in

தீபாவளி பிறந்த கதை – தி.வள்ளி, திருநெல்வேலி

இந்துக்களின் மிக முக்கியமான பண்டிகையில் தீபாவளி தலையாயது. உச்சபட்சமான மகிழ்ச்சியைத் தரக்கூடிய பண்டிகை.. தென் இந்தியா, வட இந்தியா மட்டுமின்றி மேலும் சில நாடுகளிலும் கொண்டாடப்படும் பண்டிகை .

தீபாவளி என்றால் தீப ஒளி…

தீபம் …விளக்கு

அவளி….என்றால் வரிசை…

தீபங்களை வரிசையாக அடுக்குவது என்ற பொருளிலேயே தீபாவளி என பெயர் பெற்றது

இனி தீபாவளி பிறந்த கதையைப் பார்ப்போம்…

சிறுவயதில் என் ஆச்சியிடம்” நாம் தீபாவளி எதற்கு கொண்டாடுகிறோம்?” என்று கேட்டால், அவள் பொத்தாம் பொதுவாக” நரகாசுரன்னு ஒரு ராட்சசன் இருந்தான். அவன் ரொம்ப எல்லாத்தையும் கஷ்டப்படுத்தினான். கிருஷ்ணர் அவன கொன்னாரு .அவன் செத்த நாளைத்தான் நாம தீபாவளின்னு கொண்டாடுகிறோம்” அப்படின்னு சொல்லி முடித்துவிடுவார்..

நரகாசுரவதத்திற்கு முன்னரே தீபாவளி கொண்டாடப்பட்டதாக ஒரு கதையும் உண்டு. முதல் யுகத்தில்… கந்தபுராணத்திலேயே தீபாவளி பண்டிகை பற்றி கூறப்பட்டிருக்கிறது…

சிவபெருமானுக்குரிய அஷ்ட விரதங்களில் கேதார கௌரி விரதம் போற்றப்படுகிறது . ஸ்கந்த புராணத்தின் படி சக்தியின் 21 நாட்களில் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது. இத்தினத்தில் தான் சிவபெருமான் சக்தியை தன்னுள் பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார் .அந்த தினமே தீபாவளி தினமாயிற்று.

துவாபரயுகத்தில் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்று மக்களைக் காத்தார். அந்த தினத்தை நாம் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். ஆனால் நரகாசுரன் கொல்லப்பட்டது தீபாவளி தினத்திலே தவிர நரகாசுரனை கொன்ற தினமே தீபாவளி தினம் என்று நினைப்பது தவறு என்று ஆதி புராண முதல் கதை கூறுகிறது.

இனி துவாபரயுகத்தில் நடந்த நரகாசுரவதம் கதையைப் பார்ப்போம் ..

இதிகாசத்தின்படி பிரக்யோதிஷ்பூர் (தற்போதைய நேபாளத்தின் அருகில்) என்ற நாட்டின் மன்னன் நரகாசுரன்.

நரகாசுரன் பூமியில் அவதரித்த கதையை பார்த்தால் …ஒரு சமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரனைக் கொல்லச் சென்றபோது ..அவருடைய ஸ்பரிசம் பட்டு பூமாதேவிக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளையே நரகாசுரன். அசுரவதத்தின் போது பிறந்ததால் அசுர குணத்தோடு விளங்கினான்.அவன் ஒரு சமயம் சாகா வரம் வேண்டி பிரம்மாவைக் குறித்து தவமிருக்க…பிரம்மா அவனுடைய பக்திக்கு இரங்கி வேறு வழியின்றி வரம் கொடுத்தார் ..

அப்போது அவன் ‘தனக்கு மரணமே நேரக்கூடாது’ என்று வேண்ட பிரம்மாவோ… ‘பிறந்த யாரும் ஒருநாள் மரணத்தை அடைந்தே தீரவேண்டும்’ என்று கூறினார்.”அப்படியானால் மரணம் என்பது என் தாயின் கையால் மட்டுமே நிகழ வேண்டும்” என்று வரம் வாங்கினான். ஏனெனில் எந்த தாயும் மகனைக் கொல்ல மாட்டாள் என்ற அனுமானத்தில்.

சாகாவரம் பெற்ற பின்பு நரகாசுரனின் அட்டகாசங்கள் அதிகரித்தன. கடவுளான அன்னை அதிதியின் காது வளையங்களை திருடினான். பின்னர் கடவுளர்களின் மகள்களையும் கடத்தி வந்து தன் அந்தப்புர சிறையில் அடைத்து வைத்தான்.

நாளுக்கு நாள் அவன் அட்டகாசம் அதிகரிக்க, தேவர்கள் கிருஷ்ணரை சந்தித்து அவனை அழித்து தங்களை காக்க முறையிட்டனர்.கடவுளர்களும், முறையிட, கிருஷ்ணர் களமிறங்குகிறார். நரகாசுரன் பெற்ற வரத்தின் தன்மையை அறிந்து, தன் மனைவி சத்தியபாமாவை( அவள் பூமாதேவியின் மறு உருவம் என்பதால்) சாரதியாக அழைத்துச் செல்கிறார். நரகசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் கடும் யுத்தம் நடக்கிறது. அதில் கிருஷ்ணர், நரகாசுரனின் அம்பால் தாக்கப்பட்டு, மயக்கமடைந்தது போல் விழ ….சத்தியபாமா வெகுண்டெழுகிறார் . நரகாசுரனை யுத்தத்திற்கு அழைக்கிறார்… நரகாசுரன் மீது வில்லெடுத்து அம்பு தொடுகிறார் ..நரகாசுரன் கீழே விழுகிறான்.

தன்னை வீழ்த்திய தன் தாயிடம் தான் இறக்கும் அந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என வேண்டிக் கொள்கிறான். எனவே அந்த நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர் அவன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும், மீட்டு தேவர்களிடம் ஒப்படைக்கிறார்.

நரகாசுரனை அதிகாலையில் வதம் செய்ததாலே எண்ணெய் தேய்த்து தலைமுழுகினார் கிருஷ்ணர். அதிலிருந்தே தீபாவளியன்று எண்ணெய் வைத்து குளிக்கும் வழக்கம் வந்தது.

இவை தவிர இன்னொரு கதையும் உண்டு ..ராமாவதாரத்தில் ஸ்ரீ ராமர், ராவணனை வதம் செய்து, சீதையை சிறை மீட்டார். பின்னர் அவர் சீதையுடன் அயோத்தி திரும்பினார். அவர்கள் அயோத்தி திரும்பும் நாள் அமாவாசை தினம். அதனால் எங்கும் இருள். அடர்ந்த இருளில் அவர்கள் எங்கே போகிறோம் என்று தடுமாற, அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் அகல் விளக்குகளை ஏற்றி ஒளியை கூட்டினர். அந்த தீப ஒளியில் ஸ்ரீ ராமரும் சீதையும் நடந்தனர். ஸ்ரீ ராமரும் சீதையும் அயோத்தி திரும்பிய அந்த நாளையே மக்கள் தீபாவளியாக கொண்டாடினர். மக்கள் தீபம் ஏற்றி வழி காட்டியதால் அது தீப திருநாள் என்றும் தீபாவளி என்றும் பெயர் பெற்று கொண்டாடப்பட்டது.

தீபாவளி அன்று அதிகாலையில் நீராடி, மகாலட்சுமி பூஜை அனுஷ்டித்து, தீபங்களை ஏற்றி வீடு நிறைய வைத்தால், லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்கிறது விஷ்ணு புராணம் .

இந்தியா மட்டுமின்றி இலங்கை, நேபாளம், மியான்மர், சிங்கப்பூர்,மலேசியா, பிஜி,வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த பண்டிகையை மக்கள் கொண்டாடுகிறார்கள்.

நம் பாரதத்தின் பழம்பெரும் விழா தீபாவளி. வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, வெடி வெடித்து, பரிசுகள் பரிமாறி, இனிப்பு, பலகாரங்கள் செய்து,வாழ்க்கையின் இருள் நீக்கி, ஒளி கொடுக்கும் பண்டிகையான தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    முகவரி தேடும் காற்று (நாவல்-அத்தியாயம் 11) – கவிஞர் இரஜகை நிலவன்

    தாயுமானவன் (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்