sahanamag.com
தொடர்கதைகள்

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“விசா வேலை வெற்றிகரமாக முடிந்தது. இனி கும்பகோணம் போய் முரளி, ஜானகி திருமண ஏற்பாட்டை முடிக்க வேண்டும்” என்றார் ஸ்ரீதர் லட்சுமியிடம்.

அப்போது சமையலறையிலிருந்து வெந்தயம், பெருங்காயம், தனியா எல்லாம் கலந்து கலவையாக நாக்கில் நீர் ஊறவைக்கும்  ஒரு நறுமணம்  மூக்கைத் துளைத்தது.

லட்சுமி சமையல் அறைக்குள் நுழைந்து,  “ரத்னா, என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இன்னும் கொஞ்ச நேரத்தில் நாங்கள் கும்பகோணம் கிளம்ப வேண்டும். போகும் வழியில் நிறைய ஓட்டல்கள்,  நீ ஏன் கஷ்டப்பட்டு சாப்பாடெல்லாம் கட்டுகிறாய்?”  என்றாள்.

“லட்சுமி… நீ ஒன்றும் இன்று உங்கள் ஊருக்குப் போக முடியாது! அப்படியே கொஞ்சம் எங்கள் அறைக்குள் எட்டிப் பார். கோபியும் என் கணவரும் எப்படி லூட்டி அடிக்கிறார்கள் என்று” என்ற ரத்னா வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

லட்சுமியும் மெதுவாக  அவர்கள் அறையில் எட்டிப் பார்த்தாள்.

ஜவஹர் நான்கு  கால்களால் முட்டிப் போட்டு ஒரு கையைத் தூக்கி  யானை போலவே பிளிறிக் கொண்டிருந்தார். கோபி அவர் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டு, “ஏ யானை ! நான் யார் தெரியுமா? நான் தான் மாமல்லன் !! எனக்கு இந்த சிற்பங்களை நன்றாக சுத்திக் காட்டு” என்று ஆணையிட்டுக் கொண்டிருந்தான்.

லட்சுமி ரத்னாதேவியிடம் திரும்பி வந்து, “வர வர கோபி ரொம்ப வாலாகி விட்டான். ஒரு ஐ.ஏ.எஸ். ஆபிசர் அவனுக்கு யானையாகி விட்டார்” என்று சொல்லி சிரித்தாள்.

“குழந்தைக்குப் போய் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் எல்லாம் தெரியுமா? அவனுக்குத் தெரிந்ததெல்லாம் தாத்தா பாட்டி தான். கோபிக்கு மகாபலிபுரம் போக வேண்டுமாம். மாமல்லரைப் பற்றியும், பல்லவ நாட்டைப் பற்றியும் ஆயிரம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் நாளை ஒரு நாள் உங்கள் பயணத்தைத் தள்ளிப் போடுங்களேன்” ரத்னா.

ஸ்ரீதர் அங்கிருந்தே முரளிக்கும், ராகவனுக்கும் திருமணம் சீக்கிரம் முடிக்க  பல ஆணைகள் பிறப்பித்தார். ஜவஹர் தன்னுடைய பெரிய காருடன் இன்னொரு வாடகைக் காரையும் எடுத்துக் கொண்டார். வாடகைக் காரில் உள்ள ‘டிக்’ கியில் வரிசையாக நிறைய ‘ஹாட் பாக்’குகளை அடுக்கினாள் ரத்னா.

தரையில் விரித்து உட்கார இரண்டு பெரிய ஜமக்காளங்களும், நிறைய  ‘டிஸ்போசபிள்’ டம்ளர்களும், தட்டுகளும் எடுத்துக் கொண்டாள் . கூடவே குப்பை போடும் பிளாஸ்டிக் பைகளும் எடுத்துக் கொண்டாள்.

காலை ஆறு மணிக்கே எல்லோரும் வீட்டிலிருந்து  கிளம்பினர்.

“இவ்வளவு ‘ ஹாட் பேக்’ எதற்கு ஆன்ட்டி?” என்றாள் மஞ்சுளா.

“காலை எட்டு மணி போல்’ பிரேக்பாஸ்ட்’ சாப்பிட இட்லியும், இடியாப்பமும் குருமாவும், சட்னியும். மதியம் லஞ்ச்சிற்கு கொஞ்சம் லெமன் சாதம், மஷ்ரூம் பிரியாணி, தயிர் சாதம் என்று கட்டி வைத்துள்ளேன். புளிக்காத மோரும், கொஞ்சம் லெமன் ரசமும் எடுத்துக் கொண்டேன். வாடகைக் கார் டிரைவர் உட்பட யாரும் எந்த ஹோட்டலுக்கும் போக வேண்டாம்” என்றார் ரத்னா.

கோபி மகாபலிபுரத்தில் நிறைய ஓடினான். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜூனன் தவம், யானை போன்ற சிற்பங்களைக் கண்டும் ஆச்சர்யப்பட்டான். ஒரு குரங்கு குடும்பமே தாய் குரங்கு, குழந்தை குரங்குடன் செதுக்கப்பட்டிருந்தது. ஒரு குரங்கு, இன்னொரு குரங்கிற்கு பேன் பார்ப்பது போல் இருந்த சிற்பத்தைக் கண்டு கை கொட்டி சிரித்தான்.

கிருஷ்ணனின் வெண்ணைப் பந்து என்னும் ஒரு பெரிய கற்பாறை  ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக விழுந்து விடுவது போல் பயமுறுத்திக் கொண்டு ஓர் ஓரத்தில் நிற்பதும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

“இதற்கு முன்பு நான் பலமுறை இங்கு வந்திருக்கிறேன். இவ்வளவு விரிவாகப் பல கதைகளுடன் நான் பார்த்ததில்லை” என்றான் நந்தகோபால் ஆச்சர்யத்துடன்.

“ஆமாம் நானுந்தான். குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியை போல் நாமும் எல்லாவற்றையும் ரசித்து, உணர்ந்து பார்க்கிறோம். குழந்தைகளுக்கு விளக்கிச் சொல்லும் போது தான் நமக்கே எந்த அளவிற்குத் தெரியும் என்று புரிகின்றது” என்று உற்சாகமாகப் பேசிச் சிரித்தாள் மஞ்சுளா.

சிரிக்கும் போது வெள்ளை வெளேரென்று முல்லைப் பூ போல் வரிசையாக அமைந்த அவள் பற்களின் அழகில் சொக்கி நின்றான் நந்தகோபால்.

அன்று இரவு வீடு  திரும்பவே இரவு மணி எட்டாகியது. காரில் திரும்பும் போதே யாவரும் சாப்பிடப் போவதில்லை என்று பேசிக் கொண்டு வந்தனர்.

ஸ்ரீதருக்கும், ஜவஹருக்கும் சர்க்கரை நோய்.  இரவு சாப்பாட்டால் தான் மருந்து, மாத்திரை போட முடியும்! அது லட்சுமிக்கும் தெரியும், மஞ்சுளா விற்கும் தெரியும். ஆனால் வயதின் காரணமாக லட்சுமியும் மிகவும் களைப்பாக இருந்தார். அவரே ஆளை விட்டால் போதும் என்று போய் படுத்துக் கொண்டார்.

ரத்னா தேவியின் நிலமையும் அதுவே! அதுவுமல்லாமல் அவள் கண்கள் அடிக்கடி கலங்கியதையும் மஞ்சுளா கவனித்தாள்.

வீட்டிற்கு திரும்பியவுடன், மஞ்சுளா தன் உடைகளை மாற்றிக் கொண்டு, அலுப்பு தீர குளித்து விட்டு, சாதத்தில்  கெட்டித் தயிரும்  கொஞ்சம் உப்பு, பெருங்காயம் போட்டு, இஞ்சியும், சீரகமும் கூடப் போட்டு, மிக்ஸயில் நன்றாகக் கலந்து நீராகாரம் போல் செய்து எல்லோருக்கும் எடுத்து வந்தாள். பிறகு மருந்து, மாத்திரைகளும் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தாள்.

ரத்னா தேவிக்கும் ஒரு டம்ளர் நீராகாரம் எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்றாள். ரத்னாதேவி ஒரு ஆல்பத்தில் உள்ள ஒரு போட்டோவையே உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஆன்ட்டி” என்று கூப்பிட்டாள் மஞ்சுளா. நிமிர்ந்த ரத்னா தேவியின் கண்கள் கலங்கியிருந்தன.

“ஏன் ஆன்ட்டி, உங்கள் கண்கள் கலங்கியிருக்கின்றன? போட்டோவில் யாரைப் பார்த்து இப்படி அழுதீர்கள் ? நானும் அந்தப் போட்டோவைப் பார்க்கலாமா?”

“தாராளமாகப் பார்க்கலாம். இவள் என் மகள் . எங்கள் விருப்பத்தை மீறி ஒரு அமெரிக்கனைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கி விட்டாள்” என்றவள் நீண்ட பெருமூச்சு விட்டாள்.

போட்டோவைப் பார்த்த மஞ்சுளாவின் கண்கள் ஆச்சர்யத்தில்  அகல விரிந்தன.

“இவள் நிவேதா ! என் நெருங்கிய தோழி. என் கல்லூரியில் என் கூட வேலை செய்யும் பேராசிரியை” என்றாள் அந்த போட்டோவைப் பார்த்து வெகுவாக ரசித்தபடி.

“என் மகளை உனக்குத் தெரியுமா மஞ்சு? சமீபத்தில் அவளைப் பார்த்திருக்கிறாயா?” என்று ஆவலுடன் கேட்டாள் ரத்னாதேவி.

“நிவேதாவும் இன்னொரு தோழியும் தான் என்னை ஸான்பிரான்ஸிஸகோ ஏர்போர்ட்டில் வழியனுப்பினர். அதுமட்டுமில்லை ஆன்ட்டி ! நிவேதாவின் மகன் நிஷாந்த் நம் கோபியின் நல்ல நண்பன். உங்கள் பேத்தி  சம்யுக்தா கொள்ளை அழகு ஆன்ட்டி. அச்சு அசல் உங்களைப் போலவே இருக்கிறாள் ஆன்ட்டி” என்றாள் மஞ்சுளா மிகவும் உற்சாகமாக.

ரத்னா தேவி கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மஞ்சு மேலும் தொடர்ந்தாள். “எனக்கு ஒரு ஆச்சர்யம் ஆன்ட்டி! அங்கிள் ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசர், நீங்களும் அறிவியலில் டாக்ட்ரேட். இவ்வளவு பெரிய படிப்பு படித்திருந்தும் நீங்கள் எப்படி நிவேதாவின் காதலை மறுத்தீர்கள்?”

“எங்களுக்கு காதல் மேலோ, நிவேதாவின் மேலோ எந்த வெறுப்பும் இல்லை. அவள் திருமணத்தின் போது என் மாமனார், மாமியார் இருவரும் எங்களோடு தான்  இருந்தார்கள். ஒரு அமெரிக்கனைத் திருமணம் செய்து கொண்ட அவள் இங்கு  வந்தால் நாங்கள் காசி, ராமேஸ்வரம் என்று எங்காவது போய்விடுவோம் என்று பயமுறுத்தினார்கள். அவள் திருமணம் முடித்து  ஐந்து வருடங்களில் இருவரும் ஒருவர் பின் ஒருவராக காலமாகி விட்டனர். அந்த இடைப்பட்ட காலத்தில்  எங்கள் மகளும் மனத்தளவில் எங்களிடமிருந்து வெகு தூரம் போய் விட்டாள். எங்கிருந்தாலும் அவள் தன் குழந்தைகளோடு சந்தோஷமாக இருந்தால் சரி என்று நாங்களும் அமைதியாகி விட்டோம். அவள் நினைவு வரும்போதெல்லாம் இந்த நிழற்படம் தான்  துணை” என்று நீண்ட பெருமூச்சு விட்டாள்.

“ஆன்ட்டி, இப்போது நிவேதா அவள் வீட்டில் இருப்பாள். நான் போன் செய்து தருகிறேன், பேசுகிறீர்களா?”

“என் மகள் என்னோடு பேசுவாளா? என்னை வெறுக்க மாட்டாளா?” என்று  குழந்தை போல் கண்களில் நீர் வழியக் கேட்டாள் ரத்னா.

“நீங்கள் எப்படி  உங்கள் மகள் மேல் ஆசை வைத்திருக்கிறீர்களோ, அதே போல் தான் உங்கள் மகள் நிவேதா அடிக்கடி உங்களைப் பற்றி நிறைய பேசுவாள்” என்ற மஞ்சுளா, தன் செல்போனில் வாடஸ்அப்பில் நிவேதாவை அழைத்தாள்.

“நிவேதா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்! நான் சென்னையில் உனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டப் போகிறேன். என்னவென்று சொல் பார்க்கலாம் !” என்றாள் மஞ்சு உற்சாகமாக.

“நீ இப்ப சென்னையில் இருக்கிறாயா? ஏன்?  என்ன அதிசயம்? உனக்கு சாஹித்ய அகாடமி  அவார்ட்  கிடைத்திருக்கிறதே, அதைக் காட்டப் போகிறாயா?” நிவேதா.

“அதெல்லாம் ஜுஜுபி! இந்த அவார்ட் ரொம்ப ரொம்ப விலைமதிப்பில்லாதது. இந்த அவார்ட்  உன்னை உலகிற்குத் தந்தது . தன் உயிரை விட உன்னை அதிகமாக விரும்புவது. உன் அம்மா தான் அந்த அதிசயமான அவார்ட். நீ உடனே வீடியோ காலில் வா. கண்ணீரோடு என் அருகில் காத்திருக்கும் உன் அம்மாவோடு பேசு” என்றாள் மஞ்சுளா போனை ரத்னாவிடம் கொடுத்து.

நிவேதா வீடியோவில் தன் தாயைப் பார்த்தாள். ரத்னாதேவி கண்கள் விரிய தன் மகளை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். இருவரும் கண்களில் நீர் வழியப் பேசத் தொடங்கினர். அந்த நேரத்தில்  அங்கு வந்த ஜவஹரும், மகளிடம்  மன்னிப்பு கேட்டு, இந்த வயதான காலத்தில் தங்களை வந்து பார்க்கும்படி வேண்டினார்.

போனில் அவர்கள் பேரன் நிஷாந்தை தாத்தா பாட்டி இருவரும் கொஞ்சி மகிழ்ந்தனர். பிரிந்த தங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்த தெய்வம் என்று மஞ்சுளாவைக் கொண்டாடியது ஜவஹர் குடும்பம். ஸ்ரீதரும் லட்சுமியும் தங்கள் மருமகளைப்  பெருமையுடன் போற்றினர்.

“மஞ்சுவின் குணமே அப்படித்தான் ஆன்ட்டி. நான் தான் அவளைச் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை” என்றான் நந்தகோபால்.

அடுத்த நாள் காலையிலேயே  நந்தகோபால் குடும்பம் கும்பகோணம் கிளம்பியது.

நந்தகோபால் மஞ்சுளாவுடன் ஒன்றாக அமெரிக்கா திரும்புவதற்கு டிக்கெட்டும் போட்டாகி விட்டது. இதனால் இரு குடும்பத்தாருக்கும் மிக்க மகிழ்ச்சி. ராகவனும் சாரதாவும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

“அப்படியெல்லாம் ஒரேயடியாக நிம்மதிப் பெருமூச்சு விடாதீர்கள் ராகவன். நாம் சீக்கிரம் முரளிக்கும், ஜானகிக்கும் திருமணம் முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் முரளி சொன்னபடி அவர்கள் திருமணம் சென்னை இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் தான்”  என்று ஸ்ரீதர் ராகவனை கலாட்டா செய்தார்.

“எல்லா ஏற்பாடுகளும் புரோக்கர்கள் மூலம் முடிந்து விட்டன. ஆனால் திருமண மண்டபம் தான் கிடைக்கவில்லை. அதற்குத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை” என்றார் ராகவன் கவலையுடன்.

“அதெல்லாம் ஒன்றும் பிரச்சினையில்லை அங்கிள். ஒரு கோயிலில் திருமணம் எளிய முறையில் நடத்தி ரெஜிஸ்டரும் செய்து விடலாம். அன்று மாலை ஒரு ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பு கிராண்டாக ஏற்பாடு செய்து விடலாம். முதியோர் இல்லத்திலும், குழந்தைகள் காப்பகத்திலும் அன்று முழுவதும் சாப்பாட்டுப் பொறுப்பை நாம் ஏற்றுக் கொள்ளலாம்” என்றான் முரளி.

“ஆம், இந்த ஏற்பாடு நன்றாகவே இருக்கிறது. நாம் எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவும், நல்ல முறையிலும் திருமணம் நடக்கும்” என்றார் ஸ்ரீதர்.

மண்டபம் தான் கிடைக்கவில்லையே தவிர, தெய்வ சந்நிதானத்தில் சுற்றமும் நட்பும் புடை சூழ முரளி ஜானகி திருமணம் சிறப்பாக முடிந்தது. பெரிய நட்சத்திர ஓட்டலில் ‍ திருமண விருந்தும் இனிதாக முடிந்தது.

மஞ்சுளாவும் நந்தகோபாலும் தங்கள் மகன் கோபியுடன் அமெரிக்கா செல்லத் தயாராகி விட்டனர். மஞ்சுளா தன் தோழிகளுக்கு சில பரிசுகளும், பட்டுப் புடவைகளும் வாங்கிக் கொண்டாள்.

முரளியின் திருமணத்திற்கு வந்திருந்த ஜவஹரும், ரத்னாதேவியும் தங்கள் மகளுக்கும், பேரக் குழந்தைகளுக்கும், அமெரிக்க மாப்பிள்ளைக்கும் நிறைய  பரிசுகள்  கொடுத்தனுப்பினர்.

முதன் முதலில் மஞ்சு அமெரிக்கா போகும்போது கனத்த இதயத்துடனும், கையில் பிள்ளையுடனும் வாவாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமலும் போனாள். மனோதைரியம் மட்டும் தான் இருந்தது.

ஆனால் இப்போது கணவன் துணையுடன், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் ஸான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் கால் பதித்தாள் மஞ்சுளா.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

One thought on “வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 14) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!