in ,

மன்னி சிரிக்கிறாள் (சிறுகதை) – ✍ சாந்தி பாலசுப்ரமணியன்

மன்னி சிரிக்கிறாள் (சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 67)

ன்ன அப்படி பார்க்கிறீர்கள்? உண்மையில் மன்னிக்கு எப்பவும் சிரித்த முகம் தான். ஆனாலும் இந்த சிரிப்பு! நிற்காமல் இரண்டு நிமிடமாய் கேட்கும் இந்த சிரிப்பு கொஞ்சம் பயமாகக் கூட இருக்கிறது.

எங்கள் மன்னி பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்லணும். ஆமாம், மன்னி எங்கள் எல்லோருக்கும், என் அம்மா, அப்பாவுக்கும் கூட  மன்னி தான். இருபது வயதில் கல்யாணமாகி எங்கள் வீட்டுக்கு வந்த அன்றிலிருந்தா அல்லது எப்போதிலிருந்து அவள் எல்லாருக்கும் மன்னி ஆனாள் என்று நினைவில்லை.

எங்கள் வீட்டாருக்கு மட்டுமில்லை எங்கள் எல்லாருடைய சிநேகிதர்களுக்கும் அவள் மன்னி தான்.

மன்னி எதையுமே பெரிதாகத் தான் செய்வாள். பொரி உருண்டை, லட்டு பிடிப்பதிலிருந்து, கொழுக்கட்டை சொப்பு வரை, ஏன் கோலம் கூட பெரிதாகத் தான் போடுவாள். மன்னியின் மனசு கூட ரொம்ப பெரிசு தான்.

கல்யாணமாகி வந்த மறுவருஷம் ஆபரேஷன் என்று அம்மாவை ஆஸ்பத்திரியில் திடீரென்று சேர்க்க வேண்டி வந்த போது, டக்கென்று கை வளையல் நாலையும் கழற்றித் தந்து விட்டு, தன் டிரேட் மார்க் புன்னகையோட நிற்க முடிந்ததென்றால் பெரிய மனசு தானே

சின்ன மன்னி இவளுக்கு நேர் எதிர். அவளிடம்  நாங்கள் நெருங்க  நினைக்காததற்கு முக்கிய காரணம் ஒன்றும் சொல்ல முடியாது. அதற்காக, பொல்லாதவள் என்றும் இல்லை. எங்கள் எல்லோருக்கும் பெரிய மன்னியிடம் தான் நெருக்கம் ஜாஸ்தி.

ஒரு சமயம் பெரிய மன்னியின் முகத்தில் எப்போதும் ஒளிரும் புன்னகையும் தீர்மானமும் அதற்கு காரணமாக இருக்கலாம்.  அவளிடம் எங்களுக்கு பாசத்தோடு பயமும் உண்டு. பயம் என்றால் அவள் வாய்க்குப் பயம். அது தான் அவள் பலமா, பலவீனமா என்று சொல்வது கஷ்டம்.

இந்த வீட்டில் அவள் வாய்க்குப் பயந்து தான் எல்லோரும் ஒழுங்காக நடந்து கொள்கிறார்கள் என்பது நிச்சயம், என்னையும் என் ஆத்துக்காரரையும் சேர்த்துத் தான் சொல்கிறேன். ஆனால் மன்னி யாருக்கும் பயந்து பார்த்ததேயில்லை.

இத்தனைக்கும் அவள் பேச்சில் கொடுமையான வார்த்தைகளோ வெறுப்போ இருக்காது. அவள் குரலிலும் பேச்சிலும் உள்ள சக்திக்குக் காரணம்  நியாயத்தின் பலமா, ஆத்மார்த்தத்தின் சக்தியா, ஏதோ ஒன்று.

அவள் சகஜமாக அரட்டையடிக்கும் போது, இவளா வேறொரு சந்தர்ப்பத்தில் நாக்கை சாட்டையாக்கி மனிதர்களை சுழற்றி சுழற்றி அடித்தாள் என்று ஆச்சரியமாக இருக்கும்.  

அவளுக்கு ஒரு விஷயம் தப்பு என்று தோன்றி பிடிக்கவில்லை என்று ஆகி விட்டால், எதிராளியின் தகுதி, தயவு, கோபம் என்று எதையுமே யோசிக்க மாட்டாள். அதில் ஆச்சரியம் என்ன என்றால் அவள் பேச்சில் அடி வாங்கியவர்கள் முன்பை விட தீவிரமாக “மன்னி பக்தை” ஆகி விடுவார்கள்.

அம்மா சொல்வாள், “ராஜிக்கு வார்த்தையில் தான் ராக்‌ஷசத்தனம் தெரியும், ஆனால் அவள் நல்ல மனசு யாருக்கும் வராது.”

பெரிய மன்னியின் இன்னொரு குணம் அவளின் காரிய சாதனைத் திறனும் அதன் தீவிரமும். அவள் தீர்மானம் செய்து விட்டால் அதை காரியத்தில் காட்டும் வரை அவள் வாயிலிருந்து ஒரு வார்த்தை வராது.

தெரிய வரும்போது நமக்குத் தான் பிரமிப்பு அடங்க ரொம்ப நேரமாகும். இத்தனை அரட்டை அடிப்பவள் இந்த விஷயத்தில் மட்டும் எப்படி ஊமை அழுத்தமாய் இருந்திருக்கிறாள் என்று எரிச்சலாக வரும்.

ஒரு சமயம் பெரிய மன்னி மேலே படிப்பதை பற்றி பேச, பெரிய அக்கா பட்டென்று சொல்லி விட்டாள்

“போதுமே மன்னி, ஆகிற காரியமாகப் பார். இதுவரை நீ சாதித்ததே போதும். வீடு, குழந்தைகள், உன் அம்மா அப்பா, எங்க அம்மா அப்பா என்று இருக்கற பொறுப்பே ஏகமா சொமக்கற. இதில படிப்பு பற்றி நினைக்கக் கூட நேரமிருக்காது” ஒரு சின்னப் புன்னகையோடு பேச்சை நிறுத்தி விட்டுப் போய் விட்டாள்

இரண்டு வருஷம் கழிச்சு, எம்.ஏ. செகண்ட் கிளாசில் பாஸ் பண்ணினதாக மன்னி ஸ்வீட் கொடுத்த போது அசந்து போனோம். எப்போ, எப்படிப் படித்தாள் என்று ரகசியமாக எப்படி வைத்திருந்தாள் என்று புரியவே இல்லை

எங்கள் பெரிய அண்ணா, மன்னி கல்யாணம் நடந்த போது எனக்குப் பத்து வயசு. அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பற்றி புகழாதவர்களே இல்லை. வந்த சில நாளிலேயே எல்லோரையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டாள்.

அப்பா கூட மன்னிக்குப் பயந்து 40 வருஷ புகையிலைப் பழக்கத்தை விட்டு விட்டார். வீடும் தோட்டமும் பளபளத்தது. வீடு பூரா இறைந்து கிடக்கும் துணிகளையெல்லாம் எந்த ஜீபூம்பா அழகாக மடித்து பீரோவுக்குள் வைத்ததோ!

வேலைக்காரர்களெல்லாம் ஒழுங்காக  வேலை செய்ய ஆரம்பித்தார்கள். சின்ன அண்ணா மார்க் 40% ஏறித்து. சந்தியாவந்தனம்  ஒழுங்காகப் பண்ண ஆரம்பித்தான். அம்மா தினம் 30 நிமிஷம் வாக்கிங், சர்க்கரை இல்லாத காப்பி என்று வாழ்க்கையை வெறுக்க வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டாள்.

ஆனால், சுகரும், வெயிட்டும் குறைந்து முகத்தில் பளபளப்பு வந்து அழகானாள். காப்பி டம்ளரையும் தட்டையும் தேய்க்கப் போடவே அலுத்துக்கற நான் கோலம் போட, தைக்க, சமையல் பண்ண என்று சகலமும் எப்படி ஆசையாகக்  கற்றுக் கொண்டேன் என்று எனக்கே ஆச்சரியம் தான்.

அண்ணா எப்பவும் போல தானுண்டு தன் கம்பெனியுண்டு, பிஸினெஸ் உண்டுன்னு இருந்தான். எப்பவும் போல நாலு வார்த்தைக்கு ஒரு தலையாட்டல், எட்டு வார்த்தைக்கு ஒரு உம், அல்லது ஒரு வார்த்தை தான்.

மன்னியைப் பாராட்டி, ரசித்து ஒரு வார்த்தை எங்கள் எதிரில் பேசி நாங்கள் பார்க்கவில்லை. மன்னிக்கு அது ஒரு பொருட்டாக இருக்கவில்லையோ தெரியாது. ஆனால் மன்னியின் பேச்சில் அண்ணாவுக்கு இது பிடிக்கும் பிடிக்காது என்று ஏதாவது வந்து கொண்டேயிருக்கும்.

அம்மா கூட  ஒரு நாள் சொன்னாள், “நான் அவனைப் பெத்து 25 வருஷம் வளர்த்துட்டு இன்னைக்கு நீ சொல்லித் தான் இதெல்லாம் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு”

அம்மா பேச்சில் சலிப்போ கோபமோ இல்லாமல் ஒரு பெருமிதம் இருந்ததாகத் தான் அவள் முகத்தில் இருந்த புன்னகை சொன்னது. அண்ணா, மன்னிக்கு இரண்டு குழந்தைகளும் பிறந்து, எங்கள் எல்லோருக்கும் கல்யாணமாகி குடும்பமும் பெருகியாச்சு.

மன்னி பிரசவத்துக்குக் கூட அவள் அம்மா இங்கே வந்து செய்து விட்டுப் போனாள். மன்னி பிறந்தகத்துக்குப் போகவில்லை. மன்னியின் அழகு மட்டும் இத்தனைக்கும் மெருகு ஏறிக் கொண்டு தான் வருகிறது.

எங்கள் எல்லாருக்கும் எல்லாத்துக்கும் மன்னி தான் கன்சல்டண்டு. யார் எது பற்றி கேட்டாலும் மன்னி அழகாக ஒரு யோசனை சொல்லி விடுவாள் என்று கண் மூடித்தனமாக ஒரு நம்பிக்கை.

கல்யாணமாகி அவள் இங்கே வந்த இந்த 25 வருஷத்தில் அந்த நம்பிக்கை உடைய சந்தர்ப்பம் வந்த்தேயில்லை. மன்னி எங்கள் எல்லோரையும் தன் பிடியில் கட்டிப் போட்டுத் தான் வைத்திருக்கிறாள்.

அண்ணா மன்னிக்கு ஒரு பெண், ஒரு பையன் என்று சொன்னேனா. பெண் MBBS கடைசி வருஷம். பையன் இஞ்சினீயரிங் கண்டிப்பாகப் படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.

அப்பா மாதிரி நாள் முழுக்க நம்பரோட தன்னாலப் போராட முடியாதுன்னும் சொல்லிட்டான். ப்யூர் சைன்ஸில் கிராஜுவேஷன் முடித்து விட்டு மேலே படிக்கிறான். பிஹெச்டி பண்ணப் போவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

மன்னி குழந்தைகளுக்கு தங்கள் விஷயத்தில் முடிவெடுக்கப் பூரண சுதந்திரம் கொடுத்திருந்தாள். பெண்ணுக்குப் பாட்டு நன்றாக வருகிறது என்று தெரிந்த போது மட்டும் கொஞ்சம் தீர்மானமாக அவளை பாட்டு கற்றுக் கொள்ள வற்புறுத்தினாள். காசை கணக்குப் பார்க்காமல் செலவழித்தாள்.

பையன் செஸ்ஸில் சாம்பியன், அதற்கான போட்டிகளுக்காக ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பான். மன்னி யார் சுதந்திரத்திலும் தலையிட மாட்டாள். நாங்களாகத் தான் மன்னிக்கு சரி தானா என்று கேட்டுக் கொள்வோம். தன் சுதந்திரத்திலும் யாரையும் தலையிட விட மாட்டாள்.

ஆனால் அவள் செய்வது தப்பென்று சொல்ல இதுவரை சந்தர்ப்பம் வந்ததில்லையே!

மன்னிக்கு ஏக ஃப்ரெண்ட்ஸ் உண்டு. ஸ்கூல்ல கூடப் படிச்சவா, அக்கம் பக்கத்தில் குடியிருந்தவா, டைலரிங் க்ளாஸ் ஃப்ரெண்ட்ஸ், லைப்ரரி அறிமுகம் என்று தினமும் யாராவது வந்து போறதும், போன் பண்றதும் நடக்கும்.

சில பேர் எதையாவது கத்துக்க அடிக்கடி வீட்டுக்கு வந்து போறதும் உண்டு. வீடு எப்பவும் கலகலன்னு தான் இருக்கும். ஒரு பக்கம் மத்தவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டுபிடிக்கற வேலை நடக்கும். ஒரு பக்கம் அவர்கள் கவலைக்கு கவுன்சிலிங் நடக்கும்.

ஒரு நாள் ஸ்லோகம் க்ளாஸ் என்றால் ஒரு நாள் கேக், புலாவ், மன்சூரியன் என்று சமையல் க்ளாஸ் நடக்கும். நடுவில் வீட்டு வேலை ஒன்றும் நின்று போகாது.

அண்ணா முதலில் ஒரு ஆடிட்டரின் ஆபிஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆடிட்டரின் ஆசிர்வாதத்துடன் தன் சொந்த ஆபிஸை ஆரம்பித்தான். அதற்கு எல்லா விதத்திலும் துணையா இருந்தது மன்னியின் தைரியம் தான். 

அவளும் அது சம்பந்தமாய் படிச்சிருந்தா அங்கேயே  வேலைக்குப் போய் இருப்பாள்.  ஆனாலும் அண்ணாவின் அத்தனை க்ளைய்ண்ட்ஸ் பட்டியலும் மன்னியிடம் தான். அண்ணா ஆபிஸில் ஆர்டிகிள்ஷிப் சேருவது கூட மன்னியின் மேற்பார்வையில் தான் நடக்கும்.

மன்னியின் ஃப்ரெண்டு ராஜி , சங்கரி மாமியின் பிள்ளை ரமேஷ் மாதிரி பல பேருக்கு அண்ணா ஆபிஸில் அல்லது வேறு க்ளைய்ண்ட் ஆபிஸில் வேலை வாங்கித் தந்தது மன்னி தான்.

அண்ணா காலம்பற சாப்பிட்டு விட்டு மத்யானம் அவன் ஆபிஸிலிருந்து வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு காபி, டிபன் சாப்பிட்டு விட்டுப் போனான் என்றால், ராத்திரி வர பத்து மணியாகும்.  

அண்ணா வரும் நேரத்தில் அவனுக்கு டிபன் தயாராக இருக்கும். வீடு சத்தத்தை அடக்கிக் கொண்டு அமைதியாகும். எங்கள் அண்ணா, மன்னி இதுவரை எங்கள் எதிரில் கத்திப் பேசியோ, வாதாடிக் கொண்டோ, கோபப் பட்டுக் கொண்டோ எதுவும் நடந்ததில்லை. 

இது கொஞ்சம் செயற்கையாகக் கூட சில சமயம் நெருடியதுண்டு. எங்காத்துக்காரரிடம் ஒரு தரம் சொன்னதும் சிரித்தார்

“உன் மன்னி மாதிரி ஒரு புத்திசாலிப் பெண் பொண்டாட்டியாக வந்தால் எல்லா ஆண்பிள்ளைகளும் இப்படித் தான் இருப்பா. எனக்கென்னென்னு ஆச்சுன்னு எல்லாத்தையும் ஒன் மன்னிட்ட ஒப்படைச்சுட்டு ஒங்கண்ணா நிம்மதியா இருக்கார், கொடுத்து வச்ச மனுஷன். ஒன்னை மாதிரி ஒரு மக்கை கல்யாணம் பண்ணிண்டு கஷ்டப்படறது நான் தான்”னு இவர் கலாட்டா பண்ணினப்போ, கோபத்துக்குப் பதிலா ஏனோ எனக்குக் கவலை வந்தது

இப்போ நாங்க எல்லோரும் வந்திருக்கோம், அண்ணா மன்னிக்கு கல்யாணமாகி 25 ஆவது ஆனிவர்ஸரி. கொண்டாட பெரிய பிளானோட வந்திருக்கோம். ரகசியமா ஏற்பாடெல்லாம் நடந்துண்டு இருக்கு.

அடையாறில் புதுசா வீடு கட்டிண்டிருக்கான் அண்ணா.  அது கிரகப்பரவேசம் வேற அடுத்த வாரம் இருக்கு. அக்காக்கள் குடும்பம், சின்ன அண்ணா, மன்னி என்று எல்லாரும் இருக்கோம். 

சம்மர் வெகேஷன், குலதெய்வம் கோயிலுக்குப் போகிற வழியில் வந்தோம். அப்பாவுக்கு போன வாரம் ஜுரமாமே, மனசே கேக்கலை, பார்த்துட்டுப் போக வந்தேன் என்று ஆளுக்கு ஒரு காரணம்.

மன்னியும் சலிக்காமல் சாப்பாடு, ஷாப்பிங் என்று எல்லாருக்கும் ஈடு கொடுக்கிறாள்.  நாளைக்கு பெரிசாகக் கொண்டாட ரகசியமாய் பல பிளான். எல்லாம் வீட்டிலேயே தான்.

அம்மா மன்னிக்குத் தன் அம்மாவிடமிருந்து தனக்குக் கிடைத்த  வைரம் பதித்த லக்ஷ்மி டாலரைக் கொடுக்கப் போவதாக சொன்ன போது சட்டென்று சின்ன அக்கா முகத்தில் ஒரு நிழல் அடித்தா மாதிரி இருந்தாலும், பேச்சில் ஒன்றும் வரவில்லை. அவளே மன்னிக்கு கிஃப்ட் என்று பெரிய பார்சலை ரகசியமாய் வைத்திருக்கிறாள். 

அண்ணா மன்னி கல்யாண நாளைக்கு அண்ணாவை விட மன்னி பற்றித் தான் பேச்சாய் இருந்தது. ஒரு ஸ்டேஜில் மன்னியிடம் எங்கள் பிளான் பற்றிப் பேசித் தயார் பண்ண வேண்டித் தான் ஆகணும்னு  ஆச்சு

பெரிய மன்னியிடம் பேச சின்ன மன்னி தான் சரிப்படுவாள், அழகாகப் பேசி சம்மதிக்க வைத்து விடுவாள். சின்ன மன்னி பேசினப்போ பெரிய மன்னி பொறுமையாகக் கேட்டாள்.

அதற்குப் பதில் ஆகத் தான் பெரிய மன்னியின் இந்த சிரிப்பு. ஒரு பக்கம் பேய்த்தனமாய், ஒரு பக்கம் குழந்தையின் கதறல் மாதிரியுமாய் இது என்ன சிரிப்பு. ஏதோ சரியில்லைன்னு எல்லாருக்கும் தோணினாலும் பேசத் தைரியமில்லாமல் அமைதியாய் நிக்கறோம்.

எங்கள் எல்லோருக்கும் எல்லா பிரச்சனைக்கும் மன்னியைக் கேட்ட நாங்க அவளுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா, உதவி வேண்டியிருக்கான்னு கேட்டதேயில்லைன்னு உறைக்கிறது.

பேசாமல் நிற்கிறோம், அம்மா மொள்ள கிட்டக்கப் போய் தோளைத் தொடறாள். அம்மா கண்ணில் கண்ணீர், உடம்பில் ஒரு நடுக்கம்.  மன்னி மெல்ல நடந்து போய் சோபாவில் கண்ணை மூடிண்டு உட்கார்ந்து கொள்கிறாள்.

அவளிடம் பேச யாருக்கும் தைரியம் இல்லை. அண்ணா மரம் மாதிரி நிற்கிறான். அப்பா முகத்தில்  திடீரென்று பத்து  வயது கூடி விட்டாற் போலத் தொய்வு தெரிகிறது. சட்டென்று துவண்டு போய் சோஃபாவில் உட்கார்ந்து கண்ணை மூடிக் கொள்கிறார்.

சின்ன அண்ணாவின் கார் சத்தம் கேட்கிறது. மன்னி கண்ணைத் திறக்கிறாள். அவளுடைய ட்ரேட் மார்க் புன்னகை முகத்தில் திரும்ப வந்து விட்டது. ஆனாலும் என்னவோ எங்கேயோ சரியில்லையென்று மனது அடித்துக் கொள்கிறது.

“ராகவா, உள்ளே போய் காபி குடிச்சிட்டு வா, உங்க எல்லார்ட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அம்மா, நீங்களும் அப்பாவோட உட்காருங்கோ” என்கிறாள்

அண்ணாவைப் பார்த்து, “நீங்களும் உட்காருங்கோ, எத்தனை நாழி நிப்பேள், ஒரு நாள் பேசித் தானே ஆகணும்” என்கிறாள்

போய் விளக்கேற்றி விட்டு வருகிறாள். நாங்கள் நேரம் பற்றி யோசனை இல்லாமல் அமைதியாக இருக்கோம். மன்னி மெல்ல ஆரம்பிக்கிறாள்.

“ஆச்சு, இன்னும் நாலு நாளில் அடையாறு புது வீட்டில் கிரகப்பிரவேசம், ஏற்பாடெல்லாம் நடக்கிறது. இப்போ நான் எங்களைப் பற்றி, அதாவது, என்னையும் உங்க அண்ணாவையும் பற்றி பேசணும். அவரை என்னைக்குப் பேச விட்டிருக்கேன், இன்னைக்கும் நானே பேசறேன்” என்ற மன்னியின் குரல் தழைகிறது. முகம் தெளிவாகத் தான் இருக்கு.

“நாளன்னிக்கு உங்க அண்ணாவிற்கும் என் பிரெண்ட் ராஜிக்கும் கோயிலில் கல்யாணம். வரதும் வராததும் அவாவா இஷ்டம், நான் கண்டிப்பாகப் போறேன்.  கையோட அடையாறு புது வீட்டில் கிரகப்பிரவேசம். எல்லாரும் போறோம்.

அப்பறம் நான் அங்க வர மாட்டேன். நான் நம்ம மாம்பலம் வீட்டுக்கு தனியாகக் குடி போறேன். லேடிஸ் ஹாஸ்டல்ல நாம நடத்தற காண்டீன் பிஸினெஸ் நான் நடத்திக்கறேன், என் செலவுக்கு பணம் வரும்”

திடீர்னு என்ன ஆச்சு, இத்தனை நாள் ஏன் சொல்லலைனு கேட்பேள். இனிமே பேசிப் பிரயோஜனமில்லை. நான் ரொம்பக் கெட்டிக்காரி, நல்லவள்னு நினைச்சுத் தான் நடந்துண்டிருந்தேன். அது தான் அவருக்குப் பிர்ச்சனையாக இருந்திருக்கு.

ஒரு ஆம்பளைக்கு கொஞ்சம் அசடா, அதிகாரத்துக்கு அடங்கற பொண்டாட்டி தான் சௌகரியம். அது நியாயமும் கூட. அதுக்காக நாங்க சந்தோஷமாக இருக்கவே இல்லைன்னு அர்த்தம் இல்லை. எல்லோருக்கும் ஒரு சந்தர்ப்பத்துல சேஞ்ச் தேவைப் படறது.

என் பிரெண்ட் ராஜி விடோ, இவருக்கும் அவளுக்கும் ஒத்துப் போனதில ஆச்சரியம் இல்லை. அவள் தன் கவலைக்கு மருந்து தேடி என்னைப் பார்க்க வந்துண்டிருந்தா. அவள் கவலைக்கு இவரே மருந்துன்னு ஆயிடுத்துன்னு எனக்குப் புரிய ஆரம்பிச்ச போது, ரொம்ப லேட்டாயிடுத்து.

இவருடைய எதிர்பார்ப்புக்கு ஏத்தவ. எனக்கும் குடும்பம் குடித்தனம் எல்லாம் அலுத்துப் போச்சு. பிஸினஸ் பண்ணப் போறேன், மேல படிக்கப் போறேன்.

என்னைக்கும் நான் தான் உங்க பெரிய மன்னி, டைவர்ஸ், கோர்ட், கேஸ் எல்லாம் கிடையாது. ஆனா மிஸஸ் ராஜு  இல்லை, அந்த பதவியை மட்டும் ரிஸைன் பண்றேன். அவ்வளவு தான்.

குழந்தைகள் அவர் பொறுப்பு, அவரும் ஒத்துண்டிருக்கார். அவாளும் வளர்ந்துட்டா, சமாளிச்சுப்பா. நான் இனிமே இந்த குடும்பத்தோட இருக்கறது சரியில்லை. ராஜி மனசு நோகாம பார்த்துக்கற பொறுப்பு உங்க எல்லாருக்கும் உண்டு”

சொல்லி விட்டு மன்னி சிரிக்கிறாள். இந்த தடவை சிரிப்பு பூ மாதிரி மென்மையாக விரிகிறது. மன்னி தளர்ந்து இருக்கிறாள். ஆனால் மன்னி என்னைக்கும் அழ மாட்டாள், அது மட்டும் நிச்சயம்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

யானை…(சிறுகதை) – ✍பெரணமல்லூர் சேகரன்

காவேரியின் கைபேசி (சிறுகதை) – ✍ வைகை,  சிங்கப்பூர்