in

ஆழியின் காதலி ❤ (பகுதி 10) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 10)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

அர்னவ் சிறிது திமிறிக் கொண்டிருக்க… கோபம் கொண்டு கனல் கக்கும் கண்களால் சமுத்திராவை அசையாது பார்த்துக் கொண்டிருந்தாள் சாமினி 

“ம்ம்ம்… அதிகத் தைரியம் தானடி உமக்கு. ஓகோ… குலம் காக்க வந்தவள் எனும் இறுமாப்போ? ஆமாம் அதுவும் சரி தான், அதனாலேயே உம்மையும் உம் சிவனையும் விட்டு விட்டுச் செல்கிறேன்.

ம்ஹும்.. அதற்காக மகிழ்வுற்று விடாதே. இப்பொழுது அளிக்கும் விடுதலை, உம்மிருவரையும் கண்ட பயத்தினால் அல்ல… எம் தேவியின் பூசைப் பொருட்களைப் பூசைக்கான நாழிகையில் தான் பறிக்க, படைக்க வேண்டும். அதுவரை எம் உள்ளம் கருணை கொண்டு உம்மிருவரையும் உயிரோடு விட்டு வைத்திருக்கும்.

என்ன ருத்ர தேவரே?.. அதுவரை சற்றுப் பொறுத்திருங்கள். உங்களுக்கான காலம் கனியட்டும் இருவரையும் ஒன்றாக நான் இணைத்து வைத்து விடுகிறேன்” என மிகுந்த ஏளனமாகக் கூறித் திரும்பியவள், சட்டென்று ஏதோ நினைவு வந்தவளாகத் திரும்பி, விக்ரமின் மீது ஒரு தீப்பார்வையை வீசிச் சென்றாள்.

அவள் அர்னவை விடுவித்த பின்பும் கூட, அவனால் சில மணித்துளிகளுக்கு எதுவும் பேச இயலவில்லை. ஏனெனில் குரல்வளை நொறுங்கும் அளவிற்கு மிகுந்த இறுக்கத்துடன் அவனைப் பற்றியிருந்தாள் சமுத்திரா

மறுபுறம் சாமினியோ, திரிபுரம் எரித்த பெருமானின் மீதமான தீப்பொறியெனக் கனன்று கொண்டிருந்தாள்..

அவளருகே சென்ற அர்னவ், “சாமினி எனக்கு உன்னோட கோபம் புரியுது. ஆனா நீ வாளால அவள் கழுத்தை கிழிச்ச பின்னாடியும் கூட, அவ எப்படி உயிரோட இருந்தா? அது ருத்ர வாள் தான?” எனக் கேட்ட நேரம், தூர விழுந்த வாளினை எடுத்து வந்த விக்ரம் அமைதியாகச் சாமினியிடம்  வழங்கினான் 

மறுப்பாய் லையசைத்தவள், “வேண்டாம் விக்ரமரே, அந்தக் கடகம் எமக்கு உரியது அன்று” எனவும், புரியாமல் விழித்தனர் இருவரும்

“ஆம்… அந்த ருத்ர வாள் ருத்ர தேவனுக்கே உரியது. யாம் இக்கடகம் கொண்டு அவளை எதிர்த்து நிற்க மட்டுமே இயலும். உம்மால் மட்டுமே அவளை வீழ்த்திட முடியும்” என்றாள் அர்னாவை பார்த்தபடி 

அதைக் கேட்டு அதிர்ந்த அர்னவ், “அப்ப என்னால மட்டும் தான் அவளைக் கொல்ல முடியுமா? ஓ அதனால தான் என் மேல அவ்வளவு கொலை வெறியா அவளுக்கு?

அப்படினா அவ என் கழுத்த பிடிச்சதுலயும், என்ன கொல்லுவேன்னு சொன்னதுலயும் அர்த்தம் இருக்கு. ஆனா இதுல சம்மந்தமே இல்லாம விக்ரம எதுக்கு அப்படி முறைக்கணும்? ஏன்னா அவன் இங்க வந்தது என்னால தான். எனக்கு எந்த ஆபத்து வந்தாலும் பரவால்ல. ஆனா விக்ரமுக்கு என்னால எந்த ஆபத்தும் வந்துடக் கூடாது” என்றான்.

“ஓகோ அப்படியா? ஆனால் விக்ரமர் இல்லா விட்டால் உம்மால் இந்தத் தீவினை கண்டறிய இயன்றிருக்கும் என்று நினைக்கிறீரா? அல்லது விக்ரமர் கரம் பற்றிடாமல் உம்மால் ஓம்கார வனத்திற்குள் நுழைந்திருக்க முடியும் என்று எண்ணுகிறீரா?

இங்கு எந்தவொரு செயலும் காரணக் காரியமின்றி நிகழ்வதில்லை ருத்ர தேவரே. இங்கிருக்கும் மர்மக் கதவுகளைத் திறக்கும் திறப்பான் விக்ரமர் தான்” எனச் சாமினி கூறியதும்,  விக்ரமிற்கு மயக்கம் வருவது போல ஆகி விட்டது.

உடனே அவனருகே ஓடி வந்த கயா, “விக்ரமரே… இப்படி எதற்கெடுத்தாலும் மயங்கி விழுவதை நிறுத்துங்கள். நீங்கள் சமுத்திராவைக் கண்டு அஞ்சுவது அவளுக்குத் தெரிந்தால், அவளுக்கு உங்களைக் கொல்லுவது மிக எளிதாகப் போய் விடும்” எனவும் 

கடுப்படைந்த விக்ரம், “அட போங்க யா நீங்களும் உங்க சமுத்திராவும். இவரு எதோ கடல்ல பொக்கிஷம் இருக்கு, அத நாம தான் கண்டுபிடிக்கணும்னு சொன்னதாலயும், எங்க தாத்தன் அந்தக் குவாட்டர் கோவிந்தசாமி மப்புல உளறி என்ன உசுப்பேத்துனாதாலயும் தான் நான் இங்க வந்தேன். இப்படி இத்தனை வில்லங்கம் இருக்கும்னு தெரிஞ்சுருந்தா எந்த முட்டாப்பயலாவது வந்துருப்பானா?

இதுல நான் தான் உங்க தீவோட சாவியா? ஏதாவது டூப்ளிகேட் சாவி செஞ்சுட்டு ஒரிஜினல் என்னை திரும்ப அனுப்பிடுங்களேன்? சாமினி அவ இப்படிச் சொன்னதுமே என் உடம்புல பாதி உயிரு போய்டுச்சு, இதுல சமுத்திரா வேற தனியா என்னை கொல்றதுக்கு இன்னும் என்ன இருக்கு” என புலம்பினான் விக்ரம் 

“டேய் விக்கி… என் உயிரை கொடுத்தாவது நான் உன்ன காப்பாத்துவேன் டா, நீ மனசு விடாத” என்றான் அர்னவ் உறுதியான குரலில் 

“அய்யயோ பாஸ், For your kind information… சமுத்திரா முதல்ல உங்க மேல தான் கொலை வெறியோட இருக்கா. அதுக்கப்பறம் தான் நான்” எனச் சிறிது நக்கலாகக் கூறினான் விக்ரம்.

“இல்லை விக்ரமரே… அவள் வசம் உள்ள மகுடத்தினை எடுக்கும் வல்லமை உங்களுக்கே உள்ளது. அதன் பின்பே அந்த மகுடத்தினை யாம் சிவன் பாதத்தில் வைத்து அபிடேகம் செய்ய முடியும். நீர் இல்லாவிடில் எங்கள் அபிடேகத்திற்கு எவ்வித பலனும் இராது. அதனால் அவள் முதலில் உம் உயிர் பறிக்கவே நினைப்பாள்” என சாமினி கூறவும்

“அடப் பாவிங்களா… ஒரு பேச்சுக்கு கூட ஆறுதலா சொல்ல மாட்டீங்களா? சும்மா ஒத்தாசைக்குக் கூட வந்தது ஒரு குத்தமாடா? இப்படிக் கோத்து விட்டு வேடிக்கை பாக்கறீங்களே” எனப் புலம்பினான் விக்ரம்.

அதைக் கேட்டதும் மீண்டும் ஏதோ சமாதானம் செய்ய முயன்ற அர்னவை, கண்களாலேயே அடக்கிய கயா.. ‘நான் பார்த்துக் கொள்கிறேன்’ என்பது போல் சைகை செய்து விட்டு விக்ரமிடம் பேசலானாள் 

“விக்ரமரே என்னுடன் சற்றுத் தனியாக வருகிறீரா?” எனக் கேட்டதும் 

“எதுக்கு” எனச் சற்று முறைப்புடனே கேட்டான் விக்ரம்.

“சற்றுத் தனியாக வந்து இந்தக் கேள்வியைக் கேளுங்கள், நான் விடை பகர்கிறேன்” எனப் பதிலுக்குக் கயாவும் சற்று மிதப்புடனே கூற

சலிப்புடன் ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், “எல்லாம் என் நேரம்” என்றவாறு உடன் சென்றான் விக்ரம் 

காட்டுக்குள் சற்று மரங்கள் நடுவே இருந்த ஒரு நந்தவனத்திற்கு அழைத்து வந்தவள் எதுவும் பேசாமல் அமைதியாய் இருக்கவும்,  எரிச்சலடைந்தான் விக்ரம்

“நீ எவ்ளோ நேரம் வேணாலும் இங்கயே நின்னு வேடிக்கை பார்த்துட்டு இரு… நான் போறேன்” என திரும்பி செல்ல எத்தனித்தான்

சட்டென அனாயசமாக அவன் கரங்களைப் பற்றியவள், “நில்லுங்கள் விக்ரமரே… தங்களுக்கு இப்பொழுது இருக்கும் குழப்பங்கள் என்னென்ன?” என்று சற்று அமைதியாகவே கேட்டாள் கயா.

“எனக்குக் குழப்பம் எல்லாம் எதுவுமே இல்ல. எனக்கு இருக்கறது எல்லாம் பயம் மட்டும் தான்… வாழவேண்டிய வயசுல இப்படி இங்க வந்து வழுக்கி விழுந்துட்டனே” என மீண்டும் தனது புலம்பல் புராணத்தைத் தொடர்ந்தான்

“ஐயோ சற்று நிறுத்துங்கள். இங்கு இத்துணைப் பேர் உங்களைப் பாதுகாக்கத் தான் இருக்கிறோம். உங்களை விட உங்கள் உயிர் எனக்கு… எங்களுக்குத் தான் முக்கியம். முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றாள் கயா

“ஆமாமா… என்ன வச்சு தான நீங்க எல்லாரும் உங்க சாபத்துல இருந்து தப்பிக்க முடியும்? அதனால தான நீங்க எனக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கறீங்க?” என்றான் விக்ரம் எரிச்சலாய் 

“மற்றவர் எப்படியோ? என்னைப் பார்த்தால் அவ்வளவு சுயநலவாதியாக தெரிகிறதா விக்ரமரே? என் கண்களைப் பார்த்துக் கூறுங்கள்.. உங்களுக்கு அப்படித் தெரிகிறதா?” என கயா கேட்க 

“எனக்கு எப்படி நீ மனசுல என்ன நினைக்கறன்னு தெரியும்?” என விழித்தான் விக்ரம்.

“ஓகோ நான் மனதில் நினைப்பது உமக்குத் தெரியாதா? அதனால் தான் இரவெல்லாம் உறக்கம் பிடிக்காமல் என் பெயரை உருப்போட்டுக் கொண்டு இருந்தீரா?” என கயா கேலியாய் கேட்க 

“ஏய்.. ஏய்.. அது எப்படி உனக்குத் தெரியும்?” என பதட்டத்துடன் விக்ரம் கேட்க 

“தெரியும்… முதல் நாளிலே என்னை விழுங்குவது போல நீர் பார்த்த பார்வையிலேயே தெரியும். என் பெயர் கேட்ட நொடி… உமது விழிகள் விரிந்த ஆச்சர்யத்தில் எமக்குத் தெரியும். நித்திரை கொள்ளாமல் என் பெயரை நீர் பிதற்றியதும் தெரியும். இதெல்லாம் உமக்காக உமது நண்பர் எம்மிடம் தூது வந்ததால் இன்னும் நன்றாய் விளங்கத் தெரியும்.

இத்தனைக்கும் மேலாக… யாம் உம்மைக் காணும் போதெல்லாம், உமது கண்களில் கசியும் அன்பினிலே எமக்குத் தெரியும்” என மென்னகையுடன் கயா கூற, ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் விக்ரம்

“தெரியும் தெரியும்னு சொல்றியே… அப்படி தெரிஞ்சதுல என்ன தான் கண்டுபுடுச்ச நீ?” எனவும் 

“யான் யாரென்றே தெரியாத பொழுது காதல் வளர்த்த எம் தலைவன், எம் உண்மை நிலையறிந்து பின் வாங்குகின்றார் என்றும் தெரியும் எமக்கு. ஆனால் அதுவும் சரிதான். இயற்கைக்கு மாறான இந்த உறவு நிலைக்காது என்றும் புரிகிறது. இது நல்லதல்ல என்பதும் கூட எமக்குத் தெரியும்” என்று கூறி முடிக்கையில், கயாவின் குரல் விசும்பலில் முடிந்தது 

“கயா… அது அப்படி எல்லாம் இல்ல மா. எது எப்படி இருந்தாலும் சரி, நான் யாரையும் எப்பயும் வருத்தப்பட வைக்கணும்னு நினைக்கவே மாட்டேன். அதுவும் உன்ன, கண்டிப்பா மாட்டேன்.

அது மட்டுமில்லாம இன்னொன்னும் நீ என் நிலைமையில இருந்து யோசிச்சு பாரு. இதெல்லாம் உண்மையா இல்ல கனவானு இன்னும் எனக்குச் சந்தேகம் இருக்கு. இதெல்லாம் என் மனசு ஏத்துக்கணும் இல்ல?

ஆனா அர்னவ் சார்… அவர் தான் ருத்ர தேவன்னு என்கிட்ட கூடச் சொல்லல. அதான் அவர் கையில் மீன் மச்சம் இருக்கறத என்கிட்டே இருந்து மறைச்சுட்டாரு

நீங்க எல்லாரும் அவரு தான் உங்க சாபம் தீர்க்க வந்த ருத்ர தேவன்னு சொன்ன அதிர்ச்சியில் இருந்து நான் வெளில வர்றதுக்குள்ளயே, எல்லாரும் சேர்ந்து எனக்கு இன்னொரு குண்டு வேற தூக்கி போட்டுடீங்க. இத்தனை குழப்பத்துல நான் என்ன தான் செய்வேன்னு நீயே சொல்லு” எனக் கெஞ்சுவது போல விக்ரம் பேச

சற்று மனதை தேற்றிக் கொண்ட கயா, “ருத்ர தேவர் உங்களிடம் உண்மை உரைக்கவில்லை என்றால், நீங்கள் கேள்வி கேட்க வேண்டியது அவரிடம் தானே? அதற்கு ஏன் என்னிடம் கோபம் கொண்டீர்கள்? அது மட்டுமின்றி என்னிடம் கேட்கக் கூடிய கேள்விகளைக் கேட்டால், அதற்குரிய பதில் உமக்குக் கிடைக்கும். அதை விட்டு கோபத்தை நீர் கையிலெடுத்தால், உமக்கு இறுதியில் கோபம் மட்டுமே துணையாய் நிற்கும்” என்றாள் கயா

“நான் கோபத்துல கேட்கல, நிறைய விஷயம் எனக்குப் புரியல. அதுல முதல் விஷயமே, கடவுள் பூஜைக்கான இடத்துல நீங்க மறைஞ்சு வந்தது கடவுளை வழிபடறதுக்குத் தான? அப்பறம் ஏன் அந்தக் கடவுள் உங்களுக்குச் சாபம் குடுக்கணும்?இது அவ்ளோ பெரிய தப்பா என்ன?” என விக்ரம் தனது முதல் கேள்வியை ஆரம்பித்தான்

அவனது முதல் கேள்விக்கே சிரித்து விட்ட கயா, “உங்களுக்கு உண்மை புரியவில்லை விக்ரமரே. உங்களுக்கெல்லாம் இறை பக்தி என்பது எவ்வாறு என்று எமக்குத் தெரியாது. ஆனால் எம்மைப் பொறுத்தவரையில், இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நேர்மை. அதிமுக்கியமாக நம் பக்தியில் நேர்மை. இறைவனிடத்திலேயே நேர்மை கொள்ள இயலாத பொழுது, அவனே நம்மைக் கைவிடுவதில் வியப்பேதும் இல்லையல்லவா?

அது மட்டுமின்றி இந்த ஓம்கார வனத்தினுள் சித்தர்கள் அனைவரும் தங்கள் யோக வலிமையால் ஒரு சக்தி வளையம் அமைத்திருந்தனர். அந்த வளையமானது, பிற மனிதர்கள்… அதாவது எங்களின் உள்நுழைவினால் வலுவிழந்து போயிற்று.

வலுவிழந்து போனது மட்டுமல்லாமல், இந்த உலகின் உயிர்களெல்லாம் நரை திரை மூப்பு கண்டு வயது முதிர்ந்த பின்னரே, இயற்கையாக இறைவனின் திருவடி தீண்டிட வேண்டுமெனச் சித்தர்கள் செய்த யாகத்தில், யாம் சுயநலத்துடன் கள்ளத்தனமாக உட்புகுந்து, அவ்வேள்வியின் வலிமை குலையச் செய்து விட்டமையாலே இந்நிலைமை எமக்கும் எம் மக்களுக்கும்” என்றாள் 

அவள் கூறியது கேட்டு சற்று யோசித்த விக்ரம், “எங்க ஊர்ல எல்லாம் இப்படி இல்லப்பா. கோவிலுக்குப் போகவே யோசிக்கறவங்க தான் அதிகம். இப்ப எல்லாம் கோவில் தான் காதல் வளர்க்கற இடமா ஆகிடுச்சு. அப்படினா எங்களுக்கு எல்லாம் என்ன மாதிரி சாபம் வரும்னு தெரில” என பெருமூச்செறிந்தான்

அதில் சற்று ஆதங்கமும் கலந்திருந்தது. தனது ஆகப்பெரும் சந்தேகமான அடுத்தக் கேள்வியைக் கேட்டான் விக்ரம் 

“ஆமா அர்னவ் சார் தான் ஏதோ நீங்க சொன்ன நேரத்துல பிறந்தார், மீன் மச்சம் எல்லாம் அவர் கையில தான இருக்கு. அதனால அவருக்கு இந்தத் தீவோட சாபத்தைத் தீர்க்க வல்லமை இருக்கு சரி… ஆனா இதுக்கு நடுவுல எனக்கு என்ன சம்மந்தம் இருக்கு?” என விக்ரம் கேட்க 

“அப்படியா? உமக்கு எந்தச் சம்மந்தமும் இல்லையா? உமது தாதையருள் (மூதாதை) யாராவது நாவாய் ஏறி கடற்பயணம் மேற்கொண்டனரா?” என வினவினாள் கயா

“ஆமாம் எங்க தாத்தாவோட தாத்தா கப்பல்ல எங்கயோ போனதா சின்ன வயசுல வீட்டுல பேசினதக் கேட்ருக்கேன். அதுக்கு என்ன இப்போ?” என கேள்வியாய் பார்த்தான் விக்ரம்

“ஹ்ம்ம்.. அவர் உயிருடன் திரும்பி வந்தாரா?” என கயா கேட்க 

“ஹ்ம்ம்.. இல்லையே. அவர் கப்பல்ல வந்துட்டு இருந்தப்போ, ஏதோ கொடூரமான மிருகம் கப்பலை தாக்கி அதுல இருந்த என் தாத்தாவும் இறந்திட்டதா செய்தி வந்தது. அப்படின்னு தான் அப்ப கதை கதையா சொல்லுவாங்க. ஏன் அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்?” என விழித்தான் விக்ரம்

“ஹ்ம்ம்… உமது தாதை இறந்தது சமுத்திராவின் திருக்கரங்களால் தான்” என கயா கூற

“ஏய்… ஏய்… என்ன… நீ என்னென்னமோ சொல்ற? கடல்ல யார் செத்தாலும் அதுக்குக் காரணம் சமுத்திரா தானா? நீ அது இதுனு சொல்லி என்ன குழப்பாத” பதறி, வார்த்தைகள் குழறிப் பேசினான் விக்ரம்

“யான் உம்மைக் குழப்பவில்லை, உண்மையை அறிய உன் மனம் தான் ஏற்கவில்லை. சரி நீர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நடக்கக் கூடியது நடந்த பின்பு அனைத்தும் விளங்கும்” என்றாள் கயா பெருமூச்சுடன் 

இவ்வாறு இவ்விருவருக்கும் இங்கு விவாதம் நடந்து கொண்டிருக்க… தீவின் மற்றொரு புறத்தில், அர்னவும் சாமினியும் தீட்டி வைத்த ஓவியங்கள் போல, எவ்வித அசைவுமின்றி ஒருவரை ஒருவர் ஆழப் பார்த்துக் கொண்டிருந்தனர் 

ஒருவர் விழியில் இன்னொருவர் நுழைந்து, மற்றவர் இதயம் புதைத்து வைத்திருக்கும் ரகசியத்தை அறிய விழைந்தனரோ? யாரறிவார்?

கடற்பறவைகளின் இனிய கீதமும், கரை தொடும் அலையின் பேரிரைச்சலும், அவர்களின் மௌன மொழிக்கு பின்னணி இசைத்துக் கொண்டிருந்தன

திடுமென நினைவு வந்தவனாக, “ஏன் சாமினி… உன் திருமணம் இங்கு ஓம்கார வனத்தில் தான் நடக்கணும்னு ஏதாவது ஆசை இருக்கா உனக்கு? இல்ல எங்க நடந்தாலும் சரியா?” என அர்னவ் வினவ 

“இப்பொழுது அதைப் பற்றி உங்களுக்கென்ன ருத்ர தேவரே… உங்கள் திருமணம் எவ்வாறு நிகழவேண்டுமென மட்டும் யோசியுங்கள். என் திருமணத்தைப் பற்றி ஐயுற வேண்டாம்” என சற்று விட்டேற்றியாக பதில் கூறினாள் சாமினி

“ஆமாம் சாமினி என் கல்யாணத்த பத்தி தான் நான் யோசிச்சுட்டு இருக்கேன். ஆனா கல்யாணப் பொண்ணுக்குனு ஒரு கனவு இருக்கும்ல? அதனால தான் உன்கிட்டயும் கேட்டேன். சரி சொல்லு நம்ம கல்யாணம் எப்படி நடக்கணும்?” என, பேச்சாற்றலில் தானும் சளைத்தவனல்ல என நிரூபித்தான் அர்னவ்

“ஹா ஹா… திருமணம் நம் இருவருக்குமா? திருமணக் கனவு பற்றி அறிவதற்கு முன், நேசம் பகிர்ந்து எமது விருப்பத்தையும் அறிய விழைந்திருக்க வேண்டும் தாங்கள். ஆனால் எந்த நம்பிக்கையில் என்னிடம் திருமணம் பற்றிப் பேசினீர்கள்?” என சற்று ஏளனத் தொனியில் சாமினி கேட்க 

நிலைமையைச் சுமூகமாகவே கொண்டு செல்ல விரும்பிய அர்னவ், “பெயரிலேயே கடலளவு காதலைக் கொண்டிருக்கும் ஒருத்தி, என் மேல இருக்கற காதல மறுக்காம ஒத்துக்குவா அப்படிங்கற நம்பிக்கைல தான்” என்றான் அர்னவ் 

“ஆமாம் என் பெயரின் அர்த்தம் காதல் தான். அதுவும் கடலளவு காதல் என்பது தான். ஆனால் அந்தக் காதல் ஆழியின் மீது தானே அன்றி அர்னவ் மீதல்லவே” என அவனை வாரிவிடும் வேகத்தில் சாமினி கூற, சிரிப்புப் பீறிக் கொண்டு வந்தது அர்னவிற்கு

சற்று உரக்கவே நகைத்தவன், “அது தான் நீயே ஒத்துக்கிட்டியே… கடல் மேல தான் உனக்குக் கடலளவு காதலனு. நீ தெரிஞ்சு சொன்னியா இல்ல தெரியாம சொன்னியானு எனக்குத் தெரியல. ஆனா அர்னவ் என்பதற்கு அர்த்தம் கடல் தான், அதுவும் சாதாரணக் கடல் இல்லம்மா… ஆழிப் பெருங்கடல். சோ, இந்த ஆழியின் காதலி நீ தான்… புரிஞ்சுதா?” என்றவன், அவள் கையைப் பற்றி தன்னருகில் இழுக்க முயன்றான்

அவனுக்கு என்ன பதிலுரைப்பது என அறியாமல், திருடு போன ஆட்டுக் குட்டி போலத் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தவளை, ஆபத்பாந்தவன்.. அனாதரட்சகனாக வந்து காப்பாற்றியது…

(தொடரும்)

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நம்மிடம் கையேந்தும் தெய்வம் ❤ (கவிதை) – ✍ சௌமியா

    முகநூலில் முகம் தொலைத்து… (கவிதை) – ✍முகில் சிவராமன்