in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 42) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இதுவரை :

கர்ப்பமாக இருக்கும் கவியினியாளிற்கு திடீரென காது வலி வருகிறது. என்ன செய்தும் சரியாகவில்லை. பின் என்ன நடக்கிறது என்பதை காண்போம்.

இனி :
“காது செக் பண்ணி பாத்ததுல அழுக்கெல்லாம் வெளிய வர ஆரம்பிச்சிடுச்சி.. முதல்ல உள்ள இருந்து எடுத்துருப்பாங்க அதனால வலிச்சிருக்கும். இப்போ முன்னாடியே இருக்கு.. அதனால கிளீன் பண்றது ஈசியா இருக்கும்.. நான் ஒரு டாக்டர் அட்ரஸ் சொல்றேன் அங்க போய் பாருங்க.. லேடி டாக்டர் நல்லா பாப்பாங்க”

வீட்டுப் பக்கத்தில் இருந்த ஹோமியோபதி மருத்துவர் குடும்ப நண்பர். அவரிடம் சென்று பரிசோதித்து வர முடிவு செய்து வந்தோம். அவர் தெளிவாக காரணங்களை கூறினார்.

“ஏன் இவ்ளோ அழுக்கு சேர்ந்திருக்கு அண்ணா.. நான் ரெகுலரா சுத்தம் பண்ணிருக்கணுமா”

“நீங்க அடிக்கடி சுத்தம் பண்றேன்னு காதுல குச்சி விட்டு சுத்தம் பண்ணாலும் பிரச்சனை. சில நேரத்துல இப்படி ஆகும். சரி ஆயிடும்.. நீங்க மயக்க ஊசி போட்டு சுத்தம் பண்றேன்னு போகாம வந்ததே உங்க குழந்தைக்கு நல்லது”

“அப்போ அந்த டாக்டர் சொன்னது தப்பா”

“சிலருக்கு அது கரெக்ட்டா இருக்கும். சிலருக்கு செட் ஆகாது. நீங்களே குழந்தை இல்லைனா யார் வலி தாங்கறதுன்னு அன்னிக்கே ஊசி போட்டு கிளீன் பண்ணிருப்பிங்க.. ஆனா நீங்க வலி தாங்கிருக்கிங்க.. இப்போ தானவே எல்லாம் வெளிய வருது”

“ஆனால் எனக்கு இன்னும் வலி இருக்கு அண்ணா”

“நான் சொன்ன டாக்டர் போய் பாருங்க.. ப்ரெக்னன்ட்டா இருக்கும் போது இதுக்காக நான் எதும் மெடிசின் தர்ல”

அவர் கூறியது பாதி புரிந்தது பாதி புரியவில்லை. ஆனால் ஒரு நம்பிக்கை வந்தது. அவர் சொன்ன மருத்துவரை சென்று பார்த்தோம்.

ஒரு கம்பியில் பஞ்சை சுற்றி காதின் வெளியே இருந்த அழுக்கை எடுத்து விட்டு சொட்டு மருந்து எழுதிக் கொடுத்தார்.

அதை இரண்டு நாட்கள் பயன்படுத்தினேன். மூன்றாம் நாள் தூங்கி எழும் பொழுது காதில் இருந்த அழுக்கெல்லாம் ஊறி வெளியே வந்திருந்தது. முன்னாடி இருந்ததை நானே எடுத்தேன். வலி மெல்ல மெல்ல குறைந்து சுத்தமாக மறைந்தது.

ஹோமியோபதி மருத்துவர் வாசு சொன்னது சரியாக இருந்தது. என் நிலையை அறிந்து எனக்கேற்ற நம்பிக்கை கொடுத்து அனுப்பினார். காது வலி மறைந்ததில் நிம்மதி பெருமூச்சு விட்டேன்.

 * * *

மார்ச் 16

ஆறாவது மாதம் இருபத்தி நான்காவது வாரம். அனாமலி ஸ்கேன் எடுக்கச் சென்றோம். கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய முக்கியமான ஸ்கேன். குழந்தையின் முழு வளர்ச்சியையும் பார்க்கப் போகும் ஸ்கேன்.

ஐந்தாவது மாதம் முடிவதற்குள் எடுக்க வேண்டும். எனக்கு ஸ்கேன் எடுக்க ஆறாவது மாத ஆரம்ப தேதியில் தான் பரிந்துரைத்தார்கள். இதிலும் ஒவ்வொரு மருத்துவமனையும் வேறுபடுகிறது.

இந்த ஸ்கேனை மட்டும் வெளியில் இதற்கென்றே பிரத்யேகமாக இருக்கும் இடத்தில் எடுத்துக் கொண்டு அறிக்கையை வாங்கி வரச் சொன்னார் என் மகப்பேறு மருத்துவர்

ஸ்கேன் செய்யும் இடத்திற்கு வந்தோம். காலையில் சீக்கிரமே வந்தும் கூட்டமாக இருந்தது.
சில நிமிடங்கள் காத்திருந்தோம்.

வரவேற்பில் என்னுடைய ஆதாரங்களை வாங்கிக்கொண்டு ஒரு படிவத்தை நிரப்பச் சொன்னார்கள். பின் ஸ்கேனிற்கான பணத்தை கட்டச் சொன்னார்கள்.

கர்ப்ப காலத்தில் எத்தனை பரிசோதனைகள் எத்தனை மருந்து மாத்திரைகள். இதற்கென்றே எவ்வளவு செலவு ஆகிறது. இதனால் தான் பலர் இன்றும் அரசு மருத்துவமனையை நாடுகின்றனர்.

“கவியினியாள் அடுத்து நீங்க தான் யூரின் போறதுனா போய்ட்டு ரெடியா இருங்க”

பரவாயில்லை முதல் ஸ்கேன் போல் வயிறு முட்டத் தண்ணீர் குடிக்க தேவையில்லை. சிறுநீர் கழித்து விட்டு காத்திருந்தேன்.

அடுத்தது நான் தான் என்றதும் சிறு பயம் எழுந்தது. குழந்தை நன்றாக இருக்க வேண்டும் எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டேன்.

“கவியினியாள் உள்ள வாங்க”

கையில் இருந்த பொருட்களை ஆதியிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றேன்.

ஸ்கேன் எடுக்கப் போகும் பெண் என் வயதுடையவர் போல் தான் இருந்தார். இன்னும் திருமணம் கூட ஆகவில்லை.

பார்க்க நளினமாக இருந்தார். அதற்கேற்ற உடை அணிந்திருந்தார். கையுறைகள் அணிந்து கொண்டு என்னருகே வந்தார்.

“அனாமலி ஸ்கேன்னா கொஞ்ச நேரம் ஆகும் எடுத்து முடிக்க. நல்லா ரிலாக்ஸ்சா படுத்துக்கோங்க” மெல்லிய குரலில் கூறினார்.

நானும் பொறுமையாகப் படுத்துக் கொண்டேன். ஸ்கேனிங் கருவியில் ஜெல் தடவி வயிற்றில் வைத்துப் பார்க்கத் தொடங்கினார்.

முதல் ஐந்தாறு நிமிடங்களுக்கு எதுவும் பேசாமல் அவரே திரையில் பார்த்துக் கொண்டிருந்தார்.

பிறகு அங்கிருந்த உதவிப் பெண் ஒருவரை அழைத்து சொல்வதை குறிப்பெடுத்துக் கொள்ளச் சொன்னார். அளவுகளை சொல்ல ஆரம்பித்தார்.

இருபத்தி மூன்று வாரங்கள் முடிந்து இருபத்தி நான்காவது வாரத்தில் இருந்தேன். அவர்கள் அளவு சொல்வதை கேட்டேன்.

ஒரு சில அளவுகள் இருபத்தி நான்கு வாரங்கள் இருந்தன. ஒன்றிண்டு இருபத்தி மூன்று வார வளர்ச்சியில் இருந்தது. நடு நடுவில் தன் சொந்த கதைகயையும் அந்த பெண்ணிடம் கூறினார்.

“ப்ளசென்டா ஆண்டீரியர், லீக்குவர் நார்மல்” என்றார்.

இன்னும் நஞ்சுக் கொடி முதல் ஸ்கேனில் இருந்த நிலையில் தான் இருக்கிறது. பிறகு என் வயிற்றை ஸ்கேனிங் கருவியில் அழுத்த ஆரம்பித்தார்.

“உங்க பேபியோட முகம் பாக்கலான்னு பார்த்தா.. ஸ்பைன் தான் தெரியுது.. குப்புற படுத்துருக்கு.. கொஞ்சம் எழுந்து போய் நடந்துட்டு வாங்க பேபி திரும்புவாங்க.. அப்போ தான் மீதிலாம் செக் பண்ண முடியும்”

அவ்வளவு சீக்கிரம் முகம் காட்டிவிடுவேனா என்று அடம் பிடிக்கிறதா எங்கள் உயிர். வெளியில் வந்தேன்.

“எப்படி இருக்கு நம்ம மிக்கு”

“முகம் காட்டாம குப்புற படுத்துருக்கு மிக்கு.. கொஞ்ச நேரம் நடக்க சொல்லிட்டாங்க”

“சரி வா நடக்கலாம்”

இருபது நிமிடங்கள் வேக வேகமாக நடந்தோம். பின் அரை மணி நேரம் காத்திருந்தேன்.

எனக்குப் பின் இரண்டு பேர் பார்த்துவிட்டு வெளியே வந்தார்கள். மூன்றாவதாக என்னை உள்ளே அழைத்தார்கள்.

ஸ்கேனிங் கருவியை வைத்துப் பார்த்தார்.

“என்ன உங்க பேபி திரும்பவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க.. இன்னும் அதே பொசிஷன்ல தான் இருக்காங்க”

‘என்ன மிக்கு என்னை இப்படி சோதிக்கிறியே எப்போடா நீ திரும்புவ?’

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 41) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 43) – ரேவதி பாலாஜி