sahanamag.com
தொடர்கதைகள்

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 8) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

சிதம்பர ரகசியம்

பேருந்து சரலென்று நிற்கவும், கிருஷ்ணன் கொஞ்சம் விழிப்படைந்தான்.

“அங்கு தான் பெரும்பாலும் டிரைவரும் கண்டக்டரும் சாப்பிட்டு, கேனில் தண்ணீரை ரொப்பி கொள்வார்கள்” என்று மாமா சொன்னது அவனுக்கு நியாபகம் வந்தது. 

பேருந்திலிருந்து ஒரு சில தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பால் வாங்கி வந்தனர். வாட்டர் பாட்டிலில் இத்தனை ரகம் இருப்பதைக் கிருஷ்ணன் அன்று தான் பார்க்கிறான். மாமா கொடுத்த பையைக் கையில் சுற்றிக் கொண்டு, உடலையும் ஒரு பக்கம் சுருட்டிக் கொண்டு, இருக்கையில் உட்கார்ந்திருக்கிறான் அவன்.

டிரைவரும் கண்டக்டரும் வந்தார்கள். கிருஷ்ணன் டிரைவரிடம் கேட்டான். “அண்ணே.. நா ஊருக்கு புதுசு.. கொஞ்சம் இந்த அட்ரெஸ் சொல்லுங்களேன்..” என்று விலாசத்தை நீட்டினான்.

டிரைவர் அதை வாங்கிப் படித்து விட்டு, “பஸ்சு ஸ்டாண்டில நிக்கும். அங்கிருந்து ஆட்டோ பிடிச்சி போயிருலாம் இந்த இடத்துக்கு..! பஸ் ஸ்டாண்ட் வெளிய ஆட்டோக்கார இருப்பான்” என்று அவர் சொன்னது, அந்த வெயிலிலும் கிருஷ்ணனுக்குக் குளுமையை அளித்தது. 

வண்டி பண்ரூட்டியிலிருந்து புறப்பட்டது. கிருஷ்ணன் அயர்ந்து தூங்கி விட்டான்.

சிதம்பரத்தில் பேருந்து நின்றவுடன் டிரைவரே அவனை எழுப்பி, “சூதனாமா இருய்யா.. எம்மவன பாக்குறாப்பல இருக்கு உன்ன பாக்க..” என்று வாஞ்சையோடு விடைப்பெற்றார்.

கிருஷ்ணன் அவன் பேச்சிலேயே சிதம்பரத்தைப் பற்றிப் புரிந்து கொண்டான். “பா.. எத்தனை பரிவும் மரியாதையும்..” என்று வியந்து போனான்.

மெல்ல கீழிறங்கி ஆட்டோவை அழைத்தான். விலாசத்தைச் சொல்லி காசை நீட்டியவுடன் ஆட்டோ பறந்தது. சந்து பொந்து எல்லாம் பூந்து, ஆட்டோ விலாசம் வந்தடைந்தது.

அந்த இடத்தில் இறங்கி, அண்ணார்ந்து பார்த்தான். “காதி கிராஃப்ட், சிதம்பரம் சர்வோதய சங்கம், தெற்கு ரத வீதி..” என்று படித்து முடிப்பதற்குள் ஆட்டோ கிளம்பி விட்டது. 

கிருஷ்ணன் உள்ளே சென்றான். ஆர்டரைக் கையில் எடுத்து ரெடியாக வைத்துக் கொண்டான். உள்ளே நுழையும் போது அவன் மீது வேர்வை வாடை அடித்தது. ஆனால், அதற்கும் மேல் கடையில் சந்தன மணம் வீசியது.

முகர்ந்து கொண்டே அங்கிருந்த ஒருவரிடம், “ஐயா.. புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கே.. மாமா சொல்லி அமிச்சாரு..” என்று ஆர்டரை நீட்டிவிட்டு வெகு பலமாக யோசித்தான்.

வேஷ்டி செக்ஷனில் இருந்த வடிவேலு ஆர்டரைப் பார்த்துவிட்டு, “வாப்பா என்னோட..! நா கூட்டிட்டுப் போறேன்” என்று மாடிக்கு அழைத்துச் சென்றான்.

போகும் போது வடிவேலு கிருஷ்ணனிடம், “என்னய்யா.. இவளோ தீவிரமா யோசன.?” என்று தானே பேச்சைத் தொடங்கினான். 

அதற்குக் கிருஷ்ணன், “ஒன்னுலிங்க.. இந்தக் கட என்ன கட…? ஏதும் கேக்கமாயே நா பாட்டுக்கு மாமா சொன்னாருன்னு பஸ் புடிச்சி வன்டேன்..” என்று இழுத்தான்.

வடிவேலு சிரித்துவிட்டு, “ஏம்பா.. இதுக்கா இவளோ யோசன. சர்வோதயாங்குறது மகாத்மா காந்தி ஸ்தாபனம் பன்னது. சொந்த நாட்டு மக்கள் சொந்தப் பொருட்களை வாங்கணும்ங்குற காரணத்துக்காக உருவாக்குனது. மளிககடை, துணி கடை மாறிலாம், இங்க பத்து மணிக்கு வர முடியாது. காலைல 8க்கு பிரேயர் உண்டு. காந்தி படம் முன்னாடி, ‘ரகுபதி ராகவ ராஜா ராம்’னு பாட்டு பாடனும். இங்க பட்டு, பொம்ம, சாப்பாடு, கம்பளி, சோப்புன்னு எல்லா செக்ஷனு உண்டு. முக்கியமா இங்க வேலை செய்றவன், கதர் வேட்டி கதர் சட்ட தான் போடனு..! உனக்கும் ஆபீஸ்ல ஒரு செட் ட்ரெஸ் உண்டு” என்று தனது நெடிய விளக்கத்தை முடிக்கவும், மாடி வந்து விட்டது.  

வெயிலிலும் அந்த இடம் ஜில்லென்று இருந்தது. அங்கு, போளி, சமோசா செய்யும் வாசம் கிருஷ்ணனை இழுத்துக் கொண்டது. வடிவேலு அவன் பசியை உணர்ந்து, “இந்தா.. நம்ம கடைது தா சாப்பிடு” என்று சொல்லியவாறு, ரெண்டு சமோசாவை நீட்டினான்.

அவனும் அதை ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டே வடிவேலுவைப் பின் தொடர்ந்தான்.

சமோசா காலியான உடன் வடிவேலு சிரித்துக் கொண்டே சொன்னான். “சம்பளம் வாங்குனதும்… பைசல் பண்ணிடு” என்று.

கிருஷ்ணனுக்கு முழுங்கிய சமோசா, தொண்டைக்குள் அடைத்தது. ஒரு அறை முன் நின்ற வடிவேலு, “நல்லா வாய தொடச்சிக்கோ… மேலாளர் ரொம்ப கரார் பேர் வழி” என்று வாஞ்சையோடு சொன்னான்.

இருவரும் உள்ளே சென்றார்கள். வடிவேலு பணிவுடன் அந்த ஆர்டரை மேலாளரிடம் கொடுத்தான். மேலாளர் கிருஷ்ணனை ஏற இறங்கப் பார்த்தார்.

“பத்தாவது தா படிச்சிருக்கியா..?” என்று கேட்டார். அவனுக்கு அப்போது மாமா சொன்னது விருட்டென்று நியாபகம் வந்தது. “ஆமா.. ஆமா…ங்கய்யா..” என்று அழுத்திச் சொன்னான்.

மேலாளர் தனது சிவப்புப்பந்து கண்களை உருட்டி, “நல்லது… போய் குளிச்சிட்டு இனிக்கு ரெஸ்டு எடுத்துக்கோ, நாளைலேர்ந்து வேலைக்கு வரலாம். இங்கேயே சங்கத்துல தங்க வெச்சிக்க சொல்லி மாமா எழுதிருக்காரு.. இங்கேயே தங்கிக்கோ..” என்று முடித்ததும், வடிவேலுவிடம் திரும்பி, “ரூமை காட்டிடுறா..” என்று சொன்னார்.

வடிவேலு சிட்டாகப் புறப்பட்டான். கிருஷ்ணன் அறையை விட்டு வெளியேறும் முன், தன் ஆழமான பார்வையை, மேலாளரின் மேல் செலுத்தினான். அந்தப் பார்வைக்கான அர்த்தம் அவருக்கு எந்த லிப்கோவிலும் கிடைக்காது என்பது போல் தோன்றியது…

‘சர்வோதயா’ – இன்றும் சிதம்பரம் சென்றால் நீங்கள் பார்க்கலாம். தெற்கு வீதியில் பிரபலான கடை இது. சிதம்பரம் அமபலத்தானைத் தரிசிக்க சென்றால், நிச்சயம் அங்கு சென்று வாருங்கள். தரமான கதர் வேஷ்டி, பட்டு புடவைகள், வாசனை திரவியங்கள் கிடைக்கும். மேலும், அந்தக் கடையில் விற்கப்படும் கீரை வடையும், இஞ்சி சுக்கு மல்லி தேனீரும் இன்றளவும் பிரசித்தி பெற்றது.

சிதம்பரம் – லட்சுமி வீடு..! 

லட்சுமி பதறிப்போய் பெரிய அண்ணனுக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்.

“அண்ணா..! தம்பி எங்க போயிட்டா..? அம்மா வையுமே..? அந்த சோபா கீழ தா ஒளிஞ்சான்.. நா பாத்தேனே” என்று பயத்துடன் சொன்னாள்.

அவள் சொன்ன இடத்திற்குப் போய்ப் பார்த்தாயிற்று. தம்பி அங்கில்லை. மூவரும் அம்மாவிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்கள்.

அம்மா புனிதவதி, மூவரையும் வைதுகொண்டே, “எம் புள்ள எங்க போனானோ..? வைத்தி…வைத்தி.! வெளியே வாடா.. அக்கா அண்ணன்லாம் விளையாட்டுல தோத்துட்டாங்க.. வெளிய வாசாமி..” என்று அழுதாள். வீடு முழுக்க தேடியாயிற்று. அவன் கிடைக்கவில்லை. 

புனிதவதி நொந்து போய் ஒரு மேஜை மீது அமர்ந்தாள். அவள் தான் அந்த வீட்டிற்கு ஒரே ஆறுதல். கணவன் கோவிந்தன் நூலுருண்டை சுற்றி, கடைக்குச் சென்று விற்று வருவார். அந்த வருமானம் எங்கியிருந்து குடும்பத்தைக் காப்பாற்றும்?

புனிதவதி எம்.ஏ. தமிழ் படித்திருக்கிறாள். முதலில் பிரேவேட்டில் அடிபட்டு உதைப்பட்டு, பின்பு வீட்டின் அருகிலேயே இருக்கிற பள்ளியில் கவர்மெண்ட் வேலையை, காசு கொடுத்து வாங்கிக் கொண்டாள். ஒத்த மனுஷி தான் வீட்டு வேலைகளையும் கவனித்துக் கொண்டு, வெளி வேலைகளையும் பார்த்து, அலைந்து திரிவாள். இப்படி குடும்பத்திற்கே தூணாய் இருக்கும் புனிதவதி, மகன் தொலைந்ததை நினைத்து, துரும்பாய் சரிந்து மேசையில் உட்கார்ந்தாள்.

ர்வோதயா..!

வடிவேலு அறையைக் காண்பித்தார். கிருஷ்ணனுக்கு அறை மிகவும் பிடித்திருந்தது. வடிவேலு சொன்னார். “இங்கே தான் நானு இருக்கே.. எ ஊரு திருக்கோவிலூர்.. இன்னு ஒரு பைய.. அவ பேரு ராமலிங்கம். செகரெட்ரி ரொம்ப தொலைவுல வேலை குடுத்துட்டா இங்க தங்கிக்கிருவான்… அப்ரோ ஒரு வயசானவரு.. அவரு பேரு வேம்பு.. நல்ல மனுஷன்..” என்று சொல்லியவுடன் கிருஷ்ணன், “என்னது.. நாலு பேருக்கு ஒரு ரூமா..?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

வெளிஉலகம் தெரியாமல் வளர்ந்த இவனுக்கு இது ஆச்சரியம் தான். “ஆமாம்” என்ற ஆமோதிப்பு வந்தவுடன் கிருஷ்ணன் சோர்வுடன் குளிக்கச் சென்றான்.

“நா வெளிய பூட்டிட்டு கிளம்பறேன் யா.. மணி 4.00 ஆவுது.. குளிச்சிட்டு இரு.. வேம்பு வந்தா.. நடராஜர் கோயில்கு கூட்டினு போவார்” என்று கதவை வெளிப்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டு கிளம்பினான் வடிவேலு.

செக்ஷனில் இவ்வளவு நேரம் இல்லை என்று வடிவேலுவுக்குத் திட்டு விழுந்தது. அதைப்பற்றி அவன் லட்சியம் ஏதும் செய்யவில்லை. பதிலுக்குப் பக்கத்திலிருப்பவனிடம், “நமக்கு விடிவுகாலம் வரப்போவுது.. புதுசா வந்திருக்கிற கிருஷ்ணங்கிற பையன மனசுல வெச்சிதான் சொல்றே” என்று அவ்வளவு உறுதிபடச் சொன்னான்.

“அது எப்டி அவ்ளோ கரெக்டா சொல்ற?” என்று மற்றொருவன் கேட்டான்.

அதற்கு வடிவேலு, “அந்த கிருஷ்ணம் பைய.. நம்ம செகரெட்ரி மீசக்காரன்’கிட்ட பத்தாங் கிலாஸ்ன்னு பொய் சொல்லிட்டான். ஆனா அவனோட  பேக்ல நிறைய கணக்கு புத்தகங்க இருந்தத நானே பாத்தேன்.. மீசக்காரன் கேட்டதும் அவனுக்கு சட்டுன்னு பொய் சொல்லவே வரல.. நடுங்கிட்டான்..” என்று விரிவாய் சொன்னான். மேலும் அவன், “உண்மையாலுமே படிச்சவனா இருந்தா அவனே சும்மா இருந்தாலு, அவ சுபாவமே அதே வெளிக்காட்டிரும்.. சும்மாவா சொன்னாங்க..? தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு..!” என்று பேச்சை முடித்தான். 

அங்கே அறைக்கு வேம்பு வந்தார். குளித்து முடித்திருந்த கிருஷ்ணனிடம், “வா..பா கோயில்கு போயிட்டு வருவோம்..” என்று கூப்பிட்டார். அவனும் எழுந்து அவருடன் சென்றான்.

தெற்கு வீதியில் தான் கடை இருக்கிறது. அதை ஒட்டிய தெற்கு வாசல் கோபுரத்திற்கு கிருஷ்ணனும் வேம்புவும் சென்றார்கள். கோபுரத்தைப் பார்த்து கும்பிடு போட்டுவிட்டு, வேம்பு உள்ளே சென்றார்.

கிருஷ்ணன் அங்கிருந்த கடைகளை எல்லாம் பார்த்துக் கொண்டு மெதுவாக உள்ளே சென்றான். அவன் மனதில் அமைதி பரவத் தொடங்கியது. ஊரிலும் தான், மாலை ஆகிவிட்டதல்லவா? 

இருவரும் சன்னதி சன்னதியாக சென்று இறைவனை வழிப்பட்டுவிட்டு, மடப்பள்ளியில் பிரசாதம் வாங்கிக் கொண்டு,  பிரகாரத்தில் அமர்ந்தார்கள்.

கிருஷ்ணன் தன் பார்வையைச் சுழற்றி, “அய்யா.. இவளோ பெரிய பிரஹாரத்த நா பாத்ததே கிடையாது..” என்று பெரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

வேம்பு சிரித்துக் கொண்டே, “காசில இறந்தா தான் முக்தி இல்லையா? ஆனா இந்தக் கோவில்ல தரிசனம் பண்ணாலே முக்தி தா..! உன்னோட ஆர்டர் பாத்தேன்.  ரொம்ப தூரத்துலேர்ந்து வந்திருக்க போலயே.. தில்லை அம்பலத்தான் தா இங்க உன்ன கூப்பிடிருக்கான்..” என்று சொல்ல,

கிருஷ்ணனும் கொஞ்சம் நிம்மதிபட்டுக் கொண்டு, “இந்தக் கோயிலை பத்தி உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்களேன்..! சிதம்பரம்னாவே ரகசியம்னு சொல்வாங்களே..! அத நீங்க பாத்தது உண்டா?” என்று முதல் கொக்கியைப் போட்டான்.

இந்தக் கேள்வியில், கிருஷ்ணனைக் கண்ணாலே அளந்த வேம்பு, “ஹ்ம்ம்.. பேரு கிருஷ்ணன் தானே..! எனக்கு தெரிஞ்சத சொல்றேன்..! இந்தக் கோயிலை பதஞ்சலி முனிவர் பிரதிஷ்டை செய்ததா சொல்வாங்க. இந்தக் கோவில்ல இருக்குற வெளி பிரஹாரங்கள்லாம் எந்தக் காலம்னு ஆய்வாளர்கள் கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா உள் பாகத்துல இருக்கிற சில கற்கள்லாம் 3500 வருஷ பழமையானது இருக்குமோ அதிசயிக்கிறாங்க. நம்ம ஜனங்க ரகசியம்னா உடனே தங்கப் புதையலோ, பணமோ, பேய், பொறவு பூதமோன்னு கற்பனை பண்ணிக்குதுங்க.

மனுஷ வாழுற பூமியில என்ன பொருத்த வரிக்கு இந்தக் கோயில்களே ஒரு அதிசயம் தான். நம்ம இப்போ டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப் வெச்சி கண்ண உருட்டி உருட்டி பாக்கிறோம். ஆனா அந்தக் காலத்துல எப்டி இதெல்லாம் பாத்தான்னே தெரில..! வானியல் தெரிஞ்சிட்டு இருந்திருக்காங்க நம்ம முன்னோர்கள்…! அதுக்கு ரொம்ப சிறிய உதாரணம் ஒன்னு சொல்றேன். நம்ம  ஸ்கூல் புக்ல படிக்குற ப்லானட்ஸ்ங்கிறத.. கோயில்ல நவக்கிரகமா வழிபட்டு இருக்காங்களே..! இந்தக் கோயில் பேரு தான் சிதம்பரம். ஊர்ப்பேர் இல்ல. அதாவது “சித்”னா அறிவு, “அம்பரம்”னா ஆகாசம்..! பெறகு, அதுவே ஊருக்குப் பேராயிடுச்சு..” என்று தன் நீண்ட நெடிய விளக்கத்தை முடித்தார்.

கிருஷ்ணனின் புருவ வில்லும், அவர் சொன்னதில் ஆச்சரியவில்லை வரையத் தொடங்கியிருந்தது…

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!