in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 43) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“சாப்பிட எதாவது வெச்சிருக்கிங்களா?”

“பழம் வெச்சிருக்கேன்”

“போய் சாப்டுட்டு தண்ணீர் நல்லா குடிச்சிட்டு அஞ்சு நிமிஷம் நடந்துட்டு வாங்க பாக்கலாம்” ஸ்கேன் செய்யும் பெண்மணி வழியிறுத்தினார்.

மீண்டும் வெளியில் வந்து சாப்பிட்டுவிட்டு நடந்தேன். நடக்கும் பொழுதே உள்ளே அழைத்தார்கள்.

“இப்போ முகம் தெரியுதா”

படுத்தவுடன் ஆர்வமாக கேட்டேன்.

“ஹ்ம்ம் ஓகே.. இப்போ பேபி பொசிஷன் நல்லாருக்கு.. பேஸ் தெரியுது பாத்தரலாம்” என்று அவர் கூறியதும் பெருமூச்சி விட்டேன்.

அவர் அளவுகளை எல்லாம் எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டியதை சரிப் பார்த்துவிட்டு இறுதியாக என்னைப் பார்த்து திரையைத் திருப்பினார்.

“உங்க பேபி பேஸ் பாருங்க” 

நான் ஆர்வத்தோடு பார்த்தேன். என் குழந்தையின் உருவத்தை முதல் முறையாக பார்த்தேன். உச்சி குளிர்ந்தது.

கை விரல்கள் கால் விரல்களை காட்டினார்கள். ஐந்து விரல்கள் குட்டி குட்டியாக அழகாக இருந்தது.

“இங்க பாருங்க ஓடுறாங்க.. உங்களுக்கு காட்டிட்டு இருக்கும் போதே ஒளிஞ்சி விளையாடுறாங்க”

அவர் சிரித்துக் கொண்டே கூற நானும் வாய்விட்டு சிரித்தேன்.

சில நிமிடங்கள் வெளியே காத்திருந்தோம். அறிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்கள்.

ரிப்போர்ட்டை புரட்டிப் பார்த்தேன்.

தலை மற்றும் கை கால் விரல்கள் தெரிந்தன. நான் திரையில் பார்த்ததை அழகாக பதிவு செய்து புகைப்படமாக அச்சிட்டிருந்தார்கள். ஆதியிடம் காட்டினேன். ஆதியும் மகிழ்ந்து போனார். புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

எடை 520 கிராம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.

இதயம், நுரையீரல், சிறுநீரகம், முதுகெலும்பு என ஒவ்வொன்றை பற்றியும் குறிப்பிட்டு பின் எல்லாம் இயல்பாக இருப்பதாக போற்றிருந்தார்கள்.

‘பேஸ் வியூ, நெக் நார்மல், நோஸ் போன் ப்ரெசன்ட், அப்பியர்டு நார்மல் போத் ஹாண்ட் அண்ட் பீட் அப்பியர்டு நார்மல்’

எப்படி ஒவ்வொன்றையும் இவ்வளவு தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.

‘நோ ஆப்வியஸ் காஞ்ஜினிடல் அனாமலீஸ்’

அதாவது பிறவி முரண்பாடுகள் எதுவும் இல்லை என்று இறுதியாக குறிப்பிட்டு இருந்தார்கள்.

ரிப்போர்ட்டை எடுத்துக் கொண்டு எங்கள் மகப்பேறு மருத்துவரைப் பார்த்தோம்.

அவரும் எல்லாம் சரியாக இருப்பதாக கூறினார்.

எடை ஒரு கிலோ கூடியிருந்தேன். காது வலியில் இரண்டு வாரங்களாகச் சாப்பிடாமல் இருந்ததற்கு ஒரு கிலோ கூடியதே பெரிது.

இரத்தம் தான் 9.6 வந்துவிட்டதென மாத்திரையோடு சேர்த்து ஒரு சிரப்பும் எழுதிக் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

“ஹலோ கவியினியாள்” செல்வாவிடம் இருந்து அழைப்பு வந்தது. உற்சாகமாக பேசத் தொடங்கினான்.

“பையன் பொறந்துட்டான்டி”

“டேய் சூப்பர்.. எப்போடா.. எப்படி இருக்காங்க குட்டியும் அம்மாவும்”

“நல்லாருக்காங்க ரெண்டு பேரும்.. காலையில பொறந்தான்.. ஆபரேஷன் தான் இவ்ளோ நேரம் அவளையே பாக்கல.. இப்போதான் பாத்துட்டு பையன பாத்துட்டு ஒவ்வொருத்தருக்காக கால் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்.”

“சரிடா பையன பாத்துக்கோ நாங்களும் வரோம்”

“நீ ஊருக்கு வந்தப்புறம் கூட வா.. சிரமப்படாத”

“ஆதிகிட்ட கேக்கறேன். எப்படின்னு பாத்துட்டு வரேன்”

ஒரு வாரம் கழித்து வார விடுமுறையில் சேலம் வந்தோம்.வந்ததும் முதல் வேலையாக செல்வா ராதாவின் பையனை காணச் சென்றோம். இருவரும் நலமாக இருந்தார்கள்.

“பையன் செல்வா மாதிரி தான் இருக்கான் போல” 

“அன்னிக்கு ராதா மாதிரி இருந்தான். முகம் மாறிட்டே இருக்கு ஆதி”

“ராதா உனக்கு எப்படி இருந்தது டெலிவரி அனுபவம்”

“அத ஏன் கவி நீ கேக்கற”

“முடிலனா விடு அப்புறம் பேசிக்கலாம்”

“இல்லை நானும் என் மனசுல இருக்குறது சொல்லணும்ல.. அன்னிக்கு முதல தீட்டு படுதுனு டாக்டர்கிட்டப் போனோம்”

“ஓ..”

“அவங்க அட்மிட் பண்ண சொல்லிட்டாங்க.. டேட்டுக்கும் ஒரு வாரம் தான் டைம் இருந்துச்சு.. தலை கீழ தான் இருக்கு.. வலி வர வெக்கலாம் சொன்னாங்க.. எனக்கும் கொஞ்சம் கொஞ்சமா வலி வந்துச்சு.. அப்புறம் நல்லா இருந்தேன். மறுபடியும் வலி வந்துச்சு. கொஞ்ச நேரம் ஆக ஆக ஒரு மாதிரி ஆகிடுச்சு.. ரெண்டு டைம் வாந்தி எடுத்துட்டேன். பிபி எனக்கு ரொம்ப அதிகம் ஆயிடுச்சு”

“அய்யய்யோ”

“ஆமா கவி.. கொஞ்ச நேரம் பாத்தோம்.. அப்புறம் ஒன்னும் முடில.. ஆபரேஷனே பண்ணிகிறேன்னு சொல்லிட்டேன்”

“விடு பரவால்ல.. பையனும் நீயும் இப்போ நல்லாருக்கீங்கள்ல”

பையனை கையில் வாங்கிக் கொஞ்சினேன். தூக்கவே பயமாக இருந்தது. கையில் எடுத்துக் கொடுக்கச் சொல்லி வாங்கினேன். எப்படி என் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொள்ளப் போகிறேனோ.

“ஆனா உடம்பு முடில தான்.. கால கீழ வெக்கவே முடில.. தையல் வலி உயிர் போகுது”

“சரி ஆயிடும் ராதா”

“ஒரு மாசம் அப்படி இருக்குமாம். கொஞ்சம் கொஞ்சமா சரி ஆயிடுமா.. பாத்துக்கலாம். வேற வழி இல்லை கவி”

“அந்த காலத்துல நாங்க பழைய சோறு சாப்பிட்டே ஏழு எட்டு புள்ளைங்கள நல்லபடியா பெத்தோம்.. இப்போ பாதாம் பிஸ்தான்னு சாப்பட்றாங்க எங்க சுகப்பிரசவம் ஆகுது” ராதா வீட்டில் இருந்த பாட்டி நாங்கள் பேசுவதை கேட்டுவிட்டுக் கூறினார்.

“நடுவுல உனக்கு ஒரு புள்ள இறந்து புறந்துச்சாம்.. அப்படி எதுவும் இப்போ ஆயிட கூடாதுன்னு தான் ஆபரேஷன் பண்ணிக்கிறாங்க” ராதாவின் அம்மா சற்றுக் கோபமாக பதில் அளித்தார்.

இரண்டுமே யோசிக்க வைத்தது. சில நிமிடங்கள் அங்கே அமைதி நிலவியது.

“உன்கிட்ட நான் எதுவும் சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். நீ கேட்டு பயந்துடுவேன்னு”

“அப்பப்ப பயம் வரும்தான்”

“மாசமா இருக்கப்ப நீ எதுவும் போட்டு குழப்பிக்காத.. நல்லா சாப்புடு தூங்கு கவி”

“ஆமா கண்ணு.. இப்போவே நல்லா தூங்கிக்கோ.. குழந்தை புறந்தப்புறம் தூக்கமே சுத்தமா போய்டும்” ராதாவின் அம்மாவும் அறிவுரை கூறினார்.

“நீ தூக்கம் இல்லைன்னா சின்ன விஷயமா நினைச்சிக்காத.. தையல் வலி தாங்காம தூங்கலான்னு தோணும்.. சரியா கண் மூடும் போது அழுவான்.. அந்த தூக்கத்தை விட்டுக் குடுத்து நீ எழுந்து உக்கார்ந்து பால் குடுக்கணும்.. குடிச்சிட்டு உடனேவும் தூங்குவான்.. இல்ல நீ தூக்கி வெச்சி பாத்துக்கனும்.. அது கொஞ்ச நேரம் அம்மா பாத்துப்பாங்க.. என்ன இருந்தாலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்துட்டே இருப்ப.. ஒன்னும் முடியாது”

“இப்போதான்டி எனக்கு பயமே வருது”

“ஹாஹா.. ஒன்னும் பிரச்சனை இல்லை பாத்துக்கலாம். நாள் போகப் போக சரி ஆயிடும்”

அவள் ஆறுதல் கூறியும் மனம் ஏற்கவில்லை.

ஏதோ திருமணம் ஆனது குழந்தைக்கு ஆசைபட்டோம். வயிறு பெருசாகுது எல்லோரும் விழுந்து விழுந்து கவனிக்கிறார்கள் என்கிற மிதப்பில் இருக்கிறேன்.

இது எல்லாம் குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்கப் போகிறது?

உண்மையில் நான் ஒரு குழந்தையை வளர்த்த தயாராகி விட்டேனே!

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 42) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 44) – ரேவதி பாலாஜி