in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 41) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மெல்லிய உயிர் என்னை வருடியதா! பட்டாம்பூச்சி வயிற்றில் பறப்பது போல் தோன்றியதே! எங்கள் குழந்தை நகர்ந்ததை நான் உணரத் தொடங்கிவிட்டேனா!

ஆதியிடம் ஓடிச் சென்று விஷயத்தை கூறினேன். ஆதி மகிழ்ச்சியில் என் வயிற்றில் கை வைத்து கவனித்தார். அவரால் எதுவும் உணர முடியவில்லை. 

நான் உணர்ந்து விட்டேன். உடல் பூரித்துப் போனது. என்ன அதிசயம் இது. என் கைக்கு வரும் முன்பே என்னுள் இருந்து என்னை வருடிகிறதே!

“டாக்டர் இருக்காராம் இப்போ போனா பாத்துட்டு வந்தர்லாம் கவி”

ஆதி இப்படி கூறும்வரை என் காது வலியை மறந்திருந்தேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி திளைக்கும் பொழுது வலி எங்கே தெரியப் போகிறது.

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தோம். ஒரு மாதம் கழித்து ஸ்கேன் எடுக்கத்தான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்று இருந்தேன்.

பதினைந்து நாட்கள் கூட ஆகவில்லை. இந்த காது வலி வந்து என்னை மருத்துவமனைக்குச் செல்ல வைத்து விட்டது.

“நீங்க கர்ப்பமா இருக்கனால என்னால பையின் கில்லர் மெடிசின் தர முடியாது. இப்போதைக்கு நான் ஒரு ட்ராப்ஸ் மட்டும் தரேன். நீங்க உங்க கைனகாலஜிஸ்ட்டே பாத்துருங்க”

இரண்டு நாட்கள் காதிற்கு சொட்டு மருந்து விட்டுப் பார்த்தேன். வலி குறைந்த பாடில்லை.

நான்காம் மாதத்தில் ஒருமுறை காய்ச்சல் வந்தது. அதைக் கூட மருத்துவமனைக்கு செல்லாமல் ஓய்வெடுத்து சரி செய்து விட்டேன்.

இதனால் தான் கர்ப்பமாக இருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

சளி பிடித்து இருமல் வந்தால் வயிற்றில் குழந்தையை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்க முடியும்? தும்மல் வந்தால் அந்த குழந்தை பயந்து போய் விடுமே.

அது மட்டுமில்லை எதாவது ஒரு வலியோ சிரமமோ ஏற்பட்டால் அதற்கு மருத்துவம் பார்க்கும் பொழுது வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் அவ்வளவு சீக்கிரத்தில் மருந்து மாத்திரைகள் தர மாட்டார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு வியப்பான விஷயமும் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும் பொழுது அவ்வளவு சீக்கிரம் காய்ச்சல் வராது சளி பிடிக்காது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகத் தான் இருக்கும். மகிழ்ச்சியாக இருப்போம். நல்ல உணவுகளை உண்போம் அதனால் கூட அப்படி இருக்கலாம்.

எனக்கும் இதுவரை எல்லாம் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. எங்கிருந்து தான் வந்ததோ இந்த காது வலி. என்ன செய்வது என்றே புரியவில்லை.

கை கால் வலி என்றால் கூட சுடுதண்ணீர் ஊற்றியோ பிடித்து விட்டோ சரி செய்யலாம். இந்த காது வலியை என்ன செய்வது.

ஈரோட்டில் நான் பார்த்து வரும் மகப்பேறு மருத்துவரையும் பார்த்தோம். அவர் எழுதி தந்த மாத்திரை விழுங்கியும் வலி சரியாகவில்லை.

இந்த சமயத்தில் தான் நன்றாக சாப்பிட வேண்டும். வாந்தி குமட்டல் நின்று பிடித்ததை சாப்பிட ஆரம்பித்த சமயத்தில் காது வலி வந்ததில் மெல்லவே முடியாமல் சாப்பிட சிரமப்படுகிறேன். தண்ணீர் குடித்தால் கூட வலித்தது.

தூங்கும் பொழுது ஒரு பக்கமாக படுத்தாலும் வலிக்கிறது. வேறொரு காது மூக்கு தொண்டை மருத்துவரைப் பார்த்தோம்.

“உங்களுக்கு காதுகுள்ள அழுக்கு நிறைய சேர்ந்திருக்கு.. அந்த வேக்ஸ் கிளீன் பண்ணா வலி குறையும்” என்றவர் என்னை மட்டும் தனியாக உள்ளே வரச் சொன்னார்கள்.

செவிலியர்கள் என்னைப் படுக்க வைத்து கைகளை பிடித்துக் கொண்டார்கள். காதுக்குள் தண்ணீரை அடித்து விட்டு பின் ஏதோ ஒரு கருவிக் கொண்டு என் காதில் விட்டு அழுக்கை எடுக்கத் தொடங்கினார்.

ஏற்கனவே இருந்த காது வலி பல மடங்காக அதிகரித்தது. உயிரே போகும் அளவிற்கு வெடுக்கென்று வலித்தது. வலி தாங்காமல் கத்த ஆரம்பித்தேன்.

“ஒன்னும் இல்ல.. அஞ்சு நிமிஷம் தாங்கிக்கோங்க.. கிளீன் பண்ணிரலாம்” என் கைகளை பிடித்திருந்த செவிலியர் கூறினார்.

“என்னால சுத்தமா முடில.. அம்மா அய்யோஓஓஓ விட்ருங்க”

“காதுல ரொம்ப அழுக்கு இருக்கு.. கிளீன் பண்ணலைனா வலி குறையாது” அதட்டலான குரலில் காது மருத்துவர் கூறினார்.

“ஐயோ என்னால தாங்க முடில… என்னை விடுங்க.. விடுங்க” என் கைகளை பிடித்துக் கொண்டிருந்த செவிலியரை நகர்த்தி விட்டு கைகளை உதறிக் கொண்டு எழுந்து அமர்ந்தேன். அந்த அளவிற்கு அதீத வலி இருந்தது.

“இவங்க என்ன இப்படி கத்தறாங்க.. ப்ரக்னன்ட்டா வேற இருக்காங்க.. அட்டெண்டர் யாரு கூப்டுங்க”

ஆதி உள்ளே வந்தார்.

“இவங்க காது கிளீன் பண்ணவே விட மாட்டிக்கிறாங்க.. ரொம்ப கத்றாங்க.. வேணும்னா ஒன்னு பண்ணலாம் வலி தெரியாம இருக்க அனஸ்த்தீசியா போட்டு காது கிளீன் பண்ணலாம்”

“என்ன டாக்டர் சொல்றிங்க.. மாசமா இருக்கா.. இப்போ எப்படி அனஸ்தீசியா” 

“அது பேபிய எதும் பண்ணாது.. மைல்டா காதுகிட்ட மறுத்து போற மாதிரி போடுவோம் அவ்ளோதான்”

ஏற்கனவே காது வலியில் இருந்த எனக்கு இது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

ஆதி என்னைப் பார்த்தார். நான் வேண்டாம் என்று தலையசைத்தேன்.

“ஒரு டைம் எங்க டாக்டர் கேட்டுட்டு வரோம் சார்”

“இப்போவே பண்ணிக்கிட்டா பெட்டர்”

“இல்லை.. வீட்லயும் சொல்லிட்டு டாக்டர்ட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டே வந்தட்றோம்”

“அப்புறம் உங்க இஷ்டம்”

எனக்கு அங்கிருந்து வெளியில் வந்தால் போதும் என்றிருந்தது. 

“என்னடி இப்படி கத்திட்ட.. ஒரு நிமிஷம் நான் பயந்தேட்டேன் பிரசவம் எதாவது ஆயிடுச்சான்னு”

“என் வலி உனக்கு வந்தா தெரியும் ஆதி” என்றேன் கோவமாக. இருந்தாலும் ஆதி கூறியது எனக்கு சிரிப்பாக இருந்தது.

“இதுவே வலின்னா.. குழந்தை பிறக்கும் போது எப்படி தாங்கிப்ப?”

“பாப்பாக்காக தங்கிப்பேன்”

“காதுக்கு என்ன கவி பண்றது”

“என்னால ஒன்னும் முடில.. சேலத்துக்கே போலாம்.. அங்க யார்டயாவது விசாரிச்சு பாக்கலாம்”

சேலத்தில் ஒரு மருத்துவரையும் பார்த்தும் காது வலி குணமாகவில்லை. கிட்டத்தட்ட பத்து நாட்களாக என்னை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் காது வலிக்கு என்ன தான் தீர்வோ?

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 40) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 42) – ரேவதி பாலாஜி