in

மறக்க முடியாத தீபாவளி (சுபாஷினி பாலகிருஷ்ணன்) – Deepawali Ninaivugal Contest Entry 8

மறக்க முடியாத தீபாவளி

தாயின் காலடியில் தவழும் குழந்தை போல, ஊட்டி மலைச்சாரலின் கீழ் அழகு கொஞ்சும் பசுமையோடு, இனிக்கும் கொங்கு தமிழ் நகரமாம் கோவையில் பிறந்த எனக்கு, என் வாழ்வு இத்தனை பயணங்கள் நிறைந்த அனுபவமாக இருக்கும் என சற்றும் நினைக்கவில்லை.

“யாத்ரா மனுஷ்ய கா தர்ம ஹை” என்று ஹிந்தியில் ஒரு சொற்றொடர் உண்டு. அதாவது “பயணம் மனிதனுடைய தர்மம்” என்பது அதன் பொருளாகும்

திருமணம்

தந்தை ஒரு அரசு அலுவலக ஊழியர். முதுகலைப் பட்டம் பெற்ற நான், இரண்டு ஆண்டுகள் பணி புரிந்த நிலையில் ஒரு நல்ல வரன் வர, அப்பாவிற்கும் நன்கு தெரிந்த குடும்பமாக இருந்ததால் என்னுடைய சம்மதத்தைக் கேட்டார். அவரின் இயல்பாக நடந்து கொள்ளக் கூடிய குணமும், எளிமையும் பிடித்துப் போக திருமணத்திற்கு சம்மதித்தேன்.

பணியிட மாற்றம்

வங்கிப் பணி என்பதால், தாளவாடியில் கிராமப் பணியை முடித்துக் கொண்டு கோபிசெட்டிபாளையத்தில் பணி நிமித்தம் மாற்றலாகி வந்த நாங்கள், பிரமோஷன் கிடைத்து சண்டிகருக்கு மாற்றலானோம்.

கோவையிலிருந்து டெல்லி சென்று, அங்கிருந்து சதாப்தி எக்ஸ்பிரஸில் சண்டிகர் ரயில் நிலையத்தில் இறங்கிய எங்களுக்கு, நிறைய அனுபவங்கள் காத்திருந்தன.

சண்டிகரின் நான்கு வருட வாழ்க்கையில் அங்கிருந்த சீக்கிய மக்களின் பண்பாட்டின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் மிகப் பெரிய மதிப்பும் வந்தது.

சண்டிகர்

சண்டிகர் – இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட அழகிய தலைநகரம். இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து 5 மணி நேர தூரத்தில், பஞ்சாப் ஹரியானா என்ற இரண்டு மாநிலங்களின் தலைநகராக இருக்கிறது சண்டிகர். நகரம் பல செக்டார்களாக பிரிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகள் தனியாகவும், கடைப்பகுதிகள் தனியாகவும் கட்டப்பட்டிருந்தன. அமிர்தசரஸ் பொற்கோவிலும், இந்தியா பாகிஸ்தானை பிரிக்கும் வாகா எல்லைப் பகுதியும், ஜாலியன் வாலாபாக்கும் பஞ்சாபின் முக்கிய இடங்களாகும்.

செக்டார் 44 B-ல் வங்கியின் குவார்ட்ஸ் இருந்தது.‌ குவார்ட்ஸில் வீடு காலி இல்லாததால், அதன் அருகிலேயே தனி வீட்டில் குடியேறினோம். கீழ்தளத்தில் வீட்டின் ஓனரும், மேல்தளத்தில் நாங்களும் இருந்தோம்.

வீட்டுக்காரர் பஞ்சாபி. எங்கள் வயதை ஒத்த தம்பதிகளும், அவருடைய அம்மாவும் இருந்தனர். அவர்களுக்கு சித்தாந்த் என்ற ஒரு மகனும் இருந்தான். எங்கள் இரு குடும்பமும் மிகவும் நட்பாக பழகி வந்தோம். காலையில் ஆபீஸுக்குச் சென்றால், இரவு எட்டு மணி இல்லாமல் கணவர் வீட்டுக்கு வர மாட்டார்.

உறவாய் ஆன நட்பு வட்டம்

வாரம் முழுக்க வேலையில் நேரம் போவது தெரியாமல் இருக்கும் நாங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா தமிழ் குடும்பங்களுமாக குவார்ட்டர்ஸில் ஆஜராகி விடுவோம். எல்லா மாநிலத்தவரும் இருக்கும் எங்கள் குவார்ட்ஸில், எங்கள் வயதை ஒத்த நான்கைந்து குடும்பங்கள் மிகவும் நட்பாக பழகி வந்தோம். ஞாயிற்றுக்கிழமைகளில் சுக்னா லேக், ராக் கார்டன், ரோஸ் கார்டன் என்று சுற்றிப் பார்க்க, வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவோம்.

பண்டிகை விசேஷ நாட்களில் 31ஆம் செக்டர் முருகன் கோவில், ஐயப்பன் கோவில், இஸ்கான் கோவில் என்று சென்று விட்டு வருவோம். வாடா, போடா சொல்லிக் கொள்ளும் அளவு நட்பு இருந்ததால், கணவன்மார்கள் அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். மனைவிமார்கள் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். குழந்தைகள் எல்லோரும் மகிழ்வுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

சொந்த பந்தங்களை விட்டு தூரத்தில் இருப்போமே என்று வருத்தப்பட்ட நிமிடங்கள் கரைந்து, வாழ்க்கை இப்படியே சந்தோஷமாக கழிந்து விடாதா என்று ஏங்கும் அளவிற்கு அழகான நாட்களாக ஓடிக் கொண்டிருந்தது.

நாங்கள் எல்லோரும் இளைய தம்பதிகளாக இருக்க, நண்பரின் அம்மா மாத்திரம்தான் எங்கள் எல்லோருக்கும் அம்மாவாக இருந்தார்கள். எங்கள் எல்லோருடனும் நன்கு பழகுவார். நாங்களும் வகை இல்லாமல் அவருடன் கிண்டலடித்து விளையாடுவோம்.

எங்கள் நண்பர்கள் குழுவில் ஒருவருக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்தது. ஊரில் அவருக்கு பெண் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிக்க, எங்கள் கணவர்கள்,”கல்யாணம் பண்ணிக்கதேடா, கஷ்ட படுவ” என்று கும்பலாக அட்வைஸ் பண்ண, “நீங்க மட்டும் குடும்பம் குட்டினு இருப்பீங்க, நான் மட்டும் தனியாய் இருக்கனுமா நானும் கஷ்டப்படுறேன்” என்று திருமணத்திற்கு ஒத்துக் கொண்டது ஒருபுறம்.

விகல்பம் இல்லாமல் பழகும் நண்பர்கள் வாழ்க்கையில் அமைந்துவிட்டால் வாழ்வு சொர்க்கமாக மாறிவிடும் என்பதை உணர்ந்த தருணமது. வருடம் ஒரு முறை, எல்லோரும் அவரவர் சொந்த ஊருக்கு பத்து நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தீபாவளியை கொண்டாடி விட்டு வருவோம்.

எங்களது இரண்டாவது குழந்தை சண்டிகரில் பிறந்தான். ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு குடும்பத்தோடு செல்லும் நாங்கள், வேலை பளுவின் காரணமாக 2008 தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வர இயலவில்லை. அம்மா, அப்பா, மாமனார் மாமியார், சொந்தபந்தங்கள் என்று எல்லோரையும் சந்தித்து விட்டு வரும் நாங்கள், இந்த வருடம் தீபாவளிக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தோம். தீபாவளியும் வந்தாகி விட்டது.

“12 டிகிரி குளிரடிக்கும் இந்த காத்தால வேளையில் 5 மணிக்கே எழுந்து படுத்தற” என கேட்டுக் கொண்டே எழுந்த கணவனுக்கு

“ஹாப்பி தீபாவளி” என்று தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லி எழுப்பினேன் நான்

“காத்தால நாலு மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் புண்ணியம்னு உங்க நண்பரோட அம்மா சொன்னது ஞாபகம் இல்லையோ” என்றேன் சிரித்துக் கொண்டே.

 பல் துலக்க பாத்ரூமிற்குள் சென்றவர், “ஏம்மா வாட்டர் ஹீட்டரில் ஜாமென்ட்ரி டயக்ராம்லாம் வரைஞ்சுருக்க?” என்றார்.

“அதுவா, எங்கம்மா தீபாவளி அன்னைக்கு வெந்நீர் அண்டாவிற்கு சூரியன் சந்திரன் வரைஞ்சு, வெந்நீர் காய்ச்சி, கங்கா ஸ்நானம் பண்ணனும்னு சொல்லுவாங்க. இங்க நம்ம வாட்டர் ஹீட்டர் தான் வெந்நீர் அண்டா. அதனால, அதுலயே செங்காவி சாக்பீஸ்ல சூரியன் சந்திரன் வரைஞ்சுட்டேன்” என்றேன்

அதோடு, “ம்…. எங்காத்துல தீபாவளிக்கு முந்தின நாள் தண்ணி ரொப்பற பண்டிகை கொண்டாடுவா. தீபாவளி அன்னைக்கு குளிப்பதற்கான புது தண்ணிய பாத்திரத்தில் புடிச்சு வச்சுட்டு, இரவு பாயசம் வடை சாம்பார் ரசம் பொரியல் என முழு சமையலும்  படுஜோரா இருக்கும். நீங்க தான் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வரவே ஒன்பது மணி ஆறது. உங்களுக்கும், நைட் டிபன் தான் வேணும். அதனால தான் நேத்து நைட் சப்பாத்தியும், காலிஃப்ளவர் கோஃப்தா கறியும் பண்ணினேன். ஆனா இன்னைக்கு தீபாவளி. சமையல் என்னோட சாய்ஸ் தான்” என்றேன் நான்

தீபாவளிக்கு குலோப் ஜாமுனும், ரிப்பன் பக்கோடாவும், தேன்குழல் முறுக்கும் ரெடி பண்ணியாச்சு. வேற ஏதாவது உங்களுக்கு பண்ணனுமா என்று கேட்டுக்கொண்டே, பல் துலக்கி வந்தவரை பலகையின் மீது உட்கார வைத்து தலைக்கு நல்லெண்ணெய் தடவி குங்குமம் இட்டு தீபாவளி லேகியம் கொடுத்து குளிக்க அனுப்பினேன்.

“குழந்தைகள வச்சிண்டு இது பண்ணினதே பெருசு. சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு கிளம்பு, வெளிய போகணும்” என்று குளிக்க கிளம்பினார்.

இதன் நடுவில் டிபன், சமையல் என அனைத்து வேலைகளையும் படபடவென முடித்து, மகளை எழுப்பி தலைக்கு குளிக்கச் செய்து, சின்ன குழந்தையை எழுப்பி குளிக்க வைத்து புகட்டினேன். பின்னர் சுவாமிக்கு முன் வைத்திருந்த புத்தாடைகளை அணிந்து கொண்டு பூஜையை முடித்தோம்.

மகள் பட்டாசு வெடிப்பதிலேயே குறியாக இருக்க, அப்பாவும் மகளும் வாங்கிய புது பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வாசலுக்குச் சென்றார்கள். தீபாவளி கதாநாயகனாம் ஆட்டாம்பாமை அவர் பற்ற வைக்க, இருவரும் காதுகளை மூடிக் கொண்டனர்.

பட்டாசு வெடிக்கவும்,”ஹாப்பி தீபாவளி” என்று கூச்சலிட்ட தன் மகளின் சந்தோஷத்தில், தன் அம்மாவை கண்டார் என் கணவர்.

நீண்ட நேரம் ஆனதால்,”சாயங்காலம் பாதி பட்டாசை வெடிச்சுக்கலாம் வாங்க” என பால்கனியில் இருந்து நான் அழைக்க, அப்பாவும் பெண்ணும் மனமில்லாமல் வீட்டிற்கு வந்தனர். ஊரில் அம்மா, அப்பா,மாமனார்,மாமியார் சொந்த பந்தங்கள் என எல்லோருக்கும் போன் செய்து தீபாவளி வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு, டிபன் சாப்பிட உட்கார்ந்தோம்.

“என்ன ஒரே வேகமா வேலைய முடிச்சுட்ட போல இருக்கு” என்றவரிடம், “வெளியில் கிளம்பனும்னு சொன்னேளே, அதான்” என்றேன்.

“ஓகே ஓகே…. இன்னைக்கு நம்ம பிரண்ட்ஸ் பேமிலி எல்லோரும் சேர்ந்து கோவிலுக்கு போய் வருவது பற்றி தானே சொல்ற. நாங்க அப்பாவும் பசங்களும் ரெடி ஆயாச்சு. நீ ரெடின்னா கிளம்பிடலாம் என்றார்” சிரித்துக் கொண்டே

குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு எடுத்துக் கொண்டு, “நான் ரெடி” என்றேன் சிரித்துக் கொண்டே. கணவர் வண்டி எடுக்க, மகள் அவருக்கு முன்புறம் அமர்ந்து கொள்ள, நான் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்

“நிவேதா கோவிலுக்கு வருவாளாப்பா?” என்ற மகளிடம்

”உன்னோட பிரெண்ட்ஸ், என்னோட ஃப்ரெண்ட்ஸ், அம்மாவோட ஃப்ரெண்ட்ஸ், எல்லாரும் வருவா” எனக் கூறியபடி வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

கோவில் விசிட்

போனில் பேசியபடி எல்லோரும் 31-ம் செக்டார் முருகன் கோவிலில் அசெம்பிள் ஆகினர். தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, “காக்க காக்க கனகவேல் காக்க, நோக்க நோக்க நொடியில் நோக்க” என்ற கந்த சஷ்டி கவசம் காதில் விழ எல்லோரும் பாடிக் கொண்டே கோவிலுக்குள் நுழைந்தோம்.

சுவாமி தரிசனம் முடிந்த பிறகு எல்லோரும் சற்று நேரம் மண்டபத்தில் உட்கார்ந்தோம். குழந்தைகள் எல்லோரும் கோவிலைச் சுற்றி சுற்றி விளையாட ஆரம்பித்து விட்டனர். சிறிது நேரம் கழித்து அங்கிருந்து ஐய்யப்பன் கோவில் சென்று தரிசனத்தை முடித்து விட்டு அப்படியே பஞ்ச்குலா பாலாஜி கோவிலுக்கு வண்டியில் கிளம்பினோம்.

பஞ்ச்குலா பாலாஜி கோவில் செல்வதற்கு முக்கால் மணி நேரம் ஆகும் என்பதால் வழியில் வண்டிகளை நிறுத்தி, கொண்டு சென்ற தின்பண்டங்களை உண்டு விட்டு, கோவிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு, மூன்று மணி போல வீட்டிற்கு வந்தோம்.

பாலாஜி கோவிலில் குழந்தைக்கு கஞ்சியும், மகளுக்கு சாதமும் ஊட்டியதால், வரும் வழியிலேயே குழந்தைகள் தூங்கி விட்டனர். வீட்டிற்கு வந்தவுடன் குழந்தைகளை பெட்டில் படுக்க வைத்து விட்டு, செய்த சமையலை இருவரும் சாப்பிட்டு விட்டு அசதியில் தூங்கி விட்டோம்.

தீபாவளிக் கொண்டாட்டம்

பின்பு மாலை, கீழ் வீட்டு இருந்து பஞ்சாபி ஆன்ட்டி, டிரை நட்ஸ் சகிதம் தீபாவளி பக்ஷணம் கொடுத்து விட்டு, மாலை அங்கு நடக்கும் தீபாவளி பண்டிகையில் பங்கேற்குமாறு சொல்லி விட்டு கிளம்பினார்.

காபி குடித்துவிட்டு சாயங்காலம் பட்டாசு வெடிக்க கீழே இறங்க, தெருவில் எல்லோரும் பண்டிகை கொண்டாட கூடியிருந்தார்கள். எல்லோரும் பணம் போட்டு பெரிய உருவிலான ராமன் ராவண பொம்மையை வாங்கி இருந்தனர்.

தெருவின் ஒரு ஓரத்தில் ராவணனை நிறுத்தி, எதிரில் கொஞ்ச தூரத்தில் ராமனை நிறுத்தியிருந்தனர். ராமனின் அம்பிற்கு ஒரு குழந்தை தீ மூட்ட, புறப்பட்ட தீப்பிழம்பு ராவணனை எரித்து சாம்பலாக்கியது. ராமன் ராவணனை கொன்று தர்மத்தை நிலைநாட்டிய அந்நாளை அவர்கள் தீபாவளி தினமாக கொண்டாடுகிறார்கள்.

உலகம் தோன்றி இன்றைய நாள் வரை தர்மங்கள் தோற்றதில்லை. தீயவை அவ்வப்போது தலை தூக்கும் பொழுது நல்ல மனிதர்களும் நல்ல எண்ணங்களும் தோன்றி அவற்றை தோற்கடிப்பதாலேயே, உலகம் இன்றும் உயிர்ப்புடனே இருக்கிறது.

மறக்க முடியாத தீபாவளி

சொந்த பந்தங்கள் இல்லாமல் தூரமாக இருக்கிறோமே, தீபாவளி பண்டிகை எப்படி அமையப் போகிறது என நினைத்த எங்களுக்கு, வாழ்நாளிலேயே மறக்க முடியாத தீபாவளியாக அது அமைந்தது.

எத்தனை விதமான மனிதர்கள், எவ்வளவு அன்பு, எத்தனை விதமான குணாதிசயங்கள். மனிதர்களை அவர்களுடனேயே இருந்து பார்ப்பதிலிருந்து சற்று விலகி, வெளியே நின்று பார்க்கத் தொடங்கினால், வாழ்வு சிறப்பாக இருக்கும்.

அற்புதமான இந்த உலகில் பிறவி எடுத்த நாம், தரித்த இந்த வேடத்தில் பிறரிடம் அன்பாக நடந்து கொண்டு நல்ல பூரணமான வாழ்வை வாழ்ந்து மோட்சத்தை பெறுவோம்.

*உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்*

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. அருமையாக எழுதி இருக்கிறார். நாங்களும் ராஜஸ்தான், குஜராத்தில் சுமார் எட்டு, அல்லது ஒன்பது வருடங்கள் தீபாவளிகளைக் கொண்டாடி இருப்போம். அங்கேயும் இம்மாதிரிச் செல்வது உண்டு. தீபாவளி அங்கெல்லாம் நான்கு நாட்கள் கொண்டாடுவார்கள்.

மொறுமொறு மசாலா பிஸ்கட் (ஸ்ரீப்ரியா ராஜகோபாலன்) – Deepawali Recipe Contest Entry 12

தீபாவளி படம் வரையும் போட்டி Entry 4 (சாய்ஜனனி சுப்பராமன், 11 Yrs Old)