in

டிஎன்ஏ திருட்டு (சிறுகதை) – ✍ லட்சுமி பாலா, சிவகாசி

டிஎன்ஏ திருட்டு (சிறுகதை)

ஏப்ரல் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

வாணி தன்னுடைய புதிய ப்ராஜெக்ட்காக ‘செவ்வாய் கிரகம்’  பற்றிய செய்தியை தன்னுடைய நண்பர்களுக்கு கைபேசி வழியாக தெரிவித்துக்கொண்டிருக்கிறாள். அவள் ஒரு புகழ் பெற்ற கல்லூரியில், ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் இருதிவருடம் படிக்கின்றாள். அவளுக்கு அறிவியலில் ஆர்வம் அதிகம்.

வாணி, “ஆமாம் அஜய் நாம சூரிய ஒளிக் கதிர் மூலமா இந்த வேலைய சுலபமா செய்திடலாம்.”

அஜய், “ம்.. நல்ல ஐடியா தான் வாணி, ராணி கிட்ட இத பத்தி பேசிட்டியா?”

“ம்.. இப்ப தான் பேசுனேன்.. இரு எங்க அம்மா என்னையக் கூப்பிடுறாங்க.”

“சரி வாணி நாம பிறகு பேசலாம்.”

வாணி தன் அன்னையிடம், “என்ன அம்மா எதுக்கு என்ன வரசொன்னீங்க.?”

“நானும் அப்பாவும் ஒரு நிகழ்ச்சிக்குப் போறோம். அதனால நீ வீட்டில பத்திரமா இரு கதவ நல்லா லாக் பண்ணிக்கோ.”

வாணி சந்தோஷமாக, “ம்ம்… சரிம்மா நான் பத்திரமா இருந்துக்குவேன் நீங்க பாத்து போயிட்டுவாங்க.”

அவர்கள் சென்றவுடன் வாணி வேகமாக தன் அறைக்குள் சென்று அங்கே உள்ள பால்கனி வழியாக பக்கத்துவீட்டு பால்கனியை பார்க்கிறாள். அந்த வீட்டில் இப்போது யாரும் இல்லை அது பூட்டி உள்ளதை உறுதி செய்துகொண்டு, ‘ம்.. இப்ப அந்த சயின்டிஸ்ட் முசுடு தாத்தா வீட்ல இல்ல. இது தான் நல்ல சந்தர்ப்பம். இந்த பால்கனி வழியா உள்ள போய்டலாம். பிறகு அந்த ஆய்வகத்தப் பார்க்கலாம்.’ என்று அவள் மனத்திற்குள் நினைத்தபடியே அவள் அந்த வீட்டின் பால்கனிக்குள் குதித்துவிட்டாள். அவள் நேரத்திற்கு அந்த வீட்டின் பால்கனி கதவு திறந்து இருந்தது.

சயின்டிஸ்ட் தாத்தா என்று அந்தப் பகுதியில் உள்ள அனைவராலும் அழைக்கப்படுபவர் கிரகம் மணி, அவர் ஒரு விஞ்ஞானி. தன் வீட்டிலேயே ஆய்வுக்கூடம் அமைத்துள்ளார். ஆனால் அந்தப் பகுதி மக்கள் அவரை கோமாளி என்று தான் சொல்லுவர். அவர் யாருடனும் பேச்சி வைத்துக்கொள்ளமாட்டார். அறிவியலில் ஆர்வம் மிகுந்த வாணி எத்தனையோ தடவை அவரிடம் அவர் ஆய்வகத்தை பார்வையிட கேட்டதற்கு மறுத்துவிட்டார்.

உள்ளே சென்ற வாணி அங்கு அமைந்திருந்த சிறிய அறைக்குள் சென்றாள். அந்த அறைக்குப் பின் மிகப்பெரிய ஆராய்சிக்கூடம் அமைந்திருந்தது.

அதிர்ந்த வாணி, “வாவ்! நான் இத வெறும் சாதாரண ஆய்வுக்கூடம் என்று தான் நினைச்சேன். ஆனா இது சான்ஸ்சே இல்ல.”

அந்த ஆய்வுக்கூடத்தின் ஒரு பகுதியில் அலமாரியில் புத்தகம் அடுக்கப்பட்டிருந்தது. அந்த அலமாரியில் ‘தடை செய்யப்பட்டது’ என எழுதியிருந்தார்கள். பிறகு இன்னொரு அலமாரியில் வேதியல் புத்தகம் பிறகு சில கோப்புகள் அடிக்கி வைக்கப்பட்டிருந்தது. அந்த அலமாரியின் அருகில் சென்றாள். அந்த அலமாரி மற்றொரு அறைக்கு செல்லும் கதவு.

வாணி, ‘ என்ன இந்த அலமாரிக்குள்ள ஒரு ரூம் இருக்கு. அப்ப இந்த தடை செய்த அலமாரி பக்கம் அப்படி என்னதான் இருக்கும். போய் பாக்கலாமா?’

அவளின் மனசாட்சி, ‘இல்ல வாணி இதெல்லாம் தப்பு’ என்று எச்சரித்தது.’

‘இல்ல உள்ள போறதுனால எந்த தப்பும் இல்ல. இந்த தாத்தா ஏதோ தில்லுமுல்லு பண்றாரு அதுக்குத்தான் யாரையும் உள்ள விடமாட்டிக்கிறாரு. நாம உள்ளப் போவோம். யாரு பாக்கப்போறா’ என்று நினைத்துக்கொண்டேக் கதவைத் திறந்தாள் அங்கே கண்ணாடியால் ஆனா ஒரு பெட்டி ஒன்று இருந்தது. அதற்குள் சிறு சிறு குடுவையில் நீலநிறத் திரவம் இருந்தது. அதை இவள் திறக்க முயற்சித்தாள். ஆனால் அதைத் திறக்க முடியவில்லை. அதன் அருகில் ஒரு கடிதம் இருந்தது அதைத் திறந்து படித்தாள்.

அதில், ‘டாக்டர். கிரகம் மணி, உங்களிடம் இதைச் சொல்வதற்கு வருந்துகிறோம், உங்களின் இந்த கண்டுபிடிப்பு ஆபத்தானது. இந்த திரவத்தில் கொடிய வைரஸ்சை உருவாக்கும் மூலக்கூறுகளும் உள்ளன. இது நம் வருங்கால சந்ததியினருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால் உங்கள் கண்டுபிடிப்பில் சில நன்மைகளும் இருக்கின்றன. ஆனால் இது தப்பானவர்கள் கைகளுக்குக் கிடைத்துவிட்டால் இந்த உலகமே பேரழிவை சந்திக்கும். அதனால் நம் கூட்டத்தில் உள்ள மற்ற விஞ்ஞானிகள் சேர்ந்து எடுக்கும் முடிவு என்னவென்றால், இதைத் தாங்கள் உடனே அழித்து விடவேண்டும், அதுபோல இந்த எண்ணத்தைத் தாங்கள் உடனேக் கைவிட வேண்டும் என்பதாகும்.’

அதைப் படித்தவுடன் குழப்பம் அடைந்த வாணி, ‘அப்படி இது என்ன கண்டுபிடிப்பு?’ யோசித்தபடியே அருகில் இருந்த சில கோப்புகளைப் பார்த்தாள்.

அதில் ‘இந்த வேதியல் திரவம் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் முக்கியமான ஒன்று. இது மனிதர்களின் டிஎன்ஏவில் கலந்து அவர்களின் உண்மையான டிஎன்ஏவையே மாற்றுகிறது. இதை அவர்கள் உடலில் செலுத்தினால் அனைவரும் அனைத்திலும் கைதேர்ந்தவர்களாக மாறிவிடுவர். அனைத்து மாணவர்களும் முதல் மதிப்பெண் எடுப்பர், பாட்டு, நடனம், விளையாட்டு என்று அனைத்திலும் அனைவரும் முன்னணியில் இருப்பார். இதனால் நம்முடைய இராணுவ பலம் கூடும். ஒலிம்பிக்கில் நம் நாடு மட்டுமே பதக்கங்களை வாங்கிக் குவிக்கும். உலகில் உள்ள பல கொடிய நோய்களுக்கு இதுவே தீர்வாகும். இதற்க்கு நான் வைத்துள்ளப் பெயர் மைட்டி இன்ஜெக்ட்.’

அதைப் படித்தவுடன் யாரோ கதவைத் திறக்கும் சத்தத்தைக் கேட்டவள் வேகமாக அந்த கண்ணாடி பெட்டியை எடுத்துக்கொண்டு வந்த வழியே  வெளியேறினாள்.

அவள் அறையில் அந்த கண்ணாடி பெட்டியை வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது அவள் நண்பர்கள் அஜய் மற்றும் ராணி அவள் வீட்டிற்கு வந்தனர்.”

வாணி, “வேகமா உள்ள வாங்க. நான் உங்ககிட்ட ஒன்னு காட்டனும்.”

அதைக் காட்டியவளிடம் அஜய், “என்னது இது வாணி? லேப்ல இருந்து எதையே எடுத்துகிட்டு வந்துருக்க?”

“இல்ல இது ஒரு மனிதர்களின் மரபணு மாற்றம் உண்டாக்கும் திரவம்.”

ராணி, “என்ன வாணி செடிகளைத்தான் மரபணு மாற்றம் செய்வாங்க. நீ என்னமோ புதுசா சொல்லுற”

“இல்ல இத நீங்களே படிச்சுப் பாருங்க”

அந்தக் கோப்புகளைப் படித்த இருவரும் அதிர்ந்தனர்.

அஜய், “ஆமா வாணி இத என்னால நம்பவே முடியல. சீனாக்காரன் இந்த மாதிரி மரபணு மனிதனுக்கு மாற்ற கண்டுபிடிக்குறான்னு முகபுத்தகதுல ஒரு பதிவு படிச்சேன்.”

ராணி, “இந்த தாத்தாவ எல்லாரும் லூசுன்னு நினைச்சோம் ஆனா அவரப்பாரு எவ்வளவு ஜினியஸ்”

வாணி, “ரொம்ப புகழாத அவரு நல்லவரா, கெட்டவரான்னு நமக்கு இன்னும் தெரியாது.”

அஜய், “என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு இத ஏன் நாம போடக்கூடாது.”

ராணி, “அஜய் உனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா? என்ன ஒளருற”

“இல்ல நான் உண்மையத்தான் சொல்றேன். நீயே சொல்லு நம்ம மூனு பேருக்கும் நாசால வேல பாக்கனும்னு எவ்வளவு ஆசைபட்டோம். இத நம்ம உடம்புல இன்ஜெக்ட் பண்ணா நாம ரொம்ப அறிவாளியா மாறிடுவோம். நமக்கும் ஈசியா நாசால இடம் கிடைக்கும். என்ன சொல்றீங்க?”

வாணி, “நீ சொல்றதும் சரி தான். ஆனா இந்த திரவத்த உபயோகிக்கும் போது சில கொடிய வைரஸ் உருவாகுறதுக்கும் வாய்ப்புண்டு.”

ராணி, “இதுக்கு ஒரே வழி நாம டாக்டர் கிரகம் மணிகிட்ட கேட்கிறதுதான்”

வாணி, “என்னது அவர் எப்படி இதுக்கு சம்மதிப்பாரு. நான் இத திருடிட்டு வந்தேன்னு அவருக்குத் தெரிஞ்சதுன்ன அவ்வளவுதான்.”     

அஜய், “இல்ல வாணி, ராணி சொல்றதுதான் சரி. அவருக்கு இத நிரூபிக்க எப்படியும் ஒரு ஆள் தேவை. அவர்கிட்ட நாம போன சந்தோஷமா வரவேற்ப்பு கொடுப்பாரு. வைரஸ் வெளிய போர்ம் ஆகாம அவரையே நமக்கு இன்ஜெக்ட் பண்ண சொல்லுவோம். ”

அவர்கள் அவர் வீட்டிற்குச்சென்று அவரை சந்தித்து அவர்கள் செயலுக்கு முதலில் மன்னிப்பு கேட்டனர்.

கிரகம் மணி, “அப்ப நீங்க மூணு பேரும் இந்த ஆராய்ச்சிக்குத் தயாரா இருக்கீங்களா?”

அவர்கள் ஆம் என்று தலை ஆட்டியதும். அவர் தன் கைகளைத் தட்டினார் அப்பொழுது இரண்டு தடியர்கள் வந்து இவர்களை சுற்றி வளைத்தனர்.

கிரகம் மணி, “நீங்க கேட்டதும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்னு எப்படி நினைச்சீங்க?. எனக்கு இந்த ப்ரொஜெக்ட் கண்டிப்பா  சக்சஸாகும் ஏன்னா இத நான் எலிகள் மேல சோதனை செஞ்சி பார்த்துட்டேன். அப்ப எந்த வைரஸ்சும் போர்ம் ஆகல. இப்ப இத நான் எனக்கே இன்ஜெக்ட் பண்ணப்போறேன். இத நான் சீனா அரசாங்கத்துக்கு விற்கிறதா ரகசிய ஒப்பந்தம் போட்ருக்கேன். இப்ப வந்து நீங்க இத திருடினது மட்டும் இல்லாம உங்களுக்கு வேற கேட்குறீங்களா? நீங்க இங்க இருந்து உயிரோட போக முடியாது.”

குண்டர்களைப் பார்த்தவன், “ம்.. இவங்கள இந்த இருக்கையில் கட்டிவைங்க. பிறகு விஷ ஊசி போட்டு இவங்க கதைய முடிச்சிடலாம்.”

அவர்களை குண்டர்கள் அங்கிருந்த இருக்கையில் கட்டிவைத்தனர்.  

அப்பொழுது அஜய் பின் பக்கம் கட்டி வைத்திருந்த தன் கையில் உள்ள நவீன கைக்கடிகாரம் மூலம் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினான்.

வாணி, “ஏன் டாக்டர் இப்படி பேராசை பிடிச்சு அலைறீங்க. இது நம்ம நாட்டுக்கு எவ்வளவு பெரிய துரோகம்னு தெரியுமா உங்களுக்கு?”

கிரகம் மணி, “ஏன் தெரியாது.. நல்லாவேத் தெரியும். எனக்கு பேர், புகழ் எதுவும் இங்க கிடைக்காது. ஆனா சீனாகிட்ட இருந்து என்னுடைய ஆராய்ச்சிக்கு மதிப்பு கிடைக்கும். நீங்க கூட பேராசை பட்டு தான இத எடுத்துக்கிட்டு திரும்ப வந்திங்க?” என்றான் எகத்தாளமாய்

தொடர்ந்து பேசியவன், ”இப்ப நான் இந்த மைட்டி இன்ஜெக்ட்ட என்னுடைய உடம்புல செலுத்தப்போறேன். பிறகு அப்படியே சீனால செட்டில் ஆகிடுவேன்”

என்றபடியே நீலநிற திரவத்தை ஊசியில் ஏற்றினான். அப்பொழுது இருபதிற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கதவை உடைத்து  அங்கே வந்து அவனைக் கைது செய்தனர்.

விடுவிக்கப்பட்ட நண்பர்கள் அனைவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.

உச்சநீதிமன்றம் கிரகம் மணிக்கு வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தண்டனை கொடுத்தது. தக்க நேரத்தில் தகவல் கொடுத்த நண்பர்கள் மூவருக்கும் சன்மானம் வழங்கினர்.

“எல்லா உயிரினங்களும் பொதுவாக இருந்த உலகத்தை, தனக்கான ஒரு உலகமாக மாற்றிவிட்டான் மனிதன். இயற்கை ஒவ்வொரு காலகட்டத்திலும், மனிதன் வரம்பை மீறும்போது பாடம் கற்பிக்கும்.”

(முற்றும்)

டிசம்பர் 2021, ஜனவரி 2022 மற்றும் பிப்ரவரி 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் காண இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நோ ஹேட்டர்ஸ் நோ டாக்டர்ஸ் (அறிவியல் புனைவு சிறுகதை) – ✍ அ.வேளாங்கண்ணி, சோளிங்கர்

    அழைத்தான் அம்பலத்தான் (அத்தியாயம் 3) – ✍ செந்தமிழ் சுஷ்மிதா, குடியாத்தம்