2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஊரிலிருந்து போனில் பேசிய தம்பி ராஜா , “அக்கா அப்பாவுக்கு உடம்பு சரியில்லை , கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம், உடல்நிலை சற்று கவலைக்கிடமாகவே உள்ளது என கவலையுடன் கூறினான்.
அதை கேட்டவுடன் போனிலேயே அழ ஆரம்பித்தாள் அபிநயா. அக்காவுக்கு சமாதானம் கூறிய ராஜா, “கவலைப்படாதேக்கா, டாக்டர்கள் நல்லமுறையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள், நான் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் போன் செய்தேன் , மீண்டும் பிறகு பேசுகிறேன்” என சொல்லி போனை வைத்தான்.
அபிநயா தன் கணவர் ரவியுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வருகிறாள். மகள் தீப்திக்கு ஏழு வயதாகிறது. அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று தம்பி போனில் சொல்லியவுடனேயே அபிநயாவிற்கு மிகவும் கவலையாகி விட்டது.
அவள் கணவர் ரவி அவளை சமாதானம் செய்து ஆறுதல் கூறினான். ஆனாலும், அவள் அழுதபடியே இருந்தாள் . ஏனென்றால் அவளுக்கு அப்பா என்றால் அவ்வளவு உயிர்.
அம்மா ,சிறு வயதிலேயே இறந்துவிட்ட பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல், தன்னையும் தம்பி ராஜாவையும் ,அம்மா இல்லாத குறை தெரியாதபடி, எவ்வித குறையுமின்றி வளர்த்த நினைவுகள் அபிநயாவை கண் கலங்க வைத்தது.
பள்ளிக்கு செல்லும் நாட்களில், “நீ நடக்க கூடாதம்மா , எனக்கு கால் வலிக்கும்” என்று சொல்லி அருகாமையில் இருந்த பள்ளிக்கூடத்துக்கு சென்று வர சைக்கிள் வாங்கி கொடுத்து அழகு பார்த்தது, என பல பசுமையான நிகழ்வுகள் தோன்றின.
சண்முகமும், பெண்ணிடம் அதிகம் பாசம் கொண்டவர், எப்போதும் அவளிடம் “நீ என் பெண்ணில்லைம்மா, என்னோட அம்மா நீ” என பாசத்துடன் கூறுவார்.
திருமணத்துக்கு பிறகுகூட மகளை பிரிய மனமில்லாமல் வீட்டோடு மாப்பிளை கிடைப்பாரா என முயற்சி செய்து, பின்னர் பொள்ளாச்சிக்கு அருகிலேயே கோவையில் I.T. கம்பெனியில் வேலை பார்த்த ரவியை மணமுடித்து வைத்தார். ஆனால், ரவியை அமெரிக்காவுக்கு ப்ராஜெக்ட் ஒன்றிற்காக கம்பெனியில் அனுப்பி வைத்தார்கள்.
மூன்று வருடங்களில் முடியவேண்டிய ப்ராஜெக்ட் முடியாமல் நீட்டிக்கப்பட்டு வந்தது. மூன்று வருடங்கள் கழித்து ஊருக்கு திரும்பி வந்துவிடுவோம் என எதிர்பார்த்த அப்பா, நாங்கள் அமெரிக்காவிலேயே தொடர்வது கண்டு ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பாக விடுமுறையில் குழந்தை தீப்தியுடன் இந்தியா சென்றிருந்தபோது, மிகவும் சந்தோஷமாக இருந்தார். அதுவும் இரவில் தன் அருகே பேத்தியை படுக்க வைத்துக் கொண்டு ஆசையாக அவளின் மழலை பேச்சை ரசித்து கொண்டு படுத்திருப்பார்.
மீண்டும் US புறப்படும்போது, கண்கலங்கியபடி “அம்மா, குழந்தையுடன் நீ இங்க இருந்துடும்மா. மாப்பிளை போயிட்டு வெரசா வேலைய முடிச்சு கொடுத்துட்டு வரட்டும்“ என்றார்.
“இல்லப்பா , அவருக்கு சாப்பாடு பிரச்சனை ஆயிடும் , ஒரு காப்பி தண்ணிகூட அவருக்கு வைக்க தெரியாது. நாங்க இரண்டு மூன்று வருடங்களில் கட்டாயம் திரும்ப இந்தியாவுக்கு வந்துடுவோம்ப்பா, அது வரையில நீங்க கொஞ்சம் பொறுத்துக்குங்க” என்றாள் அபிநயா.
அபிநயாவின் நினைவுகளை கலைப்பது போல குழந்தை தீப்தி அம்மாவென்று அழைத்துக் கொண்டே உள்ளே வந்தாள், அபிநயா கண்களை துடைத்துக்கொண்டே குழந்தையை அணைத்துக் கொண்டாள்.
அடிக்கடி அப்பாவை நினைத்து அழுவதை பார்த்த அவளது கணவன், “கவலைப்படாதே அபிநயா, அப்பாவுக்கு ஒன்றும் ஆகி விடாது” என்று ஆறுதல் கூறினான்.
கொரானா தொற்று பிரச்சினையின் காரணமாக அனைத்து வெளிநாட்டு விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது., இருந்தாலும் நீ போக வேண்டும் என்று விருப்பப்பட்டால், அவசர அவசியத்தை தெரிவித்து நமது தூதரகம் மூலமாக இந்திய பயணத்திற்கு முயற்சி செய்யலாம் என்று கூறினான் ரவி.
“வேண்டாங்க, நாம இப்போ அவசரப்பட வேண்டாம், சிறப்பு அனுமதி பெற்று சென்றாலும் அங்கு நம்மை 14 நாட்கள் தனிமைப்படுத்தி விடுவார்கள். எனவே, நாம் இப்போது போனாலும் உடனே அப்பாவை பார்க்க முடியாது, நாம் சற்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்றாள்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சண்முகத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. ஆனால், அவ்வப்போது நினைவு வருவதும், அப்போது யாரையோ தேடுவது போல கண்களை சுழற்றி, சுழற்றி பார்த்துக்கொண்டே இருந்தார்.
அதைப்பார்த்த ராஜாவின் அத்தை, தனது தம்பி தனது உயிருக்குயிரான பெண் அபிநயாவை தேடுவதாகவும், அவளை பார்த்த பிறகே அவன் கண் மூடுவான் போலிருக்கிறது, அதற்குத்தான் அவன் கண் அலைகிறது என்றும் அழுகையுடன் கூறினார்.
“அத்தை, அமெரிக்காவில் கொரானா மிகவும் அதிகமாக உள்ளது. அவள் புறப்பட்டு வருவதற்கு விமானங்கள் ஏதும் கிடையாது, அப்படியே அவள் வந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும், அதனால் அவளை எப்படி வர சொல்லுவது” என கேட்டான் ராஜா.
“ஆமாம்பா, நீ சொல்றதும் சரிதான். ஆனா உங்கப்பன் நிலைய பாத்துட்டு ஆதங்கத்துல சொல்லிட்டேன்” என்று சொல்லி பெருமூச்சு விட்டாள் அத்தை.
மறுநாள் சண்முகத்தை பரிசோதித்த டாக்டர், அவருக்கு நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது என்றாலும், அவ்வப்போது நினைவு திரும்பும் போது அவருக்கு பிடித்தமானவர்கள் யாரும் இருந்தால், அவர்களை அவருடன் பேசத் வைத்தால் ஏதேனும் முன்னேற்றம் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று கூறினார்.
உடனே ராஜா அவரிடம் “அக்காவை அவருக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் அக்கா அமெரிக்காவில் இருக்கிறார் தற்போது அவளால் இங்கு புறப்பட்டு வர இயலாது” என்றான்.
“அப்பாவிற்கு நினைவு வரும் நேரத்தில் அவளை போன் அல்லது வீடியோகாலில் பேச செய்யுங்கள், அதை பார்த்த பிறகாவது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுகிறதா என பார்க்கலாம்” என்றார்.
“சரி அப்படியே செய்கிறேன் டாக்டர்” என்று கூறினான் ராஜா.
பிறகு அவன் அக்காவிற்கு போன் செய்து பேசினான், போனில் பேசிய அபிநயா அப்பாவிற்கு இப்பொழுது எப்படி இருக்கிறது என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“நிலைமை அப்படியேதான் இருக்கிறது, உடல்நிலை சீராக இல்லை. இருந்தபோதிலும் அவ்வப்பொழுது அவருக்கு நினைவு வருவதும், மீண்டும் நினைவு இழப்பதுமாக இருக்கிறார், ஆனால் நினைவு வரும் நேரங்களில் அவர் யாரையோ தேடுகிறார் அது யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் உன்னிடத்தில்தான் அப்பாவிற்கு பாசம் அதிகம், உன்னைத்தான் அப்பா தேடுகிறார் என்று அத்தை கூறுகிறார். அதனால் அப்பாவிற்கு மீண்டும் நினைவு திரும்பும் பொழுது உன்னை நான் வீடியோ காலில் கூப்பிடுகிறேன் நீ அப்பாவிடம் இரண்டு வார்த்தைகள் பேசு, டாக்டரும் அவருடன் பிடித்தமானவர்களுடன் பேசும்பொழுது அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்” என்றான்.
உடனே கதறி அழுத அபிநயா, “எந்த நேரமானாலும் பரவாயில்லை, இங்கு நாங்கள் தூங்கும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை, நீ கண்டிப்பாக அப்பா கண் திறந்து பார்க்கும்போது என்னை போன் செய்து கூப்பிடு” என்று கூறினாள்.
மறுநாள் இரவு 7 மணி அளவில் சண்முகத்திற்கு சற்று நினைவு திரும்பியது. ராஜாவிற்கு டாக்டர் கூறியது ஞாபகத்துக்கு வந்தது. உடனே அவன் தன்னுடைய லேப்டாப்பில் இருந்து வீடியோ கால் போட்டு அக்காவை அப்பாவுடன் பேச செய்வதற்கு முயற்சி செய்தான்.
எதிர்முனையில் வீடியோ காலில் வந்த அபிநயா அப்பா படுக்கையில் கிடப்பதையும், அவர் உடலை சுற்றி பல விதமான வயர்கள் சுற்றப்பட்டு ஆக்சிஜன் ஏற்றப்பட்டு வருவதையும் கவனித்து கலங்கினாள் .
பிறகு, ராஜா அப்பாவின் அருகே சென்று “அப்பா, அப்பா” என்று குரல் கொடுத்தான் அவர் கண் விழித்துப் பார்த்தபோது, “அபிநயா வீடியோ காலில் இருக்கா, பேசுங்கப்பா” என்று அவருக்கு நேராக லேப்டாப்பை காண்பித்தான்,
திரையில் அபிநயாவை பார்த்ததும் மிகவும் சந்தோஷப்பட்டு உணர்ச்சிவசப்பட்டார் சண்முகம். அப்போது எதிர்முனையில் இருந்த அபிநயாவும் அப்பாவைப் பார்த்து அழுதாள்.
“உங்களுக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை, கவலைப்படாதீர்கள். நான் இங்கு நிலைமை சரியானவுடன் நேரில் வந்து உங்களை பார்க்கிறேன்” என்று கூறினாள்.
அபிநயா பேச பேச சண்முகத்தின் முகத்தில் சந்தோஷம் தோன்றியது, அவரது முகத்தில் ஒரு தெளிவு ஏற்பட்டது. இதைப்பார்த்த அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யமாக இருந்தது!
பிறகு பேசிய மாப்பிள்ளை ரவியும் “கவலைப்படாதீர்கள் மாமா, கட்டாயம் உங்கள் உடல்நலம் சரியாகிவிடும்” என ஆறுதலாக பேசினார்.
பிறகு தீப்தியிடம் “தாத்தாவிடம் பேசு” என்று கூறினாள் அபிநயா.
உடனே பேத்தியும் தாத்தாவை திரையில் பார்த்து விட்டு “தாத்தா நல்லா இருக்கீங்களா? நாங்க சீக்கிரமா இந்தியாவுக்கு வரப் போகிறோம்” என்று தாத்தாவிடம் கூறியத கேட்டவுடன் அவருக்கு இன்னமும் சந்தோஷம் அதிகரித்தது.
பிறகு, பேசிய ராஜா “அக்கா நீங்க பேச ஆரம்பிச்ச உடனேயே அப்பாவின் முகத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு உள்ளது, ஆனால் தற்போது ரொம்ப நேரம் பேச முடியாது. நான் டாக்டரைக் கேட்டுக் கொண்டு அவ்வப்போது போன் செய்து பேசுகிறேன், நீ அப்பாவிடம் தினமும் சில நிமிடங்களாவது பேசினால் அப்பா உடம்பு தேறி விடுவார் என்றே நான் நினைக்கிறேன்” என்று கூறி போனை வைத்தான்.
பிறகு டாக்டரிடம் சென்ற ராஜா, “இப்பொழுதுதான் வீடியோ காலில் அக்காவ அப்பாவிடம் பேச செய்தேன், அக்காவின் முகத்தைப் பார்த்தவுடனேயே அப்பாவின் முகத்தில் ஒரு மலர்ச்சியும் தெளிவும் தெரிகிறது” என்றான்.
உடனே, சண்முகத்தை வந்து பரிசோதித்த டாக்டர், “இது ஒரு மெடிக்கல் மிராக்கிலாக இருக்கிறது, உன் அப்பாவின் உடல்நிலையில் தற்போது மாறுதல் தெரிகிறது, அவரது இதயத் துடிப்புகள், ரத்த அழுத்தமும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இந்த நிலை தொடர்ந்தால் ஒருசில தினங்களில் சாதாரண வார்டுக்கு மாற்றிவிடலாம், நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று கூறினார்.
அடுத்த இரண்டு நாட்களும் சண்முகத்திற்கு சிகிச்சையில் மாற்றம் செய்யப்பட்டது. மீண்டும் அன்று மாலை USலிருந்து அபிநயா வீடியோ காலில் அப்பாவிடம் பேசுவதற்கு முயற்சி செய்தாள். இன்றும் மகளின் முகத்தை திரையில் பார்த்தவுடன் சண்முகத்தின் முகத்தில் ஒரு சந்தோஷமும், மலர்ச்சியும் ஏற்பட்டது.
அபிநயாவிடம் பேசிய அவளது அத்தை, “மருந்து மாத்திரைகளால் குணமாகாத உன் அப்பாவின் உடம்பு, உன் முகத்தை பார்த்தவுடன் தேற ஆரம்பித்துவிட்டது. உன் அப்பாவிற்கு உன்மேல் உயிர், உன்னையும், பேத்தியையும், நீண்ட நாள் பார்க்காமல் இருந்ததிலேயே உடம்பு வந்து விட்டது. அவனுக்கு தற்போது தெளிவு பிறந்து விட்டது, இனிமேல் ஆண்டவன் அருளால் அவன் உயிர் பிழைத்துக் கொள்வான் என நினைக்கிறேன்” என்று கண்ணீருடன் கூறி முடித்தாள் அத்தை.
“ஆமாம் அத்தை, அப்பா கண்டிப்பா உயிர் பிழச்சுடுவாங்க… நீங்க கவலைப்படாதீங்க” என ஆறுதல் கூறினாள் அபிநயா.
அத்தையின் பேச்சை கேட்ட அபிநயாவுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்கு தாய்க்கு தாயாகவும், தந்தைக்கு தந்தையாகவும் இருந்து தன்னை வளர்த்த அந்த “தாயுமானவன்“ மீண்டும் உயிர் பிழைத்து எழுந்து வரும் நாளை எதிர்நோக்கி பிரார்த்தனையுடன் காத்திருந்தாள் அபிநயா.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings