in

அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 3) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

அழைத்தான்... (அத்தியாயம் 3)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மின்னியது என்ன?

வீட்டு வாசல்..!

மகன் மயக்கமடைந்த விடயம் ஏதும் அறியாமல், பழனி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

நண்பகல் 1.00 மணி இருக்கும். உச்சி வெயில் மண்டையைப் பிளக்க, பழனி வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். வீட்டை நெருங்கியதும், லேசான அதிர்ச்சி. வீடு பூட்டியிருந்தது.

எதிர் வீட்டு பாக்யம் எதிரே வந்து, “ராதாக்கு உடம்பு சரியில்லனு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கு அத்தே… அங்கயே ஒரு வாரம் இருக்க சொல்லிட்டாங்கலாம் டாக்டரு.. அத்தே உங்களையும் அங்க வரசொல்லிச்சு” என்று மழையைப் போல சடசடத்தாள்.

பழனி அப்படியே வெறுங்காலோடு ஆஸ்பத்திரிக்குச் செல்லத் தயாரானார். பாக்யம் மறுபடியும் குறிக்கிட்டு, “ஒரு வாய் தண்ணி குடிச்சிட்டு போங்களேன்..” என்று தண்ணீர் செம்பை நீட்டினாள். “மொடக் மொடக்” வாங்கிக் குடித்துவிட்டுக் கிளம்பினார் பழனி. 

**********************************************************

அரசு மருத்துவமனை..!

ஆஸ்பத்திரியில் ராதா இருக்கும் அறை கேட்டு சென்றார் பழனி. பார்வதி அங்கு இடிந்து போய் உட்கார்ந்திருந்தாள். கூடவே கிருஷ்ணன் அமர்ந்திருந்தான்.

மாலினி மட்டுந்தான் பழனி வருவதைக் கவனித்து, “அத்தே.. மாமா வந்திருச்சு பாரு” என்று குரல் கொடுத்தாள். பார்வதி எழுந்து நின்று கொண்டு ஒன்றும் சொல்லாமல் அழுதாள்.

இரும்பு மனமானாலும், பெண்ணின் அழுகைக்கு உருகாத ஆண் மனம் ஏது? பழனி கொஞ்சம் தலையைச் சொறிந்து, “இந்தா… ஒன்னுல.. அழுவாத..! புள்ள சாப்டானா? நீ சாப்பிடியா?” என்று கேட்டார்.

“இல்லிங்க.. அத்தே ஒரு வாய் தண்ணி கூட குடிக்கல” – இது மாலதி.

“நீங்க இருங்க.. நான் உங்க எல்லார்க்கும் சாப்பாடு வாங்கிட்டு வரே” என்று பழனி ஹோட்டலுக்குச் சென்றார்.

பார்வதிக்கு அப்போது தான் தெம்பு வந்தது. மாலினியைக் கூப்பிட்டு, “என் புருஷனே ஒன்னுலன்னு சொல்லிட்டாரு.. அப்போ ஒன்னு இருக்காது. நீ வீட்டுக்குப் போய் சாப்பிடுமா. நான் பாத்துக்கிட்டு வந்துடறேன்” என்று சொன்னாள்.

மாலினி லேசாய் சம்மதித்து, “நான் வேலைய முடிஸ்டு ராத்திரி வரேன் அத்தே” என்று புறப்பட்டாள். அவள் செல்லவும் பழனி வரவும் சரியாக இருந்தது. பார்வதி கிருஷ்ணனைப் போய் சாப்பிடச் சொன்னாள்.

பழனி பார்வதியிடம், “இந்தா.. ராதாக்கு இட்லி சுட்டு எடுத்தாந்தேன். நர்ஸம்மாகிட்ட சொலிட்டு, நீயே ஊட்டிட்டு வந்துடு. பொறவு நம்ம சாப்டுக்கலாம்” என்று டப்பாவை நீட்டினார். அவளும் வாங்கிக்கொண்டு, ராதா இருக்கும் அறைக்குச் சென்றாள். 

அங்கே அவன் படுத்திருந்த கோலம் பார்வதியை உலுக்கியது. மனத்தைத் தேற்றிக் கொண்டு, “கண்ணா.. ராதா.. எழுந்திரு டா. கொஞ்சம் சாப்டு கண்ணு” என்று காதோரம் கிசுகிசுத்தாள். ராதா, அம்மாவின் மூச்சுக்காற்று பட்டு, எழுந்து மெல்ல உட்கார்ந்தான்.

“என்னம்மா?” என்றான். “சாப்பிடுய்யா..” என்று சொன்னாள்.

அப்போதும் ராதா, “என்னம்மா சொல்ற?” என்று சாதராணமாகக் கேட்டான்.

பார்வதி லேசாய் சந்தேகித்து, “ராதா……” என்று சத்தமாகச் சொல்லி அவனை உற்றுப் பார்த்தாள்.

அவன் அப்போதும் அமைதியாகவே இருந்து, “அம்மா.. என்ன பேசுறீங்க? எனக்குக் கேக்கலையே மா..” என்று இயல்பாகச் சொன்னான். பார்வதிக்குத் தன் தலையில் இடி விழுந்தது போலாகி விட்டது

பார்வதி ஏதும் சொல்லாமல், மகனைச் சாப்பிட வைத்தாள். அவள் கண்களில் கண்ணீர் முத்து முத்தாய் தெரிந்தது. அடக்க முயன்ற அவளையும் மீறி, அது மாலையாகக் கன்னத்தில் வழிய, பிள்ளை பார்ப்பதற்குள் அதை துடைத்துக் கொண்டாள். அவனை உண்ணச் சொல்லி, அழகு பார்த்துவிட்டு, நேரே கணவனிடம் சென்றாள். 

கிருஷ்ணனும் பழனியும் பார்வதி வெளியே வருவதைப் பார்த்தனர். நன்றாக உள்ளே சென்றவள், வெளியே வரும் போது, கண்களில் கண்ணீரைக் கடன் வாங்கிக்கொண்டு வருவதைப் பார்த்ததும், கிருஷ்ணனின் முகத்தில் அதிர்ச்சி ரேகையானது சிலந்தி வலை போல படியத் தொடங்கியது.

பழனியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. பார்வதி பழனியிடம் சொல்ல எத்தனித்த நொடி, “இந்தா.. என்னத்துக்கு புசுக்கு புசுக்குன்னு கண்ணுல தண்ணிய வெச்சிக்குற.. புள்ளைக்கு லேசா காது கேக்கல.. அது ஒன்னும் பெரிய கொற இல்ல. இதோட அவனப் பிடிச்ச எல்லா கெட்டது போயிருச்சுன்னு நினைச்சிக்கோ. இதுக்கு மேல அவ நல்லாருப்பான். கண்ண தொட” என்று பார்வதி சொல்ல வந்ததைச் சரியாகச் சொல்லி, உடன் ஆறுதலும் கூறினார். 

பார்வதியின் விழிகளின் இமைகள் இரண்டும், உயர்த்திய புருவ வில்லை வரையத் தொடங்கியிருந்தன. அத்துடன் கிருஷ்ணன், ஒரு அடி அப்பாவை விட்டுத்தள்ளி நின்று, முட்டை விழிகளை மேலும் அகல விரித்துப் பார்த்தான்.

“சரி..சரி..! பாத்தது போதும். வாங்க சாப்டுவோம்” என்று சாதரணமாகச் சொன்னார் பழனி. இருவரும் இயல்பு நிலைக்கு வந்து சாப்பிடச் சென்றனர்.

“எப்டி இதெல்லாம்?” என்று பார்வதி கேட்கவில்லை. ஆனால், இளமை உதிரம் உடலில் உதறி ஓடும் வயதுடைய கிருஷ்ணனால், கேட்காமல் இருக்க முடியவில்லை.

“நைனா..! எப்படி இதெல்லாம்? நீ உள்ற போவேயில்லேயே..! எப்படி சொன்ன எல்லாத்தையு?” என்று கேட்டான். முதல் முறையாக மகன் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்க முன்வந்தார் பழனி.

“டேய் கண்ணா.. ஜோசியம்ங்குறது 6000 வருஷத்துக்கு முன்னாடிலேர்ந்து இருந்துட்டு இருக்கு. காலம் மாறுனதுல அவங்கவுங்க தனக்குத் தெரிஞ்ச மாற்றத்த அதுல புகுத்தி, அதை எளிம படுத்துனாங்க. நேரம் நல்லாயில்லங்குறது சும்மா சொல்றதில்ல. நேரம்ங்குறத.. காலை, மாலை, இரவுன்னு நாம யோசிப்போம். கொஞ்ச ஆழமா யோசிச்சா, அதுல திதி, யோகம், கரணம் அப்ரோ நட்சத்திரக் கதிரியக்கம்னு இப்படி எல்லாமே சேந்தது தான் நேரம். இதுலாம் சும்மா கிடையாது. இத்த தெரிஞ்சிக்கிறது ரொம்பவு கஷ்டம் இல்ல. அதே சமயம் சுலபமு இல்ல. ஜோசியம் கத்துக்கிட்டா நிச்சிய அவனுக்குக் கடவுள் பக்தியு கூடவே இருக்கும். ஏன்னா நடக்கப்போறது என்னென்னு ஓரவளவு யூகிச்சிட்ட பொறவு, கடவுள்தா கதின்னு புத்தி யோசிக்க ஆரம்பிச்சிடும்..” என்று சற்று குறுகிய விளக்கத்தைச் சொல்லி முடித்தார். 

கிருஷ்ணனுக்கு எல்லாம் அறை குறையாய் புரிந்தது. அதே சமயம் சாப்பிட்டு முடித்தாயிற்று.

பழனி பார்வதியிடம், “இந்தா.. கைச்செலவுக்கு காசு வெச்சிக்கோ. நீ ராதாக்கு ஏதும் சொல்ல வேண்டியதில்ல. அவனுக்கே இந்நேரம் புரிஞ்சிருக்கும். அவன் எப்போவோ சமாதானோ ஆயிட்டான். எல்லாத்துக்கும் பாழா போன மன்சு தா காரணோ..” என்று போகும் போதும் ஆச்சரியத்தைத் தூண்டுவிட்டுக் கிளம்பினார். 

பார்வதிக்கு இது பழகி விட்டது. கிருஷ்ணனுக்கு அப்போது தான் காலம், நேரமெல்லாம் என்ன என்று புரிந்தது. அப்பாவின் உருவம் மறையும் வரை பார்த்துவிட்டு, உள்ளே அம்மா இருக்கும் இடம் நோக்கிச் சென்றான் கிருஷ்ணன்.

பார்வதி அவனை ஏதும் பேச விடாமல், “கிருஷ்ணா.. நாளைலேர்ந்து காலேஜூக்கு போயிடு.. இங்கேயே, இத்தா சாக்குன்னு டிமிக்கி கொடுத்திட்டு இருக்கலாம்னு நினைக்காத.. ஒழுங்கா படிக்கணும். ஹ்ம்ம்..” என்று சொல்லி ஏதோ கேட்க வந்த கிருஷ்ணனின் வாயை அடைத்தாள். 

கிருஷ்ணனிடம் மௌனத்தின் ஆதிக்கம். இருவரும் மாறி மாறி, அப்படியும் இப்படியும் மருந்து வாங்க சுற்றித் திரிந்ததில், மாலை அரும்பி விட்டது.

6.30 மணி இருக்கும். மாலினி ஆட்டோவில் வந்திறங்கினாள். மாலினி பார்வதியிடம், “கிருஷ்ணன.. நம்ம வீட்டுக்கு அமிச்சிடுங்க. நம்ம எதிர் வீட்டு பாக்யம் ல.. அவ மாமாக்கு நைட் சாதம் வடிக்கிறேன்னு சொல்லிட்டா.. நா.. ராதாவுக்கும் உனக்கும் இட்லி சுட்டு எடுத்துட்டு வந்துட்டேன்” என்று அக்கறையோடு சொன்னாள்.

பார்வதி அழுகை தாங்க முடியாமல், “ராதாவுக்கு ஜூரத்துல காது கேக்காம போயிடுச்சு மாலினி” என்று மறக்க நினைத்ததை தானே நினைவு படுத்திக் கொண்டாள்.

மாலினிக்கும் அது அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால், அவள் சமாதானம் செய்ய முயன்றாள். அதற்கு அவசியமே இல்லாதது போல் கிருஷ்ணனின் முகம் சோகமாக ஆவதைப் பார்த்த பார்வதி, மெல்ல அழுகையைத் தானே நிறுத்தினாள். 

“கிருஷ்ணா.. நீ வூட்டுக்கு போ.. அப்பா வந்துருப்பார் இந்நேரம்..! ஒன்னும் பயப்படாத” என்று அவனை வீட்டிற்கு அனுப்பினாள்.

கிருஷ்ணன் ஆஸ்பத்திரியிலிருந்து, வெளியே நடக்க ஆரம்பித்தான். “அப்பாடா..” என்று வானத்தைப் பார்த்தான். நட்சத்திரங்கள் வருவதற்குத் தயாராக கருப்பு போர்வை விரித்துக் கொண்டிருந்தது மேகங்கள்…

**********************************************************

வீடு…! 

வீட்டில் நைனா வந்து விட்டிருந்தார். கிருஷ்ணன் அன்று தான் முதன் முதலில் தனியே தூங்கப்போகிறான். அப்பா என்றாலே பயம் தான். இருந்தாலும், அவரோடு மனம் விட்டு இன்றைக்குப் பேசலாம் என்று யோசித்து வைத்திருந்தான். 

நைனா கால்களைக் கழுவி விட்டுச் சோர்வாக அமர்ந்தார். அவரிடம் ஜோராக சென்று, “உனக்கு ராதாவ பாக்கணும்னு தோணலையா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“அடப்போடா.. நீ வேணா பாரு. நாளைக்கு காலைல, அவுனுக்கு மருந்து கொடுத்து, வூட்டுக்கு அனுப்பிடுவாங்க” என்று ஆணித்தனமாகச் சொன்னார்.

“இதெல்லாம் எப்டி உன்கு முன்னாடியே தெரியுது? எப்டி நைனா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் கிருஷ்ணன்.

அதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை. தியானம் செய்யத் தயாராகி விட்டவர் போல் தெரிந்தது.

“அடப்போ நைனா. எப்போ பாத்தாலு… கண்ண மூடிட்டு இப்பிடி உட்காரதுல்ல உன்கு என்ன தான் கிடைக்குதோ?” என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து வெளியே சென்றான். அதே சமயம் கிருஷ்ணனின் தோஸ்து ஒருவன் வாசலண்டை வந்து காத்திருந்தான். 

கிருஷ்ணனும் அவன் தோஸ்தும் ஒன்றாகத் திண்ணையில் அமர்ந்தனர். கல்லூரி பருவம் இல்லையா? அந்த வயதுக்குத் தகுந்த பேச்சுகள் தான் அவர்களிடையே இருந்தது. லேசான நலம் விசாரிப்பு. பிறகு நாளை எந்த வாத்தியார், என்ன கிளாஸ் என்பது பற்றி ஓர் கணிப்பு. அதில் சலிப்பும் கூடத்தான் இருந்தது. இப்படியே பேச்சு நீண்டு, 8.30 மணி ஆனதும் நண்பனுக்கு விடை கொடுத்து விட்டு, கிருஷ்ணன் உள்ளே சென்றான். பழனியும் தியானம் கலைத்து, கையில் ஏதோ பச்சிலைகள் வைத்து இடித்துக் கொண்டிருந்தார். 

கிருஷ்ணன் அதைப் பார்த்ததும், “என்ன நைனா பண்ற?” என்று ஆவலோடு கேட்டான். பழனி கொஞ்சம் ஆர்வமாய் இருந்ததால், ஏதும் பதில் சொல்லவில்லை.

கிருஷ்ணன், “என்ன செய்கிறார் நைனா” என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான். அவர் இடது கைப்பக்கம், பாத்திரத்தில் சாறு போல் ஏதோ இருந்தது. வலக் கைப்பக்கம் உள்ள வெறும் கிண்ணத்தின் மேல் அந்தச் சாற்றை ஊற்ற ஒரு நிமிடம் தங்கமாக மின்னி, பின்பு, பாதரசம் ஊற்றியதும் அப்படியே கரைந்தும் போனது. இதையே பழனி ஒரு ஐந்தாறு முறை செய்தார். திரும்பத் திரும்ப அதே போல் மின்னி, பின் உருகி, கரைந்தும் விட்டது. 

இதைப் பார்த்த கிருஷ்ணனுக்கு, பொட்டில் அறைந்தாற் போல் ஓர் ஆர்ப்பரிப்பு. “என்ன நைனா பண்ற? ஒரு பொருள தங்கமா மாத்த முடியுமா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

பழனி இப்போது பதில் கூறத் தயாரானது, அவனுக்கு ஆச்சரியத்தை அள்ளித் தெளித்தது போலிருந்தது. “சித்தர்கள் வரையில இது சாத்தியம் தா.. ஆனா நா ஒன்னு பெரிய சித்தன்லாம் இல்ல. முயற்சி பனேன். பாப்போம். அடுத்த முறை.. எப்டின்னு..!” என்று சொல்லவும், “டேய் பழனி.. சுருட்டு இருக்கா?” என்றொரு குரல் கேட்டது. அதுவும் தறி நெய்யும் அறையின், ஜன்னல் கதவு ஓரத்திலிருந்து. அதைக் கேட்ட கிருஷ்ணனின் உடம்பு ஒரு நிமிடம் விறைத்து விட்டது.

(தொடரும் – வெள்ளி தோறும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டிஎன்ஏ திருட்டு (சிறுகதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி

    ரெட்டைகிணறு (சிறுகதை) – ✍ எஸ்.ஜெயப்பிரகாஷ், சேலம்