Science Fiction Story Contest 2021 Entries சிறுகதைகள்

மரண ஆசை (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ திருமயம் பெ.பாண்டியன், காரைக்குடி

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

டற்கரையில், காலை நடைபயிற்சி மேற்கொண்டிருந்த சயின்டிஸ்ட் டேனியல், கடலில் விழுந்து சாகப் போன அவனை தடுத்து, தனது ஆராய்ச்சி கூடத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

கட்டுடல், நரைக்காத முடி, திரண்ட தோள்கள், அகன்ற முதுகு, அழகிய முகம் என அவனொரு இளவரசன் போலிருந்தான்.

அழுது கொண்டேயிருந்த அவனை ஆறுதல்படுத்தியவர், “வாழவேண்டிய சின்ன பையன் நீ. உனக்கு என்ன பிரச்சனை? ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றாய்..? காதல் தோல்வியா? கடன் பிரச்சினையா? அல்லது தீராத வியாதியா..?” கேட்டார்.

“இது எதுவுமே இல்லை ஐயா. எனக்கு பெண் வாடையே பிடிக்காது. பணம் ஒரு பிரச்சினையே இல்லை, நிறைய இருக்கிறது.  இப்போதைக்கு நோயுமில்லை. மேலும், நான் சின்ன பையனுமில்லை. என் பிரச்சினையே வேறு… ” சொன்னான்.

அதைக் கேட்டு ஆச்சரியமானவர், “உன் பிரச்சினை என்னவென்று சொல், தெரிந்து கொள்கிறேன்…” என்றார்.

“சொல்கிறேன். ஆனால், தயவுகூர்ந்து நான் சொல்வதெல்லாம் உண்மை தான் என்பதை நீங்கள் நம்ப வேண்டும்.” என்றான்.

“பீடிகை வேண்டாம், நேரத்தை விரயமாக்காமல் விரைவாக சொல். எனக்கு பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது” நடைபயிற்சி களைப்பிலிருந்த அவர் சின்னதாக உடம்பு நெளித்து சோம்பல் முறித்தார்.

“என் கதையை பலரிடம் சொல்லியிருக்கிறேன், யாரும் நம்பவில்லை. நீங்களாவது நான் சொல்வதை நம்ப வேண்டும். அதற்காகத் தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்” என்றவனை டேனியல் விசித்திரமாக பார்த்தார்.

“நம்புவதும் நம்பாததும் நீ சொல்லும் விஷயத்தைப் பொறுத்திருக்கிறது…” என்றார்.

“கோபிக்காதீர்கள் ஐயா! நான் தற்கொலைக்கு முயன்றாலும், என்னால் என் சாவை நானே தேடிக் கொள்ள முடியாது. அது தான் என் பிரச்சினை…” என்றதும்,

அவனை ஆச்சரியமாகப் பார்த்த அவர், “நீயே சாவை தேடிக் கொள்ளுமளவுக்கு உனக்கு  என்ன பிரச்சினை…?” மீண்டும் கேட்டார்.

“சாவே இல்லாமல் பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்வது தான்..!” என்றான் அவன்.

“புரியவில்லை, விரிவாகச் சொல்…”

“ஐயா! நான் 13ம் நூற்றாண்டில் வாழ்ந்த குலசேகர பாண்டியனது ஆசை நாயகிகளில் ஒருவரது மகன். மன்னரது மகனாக நான் இருந்தாலும், எனக்கு அரியணை எல்லாம் கிடைக்கவில்லை. நானும் அதை விரும்பவில்லை.

படையெடுப்பும், உயிரிழப்பும் எனக்கு அறவே பிடிக்கவில்லை. நான் காயல்பட்டிணம் கடற்கரையோரம் வாழ்ந்து வந்ததால், கடலின் அழகை ரசித்து பார்த்தபடியே காலத்தை கடத்தி விடலாம் என எண்ணினேன்.

அங்கே சீனர்கள், பாரசீகர்கள், அரேபியர்கள் எல்லாம் வணிகத்திற்காக வருவார்கள். அரபு புரவிகள் அதிகம் விற்பனையாகும். நமது மரகத கற்களை வெளிநாட்டு வணிகர்கள் விரும்பி வாங்குவார்கள். முத்து குளிப்பவர்களுக்கு அரசாங்கத்தில் நல்ல மரியாதை இருந்தது. அந்த அழகிய கடற்கரையோரம் வாழ்வதே ஒரு பெரிய ஆனந்தம்.

அப்போது ஒருநாள் எங்கள் அரண்மனை வைத்தியர் வந்து, சில கடல்பாசிகளையும், சில காட்டு பச்சிலைகளையும் கலந்து தான் மருந்து செய்திருப்பதாகவும், அதை சாப்பிட்டால் ஆயிரம் ஆண்டுகள் உயிருடன் வாழலாம் என்றும் சொன்னார்.

அதை பதினெட்டு வயதுக்கு கீழே உள்ள ஒருவர் சாப்பிட்டால் தான் மருந்து வேலை செய்யுமென்றும், இதை கொடுக்க அரண்மனை வாரிசாக சரியான தகுதியுடன் தாங்கள் ஒருவர் தான் உள்ளீர்கள் என்றும் என்னிடம் கொடுத்தார்.

வைத்தியருக்கு குழந்தை இல்லாததால் அவர் என்னை வாரிசாக தத்தெடுக்க விரும்பி, மன்னரிடம் கோரிக்கை வைத்து வந்ததை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். மன்னர் ஏனோ முடிவு எதுவும் சொல்லாமல் தட்டிக் கழித்து வந்தார்.

உண்மையில் அப்போது நான் அதை நம்பவில்லை. எனக்கு சந்தேகம் தான், நம்மை ஏமாற்றுகிறார் என்றுதான் எண்ணினேன். இருந்தாலும் மறுக்க மனம் வரவில்லை. அதனால் அதனை சும்மா பேருக்கு வாங்கிக் கொண்டேன்.

அந்த மருந்தின் மேல் எனக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. ஆனாலும், ஒரு குருட்டாசையில் ஒருநாள் அதையெடுத்து குடித்து விட்டேன். அவர் கொடுத்த மருந்து ஒரு அவுன்ஸ் கூட இருக்காது. குடித்ததும் எதுவும் தெரியவில்லை. உடனே எந்த மாற்றமும் நடந்து விடவில்லை. லேசாய் இனித்தது, அவ்வளவு தான்.

உள்ளே போய் வயிற்று எரிச்சலையோ, பேதியையோ உண்டாக்கவில்லை. அதனால் அவர் நம்மை ஏமாற்றியிருக்கிறார் என நினைத்து அதை மறந்தும், மன்னித்தும் விட்டேன். நான் சொல்வதை கேட்கிறீர்களா?”

“மேலே சொல், கேட்டுக் கொண்டு தானிருக்கிறேன்” 

“அது நிஜமாகவே வேலை செய்து விட்டது ஐயா…”

“எப்படி தெரிந்து கொண்டாய்…?”

“என்னுடன் வாழ்ந்த எல்லோரும் இறந்து விட்டார்கள், நான் மட்டும் இறக்கவில்லை. பாண்டியர் ஆட்சி கவிழ்ந்து, ஆங்கிலேயர் படையெடுப்பு நடந்து, சுதந்திர போராட்டம் எல்லாம் முடிந்த பிறகு  இறுதியில் மக்களாட்சி முறை வந்தது. அதில் ஆதார், பேன் கார்டெல்லாம் இணைக்கச் சொன்னார்கள். மக்கள் அளிக்கும் வரிமுறைகள்  மாறியிருந்தது. கைபேசி, கம்ப்யூட்டர் என சகலமும் முன்னேற்றம். 

அதுமட்டுமல்ல… போர்முறைகளும் மாறியிருந்தது. கத்தியின்றி, ரத்தமின்றி பயோ-வார்கள் நடந்தது. கொரோனாவில் கொத்து கொத்தாக மனிதர்கள் இறந்தார்கள், நான் இறக்கவில்லை. இப்படி பல நூற்றாண்டுகள் சமாளித்து இதோ உங்கள் முன் நிற்கிறேனே நானே அதற்கு சாட்சி…” சொன்னான்.

“இதையெல்லாம்  கூகுள் தட்டி தெரிந்து கொண்டு,  நீயாகவே கூட கப்சா விடலாம் இல்லையா?”

“இல்லையய்யா! நான் பேசுவதின் உண்மை தன்மையை உங்களின் மைண்ட் அப்சர்வேசர் கருவியின் மூலம் பரிசோதித்து நான் சொல்வது உண்மையா..? நம்பலாமா? வேண்டாமா? என்பதை முடிவு  செய்யலாம்…” சொன்னான்.

“அதை பிறகு செய்கிறேன். இப்போது நீ சொல்ல வந்ததை முழுமையாக சொல்லி முடி…” டேனியல் சொல்லவும், அவன் தொடர்ந்தான்.

“என்னால் இனியும் வாழ முடியாது. இந்த உலகம் எனக்கு போரடிக்கிறது. வாழ்க்கை அலுப்பு தட்டுகிறது. இந்த உலகில் நான் மேலும் வாழ்வதற்கு எந்த சந்தோஷமும் இல்லை. செய்ய வேண்டிய கடமையும் இல்லை. என் மனைவி குழந்தைகள் எல்லோரும் இறந்துவிட்டனர். நான் மட்டும் வாழ பிடிக்கவில்லை. நிரம்ப வாழ்ந்து அனுபவித்து விட்டேன். போதும்… திருப்தியாகி விட்டேன். என் இப்போதைய தேவை சாவு ஒன்று தான். அதை நிறைவேற்றிக் கொடுங்கள். பலநூறு ஆண்டுகளாக நான் முயற்சித்தும் என்னால் சாகவே முடியவில்லை…” அவன் அழுதான்.

“ஏன் அழுகிறாய் பொறு, உனக்கு நான் உதவுகிறேன். அதற்கு முன் ஒரு கேள்வி…”

“கேளுங்கள் ஐயா!”

“உனக்கு இந்த மருந்தை  கொடுத்த வைத்தியர் உயிருடன் இருக்கிறாரா…தேடிப் பார்த்தாயா…?”

“அவர் இறந்து விட்டார்…”

“வேறு யாருக்கேனும் இந்த மருந்தை அவர் கொடுத்தாரா…?”

“இல்லை. இந்த மருந்தை அவர் ஒருமுறை மட்டுமே தயாரித்ததாகவும், அதன் குறிப்புகளை கூட உடனே அழித்து விட்டதாகவும் சொன்னார்…”

‘ச்சே..! இன்றைக்கு அந்த மருந்து இருந்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம்..!’ மனசுக்குள்ளாக சொல்லிக் கொண்டார் டேனியல்.

“நீ மன்னர் பரம்பரை, பல நூறாண்டுகளுக்கு முந்தியவன் என்கிறாய். ஆனால், உன் தமிழ் பேச்சில், உச்சரிப்பில் வித்தியாசம் எதுவும் தெரியவில்லையே…” கேட்டார்.

“நடைமுறை தமிழை மட்டுமல்ல. இந்தி, ஆங்கிலம் கூட கற்றுக் கொண்டிருக்கிறேன்…” என்றான் அவன்.

“வியப்பாக இருக்கிறது..!”

“வியப்படைய வேண்டாம்! என்னை எப்படியாவது கருணைக் கொலை செய்ய வேண்டும் ஐயா… உங்களது நவீன விஞ்ஞானத்தால் ஏதேனும் செய்ய முடியுமா எனப் பார்த்து என்னை கொலை செய்து விடுங்கள்…” சொன்னான்.

“சரி…” சொன்னவர் லேசர் துப்பாக்கியால் அவனை சுட்டார். 

அவன் சாகவில்லை. ஆசிட் எடுத்து ஊற்றிப் பார்த்தார். அவன் சாகவில்லை. விஷ ஊசிப் போட்டுப் பார்த்தார். அவன் சாகவில்லை.

“ஏய்! என்ன ஆச்சரியம், நீ சாகவே இல்லை..?”

“ஆமாம் ஐயா, அது தான் என் பிரச்சினையே…”

“அப்புறம் ஏன் திரும்ப, திரும்ப தற்கொலைக்கு முயன்று கொண்டிருந்தாய்?”

“என்றாவது ஒருநாள் மருந்தின் வீரியம் குறைந்து நான் இறந்து போக மாட்டேன்னா என்ற ஆசை தான்…!” சொன்னான்.

“உனக்கு தெரியுமா? நானும் மரணமில்லாத மருந்தை கண்டுபிடிக்கத் தான் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து கொண்டு வருகிறேன்…”

“வேண்டாம் ஐயா…என்னதான் மரணத்தை வென்று பல ஆண்டுகள் வாழ்ந்தாலும், இந்த வாழ்க்கை எளிதல்ல. பல போராட்டங்கள் நிரம்பியது. மரணம் தான் இருக்காதே தவிர,  மன அழுத்தம் இருக்கும். நோய் இருக்கும். வலி, வேதனை, பணக்கஷ்டம், வெறுப்பு, நிம்மதியின்மை என வாழ்க்கையில் பல சங்கடங்கள் இருக்கும். எப்போதும் சந்தோஷமே நிரம்பி வழியாது. அதனால் இந்த ஆராய்ச்சி எல்லாம் வேண்டாம். விட்டு விடுங்கள்…” கெஞ்சும் தொனியில் சொன்னான்.

கேட்ட டேனியல் சிரித்தார்.

“இந்த ஆராய்ச்சியில் நான் வெற்றி பெற்றால் விரைவில் உலக பணக்காரன் ஆகி விடுவேன். பணம் கொட்டிக் கொண்டேயிருக்கும். இந்த மருந்தை வாங்க உலகின் அத்தனை பணக்காரர்களும் போட்டி போடுவார்கள். என் புகழ் அகில உலகமெல்லாம் பரவும். அது மட்டுமா…? உலக மருத்துவ வரலாற்றில் என் பெயர் நீங்காத இடம்பெறும். இது எனக்கு கிடைக்கும் பெருமை. இதை பாதியில் விட முடியுமா? நினைக்கவே எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா?

வாழத்தெரியாதவன் நீ. நீ சொல்வதெல்லாம் பிற்போக்குவாதிகளின் முட்டாள்தனமான பேச்சு. உன் பேச்சை ஏற்க முடியாது. முடியாததை எல்லாம் முடித்துக் காட்டுவது தான் விஞ்ஞானம். கண்டுபிடிப்பின் பின் விளைவுகளைப் பற்றி எல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் எந்த ஆராய்ச்சியும் நடக்காது. 

அது ஒருபுறம் கிடக்கட்டும்…  நீ வா..உன்னை பரிசோதித்து பார்க்க வேண்டும். என் ஆராய்ச்சிக்கு ஏதாவது ஐடியாஸ் உன்னிடமிருந்து கிடைக்கலாம். மேலும்,  உன்னை சாகடிக்க முடியுமா? முடியாதா? என்பதையும் அப்போது தான் தீர்மானிக்கலாம்…” அழைத்தார்.

அவனும் உடற்கூறு ஆய்வுக்கு சம்மதித்தான்.

அவனை ஆராய்ச்சிக் கூடத்தில் படுக்க வைத்து  பல ஆய்வுகளை மேற்கொண்டார் டேனியல்.

ஆய்வு முடிவில், அவன் உடம்பில் இதயத்துடிப்பு, இரத்தம் போன்றவை இல்லை என்பதை தெரிந்து கொண்டார்.

மேலும், தன்னால் புரிந்து கொள்ள முடியாத, நவீன தன் விஞ்ஞானத்தால் விளக்க முடியாத ஏதோவொன்று அவனிடம் இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டார்.

நெற்றியை சுருக்கி, சுருக்கி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்.

பின் அவருக்கு தெரிந்த ஒரு மீடியேட்டரை அழைத்தார். விஷயத்தை சொன்னார்.

அவர் ஆவிகளோடு பேசக் கூடியவர். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார் டேனியல்.

மீடியேட்டர் ஆவிகள் உலகத்திலிருந்து யாரையோ அழைத்தார். அவரும் இவர் மீது வந்திறங்கினார். இறங்கியதும் அவர் உடம்பு மெல்ல சிலிர்த்து அடங்கியது. குரலை கனைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார்.

இருவரும் கவனமாக கேட்டனர்.

“மகனே! நான் தான் உன் அப்பா குலசேகர பாண்டியன். நீ சாக வேண்டியதில்லை. உனக்கு மரணமில்லா பெருவாழ்வு விதிக்கப்பட்டிருக்கிறது. நீ சாப்பிட்ட மரணமில்லா மருந்து உண்மையில் 2030ம் ஆண்டோடு காலாவதியாகி நீ இறந்து விட்டாய். இப்போது நீ வாழ்வது மரணமில்லாதவர்கள் வாழும் ஆன்மாலோகம்.

உன் ஒளி உருவ உடல் அழிவில்லாதது. ஆசைநாயகிகளாக பலரை  நான் வைத்துக் கொண்டதால் அங்கே எனக்கு அனுமதியில்லை. இங்கே நான் வேறொரு உலகத்தில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் .சரி…நீ ஏன் மீண்டும் பூமிக்குப் போனாய்…?” கேள்வி கேட்டார்.

“தெரியலையே…!” அனிச்சையாக பதில் கொடுத்தான் அவன்.

“ஏதேனும் கடமைகளுக்காக நீ அனுப்பப்பட்டிருக்கலாம்…”

அதன்பிறகு மீடியேட்டரிடமிருந்து பதிலில்லை. மீண்டும், மீண்டும் முயற்சித்தும் குலசேகர பாண்டியன் வரவேயில்லை.

“இவனது சொந்தங்களில் வேறு யாரையேனும் அழையுங்கள். குறிப்பாக அந்த அரண்மனை வைத்தியர்…” மீடியேட்டருக்கு கட்டளை போல சொன்னார் டேனியல்.

“முயற்சிக்கிறேன்…” என்றார் அவர்.

நீண்டநேர முயற்சி, பலன் எதுவும் தரவில்லை.

“மன்னியுங்கள் டேனியல். இவனது சொந்தத்தில் வேறு யாரும் ஆவிகள் உலகத்தில் இல்லை. மற்றவர்கள் யாவரும் இங்கே தண்டனை காலம் முடிந்து புண்ணிய உலகம் போயிருக்க வேண்டும்…” சொன்னார்.

அப்போது அருகே வந்த அவன், “நான் வேறு உலகமா? மறுபடி எப்படியய்யா நான் என் உலகத்திற்கு போவது…?” டேனியலை நச்சரிக்கத் தொடங்கினான். 

கடுப்பான டேனியல், “அதுக்கு நான் செத்தாதான்டா வழி தெரியும்…” என்றார்.

“அப்ப சாவு…” என்றவன் தன்னை மறந்து, டேனியலின் கழுத்தை நெறிக்கத் தொடங்கினான்.

மூச்சு திணறிய டேனியல், “விடுறா…வி..டு..றா..வி….டு….றா..றா..றா…” என சொன்னபடியே இந்த உலகின் இறுதிமூச்சை விட்டார். பார்த்துக் கொண்டிருந்த மீடியேட்டர், அங்கிருந்து தப்பித்தால் போதுமென ஓடினார்.

டேனியல் இறந்ததும், அவனின் பூலோக கடமை முடிந்ததாகக் கூறி, ஆன்மா லோகம் அவனை தன்பால் ஈர்த்துக் கொண்டது!

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!