sahanamag.com
சிறுகதைகள்

தன் வினை தன்னைச் சுடும் (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

“கல்யாணமாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகி விட்டன. வீட்டில் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லை அம்மா என்று அழைக்க. மழலைமொழி காது குளிர கேட்க ஒரு வாரிசு இல்லை” என்று புலம்பினாள் காவேரி,  நளினாவின் மாமியார்.

நளினாவின் முகம் சுண்டி விட்டது. முதலில் மாமியாரின் குறையை ஒன்றும் பெரியதாக மதிக்கவில்லை. நாளடைவில் அவளுக்கே மனதில் பயம் புகுந்து விட்டது. அதனால் அவள் கணவன் மோகனையும் அழைத்துக் கொண்டு பரிசோதனை செய்து வந்தாள்.

மோகன் உடம்பில் எந்த குறையும் இல்லை என்று பரிசோதனை மூலம் தெரிந்தது. ஆனால் நளினாவிற்குத் தான் ஏதோ எண்டோமெட்ரியாஸிஸ் என்று மெடிக்கல் டெர்மில் கூறினார்கள் . அதனால் தான் அவளுக்குக் குழந்தை பிறப்பது தடையாகிறது என்றார்கள் டாக்டர்கள் .

“ஏங்க, நாம் ஏதாவது ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக் கொள்ளலாமா?” என்றாள் நளினா தன் கணவனிடம். ஆனால் மோகன் ஒன்றும் அவளுக்கு பதில் சொல்லவில்லை. மோகனுக்கு தன் மேலுள்ள அதிகப் பிரியத்தினால் குழந்தைக்காகத் தன்னை நிராகரிக்க மாட்டான் என்று திடமாக நம்பினாள்.

டெஸ்ட் எடுத்துப் பார்க்கும் வரை, ஒருவேளை தனக்குக் குறையிருந்தால் என்ன செய்வது என்று மோகன் நினைத்திருந்தான். அவனுக்கு எந்த குறையும் இல்லை என்று தெரிந்த பிறகு அவன் போக்கில் நாளடைவில் கொஞ்சம் வித்தியாசம் உணர்ந்தாள் நளினா .

நளினா ஒரு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்து, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு கணக்கும் அறிவியல் வகுப்புகளுக்கு ஆசிரியை. கை நிறைய சம்பளம். பே-கமிஷன் எல்லாம் வந்த பிறகு, ஆசிரியர்களின் சம்பளம் எல்லாம் உயர்ந்து விட்டது .

மோகனும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் சாதாரண அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறான். குழந்தைகள் இல்லை. வீட்டில் அம்மா மட்டும் தான்.

மோகன் தினமும் அலுவலகம் முடிந்தவுடன் நேரே நளினாவின் பள்ளிக்குச் சென்று அவளையும் தன் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு , நல்ல ஓட்டலிற்குப் போய் சாப்பிட்டுவிட்டு, அம்மாவிற்கும் ஏதாவது ‘லைட்’ டாக டிபன் வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் போவது வழக்கம்.

சில நாட்களில் ஓட்டலில் இருந்து அப்படியே பீச் அல்லது ஏதாவது ஒரு மாலிற்கு செல்வது வழக்கம். ஆனால் இப்போதெல்லாம் அதாவது குழந்தை பெற்றுக் கொள்ள அவன் உடம்பில் குறையேதும் இல்லை என்று மருத்துவ ரீதியாக தெரிந்த பிறகு அவன் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தன. இப்போதெல்லாம் நளினாவைப் பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல மோஹன் வருவதில்லை

சில நாட்கள் அலுவலகத்தில் வேலை அதிகம் என்பான். சில சமயங்களில் நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருக்கிறது என்பான். மொத்தத்தில் அவளைத் தவிர்க்கிறான் என்று அவள் உள் மனது அவளுக்கு உணர்த்தியது. ஆனால் நளினாவிற்கோ அவனைப் பிரிந்து வாழ்வதை விட உயிர் விடுவது சுலபம் என்று மனதில் தோன்றியது.

இரவிலும் வெகு நேரம் கழித்துத் தான் வீட்டிற்க்கு வருகிறான். சில நேரங்களில் மது மயக்கத்தில் கதகளி ஆடிக் கொண்டு வருவான். அப்போதெல்லாம் நளினாவிற்கு  அவன் அருகில் நெருங்கவே பயமாக இருக்கும். அவன் அம்மா தான் அவனை அந்த நேரத்தில் கவனித்துக் கொள்வாள். கொஞ்சம் கொஞ்சமாக மோகன் அவளிடமிருந்து விலகிப் போவது போல் தோன்றும்.

எப்போதாவது சில நேரங்களில் மட்டும் இவளிடம் பேசுவான். அவன் அம்மாவிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் இவளைப் பார்த்ததும் இருவருமே பேச்சை நிறுத்தி விடுவார்கள் .

அவன் அம்மாவிடம் பேசுவதை இவள் ஒருநாளும் பேசக் கூடாது என்று சொன்னதில்லை. ஆனாலும் பேசிக்கொண்டு இருப்பதை’ டக்’ கென்று நிறுத்திக் கொள்ளும் போது நளினாவிற்குக் கோபம் வரும் .

ஒரு நாள் மோகனிடம், “மோஹன், இராவணனுக்கு மட்டும் பத்து தலைகள் இல்லை, எல்லா ஆண்களுக்கும் பத்து தலைகள் தான்” என்றாள்

காவேரி , அவள் மாமியார் – வியப்புடன் புரியாமல் அவளை உறுத்துப் பார்த்தாள் .

“என்ன உளறுகிறாய்? ” என்றான் மோஹன்    .

“நானா உளறுகிறேன்! உங்களுக்குத் தான் உங்கள் அம்மாவிடம் ரகசியம் பேசும் போது ஒரு முகம். பொதுவில் பேசும் போது வேறு முகம். மனைவியிடம் பிரியமாக இருக்கும் போது ஒரு முகம். அதே மனைவி உங்களுக்குப் பிடிக்காவிட்டால் வேறு முகம். நண்பர்களிடம் மாறுபட்ட முகம். இப்படிப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்கள். நான் சொன்னது சரிதானே?” என்றாள் கேலியாக.

“குழந்தை இல்லையே என்ற கவலை அவனுக்கு, நீ அவனை அறிவில்லாமல் கேலி செய்து கொண்டு இருக்கிறாயே!” என்றாள் கோபத்துடன் காவேரி .

 “தேவையில்லாத கவலை. அத்தை, இந்த காலத்தில் இதெற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். செயற்கை முறையில் கருத்தரித்தல் , அநாதை குழந்தையை தத்தெடுத்து வளர்த்தல் ஆகிய பல வழிகளில் நம் கஷ்டத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம்” நளினா .  

“ஆனால் அந்த வழியில் போக வேண்டும் என்று என் மகனுக்கு ஒன்றும் தலையெழுத்து இல்லை. அவனுக்குத்தான் உடம்பில் ஒன்றும் குறையில்லையே ! அவன் நினைத்தால் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொள்ளலாம். யார் பெத்த பிள்ளையோ இவனை ஏன் அப்பா என்று கூப்பிட வேண்டும்?” என்று பயங்கரமாகக் கூச்சலிட்டாள் .

“என்ன மோஹன், ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு உங்கம்மா இப்படி பயங்கரமாகக் கத்துகிறார்களே!” என்றாள் நளினா மெதுவாக .

 “எது ஒன்றுமே இல்லாத விஷயம்? நமக்கென்று ஒரு குழந்தையில்லாதது எங்க அம்மாவிற்கு மிகவும் மனம் வருத்தமாக இருக்கிறது . ‘செத்தால் கொள்ளிபோடப் பிள்ளை இல்லையே ‘ என்று வருத்தப்படுகிறார்கள்” என்றான் எங்கோ முகத்தைத் திருப்பிக் கொண்டு.

“இப்படியே எப்போது பார்த்தாலும் நீங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டும், உங்கள் அம்மா சண்டைக்கு இழுத்துக் கொண்டும் இருந்தால் இதற்கு முடிவு தான் என்ன?” என்றாள் நளினா .

“முடிவு உன் கையில் தான் இருக்கிறது” காவேரி .

 “நான் என்ன செய்ய வேண்டும்?” நளினா .

“அவனுக்கு வேறு ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்கு நீ விவாகரத்திற்கு சம்மதிக்க வேண்டும்” காவேரி .

“அதற்கு உங்கள் பிள்ளைக்கு சம்மதமா அத்தை?” நளினா.

 “அவன் சம்பந்தமில்லாமல் நான் எப்படி சொல்ல முடியும் ?” காவேரி .

குடும்ப நல கோர்ட் உத்தரவுப்படி இருவரும் ஆறுமாதம் ஒரே வீட்டில் இருந்து விவாகரத்து பெற்றனர். நளினா விவாகரத்திற்குப் பிறகு தன் அம்மாவின் வீட்டின் அருகில் ஒரு சிறிய வீடு வாடகைக்குப் பார்த்துக் கொண்டாள். வேலையும் அந்த ஊரில் மாற்றிக் கொண்டாள்.

இதற்கிடையில் மோஹன் அவன் அத்தை மகளைத் திருமணம் செய்து கொண்டான். அதன் பிறகு பல இடங்களில் நளினா, மோஹனைப் பார்த்தாள். இவள் பழகிய தோஷத்திற்காக சிரித்தால்  கூட மோஹன் முறைத்துக் கொண்டு போய்விடுவான்.

பத்து ஆண்டுகள் ஓடிவிட்டன. கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டு நின்றவள் சிரித்துக் கொண்டாள். தலைமுடி கருப்பும் வெள்ளையுமாக வயதையும், மனதில் உள்ள கவலையையும் காட்டியது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் ‘ஹிக்கின் பாதம்ஸ் என்னும் புத்தகக் கடைக்கு சில நாவல்கள் வாங்கச் சென்றிருந்தாள் நளினா. அங்கே மோஹனும் தன் இரண்டாவது மனைவியுடனும், மூன்று பிள்ளைகளுடனும் வந்திருந்தான் .

நளினாவிற்கு, மோஹன் தன் கணவன் என்ற எண்ணம் எப்போதோ மறைந்து விட்டது. பழகிய ஆளை நேருக்கு நேர் பார்த்த பிறகு பேசாமல் போனால் மரியாதையாக இருக்காது என்பதனால் , “மோஹன் நன்றாக இருக்கிறீர்களா ?” என்றாள் .

அவன் “ஹும்ஹும்” என்று உருமிவிட்டு, தன் மனைவியின் பக்கம் திரும்பி, “ஏய், பிள்ளைகளை காருக்கு அழைத்துப் போ. சில பேர் கண் ரொம்ப பொல்லாதது. கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக்கூடாது” என்றான்.

‘அடப்பாவி’ என்று மனதில் நினைத்துக் கொண்டு, வாங்கிய புத்தகங்களுக்கு பணம் செலுத்தச் சென்று விட்டாள் நளினா .

காலங்கள் வேகமாகப் பறந்தன. யார் தனக்குத் துணையென்று நினைத்தாளோ அவர்கள் யாரும் இப்போது அவளுடன் ‌இல்லை. ரயில்பயணத்தில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பயணிகள் இறங்கிப் போவது போல் ஒவ்வொரு நிலையில் பிரிந்தார்கள்.

சாகும்வரை கூட இருப்பான் என்று நம்பிய தாலி கட்டிய கணவன் உயிருடன் இருக்கும் போதே பிரிந்தான். அவளை இந்த உலகத்தில் அறிமுகப் படுத்திய பெற்றோர் உயிர் நீங்கிச் பிரிந்தனர். தனிமை சுட்டாலும் வாழ்க்கப் பாடத்தை நன்றாக உணர்ந்து கொண்டாள் நளினா. 

பணியிலிருந்து ஓய்வும் பெற்றாள். வங்கிக்கடனில் ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்  கடற்கரை ஓரமாக குறைந்த விலையில் வாங்கி வசித்து வந்தாள். ஓய்வு பெறும்  போது வீட்டின் மேல் இருந்த வங்கிக் கடனும் தீர்ந்து விட்டது.

சேமிப்புக் கணக்கில் சில லட்சங்கள் இருந்தன, ஆனால்  ஓய்வுபெற்ற பிறகு அவளுக்குத் தனிமை மிகவும் சலிப்பு தட்டியது.

மாலையில் கொஞ்ச நேரம் அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போவது வழக்கம். அன்றும் அப்படியே சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாள்.

அப்போது எதிரே நிழலாடியது . நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள். அவள் எக்ஸ்- மாமியார் காவேரி . கணவனே எக்ஸ்-ஹஸ்பெண்ட் ஆன பிறகு மாமியாரும் எக்ஸ் தானே. மிகவும் பழையதாய் நைந்து போன சின்னாளபட்டி சேலை, வளைந்து நெளிந்த இரண்டு வளையல்கள். காய்ந்து சருகாய் போன உடம்பு . பழக்க தோஷத்தில் எழுந்து நின்றாள் நளினா .

“அம்மா , நீங்களா?” என்றாள் .

“ஆமாண்டியம்மா ! நானே தான். உன்னைக் கொடுமைப் படுத்தி அனுப்பியதற்கு நன்றாகவே அனுபவிக்கிறேன்” என்றவள்  புடவைக் தலைப்பால்  முகத்தை மூடி அழுதாள்

“கோவிலில் வைத்து அழாதீர்கள் அம்மா. வாருங்கள் வெளியே போய் பேசலாம்” என்ற நளினா அருகில் இருந்த ஒரு உடுப்பி ஓட்டலுக்கு அழைத்துச் சென்றாள். ஒரு நெய் மசாலா தோசையும் , தயிர் வடையும் , பிறகு ஒரு காப்பி என்று காவேரிக்கு வாங்கிக் கொடுத்தாள் . நளினா ஒரு காபி மட்டும் குடித்தாள்.

தன் அபார்ட்மெண்ட்டிற்கு அழைத்துப் போனாள். பிள்ளையும் , மருமகளும் இவளை மதித்து பேசுவதில்லை என்றும், எல்லா வேலைகளையும் இவளையே செய்யச் சொல்கிறார்கள் என்றும் புலம்பினாள்.

“நான் உன்னுடனே இருந்து விடட்டுமா நளினா” என்று கெஞ்சினாள்

“இல்லையம்மா , நானே இந்த வீட்டை வாடகைக்கு விட்டு விட்டேன். இன்னும் ஒரு வாரத்தில் கோவையில் ஒரு முதியோர் இல்லத்தில் போய் சேரப் போகிறேன். என்னால் முடிந்தது” என்று ஐயாயிரம் ரூபாய் அவளிடம் கொடுத்தாள்.

“செத்த பிறகு கொள்ளி போட பிள்ளை வேண்டும் என்று உன்னை விரட்டினோம். ஆனால் இப்போது எனக்கு உயிரோடு கொள்ளி போட்டு விடுவார்கள் போலிருக்கிறது” என்று அழுதாள் காவேரி

நளினாவிற்கு முதியோர் இல்லத்தில் பொழுது நன்றாகவே போனது. கடவுளால் கை விடப்பட்டவர்கள் நளினாவைப் போல் நிறைய மக்கள் இருந்தனர். அவர்கள் ஒன்று கூடி நிறைய பொது காரியங்கள் செய்து வந்தனர். பொழுது நன்றாகவே போனது .

சில வருடங்கள் ஓடின. அப்போது தான் எதிர்பாராதவிதமாக மோஹன் அந்த இல்லத்தில் வந்து சேர்ந்தான். அவனாகவே அவளிடம் வந்து பேசினான் .

“உங்களுக்குத் தான் பிள்ளைகள் இருக்கிறார்களே ! நீங்கள் ஏன் இங்கு வந்து சேர்ந்தீர்கள்? “

“நான் எத்தனை பேருக்கு துரோகம் செய்திருக்கிறேன். கடவுள் என் கணக்கை சரியாக வைத்திருக்கிறார், அதனால் என் பிள்ளைகள் என்னை‌ விரட்டி விட்டார்கள்” என்றான் மோஹன்

“உங்கள் மனைவி?”

“கொள்ளி போட பிள்ளை வேண்டும் என்று தானே இரண்டாம் திருமணம் செய்து கொண்டேன் என்றால் ‘கொரானாவில் செய்தவர்களுக்கு யார் கொள்ளி போடுகிறார்கள்?’ என்கிறாள் என் இரண்டாம் மனைவி. வினை விதைத்தவன் வினை தானே அறுக்க முடியும்!” என்று பெருமூச்செறிந்தான் .

கண்களில் கசிந்த நீரைத் துடைத்துக் கொண்டாள் நளினா .

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!