in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 6) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை ❤ (அத்தியாயம் 6)

பிப்ரவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3  பகுதி 4  பகுதி 5

யில்வே ஸ்டேஷனுக்குள் மும்பை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் நுழைய, பிளாட்பாரத்தில் நின்றவர்கள் முண்டியடித்துக் கொண்டு ரயிலுக்குள் ஏறினார்கள்.

டீ குடித்துக் கொண்டு நின்றிருந்த சிவாவும் திவாகரும் ரயில் வருவதைப் பார்த்ததும் வேகமாக திவ்யாவை இழுத்துக் கொண்டு புவனா இருந்த இடத்திற்கு வந்து, கொண்டு வந்த பொருட்களைத் தூக்கிக் கொண்டு ரயிலில் ஏறினர்.

ரயில் புறப்படுவதற்கான அறிகுறியாக பச்சை விளக்கு எரிந்தது. பின்னாலிருந்து ரயில் ஓட்டுனர் பச்சைகொடியை காட்டி விசில் ஊத, இரயில் புறப்பட்டது.

ரயில்நிலையத்தில் பரபரப்பு கூடியது. சிலர் சிரித்து வழியனுப்பி, “போனதும் உடனடியாக கடிதம் போடு” என்றும், “பம்பாயில் இறங்கியதும் போன் பண்ணு” என்றும், ஒரே அவியல் குரல்கள் தவித்துப் போய் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

“ரயில் கிளம்ப ஆரம்பித்து விட்டது புவனா. தம்பி ஏற்கனவே மும்பையில் இருந்தவன் என்றாலும் உங்களோடு அதிகமாக தங்க அனுமதிக்க வேண்டாம். புது இடம், கவனமாக இரு. போன உடனே எனக்கு அங்குள்ள விவரங்களை எழுது” என்று புவனாவின் கையைப் பிடித்துக் கொண்டாள் ராணி.

அம்மாவைப் பிரியப் போகிறோம் என்ற துக்கம் நெஞ்சிலடைக்க, பேச முடியாமல் கண்களில் நீர் தழும்ப ராணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் புவனா.

“அத்தா ஏன் அழறே?” திவ்யா புவனாவின் கண்களைத் துடைத்து விட்டாள்.

“ஒன்றுமில்லேம்மா. பாட்டியைப் பிரிந்து போறோமில்லியா அதனால தான்” என்றாள் புவனா.

“திவ்யா கண்ணு அத்தா கூட சமத்தா இருக்கனும்” என்று திவ்யாவின் கன்னத்தைத் தடவினாள் ராணி.

“சரி பாட்டி அத்தா அழுதா எனக்கும் அழுகை வருது” என்ற திவ்யாவின் முகம் சுருங்கியது.

ரயில் மெதுவாக கிளம்ப, “சரி அத்தை போயிட்டு வாங்க. அப்புறம் பார்க்கலாம், லட்டர் போடுகிறோம்” என்று கையாட்டினான் சிவா.

திவாகரும், “சரி அம்மா போயிட்டு வர்றோம்” என்று கையாட்டினான். ரயிலின் வேகம் அதிகமாக எல்லோரும் கையாட்டினார்கள். ரயில் பிளாட்பாரத்தை விட்டு ஒதுங்கி வேகமாக ஓட ஆரம்பித்தது.

புவனா அவளை அறியாமல் திவ்யாவை கட்டிப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்த நிலையிலே தூங்க ஆரம்பித்தாள்.

“புவனா இந்த ஸீட்டிலே கால் நீட்டிப் படுத்துத் தூங்கு. நேற்று ராத்திரி முழுவதும் தூங்கவுமில்லை. உடம்பு என்னத்துக்கு ஆகும். டிபன் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்கிறாயா?” சிவா வாஞ்சையோடு கேட்டான்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் போய்ச் சாப்பிடுங்கள். தம்பிக்கும் திவ்யாவிற்கும் வாங்கிக் கொடுங்கள்” என்று படுத்துக் கொண்டாள்.

திவ்யாவும் அவளோடு படுத்துக் கொள்ள, சிவாவும் திவாகரும் டிபன் சாப்பிட்டு விட்டு பார்சல் வாங்கிக் கொண்டு திரும்பிய போது டிக்கெட் பரிசோதகர் புவனாவிடம் டிக்கெட் விசாரித்துக் கொண்டிருந்தார்.

நல்ல தூக்க கலக்கத்தோடு டிக்கெட் எடுத்துத் தந்த புவனா, “என் கணவரும் மைத்துனரும் சாப்பிட போயிருக்காங்க” என்றாள்.

திவாகரும் சிவாவும் சீட்டிற்கு வந்து சேர, “இந்த இரண்டு சாக்குப் பைகளும் உங்களது தானே?” என்று கேட்டார் டி.சி.

“ஆமாம்” என்றான் சிவா.

“லக்கேஜ் கட்டியிருக்கிறீர்களா?”

“எதற்கு லக்கேஜ் கட்ட வேண்டும். நாங்கள் மூவர் பயணம் செய்கிறோம். மூன்று வயது கடக்கும் பெண்ணிற்கு அரை டிக்கெட் எடுத்துக் கொண்டுதான் வந்திருக்கிரோம். அதே அளவு தான் சாமான்களும் கொண்டு வந்திருக்கிறோம்” கோபத்துடன் சொன்னாள் புவனா.

“என்ன இருக்கிறது பைகளில்”

“ஒன்றில் தேங்காய் இருக்கிறது, மற்றொன்றில் முருங்கைக் காய்”

“வியாபாரமா?”

“நான் அங்கு காய்கறி வியாபாரம் செய்கிறேன்” என்றான் சிவா.

“தேங்காய் மூட்டை மட்டுமே நூறு கிலோ தாண்டும் போல இருக்கிறதே, கண்டிப்பாக பைன் கட்ட வேண்டியதிருக்கும்”

“நாங்கள் ஏன் பைன் கட்ட வேண்டும்? எடை போட்டுத்தான் எடுத்து வந்திருகிறோம்.” என்றாள் புவனா.

“அம்மா கண்டிப்பாக எடை அதிகமாக இருக்கும் என்பதனால்தான் நான் உங்களை பைன் கட்டச் சொல்கிறேன்” என்றார் டி.சி.

“கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைங்க அத்தான்” சிவாவிடம் திவாகர் கிசுகிசுத்தான்.

அதைக் கேட்ட புவனா, “எதற்கு பணம் கொடுக்க வேண்டும். நீங்கள் எங்கே இறக்கி எடைப் போடச் சொல்கிறீர்களோ அங்கே நாங்கள் எடை போட தயாராக இருக்கிறோம். அதுவரை ரயிலை நிறுத்தி வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது” கடுமையாக புவனா சொன்னதைப் பார்த்து கூட அமர்ந்திருந்த பயணிகள் அசந்து போனார்கள்.

“என்னம்மா பைன் கட்டச் சொன்னால் இப்படி குண்டக்க மண்டக்க பேசுகிறீர்கள்” டி.சி. கோபப்பட்டார்.

“சார்… நாங்கள் எங்களுக்குத் தேவையானதை ரயில் சட்ட பிரகாரம் எடுத்து வந்திருக்கிறோம். நாங்கள் எந்த பைனும் கட்டத் தேவையில்லை. நீங்கள் போய் யாரையேனும் அழைத்து வந்தாலும் பரவாயில்லை” கடுமையாக புவனா சொன்னதும் இவர்களிடமிருந்து பணம் பெயராது என்று உணர்ந்த டிக்கெட் பரிசோதகர் மெதுவாக இடத்தை விட்டு நகர்ந்தார்.

புவனாவின் அசாத்திய பேச்சைக் கேட்டு சிவாவும் கூட கொஞ்சம் அசந்து போனான்.

மும்பையில் தாதருக்கு ரயில் வந்ததும் எல்லோரும் இறங்கிக் கொள்ள, சிவா ஒரு டாக்ஸி பிடித்து வரிசையாக எல்லா சாமான்களையும் ஏற்றி, “சாக்கி நாக்கா சலோ” என்றான்.

இரயிலில் இரண்டு பகல் ஓர் இரவு பயணம் செய்ததில் மிகவும் களைப்படைந்து போயிருந்தாள் புவனா. ரயில் வந்து சேர இரவு பதினோரு மணியாகி விட்டதால் திவ்யா தூங்கிப் போயிருந்தாள்.

சிவாவின் வீட்டின் முன்னே டாக்ஸியை நிறுத்தி பொருட்களை இறக்க ஆரம்பித்தான் திவாகர். புவனாவின் கைப்பையை வாங்கி சாவியை எடுத்து வீட்டைத் திறந்தான் சிவா.

“இப்போதுதான் ஊரிலிருந்து வருகிறீர்களா?” பக்கத்து வீட்டு குஜராத் பெண்மணி இந்தியில் கேட்டாள்.

“ஆமாம்” என்று சொல்லி விட்டு புவனாவை வீட்டிற்குள் போகச் சொல்லி திவ்யாவை வாங்கி கட்டிலில் படுக்க வைத்தான்.

எதிர்வீட்டு பெண்மணிகள் இருவர் வந்து பயணம் எப்படி இருந்தது என்று ஆங்கிலத்தில் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீட்டினர் பலரும் வந்து விட, சிவா எல்லோரிடமும் ஹிந்தியில் குசலம் விசாரித்தான்.

”இவ்வளவு லேட்டா வந்திருக்கீங்க, சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். நான் கொஞ்சம் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன், சாப்பிடுங்கள்” என்றாள் ஒரு கோவா பெண்மணி.

எல்லோரும் புதிதாக வந்திருந்த புவனாவைக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். சாப்பாடு கொண்டு வந்த ரோஸி, “இது யார்?” என ஆங்கிலத்தில் கேட்டாள்.

“என் மனைவி” என்றான் சிவா. “ஊரில் அப்பா அம்மா மிகவும் வற்புறுத்தியதால் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலையாகி விட்டது. திவ்யாவை வேறு கவனிக்க வேண்டுமல்லவா” என்றான் சிவா.

ரோஸிக்கு முகம் சுருங்கிப் போனது. சாப்பாட்டை வைத்து விட்டு புவனாவின் அருகில் வந்து அவள் கையைப் பிடித்து குலுக்கி விட்டுக் கிளம்பினாள்.

எல்லோருக்கும் ரோஸி புவனாவை அறிமுகப்படுத்த, சிவா “எழுந்து கும்பிடு போட்டு வை” என்றான் புவனாவிடம்.

எழுந்து நின்ற புவனா பொதுவாக கும்பிட்டாள். எல்லோரும் “சிவா மனைவி இறந்த உடனே இப்படி இன்னொரு பெண்ணைக் கட்டியிருக்கக் கூடாது” என்று முணுமுணுத்துக் கொண்டே கிளம்பினர்.

“எனக்கு பசிக்கவில்லை. புவனா, நீயும் திவ்யாவும் சாப்பிட்டு விட்டுத் தூங்குங்கள். நான் மேலுக்கு குளித்து விட்டு வருகிறேன்” என்று டவலை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்கு கிளம்பினான்.

புவனா எழுந்து கையைக் கழுவி விட்டு ரோஸி கொண்டு வந்த உணவை சிவாவிற்கு பரிமாறி விட்டு, “எப்படித்தான் இனி சப்பாத்தி சாப்பிட்டு பழகப் போகிறேனோ” என்று சொல்லிக் கொண்டு ஒரு சப்பாத்தியை எடுத்து பிய்த்து கறியில் தோய்த்து சாப்பிட்டாள்.

“அத்தான் நான் முன்னாலே வராண்டாவில் படுத்துக் கொள்கிறேன்” என்று சிவாவிடம் சொல்லி விட்டு தலையணையும் போர்வையும் எடுத்துக் கொண்டு திவாகர் வெளியே வந்து படுத்துக் கொண்டான்.

காலையில் திவாகர் வேலைக்குப் போக வேண்டுமென்று வேகமாகக் கிளம்பிப் போய் விட்டான்.

சிவா மெதுவாக எழுந்து புறப்பட்டப் போது, அவனுடைய காய்கறிக் கடையில் வேலை செய்கிற பையன் வந்து “சாப் ஹை” என்று கேட்டான்.

புவனா அந்தப் பையன் கேட்டதுப் புரியாமல் “அத்தான் யாரோ வந்திருக்கிறார்கள்” என்றாள்.

“ஆவ் திவாரி, துக்கான் ஹைசா ஹை” என்றவன், “புவனா இது நம்ம கடையிலே வேலை செய்கிற பையன்” என்றவன் ஒரு டாக்ஸி வரவழைத்து தேங்காய் மற்றும் முருங்கக் காய் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு, “புவனா நீ திவ்யா எழுந்த்தும் குளித்துப் புறப்படுங்க. இன்றைக்கு வெளியே சாப்பிட்டு விட்டு சமையலுக்கான பொருளெல்லாம் வாங்கி வரலாம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

திவ்யா எழுந்ததும் பால் கலந்து கொடுத்து விட்டு புவனா குளிக்க கிளம்பிய போது, “பேர் என்ன?” என்று ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டே வந்தாள் ரோசி.

“புவனா” என்றாள். ‘இதற்கு மேலேயும் இவள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ கேட்டால் எனக்குப் பதில் சொல்லத் தெரியாது. மெதுவாக கழன்று கோள்ள வேண்டும்’ என்று எண்ணியவள் “எனக்கு நிறைய வேலை இருக்கிறது” என்றாள் தமிழில்.

ரோஸிக்கு மொழி புரியவில்லை. “இந்தி, இங்கிலீஷ் நோ” என்றாள் சைகை காட்டியவாறு.

“ஓ…” என்று புரிந்து கொண்ட ரோஸி இவளுக்குப் புரிய வேண்டும் என்று கூட எதிர்பார்க்காமல் கடகடவென்று ஆங்கிலத்தில் வேகமாகப் பேசிக் கொண்டே போனாள்.

ரோஸி ஆங்கிலத்தில் பேசியது புரியாவிட்டாலும், அவள் திவ்யாவையும் போட்டோவிலிருந்த தேவகியையும் மாற்றி மாற்றிச் சொன்னதிலிருந்து, அவளுக்கு தேவகியையும் திவ்யாவையும் நன்கு தெரியுமென்று, தேவகி இறந்ததும் சிவாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ளத் துடித்ததாகவும் அவள் சொன்னதிலிருந்து புரிந்தது.

‘சிவா அத்தான் வந்ததும் இதைப் பற்றி கேட்க வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள் புவனா.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த ரோஸி, கடிகாரம் பார்த்து விட்டு, தான் ஒரு பள்ளிக்கூட டீச்சராக இருப்பதாகவும், உடனடியாக ஸ்கூல் போக வேண்டியதிருப்பதால் மாலையில் வந்து பேசுகிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பினாள்.

சிவா கொஞ்ச நேரத்தில் டாக்ஸியில் வந்து இறங்கினான்.

புவனாவும், திவ்யாவும் டாக்ஸியில் ஏறிக் கொண்டனர்.

டாக்ஸி வேகமாக போய்க் கொண்டிருக்க, “எங்கே போகிறோம்?” என்று கேட்டாள் புவனா.

“என் மஹாராஷ்டா நண்பன் ஒருவனுக்கு திருமணம். குடும்பத்தோடு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். காட்கோபரில் ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கிறது” என்றான் சிவா.

“திவ்யாவை நர்சரியில் சேர்க்க வேண்டும் என்றேனே மறந்து விட்டீர்களா?”

“கொஞ்ச நாள் லீவு போட்டதால் கடையில் கொஞ்சம் வேலை அதிகமாகி விட்டது. நீ ரோஸியிடம் சொல்லி அவளை பள்ளியில் சேர்த்து விடு. டொனேஷன் எவ்வளவு கேட்டாலும் கொடுத்து விடலாம்.”

“எனக்கு இங்கு மொழிதானே பெரிய பிரச்சினை”

“நாளைக்கு உன் தம்பி திவாகரை லீவு போடச் சொல்லேன். அவனுக்கு நன்றாக ஹிந்தி தெரியும். அவன் தெளிவாக ரோஸியிடம் விஷயத்தைச் சொல்லி திவ்யாவை பள்ளியில் சேர்த்து விடுவான்.”

“சரி நான் கேட்டுப் பார்க்கிறேன். என்னவோ வந்து ஒரு வாரமாகிய பிறகும் கண்ணைக் கட்டி காட்டில் விட்ட மாதிரி இருக்கிறது.”

“போகப் போகப் பழகிவிடும். கொஞ்சமதிகமாக ஹிந்தி புரோக்ராம் டி.வியில் பார். சின்ன சின்ன வார்த்தைகளைப் படித்துக் கொள்.”

திருமண வீட்டிற்கு வந்த போது அங்கே வந்திருந்த இன்னொரு தமிழ்க் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினான் சிவா.

“இது சந்திரன், பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறார். இது அவர் மனைவி ராஜேஸ்வரி, இவங்க ஸ்கூலிலே வேலை பார்க்கிற டீச்சர். இது என் மனைவி புவனா” என்றான் சிவா.

“எந்த ஊர், எப்போது பம்பாய் வந்தீர்கள்?” என்று பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டு சாப்பிட புறப்படும் போது திவ்யாவைத் தூக்கினாள் புவனா.

“அத்தா நான் நடந்து வருகிறேன்” என்றாள் திவ்யா.

“இன்னும் அம்மா என்று கூப்பிட மாட்டாளா?” என்று கேட்டாள் சிவாவின் நண்பனின் மனைவி ராஜேஸ்வரி.

அப்படியே முகம் சுருங்கிப் போனாள் புவனா. சுதாரித்துக் கொண்ட சிவா, “இப்போதுதானே எங்களுக்குத் திருமணம் முடிந்தது. கொஞ்சநாள் போனால் எல்லாம் சரியாகி விடும்” என்றான்.

உள்ளுக்குள்ளே குமைந்து போய், பொம்மைப் போல மௌனமாக கனத்த உள்ளத்தோடு பேருக்குச் சாப்பிட்டு விட்டு திவ்யாவையும் தூக்கிக் கொண்டு கிளம்பினாள்.

வீட்டுக்குத் திரும்பும் போது, டாக்ஸியில் முன்னால் அமர்ந்திருந்த சிவா, “என்ன புவனா திடீரென்று மௌனமாகி விட்டாய்?” என்று கேட்டான்.

“…….” ஒன்றும் சொல்லாமல் முகத்தை கையிலிருந்த கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

 “அவங்க கேட்டது உனக்கு ரொம்பக் கஷ்டமாகிப் போச்சுதில்லையா?” என்று கேட்டான்

அவளுக்கு என்ன சொலவ்தென்றே புரியவில்லை. அவனே தொடர்ந்தான்.

“இதெல்லாம் நீ கண்டிப்பாக எதிர்கொள்ள வேண்டியதிருக்குமென்று தான் நான் திருமணத்திற்கு முன்னேமே உன்னிடம் கேட்டேன்”

“இதை சகஜமாக எடுத்துக் கொள்ளத்தான் நினைக்கிறேன், ஆனால் முடியவில்லை அத்தான்.”

“சரி விடு, திவ்யா அப்பாகிட்ட வர்றியா?” என்று திவ்யாவை மடியில் வைத்துக் கொண்டு, “புவனா… அத்தாவை நீ அம்மான்னு கூப்பிடுறியாம்மா?” என்று கேட்டான்.

“ம்கூம், இது அத்தா தானே?”

“இனி அவங்களை அம்மான்னு கூப்பிடு”

“ம்கூம் எங்கம்மா பொம்மை வாங்க போயிருக்காங்கன்னு நீதானே சொல்லியிருக்கே”

“தேவகி அம்மா வர்ற வரைக்கும் புவனாவை அம்மா என்று கூப்பிடு செல்லப் பெண்ணே”

“அத்தா நல்லாத் தானே இருக்கு?”

“அம்மான்னு சொல்லேன்”

“மாட்டேன், அம்மா பொம்மை வாங்கி விட்டு வந்தபுறம் அவங்க சொல்லச் சொன்னா சொல்றேன்”

“சிவா அத்தான்… நீங்கள் அவளை வற்புறுத்த வேண்டாம். திவ்யா நீ அத்தாக்கிட்ட வந்திரும்மா” என்று திவ்யாவைத் தூக்கி தூங்க வைத்தாள்.

தொடரும் (புதன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வேர்கள் (சிறுகதை) – ✍ ராஜஸ்ரீ முரளி, சென்னை

    முதல் கல்யாணம் (சிறுகதை) – ✍ நாமக்கல் எம்.வேலு