in ,

யானை…(சிறுகதை) – ✍பெரணமல்லூர் சேகரன்

யானை...(சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 66)

சுசீலா தரையில் உட்கார்ந்தபடி கணவன் ரவியின் போட்டோவையே பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் கலங்கின.

ஆயிரம் தான் பிரச்சனைகள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வாழ்க்கை வண்டியை இழுத்துச் செல்லும் வண்டியில் தனக்கு இணையானவனாயிற்றே. இன்றைக்கு கொரோனாவின் பிடியில் சிக்கி அனாதை போல அரசாங்க ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் சிலிண்டருடன் ரவி இருக்கும் நிலையில், நினைவுகள் அவனையே அல்லவா சுற்றிச் சுற்றி வருகிறது.

டவுன் பஞ்சாயத்து கிளார்க் என்ற பேரு பெத்த பேரு தான். நீலு தாக லேது தான் என்பதாக, சாண் ஏறுவதும் முழம் சறுக்குவதுமாக அல்லவா வாழ்க்கை வண்டியை நகர்த்த முடிகிறது.

எப்போது பார்த்தாலும் சம்பளம் சரியாக வருவதில்லை என்று கூப்பாடு. சம்பளம் வந்தாலும் எவ்வளவு என்று சொல்வதில்லை என்பது கருத்து வேறுபாடு. எல்லா செலவையும் ரவியே பார்த்துச் சென்றால் தான் பாட்டுக்கு வழக்கம் போல வீட்டு வேலைகளை மட்டும் செய்துவிட்டு அக்கடா என்று கிடக்கலாம். 

ஆனால் அதற்கும் வழியில்லை. என்ன செய்வாள் சுசீலா..

பால் வாங்குவதில் ஆரம்பித்து காய்கறி மளிகை சாமான் வாங்குவதிலிருந்து வீட்டு வாடகை கட்டுவதிலிருந்து எல்லாமே சுசீலா தான் பார்க்க வேண்டும். சம்பளம் எவ்வளவு வாங்குகிறான். அதில் எவ்வளவு தருகிறான் என்றெல்லாம் கேட்டுவிட முடியாது.

மாதா மாதம் ஏழாயிரம் ரூபாயை சுசீலாவிடம் ரவி கொடுத்து விட்டு தன் கடமையை முடித்துக் கொள்வதோடு சரி. மற்றபடி அவனிடம் எதையும் கேட்கக் கூடாது.

எல்லா செலவையும் அதற்குள் அடக்கி குடும்பத்தை நடத்திச் செல்லும் பொறுப்பு சுசீலாவைச் சேர்ந்தது.

இந்த லட்சணத்திற்கு பிறந்த பெண் பிள்ளை வயசுக்கு வந்து வருசம் நாலாச்சு. இப்போது பிளஸ்டூ முடிக்கிற சமயம். பரீட்சைக்குத் தேதி நிர்ணயித்து கொரோனா இரண்டாம் அலையால் தள்ளி வைத்தாயிற்று.

காய்கறி கடையில், மளிகைக் கடையில், பால்காரரிடம் பாக்கிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. மாதா மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விட்டு, பூசி மெழுகிப் பேசியே நாளைக் கடத்தி ஜால வித்தை போல குடும்பத்தை நடத்தி வந்தாள் சுசீலா. 

இடையில் மகள் மஞ்சுளா வயதுக்கு வந்து நடத்திய மஞ்சள் நீராட்டு விழா செலவுக்கு வாங்கிய கடன் 50000 அப்படியே ரெண்டு ருபாய் வட்டி ஏறிக் கிடக்குது. எதிர்ப்படும் போதெல்லாம் தாஸ் வாத்தியார் சுசீலாவிடம் விசாரணை நடத்துவது போல் பேச்சும் ஏச்சும் ஓராண்டு காலமாக வாடிக்கை ஆகி விட்டது.

இது பற்றி ஒருநாள் ரவியிடம் மழையிரவில் கேட்டதற்கு சண்டை ஏற்பட்டு இரவு முழுவதும் தூங்காமல் சுசீலா தவித்தது தான் மிச்சம்.

நீண்டு கொண்டே போன சிந்தனை குதிரையை லகான் போட்டு நிறுத்தியது கைபேசியின் அழைப்பொலி. ரவி தான் லைனில், கலங்கிய கண்களில் விடுதலை பெற்ற கண்ணீரைத் துடைத்துக் கொண்ட சுசீலா

“ஏங்க எப்படி இருக்கீங்க? என்னை வரவே கூடாதுன்னு சொல்லி முட்டுக்கட்டை போட்டுட்டாங்க உங்க ஆபீஸ் ஆளுங்க”

“தைரியமா இரு சுசீலா. இப்ப நிலமை பரவாயில்ல, ஆக்சிஜன் வந்துகிட்டே இருக்கு, எனக்கும் குடுத்துக்கிட்டே தான் இருந்தாங்க. இப்ப தான் ஆக்சிஜன் எடுத்து ஒரு மணி நேரம் ஆச்சு. பிரச்சனை ஏதுமில்லை, மூச்சு விட முடியுது. மஞ்சுளா வந்துட்டாளா?

அவள மாடி ரூமில் தனியே இருக்க விட்டு அவளுக்கு வேண்டியத அப்பப்ப எடுத்துப் போயி படியில் வச்சிட்டு வந்துடு. போகும் போது மாஸ்கு போட்டுட்டுப் போ. தினமும் காலை மாலை கபசுர குடிநீர் ரெண்டு பேரும் போட்டுக் குடிங்க..அப்பப்ப வெந்நீரையே ரெண்டு பேரும் குடிங்க.

தினமும் ஒரு வேளை மஞ்சள்பொடி, வேப்பிலை, துளசி தண்ணீரைக் கொதிக்க வச்சி ஆவி பிடிங்க, ஜாக்கிரதை. வேற வழியில்லாம வெளியே போயிட்டு வந்தா கைய நல்லா சோப்புப் போட்டுக் கழுவனும்”

இடைவிடாது பேசிக் கொண்டிருந்த ரவி இருமவும், சுசீலா இடைமறித்தாள்.

“ஏங்க… என்ன இருமுறீங்க? டாக்டர்கிட்ட கேளுங்க. இங்க நாங்க எங்களப் பாத்துக்கறோம், நீங்க அங்க ஜாக்கிரதையா இருங்க. சாப்பாடு, டீ, காபி, மருந்து மாத்திரை யெல்லாம் ஒழுங்கா கொடுக்கிறாங்களா? சுத்த பத்தமா இருக்கா?”

“பரவால்ல சுசீலா, சர்க்கார் ஆஸ்பத்திரின்னா அப்படி  இப்பிடித் தான் இருக்கும். பெட் கெடச்சதே பெரிய விசயம், கவர்ன்மென்ட் ஸ்டாப்ங்கிறதால பெட் கெடச்சிடுச்சி. மேலும் அரசு எங்களை முன் களப் பணியாளர்னு அறிவிச்சதால எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பாத்துக்கறாங்க.

சரி, பெரிய அதிகாரி ரவுண்ட்ஸ் வறார், ரெஸ்ட் எடுக்காம இந்த மாதிரி பேசறவங்கள அவர் கண்டிக்கிறார். நான் அப்புறம் பேசுறேன். கலங்காம தைரியமா இரு சுசீலா. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்”

இணைப்பு கட்டாகி விட்டது வருத்தம் என்றால், அதை விடப் பெரிய வருத்தமாக இருந்தது அவன் கடைசியாக பேசிய வார்த்தைகள்.

மீண்டும் பேசுவதற்காக போன் போடலாமென்றால் யாரோ அதிகாரி வந்து கொண்டிருப்பதாக சொன்னது நினைவுக்கு வந்தது.

மனம் அல்லாடியது. ஆக்சிஜன் இணைப்பு எடுத்துட்டதா சொன்னது ஓரளவுக்கு நல்லானதால் தானே, பின் எதற்கு அந்த மாதிரியான வார்த்தைகளை அவர் பேச வேண்டும்?

தன்னையறியாமல் கண்களில் வழிந்த கண்ணீரை சேலை முந்தானையால் துடைத்துக் கொண்டு எழுந்தவள், ரவியின் போட்டோவை எடுத்து அதே முந்தானையால் துடைத்தாள்.

காலிங் பெல் அடிப்பதைக் கேட்டு போட்டோவை மாட்டி விட்டுச் சென்று கதவைத் திறந்தாள் சுசீலா. மஞ்சுளா மாடியேறிச் செல்வது தெரிந்தது. மீண்டும் திரும்பி உள்ளே வந்தவள் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஆறு.

இருட்டு லேசாக வரத் துவங்கியது. சமையலறைக்குச் சென்றவள் வழக்கமாய் மஞ்சுளாவுக்கு ஆறு மணிக்குக் கொடுக்கும் கபசுரக் குடிநீரை ஒரு தம்ளரிலும் பிளாஸ்கில் வெந்நீரையும் எடுத்துச் சென்றாள்.

மாடிப் படியில் இரண்டையும் வைத்து விட்டு, “மஞ்சு..கபசுரக் குடிநீர், வெந்நீர் வச்சிருக்கேன்..வந்து எடுத்துக்க..அப்பா பேசினாரு.. இப்ப பரவாயில்ல.. ஆக்சிஜன் இணைப்பு எடுத்துட்டாங்க.. நல்லா மூச்சு விட முடியுதாம்..நம்ம ரெண்டு பேரையும் ஜாக்கிரதையா இருக்கச் சொன்னாரு..”

“வேறு எதாச்சும் சொன்னாராம்மா, எனக்குப் பார்க்கனும் போல இருக்கும்மா” அறைக்குள்ளிருந்தே வந்தது குரல்.

“மஞ்ச,  உனக்குத் தெரியாதது இல்ல..நீ பாட்டி வீட்டுக்குப் போயிட்டு சென்னையிலிருந்து வந்திருக்க. நான் அப்பா கூட இருந்ததால தனிமைப் படுத்திக்கனும்னு அப்பாவே சொல்லிட்டாரு.. அவரு பாசிட்டிவாயி இருமல் சளி வந்து‌ ஆஸ்பத்திரிக்குப் போயி ஒரு வாரம் ஆயிடுச்சி..

இன்னும் ரெண்டொரு நாள்ள வந்துடப் போறார்..பார்த்துக்கலாம். எனக்கு மட்டும் அப்பாவப் பார்க்கனும்னு இருக்காதா..சரிம்மா..எட்டு மணிக்கு வரேன்..டிபனும் ஆவி பிடிக்க மூலிகைத் தண்ணியும் கொண்டு வரேன்”

சுசீலா, மஞ்சுளாவிடம் ‘சரிமா’ எனும் பதிலை வாங்கிய பிறகே திரும்பி வந்து தெரு விளக்கைப் போட்டாள். தெரு வெறிச்சோடிக் கிடந்தது. ஊரடங்குக்கு முன்பெல்லாம் களை கட்டிக் கிடக்கும் தெரு

இளைஞர்கள் ஒரு பக்கம் அரட்டை என்றால் பெருசுகள் மறுபக்கம் பிள்ளையார் கோவில் முற்றத்தில் அமர்ந்தபடி பேச்சும் கிண்டலும் கேலியுமாய் சத்தக் காடாயிருக்கும்.

அதே தெருவில் கடந்த ஆண்டு கொரோனாவுக்கு ஒரு ஆண் ஒரு‌ பெண் என இரண்டு வயதானவர்கள் பலியானார்கள். அச்சமயத்தில் ரவியின் ஏற்பாட்டில் தான் தடுப்பரண் கட்டப்பட்டு தெரு முழுக்க பிளீச்சிங் பவுடரும் கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டன.

இந்த ஆண்டு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் என நாலு பேர் கொரோனாவுக்குப் பலி. ஆனால் நாலு பேருமே இளசுகள். இவ்வளவு நடந்த பிறகும் தடுப்பரண் போடாதது ஏனென்பது புரியாத புதிராக இருந்தது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு தான் பொதுவாகவே ஏராளமான மரணங்கள். மக்கள் தாங்களாகவே அச்ச வலைக்குள் வந்ததன் விளைவோ என்னவோ சத்தக்காடும் கலகலப்பும் இல்லாமல் தெரு வெறிச்சோடிக் கிடந்தது.

தெருவிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய சுசீலாவை மீண்டும் மீண்டும் ரவியின் வார்த்தைகளே அம்பெனத் தைத்தன. அத்தகைய அம்புகளைத் தான் மட்டுமே வாங்கிக் கொண்டு மகளுக்குத் தெரியாமல் மனதளவில் அழுது கொண்டிருந்தாள்.

ரவியெனும் யானை இருந்தால் குடும்பத் தலைவனாய் வழி நடத்திச் செல்வான். அதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும் ஆயிரம் பொன்னுக்குச் சமம். இறந்து விட்டால், ஐயோ… நினைத்தாலே நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது

அரசு ஊழியர் இறந்தால் கருணை அடிப்படையில் வாரிசுக்கு மஞ்சுவுக்கு அரசுப் பணி கிடைக்கும். அரசுப் பணி கிடைத்தால் தானாக மாப்பிள்ளை வருவான்.

மனக் குரங்கை வைதது மூளை. ‘அண்ணன் எப்ப ஒழிவான். திண்ணை எப்ப காலியாகும்னு சும்மாவா சொன்னாங்க பழமொழி. சே.. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் வராத உயிர் விலை மதிப்பில்லாதது..அந்த உயிர் ..ரவியின் உயிர் உனது சுவாசமல்லவா.. இப்படிப்பட்ட சிந்தனை வரலாமா?’

குறுக்குக் கேள்வி கேட்டது அதே மூளை. ‘பிறகெதற்கு அந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டும். மஞ்சுவுக்கும் அந்த வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டிருந்தால் அவள் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?’

மனஉளைச்சலில் உழன்ற சுசீலா கைபேசியில் ரவியின் எண்ணுக்கு முயற்சித்தாள். இணைப்பு கிடைக்கவில்லை. மணி ஏழாகிவிட்டிருந்தது. இட்லி ஊற்றி வைக்கும் போதும் சாம்பாரைச் சுட வைக்கும் போதும் கைகள் இயல்பாய் வேலைகளைச் செய்து கொண்டிருந்தாலும், மனம் ரவியைச் சுற்றிச் சுற்றி வந்தது.

டவுன் பஞ்சாயத்து ஆபீஸ் மேஸ்திரி எண்ணிற்குத் தொடர்பு கொண்டாள்.

“வணக்கம்மா.. ஆஸ்பத்திரியிலிருந்து டூட்டி டாக்டர் போன் செஞ்சார். சாருக்கு மறுபடியும் ஆக்சிஜன் வச்சிருக்காங்களாம். ஆனா பயப்பட வேண்டியதில்லன்னாரு. இப்ப தான் பேசினார். நானே உங்களுக்கு போன் பண்ணலாம்னு இருந்தேன். நீங்களே பண்ணிட்டிங்க. டாக்டர் மறுபடியும் லைன்ல வறார்..நான் பிறகு பேசுறேன்.”

இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் ரவியின் போட்டோவையே நோக்கின கண்கள். கண்களில் கண்ணீர் வழிந்தது. போட்டோவின் பக்கத்தில் இருந்த கடிகாரம் எட்டு மணியைக் காட்டியது.

எழுந்த சுசீலா முகத்தைத் துடைத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்று ஸ்டவ்வை நிறுத்திவிட்டு மூலிகைத் தண்ணீரையும் டிபன் கேரியரில் போட்டு வைத்திருந்த டிபனையும் எடுத்துக் கொண்டு மாடிப் படியில் வைத்து விட்டு மகளை அழைத்தாள். வரவில்லை

சந்தேகத்தைக் கிளப்பியது. மீண்டும் அழைத்தாள். மகள் போன் பேசிக் கொண்டிருந்தது லேசாகக் கேட்டது. அப்படியே மெதுவாக ஒவ்வொரு படியாய் அச்சப்பட்டுக் கொண்டே ஏறினாள்.

இப்போது அறையிலிருந்து மஞ்சுளா இறங்கி வந்தாள். கூடவே விக்கலும் அழுகையுமாய்..

“நம்மள அப்பா அனாதையா விட்டுட்டுப் போயிட்டாரும்மா” கதறியபடி வந்தவள், சுசீலாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள். சமூக இடைவெளி தகர்ந்தது.

சுசீலாவுக்குத் தொண்டையை அடைத்தது. வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. மயங்கி விழுந்தாள். அப்படியே தாங்கிக் கொண்ட மஞ்சுளா, அம்மாவை சுவரில் சாந்தி உட்கார வைத்து விட்டு மேலே சென்று தண்ணீர் எடுத்து வந்து அம்மாவின் முகத்தில் தெளித்தாள். சுசீலாவின் முகத்தில் மாலைமாலையாய் கண்ணீர்.

தெருவில் டவுன் பஞ்சாயத்து டெம்போ வந்து நின்றது. மேஸ்திரியும் ஈ.ஓ.வும் மாஸ்குடன் வந்தனர்.

அக்கம் பக்கத்திலிருந்து கூட்டம் சேரவில்லை. இரண்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் மட்டும் இரண்டு பேர் வந்தனர். எல்லோர் முகத்திலும் மாஸ்க்.

சுசீலாவைப் பிடித்தபடி மஞ்சுளா நடந்து வந்தாள். மயக்க நிலையிலேயே இருந்தாள் சுசீலா.

“சாரிம்மா.. எவ்வளவு போராடியும் அப்பாவைக் காப்பாத்த முடியல. நெருக்கமான உறவினர்கள் ரெண்டு பேர் மட்டும் போய் பார்க்கலாம். அவர்களே மின்சார மயானத்துக்கு எடுத்துட்டுப் போயி எரிச்சுடறாங்களாம். வண்டியிலேயே வெயிட் பண்றோம். மாஸ்க் போட்டுக்கிட்டு வாங்க. வண்டியிலேயே போய் வண்டியிலேயே வந்துடலாம்”

ஈ.ஓ. பேசி முடிக்கவும் சுசீலா மயக்கம் தெளியவும், “சாரே.. எஙகள அனாதையா விட்டுட்டுப் போயிட்டாரே.. நாங்க என்ன செய்வோம்..யானை இருந்தாலும் ஆயிரம் பொன்.. இறந்தாலும் ஆயிரம் பொன்னுன்னாரே..நான் ஒரு பாவி..அப்பவே சுதாரிக்காம போயிட்டேனே..”

அவளையே ஒரு நிமிடம் பார்த்த மஞ்சுளா, சுசீலாவை உட்கார வைத்து விட்டு உள்ளே சென்று இரண்டு N95 மாஸ்குடன் வந்தாள். தான் ஒன்றை மாட்டிக் கொண்டு அம்மாவுக்கு இன்னொன்றை மாட்டிவிட்டு அவளைக் கைத்தாங்கலாக கூட்டிச் சென்று வண்டியில் உட்கார வைத்துவிட்டு இறங்கி வந்து வீட்டைப் பூட்டி தானும் வண்டியில் ஏறினாள்.

டெம்போ பறந்தது. இருவர் கண்களிலும் கண்ணீர் தங்கு தடையின்றி வழிந்து கொண்டிருந்தது. டெம்போவையே பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் கண்களிலும் கூட

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எல்லாம் கனகு மயம் (சிறுகதை) – ✍ சுஸ்ரீ

    மன்னி சிரிக்கிறாள் (சிறுகதை) – ✍ சாந்தி பாலசுப்ரமணியன்