in

ரெட்டைகிணறு (சிறுகதை) – ✍ எஸ்.ஜெயப்பிரகாஷ், சேலம்

ரெட்டைகிணறு (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்திசாயும்  வேளையில் சூரியன் மேற்கே மறைந்து கொண்டு இருந்தது. சாமியப்பன் அந்த பச்சை வயல்களுக்கு நடுவே அமைந்திருந்த கிணற்றை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

நீண்ட நாட்களுக்கு பிறகு விடுமுறையில் சொந்த ஊர் திரும்பி இருக்கிறான். ராணுவத்தில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் போனதே தெரியவில்லை. அவ்வப்போது சொந்த ஊர் வருவது சுகமான அனுபவம். 

ஒவ்வொரு முறை வரும்போதும் சவுரியூர் பஸ் நிறுத்தத்தில் இறங்கியவுடன் முதலில் அவனது கால்கள் வீட்டுக்குச் செல்லாமல் ரெட்டை கிணற்றை நோக்கி நடைபோடும்.. 

ஒரு சுகமான குளியல் அரங்கேறிய பின்புதான் வீட்டிற்கு செல்வான். அப்படித்தான் இன்றும் கிணற்றை ரசித்துக் கொண்டிருந்தான். கிணறு ஆள் ஆரவாரமற்று அமைதியாக இருந்தது

கிணற்றில் உள்ள பலகை கல் வரை தண்ணீர் நிரம்பியிருந்தது. தனது ராணுவ உடைமைகளை மோட்டார் அறைக்கு அருகே வைத்துவிட்டு உடைகளை கலைத்து விட்டு தொபீர்  என  நீரில் குதித்தான். 

நன்கு உள்நீந்தி  கிணற்றின் குளிர்ச்சியை அனுபவித்து பிறகு மேலே வந்தான். அப்பாடா என்ன ஒரு சுகம்! எத்தனை நாட்கள் இதற்காக காத்திருப்பது? என அவன் மனம் அலுத்துக் கொண்டது.  

மெல்ல நீந்தி கிணற்றின் உட்காரும் இடமான பலகை கல்லில் ஏறி அமர்ந்தான். கல்லை தடவி பார்த்தான். சாமியப்பனுக்கு நன்றாக நினைவிருந்தது அவன் முதன்முதலில் நண்பர்களுடன் நீச்சல் பழகியது இந்த ரெட்டை கிணற்றில் தான். 

கிராமத்தில் உள்ள பாதி  பயலுகள் ரெட்டை கிணற்றை மறக்கவே மாட்டார்கள். கிணற்றின் அடியிலிருந்து பெரிய தடுப்பு சுவர் கட்டப்பட்டு கிணறு இரண்டாக பிரித்து இருப்பதால் அதனை இரட்டைக் கிணறு என்று சொல்வார்கள். 

நீர் நிரம்பி பலகை கல் வரை வரும்போது ஒரே கிணறாக காட்சியளிக்கும். பலகை கல்லில் தனது நண்பர்களுடன் நீரில் குதித்து விளையாடிய நாட்களை சாமியப்பன் மனதில் அசை போடத் தொடங்கினான். 

பள்ளி விடுமுறை நாட்கள் எல்லாம் பாதி பொழுது கிணற்றில் குளியலும் கும்மாளமுமாய் கழியும். சாமியப்பன் நண்பர்களுடன் போட்டி போட்டுக்கொண்டு டைவ் அடித்து மகிழ்வான். 

அதுவும் முருகேசனும் அவனும் தான் போட்டியிட்டு விதவிதமாக டைவ் அடிப்பார்கள், நீரில் மூழ்கி அடி வரை சென்று மண் எடுத்து வருவார்கள், தொடும் விளையாட்டு விளையாடுவார்கள். 

முருகேசனும் சாமியப்பனும் எப்பொழுதுமே ஒன்றாகவே ஊர் சுற்றுவார்கள்,  ஒன்றாக சினிமாவிற்கு செல்வார்கள்., கபடி விளையாடுவார்கள். ஆனால் அதெல்லாமே முருகேசன்  ராசாத்தியை காதலிக்கும் வரை தான்.

அவளின் காதலில் மூழ்கி நண்பர்களை ஒதுக்க ஆரம்பித்தான். அவர்களுடன் கிணற்றுக்கு வருவதை நிறுத்திக் கொண்டான். சாமியப்பனை சந்திப்பதை மெல்ல மெல்ல தவிர்க்க ஆரம்பித்தான். அதனால் சாமியப்பனுக்கு முருகேசன் மீது கோபம் வளர தொடங்கியது. 

என்ன ஆயிற்று இவனுக்கு? இந்த ராசாத்தி என்ன மாயம் செய்தாள்! ஒரு பெண்ணிற்காக ஏன் இவன் இப்படி மாறிப்போனான், என அவனை வெறுக்கத் தொடங்கினான். அதன் பிறகு முருகேசனை பார்ப்பதே அரிதாகி போனது. 

ஒரு சமயம் ராசாத்தியுடன்  அவனை கருப்பசாமி கோவிலில் பார்த்தான். மற்றொருமுறை ஆள் ஆரவாரமற்ற சூழலில் அவர்கள் இருவரும் ரெட்டை கிணற்றின் பலகை கல்லில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்தான். 

சாமியப்பனுக்கு அவன் ஏன் நம்மை தவிர்க்கிறான் என்ற கேள்வி மட்டும் ஓடிக் கொண்டே இருந்தது.     

ஒருமுறை அவனை சந்தையில் பார்க்கும்போது கேட்டே விட்டான் முருகேசன்  

“டேய் முருகேசா நில்லு.. ஏன் கண்டுகாமலே போற? 

முருகேசன் வேறு எங்கோ பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான். 

“உன்னை தான்டா கேட்கிறேன்” என மீண்டும் ஆரம்பித்தான். 

“வேல நெறைய இருக்கு.. அப்புறம் பேசலாம்” என நழுவ பார்த்தான். 

“ஏய் நில்லுடா பதில் சொல்லிட்டு போ….” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துநிறுத்தினான். 

முருகேசன் மௌனமாக முகத்தை திருப்பி கொண்டு திமிறினான். 

சாமியப்பனுக்கு சற்றே வெறுப்பு சுரந்து அவனது கையை உதறிவிட்டு,  “போடா… எல்லாம் அந்த ராசாத்தி பண்ற  வேலைன்னு நல்ல தெரியுது போ” என வார்த்தைகளை வீசினான். 

“ஆமடா அவதான் எனக்கு முக்கியம். அவளுக்கு நான் உங்க கூட சுத்துறது புடிகலை.. என்ன பண்ண சொல்ற ? போடா போய் பொழப்பை பாரு..” என்று பேசிவிட்டு வேகமாக நடந்தான். அன்றோடு சரி அதன்பிறகு அவர்கள் பேசிக்கொள்வதில்லை. 

ராணுவத்தில் சேர்ந்த பிறகு விடுமுறையில் ஊருக்கு வந்தாலும் அவர்கள் பார்த்து கொண்டாலும் பார்க்காதபடி சென்றுவிடுவார்கள். 

இப்பொழுது சாமியப்பனுக்கு பசி வயிற்றை பிறாண்டி  நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. வீட்டில் அம்மா தனக்காக சமைத்து விட்டு காத்துக்கொண்டு இருப்பாள் என  உணர்ந்து கிணற்றை விட்டு  கிளம்ப எண்ணினான். 

ஆனால் குளியல் அவ்வளவுதானா என்று மனம் நிரடியது. இருட்ட வேற ஆரம்பித்துவிட்டது இன்னும் ஒரு முறை குதித்து  குளித்துவிட்டு கிளம்பலாம் என்று  நீரில் குதித்தான். மெல்ல உள்நீந்தி  தண்ணீருக்கு மேலே வந்து நீரை கொப்பளித்து துப்பினான்.

அப்பொழுதுதான் பலகை கல்லில்  யாரோ அமர்ந்து இருப்பது தெரிந்தது. கண்களை கசக்கி உற்றுப் பார்த்தான் பகீரென்றது. அது முருகேசன் தான். வெற்று உடம்புடன்  நீர் சொட்ட சொட்ட பலகை கல்லில் அமர்ந்திருந்தான். 

கண்கள் சிவந்து கிணற்றை  வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.  சாமியப்பன் சற்றே சுதாரித்துக் கொண்டு, “டேய் முருகேசா நீ  எப்படா வந்த என்றான் சத்தமாக 

அவன் பார்வையை  திருப்பாமல் கிணற்றையே  பார்த்துக் கொண்டிருந்தான். 

சாமியப்பனுக்கு  அது சற்று  அமானுஷ்யமாக தோன்றியது. என்ன ஆயிற்று இவனுக்கு, இவன் எப்போ வந்தான், எப்போது கிணற்றில் குளித்தான்.. என்று எண்ணியபடி  நீந்தி அவனருகில் சென்றான். 

“என்னடா நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்…நீ பதிலே சொல்ல மாட்டேங்குற?” என்றான் சாமியப்பன். 

சட்டென்று முருகேசனின் பார்வை சாமியப்பனின்  மீது திரும்பியது. அந்த பார்வை அவனை உலுக்கியது,  பயத்தில்  பதறிப் போய் பின்னுக்கு  நீந்தினான்.  தடுமாற்றத்தில் கால்கள் உள்ளிழுப்பது போல் இருந்தது. 

“சீக்கிரம் இங்கிருந்து போயிடு“ என்றான் முருகேசன் அவனை முறைத்தபடி

திடீரென்று சாமியப்பனின்  கால்கள் நீரினுள்  உள்ளிழுக்க ஆரம்பித்தது.  நீந்தத் திணறி  மூழ்கி வெளியே வந்தான். நீரினுள் மூழ்கும் போது  இரண்டு பாசி படிந்த கைகள் அவன் கால்களை பற்றி இழுப்பதை கண்டு பதறினான். 

கால்களை உதறி விட்டு நீரின் மேலே வந்து முருகேசனை பார்த்து “டேய்” என கத்தினான். இப்பொழுது முருகேசன் கிணற்றை பார்த்து கத்தினான். 

“அவனை விடு” என்றான் சத்தமாக

மீண்டும் சாமியப்பன் நீரில் மூழ்க தொடங்கினான். முருகேசனுக்கு கண்கள் சிவந்து கோபம் அதிகமானது. பலகை கல்லில் அமர்ந்திருந்த அவன் எழுந்து நின்றான். 

“அவனை விடுன்னு சொல்றேனில்ல”  என்று கத்தியபடி கிணற்றில் குதித்தான். 

சாமியப்பன் மூச்சு முட்டியபடி கிணற்றில் மூழ்கி கொண்டிருந்தான். தீடீரென்று  அவனது கால்கள் விடுவிக்கபட்டது. வேகமாக நீந்தி நீரின் மேலே வந்து மூச்சு வாங்கினான். பதற்றத்துடன் நீந்தி பலகை கல்லில் ஏறி நின்றான். 

பயத்தில் அவனது கால்கள் உதற ஆரம்பித்தது

“முதலில் இவ்விடத்தில் நிற்காதே கிளம்பு” என உள்ளுணர்வு அலறியது. பதற்றத்துடன் துணிகளை எடுத்து அணிந்து கொண்டு பைகளை தோளில் மாட்டி கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தான்.  

ஒரு நிமிடம் திரும்பி கிணற்றை பார்த்தான், அது யாருமற்று நிசப்தமாக இருந்தது. முருகேசன் எங்கே? யார் காலை இழுத்தது? என்ன நடந்தது என ஒன்றும் புரியவில்லை என  யோசித்த படி நின்று கொண்டிருந்தவனின்செல்போன் ஒலித்தது. 

எதிர்முனையில் அவனுடைய அத்தை மகன் ராஜேந்திரன் பேசினான் 

“ஏ.. சாமியப்பா ஊருக்கு வந்துட்டியா..? எங்க இருக்க..?” 

“ஊருக்கு வந்துட்டேன் டா… இங்கதான் ரெட்டை கிணறு பக்கம நிக்கிறேன்” என்றான் தடுமாற்றத்துடன். 

“டேய் ரெண்டு நாளா உனக்கு போன் அடிச்சேன் லைன் கிடைக்கவே இல்லை.. நம்ம முருகேசனும் ராசாத்தியும் காதல் தோல்விலே ரெட்டை கிணத்துல.. கல்ல கட்டி குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டாங்க.. நேத்து தான் ரெண்டு பேரு பாடியையும் வெளிய எடுத்தாங்க.‌‌. அந்த பக்கம் போகாத.. சீக்கிரம் வீடு வந்து சேரு” என்றான். 

சாமியப்பன் அதிர்ச்சியில் உறைந்தான். 

சுதாரித்துக் கொண்டு “சரிடா.. சீக்கிரம் வரேன்” என்று இணைப்பை துண்டித்தான். ரெட்டை கிணற்றை பீதியுடன் திரும்பி பார்த்தான். 

இப்போது கிணற்றின் நீர்மட்டத்திற்கு வெளியே முருகேசன் தென்பட்டான். அவனது கண்கள் சாமியப்பனையே வெறித்து பார்த்துக் கொண்டு இருந்தது.  சற்று தள்ளி ராசாத்தியும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

இனி திரும்பவே கூடாது என  வேகமாக நடக்க தொடங்கினான் சாமியப்பன். 

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 3) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்

    தங்க மழை (சிறுகதை) – ✍ பாலாஜி, கோவை