in ,

தொடுவானம் மிக அருகில் ❤ (பகுதி 9) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

இருவரும் ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வு எழுதியது தெரிய வந்தது. இருவரும் நல்ல ரேங்க் வாங்கி தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஆனால் கல்பனா ஆல் இண்டியா லெவலில் ஏழாவது ரேங்க்கில் இருந்தாள். அவளே இவ்வளவு நல்ல மதிப்பெண்களையும், ரேங்க்கையும் எதிர்ப்பார்க்கவில்லை. சத்யா எழுபத்தி ஐந்தாவது ரேங்க்கில் இருந்தாள். சத்யா மூலம் விஷயம் வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரிந்தது.

எல்லோருக்கும் மிகவும் ஆச்சர்யம். வக்கீல் சந்தருவோ “எனக்குத் தெரியும். கல்பனாவின் அறிவுத்திறன் பற்றி எனக்குத் தெரியும். எந்த எக்ஸாமாக இருந்தாலும் கல்பனா முதல் வகுப்பில் தேறி விடுவாள் என்று நான் நன்கறிவேன். ஆனால் மாஸ்டர் டிகிரி படித்தவர்களே ஐ.ஏ.எஸ் தேர்வில் பல முறை எழுதியும் தவறும் போது, பேச்சிலர் டிகிரி படித்த இவள் எப்படி இவ்வளவு நல்ல ரேங்க் வாங்கினாள் என்பது தான் ஆச்சர்யமாக இருக்கிறது” என்று வாய் ஓயாமல் புகழ்ந்து தள்ளினார்.

சத்யாவிற்கோ, அவளை விட அவள் தோழி நல்ல ரேங்க் வாங்கி பாஸ் செய்ததில் மிகுந்த மகிழ்ச்சி. எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடுத்து சத்யாவின் வெற்றியைக் கொண்டாடினாள்.

சங்கீதாவிற்கும், கீதாவிற்கும் ஸ்வீட் கொடுக்கும் போது “கங்கிராஜுலேஷன்ஸ் சத்யா” என்றனர்.

“இந்த ஸ்வீட் எனக்காகக் கொடுப்பதில்லை. என் ப்ரண்ட் கல்பனா என்னை விட அதிக மதிப்பெண்கள் வாங்கி என்ட்ரன்ஸ் டெஸ்டில் பாஸ் செய்திருக்கிறாள். அவள் கழுதையில்லை, பாயும் பெண்புலி என்று நிரூபித்து விட்டாள்” என்று குதித்துக் கொண்டு ஓடினாள். அவர்களைத் திரும்பிப் பார்த்து கேலியாக சிரித்துக் கொண்டு போனாள் சத்யா. விஜயாவிற்கும் மிகுந்த சந்தோஷம் .

“நீ மெயின் எக்ஸாமிற்குப் படிக்க வேண்டும். அத்துடன் காலேஜில் சேர்ந்திருக்கும் கோர்ஸிற்கும் படிக்க வேண்டும் அல்லவா? இவ்வளவு வேலைகளை வைத்துக் கொண்டு உன்னால் என் ஆபீஸில் வந்து வேலை செய்ய முடியுமா?” என்று தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“விஜயாக்கா, அதெற்கெல்லாம் செலவு செய்ய வேண்டும் அல்லவா? உங்களிடம் வாங்கும் சம்பளம் தான் ஆதாரம். அதனால் படிப்பில் வேண்டுமானால் எதையாவது இழக்கலாம். ஆனால் வருமானத்தை இழக்க முடியாது அக்கா” என்றாள் சிரித்துக் கொண்டு.

கல்லூரியில் இருந்து வேகமாக வந்து பஸ் ஸ்டாண்டில் நின்றாள் கல்பனா. சாப்பிடக்கூட அவளுக்கு நேரமில்லை. அம்மா கட்டிக் கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலம் சாப்பிடாமல் பத்திரமாக அவள் பையில் இருந்தது.

அப்போது மெதுவாக ஒரு பென்ஸ் கார் அவளருகில் வந்து மெதுவாக உரசிக் கொண்டு நின்றது. அதிலிருந்து கௌதம் தான் ஸ்டைலாக இறங்கி வந்தான்.

“கல்பனா, ஏன் என் கண்ணெதிரில் வராமல் ஒளிந்து கொண்டிருக்கிறாய்? நான் என்ன தவறு செய்தேன்? என் மேல் என்ன கோபம்?” என்றான் கௌதம் மெதுவான குரலில், அருகில் வந்து நின்று கொண்டு.

“இதென்ன கலாட்டா? நான் என்ட்ரன்ஸ் எக்ஸாமிற்குத் தானே படித்துக் கொண்டிருந்தேன். எனக்கென்ன உங்கள் மேல் கோபம்?”  என்றாள் ஏதும் புரியாமல்.

“உனக்கு என்னிடம் கோபம் இல்லையென்றால் என்னோடு காரில் வந்து லஞ்ச் சாப்பிட வேண்டும்“

“இது பக்கா பிளாக் மெயில். நான் ஏன் உங்களோடு வந்து லஞ்ச் சாப்பிடவேண்டும்? எனக்கு ஆபீஸிற்கு நேரம் ஆகி விட்டது, வீணாக வம்பிற்கு இழுக்காதீர்கள்” என்றாள் முறைத்துக் கொண்டு.

 “ஹூம், பெரிய கவர்ன்மென்ட் ஆபீஸ், விஜயாக்கா ஆபீஸ் தானே” என்றான் அலட்சியமாக கௌதம்.

“என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? கவர்மென்ட் ஆபீஸாக இருந்தால் என்ன, தனியார் ஆபீஸாக இருந்தால் என்ன? எங்கிருந்தாலும் கை நீட்டி சம்பளம் வாங்கவில்லையா? வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக இருக்க வேண்டாமா? ப்ளீஸ் சார், நீங்கள் உங்கள் வழியில் போங்கள், நான் என் வழியில் போக அனுமதியுங்கள்” என அவள் பட்டாசாக பொறியவும், கலகலவென்று சிரித்தான் கௌதம்.

“நாம் இருவரும் போகும் வழி ஒன்றே தான், விஜயாக்கா ஆபீஸ். அதற்கு கை கோர்த்து ஒன்றாகப் போகலாமில்லையா. நீ காரில் ஏறு, மற்றதெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றவன் வேகமாகப் போய் காரில் ஏறி ஸ்டார்ட் செய்து முன் சீட்டின் கார் கதவைத் திறந்து, “ப்ளீஸ் கல்பனா, வந்து காரில் ஏறுங்கள்” என்றான் உத்தரவிடும் குரலில்.

அவன் அடிக்குரலில் இட்ட உத்தரவை மீற முடியாமல் காரில் ஏறி முன் வீட்டில் அமர்ந்தாள் கல்பனா.

“நாளுக்கு நாள் உங்கள் தேவையில்லாத அதிகாரம் அதிகமாகிக் கொண்டு போகிறது.  என் மேல் மட்டும் தனியாக கவனமும் அன்பும் செலுத்துவது போல் தெரிகிறது. ஆனால் அது ஏன்?” என்றாள் கோபமாக.

“உனக்குப் புரியவில்லையா கல்பனா. உன் அமைதியும், நல்லகுணமும் என்னை உன் அடிமையாக்கியது. நான் கொதிக்க கொதிக்க சூப் மேலே கொட்டிய போதும் தவறு உங்களுடையது என்று கூறி என் அண்ணியின் வாயிலிருந்து என்னை காப்பாற்றினீர்கள்.  அந்த மதிப்பும் மரியாதையும் தான் இப்போது காதலாக மாறியுள்ளது.

அது மட்டுமல்ல கல்பனா. இன்டர் காலேஜியேட் பங்ஷனில் கடவுள் வாழ்த்துப் பாட ஏற்பாடு செய்திருந்த பெண் வராமல், உன்னைப் பாட வைத்தார்களே; ஞாபகம் ‌இருக்கிறதா? அன்று உன் குரலில் மயங்கினேன். இன்னும் புரியவில்லையா கல்பனா, நான் உன்னை உயிருக்கு மேலாக நேசிக்கிறேன்” என்றான் குரல் தழுதழுக்க.

“நேசிப்பதால் மட்டும் காதல் வென்று விடாது டாக்டர்”

“கல்பனா, அப்படியெல்லாம் சொல்லாதே. ஒத்த மனமும் ஒரே மாதிரி குணமும் கொண்டவர்கள் கட்டாயம் பிரிய மாட்டார்கள் தெரியுமா? நம் இருவருக்கும் ஒரே மாதிரி கெமிஸ்ட்ரி” என்றான் கௌதம்.

“டாக்டர் சார், தொடுவானம் என்றால் தெரியுமா?”

“ஏன் தெரியாது, ஆகாயமும் கடலும் ஓரிடத்தில் சேருவது போலவே ஒரு மாயத் தோற்றம் தரும். ஆனால் எந்த இடத்திலும் சேராது, அது தானே தொடுவானம்?” என்றான் கௌதம்.

“ஆமாம், கடலும் நீல நிறம் தான் வானமும் நீல நிறம் தான், ஆனால் அது எப்போதும் ஒன்று சேராது. நம் காதலும் தொடு வானம் தான். ஏழையும் பணக்காரரும் சேருவதும் என்பதும் தொடு வானம் தான். அது ஒரு கானல் நீர் தான். அதனால் தேவையில்லாத கற்பனைகளோ, வீண் பேச்சுக்களோ வேண்டாம் சார். மற்றவர்களின் அநாவசியக் கற்பனைக்கும் இடம் தர வேண்டாம்” என்றாள் திட்டவட்டமாக.

“ஹலோ, அப்படியென்றால் நான் உங்களோடு பேசக்கூடக் கூடாதா?” என கெளதம் பரிதாபமாகக் கேட்ட விதம் அவளுக்கு சிரிப்பு வந்தது.

“பேசலாம் சிரிக்கலாம், ஆனால் இந்த மாதிரி காரில் பிக்-அப் செய்வது, ரெஸ்டாரென்ட் அழைத்துச் செல்வது எல்லாம் வேண்டாம்”

“சரி சரி, இப்போது எனக்கு ரொம்ப பசிக்கிறது. கல்பனா, நீ உன் மனம் திறந்து சொல். நான் என் விருப்பப்படி தானே என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும், என் அண்ணி கீதாவிற்காகவும் அவர்கள் குடும்பத்திற்காகவும் என் வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியுமா?

என் எலிசாவுடன் இருக்கும் போது தான் இந்த சந்தோஷமும் மன அமைதியும். அவளுக்குப் பின் நான் என்னையே தொலைத்தேன். .குடிப்பதில் நான் என்னையே இழந்தேன். உன்னுடைய நட்பு கிடைத்த பிறகுதான் நான் பழைய கௌதமாக மாறினேன். நான் பழைய கௌதமாக இருப்பதும், குடிகார கௌதமாக மாறுவதும் உன் கையில் தான் இருக்கிறது. இப்போது நீ என்னுடன் பழையபடி நட்பாக இருப்பாய் என்று சொன்னால் நாம் ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாம், இல்லை பட்டினியாகவே வீட்டிற்குப் போகலாம்” எனவும்

“சரி போனால் போகிறது, ஹோட்டலுக்குப் போவது இன்று தான் கடைசி” என்றாள் கல்பனா.

“எனக்குப் பசி கொல்லுகிறது, இப்போது என்னால் எதையும் பேச முடியாது நினைக்கவும் முடியாது” என்றவன் காரை இவர்கள் வழக்கமாகப் போகும் ஓட்டலின் முன் நிறுத்தி, வழக்கமாக உட்காரும் இடத்தில் அவளை உட்காரவைத்து, இவனும் அமர்ந்தான்.

வழக்கம் போல் மசாலா தோசையும், ஐஸ்கிரீமும் ஆர்டர் செய்யாமல், சிக்கன் நூடுல்ஸும், பட்டர் சிக்கனும் ஆர்டர் செய்தான்.

“இவ்வளவு ஹெவியாக சாப்பிட்டால் ஆபீஸ் வேலை செய்வதா, இல்லை தூங்குவதா?” என்றாள் கல்பனா.

ஆனால் கௌதம் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. சாப்பிட்ட பிறகு ஆளுக்கு ஒரு ப்பலூடா என்று ஆர்டர் செய்தான்.

“ஷ்யூரா ஆபீசிற்குப் போனவுடன் தூக்கம் தான், விஜயா மேடத்திடம் டோஸ்தான்” என்று கலகலவென்று சிரித்தாள் கல்பனா.

இருவரும் சிரித்தபடியே காரிலிருந்து இறங்கினர். வீட்டில் உள்ள எல்லோரும் வெளியே வந்து நின்று இவர்களையே கோபத்துடன் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். முக்கியமாக கௌதமின் அப்பாவின் முகம் பாறைபோல் உணர்ச்சியற்று இருந்தது. கீதா, சங்கீதா இருவரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

சத்யா சர்காஸ்டிகலாக உதட்டை வளைத்து சிரித்துக் கொண்டிருந்தாள். விஜயா எதையும் கண்டு கொள்ளவில்லை.  கௌதமும் எதையும் கண்டு கொள்ளவில்லை.

“ஏன் எல்லோரும் இப்படிக் கூடி நிற்கிறீர்கள்? யாரையாவது எதிர்ப்பார்த்து நிற்கிறீர்களா?” என்று கேட்டுக் கொண்டு உள்ளே சென்று விட்டான்.

வக்கீல் சந்துருவோ கல்பனாவை ஒரு மாதிரி உறுத்துப் பார்த்தார். கல்பனா அவரை இதுநாள் வரை இப்படிப் பார்த்ததில்லை. கொடூரமான ஒரு பார்வை. பொதுவாகப் பார்த்தால் அமைதியாக இருப்பது போல் ஒரு தோற்றம், ஆனால் கண்கள் மட்டும் ஒரு புலியின் கண்கள் போல் தோன்றின. கல்பனாவின் உடல் பயத்தால் சிலிர்த்தது.

எல்லோரும் கலைந்து சென்ற பிறகு, கல்பனா விஜயாவின் அலுவலகத்தில் தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள். எல்லோரும் ஒன்று சேர்ந்து மிரட்டுவது போல் நிற்கவும் அரண்டு போய் விட்டாள்.

அப்போது ஒரு வேலைக்காரன், “கல்பனா அம்மா, உங்களைப் பெரிய வக்கீல் ஐயா கூப்பிடுகிறார்” என்று கூறி விட்டுப் போனான்.

விஜயா ஏனோ அவளைப் பரிதாபமாகப் பார்த்தாள். கல்பனாவிற்குப் பயத்தில் உள்ளங்கைகள் வியர்த்துக் கொட்டியது. விஜயாவின் பார்வை வேறு அவளை பயமுறுத்தியது. மூச்சைப் பிடித்துக் கொண்டு சாருவின் அப்பாவின் அறைக்குள் நுழைந்தாள்.

“உட்கார் கல்பனா, உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்?”  என்று கேட்டார்.

“எனக்கு எதற்கு சார் நீங்கள் பணம் தர வேண்டும்?” என்றாள் கல்பனா குரலில் லேசான கோபம் தொனிக்க.

வக்கீல் குரல் கோபத்தில் உயர்ந்தது. ”என் மகன் கௌதமை விட்டு முற்றிலும் நீங்குவதற்கு. எப்போது பார்த்தாலும் அவனுடன் ஹோட்டலுக்குப் போவது, காரில் சுற்றுவது எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கத்தான்” என்று உறுமினார்.

“சார்” என்றாள் அதிர்ந்து.

“போதும் கத்தாதே. உன்னைப் போல் பல ஏழை வீட்டுப் பெண்கள், தங்கள் அழகாலும் அறிவாலும் இப்படித்தான் பணக்காரப் பிள்ளைகளைத் தேடித் தேடி வேட்டையாடுகிறார்கள். நீ குணத்தால் என் நண்பன் போல இல்லை. பணத்தால் மட்டும் வேறுபாடு இல்லை. நாங்கள் வேற்று ஜாதியில் பெண் எடுக்க மாட்டோம். நாங்கள் குடும்ப பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.  உங்கள் ஜாதி வேறு, எங்கள் ஜாதி வேறு. எனக்கு உன் கதையே வேண்டாம். ஆனால் இனிமேல் எந்த காரணத்தைக் கொண்டும் என் கண்களில் நீ படக்கூடாது. என் வீட்டில் உன் காலடி படக்கூடாது, நீ போகலாம்” என்றார் வெறுப்பைக் கண்களிலும் வார்த்தைகளிலும் உமிழ்ந்து கொண்டு.

“தேவையில்லாமல் பேசாதீர்கள் வக்கீல் சார். நான் இனிமேல் உங்கள் வீட்டிற்கு வர மாட்டேன். அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நானாக யாரையும் தேடி வரவில்லை. அதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்று கோபமாகக் கூறி விட்டு வேகமாக வெளியே சென்றாள் கல்பனா.

முகம் சிவக்க, கண்கள் கலங்க, விஜயாவின் ஆபீஸ் அறைக்குள் நுழைந்தாள். விஜயாவும் செய்வதறியாது கல்பனாவைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கல்பனா தொண்டையைக் கனைத்து சரி செய்துக் கொண்டு பேச வாயெடுத்தாள்.

ஆனால் விஜயா அவளைப் பேச விடாமல் கையசைவினால் தடுத்தாள். “எதுவும் சொல்ல வேண்டாம் கல்பனா. அப்பா பேசியதையெல்லாம் நானும் கேட்டேன். கோபத்தில் இப்போது எதுவும் முடிவு செய்ய வேண்டாம், நாளைப் பேசிக் கொள்ளலாம்” என்றாள்.

“ஸாரி மேடம், என்னை மன்னித்து விடுங்கள். பெண்டிங் ஒர்க்கெல்லாம் இன்று முடித்து விடுகிறேன்” என்றாள் கல்பனா.

வேறு ஏதும் பேசாமல் ஆபீஸ் பைல்களை எடுத்துக் கொண்டு அமைதியாகத் தன் வேலைகள் முடித்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீழ்வேனென்று நினைத்தாயோ (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

    ஊருக்குத்தான் உபதேசம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை