in , ,

அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 2) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1

இதுவரை

எப்போதும் அனைவருடனும் அளவாய்ப் பழகும் புவி. பல புதியவர்களை மென்பொருள் நிறுவனத்தில் பணியமர்த்துகிறார்கள். இதற்கு நடுவே தன் காதலைத் தெரிவித்த மார்க்கெட்டிங் ஹெட் ரிஷியை புவி ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள். இனி……

இனி

அடுத்த நாள்   டேக்ஸியிலிருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து செல்லும் வழியில் சிறுமி ஒருவள் ரோஜா பூக்களை விற்றுக் கொண்டிருக்க, மூன்று ரோஜா பூக்களை வாங்கிக் கொண்டவள் தன் அலுவலக அறைக்குச் சென்றதும் அங்கே இருந்த சிறிய அளவிலான பூ ஜாடியில் அதனை வைத்துவிட்டு அன்றைய நாளின் தன் பணியினை பொறுமையாக செய்ய ஆரம்பித்தாள்.

ரிஷியுடனான முந்தைய தின சந்திப்புக்குப் பிறகும் கூட தன் மனதில் எந்தவித  சஞ்சலனத்திற்கும் இடம் கொடுக்காமல் தன்னைக் தானே கட்டுப்படுத்திக் கொண்டு  சாதாரணமாக இருந்தாள்.

அலுவலகத்தில் எப்போதும் தன்னுடைய அணியினர் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு, யார் யாருக்கு எந்தெந்த வேலையைத் தரவேண்டுமென்ற ஒரு அட்டவணையையும் தயார் செய்து கொள்வாள் புவி.

ஒவ்வொரு வாரமும்  செய்ய வேண்டிய  வேலைகளுக்கான கட்டளைகளை அனைவருக்கும் முன்பே  இ-மெயிலில் அனுப்புபவள், மாதம் ஒரு முறை  எல்லோருடைய பணிகளையும் மதிப்பீடு செய்து  சொல்ல வேண்டிய அறிவுரையையும் நாசூக்காக சொல்லி விடுவாள்.

இதனால் கம்பெனியின் சீனியர் புரோகிராம் டீம் லீடர்களுக்குக் கூட இவள் மீது சிறிய பொறாமை இருக்கவே செய்தது.

வேலைக்கு நடுவே புவிக்கு இன்டர் காமில் அழைப்பு வர, எதிர்முனையில்   நிர்வாக அதிகாரி  பாஸ்கர்.

“மேம், இன்னைக்கு ரிஷி சார் லீவு. அதனால,  புதுசா வேலைக்கு சேர்ந்த  புரோகிராமர்களை உங்க கேபினுக்கு அனுப்பறேன். கொஞ்சம் பாத்துக்கோங்க. அடுத்த வாரத்துக்கு மேல தான் யாரு  எந்த டீம்-னு முடிவு பண்ணுவோம்னு சொல்லீடுங்க”  என்று சொல்லவும்,

“ஒரு நிமிடம் யோசித்தவள், ஓ.கே. சார். அனுப்புங்க.  நான் பாத்துக்கறேன்” என்றாள்.

ஐந்து நிமிடத்தில் புவியின் அறைக்கு ப்யூன் ராஜேஷோடு வந்த அனைவரும்     தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள…

எல்லோரையும் வரவேற்ற புவி, “வெரிகுட்மார்னிங் ஒன் அண்ட் ஆல். பை தி பை, என் பேர் புவி. இங்க டீம் லீடரா இருக்கேன். அட்மின்-ல இருந்து ஃபோன் பண்ணினாங்க. வெல்கம் டு அவர் கம்பெனி. உங்க எல்லாரையும் புரோகிராமரா செலக்ட் பண்ணியிருக்கோம். இப்போதைக்கு, நிறைய ப்ராஜெக்ட்ஸ் போய்கிட்டு இருக்கு. நல்லா வேலை பண்ணினீங்கன்னா, இங்க உங்க எல்லாருக்குமே நல்ல ஸ்கோப் இருக்கு. இன்னும் யாரு எந்த டீம்-ல இருக்கப் போறீங்கன்னு முடிவு பண்ணல. ஒரு வாரத்துக்கு டிபார்ட்மென்ட்-ல  என்ன வேலை நடக்குதுன்னு கொஞ்சம் கவனிச்சு பாருங்க. மீதியை அப்பறம் பாத்துக்கலாம். இப்ப என்னோட வாங்க” என்றவள் அவர்கள் அனைவரையும் மேல் தளத்திற்கு  கூட்டிச் சென்றாள்.

குளிரூட்டப்பட்ட அந்த மிகப்பெரிய தளம் முழுவதும் சிறிய சிறிய சச்சதுர   அறைகளாக   பிரிக்கப்பட்டிருக்க, அறையின் கீழ்பாதி மட்டும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது.   தளத்தின் வெளிப்பக்க சுவர் முழுதும் கண்ணாடிகளாக இருக்க, தளத்தின் ஓரத்திலிருந்தபடியே நகரத்தின் அழகைப் பார்த்து ரசிக்க முடிந்தது.  எல்லோரும் அவரவர் அறையிலிருந்த கணிணியில்  தங்களது பணியினைச்   செய்து கொண்டிருந்தனர்.

பிறகு எல்லோர் அறைகளுக்கும் முன்பாக  இருந்த தனியொரு அறையில் இருந்த மாலினியை அழைத்து விஷயத்தைத் தெரிவித்த புவி, “இவங்க தான் இங்க சீனியர் புரோகிராமர். சிஸ்டம் அண்ட் புரோகிராமிங் சம்பந்தமான எல்லா ஃபைல்களும் இவங்க ரூம்-ல தான் இருக்கும். எப்ப வேணாலும் பர்மிஷன் கேட்டுட்டு  வாங்கி படிக்கலாம். சீக்கிரம் அப்டேட் ஆகப் பாருங்க. எல்லாரும் வேலையை நல்லா கத்துக்கோங்க. படிப்பை விட அனுபவம் தான் நிறைய கத்து கொடுக்கும். ஏதாவது சந்தேகம்-னா மாலினிகிட்ட தாராளமா கேக்கலாம். அப்பறம்,  மதியம் ஒன்னுலருந்து ரெண்டு மணி வரை லஞ்ச் டைம். மீதியை மாலினி சொல்வாங்க. ஓ.கே. ஆல் தி பெஸ்ட் . பை…..” என்றவள்,

“மாலினி,  எல்லாரும் ஃப்ரெஷ் கேண்டிடேட்ஸ். டேக் கேர்” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றாள்.

மாலினி ஒவ்வொருவரையும் தனியாக விசாரித்துவிட்டு எல்லோரையும் தனித்தனி கேபினுக்கு அனுப்பினாள். அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் புதிய முகங்களை  அறிமுகப்படுத்தி விட்டுவிட்டு பிறகு தன் அறைக்குச் சென்றாள்.

புவி புதிதாக சேர்ந்தவர்களைப் பற்றிய புரொஃபைல் விவரங்களை கணிணியில் பதிந்து கொண்டிருந்தாள். அதில் ஜனனியின் புரொஃபைலில் தந்தையின் வேலை என்ற இடத்தில் ஆர்மி என்றிருந்தது. அத்தனை பேர்களில் அந்தப் பெண் மட்டும் துறுதுறுவென வித்தியாசப் பட்டிருந்ததற்கான காரணத்தைப் புரிந்து கொண்டாள் புவி.

மதியம் தான் கொண்டு வந்திருந்த லஞ்ச் பாக்ஸை  கேண்டீனுக்கு எடுத்துச்  சென்றவள் தனியாக டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

புதிதாக வேலைக்கு சேர்ந்த அனைவரும் அவரவர்களுக்கு வேண்டியதை கேண்டீனில் வாங்கிக் கொண்டு  டேபிளில் ஒன்றாக உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜனனி மட்டும் சற்று தாமதமாகவே வந்தாள்.

ஒரு பர்கரும், கூல்ட்ரிங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டு உட்காருவதற்கு இடத்தைத் தேடிக் கொண்டிருந்தவள் புவியின் டேபிள் காலியாக இருப்பதைப் பார்த்ததும் அருகில் வந்து, “மேம், உட்காரலாமா?” என்றாள்.

நேர்த்தியாக பேண்ட் ஷர்ட்டில் இருந்தவள், தோள் வரை மட்டுமே இருந்த பட்டு போன்ற அவள் தலைமுடியை அழகாக விரித்து விட்டிருந்ததைப் பார்த்தபடியே, “தாராளமா” என்றவள்

“மதியத்துக்கு  இது போதுமா? வேற எதுவும் சாப்பிடலயா?” என்றாள்.

“இல்ல மேம். புது இடம். ரெண்டு நாள் அளவா எடுத்துகிட்டா தான் உடம்பு செட்டாகும்” என்றாள்.

“ஓ.கே. எங்க வீடு பார்க்கலான்னு இருக்கீங்க?” என்றதும்,

“வாங்க போங்க-ங்கற ஃபார்மாலிட்டியெல்லாம் வேண்டாம் மேம். ஜனனின்னே கூப்பிடுங்க. இப்போதைக்கு ஹோட்டல்-ல ரூம் போட்டிருக்கேன். ஒரு வாரத்துல ஒரு நல்ல பி.ஜி.ஹாஸ்டலா பார்க்கணும். நீங்க எங்க தங்கியிருக்கீங்க?” என்றவளிடம்

“நான் கோரமங்களாவுல ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கேன். ஆனா, மாலினி இங்க தான்  பக்கத்துல ஏதோ பி.ஜி ஹாஸ்டல்-ல இருக்கா. அவகிட்ட வேணா கேட்டுப்பாரு. ஓ.கே. அப்பறம் பார்க்கலாம்” என்றவள் சாப்பிட்டதும் கிளம்பிச் சென்றாள்.

பிறகு மாலினியிடம் விசாரித்துவிட்டு அதே பி.ஜி. ஹாஸ்டலில் தங்கிக் கொண்டாள் ஜனனி. தான் வேலை செய்யும் நிறுவனத்திலிருந்து ஐந்து நிமிடத்தில் நடந்து செல்லக் கூடிய தூரத்திலேயே ஹாஸ்டல் இருந்தது. மூன்று வேளையும் காஃபி, டீ உட்பட சாப்பிடுவதற்கும்,  தங்குவதற்கும் அவர்கள் சொன்ன வாடகை தோதாக இருந்ததால் அங்கேயே தங்க முடிவெடுத்தாள் ஜனனி.

காலை எழுந்து குளித்து ஆஃபீஸுக்கு தயாராகி ஹாஸ்டலில் சாப்பிட்டு விட்டு மதியத்திற்கும் லஞ்ச் பாக்ஸில் எடுத்துச் சென்றால் இரவு எட்டு மணி போல தான் ஹாஸ்டலுக்குத் திரும்புவாள் ஜனனி.

தொடர்ந்து சென்ற ஒரு வாரத்தில் ஊர் ஓரளவு பழகியது. கன்னடம் தெரியவில்லையென்றாலும் ஆங்கிலமும், தமிழும், ஹிந்தியும் அங்கே அழகாக செல்லுபடியாகியது.

கூட இருந்தவர்கள் சொல்லியதிலிருந்து எம்.ஜி.ரோடு, கே.ஆர்.மார்க்கெட், லால் பார்க், விஸ்வேஸ்வரய்யா அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் அரசு தொல்லியல் துறை அருங்காட்சியகம்  முக்கியமான இடங்களென குறித்துக் கொண்டாள்.

பத்து நாள் கழித்து புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்களை டீம் பிரித்ததில் ஜனனி புவியின் டீம்-ல் தேர்ந்தெடுக்கப்பட்டாள்.

இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்தால் ஊருக்குச் சென்று வருவதும், ஞாயிறு மட்டும்  விடுமுறையென்றால் பெங்களூரில் ஏதோ ஓர் இடத்துக்குச் சென்று சுற்றி பார்த்துவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருந்தாள் ஜனனி.

அம்மா வித்யா தான் அவளுக்கு சிறந்த தோழியாக இருந்தாள். ஒவ்வொரு நாளும் அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அம்மாவிடம் பகிர்ந்து கொண்டுவிட்டு தான் உறங்கச் செல்வாள் ஜனனி.

ஒரு நாள் மதியம் ஜனனியியும், புவியும் சேர்ந்து சாப்பிடும் சந்தர்ப்பம் மீண்டும் அமைய, “என்ன ஜனனி, பெங்களூர் வாழ்க்கை எப்படி இருக்கு?” என்றாள் புவி.

“அருமையான ஊர் மேம். சாதுவான மக்கள். அழகான இடங்கள். முக்கியமா, சாப்பிட நல்லா கிடைக்குது” என்றாள்  ஜனனி.

வாய்விட்டு சிரித்துவிட்ட புவி,  “ஓ….அதுக்குள்ள எல்லா இடத்துக்கும் போய் சாப்ட்டாச்சா?” என்று கேட்க,

“லீவ் கிடைச்சா வெளிய கிளம்பீட வேண்டியது தான் மேம். நல்லா சம்பாதிச்சோமா, சாப்ட்டோமா சந்தோஷமா இருந்தோமா, யாரையும் கஷ்டப்படுத்தாம இருக்கோமா-ன்னு இருந்துட்டு போயிடணும் மேம். லைஃப் ஈஸ் ஸோ ப்யூட்டிஃபுல்” என்றாள்.

ஒரு நிமிடம் ஆத்மார்த்தமாக மனதிலிருந்து பேசிய ஜனனியை புவிக்கு மிகவும் பிடித்துப் போனது. இந்த முறை புவி சாப்பிட்டு முடித்துவிட்டு, ஜனனி சாப்பிட்டு முடியும் வரை தானும் உட்கார்ந்திருந்தாள்.

“இப்படி வெளிப்படையா பழகறது எல்லா இடத்திலும் சரிப்படாது ஜனனி. நமக்கே சில சமயம் அது எதிரா கூட திரும்பிடும். அதை விடக் கொடுமை,  நம்ம கூட இருக்கறவங்களே  நம்பிக்கை துரோகமும் செய்வாங்க. அதனால எப்பவும் ஜாக்கிரதையா இரு” என்றவளிடம்,

“நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சதவீதம் உண்மை தான். ஆனா, நான் இப்படித்தான்னு  என்னோட படிக்கு இருந்துட்டு, யார் என்ன சொன்னாலும் அதைப் பத்தி கவலைப்படாம என் மனசாட்சி சொல்படிக்கு போய்கிட்டே இருப்பேன் மேம். ஒவ்வொருவரையும் யோசிக்க ஆரம்பிச்சோம்-னா நமக்கு ஒரு  சுயமே இல்லாம போய், சுதந்திரமா வாழவும் முடியாம போயிடுவோம்” என்று விளையாட்டாக ஆனால் ஆழமான கருத்தைச் சொன்னாள் ஜனனி.

ஒரு நிமிடம் அவள் சொன்னது அத்தனையும் அப்பட்டமான உண்மையென உணர்ந்தவள், “எப்படி இப்படி உன்னால இவ்வளவு துணிச்சலா இருக்க முடியுது?” என்றாள்.

“ரொம்ப பெரிய விஷயமெல்லாம் இல்ல மேம். அப்பா ஆர்மி ஆஃபீஸர். நிறைய டிரான்ஸ்ஃபர்கள். அடிக்கடி ஊர் மாறி மாறிப் போயிருக்கோம். எல்லா இடத்துலயும் விதவிதமான மக்கள், அவங்க பழக்கவழக்கம்-னு பார்த்து வளர்ந்ததாலயோ என்னவோ, எல்லாத்தையும் ஈஸியா ஹேண்டில் பண்ண முடியுதுன்னு நெனக்கறேன்” என்றாள்.

“எதுக்கும் ஆஃபீஸ்-ல அதிகம் வாய் விடாத. ஈவன் மாலினிகிட்ட கூட” என்றதும்,

கொல்லென்று சிரித்தவள், “அவங்க கூட சொன்னாங்க. வேலை விஷயத்தைத் தவிர எதையுமே பேசாத புவி உங்கிட்ட மட்டும் எப்படி பேசறா. எதாவது மந்திரப் பொடி போட்டயான்னு கேட்டாங்க. ஆனா, இப்ப தான் அதுக்கு அர்த்தம் புரியுது. நீங்க யார் கிட்டயும் அவ்வளவு பழகமாட்டீங்களோ?” என்றவளிடம்,

“கரெக்ட் தான். ஒரே ஊர்ல வளர்ந்த பொண்ணு நான். தினமும் என்னை காலைல பள்ளிக்கூடத்துல  வகுப்புல விட்டுட்டு போற எங்க அப்பா, சாயங்காலம் வந்து வண்டியில வீட்டுக்கு திரும்ப கூட்டிகிட்டு போவார். காலேஜ் வாழ்க்கையும் விமன்ஸ் ஹாஸ்டல்ல தான் கழிஞ்சது. இப்ப தங்கியிருக்கற வீடு கூட எங்க ஊர்க்காரங்க ஒருத்தர் குடியிருக்கற அபார்ட்மெண்ட் தான். அதனால நான் இப்படிதான்” என்றதும்,

“ஆனா, என்னோட நீங்க நல்லா தான பேசறீங்க. ஸோ, நீங்க மனசுக்கு புடிச்சா மட்டும் மிங்கிள் ஆகற டைப்-னு நெனக்கறேன்.  அது ஒன்னும் தப்பில்லையே. அதே போல,  எல்லார்கிட்டயும் பேசணும்-ங்கற அவசியமும் இல்லையே. கிட்டதட்ட நானே அப்படித்தான். எல்லார்கிட்டயும் பேசுவேன். ஆனா, மனசுக்கு ஒப்பினா தான் ஆத்மார்த்தமாக பேசுவேன். டைம் ஆச்சு. போலாமா?” என்று சொல்லவும்

“அச்சோ……நீ பேசினது-ல நேரம் போனதே தெரியல” என்று புவி எழுந்திரிக்க, இருவருமாக  பணிக்குத் திரும்பினார்கள். பிறகு ஒரு மாதம் போனதே தெரியவில்லை.

“முதல் மாத சம்பளம் வாங்கிய அன்று   புவிக்கு ஃபோன் செய்த ஜனனி, இன்னைக்கு என்னோட  ஒரு சின்ன ட்ரீட்.  அஞ்சு மணி போல  பர்மிஷன் போட்டுட்டு  வர முடியுமா” என்றதும்,

“ஓ.கே……. கொஞ்சம் வேலை இருக்கு. ஆனா,  டெக்னிகல் டிபார்ட்மென்ட் மதன் கிட்ட சொல்லீட்டா அவர் ஹேண்டில் பண்ணிப்பார்” என்றாள்.

இருவரும் ஆறு மணி போல எம்.ஜி. ரோடில் இருந்த அந்த உயர்தரமான ஒரு மோட்டார் சைக்கிள் கம்பெனிக்குச் சென்றனர்.

“ஹே…..என்ன, ஏதோ திட்டத்தோட வந்த மாதிரி தெரியுதே” என்றதும்

“உண்மைதான் புவி.  என்னோட முதல் மாத சம்பளத்தில் எனக்கு பிடிச்ச கியர் வண்டி வாங்கணும். நிறைய ட்ராவல் பண்ணணும்-ங்கறது தான் என்னோட இத்தனை நாள் ஆசை” என்றாள் ஜனனி.

விதவிதமான வண்ணங்களில் வடிவமைப்பில் நிறைய வண்டிகள் இருந்தாலும் விராட் கப்பலின் உடைந்த பாகம் சிறிது சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட அந்த பைக்கைத் தன் முதல் மாத சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை முதல் தவணையாகக் கொடுத்து விலைக்கு வாங்கினாள்.

வாங்கியவள் முகத்தில் அத்தனை சந்தோஷம். வண்டியைப் பலமுறை தொட்டுப்பார்த்து,  தடவிப் பார்த்து சந்தோஷப்பட்டவள் வண்டியில் உட்கார்ந்து தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு புவியையும் பின்புறம் உட்காரச் சொன்னாள்.

ஜனனியிடம் இருக்கும் கணங்கள் எப்போதும் சந்தோஷத்தைத் தருவதை  உணர்ந்த புவி வண்டியில் உட்கார, செல்போஃனில் தங்கள் இருவரின் செல்ஃபியை எடுத்தாள் ஜனனி.

அங்கிருந்து நேரே  வண்டியை  பசவனகுடி  தொட்டகணபதி கோவிலுக்கு ஓட்டிச் சென்ற ஜனனி கோயில் வாசலில் இருந்த கடையில் பூஜைக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு உள்ளேயிருந்த குருக்களிடம் கொடுக்க, அவர் வண்டிக்கு பூஜையைப் போட்டுவிட்டு ஸ்வாமி பிரசாதத்தைக் கொடுத்தார்.

பிறகு இருவரும் அங்கிருந்து நேரே சாலையோர உணவகத்திற்கு பெயர் பெற்ற திண்டி(உணவக சாலை) தெருவுக்குக் சென்றனர்.

தெரு முழுக்க வண்ண விளக்குகளால் ஜொலிக்க வரிசையாகக் கடைகள். தென்னிந்திய உணவு வகைகள், வட இந்திய உணவு வகைகள், பேல் பொறி, மசால் பொறி, சமோசா, பஜ்ஜி, போண்டா, காலிஃப்ளவர் மஞ்சூரியன், பீட்ஸா, பர்கர் ஐஸ்கிரீம் என சாப்பாட்டு பிரியர்களுக்கான அனைத்து வகையான  கடைகளும் அங்கே வரிசைகட்டி  இருந்தன. மக்கள் கூட்டமோ  அலைஅலையாய் விரும்பியதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். நிறைய குடும்பங்கள், நண்பர்கள், காதலர்கள் என அனைத்து தரப்பினரையும் பார்க்க முடிந்தது.

பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்திவிட்டு வந்த இருவரும் ஒரு கடையில் மசாலா தோசையும், தட்டு இட்லியையும் வாங்கிக் கொண்டு ஆசுவாசமாக அரட்டை அடித்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

பெங்களூர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறிய  நகரமாக இருந்து நிறைய மென்பொருள்  கணிணி நிறுவனங்களின் முதலீட்டால் இன்று அசுரவேகத்தில் அழகாய் வளர்ந்து கர்நாடகத்தின் மையமாய் விளங்கும் நகரம்.   வருடம் முழுதும் சுட்டெறிக்கும் வெயிலில்லாமல் இதமான வானிலை யோடு, வேலை வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதால் எல்லா மாநில மக்களும்  விரும்பி வேலை தேடிவந்து குடிபெயரும் இடமாக மாறியிருக்கிறது.

பலதரப்பட்ட மாநிலத்தவர்களும் வாழக்கூடிய வகையில் எல்லாவித பண்பாட்டு கலாச்சாரத்தையும் தன் கலாச்சாரத்தோடு அரவணைத்துக் கொண்டு  செல்லும் நகரமாக இருப்பதால்  இந்தியா முழுக்க விரும்பப்படும் நகரமாக பரிமளித்துக் கொண்டிருக்கிறது.

வேலைக்குச் சென்றதிலிருந்து அன்று வரை வீடு, அலுவலகம், கடைகளுக்குச் செல்வது, விடுமுறை நாட்கள் வந்தால் பெற்றோர்களைப் பார்க்கச் செல்வது என்று ஒரு வட்டத்திற்குள்ளேயே இருந்த புவிக்கு, நம் வாழ்வின் சந்தோஷ கணங்களை எப்போதும் நாம் தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை புரியவைத்த ஜனனிக்கு  மனதிற்குள் மனதார நன்றி தெரிவித்தாள்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மதி வதனா (பகுதி 8) – ராஜேஸ்வரி

    எல்லாம் நன்மைக்கே (சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு