in

ஆழியின் காதலி ❤ (பகுதி 13) -✍ விபா விஷா

ஆழியின் காதலி ❤ (பகுதி 13)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

குகையை விட்டு வெளியே வந்த விக்ரமும் அர்னவும் திகைப்புடன் அப்படியே நின்றனர். ஏனென்றால் அந்தத் தீவின் மக்கள் அனைவரும் மொத்தமாகக் குழுமி, அவர்களின் குகை வாயிலில் காத்திருந்தனர்

அதைப் பார்த்த இருவருக்கும் பயப்பந்து ஒன்று தொண்டையில் சிக்கிக் கொண்டது. அதைக் கொஞ்சம் கஷ்டப்பட்ட விழுங்கிய விக்ரம், அர்னவின் காதைக் கடித்தான்

“என்ன பாஸ் நேத்து சாமினிய தனியா பாக்க போனது அவங்களுக்குத் தெரிஞ்சுடுச்சா? எல்லாரும் சேர்ந்து பொது மாத்து சாத்த வந்துருக்காங்களா?” என்றான்

“எனக்கும் அதான்டா சந்தேகமா இருக்கு, அங்க பாரு அந்த எட்டப்பன.. போட்டு குடுத்துட்டு எப்படி டூத் பேஸ்ட் விளம்பரத்துல நிக்கற மாதிரி சிரிச்சுக்கிட்டு நின்னுட்டு இருக்கான்னு” என்று எல்லாளனைச் சுட்டினான் அர்னவ்.

“இவர்கள் எதற்காக எம்மை இவ்வாறு கடுகடுவெனப் பார்க்கிறார்கள்?” எனத் தூய தமிழில் முணுமுணுத்தான் எல்லாளன்

இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, அந்தக் கூட்டத்தினை விலக்கி முன்னேறி வந்தார் ஒருவர். அவரைப் பார்த்து திகைத்துப் போய் நின்றனர் அர்னவும் விக்ரமும்

தான் காண்பது கனவா அல்லது நிஜமா என புரியாத குழப்பத்திலிருந்த இருவரும், திக் பிரம்மையுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கையில் அவர் முன்னால் வந்தார்

ஆம்.. வந்தது குருநாதன் தான். மனிதர் என்ன ஆனார்? அவருடன் வந்த மற்ற விஞ்ஞானிகள் எங்கே? என்று பல கேள்விகள் இருந்தாலும், அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர்கள் வாய் திறக்காது இருந்தனர்.

அவர்களது நிலையை உணர்ந்தவராக, தானே பேச ஆரம்பித்தார் குருநாதன்.

“என்ன அர்னவ்.. அப்படிப் பார்க்கற? வந்திருக்கிறது நீங்களா தான் இருக்கணும்னு நினைச்சுட்டே வந்தேன், கடவுள் காப்பாத்திட்டார்” என்றவர் கூற, அர்னவ் காதை கடித்தான் விக்ரம், வழமை போல

“என்ன பாஸ் இவரு சமுத்திராகிட்ட சிக்கி சின்னாபின்னமாகி இருப்பாருனு நெனச்சா, மனுஷன் உடம்புல ஒரு கீறலும் இல்லாம சும்மா கிண்ணுனு வந்து நிக்குறாரு” என விக்ரம் கேட்க 

“கொஞ்சம் வாய மூடு குரங்கே, அவர் கிட்ட என்ன நடந்ததுனு கேக்கலாம்” என்ற அர்னவ்

குருநாதரிடம் திரும்பி, “சார்.. நீங்க இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க? அப்ப அந்த சமுத்திராகிட்ட இருந்து தப்பிச்சுட்டிங்களா? உங்க கூட வந்த மத்தவங்கள்லாம் எங்க?” என கேள்விகளை அடுக்கினான் 

“அத ஏன் கேக்கற அர்னவ், நிஜமாவே நான் ஒரு பெரிய கண்டத்துல இருந்து தப்பிச்சு இருக்கேன். கடைசியா உங்க கூட பேசினப்ப, நாங்க அந்தக் கிரீடத்தைப் பார்த்துட்டோம். ஆனா அத எடுக்கப் போறதுக்கு முன்னாடி நம்ம கப்பல்ல ஏதோ பிரச்சனை ஆகிடுச்சு, அதனால கரைக்குக் கொண்டு போய் பார்த்துட்டு, அப்பறம் அந்தக் கிரீடத்தை எடுத்துடலாம்னு என்னோட அசிஸ்டன்ட் சொல்லவும், நானும் சரினு இந்தத் தீவுக்குக் கரை ஒதுங்க சம்மதிச்சேன்.

ஆனா இங்க வந்ததுக்கு அப்பறம் தான் அவங்களோட முழுத் திட்டமும் எனக்குத் தெரிஞ்சது. அந்தக் கிரீடத்தைக் கண்டுபிடிச்சதும், என்ன தீர்த்துக்கட்ட தீர்மானிச்சுருக்காங்க. இங்க கரைக்கு வந்த என்கிட்ட அந்தக் கிரீடத்தைப் பத்தி மத்த விவரங்கள் கேட்டுட்டு, என்னை அடி அடினு  அடிச்சாங்க. நான் மயங்கினதும், செத்துட்டதா நெனச்சு கடல்ல தூக்கிப் போட்டுட்டாங்க.

என்னை தூக்க்கி போட்டதும், அவங்க எல்லாரும் கடலுக்குள்ள போகறதுக்கான உபகரணங்கள் எல்லாம் எடுத்துக்கிட்டு அந்தக் கிரீடத்தை எடுக்க கிளம்பினாங்க.  ஒரு சின்னப் படகுல போனவங்க, ஏதோ கடல் மிருகத்தினால செத்துட்டாங்கன்னு இவங்க சொன்னாங்க. உயிருக்கு போராடிகிட்டு இருந்த என்னை மீட்டு, கரைக்குக் கூட்டிட்டு வந்து காப்பாத்தவும் செஞ்சாங்க” என குருநாதன் கூறி முடித்ததும், அர்னவிற்கும் விக்ரமிற்கு முகத்தில் ஈயாடவில்லை.

‘யார் செஞ்ச புண்ணியமோ’ என்று அர்னவ் நிம்மதி பெருமூச்சு விட 

‘எத்தனை கண்டம் வந்தாலும் இந்த மனுஷன் மட்டும் தப்பிச்சுட்டார்’ என நினைத்துக் கொண்டான் விக்ரம் 

“ஆனா சார்… உங்கள எதுக்காக அவங்க கொல்லணும்? உங்க கூட வந்தவங்கள்ல பாதிப் பேர் உங்களோட பர்சனல் அசிஸ்டன்ஸ் தான, அதுவும் உங்களோட ரொம்பக் கிளோஸ் பிரண்டு சயின்டிஸ்ட் மேத்தாவும் வந்துருந்தாரே” என அர்னவ் கேட்க 

“என்னை முதல்ல அடிச்சதே அவன் தான் ப்பா…” என வெறுப்புடன் கூறினார் குருநாதன்.

“ஐயோ… என்ன சார் சொல்றீங்க நீங்க?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் அர்னவ்

“ஆமா அர்னவ் இதுக்கு எல்லாம் காரணம் யாருன்னா..” என குருநாதன் கூற எத்தனித்த தருணம், ]சொல்ல வேண்டாம்’ என்பது போலச் சைகை காட்டினான் விக்ரம் 

அந்த சமிக்கையை உணர்ந்து கொண்ட குருநாதன்,  “இதுக்குக் காரணம் நம்ம போட்டி கம்பெனி ராகுல் குப்தா வா கூட இருக்கலாம் அர்னவ்” என சொல்ல வந்ததை மாற்றி கூறி சமாளித்தார்

ஆனாலும் அவர் மனதில், ‘ஏன் இந்த உண்மையை அர்னவ் அறிந்துவிடக் கூடாதென விக்ரம் நினைக்கிறான்?’ என்ற கேள்வி, நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டே இருந்தது.

மேலும் அவர் அந்தப் போட்டி கம்பெனி மீதான தன் சந்தேகத்தினைத் தெரிவித்ததும், “ச்சே எல்லாம் யோசிச்ச நான் இந்த ராகுலை மறந்தே போயிட்டேனே. ஊருக்கு திரும்பியதும் இருக்கு அவனுக்கு. வேலவமூர்த்தி அங்கிளுக்கு இந்த சூழ்ச்சி எல்லாம் தெரியாது பாவம். நானே அவனைச் சமாளிச்சுக்கறேன். டேய் ராகுல்.. your days are numbered” என அர்னவ் சூளுரைக்கவும், விக்ரமும் குருநாதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, மானசீகமாய்த் தலையில் அடித்துக் கொண்டனர்

பின்பு நம் கொஸ்டின் குலத் திலகம்.. கேள்விகளின் கண்ணன்.. டங்காமாரி மன்னன், விக்ரம் தனது கேள்விக் கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தா

“ஆனா ஏன் சார் நாங்க வந்து இவ்வளவு நாளாகியும் இவங்க யாரும் உங்கள பத்தி சொல்லவே இல்ல? இவ்வளோ நாள் நீங்க எங்க இருந்தீங்க? நம்ம கப்பல் என்னாச்சு? அதுக்கு நிஜமாவே ஏதாவது பிரச்சனையா? அப்படிப் பிரச்சனையா இருந்தா, அத சரி பண்ணினதுக்கு அப்பறம் உங்கள கொல்ல முயற்சி பண்ணினாங்களா? இல்ல அதுக்கு முன்னாடியேவா? உங்களுக்கு எப்ப உடம்பு சரியாச்சு? இப்போ பரவால்லையா? நீங்க எப்படி உங்கள கடல்ல தூக்கி வீசினதுக்கு அப்பறமும் கூட அந்தச் சமுத்திராகிட்ட இருந்து தப்பிச்சீங்க? அட என்ன சார் நான் இவ்ளோ கேள்வி கேக்கறேன், நீங்க பதிலே சொல்லாம இருக்கீங்க?” என மூச்சு விடாமல் விக்ரம் கேட்க

‘அடேய் நீ கேள்வியா கேக்கற? ரேடியோல தன்னந்தனியா பேசிட்டே இருப்பாங்களே, அந்த மாதிரி இல்ல பேசற. பாவம்டா அந்த மனுஷன், இப்பத்  தான் செத்து பிழைச்சு வந்துருக்காரு’ என நினைத்துக் கொண்டான் அர்னவ்

விக்ரம் இத்தனை கேள்விகள் கேட்டதும், சுற்றும் முற்றும் பார்த்து திருதிருவென விழித்த குருநாதன், சுழன்றியடித்து மயங்கி விழுந்தார்

“தெய்வமே… அரும்பாடு பட்டு யாம் காத்த உயிரைத் தாங்கள் இத்துணைக் கேள்விக் கணை தொடுத்து சாய்த்து விட்டீரே..” என எல்லாளன் ஒருபுறம் செந்தமிழில் புலம்ப

“நீயெல்லாம் மனுஷனே இல்ல தெரியுமா…” என அர்னவ் கூறியதும், விக்ரமிற்கும் கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது.

‘அவ்வளவு மோசமாவா கேள்வி கேக்கறோம்?’ என தாடையைச் சொரிந்து கொண்டு அவன் யோசித்துக் கொண்டிருக்க, அந்த கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர், குருநாதன் முகத்தில் தண்ணீர் தெளிக்க, மெல்ல மெல்லக் கண்விழித்தார் அவர்

இன்னும் அதிர்ச்சி விலகாது அயற்சியுடன் அமர்ந்திருந்தவரிடம் சென்ற விக்ரம், “என்ன சார் இப்படித் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துடீங்க? எங்களுக்கு எவ்வளவு பயமாகிடுச்சுச்சு தெரியுமா? இப்போ பரவால்லையா? இல்ல இன்னும் தல கிறுகிறுனு தான் சுத்துதா? கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுக்கறீங்களா?” என மறுபடியும் ஆரம்பிக்க

பதறிப் போய் அவனைத் தடுத்தவர், “ஐயோ அர்னவ், ஏதாவது கேக்கறதுனா நீ கேளு. இவன் இன்னும் ஒரு கேள்வி கேட்டா நான் இப்போவே போய் சேர்ந்துடுவேன். இவன் கூட எல்லாம் நீ எப்படி தான் குடும்பம் நடத்துறியோ?” என கடுப்புடன் கூறினார் குருநாதன்

“அது வந்து எப்படின்னா சார்…” என்று விக்ரம் மீண்டும் ஆரம்பிக்க

அவனைத் தடுத்த அர்னவ், “நீ கொஞ்ச நேரம் shut and sit டா..” என்று உரைத்து விட்டு, குருநாதரிடம் திரும்பினான்.

“அது ஒண்ணுமில்ல சார், உங்கள பாத்த ஆனந்தத்துல இவன் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டான். வேற எதுவுமில்லை, நானும் விக்ரம் கேட்ட கேள்வியத் தான் கேட்க போறேன். அதாவது, நாங்க வந்த இவ்வளவு நாள்ல ஏன் இவங்க யாரும் உங்கள பத்தி எந்த விவரமும் எங்ககிட்ட சொல்லல? இத்தனைக்கும் நாங்க உங்கள தேடித் தான் வந்தோம்னு சொன்னோமே?” என்று அர்னவ் கேட்க

“நான் தான் இவங்ககிட்ட என்னைப் பத்தி உன்கிட்ட சொல்லவேணாம்னு சொன்னேன்” என்றார் குருநாதன் 

குழப்பமாக அவரைப் பார்த்த அர்னவ், “என்ன சார் சொல்றீங்க? ஏன் என்கிட்ட உங்கள பத்தி எதுவும் சொல்ல வேணாம்னு சொன்னீங்க? ஒருவேளை உங்கள கொலை பண்ண நான் தான் ஆளுங்கள செட் பண்ணி இருப்பேன்னு நினைச்சீங்களா?” எனக்  கேட்டதும்

பதறிய குருநாதன், “ச்சே ச்சே… என்ன அர்னவ் இப்படிச் சொல்ற? நான் உன்னைப் பத்தி அப்படி நினைப்பனா? ஆனா நான் சாகலைனு தெரிஞ்சுக்கிட்டா, நம்ம எதிரிங்க என்னை கொல்ல மறுபடியும் முயற்சி பண்ண வாய்ப்பிருக்குனு தான், நான் இவங்ககிட்ட என்னைப் பத்தி யார் கேட்டாலும் எதுவும் சொல்லிடாதீங்கனு கேட்டுக்கிட்டேன். அதுவும் நான் உயிருக்கு போராடிகிட்டு இருந்தப்ப சொன்னது” என குருநாதன் விளக்கிடவும் தான், சற்று நிம்மதியானது அரன்விற்கு

சிறு நிம்மதி பெருமூச்சுடன் அவரை நோக்கிய அர்னவ், “சார் நீங்க ரொம்பச் சோர்வா இருக்கீங்க போலருக்கு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க, நாம் அப்பறம் பேசிக்கலாம்” எனவும் 

“ஆமா அர்னவ் கொஞ்சம் டயர்ட் தான், நான் அப்பறமா உன்கிட்ட மத்த விஷயத்தை எல்லாம் சொல்றேன்” என்றவர், அங்கிருந்து செல்லும் முன், விக்ரமை ஒரு அர்த்தப் பார்வை பார்த்தார் 

அதைப் புரிந்த கொண்ட விக்ரம், லேசாகத் தலையசைக்க, அவர் அங்கிருந்து கிளம்பிய பத்து நிமிஷத்தில், அவர் முன் நின்றான் விக்ரம்

“நான் உன்கிட்ட என்ன கேக்க போறேன்னு உனக்கே தெரியும்னு நினைக்கறேன்” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் குருநாதன்

(தொடரும்)

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சூரியன் (கவிதை) – ✍ரோகிணி கனகராஜ்

    என் அன்பு தோழி ❤ (கவிதை) – ✍ சௌமியா தக்ஷிணாமூர்த்தி