in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 7) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்...(அத்தியாயம் 7)

மே 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காலப் பேருந்து

ம்பலத்தான் ஆனந்த தாண்டவம் ஆடும் சிதம்பரம்…!

அக்ரஹாரம் அனந்தீஸ்வரர் கோவில் மணி ஒலிக்கத் தொடங்கியது. பொழுது போய், மெல்ல இரவுக்காவலன் எட்டிப் பார்க்கவிருக்கும் அந்தி மாலை நேரம். தெருவில் மங்கையர் சிலர் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தனர்.

அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் ஒரு சின்ன அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதை நாள் தவறாமல், வீட்டு மேல்மாடத்திலிருந்து பார்ப்பாள் லட்சுமி.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அல்லவா..!’ அவள் வீட்டு மேல் மாடத்திலிருந்து பார்த்தால், அங்கு இருக்கும் கோவில், பக்கத்தில் இருக்கும் மண்டபம், அதற்கடுத்துள்ள உள்ள பள்ளிக்கூடத்துத் தெரு அனைத்தும் நன்கு தெரியும். வேடிக்கைக்கு வேடிக்கையும் ஆயிற்று. பொழுதும் எளிதாக போய்விடும்.

அந்தப் பள்ளிக்கூடத்துத் தெருவை மட்டும் அவள் பாரக்கவே மாட்டாள். அந்தச் சந்து ரொம்பவும் வளைந்திருக்கும்; இரண்டு தெருக்கள் சேருமிடம் என்பதால் சில வாகனங்கள் எதிர்பாராது வந்து முட்டிக் கொள்ள நேரிடும்; அதைப் பார்த்துவிட்டால் அன்று நாளெல்லாம் அந்தச் சம்பவமே லட்சுமிக்கு நினைவில் வரும்.

‘ச்ச… கொஞ்ச மிஸ் ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்? அவாளுக்கு அப்படி என்ன அவசரமோ? அதுவு அந்த பைக்ல வந்தானே, அவனுக்கு என்ன போன்ல இளிப்பு வேண்டி கடக்கு? பாவம் அந்தப் பெரியவர் ஒரு ஓரமா தானே போய்ட்டிருந்தார்’ என்று அவள் மனம் ஏக சலனம் கொண்டுவிடும். 

அன்று அந்த மாலைப் பொழுதில் கோபுரத்து அகல் விளக்கைத் தரிசித்து விட்டு, கையில் இருக்கும் வாரமலர் பக்கங்களைப் புரட்டினாள்.

வாரமலரில் வரும் ‘குறுக்கெழுத்துப் போட்டி’யை எடுத்தாள். அவள் அதரங்கள் விரிந்தும் விரியாமலும் அசைந்தன.

‘ஒளவை சொன்ன ஆரம்பப் பாடமா…? ஆங்…ஆத்திச்சூடி..! அடுத்து, ஓரெழுத்து மாத முழுக்க ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறை.. ஆங் மே மாசம்’ என்று சுட்டியாக அந்தக் கட்டத்தைப் பூர்த்தி செய்து விட்டாள். 

அதன் பிறகு அவள் விரல்கள் ராஜேஷ்குமார் நாவலைத் தேடிப்பிடித்து, உதடுகள் அதைப் படிக்கத் தொடங்கி, விழிகள் விரிந்தும் நெளிந்தும் உயர்ந்தும் காணப்பட்டன.

படித்து முடித்து, ‘ராஜேஷ்குமார் னா.. சும்மாவா? கதை னா இப்டில இருக்கணு..! பா.. எத்தன திருப்பம்..!’ என்று ஆச்சரியப்பட்டுப் போவாள்.

பாதி பொழுது அவளுக்கு மொட்டை மாடியில் தான் கழியும். வீட்டிற்கு ஒரே பெண். இரண்டு அண்ணன், ஒரு தம்பி. கிருஷ்ணனின் குடும்பம் போலவே இருக்கிறதல்லவா? அதனால் தான் தேடிப்பிடித்துக் கதைக்குள் கொண்டு வந்தேன்.

லட்சுமி கடைக்குட்டி இல்லை என்றாலும், செல்லம் கொஞ்சம் அதிகம். இப்போது இருப்பது வாடகை வீடு தான். அக்ரஹாரத்தில் இருப்பதால், மாமிகளோடு பேசி பேசி, அவர்கள் பாஷை லட்சுமிக்கும் ஒட்டிக் கொண்டது.

வார இதழை எடுத்துக்கொண்டு, லட்சுமி கீழே சென்றாள். “அடியே லட்சு..! வீட்ல விளக்கு வைக்குற நேரத்துக்கு என்ன மாடில வேடிக்க வேண்டியிருக்கு” என்று அவள் அம்மா வைது தீர்த்தாள்.

லட்சுமி கீழே வந்தவுடன், அவள் தம்பி ஓடி வந்து, “கா.. நம்மெல்லாம் ஒளிஞ்சி விளையாட்லாமா?” என்று அவள் தாவணியை பிடித்துக்கொண்டு கேட்டான்.

லட்சுமி “சரி” என்றாள். தன் இரண்டு அண்ணன்களையும் கெஞ்சி கூப்பிடும் போது அம்மா இடையில் வந்து, “போங்கடா.. அவ இப்போதன அஞ்சாங் கிளாஸ் படிக்கிறா பாரு” என்று பொறிந்தாள்.

“மா…” என்று அவள் சலித்துக்கொண்டே இழுக்க, அந்த இடைவெளியிலும் அம்மா முந்திக்கொண்டு, “ஹ்ம்ம்.. டிகிரி முடிச்சாச்சு… அடுத்து என்னன்னு தெரில.. உன்ன எங்க சேக்கலாம்? கல்யாணம் பண்ணி குடுத்துருலாமானு நானு அப்பாவு யோசிட்டிருக்கிறோம்” என்று பேச்சை ஆரம்பித்தாள். 

லட்சுமி, தன் அண்ணண்களோடு அப்படியே மெல்ல நழுவி விட்டாள். நான்கு பேரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். இரண்டு மூன்று முறை விளையாட்டு தொடர்ந்தது.

கடைசி முறை லட்சுமியின் பெரிய அண்ணன் வேலு, “ஒன்னு… ரெண்டு.. மூணு……… பத்து..” என்றான். அனைவரும் ஓடி ஒளிந்து கொண்டனர்.

கண் திறந்தவுடன், லட்சுமியின் தாவணி அவளைக் காட்டி கொடுத்து விட்டது. “தோ.. லட்சுமி… கண்டுபுடிஸ்டென்..” என்றதும் “ச்சே..! சரி வா..” என்று இருவரும் சேர்ந்து இளைய அண்ணனை கண்டுபிடித்து விட்டனர்.

கடைக்குட்டி தம்பி தான் பாக்கி. ஐந்து நிமிடம் அவனை மூவரும் தேடினர். பின்பு லட்சுமி சத்தமாகப் பேசினாள். “அக்காக்கு வேற பசிக்குதுடா.. அம்மா வேற இனிக்கு அரிசி உப்புமானு சொன்னாங்க.. வெள்ள வந்துரு பாப்போம்..” என்று ஒரு முறை வீட்டையே சுற்றி வந்துவிட்டாள்.

தம்பி காணவில்லை. அதற்கடுத்து நிமிடங்கள் கரைந்தனவே ஒழிய, தம்பியின் உருவம் வெளிப்படவில்லை. மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நின்றனர்.

**********************************************************

குடியேற்றம்..! 

கிருஷ்ணனின் பி.எட் படிப்பில் இன்னும் ஓர் ஆண்டு தான் மிச்சம் இருக்கிறது. அப்பாவின் முகம் பார்த்துக் கொண்டேதான் அத்தனை நாட்களையும் நகர்த்தினான் அவன்.

மாமாவிடம் கேட்ட சிபாரிசு வேலை வந்து விட்டிருந்தது. சாராய கம்பெனியில் கணக்கர் வேலையாம். அவன் மனம் அனலிடைப் பட்ட புழுவைப் போலத் துடித்தது.

‘சினிமா கினிமா…னு கனவு கண்டுட்டு இருந்தேன். இப்டி சாராய கம்பனியில வேல பாப்பேன்னு நினைச்சி கூட பாக்கல..’ என்று மனம் வெந்து கொண்டிருந்தான். ராதாவிற்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. 

அப்போது கிருஷ்ணன், எம்.ஜி.ஆர் படங்களை விரும்பிப் பார்ப்பான். ஏதோ ஓர் படத்தின் தைரியத்தை வரவைத்துக் கொண்டு, அந்தச் சாராயக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். அவனுக்குக் குடோனில் தான் வேலை.

படித்தது கணக்கு தானே. அதனால், அக்கவுன்டு எழுதுவது எளிமையாக வந்துவிட்டது. வரவுக்கு மேல் செலவானால் எப்படி நேர் செய்வது, சில்லறை கணக்குகளை எப்படி ஈடு செய்வது போன்ற யுக்திகளைக் கற்றுக் கொள்வதற்கு அந்த வேலை ரொம்பவும் உதவியாக இருந்தது.

அந்த ஓனர் நல்லவர் தான். ஆனால், கொஞ்சம் லஞ்சம் லாவண்ய கேஸ். கிருஷ்ணன் நன்றாக கணக்கு பார்ப்பதால், அவனை இன்னும் ஒரு வருடம் விரும்பி வேலைக்கு வைத்துக் கொண்டார்.

கிருஷ்ணனும் நல்ல சம்பளம் வருகிறது என்று வேலையைத் தொடர்ந்தான். ஆனால் மாமாவிடம், “மாமா.. வேற வேலை பாருங்க.. இவரு கொஞ்ச லஞ்சம்.. அது இதுன்னு இருக்காரு. அவரு பெரிய ஆளுதான். இருந்தாலு எனக்கு நேர சரியிலன்னா.. கொஞ்சம் பயமா இருக்கு..” என்று சொல்லி வைத்தான். மாமாவும் சரி என்று ஒத்துக் கொண்டார். 

பி.எட் படித்து முடித்ததும், சூதானமாக வேலையை விட்டு நின்று விட்டான். ‘காலில் சுட நீரை ஊற்றினார் போல்’ என்ற வரிக்கேற்ப, மாமங்காரன் அடுத்த வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டிருந்தார்.

இந்த முறை ராதாவுக்கும் வேலை  கிடைத்திருந்தது. ஆனால், வெவ்வேறு இடங்களில்.

ராதாவுக்கு, ‘ஆரணி சர்வோதய சங்கத்தில்’ கிடைத்திருந்தது. ராதா ரொம்பவும் மகிழ்ச்சி பட்டு, கிருஷ்ணனிடம் “உனுக்கு எங்கடா..” என்று கேட்டான். அவனுக்கு கேட்காது என்று தெரிந்தும் மெதுவாகக் கிருஷ்ணன் சொன்னான். “அழைத்துவிட்டான் அம்பலத்தான்………” 

நாகப்பட்டினம் கோவிலிலிருந்து கத்திக்கொண்டே வெளியே வந்த அந்தப் பெரியவர், ஒரு இடத்தில் தியானம் செய்ய அமர்ந்தார். இரண்டு மூன்று நாள் தவத்திற்குப் பிறகு, அப்படியே நடைபயணமாக பொன்னம்பலத்துக் கூத்தனைத் தரிசிக்கப் புறப்பட்டார். வழியில் இருக்கும் சிறு ஆலயங்களில் எல்லாம் கிடைக்கின்ற பிரசாதத்தை உண்டு ஆங்காங்கே தியானம் மேற்கொண்டு வந்தார். 

இந்தக் காவி உடை மனிதனுக்குள்ளும் ஒரு சோகம் ஒளிந்து கொண்டு, அவ்வப்போது அவரைப் பார்த்து, பல்லைக் காட்டிச் சிரிக்கும்.

அவருக்கு ஒரு தங்கை இருந்தாள். இப்படி பித்தனாகி, காவி உடை அணிந்து கொண்டு திரிவதற்கு முன், இவர் பெயர் ‘மனோகரன்’, தங்கை பெயர் யமுனா. இவர் தான் யமுனாவிற்குத் திருமணம் செய்து வைத்தார். அவன் பெயர் ராமலிங்கம். அரியையும் சிவனையும் தன் பெயரில் இணைத்து வைத்துக் கொண்ட ராமலிங்கம், ஓர் நாத்திகவாதி. 

திருமணம் ஆனப் பின்பு ஒரு நாள், மனோகரன் தன் தங்கையைப் பார்க்க வந்தார்.  ராமலிங்கத்துக்கும் மனோகரனுக்கும் எப்போதும் கட்டுக்குள் இருக்கும் வாக்குவாதம் அன்று எல்லை மீறியது. காரணம் மனோகரன்  ஆன்மீகவாதி.

“கடவுள், அருள், பக்தி..” என்று பேசிக் கொண்டிருக்கையில் கோபம் கொண்ட ராமலிங்கம், “கடவுள் பெரிசு பெரிசுன்னு சொல்றியே..? போய் அவராண்டையே கெட. உன் தங்கச்சிய நா பாத்துக்குறே. இனிமே மழைக்குக் கூட எங்க வூட்டு பக்கம் வந்துராதா..” என்று வார்த்தைகளை மென்று துப்பினான்.

யமுனா கதறி அழுதாள். ஆனால், மனோகரனுக்கு விழியைத் திறந்து விட்ட மாதிரி ஒரு வெளிச்சம். “அம்பலத்தான்..! என்ன வந்து அழைச்சிக்கோ டா” என்று மனதிலிருந்த சொந்தகளை உதறித் தள்ளிவிட்டு “இனி, ஆனந்த தாண்டவம் புரிபவனே என் அப்பன்” என்று பட்டையை இட்டுக் கொண்டு கிளம்பினவர் தான். வீடு திரும்பவில்லை.

**********************************************************

அப்பாவின் கட்டிலிருகே ஆர்டரை வைத்துவிட்டு, கிருஷ்ணன் நேரே ஈஸ்வரன் கோயிலுக்குப் புறப்பட்டான். முன்பு போல் குடும்பத்தாரைப் பிரிந்து செல்லப் போகிறோம் என்ற அச்சம் இல்லை. வேலைக்குப் போய் சம்பாதித்து இவர்களைக் காப்பற்ற வேண்டும் என்ற மனஉறுதி பிறந்திருந்தது. 

அன்றிரவு, மாமாவே கிருஷ்ணனைப் பார்க்க வீட்டிற்கு வந்திருந்தார். கையில் ஒரு சலோபன் கவர். அதில் இரண்டு செட்டு துணி.

மாமா கிருஷ்ணனிடம் சொன்னார். “இனிக்கு ராவோட கிளம்பிடு கிஸ்னா..! இந்தா, இதுல ரெண்டு செட்டு துணி இருக்கு” என்று சொல்லி சலோபன் கவரோடு, கையில் 300 ரூபாயையும் திணித்தார்.

கிருஷ்ணனுக்கு என்னமோ போலிருந்தது. “சரி..” என்ற வார்த்தை வருவதற்குள் கண்களில் நீர் வழிந்து விட்டது. மாமாவுக்கும் தான். 

அன்றைய இரவு, ரொம்பவும் இருட்டி அமைதியாக இருந்தது. காலம் இப்போது தோற்றுவிட்ட நிலையில், கிருஷ்ணனுக்கு வழிகாட்ட முடிவு செய்திருந்தது. சூரியன் உதிப்பதற்கு முன் தெரியும் சுக்கிரனைப் பார்த்துவிட்டு கிளம்பினான் கிருஷ்ணன்.

அவனை பஸ் ஏற்றிவிட மாமாவும் ராதாவும் வந்திருந்தார்கள். நேரம் காலை 3.45. சிதம்பரம் பேருந்து நின்று கொண்டிருந்தது. கிருஷ்ணனுக்கு ஏனோ அது ‘காலப்பேருந்தாய்’ தெரிந்தது. 

ராதாவிடமும் மாமாவிடமும் கிருஷ்ணன் விடைப்பெற்றுக் கொண்டான். இதற்குக் காத்திருந்தது போல, பேருந்து புழுதி பறக்க நகர்ந்தது.

மாமா சிறிது தூரம் பேருந்துடனே ஓடி வந்து, “கிஸ்னா…நல்லா சாப்புட்றா..” என்று ஏக்கம் கலந்த குரலில் கத்தி, கண்ணீர் விட்டார்.

இப்போதும் காலம் தனக்குள் பேசிக்கொண்டது. ‘ம்ம்.. படிப்பில் சலனம் செய்ததால் தான் பொறுப்பாய் மாறினாய்.. இன்னும் ஒரு  வேல பாக்கியிருக்கு…’ என்று முன்பு போலவே சூட்சமமாய் சிரித்தது. 

நேரம் செல்ல செல்ல, வெயிலும் தன் பங்கிற்குப் பல்லை இளித்துக் கொள்ளத் தொடங்கியது. கிருஷ்ணன் காலப்பேருந்தாய் நினைத்த அந்தப் பேருந்தின் காலச்சக்கரங்கள் பண்ரூட்டியில் சர்ரென்று நின்றது…

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை