ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
“அம்மா, தாத்தா வந்திருக்கார்!” சொல்லி கொண்டே பவளக்கொடி ஓடி வந்தாள்.
கோமதி வெளியே எட்டி பார்த்தாள். மாமனார் விஸ்வநாதன் வெளியே திண்ணையில் உட்கார்ந்திருந்தார்.
கையில் பெரிய பை, காய்ந்த தலை, காவி வெட்டி. பச்சை துண்டு போர்த்திருந்தது, தளர்ந்த கண்கள். நெற்றி நிறைய விபூதி அங்கங்கே வியர்வையால் நனைத்த உடல்.
கழுத்தில் ஏராளமான பாசிமணிகள். எல்லா கடவுளுடைய உருவம்பதித்த பாசிகள். நான்கு செப்பு மோதிரம் . பார்க்க ஒரு காவி துறவி போலவே இருந்தார்.
சம்பிரதாய புன்னகை மெல்லியதாக உதிர்த்து, ”வாங்க” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள் ..
உள்ளே கணவர் பத்மநாபன் உறங்கிக் கொண்டிருந்தான் .
”ஏங்க எந்திரிங்க, உங்க அப்பா வந்திருக்கார்’.’
சட்டென எழுந்தவன் ”அப்பாவா?” ஆச்சரியமாக கேட்டான். காரணம் அவரை பார்த்து வருடம் ஆச்சு. ரொம்ப நாள் கழித்து வந்தவரை பார்க்க எழுந்து ஆவலாக சென்றான் .
பத்மநாபன் துணி வியாபாரம் செய்து வந்தான். பத்மநாபனுக்கு வியாபாரத்தில் சிறிய நஷ்டம் ஏற்பட்டதால் வீட்டிலேயே கிடந்தான். வேறு வியாபாரம் செய்ய திட்டமிட்டான்.செய்த வியாபாரத்தில் ஏற்பட்ட கடனை அடைத்தால் தான் மீண்டும் வேறு தொழில் பண்ண முடியும்.
அதற்கு சில லக்ஷம் பணம் தேவைப்பட்டது. அவனிடம் ஒரே ஒரு நிலம் உண்டு. அவன் மனைவி அதை விற்று கடனை அடைத்து வேறு தொழில் செய்யலாமே என்பாள். மகளின் எதிர்காலத்துக்கு இருந்த ஒரு நிலத்தயும் விற்க அவனுக்கு மனசில்லை.
அப்பா விஸ்வநாதன் ஒரு நாட்டு வைத்தியர். விஸ்வநாதனுக்கு ஒரு மகன் , ஒரு மகள். தங்கை திருமணமாகி பட்டினத்திலேயே செட்டில் ஆகி விட்டாள் . எனக்கு திருமணம் ஆனதுக்கு பிறகு அவரை சரியாக பார்க்க முடியல.
அம்மா இறந்த பிறகு அப்பா சுத்தமாக வீடு தங்குவதில்லை. கோவில் ,கோவிலா சுற்றுவர். அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகம். சித்தர், மூலிகை, மந்திரம், ஜோதிடம் போன்ற விஷயத்தில் சுற்றியதால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை, வாக்குவாதம் வரும்.
அப்பா இயல்பு வாழ்க்கையிலிருந்து மாறுபட்டவர். கூடுவிட்டு கூடு பாய்தல், மாந்த்ரீகம், ஜோதிடம், இரும்பு மற்றும் செம்பை தங்கமாக மாற்றுவேன் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார், இதனால் அம்மாவோடு சேர்த்து பலபேர் அப்பாவை வெறுத்தார்கள். அதில் இப்போது என் மனைவியும் சேர்த்து…
அவர் எப்போதும் கோவில் மடத்திலேயே தான் தங்குவார்.
நீண்ட காலத்திற்கு பிறகு அப்பா வந்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது .போய் வரவேற்றான் .
“வாங்கப்பா. இவ்ளோ நாள் எங்க போனீங்க, ஆளயே காணோம்?”
”ஆமாம்பா, சும்மா தான் வந்தேன். ரொம்ப நாள் பாக்கலில, அதான் ஒரு எட்டு பாத்துட்டு போலாம்னு”
”உள்ள வாங்கப்பா. ரொம்ப களைப்பா இருக்கீங்க, குளிச்சிட்டு வாங்க. சாப்பாடு தயாராயிரும், சாப்பிட்டு பேசலாம். கோமதி தண்ணி கொண்டா”
”இல்லப்பா, நான் போகணும் வேலை இருக்கு. சாப்பாடெல்லாம் வேண்டாம், வயிறு நிறைஞ்சிருக்கு, தண்ணி மட்டும் போதும்”.
கோமதி தண்ணீர் கொடுத்தாள். ” நல்லா இருக்கியம்மா?”
”ம்ம், இருக்கம்ப்பா” புன்னகையுடன் விலகி உள்ளே சென்றாள் .
”அப்புறம் என்னப்பா நீ எப்படி இருக்க? நல்லா இருக்கியா? உன் தொழில்ல எதோ நஷ்ட்டமாயிடுச்சாமே. கடன் வேற இருக்காமே. அடுத்த என்ன பண்ண போறே?”
”உங்களுக்கு எப்படி தெரியும்?”
”தெரியும்பா, சேதி கேள்விப்பட்டேன். அத விடு.நீ என்ன பண்ண போறே ?”
”அதெல்லாம் பார்த்துக்கலாம்பா, என்ன செய்ய நிலத்த வித்துதான் கடனை அடைச்சு வேற தொழில் எதாவது பண்ணனும் .”
”இருக்கற ஒரு நிலத்தையும் வெச்சுட்டா , புள்ளைக எதிர்காலத்துக்கு என்ன பண்ணுவே?”
”வேற வழி இல்லப்பா . என்கிட்ட வேற என்ன இருக்கு அத விட்டா?”
”சரிதான், நான் என்ன புள்ளைகளுக்கு சொத்தா சேத்து வெச்சேன். உங்கம்மா அப்பவே சொல்லுவா. புள்ளைகளுக்கு ஏதாவது பண்ணுங்கன்னு. நான்தான் கேட்கல, இப்ப நாடோடியா சுத்திட்டு புள்ளைகள கஷ்டப்படித்திட்டேன்” கலங்கினார் அப்பா .
“அட விடுங்கப்பா, சரியாயிடும், நிலந்தானே. போனா வேறு தொழில் செஞ்சி ஜெயிச்சு திரும்ப வாங்கிக்கலாம், நீங்க ஒன்னும் யோசிக்காத்திங்க” .
”சரிப்பா, நான் ஒரு யோசனை சொல்றேன் கேட்கறியா? உனக்கு இஷ்டம் இருந்தா மட்டும் செய். ஆனா, உன் நல்லதுக்குதான் சொல்றேன்”
”சொல்லுங்கப்பா”
”இந்த பையை உன் வீட்டில வெச்சுக்க பிறகு வாங்கிக்கறேன்”
”சரிப்பா” பையை எடுத்து பக்கத்தில் வைத்தான். ”எதோ யோசனை சொல்றேன்ன்னு சொன்னிங்களே”
”அது ஒன்னும் இல்ல. உனக்கு இதுல நம்பிக்கை இருக்கானு தெரியல, ஆனா செஞ்சின்னா நிச்சயம் அது உனக்கு பலன் தரும்”
”என்னதுப்பா?”
”நான் கொடுத்த பையில உள்ள ஒரு கட்டு ஓலையும், ஒரு மஞ்ச புஸ்தகமும் வெச்சுருக்கேன் . அந்த கட்டுல மூன்றாம் ஓலையும், அந்த புஸ்தகத்துல அதில 12ம் பாகம் உள்ள பக்கத்தை நேரம் கிடைச்சா படி. படிச்சிட்டு ஒருநாள் அத தனியா செஞ்சு பாரு”
”என்ன அது, எதுக்கு செய்யணும் புரியல?”
”நான் சொன்னதை மட்டும் செய், அந்த புத்தகத்துல உள்ளமாரி செய்யணும். ஆனா நம்பிக்கயோட செய்யணும் அது ரொம்ப முக்கியம்”
”என்ன சொல்ல வரீங்க, ஏதாவது மந்திர மந்திரிகமா?”
”ஆமாம்பா”
”அப்பா என்ன விளையாடுறிங்களா? நீங்க வேற. கோமதி அம்மாமாரி யெல்லாம் இல்ல, தெரிஞ்சா வீட்டையே ரெண்டாக்கிடுவா, பெரிய பிரச்ன பண்ணுவா. ரெண்டாவது எனக்கும் இதிலெல்லாம் நம்பிக்கை இல்ல, தப்பா நினைக்காதீங்க”
”நான் சொல்றத கேளு. உனக்கு புடிக்குதோ இல்லையோ, நீ இது மட்டும் செஞ்சா ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகிடுவ. இங்க பார் நீ இருக்கற இந்த கடன் பிரச்சினையிலுருந்து வெளிய வரதுக்கான ஒரே வழி இந்த அதிருஷ்டம் மட்டும்தான், புரிஞ்சிக்க”
”சரிப்பா. ஆனா அவளுக்கும் புடிக்காது , என்னையும் அவ செய்ய விடமாட்டா”
”யாருக்கும் தெரியாம , தனியா ஒருநாள் செஞ்சு பார். கண்டிப்பா உனக்கு பலன் கிடைக்கும்”
”ம்ம்ம்.” யோசித்தான். ”ஆமா என்ன இது ,எப்படி செய்வாங்க, நீங்க சொல்லுங்க”
“இது இரும்பை தங்கமாக்கும் வித்தை. இது ஒரு அருமையான வித்தை. கேள்விபட்டிருப்ப. ஆனா செஞ்சவுங்கள ஜெய்ச்சவுங்கள பார்த்திருக்க மாட்டே , ஏன்னா இது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆனா இது என்னுடைய பல வருட முயற்சி,கனவு ,லட்சியம் எல்லாம் இதுதான் …”
”சரி அப்பா நீங்களே இத செஞ்சு கோடீஸ்வரன் ஆகவேண்டியதுதானே, ஏன் செய்யல?”
”ஆரம்பத்துல எனக்கு இதுல ஆசை இருந்தனாலதான் இந்த வித்தையெல்லாம் கத்துக்கிட்டேன் . அப்புறம் இந்த பொன், பொருள் மேல இருந்த ஆசையெல்லாம் போயிடிச்சு .உங்கம்மா போனதுக்கப்புறம் எனக்கு எதுக்கு இதெல்லாம். இப்ப நான் ஒரு சந்நியாசி .எனக்கு இனி இதெல்லாம் தேவைப்படாது. நீ குடும்பஸ்தன் கஷ்டப்படுறியே, அதான் உனக்கு இது பயன்படும்னு சொல்றேன்”
”அதெல்லாம் சரிதான்ப்பா. ஆனா இரும்பு எப்படி தங்கமாகும் ”
”அது எல்லாம் அந்த புத்தகத்துல இருக்கு. அந்த புத்தகத்துல உள்ள பொருளெல்லாம் வைச்சி ஓலை படிச்சிட்டு அதன்படி செஞ்சுப்பாரு .உனக்கே தெரியும்… நம்பிக்கையோட செய்”
பத்மநாபன் அப்பாவை பார்த்து மெல்ல சிரித்தான்.
”என்னய்யா நம்பிக்கை இல்லையா? உன்னையும் என்ன மாரி மாத்தறேன்னு நினைக்கிறியா? புள்ளைகளுக்கு சொத்துதான் சேர்த்து வைக்கல, இதுவாவது உன்ன நல்லா ஆக்கும்னு ஒரு ஆசைல சொல்றேன்யா, முயற்சி பண்ணி பாரு , கண்டிப்பா பலன் தரும், சரிய்யா நான் கிளம்பறேன் ‘
”என்னப்பா உடனே கிளம்பறீங்க ?”
”இல்லையா போகணும், அப்புறம் பாக்கலாம். இத சொல்லத்தான் வந்தேன், கோமதி வரம்மா! . என்னய்யா நான் சொன்னதை மறந்திராதே என்ன ?” என்று சொல்லி கிளம்பினார் .
அப்பா போகும்வரை பார்த்துக் கொண்டே இருந்தான் பத்மநாபன். பின்பு அந்த பையை எடுத்து உள்ளே சென்று தனது அறையில் மறைவாக வைத்தான். இரவு முழுக்க யோசித்து கொண்டிருந்தான்.
செய்யலாமா வேண்டாமா? இதெல்லாம் நடக்குமா? செய்யும்போது ஒருவேளை மனைவிக்கு தெரிந்துவிட்டால் பத்திரகாளி ஆகிவிடுவாள். அவள் இல்லாத சமயத்தில் செய்தால்…
வாரம் இருமுறை நகரத்தில் கோவிலுக்கு செல்வாள். வர மூன்று நான்கு மணி நேரம் கூட ஆகும். அந்த நேரத்தை பயன்படுத்தினால் என்ன? ஒரே ஒரு முறை முயற்சி செய்து பார்ப்போம், நடக்கவில்லையெனில் விட்டுவிடவேண்டியதுதான். சரி, செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தான்.
இரவு நேரங்களில் தனியாக அந்த புத்தகத்தையும் அந்த மந்திரங்களையும் ஓலைசுவடியும் எடுத்து 12ம் பக்கம் உள்ள வரிகளை நன்றாக படித்து பார்த்தான். அதில் அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் நினைத்ததுபோல் கோமதி சில தினங்களில் வெளியே சென்றாள். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தான். அந்த புத்தகத்தை மெல்ல ,ஆழமாக மீண்டும் படிக்க தொடங்கினான்.
அதில் ” தண்ணூரல் அற்று விட்டால் தாமிரமும் தங்கமாகும்” என்கிறார் ஒரு சித்தர். அதாவது தாமிரம் என்கிற செம்பில் இருந்து பச்சை நிற களிம்பை நீக்கி விட்டால் செம்பு தங்கமாகும் என்கிறார் சித்தர்.
இந்த பச்சை நிற களிப்பை நீக்கிவதற்கான வழி முறையையும் கூறியுள்ளார். அது என்ன வென்றால் கூத்தன் குதம்பை சாற்றில் 9 முறை உருக்கி ஊற்றினால் செம்பு தங்கமாகும். கூத்தன் குதம்பை என்று சித்தர் இங்கு குறிப்பிடுகிறார். கூத்தன் குதம்பையை கண்டறிந்தால் செம்பை தங்கமாக்குவது சாத்தியமே
படித்துவிட்டு குழம்பினான். தாமிரம் சரி என்னிடம் உண்டு, ஆனால் கூத்தன் குதம்பை எங்கே தேடுவேன். இதெல்லாம் இல்லாமலா அப்பா இதை கொடுப்பார், பின்பு பையை நன்றாக ஆராய்ந்தான்.
அதில் திருநீறு பொட்டலம், சிவலிங்க படிகம், பல மந்திர தகடும் இருந்தது. மேலும் ஒரு பொட்டலம் இருந்தது. அதை பிரித்தால் அதில் காய்ந்த சருகுபோல் இலை நிறைய இருந்தது
அதில் ஒரு சிறிய குறிப்பும் இருந்தது. ஆம் அதேதான் ‘கூத்தன் குதம்பை’, பெயரும் குறிப்பிட்டிருந்தது .
”ஆஹா கிடைத்துவிட்டது” மகிழ்ந்தான்.
மேலும் இரும்பு தங்கமாக்கும் முறைகள் பல வழிகள் இருந்தது. மேலும் இரும்பு, செம்பு, தாமிரம் என எல்லாத்தையும் தங்கமாக்கும் வழிகளும் இருந்தது. அதன்படி ஒரு செயல்முறை தொடங்கினான். பெரிய பானை எடுத்து தாமிரத்தை போட்டு, அதிக கொதிநிலையில் புத்தகத்தில் குறிப்பிட்டபடி சாறை ஊற்றி ரசாயன முயற்சி சோதனை மேற்கொன்டான்.
ஒரு மணிநேரம், இரண்டு, மூன்று மணி நேரம் கடந்தது. புகையின் அளவு கூடியது, சட்டியில் சாறு கருகியது. பச்சிலை நெடி காட்டமாக மூக்கை துளைத்தது. அரை பானை நீர், கால் பானையாக குறைய தொடங்கியது. அடிக்கடி உள்ளே எட்டி பார்த்தான். எல்லாம் கறுப்பாகவே தோன்றியது. அறை முழுவதும் புகை மூட்டமாக இருந்தது. ஒரு மாற்றமும் இல்லை. ஒன்றும் விளங்கவில்லை.
இன்னும் கொஞ்ச நேரத்தில் கடைசி நீரும் கருகி ஆவியாகிவிடும். முயற்சி தோல்வி அடைவதை உணர்ந்தான். இனியும் முயற்சி வீண் என்பதை புரிந்து கொண்டான் .
”ச்சே நான் சரியா தான செய்தேன். புத்தகத்தை மிகச்சரியாக பின்தொடர்ந்தும் பலனளிக்கவில்லையே. சரி விடு” சோதனை முயற்சி நிறுத்திக் கொள்ள தீர்மானித்தான். சோர்வுடன் அடுப்பை நிறுத்தவும், கதவு திறந்தது. எதிரே மனைவி, கண்களில் உச்சகட்ட கோவம் .
”அதானே பார்த்தேன். ஒரு வாரமா உங்கப்பா வந்துட்டு போனதுக்கப்புறம் நடவடிக்கை சரியில்லனு நினச்சேன். இப்ப புரியுது. ஏய்யா உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? உங்கப்பன்தான் மந்திரம், மாந்திரீகம்னு சொல்லி வீடு இழந்து, சொத்து இழந்து பொண்டாட்டிய சந்தோஷமா வைச்சுக்கவும் முடியாம, உனக்கும் சொத்து வைக்காம. இப்படி பரதேசியா சுத்தறாரு. அந்தாளு பேச்ச கேட்டு நீயும் கிறுக்கு வேலை செய்ய ஆரம்பிச்சுட்டே”.
”இல்ல, கோமதி அது வந்து ..”
”நிறுத்தயா” கோபத்துடன் சூடான பானையும் , அந்த பையும் எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் பானையை ஓங்கி தரையில் உடைத்தாள்.க ருப்பு நிற சாறு நாளாபுறமும் சிதறி தெறித்தது. அதில் பெரிய புகையில் தொடங்கி பின் சிறிதாக ஆவி மெல்ல போய் கொண்டிருந்தது. பச்சை நாற்றத்துடன் இருந்தது.
”இங்க பாருய்யா, நானும் உங்க அம்மா மாதிரி சகிச்சிட்டெல்லாம் வாழமாட்டேன், இனி ஒருமுறை இப்படி பண்ணினா என் வீட்டுக்கே போய் விடுவேன், பாத்துக்க”
”இல்ல கோமதி, இனி இப்படி நடக்காது, மன்னிச்சிரு”
பதில் சொல்லாமல் வேகமாக உள்ளே சென்றாள்.
பரிசோதனை முயற்சி தோல்வியும், மாட்டின அவமானத்திலும் வருத்தத்துடன் தலைகுனிந்து நின்றான்.
இரவில் யோசித்தான் . ”ச்சே , நான் அத செஞ்சிருக்க கூடாது. கோமதி சொன்னதும் சரிதான். அப்பா பேச்ச கேட்டது தப்பு. நான் அத செஞ்சிருக்க கூடாது. அப்பா பாவம் அவரு என்ன பண்ணுவாரு. அவரும் அத இன்னும் நம்பறாரு. நாம நல்லாருக்கணும்னு நினைச்சாரு. நான்தான் செஞ்சு அவமானப்பட்டேன்”
‘அப்பா கனவுலகத்துல வாழ்ந்துக்கிட்டுருக்கார் .யதார்த்த வாழ்க்கை புரியாமல் வாழறதனால் தான் அவரு இன்னும் சன்யாசியா இருக்கார். அவருடைய இந்த யோசனையை நாம கேட்கலாமா. எனக்கும் பேராசை எட்டி பார்த்துச்சு, என் தப்புதான்’
‘மாய மந்திரம் நடைமுறை வாழ்க்கைக்கு எப்படி சாத்தியம் ஆகும் , அப்படி நடந்தால் எல்லோரும் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆகிவிடுவாங்களே. சரி விடு. நாளைக்கு மொத வேலையா முத்துவை போய் பார்த்துட்டு நம்ம நிலத்தை நல்ல விலைக்கு வித்து தரேன்னு சொன்னான். அதன்படி வித்து கடனை அடைச்சு , புது தொழிலை தொடங்கி பொழப்ப பாக்கணும்’ நினைத்துவிட்டு உறங்கினான்.
அடுத்த நாள் காலை சத்திரபட்டியில் இருக்கும் முத்துவை பார்க்க சென்றான். நிலத்தை விற்க மனசில்லாமல் இருந்தாலும் வேறு வழியில்லை என்று தேற்றிக் கொண்டான்.
அதன்படி முத்துவை சந்தித்து நிலம் விற்று கொடுக்க பேசினான். அதில் ஒருவர் அந்த நிலத்தை நல்ல விலைக்கு வாங்க விருப்பம் தெரிவித்தார், பத்துநாளில் பணம் தயார் செய்தவுடன் பத்திர பதிவு செய்துகொ ள்வோம் என முடிவு எடுத்தார்கள்
போன வேலை நல்லபடியாக முடிந்தது, அதனால் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி கொண்டிருந்தான்.
பத்மனுக்கு திடீர் யோசனை. மேலூர் போகும் வழியில்தான் அப்பா தங்கியிருக்கும் மடம். போற வழிதானே, அவரை ஒரு எட்டு பார்த்துவிட்டு வரலாம். அந்த இடம் ஒரு பெரிய சிவன்கோவில்.உள்ளே ஒரு மடத்தில்தான் பலவருட காலமாக அப்பா தங்கிருக்கார். நான் சிறு வயதில் போனது, அப்புறம் என் திருமணத்துக்கு அப்பாவுடன் பத்திரிக்கை வைத்து கும்பிட போனதுதான். அதற்கப்புறம் போனதில்லை. எப்ப போனாலும் அங்கே அவரை பார்க்கலாம்
புது தொழில் தொடங்க அப்பாவிடமும், சாமியிடமும் ஆசிர்வாதம் வாங்கி வரலாம். சரி இன்று அப்பாவை சந்தித்து விட்டே போவோம்னு முடிவெடுத்தான். அன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது . மழை வரும்முன் வீடு திரும்பவேண்டும் நினைத்துக் கொண்டே சென்றான்.
மேலூர் கருங்காலக்குடி ஊரில் வந்திறங்கினான். கோவில் உள்ளே நுழைந்து நேராக பின்புறம் சென்றான் .அங்கே மடத்தில் அப்பாவை தேடினான். மடம்முழுக்க தேடி பார்த்தான். எங்கும் தென்படவில்லை, அங்கே ஒரு சன்யாசி உட்கார்த்திருந்தார் .
அவரிடம் சென்று ”அய்யா ”
”சொல்லுங்க தம்பி ”
”இங்க விஸ்வநாதன் ஒருத்தர் இருப்பாரே , அவரு எங்கேன்னு தெரியுங்களா ?”
”யாரு? எந்த விஸ்வநாதன் ?”
”அவனியாபுரம் நாட்டுவைத்தியர் விஸ்வநாதன், ரொம்ப வருடமா இங்கதான் தங்கிருக்கார் .”
சிறிது நேர மௌனத்துக்கு பிறகு ”நீங்க யாரு?”
”நான்தாங்க அவர் மவன் பத்மநாபன், ஊர்லருந்து வந்திருக்கேன். அவர பார்த்துட்டு போலாம்னு வந்தேன்”
மேலும் கீழும் பார்த்த அந்த பெரியவர், “மவன்னு சொல்றிங்க, அவரு இறந்தது கூடவா தெரியாது. அவரு இறந்து ஒரு வருட ஆச்சு , இப்ப வந்து பார்க்கறீங்க”
ஒரு கணம் திகைத்து பின், ”இல்லை அய்யா, போன மாசந்தான் அவரை பார்த்தேன். நான் சொல்றது வைத்தியர் விஸ்வநாதன”
”தெரியும் பா ! வைத்தியர் விஸ்வநாதநத்தான். அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். மகனுக்கு துணி வியாபாரம், மகள் பட்டனத்தில இருக்கு. அவர எனக்கு நல்லா தெரியும். அவர் இறந்தே வருஷம் இருக்குமே. போன மாசம் எப்படி பார்த்துருப்பே”
திண்ணையில் அப்படியே உட்கார்ந்தான் அதிர்ச்சியில் உறைந்தான்.
‘இறந்துட்டாரா? இருக்காது .நான்தான் அவரை பார்த்தேனே போன மாசம். ஆம் ,அவர்தான் எனக்கு இரும்பை தங்கமாக்கும் வித்தை சொன்னாரே . ஆனால் இந்த பெரியவர் சொல்லும் தகவலும் உண்மைதான். எப்படி இரண்டும் சாத்தியமாகும்?’
அதிர்ச்சியும் ,அழுகையும் முகத்தில் கண்ணில் முட்டிக்கொண்டு நின்றது. நான்தான் பார்த்தேன் பேசினேன். என்னிடம் பையை கொடுத்தார். அவர் சொல்லாமல் எனக்கு எப்படி அந்த ஓலை கிடைக்கும், எனக்கு எப்படி மந்திரம் தெரியும். எது நிஜம், எது கனவு என தெரியாமல் குழப்பத்துடன் வீடு சேர்ந்தான் . நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்தான் .
ஒருவேளை அப்பா வந்தது கனவா? கனவுன்னா ,அந்த மந்திரம் இறந்து போன ஒருவர் என்னிடம் வந்து எனக்கு எதுக்கு தங்கமாக்கும் வித்தையெல்லாம் சொல்லணும். அந்த ஓலை எப்படி கிடைத்தது. எல்லாம் சரியென்றால் அவர் சொன்ன வித்தை ஏன் பலிக்கல, இறந்த ஒருவர் நேரில் வருவது அற்புதம் என்றால் ஏன் அந்த முயற்சி தோக்கணும்?
……தோக்கணும்?
………தோக்கணும்?
நேராக கொல்லைப்புறம் சென்றான். பானை உடைத்த இடத்துக்கு சென்றான் .எல்லாம் சிதறி கிடந்தது. ஓலை, மஞ்சள் புத்தகம் கிழிந்து கிடந்தது. சிவலிங்க படிகம் மண்ணுள் புதைந்து கிடந்தது. சில்லு சில்லாக பானையின் அடிப்பாகம் சிதறி கிடந்தது .
அதன் மேல்வாய் மட்டும் அப்படியே இருந்தது. பானையை சுற்றி முற்றி பார்த்தான் .அந்த கருப்பு கரைசல் நாலாபுறமும் சிதறி கிடந்ததிருந்தது. சிதறிய கரைசல் ஒரு தாரை போன்று இறுகி கிடந்தது. வேறு ஒன்றும் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை .
தீர யோசித்தான். அங்கு அடுப்பு வைக்க வைத்திருக்கும் கருங்கல்லில் மேலே அந்த கருப்பு கரைசல் ஊற்றி கிடந்திருந்தது. அந்த கல்லை இறுக்கி பிடித்து கொண்டிருந்தது. கருங்கல்லின் கூறிய நுனியில் ஒரு பொட்டு அளவு கரைசல் பிளந்து கிடந்து உள்ளே மஞ்சள் நிறத்துடன் ஒளி மின்னியது. ஒரு சிறிய குச்சியினை விட்டு நோண்டி பார்த்தான்.
பிறகு அருகில் உள்ள குவளையில் தண்ணீரை எடுத்து அந்த கல்லில் உள்ள இறுகிய நிலையில் உள்ள அந்த கரைசலை தண்ணீர் கொண்டு கழுவினான் .மேலே உள்ள கருப்பு நிறம் மெல்ல மெல்ல கரைந்து, முற்றிலும் நீங்கி பின் பொன்னிற மஞ்சள் தன்மை கொண்டு உலோகம் போன்று பளபளத்தது.
அதிர்ச்சியில் மூர்ச்சையானான். ஆம் அது தங்கமேதான். அங்கே சிதறி கிடந்த கருப்பு நிற இறுகிய கரைசல் அனைத்தும் தங்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதை மெல்ல உணர ஆரம்பித்தான். அவனது கைகளில் ரோமங்கள் மெல்லிதாக சிலிர்த்திருப்பதை உணர்ந்தான் .
இப்போது அவனுடைய எல்லா கேள்விக்கும் விடை கிடைத்தது. மகன் படும் கஷ்டத்தை தீர்க்க இறந்துபோன அப்பாவின் ஆன்மா நேரில் வந்து அவரின் பொன் வித்தையை சொல்லி கொடுத்து, அதன் மூலம் அவன் கஷ்டம் நீக்க நேரில் அருளியிருக்கார் .
இவ்வளவு நேரம் தந்தையின் மறைவினால் அடக்கி வைத்திருந்த அழுகையை தன் சோதனை முயற்சிற்கு கடைசியில் கிடைத்த பலனயும், இறந்தும் நேரில் வந்து தன்னை காப்பாற்றிய தந்தையையும் நினைத்து கடைசியில் நொடியில் ‘ஓவென’ பீறிட்டு மண்ணில் விழுந்து அழுதான்.
உள்ளே இருந்த வெளியே வந்த கோமதி, அவன் அழுவதை பார்த்து புரியாமல் அருகில் நின்றாள். அவனோடு சேர்த்து அப்போது வானமும் மெல்ல அழத் தொடங்கியது. அவனது அழுகை அந்த மழையில் கரைந்தது.
மண்ணில் விழுந்த மழைத்துளிகள் தரையில் சிதறி கிடந்த கரைசலில் உள்ள கறுப்பு நிறத்தை மெல்ல கரைத்தது . அந்த கறுப்பு கரைசல்களெல்லாம் தங்கமாக மாறுவதை கண்டு உணர்ந்த கோமதி அதிர்ச்சியில் திகைத்து நின்றாள் .
சிறிது நேரத்தில், அந்த இடமே தங்க படுகைபோல் காட்சியளித்தது.
(முற்றும்)
டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings