in

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 15) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

வீணையடி நீ எனக்கு ❤ (பகுதி 15)

ஜூன் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த தொடரின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முதன் முதலில் மஞ்சு அமெரிக்கா போகும்போது கனத்த இதயத்துடனும், கையில் பிள்ளையுடனும் வாவாழ்க்கையில் ஒரு பிடிப்பில்லாமலும் போனாள். மனோதைரியம் மட்டும் தான் இருந்தது.

ஆனால் இப்போது கணவன் துணையுடன், மனமெல்லாம் மகிழ்ச்சியுடன் ஸான்பிரான்ஸிஸ்கோ ஏர்போர்ட்டில் கால் பதித்தாள் மஞ்சுளா.

ஏர்போர்ட்டிற்கு நிவேதா, தன் மொத்த குடும்பத்துடன் பெரிய காரில் வந்திருந்தாள். இவர்களை வீட்டில் இறக்கி விட்டு, நிவேதா காரை விட்டு இறங்கி மஞ்சுளாவின் அருகில் வந்து அவள் கைகளைப் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள். அவள் கண்களின் இமைகளில் கோத்து நின்ற கண்ணீர் முத்துக்கள் மஞ்சுளாவின் கைகளில்.

 “ஏய், என்ன இது ?” என்றாள் மஞ்சுளா அதட்டும் குரலில்

“மனதில் பொங்கி வழியும் சந்தோஷமும் நன்றியும் மழைச் சாரலாய் அடிக்கிறது” என்றவள் சிரித்துக் கொண்டே கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“மஞ்சு! நீ சமைக்கவோ அல்லது ஹோட்டலில் ஏதும் ஆர்டரோ செய்ய வேண்டாம். நான் மதியத்திற்கும் இரவிற்கும் சேர்த்து சாப்பாடு செய்து எடுத்து வருகிறேன். நீங்கள் குளித்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவேன்” என்று கூறி விடை பெற்றுச் சென்றாள்.

கோபி, தன் அறைக்கு ஓடி தன் புத்தகங்கள், தன் பிராஜெக்ட் வொர்க் என்று  தன் பெரிய சொத்துக்களைப் பரிசோதித்துக் கொண்டிருந்தான். நந்தகோபால் அமைதியாக மஞ்சுளாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?” என்றாள் அவன் அருகில் வந்து. அவளை  இறுக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவன், “நீ என்ன சமாதான தேவதையா மஞ்சு? தறிகெட்டுப் போன என் வாழ்க்கையை நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தினாய்! நிவேதாவை அவள் பெற்றோருடன் சேர்த்து வைத்தாய்! நிவேதா தன் கண்ணீரால்  தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். என் நன்றியை நான் எப்படிக் காட்டுவேன் கண்ணம்மா?” என்றவன், அவள் நெற்றியில் புரண்ட சுருண்ட முடிகளைத் தள்ளி அவள் நெற்றயில் மீண்டும் தன் இதழ்களைப் பதித்தான்.

“நமக்குள் நன்றியெல்லாம் தேவையா?” என்றவள் முகம் சிவக்க நாணத்துடன். அவன் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டு உள்ளே போனாள்.

மஞ்சுளா, சமையல் அறையில் கொஞ்சம் வேலைகளையெல்லாம் முடித்து விட்டு, அழுக்கு பாத்திரங்களை ‘டிஷ் வாஷரில் ‘ போட்டு’ அந்த இடத்தை சுத்தமும் செய்து விட்டு தன் அறைக்கு வந்தாள்.

நந்தகோபால் வழக்கம் போல் தன் மகனை அணைத்துக் கொண்டு, லேசான குறட்டை சத்தத்துடன் தூங்கிக் கொண்டிருந்தான். போர்வையை மட்டும் கழுத்து  வரை போற்றி விட்டு ஒரு பெருமூச்சுடன் அறையை விட்டு வெளியேறினாள்.

அன்றுமட்டுமல்ல. சில நாட்களாக, சில வாரங்களாக அப்படியேதான் சென்றன. முதலில் மஞ்சு இதைப் பெரியதாக நினைக்கவில்லை. நாளடைவில் மனதில்  உறுத்தலாயிற்று.

‘நாளெல்லாம் அன்பைப் பொழிந்து, அவளுக்கு எல்லா வேலைகளிலும் துணை நின்று, பெற்ற தாயாய், தந்தையாய், உற்ற நண்பனாய், நல்ல காதலனாய், குறும்புதனங்கள் செய்பவன், இரவில் மட்டும் ந்த்தையாய் சுருண்டு, தன் மகனை அணைத்துக் கொண்டு அவளை ஒதுக்குவதேன்?’ என்ற கேள்வி அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.

ஒருவேளை  அவன் உடம்பில் ஏதாவது குறையோ? இல்லை மனதில் ஏதாவது அழுத்தமா? ஒருவேளை இவளைப் பிடிக்காமல் கோபிக்காக இவளுடன் வாழ்கிறானா? இல்லை அவனைப் பிரிந்து நான்காண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்ததற்காக பழி வாங்குகின்றானோ?”  என்று அவள் மனதில் பல எண்ணங்கள் ஓடின. அவன் அவளை ஒதுக்குகின்றான் என்ற எண்ணமே, அவள் உள்ளத்தையும் உடம்பையும் சீர் குலைத்தது.

ஒரு நாள் நந்தகோபால், “மஞ்சு, உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும்” என்றான் அவள்  அருகில் வந்து. மஞ்சுளா தன் மனதில் ஓடும் எண்ணங்களைப் பற்றித்தான் பேசப் போகிறான் என்று நினைத்தவள் மனம் படபடவென்று துடைத்தது.

‘என்ன?’ என்பது போல் பார்த்தாள். ஆனால் அவனோ, அவள் கைகளைப் பிடித்து இழுத்துச் சென்று அருகில் உள்ள சோபாவில் அமர வைத்தான்.

“மஞ்சுளா, எங்கள் குரூப்பில் உள்ள டாக்டர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய நிலம் வாங்கி, அதில் நீச்சல் குளம், டென்னிஸ் கோர்ட்டுடன் கூடிய தனித்தனிப் பெரிய பங்களா கட்டலாமென்று தீர்மானித்திருக்கிறார்கள். நான் உன் சம்மதம் கேட்டு பிறகு சொல்கிறேன் என்று கூறி விட்டேன். நீ என்ன சொல்கிறாய் மஞ்சு?” என்று கேட்டான்.

“இந்த வீடு தான் இருக்கின்றதே! இதே வங்கிக் கடனில் தான் இருக்கின்றது. புது வீடு வாங்கினால் அதுவும் வங்கிக் கடனா?”  மஞ்சுளா.

“இந்த வீட்டை யாராவது நல்ல குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டால், அந்த வாடகைப் பணத்திலேயே மாதாமாதம் வங்கிக் கடன் செலுத்தி விடலாம். நிலம் வாங்கி  நாமே பிளான் போட்டு கட்டும் வீடும் வங்கிக் கடனில் தான். ஆனால் அந்த வீடு நம் இருவர் பேரிலும் இருக்கும். என் சம்பளத்திலிருந்து வீட்டின் கடனிற்காக பணம் எடுக்கப்படும்” என்றான்.

“அவ்வளவு பெரிய ‘கமிட்மென்ட்’ தேவையா? ஆனால் உங்கள் விருப்பம் தான் என் விருப்பம்” என்று சொல்லிச் சிரித்தாள்  மஞ்சுளா.

     “அந்தக் காலத்தில் கும்பகோணத்தில் , பெரிய பங்களாக்கள் எல்லாவற்றிலும் ஒரு குளம் இருக்கும். என் தாத்தா அந்த குளத்தை இன்னும் கொஞ்சம் பெரியதாக்கி, சுற்றிலும் விளக்குகள் எல்லாம் பொருத்தி எனக்காக அழகான நீச்சல் குளமாக மாற்றினார். ஒரு டென்னிஸ் கோர்ட்டும் அமைத்தார்கள். இப்போது என் மகனுக்கு வீட்டிலேயே நீச்சல் குளமும், டென்னிஸ் கோர்ட்டும் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அது தப்பா மஞ்சு?” என்றான்.

“உங்கள் ஆசை நியாயமானதுதான்” என்றாள் மஞ்சுளா. ஆனால் அவள் மனதிற்குள், ’இரவு முழுவதும், உங்கள் மார்பில் முகம் புதைத்து உங்கள் கையணைப்பில் இருக்க வேண்டும்’ என்ற என் நியாயமான ஆசைகளைப் புரிந்து கொள்ள மாட்டீர்களா?’ என்று நினைத்து ஏக்கமாக அவனைப் பார்த்தாள்.

அவள் பார்வை அவனை உலுக்கியது.

“என்னடா கண்ணம்மா, அப்படிப் பார்க்கிறாய்?” என்று அவள் முகத்தைத் தன் இரு கைகளாலும் ஏந்தி நெற்றியில் முத்தமிட்டான்.

“ஒன்றுமில்லை” என்று தலையசைத்த மஞ்சு அவன் மார்பில் முகம் புதைத்தாள்.          எட்டு மாதங்களில் புது பங்களா வளர்ந்து முடிந்து விட்டது. ஆனால் மஞ்சுவின் இல்லற வாழ்வில் மட்டும் எந்தவித  மாற்றமும் இல்லை.

வீட்டிற்கு’ ஹௌஸ் வார்மிங்’ என்னும் புகுமனைப் புகுவிழா ஏற்பாடு செய்தனர். இந்தியாவிலிருந்து நந்தகோபாலின் பெற்றோரும், அவர்களுடன் நிவேதாவின் பெற்றோரும் கட்டாயப்படுத்தி வரவழைக்கப்பட்டனர்.

லட்சுமியும், ஸ்ரீதரும் மஞ்சுவைப் பார்த்து திகைத்தனர்.  ‘என்ன இந்தப் பெண்? இவ்வளவு பலஹீனமாக இருக்கிறாளே! உடம்பு ஏதும் சரியில்லியோ?”  என்று வருத்தப்பட்டனர்.

லட்சுமி மருத்துவத்துடன் மனோத்த்துவமும் தெரிந்தவள். ஆதலால் பேச்சுவாக்கில் கேள்விகள் கேட்டு  மகனும், மருமகளும் நல்ல நண்பர்களாக வாழ்கிறார்களே தவிர கணவன், மனைவியாக சந்தோஷமாக இல்லையென்று புரிந்து கொண்டாள். தன் டாக்டர் கணவரிடமும் அதைப் பகிர்ந்து கொண்டாள். அந்த ஏக்கம் தான் மஞ்சுளாவை மனதளவில் பாதித்திருக்கிறது என்றாள்.

ஸ்ரீதரும் மகனிடம் அதைப் பற்றிக் கேட்டறிந்தார். ஆனால் நந்தகோபால், சிந்துவுடன் ஏற்பட்ட தகாத உறவால் மஞ்சுவுடன் கணவனாக வாழ தான் தகுதியானவனா என்ற எண்ணம் மனதை அரிக்கின்றது என்று தயக்கத்துடன் கூறினான். அவமானத்தினால் அவன் முகம் சிவந்தது.

“உன் கடந்த கால வாழ்க்கை மோசமானதுதான். ஆனால் நீ செய்த தவறுக்கு தண்டனை மஞ்சுவிற்கா?” என்றார்.

அன்று இரவு விருந்திற்கு எல்லோரும் நிவேதா வீட்டிற்கு சென்றனர். அங்கு நிஷாந்த் மிகுந்த உற்சாகத்துடன் கோபியை தன் அறைக்கு அழைத்துச் சென்றான். கூடவே மற்றவர்களும் வீட்டிற்குள் சென்றனர்.

அப்போது கோபி , நிஷாந்திடம், “டேய் நிஷாந்த், உன் பெட்ரூமில் உன்னுடன் யார் இருப்பார்கள்? உன் மம்மியா? டாடியா ?” என்றான்.

“ஐயே ! நான் என்ன பேபியா? என் பெட்ரூமில் நான் மட்டும் தான்” என்றான் நிஷாந்த். கோபியின் முகம் இறுகியது.

வீடு திரும்பியதும் கோபி தன் தந்தையிடம், “டாடி! நிஷாந்த் அவன் பெட்ரூமில் தனியாகத்தான் தூங்குகின்றான். நானும் தான் ‘பிக் பாய’ ஆகிட்டேன், அதனால் இனிமேல் என் பெட்ரூமில் நான் மட்டும் தான்” என்றான்.

“என்னடா கோபி, திடீரென்று இப்படிச் சொன்னால்  நான் எங்கள் போய் படுப்பேன்?” என்றான் நந்தகோபால் திகைப்புடன்.

“நீங்கள் மம்மி பெட்ரூமில் படுங்கள். தாத்தாவும் பாட்டியும் தனி பெட்ரூமில் தானே படுக்கிறார்கள்” என்றவன், நந்தகோபாலின் தலையணைகளையும், போர்வையையும் மஞ்சுளாவின் கட்டில் மேல் கொண்டு வந்து போட்டான். திகைப்புடன் பார்த்துக்  கொண்டிருந்தனர் மஞ்சுளாவும் , நந்தகோபாலும்

“மஞ்சு, நான் உன் அறையில் தங்குவது உனக்கு ஒன்றும் இடைஞ்சல் இல்லையே?” நந்தகோபால்.

“இது என்ன கேள்வி?”  மஞ்சுளாவின் உள்ளுக்குள் சந்தோஷம் பொங்கியது.

“அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா!” என்று சொல்லிச் சிரித்தார் ஸ்ரீதர். பொருள் புரிந்த லட்சுமியும் சேர்ந்து சிரித்தார். நந்தகோபால் மட்டும் பொருள் புரியாமல் விழித்துத் தோளைக் குலுக்கி விட்டு மஞ்சுவின் அறைக்குள் சென்றான்.

நிவேதாவின் பெற்றோரும், அவள் குடும்பமும், மஞ்சுவின் குடும்பமும் அடிக்கடி விருந்தைப் பரிமாறிக் கொண்டார்கள் . மஞ்சுவின் நெருங்கிய தோழி கிளாராவும் அடிக்கடி இவர்கள் விருந்தில் கலந்து கொண்டாள்.

ஆறு மாதம் முடியப் போவதால் ஸ்ரீர் மற்றும் ஜவஹர்  தம்பதிகளின் விசாவும் முடிகின்றது. இந்தியாவிற்குத் திரும்ப வேண்டிய நாளும் வந்தது. கோபி தான் வழக்கம் போல் முகத்தை ‘உர்’ரென்று வைத்துக் கொண்டிருந்தான்.

தாத்தாவும், பாட்டியும் அவனை விட்டுப் போகக் கூடாதென்று அடம் பிடித்தான் . அவனைச் சமாதானப்படுத்திய தாத்தாவும் பாட்டியும் இனி அடிக்கடி அமெரிக்கா வருவதாக வாக்குக் கொடுத்தனர்.

டிசம்பர்  மாதம் வந்தவுடன், அமெரிக்காவில் நடுங்க வைக்கும் குளிரும் வந்தது. கிறிஸ்துமஸ் உற்சாகமும், சந்தோஷமும் எங்கும் பொங்கியது. வீடுகள் எல்லாம் வண்ண வண்ண அலங்கார விளக்குகள். இரவில் பல வண்ண விளக்குகளுடன் மின்னும் கிறிஸ்துமஸ் மரங்கள் என்று ஊரே விழாக் கோலம் பூண்டிருந்தது.

மஞ்சுளாவிற்கு ஏனோ அன்று காலையிலிருந்தே உடம்பெல்லாம் வலித்தது. ஒரே அறையில் ஒரே கட்டிலில் கணவன் இருந்தாலும் மனத்தளவில் விலகியே இருப்பதால் மனவலியையோ அல்லது உடல் வலியையோ பகிர்ந்து கொள்ள மனம் வரவில்லை.

தனால் மூவருக்கும் வேண்டிய காலை, மதிய  உணவுகளைத் தயாரித்து டைனிங் டேபிள் மேல் வைத்தாள். கோபியும் இப்போதெல்லாம் இவளை எதிர்பார்க்காமல் அலாரம் வைத்து எழுந்து, குளித்து பள்ளிக்குச் செல்ல தயாராகத்தான் டைனிங் ஹாலிற்கு வருகின்றான். ஆதலால் அவனைப் பற்றி கவலை இல்லை.

ஒரு வழியாக கல்லூரிக்கும் போய் அன்றைய கடமைகளை முடித்து விட்டு படுக்கையில் விழுந்தவள் தான். கோபியும் அவன் அறையில் தன் வீட்டுப் பாடங்களை முடித்துவிட்டுப் படுத்து விட்டான்.

நந்தகோபால் ஏதோ மேஜர் ஆப்பரேஷன் என்று நள்ளிரவிற்கு மேல் தான் மிகுந்த களைப்புடன் வந்தான்.  ஒரு டம்ளர் பால் போதும் என்று குடித்து விட்டு வேறு ஒன்றும் சாப்பிடாமல் படுத்து விட்டான் . சரியாக சாப்பிடாத்தால் விடியற்காலை நான்கு மணிக்கு எழுந்து கொண்டான்.

பக்கத்தில் மஞ்சுளா படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். தூக்கத்தில் ஏதோ அனத்திக் கொண்டிருந்தாள். போர்வையை இழுத்து அவள் கழுத்துவரை போர்த்தி விட்டான். அவளையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவன், அவள் நெற்றியில் விழுந்த சுருள்முடி கண்களில் வந்து விழாமல் மேலே தள்ளி விட்டான்.

அப்போது தான் அவள் நெற்றி தணலாக்க் கொதிப்பதை உணர்ந்தான். கழுத்தில் கை வைத்துப் பார்த்தான். ஜுரம் 103டிகிரி போல்  இருக்கும் என்று யோசித்து தெர்மாமீட்டரை அவள் நெற்றியில் வைத்தான். அவன் எதிர்பார்த்தது போலவே தான் ஜுரம் அதிகமாகத்தான் இருந்தது.

உடனே தன் ’மெடிகல் கிட்’டில் இருந்து  ஒரு பாராசிடமால் இஞ்ஜெக்‌ஷன் போட்டு யூகலிப்டஸ் தைலத்தை நெற்றி, கழுத்து எல்லாம் தேய்த்து விட்டான். காலுக்குத் தேய்க்கும் போது “வேண்டாம் நான் தேய்த்துக் கொள்கிறேன்” என்று காலை இழுத்துக் கொண்டாள்.

“அமைதியாக இரு  மஞ்சு.  இந்த கால்கள், இந்த உடம்பு எல்லாம்  என்னுடையவை. அதை பத்திரமாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பும் என்னுடையதே. காலையிலிருந்தே நீ கொஞ்சம் களைப்பாக இருந்தாய்!  நான்தான் சரியான இடியட், உன்னை சரியாக கவனிக்கவில்லை” என்று கூறி  தைலம் தேய்த்த  கைகளை அவள் மூக்கில் வைத்து நுகர வைத்தான்.

“கொஞ்சம் இரு மஞ்சு, எனக்கும் கூட பசிக்கிறது. சூடாக ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வருகிறேன். மருந்து சாப்பிட்டு விட்டு வெறும் வயிற்றில் இருக்கக் கூடாது” என்றவன் அவசரமாக கீழே சமையலறைக்குப் போய். ஹார்லிக்ஸ் கலந்து இரண்டு கப்புகளில் எடுத்து வந்தான்.

மஞ்சுளாவை எழுப்பி சாய்ந்தாற் போல் உட்காரவைத்து  குடிக்க வைத்தான்.  அவளை மீண்டும் படுக்க வைத்த பிறகு தன் கப்பை கையில் எடுத்துக் கொண்டான்.

“மஞ்சு, நீ நிம்மதியாகத் தூங்கு.  நாளைக் காலை உன் கல்லூரிக்கு உனக்கு உடம்பு சரியில்லை என்று விடுமுறை சொல்லி விடுகிறேன். கோபியையும் நானே பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாமல் தூங்கு” என்றவன், விளக்குகளை அணைத்து விட்டு, இரவு விளக்கைப் போட்டு விட்டு, அவள் அருகில் படுத்துக் கொண்டு கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான்.

அவன் காட்டிய பரிவில், அவள் கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளி முத்தாக நின்றது. ‘இவ்வளவு அன்பைக் காட்டுபவன், தன்னை ஏன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறான்’ என்று பலவாறாக யோசித்துத் தூங்கி விட்டாள்.

அடுத்த இரண்டு நாட்களில் ஜுரம் படிப்படியாகக் குறைந்து மஞ்சுளா நார்மலுக்கு வந்து விட்டாள்.  ஆனால் உடம்பு மட்டும் பலஹீனமாகவே தெரிந்தது. அதனால் நந்தகோபால் தன் மருத்துவமனை வேலைகளில் முக்கியமானவற்றை மட்டும் தன் மேற்பார்வையில் வைத்துக் கொண்டு மற்ற வேலைகளைத்  தற்காலிகமாக ஜூனியர் டாக்டர்களின் பொறுப்பில்  விட்டு மஞ்சுவை அக்கறையாகப் பார்த்துக் கொண்டான் . 

ஒரு வாரத்தில் மஞ்சுளா நன்கு தேறி பழைய நிலைக்கு வந்து வேலைக்கும் போகத் தொடங்கி விட்டாள். பிறகு தான் நந்தகோபாலும் முழு மூச்சுடன் தன் மருத்துவ தொழிலில் ஈடுபட்டான்.

ஹாலில் இருந்த சுவர்கடிகாரம் எட்டு மணி அடித்தது. கல்லூரிக்குச் செல்ல மஞ்சுவும், பள்ளிக்குச் செல்ல கோபியும் தயாராகி விட்டார்கள். நந்தகோபால்  இரவுப்பணியை முடித்து விட்டு விடியும் போதுதான் வந்தான். அதனால் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அவனுக்கு வேண்டிய காலை, மதிய உணவுகளை டைனிங் டேபுளில் ‘ஹாட்பேக்கில்’ வைத்திருந்தாள். எழுந்தவுடன் குடிப்பதற்கு பிளாஸ்கில் காபியையும் ஊற்றி வைத்திருந்தாள்.

நந்தகோபால் ஒருவேளை விழித்திருந்தால் அவனிடம் சொல்லிவிட்டுப் பிறகு கல்லூரிக்குப் போகலாம் என்று மஞ்சுளா தங்கள் அறைக்குச் சென்றாள். ஆனால் அவனோ கண்களை மூடிப் படுத்திருந்தான்.

சிவந்த களைப்பான அவன் தோற்றமும், நெற்றியில் விளையாடிய அவன் சுருண்ட முடியும், அவன் மேல் அவளுக்கிருந்த அன்பும் சேர்ந்து, அவளை என்னவோ செய்தது.

போர்வையை கழுத்துவரை இழுத்துப் போர்த்திவிட்டு, நெற்றியில் விளையாடிய சுருண்ட முடியைத் தள்ளிவிட்டு, தன்னையறயாமல் அவன் நெற்றியில் தன் இதழ்களைப் பதித்துவிட்டு கிளம்பினாள். நெற்றியில் பதிந்த இதழ்களின் ஈரமும், அவள் போட்டிருந்த பெர்பியூமின் வாசனையும் அவன் கண்களைத் திறக்கச் செய்தது.

‘மஞ்சு, உனக்கு என்மேல் இத்தனை அன்பா? நான் அதற்குத் தகுதியானவனா! அதற்கு நான் தகுதியானவனா?  நீ என் அருகில் வந்தாலே, உனக்கு நான் செய்த துரோகம் தானே நினைவிற்கு வருகிறது!’ என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டு, படுக்கையை விட்டு எழுந்திருக்க மனமில்லாமல் மேலும் சிறிது நேரம் படுத்திருந்தவன், மீண்டும் தூங்கி விட்டான்.

காலை பத்து மணிக்கு எழுந்தவன், காபியும் குடித்து விட்டு, தன் உதவி மருத்துவருக்குப் போன் செய்து தன்னுடைய நோயாளிகளின் விவரங்களைக் கேட்டறிந்தான். மதிய உணவைத் தட்டில் எடுத்துக் கொண்டு, டி.வி. எதிரில் அமர்ந்து, உள்நாட்டுச் செய்திகளைப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

நேரடி ஒளிபரப்பு. மஞ்சுளா பணிபுரியும் பல்கலைகழகத்தில் ஒரே கலாட்டா!  ஒரு அமெரிக்க மாணவன் கையில் துப்பாக்கியோடு கண்டபடி  சுட்டுக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் ஒரு கறுப்புப் பெண்ணை குறி பார்த்து துரத்திக் கொண்டிருந்தான். அந்த பெண்ணோ பயந்து தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தாள்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக மஞ்சுளா தன்னையறியாமல் ஒரு வேகத்தோடு குறுக்கே புகுந்து அந்த பெண்ணை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். அந்த நேரத்தில் துப்பாக்கி வெடிக்க, மஞ்சுளாவின் கழுத்திற்கும், மார்பிற்கும் இடையில் குண்டு பாய்ந்தது. இரத்த வெள்ளத்தில் மஞ்சுளா துடித்தபடி கீழே விழுந்தாள்.

(தொடரும் – புதன் தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 8) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 9) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்