தகவலும் தங்களுக்குத் தெரியாது என்று கை விரித்தார். அங்கிருந்து ஒரு டாக்சியைப் பிடித்து, அவளின் வீட்டு முகவரிக்குச் சென்று பார்த்தபோது, அவளின் வீட்டில் போடப்பட்டிருந்த பூட்டும், ‘டு லெட்’ போர்டுமே அவனை வரவேற்றன.

வேலையையும் விட்டுவிட்டு, வீட்டையும் காலி செய்துவிட்டு எங்கே போயிருப்பார்கள்? அக்கம் பக்கத்திலும், வீட்டு உரிமையாளரிடமும் விசாரித்ததில், எந்தத் தகவலும் உருப்படியாகக் கிடைக்கவில்லை. அவளின் அலுவலக நண்பர்களுக்கும் எந்த விபரமும் தெரியவில்லை. கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இருந்தது அவனுக்கு. அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களும், அவளின் பழைய அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் அலைந்து, வெறுத்துப் போய் சென்னை திரும்பினான் லோகன்.

தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்த தான், ஏன் இப்படி ஒரு பெண்ணுக்காக உருகுகிறோம் என்பது அவனுக்கே விளங்கவில்லை. இந்த இடத்தை விட்டு எங்காவது போய், தான் மீண்டும் பழைய லோகனாக மாற வேண்டும் என்று நினைத்தான். காதல், பாசம் எல்லாம் தன் வாழ்க்கைக்கு ஒத்துவராது என்று உணர்ந்தாலும், இந்தக் குரங்கு மனம் லாவண்யாவின் புன்முறுவலில் சிக்கி, தேனுக்குள் விழுந்த வண்டாக முழுகித் தத்தளித்தது.

இருக்க முடியாமல், அடுத்த நாள் ஹைதராபாத்திற்கு டிரெயின் ஏறி விட்டான் லோகன். ஹைதராபாத்தில் பூட்டுக் கம்பெனி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஹமீத், இவனின் ஆத்மார்த்த நண்பன். லோகனின் வாழ்க்கையை முழுதும் அறிந்தவன். ரகசியம் காப்பவன். மனஅமைதிக்காக, அவனுடன் கொஞ்ச நாள் கழிக்க நினைத்தான் லோகன்.

எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், நண்பர்களின் வீட்டுக்குச் செல்வதில்லை என்ற கட்டுப்பாடு உள்ளவன் லோகன். முதன்முதலில் அந்தக் கட்டுப்பாட்டை மீறியது லாவண்யாவின் வீட்டில்தான். எப்போது ஹைதராபாத் வந்தாலும், வழக்கமாகத் தங்கும் விடுதியில் தங்கினான்.

அன்று மாலை ஹமீதைப் பார்க்க பாலநகரில் உள்ள அவனின் பூட்டுக் கம்பெனிக்குச் சென்றான். ஆட்கள் சுமார் பத்துப்பேர் தங்கள் மெசினில் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஹமீது அவன் அறையில் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான். இவனைக் கண்டவுடன் பேச்சை அவசரமாக முடித்துக் கொண்டு வேகமாக ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டான்.

‘எத்தனை நாள் ஆச்சு லோகன் உன்னைப் பார்த்து?’.

வெகுநேரம் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தனர். தன்னுடைய இந்தத் தொழிலை விட்டுவிட்டு, அமைதியான வாழ்க்கை வாழ நினைப்பதாக லோகன் சொன்னதும் கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தான் ஹமீது.

‘இது பற்றி நாளை நாம் நிதானமாகப் பேசி முடிவெடுக்கலாம். அவசரப்பட வேண்டாம்’ என்றான்.

அடுத்த நாள் காலை, லோகனின் அறைக்கு வந்தான் ஹமீது. காலை உணவை இருவரும் ஒன்றாக அருந்திவிட்டு, மீண்டும் அறைக்கு வந்தனர். ஹமீது ஆரம்பித்தான்,

‘தொழிலை நீ விடுவதாகச் சொன்னது நல்ல முடிவுதான். பூட்டுத் தயாரிக்கும் என் கம்பெனியில் உன்னை முழுநேரப் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்கிறேன். ஆனால், தற்போது அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இப்போது கம்பெனியின் நிதிநிலைமை கொஞ்சம் கஷ்டத்தில் இருக்கிறது. பேங்க் லோன் வட்டி வேறு கழுத்தை நெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நீ கொஞ்சம் ஒத்துழைத்தால், நம் இருவரின் கஷ்டமும் தீர்ந்துவிடும்’.

‘என்னிடம் சொல்ல என்ன தயக்கம் ஹமீத். மனசில் உள்ளதைச் சொல்’ என்றான் லோகன்.

‘போன வாரம்தான் நம்பகமான ஒரு இன்ஃபார்மர் தகவல் கொடுத்தான். ஹைதராபாத்திலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில், உள்ளூர் அரசியல்வாதிக்குச் சொந்தமான ஒரு பண்ணை வீட்டில், லாக்கரில் பெரிய அளவில் கருப்புப் பணம் வைக்கப்பட்டிருப்பதாக. நீ மனது வைத்தால் கடைசியாக இந்த வேட்டையை வெற்றிகரமாக முடிந்து விட்டு, கடன்களையெல்லாம் அடைத்துவிட்டு, ஒரு புதிய வாழ்க்கையை நாம் இருவரும் தொடங்கலாம்’ என்றான்.

கொஞ்சம் யோசித்து விட்டு முடிவாகச் சொன்னான் லோகன்.

‘சரி.. நம் இருவரின் வாழ்க்கைக்கும் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்பதால் இதை கடைசியாகச் செய்கிறேன். இடத்தைப் போய்ப் பார்த்து ஸ்டடி செய்ய ஒரு வாரம் வேண்டும். உனக்குத் தெரிந்த விபரங்களைச் சொல்’ என்றான்.

அடுத்தநாள் பேருந்தில் ஏறி அந்த ஊருக்குச் சென்றான் லோகன். அந்த அரசியல்வாதியின் பண்ணை வீடு உயர்ந்த மதில் சுவருடன், ஆளரவமற்று இருந்தது. ஒரு வயதான மனிதன் மட்டும் அடிக்கடி கேட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்து, கடையில் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றான். கேட்டைத் திறந்து வைத்தே வெளியில் வந்து போனதில் இருந்து, உள்ளே நாய் இல்லை என்று உறுதி செய்து கொண்டான் லோகன்.

இரண்டு நாட்கள் இடைவெளி விட்டு ஹைதராபாத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்து, பண்ணை வீட்டை அடைந்தான். மின்சார இலாகாவினர் அணியும் சீருடையை அணிந்திருந்தான் லோகன். லேசாகத் திறந்திருந்த கேட்டைத் தள்ளி உள்ளே சென்றான். கண்கள் காமிரா போல் இயங்கி, உள்ளே உள்ள கட்டிட அமைப்பு, கதவு, ஜன்னல்கள், பின்புறம் இருந்த இடம், அதை ஒட்டி வளர்ந்திருந்த அடர்ந்த மூங்கில் தோப்பு ஆகியவற்றைப் பதிவு செய்தன.

மண்வெட்டியுடன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெரியவர் தலையை உயர்த்திப் பார்த்தார். அவர் கண்களைச் சுருக்கிப் பார்த்தபோதே தெரிந்தது, அவருக்குப் பார்வை அவ்வளவு துல்லியம் இல்லை என்று.

‘ஐயா, கரண்ட் மீட்டர் ரீடிங் எடுக்கணும்’ என்றான்.

‘எடுத்துக்குங்க சார்’ என்று கூறியதோடு நிற்காமல், அவனை அழைத்துக் கொண்டு போய் மீட்டர் இருக்கும் இடத்தில் விட்டார்.

‘போன தடவை வந்தப்ப ஒரு நாய் குரைச்சுக்கிட்டே இருந்ததே? அது இல்லைங்களா?’ என்றான், நாய் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதி செய்வதற்காக.

‘பத்து நாளைக்கு முன்னால செத்துப் போச்சுங்க. மொதலாளி வேற ஒண்ணு கொண்டு வர்றதா சொல்லியிருக்காருங்க’ என்று சொல்லிவிட்டு தன் வேலையைத் தொடர சென்று விட்டார்.

அவரைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே மின்னல் வேகத்தில் அந்த பில்டிங்கை ஒரு சுற்று சுற்றி வந்து அதன் வரைபடத்தை மனதில் பதிய வைத்துக் கொண்டான் லோகன். லாக்கரைப் பெரிதும் நம்பி வேறு ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்ளாமல் இருந்தார் அந்த அரசியல்வாதி.

ஹைதராபாத் திரும்பி வந்து, அறையில் தங்கி, தன் திட்டத்தை வகுத்தான் லோகன். பகல் வேளையில், பெரியவர் பண்ணை வீட்டை விட்டு கடைக்கு வெளியில் வரும்போது, உள்ளே நுழைந்து விடுவான் லோகன்.

ஓரிரு நாட்களுக்குத் தேவையான தண்ணீர், பிரெட் போன்ற உணவுப்பொருட்கள் முதுகுப்பையில் இருக்கும். வீட்டின் பின்புறம் அடர்த்தியாக வளர்ந்திருந்த மூங்கில் மரங்களுக்குள் மறைந்திருந்துவிட்டு, சரியான நேரம் வாய்க்கும்போது இரவில் வெளிவந்து இரவு வேட்டையை முடித்துக் கொண்டு அடுத்த நாள் பகலில் பெரியவர் வெளியே கடைக்குப் போகும்போது வெற்றிகரமாக வெளியேறுவதுதான் திட்டம்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் எப்படி?

பகலில் நினைத்தபடி உள்ளே நுழைந்து, மூங்கில் மரங்களுக்குள் மறைந்திருந்து, இரவுக்காகக் காத்திருந்தான் லோகன். அதுவரை அவன் திட்டப்படியே எல்லாம் சரியாக நடந்தது.

அவன் திட்டத்திற்கு மாறாக, அன்று இரவு சுமார் எட்டு மணியளவில், கார் ஒன்று உள்ளே பண்ணை வீட்டிற்குள் நுழைந்தது. வெள்ளை பைஜாமாவும், குர்தாவும் அணிந்து காரிலிருந்து இறங்கியவர்தான் அரசியல்வாதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தான் லோகன். வந்தவர் பெரியவருடன் ஏதோ பேசிவிட்டு, காரிலிருந்து இறக்கிய சிறிய ட்ராலியை தூக்கிக்கொண்டு, வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே நுழைந்தார்.

பூனை போல் நடந்து வீட்டின் பின்புறம் சென்று ஜன்னலில் இருந்த சிறிய பிளவு வழியாக நோக்கினான் லோகன். ஹாலின் வடக்கு மூலைக்கு வந்த அவர், கீழே போடப்பட்டிருந்த கார்பெட்டை தூக்கினார். அங்கே தரையோடு பதிக்கப்பட்டிருந்த மரப்பலகையைத் திறந்து, கீழே இறங்கினார்.

ஒரு ஐந்து நிமிடம் கழித்து, மேலே டிராலியுடன் வந்த அவர், சற்று சிரமத்துடன் டிராலியைத் தூக்கி மேலே வைத்துவிட்டு, மரப்பலகையை மூடி, பழையபடி கார்பெட்டை விரிந்தார். வீட்டிற்கு வெளியே வந்து, அவர் பூட்டைப் பூட்டும் ஒலி லேசாகக் கேட்டது. சிறிது நேரத்தில் அவர் வந்த கார் புறப்பட்டுச் செல்லும் சப்தமும் கேட்டது.

லோகனுக்கு ஒன்று மட்டும் புரிந்தது. ஒன்று அவர் பணம் கொண்டு வந்து லாக்கரில் வைத்துச் சென்றிருக்க வேண்டும். அல்லது, லாக்கரில் இருந்து பணத்தை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். எப்படி இருந்தாலும், பாதிக் கிணறு தாண்டிய பிறகு, லோகனால் திரும்பிச் செல்ல முடியாது. அவனின் அதிர்ஷ்டத்தைச் சோதித்துப் பார்த்தே தீர வேண்டும்.

இரவு இரண்டு மணிக்கு அந்த லாக்கரின் முன்பு நின்றிருந்தான் லோகன். உள்ளே நுழைந்த‌து அவனுக்கு மிக மிக எளிதாகவே இருந்தது. அதே போல் லாக்கரும் அவனுக்கு எளிதாக வழி விட்டுத் திறந்தது. அவனுக்கு அதிர்ச்சி தருவது போல, உள்ளே ஒரே ஒரு சிறிய பிரீஃப் கேஸ் மாத்திரம் இருந்தது.

நேற்று வந்தவன் அனைத்தையும் வாரிக்கொண்டு போய்விட்டான் என்று தோன்றியது. பிரீஃப் கேசைத் திறந்தபோது, மேலே ஆண்கள் அணியும் சில ஆடைகள் சில இருந்தன. அதை விலக்கியபோது அதனடியில் ஐந்நூறு ரூபாய் கட்டுகளும், தங்கத்தை உருக்கிச் செய்த பிஸ்கெட்டுகளும் கிடந்தன. நிச்சயம் கோடிக்கு மேல் தேறும் என்பதை கணக்கிட்ட லோகன், பட்டென பிரீஃப் கேஸை மூடினான். தனக்கும், ஹமீதுவுக்கும் இது போதும் என்ற திருப்தியுடன் பெட்டியை மேலும் ஆராயாமல் திருப்தியுடன் அவசரமாய்க் கிளம்பினான்.

அடுத்த நாள், திட்டப்படி பகலில் பண்ணை வீட்டை விட்டு வெளியே வந்து, லோக்கல் ரயில் நிலையத்தில் ஹைதராபாத் செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்தான். கருப்புப் பணம் ஆதலால், அந்த அரசியல்வாதி எந்தச் சூழ்நிலையிலும் போலீசுக்குப் போகமாட்டான் என்பது லோகனுக்குத் தெரிந்திருந்ததால், இனி வரும் காலம் அவனுக்கு நிம்மதியான வாழ்க்கையைக் கொடுக்கும் என்று நம்பினான். தன்னோடு சேர்ந்து தன் நண்பன் ஹமீதுவிற்கும் நற்காலம் பிறக்கப்போகிறது என்பதை நினைத்தபோது அவனுக்குத் திருப்தியாக இருந்தது.

முன்னெச்சரிக்கையாக, தான் ஒரு நகைக்கடை மேலாளர் என்ற அடையாள அட்டை வைத்திருந்தான். ஹைதராபாத்தில் இருந்த அந்த நகைக்கடைக்கு யார் போன் செய்து கேட்டாலும், அவனின் பதவியை அவர்கள் உறுதி செய்யும்படி ஏற்பாடு செய்து வைத்திருந்தான்.

பணத்தைப் பற்றியோ, தங்க பிஸ்கெட் பற்றியோ கேள்வி வரும்போது, இந்த ஏற்பாடுகள் போலீசாரின் விசாரணைக்கு ஒரு திருப்தியைக் கொடுத்து விடும். வழக்கமாக ஒரு வேட்டை முடிவின்போது ஏற்படும் மனக்கிளர்ச்சியும், லேசான பயமும் அவனுக்கு ஏற்படவில்லை. ஹைதராபாத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அவனின் அந்த ரயில் பயணம் மனதிற்கு நிறைவாக இருந்தது. லாவண்யாவைப் பற்றிய தொடர் நினைவைக் கூட சற்றுத் தள்ளி வைத்தது.

ஹைதராபாத் ரயில்நிலையத்தில் இறங்கியபோது திக்கென்றது லோகனுக்கு. பிளாட்பாரம் முழுவதும் போலீஸ் தலைகளாகத் தெரிந்தன. பயணிகளின் கூட்டம் பரபரப்பாக வெளியேறத் துடித்துக் கொண்டிருந்தது. வெளியேரும் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளையும் நிதானமாகச் சோதனை செய்தே அனுப்பி வைத்தனர் போலீசார்.

ஆவலுடன் என்னவென்று பக்கத்தில் இருந்தவரை லோகன் கேட்டபோது, ‘உங்களுக்குத் தெரியாதா? உள்துறை அமைச்சர் நாளை ஹைதராபாத் வருகிறார். அவருக்கு ‘டெரரிஸ்ட் த்ரெட்’ இருக்கிறதாம். அதனால்தான் இந்த சோதனை’ என்றார்.

வரிசையில் நின்றிருந்த லோகனுக்கு கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. இப்போது பெட்டியில் உள்ள பணத்திற்கும், தங்கத்திற்கும் நகைக்கடையில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டால் போதும். சந்தேகப்படும் வகையில் வேறு ஒன்றும் அவனிடம் இல்லை.

சோதனைக்காக வரிசையில் நின்றிருந்தபோது அவன் முறை வந்தது. அவனை முழுமையாகப் பரிசோதித்த காவலர், பிரீஃப் கேஸைத் திறக்கச் சொன்னார். மேலே இருந்த துணியை விலக்கியவுடன், கட்டுக் கட்டாகத் தெரிந்த பணத்தைப் பார்த்ததும், கொஞ்சம் குழம்பிப் போய் அருகில் இருந்த மேலதிகாரியிடம் அனுப்பினார்.

இன்ஸ்பெக்டர் பிரீஃப் கேஸில் இருந்த பணத்தைப் பற்றிக் கேட்டதும், தன் முன்பே ஜோடித்து வைத்திருந்த நகைக்கடை மேனேஜர் கதையை அடையாள அட்டையுடன் விளக்கினான். நகைக்கடை மேனேஜர்கள் பெரும் தொகை எடுத்துச் செல்வதும், தங்கக்கட்டிகள் எடுத்துச் செல்வதும் வழக்கமான ஒன்று என்பது அந்த சீனியர் இன்ஸ்பெக்டருக்குத் தெரியும். இருந்தாலும் ஒரு உள்ளுணர்வின் அடிப்படையில் அவர் பிரீஃப் கேஸின் அடிவரை கை விட்டுத் தேடும்போது அவர் கையில் தட்டுப்பட்ட ஒரு பொருளைக் கண்டு திடுக்கிட்டார்.

‘அலர்ட்’ என்ற அலறல் சப்தம் அவர் வாயிலிருந்து புறப்பட்டதும், விரைந்து வந்த போலீசார் லோகனின் கைகளைப் பின்புறம் வளைத்துப் பிடிக்க, மற்ற இரண்டு போலீசார் அவன் உடம்பை அங்குலம் அங்குலமாகச் சோதித்தனர்.

‘கிளியர்’ என்று அவர்கள் கூறியதும் பிரீஃப் கேஸை நோக்கி கையைக் காட்டி ‘செக் வித் அலர்ட்’ என்றார்.

போலீசாரின் இரும்புப் பிடியில் நெளிந்து கொண்டிருந்த லோகனுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரீஃப்கேஸை மெதுவாகத் தள்ளி வைத்து, ஒவ்வொரு பொருளாக வெளியே எடுத்து வைத்தனர் போலீசார். பணக்கட்டுக்கள் எல்லாம் வெளியே வந்த பிறகு, பிரீஃப்கேஸின் அடியில் அசையாமல் கிடந்தது அந்தத் துப்பாக்கி.

இப்போது லோகனுக்கு எல்லாம் புரிந்தது. அந்த கேடு கெட்ட அரசியல்வாதி, லைசன்ஸ் இல்லாத தன் துப்பாக்கியை, அந்தப் பண்ணை வீட்டில், பணத்துக்கு அடியில் மறைத்து வைத்திருந்திருக்கிறான். பணத்தை முழுவதும் எடுத்துப் பார்த்திருந்தால் துப்பாக்கி இருந்தது அப்போதே லோகனுக்குத் தெரிந்திருக்கும். எல்லாம் விதி.

உள்துறை அமைச்சரைக் கொல்வதற்காக பகை நாட்டால் ஏவி விடப்பட்ட தீவிரவாதியைப் பிடித்த போலீசாருக்கு பாராட்டைத் தெரிவித்து தொலைக்காட்சியில் உரையாற்றிக் கொண்டிருந்தார் டி.ஜி.பி.

இருட்டுச் சிறையில், கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டு, உடம்பில் வீங்காத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு அடி வாங்கி நைந்து கிடந்தான் லோகன். மலமும், சிறுநீரும் குளம்போல் அவனைச் சுற்றி தேங்கிக் கிடந்தன. சுய உணர்வு வரும்போதெல்லாம் அந்த நாற்றங்களுக்கிடையிலும், லாவண்யாவின் உடம்பில் அவன் கண்ட வாசம் அவனின் நாசியைக் கடந்து சென்றது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஹோம் ஸ்வீட் ஹோம் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    எண்ணங்கள் வண்ணமாகட்டும் (தொடர்கதை – பகுதி 5) – கற்பக அருணா