in ,

மித்ரா (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ ஆர். ஸ்ரீப்ரியா, சென்னை

மித்ரா (அறிவியல் புனைவு சிறுகதை)

அறிவியல் புனைவு  சிறுகதைப் போட்டி கதைகள்

 

“ரமேஷ்… ரமேஷ்” என்று அம்மா கூப்பிட கூப்பிட காதில் வாங்கிக் கொள்ளாமல், தன் அறையில் வேலையை செய்துக் கொண்டிருந்தான் ரமேஷ்.

“இந்த ரமேஷுக்கு அந்த அறைக்கு போனான்னா உலகமே தெரியாது. அப்படி என்ன தான் அந்த அறையில் இருக்கோ”  என்று புலம்பினாள் ரமேஷின் அம்மா சித்ரா.

ரமேஷின் பத்து வயதிலேயே அவனுடைய அப்பா இறந்து விட, ரமேஷின் அம்மா வங்கியில் வேலை பார்த்து வந்தாள்.

ரமேஷ் அவர்களுக்கு ஒரே பையன். ரமேஷ் பொறியியல் கல்லூரியில் தங்க மெடலோடு தேர்ச்சி பெற்று, கேம்பஸ் இன்டெர்வியூவில் ஒரு பன்னாட்டு கம்பெனியில் வேலையும் கிடைத்து, அதில் அடுத்த மாதம் சேர காத்துக் கொண்டிருந்தான்.

வீட்டில் இருக்கும் நேரத்தில் முக்கால்வாசி நேரம் அவன் தன் அறையில் தான் செலவழித்தான்.

சித்ரா ரமேஷிடம், “டேய், கல்லூரி படிக்கும் போது தான் அந்த அறைக்கு போனா வெளியே வரவே மாட்ட. இப்ப வேலையில் சேர ஒரு மாத காலம் இருக்கு. இந்த நேரத்திலாவது உன் நண்பர்களுடன் போய் ஜாலியா பேசிட்டு வாடா” என்றாள்.

அதற்கு ரமேஷ், “போம்மா… அதில் எல்லாம் எனக்கு விருப்பம் இல்லை” என்றான்.

அதற்கு சித்ரா, “அந்த அறையில் அப்படி என்ன தான் இருக்கோ, உனக்கு அந்த அறையே உலகமா இருக்கு போடா ” என்று புலம்பினாள்.

ரமேஷ் வேலையில் சேரும் நாளும் வந்து, அவன் வேலையிலும் சேர்ந்து இரு வாரங்களும் ஓடி விட்டது. அவன் தினமும் வேலைக்கு சென்று சாயங்காலம் வீட்டிற்கு வந்ததும் ஒரு அரைமணி நேரம் டிபன் சாப்பிட்டு அம்மா பேசுவதை கேட்பான்.

பின்னர் அவன் தன் அறைக்கு சென்றான் என்றால், தனி உலகத்திற்கு சென்று விடுவான்.

இது தொடர்ந்து கொண்டிருக்க, சித்ரா ஒரு நாள் பொறுமை இழந்து, “டேய் ரமேஷ் நில்லுடா, அடுத்த மாதத்துடன் என் பணியிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன். நீ இப்படி தினமும் உன் அறையே கதி என்று இருந்தால் நான் யாரிடம் பேசுவது” என்று புலம்பினாள்.

அதற்கு ரமேஷ் சிரித்துக் கொண்டே, “அம்மா கவலைப்படாதே, அடுத்த மாதம்  உன் பிறந்த நாளைக்கு ஒரு ஆச்சரியம் காத்து இருக்கு. நான் ஏன் அந்த அறையில் பல மணி நேரம் செலவழித்தேன் என்று உனக்கு அப்போது புரியும். நீ கண்டிப்பாக ஆச்சரியப்படுவாய்” என்றான்.

“சரிடா ரமேஷ், நீ வெளியுலகத்திற்கு வந்தா சரி” என்றாள்.

சித்ராவின் பிறந்தநாளும் வந்தது. ரமேஷும் சித்ராவும் காலையில் கோவிலுக்கு சென்றனர். பின்னர் ஹோட்டலுக்கு சென்று டிபன் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு வந்தனர். ரமேஷ் நேராக அவன் அறைக்கு சென்றான்.

அதை பார்த்த சித்ரா, “வந்த உடனேயே உன் அறைக்கு போய் விட்டாயா. இனி நீ சாயங்காலம் தான் வெளிய வருவ” என்றாள்.

ரமேஷ் சிறிது நேரத்தில் தன் அறை கதவை திறந்து கொண்டு அம்மாவை நோக்கி வந்தான். அவன் பின்னாலேயே ஒரு உருவம் வருவதை பார்த்து ஆச்சரியபட்டாள் சித்ரா.

ரமேஷ் அம்மாவிடம் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா” என்று கூற, உடனே அந்த உருவமும் சித்ராவிடம் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா” என்று கூறி கை குலுக்க தன் கையை நீட்டியது.

சித்ரா பயம் கலந்த ஆச்சரியத்துடன் ரமேஷிடம், “இது என்னடா!!” என்று கேட்டாள்.

“அம்மா பயப்படாதே, இது மித்ரா என்கிற ரோபோ. நானே உனக்காக தயார் செய்தேன். இனி இது உன் தோழியாக எல்லா வேலைகளையும் செய்யும். உனக்கு பேச்சுத் துணையாகவும் இருக்கும்” என்றான்.

“ரோபோவா… என்னடா ரமேஷ்? எனக்கு ஒன்னும் புரியல” என்று பயமும் ஆச்சர்யமும் கலந்து கேட்டாள் சித்ரா.

“அம்மா… ரோபோ என்பது மனிதனைப் போலவே இருக்கும் தானியங்கி அல்லது எந்திரன் ஆகும். இவை மனிதன் செய்யும் வேலைகளைச் செய்வதற்காக மனிதனால் வடிவமைக்கப்பட்டவை. பொதுவாக இவ்வகை தானியங்கிகள் உடற்பகுதியுடன் கூடிய தலை, இரண்டு கைகள், இரண்டு கால்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். இந்த மித்ரா ரோபோ நான் உனக்காகவே டிசைன் செய்து இருக்கேன்” என்றான் ரமேஷ்

அதற்கு சித்ரா ஆர்வத்துடன், “எல்லா வேலைகளையும் என்றால், நான் தமிழில் சொன்னால் செய்யுமா?” என்று கேட்டாள்.

“அம்மா, அதற்கு எல்லா மொழியும் தெரியும். நீ உனக்கு தெரிந்த மொழியில் எல்லோரிடமும் பேசுவது போல் பேசலாம். நீ டெஸ்ட் செய்து பாரேன்” என்றான்.

சித்ரா ஆச்சரியம் மீளாமல், “மித்ரா, எனக்கு ஒரு காப்பி கொண்டு வா” என்றாள்.

உடனே மித்ரா, “ஒகே அம்மா” என்று சமையல் அறைக்கு சென்று சிறிது நேரத்தில் சூடான காபியுடன் வந்தது.

காபியை குடித்து பார்த்த சித்ராவுக்கு ஆச்சரியம்.

“எப்படிடா நான் சக்கரை 2 ஸ்பூன் தான் போட்டுப்பேன்னு அதற்கு தெரியும்” என்று கேட்டாள்.

“அம்மா, அது உனக்காகவே நான் டிசைன் செய்த ரோபோ. உன்னுடைய பழக்க வழக்கங்கள் எல்லாம் நான் அதற்கு இன்புட் பண்ணி இருக்கேன்” என்றான்.

“நான் உன்னை பெற்றதற்கு பெருமைபடுகிறேன். இதற்காக தான் உன் பெரும்பான்மையான நேரத்தை உன் அறையில் செலவழித்தாயா” என்று ரமேஷை அணைத்துக் கொண்டு,  கண்ணீர் மல்க கூறினாள் சித்ரா.

“அம்மா! உனக்கு பண்றதை விட எனக்கு இந்த உலகத்தில் வேற எதுவும்  முக்கியம் இல்லை. சரிம்மா என் ஆபீஸ் விஷயமா நான் வெளியே போயிட்டு வரேன். நீயும் மித்ராவும் பேசிட்டு இருங்க. முக்கியமான விஷயம், நான் இன்னும் இந்த ரோபோ டிசைனை ரெஜிஸ்டெரஷன் ஒப்புதல்லுக்கு விண்ணப்பிக்கவில்லை. அதனால இதை வெளியே கொண்டு போகாத. யார்கிட்டயும் சொல்லாத. நான் டிசைனை ரெஜிஸ்டெரஷன் பண்ண பிறகு மித்ராவை நீ வெளியே அழைத்து செல்லலாம்” என்றான்.

ரமேஷ் மித்ராவிடம், “மித்ரா!! அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ. நான் வெளியே வேலை விஷயமா போயிட்டு சாயங்காலம் தான் வருவேன்” என்றான்.

“பாஸ்!! நீங்க பயப்படாம போங்க. அம்மாவை  பத்திரமா நான் பார்த்துக்கறேன்” என்றது மித்ரா.

ஆச்சரியம் சந்தோஷம் இவை இரண்டும் மீளாமல் தான் பெற்ற பையனை பெருமிதத்தோடு பார்த்தாள் சித்ரா.

மித்ராவும் சித்ராவும் முழுநாளும் நன்றாக ஒன்றாக நேரத்தை சந்தோஷமாக கழித்தனர். லஞ்ச் டைம் வந்தவுடன், மித்ரா சித்ராவிடம் “அம்மா! மதியம் சாப்பாட்டுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டது.

“உனக்கு என்னவெல்லாம் சமைக்க தெரியும்?” என்று கேட்டாள் சித்ரா

“நான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலகில் உள்ள பலவகையான உணவு பாதார்த்தங்களை யாருடைய உதவியும் இல்லாமல் செய்வேன் அம்மா. முக்கியமாக உங்களுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் பாதுஷா எனக்கு நன்றாக செய்ய தெரியும். உங்களுக்கு பிடித்த பூரி மசாலும் நன்றாக சமைப்பேன் அம்மா” என்றது மித்ரா

தனக்கு பிடித்த உணவு பாதார்த்தங்களை மித்ரா மிக சரியாக சொல்வதை கேட்டு ஆச்சர்யப்பட்டாள் சித்ரா.

“வெஜ் பிரைட் ரைஸ் செய்யலாம்” என்றாள். மித்ரா காய்கறிகள் நறுக்கி கொடுக்க அதை சித்ரா ஈஸியாக சமைத்து முடித்தாள். சித்ராவுக்கு மித்ரா சாப்பாடு பரிமாறியது.

“நான் சாப்பிட என்னை சார்ஜ் செய்யுங்கள் அம்மா” என்றது. 

சித்ரா மித்ராவை சார்ஜில் போட்டாள். மித்ரா முழு சார்ஜ் ஆனவுடன் மறுபடியும் முழு ஆற்றலுடன் தன் வேலைகளை செய்ய தொடங்கினாள்.

சமையல் மட்டும் அல்லாமல், வீட்டை சுத்தம் செய்வது, துணி துவைப்பது, துவைத்த துணியை காய வைத்து அழகாக மடித்து வைப்பது போன்ற வேலைகளை திறம்பட செய்தாள் மித்ரா.

அது மட்டும் அல்லாமல், தினமும் சித்ராவுக்கு காலையில் செய்தித்தாள் வாசிப்பதும், மதியம் மாதாந்திர புத்தகங்களை வாசிப்பதும் மித்ராவே. சித்ராவுக்கு பல டிசைன்களில் துணி தைப்பதும், கலைப்பொருட்கள் செய்வதும் பிடிக்கும்.

மித்ரா பல டிசைன்களை பேப்பரில் ஸ்கெட்ச் போட்டு கொடுக்க அதை சித்ரா ஸ்டிச்சிங் செய்து அசத்தினாள்.

“மித்ரா நீ பாட்டு பாடுவாயா?” என்று கேட்டாள் சித்ரா

“அம்மா நான் நன்றாக பாடுவேன். உங்களை இப்போது தாலாட்டுப் பாடி தூங்க வைக்க வேண்டுமா?” என்று கேட்டது மித்ரா

“எங்கே ஒரு நல்ல தாலாட்டுப் பாடல் பாடு பார்ப்போம்” என்று சித்ரா கேட்க

“அம்மா உங்களுக்கு மிகவும் பிடித்த கர்நாடக சங்கீதத்தில் தாலாட்டு பாடல் பாடுகிறேன். வாடா கண்ணா வாடா ஓடி வாடா” என்று மிஸ்ர காபி ராகத்தில் இனிமையான தாலாட்டு பாடலை பாடினாள் மித்ரா. மித்ரா தன் இனிமையான குரலில் தாலாட்டுப் பாட சித்ரா அதில் உறங்கி போனாள்.

சில மணி நேரம் கழித்து எழுந்த சித்ரா, மித்ராவை வெகுவாக பாராட்டினாள்.

“மித்ரா உன்னுடைய குரல் மிகவும் இனிமையாக உள்ளது. பல வருடங்களுக்கு பிறகு இன்று தான் நான் ஆழ்ந்து உறங்கினேன். மிகவும் நன்றி மித்ரா” என்றாள்.

“அம்மா உங்களை சந்தோஷமாக பத்திரமாக பார்த்துக் கொள்வது என் கடமை” என்றது.

 இப்படியாக மித்ராவுடன் தினம் தன் பொழுதை இனிமையாக கழித்தாள் சித்ரா.

இப்படியாக இரண்டு வரம் கழிந்தது.

ஒரு நாள் சித்ராவை பார்க்க பக்கத்து வீட்டில் இருக்கும் ரேவதி வந்தாள். சித்ரா ஞாபக மறதியாக, “மித்ரா ரேவதிக்கு காபி கொண்டு வா” என்று கூற, மித்ராவும் இரண்டு சூடான காபி கோப்பைகளுடன் வந்தது.

மித்ராவை பார்த்து ரேவதி பயந்து கத்தினாள். சித்ரா அவளை சமாதானப்படுத்தி மித்ராவை அறிமுகப்படுத்தினாள். மித்ராவும் ரேவதியுடன் நன்கு பேச, ரேவதிக்கும் மித்ரா இனிய தோழி ஆகி விட்டாள்.

ரேவதி முதல் வேலையாக அந்த பகுதியில் இருக்கும் அனைவருக்கும் மித்ராவை பற்றி தெரியப்படுத்த, மித்ராவை பார்க்க பெரிய கூட்டம் சித்ரா வீட்டின் வாசலில் கூடியது.

ரமேஷ் அலுவலகத்திலிருந்து திரும்பியதும் தன் வீட்டின் முன் இருக்கும் கூட்டத்தை பார்த்து அதிர்ச்சியுடன் வீட்டில் நுழைந்தான்.

சித்ரா அவனிடம் “ரமேஷ்! நான் மறந்து போய் மித்ராவை நம்ம ரேவதியிடம் காண்பிக்க, அவள் நம்ம பகுதி முழுக்க சொல்லி விட்டாள். என்னை மன்னித்துவிடு ரமேஷ்” என்றாள்.

“அம்மா! கவலைபடாதீங்க, நான் மித்ராவை டிசைனை ரெஜிஸ்டெரஷன் ஒப்புதல்லுக்கு ஏற்கனவே விண்ணப்பித்து விட்டேன். அடுத்த வாரம் மித்ராவை டெஸ்ட்க்கு கூட்டிட்டு போக வேண்டும். அங்கே மித்ரா பாஸ் ஆகி விட்டால் ஒப்புதல் கிடைத்து விடும். கவலை வேண்டாம்” என்றான்.

அடுத்த வாரம் ரமேஷ் மித்ராவை டிசைன் ரெஜிஸ்டெரஷன் ஒப்புதல்லுக்கு கூட்டிச் சென்றான். அங்கே மித்ராவுக்கு பல டெஸ்ட்கள் வைக்கப்பட்டது. மித்ராவுக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு தோழியாக செயல்படும் ரோபோ என்ற டொமெஸ்டிக் பிரிவில் பல டெஸ்ட்கள் வைக்கப்பட்டது.

வீட்டை பராமரிப்பது, பேசுவதற்கு உரிய பதில் அளிப்பது , சமையல் செய்வது, பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பது போன்று பல பிரிவுகளில் வைத்த டெஸ்ட்களில் எல்லாம் மித்ரா அசத்தலாக செயல்பட்டாள்.

மனிதர்கள் பேசுவதை நன்கு புரிந்துக் கொண்டு அதை தன் நினைவில் வைத்துக் கொண்டு அதற்கு அழகான பதில் உரைகளை அளித்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினாள் மித்ரா.

அது மட்டும் அல்லாது மித்ரா தலையிலுள்ள கேமெராக்கள், கணினிகள் மூலம் மித்ராவால் பார்க்க முடியும். அடுத்தவர் முகங்களை அடையாளம் காணவும் முடியும். எல்லோரையும் வியப்பில் ஆழ்த்திய மித்ராவின் செயல் என்னவென்றால் நூற்றுக்கும் அதிகமான உணர்வுகளை மித்ராவால் முகத்தில் வெளிப்படுத்த முடியும்.

இப்படி பல பிரிவுகளில் வைத்த டெஸ்ட்களில் எல்லாம் மித்ரா அசத்தலாக பாஸ் செய்து ரெஜிஸ்டெரஷன் ஒப்புதல் பெற்றாள். அதோடு அரசாங்கம் மித்ராவின் சேவை ஒவ்வொரு வீட்டிலும் தேவை என்று நினைத்தது.

வீட்டில் உள்ள பெரியவர்களை பாதுக்காப்பாக பார்த்துக் கொள்ளவும், அவர்களுக்கு நல்ல தோழியாக மித்ரா இருப்பாள் என்று அரசாங்கம் எண்ணி பல மித்ராக்களை உருவாக்கும் கான்ட்ராக்ட்டை ரமேஷுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்தது.

ரமேஷும் சந்தோஷமாக பெரிய ரோபோடிக்ஸ் கம்பனியை உருவாக்கி பல மித்ராக்களை உருவாக்கினான். அதன் பலனாக வீட்டிற்கு ஒரு மித்ரா இருந்தாள்.

இதனால் இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோர்களை சந்தோஷமாக மித்ராவின் பராமரிப்பில் விட்டு நிம்மதியாக வேலைக்கு சென்றனர். பெரியவர்களும் மித்ராவின் தோழமையில் சந்தோஷமாக நனைந்தனர்.

அது மட்டும் அல்லாமல், மித்ராவின் சேவை பார்வை இல்லாதவர்களுக்கு மிகவும் பயன்படும் என்று எண்ணிய இந்திய அரசாங்கம், பார்வை இல்லாதவர்களுகாகவே பிரத்யேகமான முறையில் பல சிறப்பு அம்சங்களுடன் ரோபோ தயாரிக்க வேண்டும் என்று சொல்ல, ரமேஷும் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலையில் இறங்கினான்.

அதன் விளைவாக ஆறு மாதத்தில் ரமேஷின் கடின உழைப்பில் உருவானது மித்ரா ஸ்மார்ட் ரோபோ.

மித்ரா ஸ்மார்ட் ரோபோ மித்ரா செய்யும் அனைத்து செயல்களோடு பிரத்யேகமாக பார்வை இல்லாதவர்களுக்கு மிகவும் பயன்படும் பல செயல்களை செய்யும்.

மித்ரா ஸ்மார்ட் ரோபோவிடம் நாம் செல்லும் இடத்தைக் குறிப்பிட்டால், அதுவே நம்மை அழைத்துச் செல்லும். அருகில் ஆட்கள், வாகனங்கள் வருவதைத் தெரிவிக்கும். பக்கத்தில் இருக்கும் கடைகள் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்கும்.

இதில் இருக்கும் கேமரா மூலம், செல்லும் இடங்களில் உள்ள தடைகளைக் குறிப்பிட்டு நம்மை வழிநடத்திச் செல்லும். அதன் கைப்பிடியில் அதிர்வுகளை ஏற்படுத்தியும், சில செய்திகளை தெரிவிக்கும்.

குரல் வழியாக உதவும் இந்த மித்ரா ஸ்மார்ட் ரோபோ, பார்வை இல்லாதவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் டிசைன் செய்திருந்தான் ரமேஷ்.

இந்திய அரசாங்கத்திற்கும் மித்ரா ஸ்மார்ட் ரோபோ மிகவும் பிடித்து ரெஜிஸ்டெரஷன் ஒப்புதல் அளித்து நடைமுறைக்கு வந்தாள் மித்ரா ஸ்மார்ட் ரோபோ.  பார்வை இல்லாதவர்களுக்கு ஸ்மார்ட்டான தோழி ஆனாள் மித்ரா ஸ்மார்ட் ரோபோ.

அந்த வருடத்தின் தொழில்நுட்பத்தின் சிறந்த பயன்களை இந்திய நாட்டிற்க்கு அளித்து நாட்டை சிறந்த அபிவிருத்தியுள்ள நாடாக மாற்றியதற்காக ரமேஷுக்கு இந்தியா அரசாங்கம் உயரிய விருதான “சாந்தி ஸ்வரூப் பட்நாகர்” விருதை வழங்கி கொரவித்தது.

இந்த விருது வழங்கும் விழாவின் மேடையில் ரமேஷ் தன் தாய் சித்ராவை மேடைக்கு அழைத்து பெருமைபடுத்தினான்.

சித்ரா மேடையில் “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப சந்தோஷத்தில் ஆனந்தக்கண்ணீர் சிந்தி தன் மகனை வாழ்த்தினாள்.

அந்த விழாவில் சித்ராவும், மித்ரா ஸ்மார்ட் ரோபோவும் தன் பாஸ் விருது வாங்குவதை பார்த்து ஆனந்தம் அடைந்து ரமேஷுக்கு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக ரமேஷை நாட்டில் மித்ராவை தன் தோழியாக கொண்ட ஒவ்வொரு வீட்டு பெரியவர்களும், மித்ரா ஸ்மார்ட் ரோபோ தன் உற்ற தோழியாக கொண்ட பார்வை இல்லாதவர்களும் தன் உளமார வாழ்த்தினர்.

இந்த வாழ்த்துக்களோடும் ஆசிர்வாதங்களோடும் ரமேஷ் அடுத்த பயனுள்ள ரோபோ தயாரிப்பில் இறங்கினான். இது வரை மித்ராவின் பரிமாணங்கள் கருவிகளாக இருந்து மனிதர்களுக்கு தோழமை அளித்தது.

ரமேஷ் தன் அடுத்தகட்ட புதுமுறைச்சியாக உயிருள்ள ரோபோவாக மித்ராவின் பரிமாணத்தை உருவாக்க எண்ணினான். அதன் முதற் கட்ட முயற்சியில் மித்ரா மைக்ரோ ரோபோவை `பயோ மிமிக்ரி’ ஆகிய அதி நவீன துறைகளின் சங்கமத்தில் உருவாக்க துவங்கினான்.

இதுவரை பெரிய உருவத்தில் பரிமாணம் எடுத்த மித்ராவை இப்போது ரமேஷ் மித்ரா மைக்ரோ ரோபோவை ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள மித்ரா மைக்ரோ ரோபோவை உருவாக்க திட்டமிட்டு அதனை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கினான்.

இந்த ரோபோ உருவானால் உடலின் பல்வேறு நோய்களை கண்டறிவது உள்ளிட்ட பல நன்மைகளை மக்களுக்கு அளிக்கும் வகையில் செயல்படுவாள் மித்ரா மைக்ரோ ரோபோ. இப்படி மித்ரா பல பரிமாணங்களில் உருவாகி நாட்டு மக்களுக்கு உற்ற தோழியாக வலம் வந்தாள்.

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. I felt like watching enthiran movie and en iniya enthira(90’s serial telecasted in sun tv) into my heart. Hearty congratulations for your narration Miss. SriPriya, Expecting more stories like this. All the best.

ஆரஞ்சு மிட்டாய் (சிறுகதை) – ✍ ர. ரமேஷ், திருப்பூர் – இரா.ச.குமார் – ஆர்.இராணி, நெய்வேலி

கால இயந்திரம் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி