in

ஆரஞ்சு மிட்டாய் (சிறுகதை) – ✍ ர. ரமேஷ், திருப்பூர் – இரா.ச.குமார் – ஆர்.இராணி, நெய்வேலி

ஆரஞ்சு மிட்டாய் (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ர. ரமேஷ், திருப்பூர்

“அடேய் முருகேசா எங்கடா இவ்ளோ அவசரமா போற எங்க போறான்னு சொல்லிட்டு போடா  நில்லுடா அடேய் நில்லு எங்க போறன்னு சொல்லிட்டு போடா” என்று வீதியில் நின்று கத்தினான் கண்ணன். அவன் கத்தியதை காதில் விழுகாத படி வேகமாக நடந்து சென்றான் முருகேசன்…

கண்ணனும் முருகேசனும் நெருங்கிய நண்பர்கள், ஒரே பள்ளியில் படிக்கிறார்கள். பக்கத்து பக்கத்து வீட்டில் தான் இருக்கிறார்கள்.

கண்ணனுக்கு முருகேசன் மீது தனி பிரியம் யாரிடமும் விட்டு க் கொடுக்க மாட்டான். எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஒரு நாள் பக்கத்து ஊரில் உள்ள கடையில் ஆரஞ்சு மிட்டாய் ஒன்று புதிதாக வந்துள்ளது என்று பள்ளியில் ஒருவன் கூறிக் கொண்டிருந்தான்.

இதைக் கேட்ட முருகேசன் எப்படியாவது இந்த மிட்டாயை வாங்கி சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்தான். ஆனால் முருகேசனுக்கு அம்மா இல்லை அப்பாவும் தம்பியும் மட்டுமே. அப்பா கூலி வேலை செய்வதால் அவரால் போதிய வருமானம் இல்லை. வறுமை அவ்வப்போது கண்ணன் பார்த்துக் கொள்வான்.

பள்ளி முடிந்து வீடு சென்ற முருகேசன் நேராக அப்பாவிடம் சென்று அப்பா அப்பா பக்கத்து ஊர்ல உள்ள கடையில புதுசா ஆரஞ்சு மிட்டாய் வந்துருக்காமாப்பா எனக்கு வாங்கி குடுப்பா என்று கேட்டு அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.

அதற்கு அப்பா  “நீ என்கிட்ட அடிவாங்கமா போக மாட்ட போல அப்பா கிட்ட காசு இல்லப்பா காசு வந்தது வாங்கி தர” என்று கூறிவிட்டு கிளம்பி போய் விட்டார். கண்களில் நீர் ததும்பி நிற்க வாடிய முகத்துடன் இருந்தான்.

கொஞ்சம் நேரம் அமைதியாக இருந்தவனுக்கு ஒரு யோசனை சரி அந்த மிட்டாய் எப்படி இருக்கும் என்று கடைக்கு சென்று பார்த்து விட்டு வருவோம் என்று முடிவு செய்து கிளம்பினான். அவசர அவசரமாக நடந்து சென்று கொண்டிருக்க இவன் இப்படி செல்வதை கண்ணன் பார்த்து விட்டான்.

“அடேய் முருகேசா எங்கடா இவ்ளோ அவசரமா போற எங்க போறான்னு சொல்லிட்டு போடா  நில்லுடா அடேய் நில்லு எங்க போறன்னு சொல்லிட்டு போடா” என்று வீதியில் நின்று கத்தினான் கண்ணன்.

அவன் கத்தியதை காதில் விழுகாத படி வேகமாக நடந்து சென்றான்

‘என்ன இவ நம்ம கூப்பிட்டாலும் நிக்க மாட்டிங்கிறா நம்ம கிட்ட சொல்லாம இவன் எங்கையும் போக மாட்டானே. சரி எங்க போறானு பின்னாடியே போய் பாப்போம்’ என்று முடிவு செய்து அவன் பின்னாலயே சென்றான் கண்ணன்.

ஒரு வழியாக அந்த கடையை கண்டுபிடித்து அந்த மிட்டாயை பார்த்தான் முருகேசன். ஆனால் அவனால் அதை காசு கொடுத்து வாங்க முடியாத நிலை. ஏக்கத்துடன் மிட்டாயையே பார்த்துக் கொண்டிருந்தான்.

உடன் படிப்பவர்கள் அந்த மிட்டாயை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்தான். அவர்களிடம் சென்று “எனக்கு கொஞ்சம் கொடுங்கள்” என்று கேட்க, அவர்கள் “கொடுக்க முடியாது” என்று சொல்லி அவனை கீழே தள்ளி விட்டனர்.

கையில் சிறு சிறு காயங்கள் இதை அனைத்தும் கவனித்தான் கண்ணன். கையில் காயங்களுடன் அழுது கொண்டே சென்றான் முருகேசன். மீண்டும் நடந்தே ஊர் வந்து சேர்ந்தான். வந்தவன் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து அழுது கொண்டே இருந்தான்.

கண்ணன் அங்கு வர “என்ன ஆச்சு?” என்று கேட்டான். நடந்த அனைத்தும் முருகேசன் கூற ஆறுதல் கூறினான் கண்ணன். ஆனாலும் முருகேசன் அழுகையை நிறுத்தவில்லை. எவ்வளவோ சொல்லியும் முருகேசன் அழுகை நிறுத்தவில்லை.

“டேய் முருகேசா இப்ப அழுகையை நிறுத்த போறயா இல்லையா சும்மா அழுதுட்டே இருக்க, இப்ப என்ன உனக்கு அந்த மிட்டாய் தானே வேணும். இப்ப இங்க வரும் நீ கண்ண மூடு” என்று கூறினான். கண்களை துடைத்துக் கொண்டு கண்களை மூடினான். சிறிது நேரம் கழித்து கண்ணன் கண்களை திறக்க சொல்ல கண்களை திறந்த பார்த்த முருகேசன்

வியப்பின் உச்சத்திற்கே சென்று விட்டான். கண்ணனின் கைகள் நிறைய ஆரஞ்சு மிட்டாய் .

“இதுக்கு தானே அழுதுட்டு இருந்த எடுத்துக்கோ ஆசை தீர சாப்பிடு” என்று கூறினான்.

“எனக்கு இந்த மிட்டாய்யை சாப்பிட ஆசை என்று உனக்கு எப்படி தெரியும்”

“நான் உன்ன கூப்பிட்டே இருந்தன் உன் காதுல கூட விழுகாம போய்ட்டு இருந்தான். சரினு உனக்கே தெரியாம உன் பின்னாடியே வந்து பாத்த அப்பதான் தெரிஞ்சுது. ஏண்டா என்கிட்ட சொல்லிருந்தா நான் வாங்கி குடுத்துருப்பன்ல அத விட்டு அவனுங்க கிட்ட போய் கேட்டு அவனுங்க உன்ன கீழ தள்ளி விட்டு இப்ப பாரு கையில காயம்” என்று திட்டினான். ஆனால் முருகேசனுக்கு மீண்டும் அழுகை வந்து விட்டது.

“என்னை மன்னிச்சிருடா அந்த மிட்டாய் மேல இருந்த ஆசைல இப்படி பண்ணிட்ட” என்று மன்னிப்பு கேட்டான்.

“சரி விடுடா நான் இருக்கும் வரை நீ யார் கிட்டையும் கையேந்தி நிக்க கூடாது” என்று கூற சத்தமாக அழுதான் முருகேசன்.

அவன் கைகளில் மிட்டாய்யை  கொடுத்து விட்டு அவன் கண்களை துடைத்து விட்டு இரண்டு மிட்டாய்யை ஊட்டிவிட்டான். அழுகை நின்று மிட்டாய்யை ரசித்து ருசித்தான். இதை பார்த்த கண்ணன் ஆனந்த கண்ணீருடன் அவனும் மிட்டாய்யை சுவைதான்.

 

இரா.ச.குமார்

விடிஞ்சா காந்தி ஜெயந்தி. எப்படா விடியும்னு எதிர்பார்த்து, என்னையும் அறியாமலே தூங்கிட்டன்.

எதிர்பார்ப்பின் காரணம் விடுமுறை கிடைக்கும், கூட்டாளிகளோடு ஆத்துல காலளவு தண்ணீல இறங்கி விளையாடிட்டே குளிக்கலாம்.

குளிரும்  அலுப்பும் வந்தா கொஞ்சம் அப்படியே கரையோர மணல் திட்டுல ஆகாயத்த பார்த்து சுள்ளுனு ஒரு சூரியக்குளியல்..

ஒன்று அலுப்புன்னா இன்னொன்ன செய்யறது.

ஆற்றுக்குளியலும் சூரியக்குளியலும் ரொம்பவே அலுத்துப்போயிருக்குமே, அதக்கப்றம்  என்ன செஞ்சீங்க அததானே கேக்கறீங்க..

ஆத்தயொட்டி பெரிய கவுண்டர் வயலு, நெல்லு நட்டுருப்பாங்க. பச்சக்கட்ற நேரம். அந்த பச்சய வாசனய மோந்துகிட்டே, தட்டாம் புடிக்கறது;.அப்பறம் வரப்பில வளர்ந்த கொடுக்காப்புளி மரத்துல  காய்ச்சி சடசடயா காயும் பழமுமா தொங்கும் பாருங்க; அத பறிச்சி ஆச தீரத் தின்னுட்டு, கிணத்தோர தொட்டில தண்ணியிருக்கும். வயிறு முட்ட குடிச்சிட்டு மறுபடியும் வந்து ஒரு குதி.

இன்னொன்னும் இருக்கு, நெலா பிறயாட்டமா, வண்ண வண்ணமா தருவாங்க இல்ல அந்த ஆரஞ்ச் மிட்டாயின் வாசனை. இந்த ரெண்டுந்தான் அவ்வளவு சந்தோசத்துக்கும் காரணம் .

எப்படியோ ஒரு வழியா விடிஞ்சிருச்சி. வீட்ல சொல்லிட்டு,நான் இளங்கோ கதிர்வேலுனு மூனு பேரும்  வெறும் கைய வீசிட்டு பள்ளிக்கூடம் போயிட்டு வந்து என்னன்ன பண்ணலாம்னு பேசிகிட்டே போயிட்டோம்.

வந்தாச்சி பள்ளிக்கூடம் ஆரஞ்சி மிட்டாய் தருவாங்கன்னு எல்லா புள்ளைகளும் வந்திருந்தாங்க. அதுல ஒன்னு ரெண்டு புள்ளயக மட்டும் காட்டு வேலைக்கு போனாதால வருல. எதாவது நிலக்கல்ல புடுங்க; தக்காளி மொளகா பறிக்கவோ இல்லனா,கனகாம்பரம் பறிக்கவோ போயிருப்பாங்க.

கூலியா 30 கெடைக்கும். வீட்டுக்கு 25 தந்துட்டு 5ரூவாவ படம் பாக்க வச்சிக்கலாம். எங்களுக்கும் ஆசதான் வீட்ல உடமாட்டாங்க. எங்க பல புள்ளகளயும் அப்பா அம்மா கூலி வேலைக்கு அனுப்ப மாட்டாங்க.

ரொம்ப கஷ்ட சீவனாளின்னா; வேற வழியில்லாம அனுப்புவாங்க. கையில காச பாத்துட்டா புள்ளகளுக்கு படிக்க புடிக்காது என்பதற்காக.

கொடி கம்பத்துல கொடிய  முடிஞ்சி ; உள்ள உதிரி பூவ வச்சிருந்தாங்க. கீழ பெரிய தாம்பாளம் அதுல பிடிச்ச நாலஞ்சி நெறத்துல நெறய ஆரஞ்சி  மிட்டாய்.

பக்கத்துல காந்தி படம், தேங்காப் பழம் ;  பழத்துல பத்தி சொருவியிருந்தாங்க. எப்படா கொடியேத்தி முடிச்சி மிட்டாய் தருவாங்கன்னு எதிர்பார்ப்பு.

வாத்தியாரும் வந்தாச்சி,  கொடி ஏத்தப்போறாரு, ஹையா ஏத்தியாச்சி. சந்தோசமான சந்தோசம். அப்றமென்ன அடுத்தது மிட்டாய் கொடுக்கறதுதான் பாக்கி. எல்லாரும் கைய நீட்டிட்டே, எங்க பக்கமும் ஒரு வழியா மிட்டாய் வந்து சேந்தது.ஆனா மொதலல தந்த மாதிரி இப்ப தரல.

எண்ணிக்கை கொறஞ்சிப்போச்சி. அதுக்கு காரணம் எல்லாத்துக்கும் தரனுமில்லன்னாங்க. எப்படியோ எண்ணிக்கை கொறஞ்சாலும், அந்த ஆரஞ்ச பழ வாசனயில மறந்துட்டு கெளம்பிட்டோம் .

வழில ஒன்னொன்னா  நாக்குல வச்சி கையில எடுத்து ; அன்னிக்கும் பூராவும் அந்த ஏழெட்டு மிட்டாய்கள வச்சி சப்பி சாப்பிட்டது; அப்பறம் மொத்தமா இல்லாம கொஞ்சூண்டு சப்பி கால் சட்ட பையில போட்டு அது பிசு பிசுன்னு ஆகி. ராத்திரி பூரா திங்கனும்னு விரல் சூப்பிட்டே வீடு சேந்தோம்.

ரெண்டு மூணு மிட்டாய சாப்பிடமா விட்டு, எறும்பு கடி வாங்கனது, அப்றம் சப்புன வெரல காதுல வச்சதாலே, பாதி ராத்திரி காதுக்குள்ள எறும்பு போனதும், ஒருக்களிச்சி படுக்கச் சொல்லி;காதுல அம்மா தண்ணி சொட்டு விட்டதும், அந்த தண்ணில காதிலிருந்து நீச்சலடிச்சிட்டே, எறும்பு மேல, மெதந்து வந்தது இன்னொரு கதைங்க..

 

ஆர்.இராணி, நெய்வேலி

பூங்குடி என்னும் சிற்றூரில்  குமரன் குசேலன் என்ற இரு நண்பர்கள்  இருந்தார்கள், அவர்கள் இருவரும் தொடக்கப்பள்ளியில் படித்தனர். நட்பின் இலக்கணமாய் வள்ளுவரின் குறளுக்கேற்ப ‘முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகம்நக நட்பது நட்பு’ என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தனர்.

குமரன் பணக்காரன் குசேலன் பரம ஏழை. குமரன் என்ன பொருள் வாங்கினாலும் சரி குசேலனுக்கும் சேர்த்து தான் வாங்குவான்

அன்று குடியரசுதினம் விழா வந்தது அதில் பாட்டுப் போட்டியும் பேச்சுப் போட்டியும் வைத்தார்கள் . எல்லா போட்டிகளிலும் குசேலனுக்கே முதலிடமும் பரிசும் கிடைத்தது.

கொடி ஏற்றி முடித்ததும் எல்லோருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தார்கள். அந்த மிட்டாய் வாங்கிய குமரன்  தன்னால் ஒரு போட்டியிலும் வெல்ல முடியாத ஆதங்கத்தில் முருகன் முகத்தில் வீசி எரிந்து விட்டு விரக்தியோடு சென்றுவிட்டான்.

அன்று போன குமரன் வேறு பள்ளியில் சேர்ந்து விட்டான். காலங்கள் ஒடி விட்டன. குசேலன் விவசாயம் செய்து பிழைத்தான். குமரன்  அந்த ஊருக்கே மாவட்ட ஆட்சியராக பொறுபேற்று வந்தான். 

நீண்டகாலமாக பூங்கொடி கிராமத்தில் மழை இல்லை படும் பஞ்சம் மக்கள் பசியால்  வாடும் நிலை.  அப்போது வந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஆழ்துளை கிணறு அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை யோடு குசேலன் தலைமையில் மக்கள் சந்தித்தார்கள்

அன்று சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி வைத்தார். பின்பு அனைவருக்கும் ஆரஞ்சு மிட்டாய்  குசேலன் கொடுத்தான். அதை வாங்கிய குமரனுக்கு மலரும் நினைவுகள் வந்தன.

அன்று தான் செய்த தவறுக்காக நண்பனை கட்டியணைத்து கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டான் . இடுக்கண் வருங்கால் நகுக என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப இருவரும் ஆரத்தழுவிக் கொண்டனர். பிரிந்த உறவு ஆரஞ்சு மிட்டாய் மூலம் சேர்ந்ததை எண்ணி மகிழ்ந்தனர்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மரண ஆசை (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ திருமயம் பெ.பாண்டியன், காரைக்குடி

    மித்ரா (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ஆர். ஸ்ரீப்ரியா, சென்னை