in ,

விழி விளிம்பில் வித்யா ❤ (நாவல் – அத்தியாயம் 16) – முகில் தினகரன்

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11    பகுதி 12    பகுதி 13    பகுதி 14    பகுதி 15

அப்போது சட்டென்று எங்கிருந்தோ வந்த அந்த வீட்டின் தோட்டக்காரன் சட்டென்று பாய்ந்து, அந்தக் குழந்தையை நூலிழை வித்தியாசத்தில் தொட்டியில் விழாமல் காப்பாற்றினான்.

குழந்தையைத் தூக்கிக் கொண்டு திரும்பியவன், பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்த வித்யாவைப் பார்த்து, “ஏம்மா… நீ ரொம்ப நேரமா அங்கே நின்னுட்டிருந்ததையும், இந்தக் குழந்தை தொட்டியை நோக்கித் தவழ்ந்து போவதையும்… அதை நீ சிரிச்ச மூஞ்சியோட பார்த்திட்டிருந்ததையும்… நான் தள்ளி நின்னு கவனிச்சிட்டுத்தான் இருந்தேன். நீ சத்தம் போட்டு யாரையாவது கூப்பிடுவேனு எதிர்பார்த்தேன். ஆனா நீயென்னமோ புடிச்சு வெச்ச புள்ளாராட்டம் அப்படியே நின்னுட்டிருக்கே. சத்தம் போடணும்… யாரையாவது கூப்பிடணும்… குழந்தையைக் காப்பாத்தணும்!ன்னே தோணலையா உனக்கு?” என்றான் கத்தலாய்.

வித்யா இடவலமாய்த் தலையாட்டினாள்.

“அப்படின்னா… குழந்தை தொட்டில விழறதைப் பார்க்கத்தான் அங்க நின்னுட்டிருந்தியா?”

வித்யா மேலும் கீழுமாய்த் தலையாட்டினாள்.

“உனக்கென்ன பைத்தியமா? நீயென்ன ராட்சஸியா?”

வாய்விட்டுச் சிரித்தாள் வித்யா.

“த்தூ… நீயெல்லாம் ஒரு பொம்பளையா?” திட்டிக் கொண்டே நகர்ந்தான் அவன்.

மறுநாள் மதியம், வாசலில் நிழலாட… எழுந்து போய்ப் பார்த்தாள் வித்யா. ஒரு இளம் பெண்ணும், உடன் அந்த பக்கத்து வீட்டுத் தோட்டக்காரனும் நின்றிருக்க, நெற்றியைச் சுருக்கிக் கொண்டே அவர்களைப் பார்த்தாள் வித்யா.

”நீலவேணியம்மா இருக்காங்களா?” அந்தப் பெண்தான் கேட்டாள்.

“இருக்காங்க” என்று வித்யா பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளேயிருந்து வெளியில் வந்தாள் சுந்தரின் தாய்.

 “அம்மா… உங்ககிட்டக் கொஞ்சம் பேசணும்” என்றாள் அந்தப் பெண். உள்ளுக்குள் அதிர்ந்தாள் வித்யா.

‘ஆஹா… நேத்திக்கு நடந்தது பெரிய விஷயமாயிடிச்சு போலிருக்கே?… ம்ம்.. சமாளிப்போம்’

 “சொல்லு தெய்வானை” என்றாள் நீலவேணி.

தலையைத் தூக்கி வித்யாவைப் பார்த்துக் கொண்டே, “இல்லைம்மா… உங்ககிட்டத் தனியா பேசணும்” என்றாள் அவள்.

தோட்டக்காரன் அதை ஆமோதிப்பது போல் மேலும், கீழுமாய்த் தலையாட்டினான்.

நீலவேணி திரும்பி வித்யாவைப் பார்க்க, அவள் நாகரீகமாய் அங்கிருந்து நகர்ந்தாள். ஆனால், உள்ளே சென்றவள் தன் அறைக்குப் போகாமல், அங்கிருந்த ஜன்னல் அருகே தன்னை மறைத்துக் கொண்டு நின்று அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்பதை ஒட்டுக் கேட்க ஆரம்பித்தாள். வாசலுக்கு வெளியே சென்று அவர்களின் பக்கத்தில் நின்றாள் நீலவேணி.

“அம்மா… அந்தப் பொண்ணுதானே உங்க மருமகள்?” அப்பெண் கேட்க,

“ஆமாம்… வித்யா… நீ கூட சுந்தர் சாவுக்கு வந்திருந்தப்ப பார்த்தியே…?” என்றாள் நீலவேணி.

“அந்தப் பொண்ணுக்கு ஏதாவது பிரச்சினையா?”

“பிரச்சினையா?… அவளுக்கா?… இல்லையே… ஏன் திடீர்னு இப்படிக் கேட்கறே?” கண்களைச் சுருக்கிக் கொண்டு கேட்டாள் நீலவேணி.

அப்பெண் தோட்டக்காரன் பக்கம் திரும்பி, “டேய்… நேத்திக்கு நடந்ததை நீயே இவங்களுக்கு விரிவாய்ச் சொல்லு” என்றாள்.

அவன் சொல்லும் முன் சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, முந்தின நாள் நடந்ததை அப்படியே ஒப்பித்தான். சில விநாடிகள் அவன் முகத்தையே ஊன்றிப் பார்த்த நீலவேணி, “சரி நீ இப்ப என்ன சொல்ல வர்றே?… சொல்லு” என்றாள் ‘கடு… கடு’ முகத்துடன்.

“நான் என் மனசுக்குப்பட்டதை அப்படியே சொல்றேன்… தயவு செய்து தப்பா நினைக்காதீங்க. அந்தக் குழந்தை திறந்து கிடக்கற தொட்டியை நோக்கித் தவழ்ந்து சொல்வதை உங்க மருமகள் ரொம்ப நேரமா வேடிக்கை பார்த்திட்டே நின்னுட்டிருந்தாங்க. இன்னும் சொல்லப் போனா அவங்க  முகத்துல ஒரு சிரிப்பும்… குழந்தை உள்ளே விழறதைப் பார்க்கப் போகும் சந்தோஷமும்தான் தெரிஞ்சுது. யாரையாவது கூப்பிடணும்… குழந்தையைக் காப்பாத்தணும்’ங்கற எண்ணமே கொஞ்சமும் இல்லை. எதுக்கும் அவங்களை கொஞ்சம் கவனிச்சுக்கங்க…” என்றான்.

“ச்சீய்… நாயே… உனக்கு எத்தனை திமிர் இருந்தா என் மருமகளைப் பத்தி இப்படிச் சொல்வே? அவள் இப்ப என்ன மனநிலைல இருக்கானு உனக்குத் தெரியுமா?… கல்யாணமான சில நாளிலேயே புருஷனைப் பறி கொடுத்திட்டு… புகுந்த வீட்டிலேயே வாழுறதா இல்லை பொறந்த வீட்டுக்கே போயிடறதானு புரியாம… பாதிப் பைத்தியமாத் திரிஞ்சிட்டிருக்கா. அவ மேலே இப்படியொரு அபாண்டத்தைப் போடறீங்களே… நீங்கெல்லாம் மனுஷங்கதானா?” கத்தித் தீர்த்தாள் நீலவேணி.

அப்பெண் தர்மசங்கடமாய், “நானும்… அப்படித்தான் நெனச்சேன்” என்று சமாளிக்க

“இங்க பாரு… தெய்வானை… இந்த ஆளு இப்படிப் பேசறது கூட எனக்கு சங்கடமாயில்லை. நீ… அதுவும் ஒரு பொம்பளை… இன்னொரு பொம்பளையோட மனசைப் புரிஞ்சுக்காம வந்து பேசறியே… அதை நெனச்சாத்தான் தெய்வானை சங்கடமாயிருக்கு” என்றாள்.

தன்னை அந்த நீலவேணி திட்டி விட்டதில் கோபமான அந்த தோட்டக்காரன், நீலவேணியை எரிப்பது போல் பார்த்து விட்டு, சட்டென்று அங்கிருந்து நகர்ந்தான். தெய்வானையும் சிறிது நேரம் நீலவேணியிடம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பிச் சென்றாள்.

மூன்று மாதங்கள் உருண்டோடிய பின், ஒரு நல்ல பிரதோஷ நாளில் அது நடந்தது.

‘கணவர் வீட்டில் இருந்தால் தனக்குத் திரும்பத் திரும்ப அவர் ஞாபகமே வந்து கொண்டிருப்பதால் தான் சிறிது நாள் என் அம்மாவின் வீட்டில் இருந்து கொள்கிறேன்’ என்று தன் மாமியார் மாமனாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தாயுடன் வந்து தங்கியிருந்த வித்யா, அதிகாலை நேரத்தில், “வ்வேய்ய்ய்!…. விவேய்ய்ய்” என்று வாந்தியெடுத்தாள்.

உறங்கிக் கொண்டிருந்த பத்மாவதி மெல்லக் கண் விழித்து, பக்கத்தில் படுத்திருந்த வித்யா இல்லாததால், குழப்பமாகி அந்தச் சத்தத்தைக் கூர்ந்து கேட்டாள்.

“அய்யோ… என்னாச்சு வித்யாவுக்கு?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டு எழுந்து பாத்ரூம் பக்கம் சென்று பார்த்தாள்.

அங்கே, வாஷ்பேசினில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தாள் அவள். அவசரமாய் வந்து அவள் முதுகைத் தொட்டு, “என்னம்மா… என்னாச்சு?” கேட்டாள்.

“தெரியலைம்மா… சாப்பிட்டது எதுவோ ஒத்துக்கலை போலிருக்கு” என்றாள் வித்யா.

அவள் நெற்றியைத் தொட்டுப் பார்த்து விட்டு, “லேசா ஜுரம் கூட இருக்கு!… டாக்டர்கிட்டப் போயிடுவோம்“ என்றாள் பத்மாவதி.

 “ம்…” என்று சொல்லி விட்டு மீண்டும் சென்று படுத்துக் கொண்டாள் வித்யா.

அவளை மேலும் சிறிது நேரம் உறங்க விட்டுவிட்டு, சரியாக ஒன்பது மணி வாக்கில் எழுப்பி, “காபி… டீ எதுவும் வேணாம்… போய் பல்லு விளக்கிட்டு வா… கொஞ்சம் அரிசிக்கஞ்சி வெச்சிருக்கேன் குடிச்சிடு… அப்படியே போய் டாக்டர் கிட்டக் காட்டிட்டு வந்திடலாம்” என்றாள்.

*****

அவர்கள் அந்த லேடி டாக்டரின் கிளினிக்கிற்கு வந்த போது அங்கே நோயாளிகள் யாருமே இல்லாமல், வெயிட்டிங் ஹால் காலியாயிருக்க, “என்னது… யாரையுமே காணோம்?… ஒருவேளை டாக்டரம்மா இல்லையோ?” சந்தேகத்தோடு அங்கிருந்த செவிலிப் பெண்ணிடம் சென்று, “டாக்டரம்மா இன்னிக்கு வரலையோ?” கேட்டாள் பத்மாவதி.

“வந்திருக்கார்… உள்ளாரதான் இருக்கார்” என்றாள் அவள்.

“அப்படியா?… இங்கே நோயாளிகளையே காணோமா?… அதான் டாக்டர் இல்லையோனு சந்தகமாயிடுச்சு”

“அம்மா… நோயாளிகள் யாருமே இல்லைன்னா… இந்த ஊர்ல ஜனங்க எல்லோருமே ஆரோக்கியமா இருக்காங்க!ன்னு அர்த்தம்!… அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்” என்றாள்.

“அப்ப நாங்க உள்ளர போகலாமா?”

“தாராளமா”

அந்த லேடி டாக்டர் நடிகை வடிவுக்கரசியின் சாயலில் இருந்தார். உள்ளே நுழைந்த இருவரும் அமரச் சொல்லி விட்டு, பத்மாவதியைப் பார்த்து, “உங்கள் மகளா?” கேட்டார்.

 “ஆமாம் டாக்டர்”

“கன்ஸீவா இருப்பாங்க போலிருக்கு” முகத்தைப் பார்த்தே யூகித்து விட்ட அந்த டாக்டரைப் பார்த்து வியந்த பத்மாவதி, “அது… தெரியலை டாக்டர்!… அதை உறுதிப்படுத்திக்கத்தான் வந்தோம்”

வித்யாவின் கழுத்துப் பகுதியைப் பார்த்துக் கொண்டே, “பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சல்ல?” டாக்டர் கேட்க,

“பொசுக்”கென்று கண் கலங்கி விஷயத்தைச் சொன்னாள் பத்மாவதி.

“யெஸ்… நான் பேப்பர் நியூஸ்ல பார்த்தேன். ‘படுக்கையறையில் மின்சாரம் தாக்கி புது மாப்பிள்ளை சாவு’னு, அது இவங்க புருஷந்தானா?… த்சொ… த்சொ…” என்ற டாக்டர், “அது நடந்து… இப்ப மூணு மாசமிருக்குமா?” கேட்டார்.

 “ஆமாம் டாக்டர் சரியா மூணு மாசம் ஆகுது”

“ஓ.கே. செக் பண்ணிடலாம்” என்று சொல்லி வித்யாவை மட்டும் தனியறைக்கு அழைத்துச் சென்ற அந்த லேடி டாக்டர், சரியாக அரைமணி நேரத்திற்குப் பிறகு, அந்த தகவலைச் சொன்னார்.

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரிடயர்மென்ட் (சிறுகதை) – சுஶ்ரீ

    விண்ணைத் தொடலாம் வா (சிறுகதை) – ராஜேஸ்வரி