ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
எப்போதும் போல காலை வாக்கிங் முடித்து விட்டு வரும் போது, காய்கறி வாங்கி கொண்டு வீட்டின் உள்ளே வந்து ஆயாசமாக சோபாவில் உட்கார்ந்தபடியே, “விமலா காஃபி” என்று குரல் கொடுத்தார் முருகானந்தம்.
ஐந்து நிமிடங்கள் ஆன பிறகும் பதிலும் வரவில்லை, காஃபியும் வரவில்லை.
“என்னடா இது ஆச்சரியம்” குரல் கேட்ட உடனே காஃபியுடன் ஆஜராகும் விமலாவை தேடி சமையல் அறையில் எட்டி பார்த்தார்.
கேஸ்ஸ்டவ்வில் பால் கொதித்து கொண்டிருக்க, ஜன்னல் வழியாக கொய்யா மரத்தில் கூடு கட்டி காகங்கள் தன் குஞ்சுகளுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருப்பதை, தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா.
“ஹேய் விமலா, என்ன கூப்பிடுவது கேக்கலயா? காஃபி மா” என்ற கணவரின் குரல் கேட்டு
“வந்துட்டீங்களா, நான் கவனிக்கவே இல்லை. இதோ கலந்து கொண்டு வரேன், நீங்க போய் உட்காருங்க”
“என்னம்மா ஒரு மாதிரி சோர்வாக இருக்கே” என்று கேட்பதற்கு காத்துக் கொண்டிருந்ததை போல்
“நாம கஷ்டப்பட்டு வளர்த்து பசங்களை ஆளாக்கி பாசத்தை கொட்டி வளர்க்கிறோம். ஆனால் அது நமக்கு திரும்ப கிடைக்கலேன்னா ஏமாற்றம், வருத்தம் எல்லாம் வருதே. தாங்க முடியாமல் சில நேரங்களில் அழுகை வருகிறது. ஏங்க அதை எப்படி கடந்து தாண்டி வருவது?” என்று அவள் கேட்டவுடன்
“விமலா நீ போய் குளிச்சுட்டு வா, நாம வெளியே போய் டிபன் சாப்பிட்டு விட்டு வரலாம்”
“என்னங்க இது… நான் கேட்டதுக்கு பதில் சொல்லாமல் வெளியே போலாம் டிபன் சாப்பிடலாம் ன்னு சொல்றீங்க. எனக்கு மனசு சரி இல்லை, நான் எங்கேயும் வரலை” என்று அவள் சொன்னவுடன்
“வெளிநாட்டில் இருக்கும் உன் பொண்ணு, புள்ளை போன் பண்றதில்லை, அதானே உனக்கு வருத்தம். அவங்களை விட்டு தள்ளு.. மடமடவென கிளம்பு” என்ற கணவணை நிமிர்ந்து பார்த்தவள், அவரது பார்வையில் இருந்த அன்பு, காதல், கெஞ்சல் இவைகளை மறுக்க மனமின்றி கிளம்பினாள்.
முதலில் பிள்ளையார் கோவில் தரிசனம், பிறகு ஹோட்டலில் டிபனை முடித்துக்கொண்டு, காரை ஒரு முதியோர் இல்லம் வாசலில் வந்து நிறுத்தினார்.
“இறங்கு விமலா”
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை
“இங்கே எதுக்கு வந்துருக்கோம்” என்றவளை கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றார்.
இவரை பார்த்தவுடன் புல்வெளி, மரத்தடி, சிமென்ட் பெஞ்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வயதான பெண்களும் ஆண்களும் எழுந்து வரவே, “உட்காருங்க நானே வரேன்” என்றார்.
இவர் அருகில் போனவுடன், “முருகு, இன்னிக்கு நீ கட்டாயம் வருவேன்னு தெரிஞ்சு ஒக்கார்ந்துருக்கோம்”
அவர்கள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
“இவங்க தான் என் மனைவி விமலா” என்று அவளை அறிமுகப்படுத்த
அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில், “நீங்க இரண்டு பேரும் நல்லா இருக்கனும்” என்று வாழ்த்தியவுடன் விமலாவிற்கு கண்களில் கண்ணீர் தளும்பியது.
ஆம்… அன்று அவர்கள் திருமண நாள். மகன், மகள் இருவரும் வாழ்த்து சொல்ல மறந்ததை, இவர்கள் வாழ்த்தியதில் அவர்களை மறந்து போனாள் விமலா.
அவளின் தனிமையை, வருத்தத்தை போக்குவதற்கு இந்த முதியோர் இல்லம் தான் சரியான இடம் என்று தீர்மானித்து இங்கே அழைத்து வந்தார்.
அங்கிருந்த அனைவரும் வயதான பெற்றோர்கள். தங்கள் வாரிசுகளின் அன்பு, அரவணைப்பு, கவனிப்பு கிடைக்காமல் இங்கே கொண்டு வந்து விடப்பட்டவர்கள்.
இல்லத்தை நடத்துபவர் சரியான நேரத்தில் சாப்பாடு, மருத்துவம், தந்தாலும் அவர்கள் வாழ்வில் இருந்த வெறுமைக்கு கொஞ்ச நாட்களாக முருகானந்தம் தான் ஆறுதல்.
பெரிதாக ஒன்றும் இல்லை, ஒவ்வொரு சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை காலை வந்து விடுவார். அவர்களுடன் அரட்டை அடிப்பது ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, புத்தகங்கள் படித்து காட்டுவது, உடல் நலம் பற்றி தெரிந்து கொள்வது, அவர்கள் மனம் விட்டு அவரிடம் தங்கள் வருத்தத்தை பகிர்ந்து கொள்ளும் போது பொறுமையாக கேட்டு ஆறுதல்படுத்துவது.. அதில் அவர்களுக்கும் சந்தோஷம் அவருக்கும் மகிழ்ச்சி.
இருவரும் மாலை வரை நேரம் போவது தெரியாமல் அவர்களுடன் இருந்து மகிழ்ந்து விட்டு பிரிய மனமில்லாமல் கிளம்பினர்.
அப்போதே விமலா முடிவு செய்து விட்டாள். இனி ஞாயிற்றுக்கிழமை மட்டும் அல்லாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கே வந்து விட வேண்டும் என்று. அவளின் மனமாற்றம் அவள் பேச்சிலும், முகத்திலும் தெரிந்தது.
“தேங்க்யூ ங்க” என்று கணவனிடம் சொல்ல.
“விமலா இப்ப புரியுதா… நாம கொஞ்சம் வசதியா வீட்டில் இருக்கோம், இவர்கள் அதற்கு வழி இல்லாமல் இங்கே இருக்கிறார்கள்.. இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை”
ஏனோ இந்த தலைமுறையில் சிலர், பெற்றோர்களை பாரமாக கருதுகின்றனர். செடி செழித்து மரமாக வளர்ந்து பூக்கவும், காய்க்கவும் வேர்கள் பலமாக இருந்தால் தான் முடியும். ஆனால் மனித பூக்களுக்கு இது புரிவதே இல்லை.
நேற்றைய இளமை இன்றைய முதுமை. இது தவிர்க்க முடியாத ஒன்று. வருங்காலத்தில் முதியோர் இல்லம் என்ற ஒன்று இல்லாமல் செய்வது, இன்றைய தலைமுறை கைகளில் தான் உள்ளது. முதுமையை ரசித்து கொண்டாடுவோம்.