in ,

மதி வதனா (பகுதி 8) – ராஜேஸ்வரி

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7

பலவித வண்ண வண்ண மலர்கள் பூத்துச் சிரிக்கும் மலர்வனத்தில், ஒரு பெரிய மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த பொன் ஊஞ்சலில் ராதையும் கிருஷ்ணனும் அமர்ந்து ஆடியபடி  இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் காதலுடன் நோக்கிய வண்ணம் இருக்க, அவர்களைச் சுற்றி தோகை விரித்தாடும் வண்ண மயில்களும், புறா கூட்டங்களும் பலவித பறவைகளும், வண்ணத்துப்பூச்சிகளும் இருவரையும் பார்த்து மெய் மறந்து இருக்க, தன்னை மறந்து, தான் தீட்டிய ஓவியத்தில் லயித்தபடி இருந்த வதனச் சந்திரிகா ராதையின் கால்களில் மருதாணி சிவப்பை பூசிக் கொண்டிருந்தாள்.

வலது கால் விரல்களில் பூசி முடித்தவுடன் இடது கால் விரலில் பூசுவதற்குள் வண்ணம் தீர்ந்து போயிருந்தது.

அருகில் நர்த்தன விநாயகர் ஓவியம் திட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம்,” வேதா உன்னிடம் சிவப்பு வண்ணம் இருக்கிறதா….? என்று கேட்டாள்.

“எனக்கும் தீர்ந்து போய்விட்டது. இப்பொழுது தான் மேல் தளத்தில் இருந்து எடுத்து வந்தேன். எனக்கு நிறைய தேவைப்படுகிறது. நீ வேண்டுமானால் மேல் தளத்துக்கு சென்று எடுத்துக் கொள்”என்று சொன்னவள்  வதனா…. உணவு இடைவேளை வந்துவிட்டது எனக்கு பசிக்கிறது நான் கீழ் தளத்திற்கு செல்கிறேன், நீயும் வருகிறாயா…? என்று கேட்டாள்.

“நீ செல், நான் பிறகு வருகிறேன்” என்று கூறிவிட்டு வதனா மேல் தளத்தை நோக்கி சென்றாள்.தேவைப்பட்ட  வண்ணங்களை எடுத்துக்கொண்டு கீழிறங்கி  நிலைப்படியில் கால் வைத்து உள்ளே நுழைந்த பொழுது எல்லோரும் உணவருந்த சென்றுவிட்டதால் வெறிச்சோடியிருந்த சித்திரக்கூடத்தில் யாரோ ஒரு வாலிபன் தன் ஓவியத்தை நின்று ரசித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.  தன் பாத கொலுசின் சத்தத்தால் இடையூறு செய்ய வேண்டாம் என்று அங்கேயே  நின்று , அந்த வாலிபன் அணிந்திருந்த உடையையும் அணிகலன்களையும் பார்த்து அவன் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டாள்.

வதனா அவனை மேலிருந்து கீழாக பார்த்துக் கொண்டிருந்த பொழுது சடாரென திரும்பினான் அந்த வாலிபன்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஒரு கணம்பார்த்துக் கொண்டனர். அந்த வாலிபன் பேச்சை ஆரம்பித்தான் “இந்த ஓவியம் யார் தீட்டியது?”

“நான்தான்” என்று சிறிது தலை தாழ்த்தி பணிவாக கூறினாள்.

“ஓ அப்படியா…? மிகவும் அழகாக, தத்ரூபமாக இருக்கிறது”என்று கூறி ஆச்சரிய கண்களால் அவள் உருவத்தை ஆராய்ந்தான்.

“மிக்க நன்றி” என்று கூறிவிட்டு ஓவியத்தை நோக்கி நடக்கலானாள்.

“எனக்கு ஓவியம் என்றால் மிகவும் பிடிக்கும் எனக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கிறீர்களா?” என்று கேட்டான்.

” நான் ஒரு மாணவி, நீங்கள் எங்கள் ஆசிரியரிடம் கற்றுக் கொள்ளுங்கள்” என்று சிரித்தபடி கூறிக்கொண்டே அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். இருவர் கண்களும் ஒரு நொடி கலந்தது இருவரும் தன்னிலை மறந்தனர்.

இருவரின் மனங்களும் ஒன்றையொன்று ஈர்த்துக் கொண்டது.  பின் இருவரும் சுதாரித்துக் கொண்டு வெட்கச் சிரிப்புடன் தலை குனிந்தனர்.

எங்கிருந்தோ பறந்து வந்த புறா ஒன்று இவர்கள் முகத்தில் வந்து மோதி இறக்கைகளை படபடவென அடித்து அகன்றது இருவரும் நிலை தடுமாறினர். வதனா, அவன் மேல் விழுந்தாள். பூங்கொத்து போல் தன் மேல் விழுந்த அவளை கீழே விழாதபடி அவள் இடையினை இறுக அணைத்த அவன் உடனே கைகளை அகற்றி, சுதாரித்து, “மன்னித்து விடுங்கள்” என்று தலை குனிந்தபடி கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அவன் அங்கிருந்து அகன்றதும் வதனாவின் மனதில் ஏக்கம் சூழ்ந்தது. உடலெங்கும் படபடப்பாக இருந்தது. கால்கள் துவண்டு அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டாள். கோபமும், அழுகையும், ஏக்கமும், இன்பமும் இன்னும் பல வித உணர்ச்சிகள் ஒன்றாக அவளை ஆட்கொண்டன. முதன் முதலில் ஒரு ஆடவனின் அருகாமையும் அவன் கைகள் அணைத்ததால் உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் கண்டு அதிசயித்தாள்.

அவள் மேல் மோதிய அந்த புறா தலையை அசைத்து அசைத்து அவள் முகத்தையே பார்த்தது. பின் அவள் மடியில் ஏறி அமர்ந்தது.

 “செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்பொழுது என்னிடம் வந்து கொஞ்சுகிறாயா?” என்று செல்லமாக அதன் இறகில் தட்டினாள்.  அப்பொழுது  திறந்திருந்த சாளரத்தின் வழியே இன்னொரு புறா பறந்து வந்தது. வதனாவின் மடியில் அமர்ந்திருந்த புறா வேகமாக பறந்து சென்று அந்த புறாவின் அருகில் அமர்ந்தது. இரு புறாக்களும் ஒன்றையொன்று அலகால் கொத்திக்  கொத்திக் கொஞ்சிக் கொண்டன. அதை விழிவிரிய பார்த்த வதனாவின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

உடலெங்கும் மெதுவாக வெப்பம் பரவியது. அவள் மனம் மீண்டும் அவன் அணைத்த அந்த நொடியை நினைவுக்கு கொண்டு வந்ததால் கண்கள் மூடி அந்த சுகத்தை அனுபவித்தாள்.  புறாக்கள் பறந்து செல்லும் சப்தத்தால் சுய நினைவுக்கு வந்தாள். தன் நிலையை நினைத்து சிரித்தபடி மெல்ல எழுந்து ஓவியம் தீட்டுவதற்கு சென்றாள்.

ஓவியத்தில் இருந்த கண்ணனின் முகத்தை காண்கையில் அந்த வாலிபனின் முகம் மீண்டும் மனதில் வந்தது. திடீரென நினைவு வந்தவளாய் “அவரை இதற்கு முன் எங்கேயோ பார்த்த ஞாபகமாக இருக்கிறதே” என்று தனக்குத்தானே கூறிக் கொண்டாள். மீண்டும் ஓவியத்தில் கண்கள் பதித்தாள். தன்னை ராதையாகவும் அந்த வாலிபனை கண்ணனாகவும் மனம் கற்பனை செய்து இன்பத்தில் ஆழ்ந்தது.

அடுத்த நொடி ஏக்கம் வந்து சூழ்ந்து கொண்டது. நான் நினைப்பது போல் அவரும் என்னை நினைப்பாரா என்று கேள்வி கேட்ட மனதிற்கு பதில் தெரியாமல் தடுமாறினாள்.

மறுநாள்…

ராணி சௌபர்ணிகா தன் அரண்மனையில், மகாலட்சுமி பூஜை செய்து ஆயிரத்தொன்று கன்னிப் பெண்களுக்கு விருந்தளித்து புத்தாடை வழங்கினார். எல்லோரும் அன்று இரவு அரண்மனை மாளிகையிலேயே தங்க வைக்கப்பட்டனர்.

“ஆஹா… ஒரு சொர்க்க புரிபோல் என்னவொரு அற்புதமான வாழ்வு. எவ்வளவு பெரிய இடங்கள், அறுசுவை உணவுகள்,  விதவிதமான உடைகள் எத்தனை ஆபரணங்கள். பிறந்தால் அரண்மனையில் பிறக்க வேண்டும். ம்…ஹூம்… அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்று  ஆர்ப்பரித்தபடி பெருமூச்சு விட்டாள் லலிதா.

“ஏன் அதற்கு இன்னொரு வழியும் இருக்கிறதே இங்கு அரண்மனையில் வாழும் யாராவது ஒரு ஒரு வாலிபன் உன் அழகில் மயங்கி உன்னை திருமணம் செய்தால் உனக்கு அரண்மனை வாழ்வு கிட்டும்” என்று சிரித்தாள் வதனா.

“நீ சொல்வது சரிதான், ஆனால் அதற்கும் பாக்கியம் செய்திருக்க வேண்டுமே” என்று சொன்னாள் லலிதா.

“ஆகட்டும், லலிதா எனக்கு உறக்கம் வருகிறது.  நமக்கு கொடுக்கப்பட்ட அறைக்கு செல்லலாம் வா” என்று அழைத்தாள் வதனா.

“இல்லை, நீ உறங்கச் செல். எனக்கு உறக்கம் வரவில்லை. இன்னும் சிறிது நேரம் இந்த அரண்மனையை சுற்றி விட்டு வருகிறேன்.”என்று  கூறிவிட்டு லலிதா அத்தளத்தின் மாடத்தை நோக்கி ஓடினாள்.

“இரு, லலிதா நானும் வருகிறேன்” என்று அவள் பின்னால் ஓடினாள் வதனா.

இருவரும் நின்றிருந்த மாடத்தின் எதிரே இருந்த ஒரு மாளிகையின் மாடத்தில் இரு வாலிபர்கள் உலவிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் அவர்களை பார்க்க, அவர்கள் இருவரும் இவர்களை பார்க்க… அப்பொழுது வீசிய சுகந்தமிகு தென்றல் காற்று அவர்கள் நால்வரையும் ஒரு சேர அணைத்துக் கொண்டது.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 29) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    அவளும் நானும் (குறுநாவல் – பகுதி 2) – சுபாஷினி பாலகிருஷ்ணன்