in

ஆழியின் காதலி ❤ (பகுதி 6) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 6)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“இவனுங்க பேசறது தான் நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது. ஆனா நாம மனசுக்குள் பேசறது கூட இவனுங்களுக்குத் தெளிவா கேட்குது” என விக்ரம் புலம்ப 

“நீர் மனதுக்குள் பேசுவதாக நினைத்து வாய் விட்டுத் தான் புலம்புகிறீர்” என்றான் வந்தவன்

“ஹா ஹா… இது தான் டா கரடியே காரித் துப்பின மொமெண்ட்” என அர்னவ் கேலி செய்ய, அசடு வழிய நின்றான் விக்ரம் 

“அது ஒண்ணுமில்லண்ணே, நீங்க யாரு என்னனு தெரிலயா, அதான் சும்மா ஒரு செல்லப் பேரு” என இழுத்தான்.

“இது தான் உங்க ஊருல செல்லப் பேராக்கும்?”என அதற்கும் பகடி செய்தான் அர்னவ் 

“ஹையோ என்ன பாஸ் இப்படி எல்லாப் பக்கமும் கேட் போட்டா நான் என்ன செய்வேன்? அண்ணனே கண்டுக்கல, உங்களுக்கு என்னவாம்? கொஞ்சம் அமைதியா தான் இருங்களேன்” என அர்னவிடம் கூறி விட்டு, அந்த மனிதனிடம் திரும்பியவன்

“நீங்க சொல்லுங்கண்ணே, உங்க பேரு என்ன?” எனக் கேட்டான் விக்ரம் 

“யாம் எல்லாளன். நீவிர்?” எனப் பதில் கேள்வி கேட்டான் அந்த எல்லாளன்

“என் பேரு விக்ரம், இவரு அர்னவ். அண்ணே.. இங்க குளிக்கப் புடிக்க எல்லாமே கடலுக்குள்ள தானா?” என விக்ரம் கேட்டதும், சற்றுப் பதறியவர்

“ஐயோ… கடல் பக்கம் மட்டும் எக்காரணம் கொண்டும் நீங்கள் செல்லவே கூடாது. மெய் சுத்தம் செய்து கொள்ள அருகில் ஒரு சுனை உள்ளது. அங்கு அழைத்துப் போகத் தான் யாம் வந்தது, வாரும் செல்வோம்” என அருகிலிருந்த சுனைக்கு அழைத்துச் சென்றான் எல்லாளன்

இருவரும் அங்குக் குளிக்க எத்தனிக்கையில், அவர்களுக்கான மாற்றுடையும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான் எல்லாளன்

இருவரும் குளித்து முடித்ததும், மீண்டும் அதே குகைக்குப் போனவர்கள், அங்கு இவர்களுக்கான உணவு இருப்பதைக் கண்டு மகிழ்ந்தனர் 

இருக்காதா என்ன? நடந்த அதிர்ச்சிகரமான அனுபவித்தினால் நேற்று அரைகுறையாகக் கூட உண்ணாதவர்களுக்கு, காலையில் எழுந்ததுமே பசிக்கத் தொடங்கியது. அதுவும் அருவி நீரில் ஆனந்தக் குளியல் போட்டவர்களுக்கு, ‘பசி எனும் தீ’ கொழுந்து விட்டு எரியத் தொடங்கி இருந்தது 

அங்கு இவர்களுக்கு உணவு எடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் கயா

“ஒரு அம்மா தான், தன் பிள்ளையோட பசியறிஞ்சு சாப்பாடு குடுப்பானு சொல்லுவாங்க. ஆனா என் அம்மாக்கு அப்பறம் இவதான் என்னோட பசியறிஞ்சு சாப்பாடு போடறா” என விக்ரம் உருக

அம்மாவின் அன்பயே அறிந்திராத அர்னவோ, ‘ச்சே அம்மா இல்லேனாலும் கூட, ஒரு தங்கச்சியவாவது அந்தக் கடவுள் கொடுத்துருக்கலாம். இப்படி என்னை பாசமா அவ பாத்துக்கிட்டு இருந்துருப்பா’ என மனதிற்குள் கரைந்தான்.

இவ்வாறு இவர்கள் இருவரும் குகை வாயிலில் நின்று கொண்டு இவள் பரிமாறுவதையே பார்த்திருக்க, “பார்வையிலேயே பசியாறும் பழக்கம் இந்தப் பட்டினத்தில் இல்லை” என கயா சிறு சிரிப்புடன் கூற, இருவரும் வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்

“பட்டினம்?”என இருவரும் கேள்வியுடன் நோக்க..

“ம்ம்… கடலோரம் இருக்கும் பகுதிகள் தான் பட்டினம். இது கூடத் தெரியாதா தேயம் தாண்டி வந்தவர்களுக்கு?” எனப் பதிலுக்கு வினவினாள் கயா

“இல்ல எங்க நாட்டுலயும் பட்டினம்னு எல்லாம் ஊர் பேர் இருக்கு, அதான் அதிசயமா பார்த்தோம்” என்றான் அர்னவ் 

“ஓ.. சரி சரி, காலம் கழிக்காமல் விரைந்து வந்து பசியாருங்கள். எங்கள் ஐயா விரைவாக உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்” எனக் கூறியதும், இருவரும் வேக வேகமாக உண்ணத் தொடங்கினர்

உணவு உண்டு முடித்ததும், அந்தத் தீவின் தலைவரிடம் சென்றார்கள்

#ad

அவர்களைக் கண்டதும் ஏதோ வேலை செய்து கொண்டிருந்த அவர் எழுந்து, “வாருங்கள்.. இருவரும் பசியாறினீர்களா? உங்களுக்கு இவ்விடம் அவ்வளவு பிடித்தம் இல்லை போலத் தெரிகிறதே? தேவை ஏதேனும் இருக்கிறதா?” என விசாரித்தார்

“ஐயா… இங்க எங்களுக்கு எந்த குறையும் இல்ல, எல்லா சௌகரியங்களும் செஞ்சு குடுத்துருக்கீங்க. ஆனா, நாங்க இங்கிருந்து கிளம்பறதுக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொன்னீங்களே, அது… ?” என அர்னவ் கேள்வியாய் நிறுத்த 

“இல்லை மகனே.. எங்கள் மூப்பர் உங்களைப் பார்த்த பின்னர் தான் நீங்கள் இங்கிருந்து வெளியேறும் மார்க்கம் கண்டறிய இயலும். அவர் பௌர்ணமி கழிந்த பின் தான் தன் யோகத்திலிருந்து எழுவார். இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி, அதன் பின்னரே உங்களது கேள்விக்குப் பதில் கிடைக்கும்” என்றவர் கூற 

“இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகுமா? என்ன ஐயா இது? நேத்து நீங்க அவ்வளவு வீராப்போட சொல்லிட்டுப் போனதப் பாத்து, நாங்க ஊருக்கு போறதுக்கு உடனே ஏற்பாடு செய்வீங்கனு நினைச்சோம். சரி அம்பாரத் தீவுக்குப் போறதுக்காவது வழி சொல்லுங்க, மத்தத நாங்க பாத்துக்கறோம். உங்கள நம்பினா நாங்க இங்கயே இருக்க வேண்டியது தான்” என சற்று எரிச்சலுடன் கூறினான் அர்னவ் 

“நீங்கள் கேட்டதும் மாயம் செய்து உங்கள் தேயத்தில் உங்களை உட்கார வைத்து விட முடியுமா? அப்படி நம்பிக்கை அற்றுப் போனவர்கள் அம்பாரத் தீவிற்கு மட்டும் ஏன் எங்களிடம் வழி கேட்க வேண்டும்? அதோ அப்படியே கடலில் இறங்கி செல்ல வேண்டியது தானே?” என அருகிலிருந்த கோபமாய் சாமினி வினவ

“என்ன தாயே இப்படிப் பேசுகிறாய்? சற்று பொறுமையுடன் அவர்களுக்கு எடுத்துக் கூறலாம் இரு” என்ற அவள் தந்தை அமைதிப்படுத்த முயன்றார் 

“இல்லை ஐயனே, இவர்களுக்கு நம் மீது நம்பிக்கை அற்றுப் போய் விட்டதாம். இதைக் கேட்டப் பின்பும் என்னால் பொறுமையைக் கை கொள்ள இயலாது” என்றாள் இன்னும் கோபமாய் 

‘என்ன ஒரு பொண்ணு இந்தப் பேச்சு பேசறா? அதுவும் என்னை? காலேஜ்ல இருந்து என்னோட பிரண்டு இந்த விக்ரமே, என்னை பாத்த முதல் நாள்ள இருந்து இப்போ வரைக்கும் நான் சொன்னாலும் கேட்காம என்ன வாங்க போங்கனு மரியாதையா பேசறான். ஆனா இவ, பார்த்து ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள்ள இவ்ளோ திமிரா பேசறா?’ என மனதிற்குள் குமுறியவன், விக்ரம் கையை பற்றி இழுத்துக் கொண்டு வெளியேற முயன்றான் அர்னவ் 

“ஐயையோ என்னது இது? இவங்க சண்டைல என்னையும் சிக்க வைக்கறாங்களே” என விக்ரம் நினைத்துக் கொண்டிருக்க, மீண்டும் சாமினியின் குரல்  அவர்களை மறித்தது

“அப்படியே அதோ சற்றுத் தொலைவில் பாறையில் அமர்ந்திருக்கிறாளே சமுத்திரா, அவளிடம் வழி கேட்டால் உங்கள் தேயத்திற்கே உங்களை அழைத்துச் சென்றிடுவாள், மிகப் பாதுகாப்பாக” என கேலி இழையோட கூற

அவள் யாரை குறிப்பிடுகிறாள் என அவள் சுட்டிய பக்கம் உற்று நோக்கியவர்கள், அதிந்தார்கள். ஏனெனில் அங்கு இருந்தது அந்த கடல் அரக்கி

‘அவளுக்குச் சமுத்திரா என்றா பெயர் வைத்திருக்கிறார்கள் இவர்கள்?’ என குழம்பிப் போய் நின்றனர் இருவரும்.

அவர்கள் அருகில் வந்த இளந்திரையன், அவர்கள் முகத்தை பார்த்தே கேள்வியை யூகித்தவர், “ம்.. அவள் சமுத்திரா. இப்பொழுது உங்களுக்காகத் தான் அவள் இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறாள்” எனவும், சற்று பயந்து தான் போனார்கள் இருவரும்

அர்னவ் அமைதியாகிட, காற்றாகிப் போன குரலில், “நாங்க இப்ப என்ன தான் செய்யறது?” என இளந்திரையனிடம் வினவினான் விக்ரம் 

இளந்திரையன் பதிலுரைப்பதற்கு முன்பே குறுக்கிட்ட சாமினி, “எங்கள் அய்யன் பகின்றது போல் பொறுமையுடன் மூப்பருக்காக காத்திருங்கள், உங்களுக்கு வேறு வழியுமில்லை” என அலட்சியத்துடன் அர்னவைப் பார்த்துக் கூறினாள்.

ஆனால் அர்னவோ சாமினியைத் தவிர்த்து இளந்திரையனிடம், “எங்களோட மனநிலை உங்களுக்குப் புரியுதா இல்லையானு தெரியல. ஆனா உங்க மூப்பர்கிட்ட சொல்லியாவது நாங்க இங்கிருந்து சீக்கிரம் கிளம்ப வழிய சொல்லுங்க ஐயா” என்று கூறி விட்டுத் திரும்பியவனை, இளந்திரையனின் குரல் தேக்கியது.

“எங்கள் மூப்பரை பௌர்ணமி கழிந்து தான் பார்க்கவியலும். அதுமட்டுமின்றி, நாங்கள் அனைவரும் பௌர்ணமி அன்று இவ்விடத்தினை விட்டு வேற்றிடம் சென்று விடுவோம். ஆதலால் நீவிர் இங்குத் தனித்தே இருக்கும்படி நேரும் . எனவே சற்று அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். அது மட்டுமின்றி, எக்காரணம் கொண்டும் கடல் பக்கமோ, அதி முக்கியமாக இத்தீவின் மேற்குப் பக்கமோ போக விழையவே கூடாது. 

மற்றபடி, உங்களுக்குத் தேவைப்படும் உணவனைத்தும் உங்கள் குகை வாசலில் இருக்கும். சுனையில் நீராடிவிட்டு இவ்விடமே இருங்கள். மீண்டும் கூறுகிறேன், கடலருகிலோ, தீவின் மேற்கு புறமோ மறந்தும் சென்று விடாதீர்கள்” என்று கூறி விட்டு, அவர்கள் அங்கிருந்து அகல அனுமதித்தார்.

நாயகர்கள் இருவரும் சரி சரி என்று தலையாட்டிவிட்டு சென்றனர். அர்னவ் மட்டும் சாமினியைப் பார்த்து முறைப்பைப் பரிசாக அளித்து விட்டுச் சென்றான்

பௌர்ணமி அன்று..

ஒருவிஷயம் செய்யாதே என்றால் தானே அதைச் செய்ய வேண்டும் என்று மனம் கூத்தாடும். அதன்படியே நண்பர்கள் இருவரும் அந்த ஆளரவமற்ற தீவில், அதன் மேற்கு திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

 அந்தத் தீவில் இருக்கும் மக்களிடம் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்த அர்னவ், பௌர்ணமி அன்று “நாங்கள் அனைவரும் வேற்றிடம் சென்றுவிடுவோம், நீங்கள் இத்தீவின் மேற்கு திசைக்கு மட்டும் செல்லக்கூடாது” என இளந்திரையன் கூறியதுமே முடிவெடுத்துவிட்டான், அங்குப் போயே தீருவதென்று.

ஆனால் விக்ரம் தான் பாவம், அழுது தீர்த்து விட்டான்

“இங்க பாருங்க பாஸ்… நான் உங்க கூட வந்தது அந்தக் கிரீடத்தை எடுக்கறதுக்கோ அந்த மீன் மச்சக்காரனுக்கு உதவி செய்யறதுக்கோ இல்ல. ஏதோ அட்வன்ச்சர் மாதிரி தான் கிளம்பி வந்தேன். ஒருவேளை அந்தக் கிரீடத்தை நாம எடுத்தா நமக்கு அதுனால ஏதாவது உதவி கிடைக்கும்னு நினைச்சேன். இன்னமும் அந்த மீன் மச்சக்காரன் கூட எங்க இருந்து வருவான்னு தெரியல. இதுல நீங்க இது எதையும் நான் பார்க்கறதுக்கு முன்னாடியே, என்ன கண்ட இடத்துக்கும் கூட்டிட்டுப் போய்ப் பலியாக்கிடுவீங்க போலருக்கே?” என விக்ரம் புலம்ப 

“இப்போ அந்தக் கிரீடத்தைக் கண்டுபிடிச்சு மட்டும் நீ என்ன கிழிக்கப் போற? சாருக்கு ஒண்ணு நினைவு இருக்குதா? அந்தக் கிரீடம் இப்ப இருக்கறது அந்த ராட்சசிகிட்ட, அதான் அந்தச் சமுத்திரா கிட்ட. அட ஆமாம்ல நீ தான் பெரிய காதல் மன்னனாச்சே… மத்த பொண்ணுங்ககிட்ட வறுக்கற கடலையில கொஞ்சம் இவகிட்டயும் வறுத்தா, உன் பேச்சுல மயங்கி தன்னால அந்தக் கிரீடத்த உன்கிட்ட கொடுத்துடுவா. நீயும் அத வாங்கி உன் பாக்கெட்ல போட்டுட்டு வந்துடு. சரியா?” என அர்னவ் நக்கலாகக் கூற, அர்னவின் காலிலேயே விழுந்து விட்டான் விக்ரம் 

“மகாப்பிரபு… என்னை விட்ருங்க. சுறாமீனுக்கிட்ட கூட நான் சந்தோசமா குப்பை கொட்டுவேன், ஆனா அந்தச் சமுத்திராகிட்ட மட்டும் என்னை கோத்து விட்றாதீங்க. இனி நான் ஒரு வார்த்தை பேசல. அப்படி நான் வாயத் திறந்தா நீங்களே என் தலையில கல்ல போட்டு கொன்னுடுங்க” எனக் கூறியவன் 

‘அந்தச் சமுத்திராகிட்ட கடிபட்டு சாகறதுக்கு, இவர்கிட்ட அடிபட்டுச் செத்துடலாம்’ எனத் தனக்குள்ளாக முணுமுணுத்தான்.

“யாரோ மறுபடி வாயவே திறக்க மாட்டேன்னு சொன்னாங்க? போறயா சுறாமீனுக்கிட்ட குப்ப கொட்ட?” என அர்னவ் விக்ரமைப் பார்த்து முறைக்க 

“ஹுஹுஹும்ம்ம்ம்… ஹுஹும்ம்ம்ம்…” என்று தான் எதுவும் பேசவில்லை எனச் சைகை செய்தான் விக்ரம் 

அவர்களிருவரும் பேசிக் கொண்டே இரண்டு மணி நேரம் நடந்து வந்திருந்தனர். பசியெடுப்பது போலத் தோன்றவே, கையோடு கொண்டு வந்திருந்த உணவினை உண்டு முடித்து விட்டு, மீண்டும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்.

அந்தச் சமுத்திராவிடம் அகப்பட்டதில், அவர்கள் உடமைகள் அனைத்தும் இழந்து விட்டிருந்தனர். அதனால் காலம், நேரம் எதுவும் தெரியவில்லை.

‘மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ரெண்டு மணி நேரம் நடந்திருப்போமா? அப்படியிருந்தாலும் இருட்டுறதுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. இன்னும் கொஞ்ச  தூரம் போய் பாப்போம். மர்மமா ஒண்ணுமில்லேனா திரும்பிடலாம்’ என்றெண்ணி தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர்

“ஏன் விக்கி, இந்தத் தீவைப் பார்த்தா மனுஷங்க வாழ்ந்துட்டு இருக்கற மாதிரி தெரியலயே. நாம இருந்த இடத்துக்குப் பக்கத்துல ரெண்டு மூணு குகை இருந்துச்சு. அங்க இருந்து கொஞ்ச தூரம் வந்ததும் மறுபடி பெருசா காடு தான். நம்மள நைட் ஒரு குகையில தங்கவச்சுட்டு இவங்க எல்லாரும் எங்க தங்கறாங்க ?” என வினவினான் அர்னவ்

“ஹை சேம் பின்ச், நானும் இதே தான் யோசிச்சிட்டு இருந்தேன்” என விக்ரம் அர்னவை நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளினான்

அவன் கிள்ளியதும் கடுப்படைந்த அர்னவ், “ச்சீ அப்பால போ சாத்தானே” என்று கூறி விக்ரமைப் பிடித்து தள்ளி விட்டான்

ரெண்டு பெரும் இப்படி ஊர் பேர் தெரியாத தீவுல மாட்டிக்கிட்ட மாதிரியா பேசிக்கறாங்க? ஏதோ பிகினிக் வந்த மாதிரி நடந்துக்கறாங்க

அவன் தள்ளியதும் சட்டென எதிர்ப்புறம் விழப் போன விக்ரம், அங்கிருந்து யாரோ அவனைத் தூக்கி எறிந்தார் போல அர்னவைத் தாண்டிக் கொண்டு விழுந்தான்

அவன் விழுந்ததும் இருவருக்கும் அதிர்ச்சியாகிப் போயிற்று. ஏனெனில் ஒருவர் தள்ளிவிடும் போது தள்ளப்படும் திசையில் தானே விழ வேண்டும்? மாறாக அதற்கு எதிர் திசையில், அதுவும் அவ்வளவு வேகமாக எப்படி ஒருவர் தூக்கி எறியப்பட முடியும்?

“பாஸ்… என்ன இது? நீங்க என்னை அந்தப் பக்கமா தான தள்ளிவிட்டீங்க? அப்பறம் எப்படி நான் உங்கள தாண்டி இங்க வந்து விழுந்தேன்?” என விக்ரம் விழிக்க 

“எனக்கும் அது தான் புரியல விக்கி, எதுக்கும் நாம இன்னொரு முறை ட்ரை பண்ணலாமா?” எனக் கூறியதும், சரி என்றவனைப் பார்த்து ஆச்சர்யமாகி விட்டது அர்னவிற்கு

பின்னே இந்த இடத்திற்கு வருவதற்கே மூக்கால் அழுதவன், இப்படிப்பட்ட மர்மத்தை அறிய துணை வருகிறேன் என்கிறான் எனப் பார்க்கவும், விக்ரம் சிரித்தான்

“இவ்வளவு தூரம் வந்துட்டோம் இனி பின் வாங்கக் கூடாது இல்ல பாஸ். பயமே ஜெயம் வாங்க” என்றான்.

பின்பு இருவரும் மாறி மாறி அந்த இடத்தை அடைய முயற்சித்தும், அது போலவே தூக்கி வீசப்பட்டனர்.

பலமுறை வீசப்பட்டதில் உடலெல்லாம் அங்கங்கே காயங்கள், ஆனாலும் “விக்கி இது கடைசி சான்ஸ், அங்க என்ன இருக்குனு கண்டுபிடிக்காம நாம போகப் போறதில்ல வா” என்ற அர்னவ், விக்ரமின் கையைப் பிடித்துக் கொண்டு சில அடிகள் பின் சென்று, அதன் பின்னர் வேகமாக முன்னேறி வந்தான் 

பின் சட்டென அந்த மர்ம இடத்திற்குள் விக்ரமின் கரத்தைப் பற்றியபடியே குதித்தான் அர்னவ்

(தொடரும்… வெள்ளி தோறும்)

#ad

                      

#ad 

              

          

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    டிஜிட்டல் ஓவியங்கள் By ரகுராமன்

    அத்தனைக்கும் ஆசைப்படு (கவிதை) – ✍ ரோகிணி கனகராஜ்