இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்
சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 120)
டவுனின் மையப்பகுதியில் அமைந்த திருமண மண்டபம் அது.
இதோ, இன்னும் ஒருமணி நேரத்தில், உறவெனும் புதிய வானத்தில் இருமனங்கள் இணையப் போகின்றன.
மங்கல நிகழ்விற்காக, உறவுக் கூட்டம் படுபிஸியாக… அங்குமிங்கும் பேசிக் கொண்டும், கல்யாண வேலைகளை செய்துக் கொண்டும் இருந்தனர்.
இன்னும் சில உறவுகள், மண்டபத்திற்குள் வந்த வண்ணம் இருந்தனர்.
அவர்களுள் இருவர் மட்டும் சுழன்று சுழன்று நடந்து… இல்லையில்லை பறந்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் மணப்பெண்ணின் பெற்றோர். அம்மாவாவது கொஞ்சம் மேக்கப்புடன் தெளிவாக இருந்தார். பெண்ணின் தகப்பனார் தான் மிகவும் வெளிறிப் போயிருந்தார்
சமாளிப்புத் திலகம் பட்டம் பெறப் போவது அவர் தானே. பிள்ளையைப் பெற்றவர் ‘சம்பந்தி’ என இனி அழைக்க வேண்டியவர் முதல் கேள்வியின் நாயகர்கள், வேறு எவருமல்லர்
குற்றம் குறைக் கண்டுப்பிடிக்கவே திருமணத்திற்கு வருகைத் தரும் உறவினர் வரை… அனைவரின் ஏகபோக அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்.
சரி… இந்த வர்ணனைகளை ஒலிபரப்புச் செய்யும் நாங்கள்…. உறவினர்கள் என்னும் நண்பர்கள். மணப்பெண்ணின் அண்ணன் தம்பிகள். பெரியப்பா சிற்றப்பா மகன்கள்…தோழர்கள் போன்றோர்…. உணர்வினால்!! வயது ஒரு பொருட்டாய் எங்களுக்கில்லை.
நாதஸ்வரம் மேளம் முழங்கத் தொடங்கியது. அவ்வதிர்விலிருந்து தப்பிக்க முன்வரிசையில் அமர்ந்திருந்தோம். நாங்கள் அமர்ந்த திசை வாசலை நோக்கியிருந்தது. எவர் நுழைந்தாலும் எங்கள் பார்வையிலிருந்து தப்ப முடியாது.
மணமேடையில் புரோகிதர் தன் பிரபல்யத்தை நிரூபித்துக் கொண்டிருந்தார். அடுத்து வரும் மணித்துளிகளின் இயக்குநர் அவர் தானே
“மாமி, இங்க வாங்கோ. அரசாணக்கால் நடனும், யாராச்சும் மாமிங்க அஞ்சு பேர வரச் சொல்லுங்கோ நாழியாறது” என்றார்
அவர் சொற்படியே மங்கையர் கூட்டம் மணமேடையை சூழ்ந்து திருமணத்திற்கான நிகழ்வுகளில் மும்முரமாக, மண்டபம் முழுவதும் பட்டுப் புடவைகளும் மல்லிகை சரங்களும் நிறைந்திருந்தது.
பல சுடிதார்களும் தாவணிகளும் கூட, பலமான ஒப்பனையுடன் மண்டபத்தில் அங்கங்கு காணப்பட்டன. எங்கும் செல்ஃபி , எதனுடனும் செல்ஃபி, எப்போதும் செல்ஃபி என்பதனை வெளிப்படுத்தும் விதமாக… நாணிக்கோணி பாவம் காட்டி
புகைப்படத்தில் மூழ்கினர்.
அவ்வளவு பரபரப்பிலும், எங்களைப் போன்ற இளவட்டங்களை கவனிக்கத் தவறவில்லை. அவர்களின் மனவோட்டம் ஒன்றே ஒன்று தான்
இவ்வளவு ஒப்பனைக்கும் ஏனின்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பெண்களின் சுபாவமே இதுதான். பார்த்துக் கொண்டிருந்தால் கோபக்கணையை செலுத்துவது . பார்க்காமல் போனால் தம் அழகின் மீதே சந்தேகம
ஆண்கள் ரசிகர்களாய் இருப்பதையே பெண்கள் விரும்புகின்றனர். நாங்களும் ரசிகர்களே… அப்பெண்களும் ரதிகளாகவே எங்கள் கண்ணிற்கும் தென்பட்டனர்.
ஆனால் அவர்கள் எங்களை ஈர்க்காததற்குக் காரணம் நாங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய நபர் இன்னும் இவ்விழாவிற்கு வருகைத் தராதது தான்
எங்கள் தூரத்து உறவினர் முத்துராஜா மாமா. எவ்வளவு தூரம் என்பது அவருக்கே வெளிச்சம். முத்துமாமா என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படுபவர்.
இதோ மணமக்கள் வந்தாயிற்று! சடங்குகள் நடந்தேறிக் கொண்டிருந்தன. கண்கள் வாசலையே நோக்கின.எவரை எதிர்ப்பார்த்திருந்தோமோ அவரே இதோ வந்து விட்டார். வாசலிலேயே சலசலப்பு
இதை… இதைத் தானே எதிர்பார்த்தோம்.
நாங்கள் நால்வர் கூட்டணி… ரமேஷ், விவேக், பாலு, எத்திராஜ். எங்களுக்குள் மூன்று நான்கு வயதே வித்தியாசம். ஊரில் விவசாயம் பார்க்கின்றோம். பரம்பரையாக விவசாயம் செய்கின்றோம்.
அண்ணன் பரமசிவத்தின் பிள்ளைகள் ரமேஷும் விவேக்கும். தம்பி மணிவண்ணனின் பிள்ளைகள் பாலுவும் எத்திராஜும். ஒரே குடும்பமாகக் கிராமத்து பெரிய வீட்டில் வசிக்கிறோம்.
தந்தையரின் அனுபவ மேற்பார்வையில் குலத்தொழிலான விவசாயத்தில் நவீன யுக்தி கலந்து சிறப்பாக விளைச்சல் பார்க்கின்றோம். நேரம் கிடைக்கும் போது சினிமாவிற்கு நால்வரும் செல்வோம்.
நண்பராய் பழகுவதால் ஒருவர் நீங்கி மற்றொருவர் எங்கும் சென்றதில்லை. உறவினர் இல்ல திருமணங்களுக்கு சென்று அரட்டையடித்துக் கொண்டுப் பேசி மகிழ்வதில் அலாதிப் பிரியம் எங்களுக்கு.
ஆனால், இதையெல்லாம் விட மிக விருப்பம் நாங்கள் போகும் விசேஷங்களுக்கெல்லாம் வருகைத்தரும் முத்து மாமாவின் அலப்பரைகளைக் கண்டு விழுந்து விழுந்து ரசித்து சிரிப்பது மட்டுமே.
குற்றம் கண்டுபிடிப்பதற்கேப் படைக்கப்பட்ட நவீன நக்கீரன்.
சரி, இப்போது வாசலில் என்ன களேபரம் என்றுப் பார்ப்போம்.
“என்ன குமரேசா, வர்றவங்கள இப்படித் தான் வரவேற்பியா?” குமரேசன் வேறு யாருமில்லை. எங்கள் ஒன்று விட்ட சித்தப்பா தான்.
முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட மணப்பெண்ணின் தகப்பனார். இவருக்கு முத்து மாமா என்ன உறவு தெரியவில்லை. இவர் என்று இல்லை, எந்த திருமணத்திற்குச் சென்றாலும் முத்துமாமா அவர்களுக்கு என்ன சொந்தம் என்பதை எவராலும் யூகிக்க முடியாது.
ஆனால் வெகுநாளாக எங்களுக்கு எல்லாம் இவ்விஷயம் மிகப்பெரிய குடைச்சலாக இருந்தது. பல துப்பறியும்வேலைகளுக்கு பிறகு நாங்கள் கண்டு அறிந்த உண்மை இது தான்.
அதற்கு முன் முத்து மாமாவின் அங்கலாவண்யங்களை விவரிப்பதன் மூலம் அவரது தோற்றம் எப்படி பல இடங்களில் அவருக்கு உதவுகிறது என்பதை அறியலாம்.
நகைச்சுவை முதல் குணச்சித்திரம் வரை தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் தம்பி ராமய்யாவை ஒத்த உருவம். வெவ்வேறுத் திரைப்படங்களில் அவர் ஏற்ற பல பாத்திரங்களின் மொத்த உருவமே எங்கள் முத்துமாமா.
எப்போதும் வெள்ளைச்சட்டை வெள்ளை கரை வேட்டி. நெற்றியில் ஒற்றை விபூதிப்பட்டை, வட்ட சந்தனகுங்குமம், கழுத்து ஒட்டிய பட்டை தங்கச்செயின், தங்கக் கடிகாரம், வலதுக்கைக் கக்கத்தில் ஒரு தோல்ப்பை, மூக்கின் மேல் நிற்கும் கண்ணாடி, எல்லாவற்றிற்கும் சிகரமாக அங்குமிங்கும் துறுதுறுவென அலைப்பாயும் கோலிக்குண்டுக் கண்கள். இவ்வடையாளங்களை மனதில் நிறுத்தி… தொடர்ந்து முத்துமாமாவைக் கவனிப்போம்.
நெருங்கிய சொந்தமாக இல்லாத போதும், முத்துமாமாவிற்கு விஐபி அந்தஸ்து கிடைப்பதற்கும், எல்லா விசேஷங்களிலும் அவர் தலைத் தென்படுவதற்கு அவரது கக்கத்துத் தோல் பையேக் காரணம்.
கல்யாணத்திற்குக் காத்திருக்கும்… எல்லா பிள்ளை, பெண்ணின் விபரங்கள் முதற்கொண்டு… திருமண நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டாளர்கள் வரை அனைத்து விஷயங்களும் அவர் தோல்பையிலேயே அடங்கும்.
அனைத்து விவரங்களும் அவர் விரல் நுனியில் இருக்கும். நகரவாசிகளுக்கு இவ்வேலைகளை செய்வதற்கு திருமணமையங்கள் இருக்கின்றன. ஆனால் கிராமங்களில் இன்றும் உறவுகள் வாயிலாக திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
அவர்கள் மனிதர்களை நம்பும் அளவுக்கு பிறவற்றை ஏற்பதில்லை.
அதனால் தான் முத்து மாமாவிற்கு இவ்வளவு செல்வாக்கு.அவர் சொல்வாக்கு சுத்தம் என்பதாலேயும் அவரிடம் அனைவருக்கும் மரியாதையும் அதிகம்.
அது என்னவோ உண்மைதான். தன் மனசாட்சிப்படியே நடப்பார். தன் பெண், பிள்ளைக்கு வரன் பார்ப்பதுப் போன்றே எல்லா அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே பெற்றவரிடம் பரிந்துரைப்பார்.
இவ்வளவு நல்லவனுக்குள்ளும் ஒரு நக்கீரர் அடிக்கடி எட்டிப் பார்ப்பார். மனிதரிடம் இருக்கும் ஒரே குறையும் அதுதான். குற்றம் கண்டுபிடித்து அனைவரின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வார்.
குடைச்சல் பிறவியாக அவர் தென்பட்டாலும், அவர் கூறுவது நியாயமாகத் தான் தோன்றும். அவர் அக்கறையில் செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா என்பது… அவருக்கள் இருக்கும் அந்நியனுக்கே வெளிச்சம்
இங்கு ஒரு பிரச்சனைப் போய்க் கொண்டு இருக்கிறதே, அந்த சுவாரஸ்யத்தை நாங்கள் இழக்க விரும்பவில்லை. நம் கவனத்தை அவர் நோக்கி திருப்புவோம்.
“வாங்க வாங்க மாமா, இப்பத் தான் உள்ளே இருந்து உங்களப்பார்த்துட்டு ஓடி வர்றேன். சௌக்கியமா? என்ன நீங்களே இவ்ளோ லேட்டா வந்தா எப்படி?”
முத்துமாமா பதில் சொல்வதற்குள், அவர் மகன் வந்து புரோகிதர் பாத பூஜைக்கு அழைப்பதாகக் கூறவே, தப்பித்தோம் பிழைத்தோம் என குமரேசன் உடனே நகர்ந்தார்
எங்களைக் கண்டதும் முகம் மலர்ந்தார் மாமா.
“அடப்பசங்களா… எப்ப வந்தீங்க? நல்லா இருக்கீங்களா? நம்ம பழனி பேத்தி காதுகுத்துல பார்த்தது”
“நல்லாருக்கோம் மாமா…. நேத்து வரவேற்புக்கே எதிர்பார்த்தோம். இன்னிக்கு என்ன இவ்வளவு தாமதம்?”
“நேத்து நம்ம அரிசிமண்டி பால்பாண்டி அண்ணாச்சி மகனுக்கு வரவேற்பு. அங்க போயிருந்தேன். நம்ம சன்னதி தெரு சூப்பர்கமார்க்கெட் சங்கரலிங்கம் அண்ணாச்சி பொண்ண நான்தான் முடிச்சி வச்சேன். மண்டபத்திலேயே தங்கிட்டேன். கொஞ்சம் அசந்துட்டேன், அதான் இங்க தாமதமாயிடுச்சு”
“சரி… என்ன சத்தம் போட்டுட்டு இருந்தீங்க?”
“பின்ன என்னப்பா, வர்றவங்கள வரவேற்க ஒரு ஆளு இல்ல…முகூர்த்தத்துக்கு இன்னும் முக்கால் மணிநேரம் இருக்குல்ல அதுக்குள்ள எல்லாத்தையும் ஏறக்கட்டிடறதா? பன்னீர் சந்தனம் தெளிச்சு மனுஷன வரவேற்க ஆளு இல்லன்னா எப்படி தம்பி?”
அவர் சொல்வதும் நியாயமாகப்பட்டது. ஏனெனில், இன்னமும் உறவினர்கள் வந்து கொண்டு தான் இருந்தனர். வரவேற்பு இல்லாமல் வர… எல்லோருக்கமே வருத்தமாகத் தான் இருக்கும். இவர் வெளிப்படையாகச் சொல்கிறார், அவ்வளவு தான்.
இதோ, தோரண மேடையில் மணமகன், மணமகளுக்கு மங்கலநாண் கட்டி விட்டான். பூமாரி சொரிய மணமக்களை அனைவரும் வாழ்த்தினர்.
இப்போது தான் ஆரம்பமாகும் மாமாவின் கச்சேரி. நேராக மணமேடைக்குப் போனார்.
திருமணம் நல்லபடியாக நடந்த நிறைவில் கண்கலங்கியிருந்த எங்கள் சிற்றப்பாவிடம் சென்று, “என்ன குமரேசா! பொண்ணு கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுது. சந்தோஷம்.”
“ஆமா மாமா! எல்லாம் உங்க ஏற்பாடு தானே. நல்ல சம்பந்தம் அமைஞ்சது.” வாங்க மாமா குழந்தைங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றார் சிற்றப்பா.
“சரி தம்பிங்களா! நான் போய் மொய் எழுதிட்டு நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு வர்றேன்”..
“மாமா! அங்க பாருங்க…. மொய் எழுத ஆளு உட்காந்திருக்கு…”
“இருக்கட்டும்… நேர்ல கொடுக்கிற மாதிரி வருமா? நீங்க வரலியா?….”
“இல்ல மாமா….. நாங்க நேத்து வரவேற்புல பரிசாக் கொடுத்துட்டோம்”
“சரிப்பா…. என்றபடி மாமா மணமேடை நோக்கி நகர்ந்தார்
மணமக்கள் ஃபோட்டாக்காரரின் உத்தரவுக்கேற்ப போஸ் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை அழகாகக் காட்டக்கூடிய ரிங்மாஸ்டர் பேச்சைக் கேட்கத் தானே வேண்டும்.
பல உறவினர்கள் மணமக்களிடம் வாழ்த்துக்கள் தெரிவிக்கவும்… பரிசுகள் அளிக்கவும் மணமேடையை சூழ்ந்தனர். அவர்களையெல்லாம் முந்திக் கொண்டு மாமா அருகில் சென்றார்.
மணப்பெண்ணிடம் மொய்கவரை நீட்டியபடி, “என்னம்மா பிரேமா! கல்யாணப் பொண்ணு!! நல்லாரும்மா நூறு வருஷத்துக்கு உன் புருஷனோட!! மாப்ளத்தம்பி நான்…” என தம்மை அறிமுகப்படுத்திக் கொள்வதற்குள்
“ஏங்க பெரியவரே! கொஞ்சம் நகருங்க…. போட்டோ எடுத்துட்டு இருக்கோமுல்ல. எவ்ளோ நேரம் எடுத்துப்பீங்க…. எங்க வேலையைப் பார்க்க வேணாமா?” என்றார் ஃபோட்டாக்காரர் நம் கதைநாயகனின் சரித்திரம், செல்வாக்கெல்லாம் அறியாதவராய்
அவமானம் பிடுங்கிக் தின்றது மாமாவிற்கு. அந்நபர் அதிகாரத்தோடு பேசியதோடு… எல்லோர் முன்னிலையில் பெரியவரே என்று அழைத்ததும்… அவரை மூர்க்கமாக்கியது.
விடுவிடுவென்று மணவறை விட்டு கீழே இறங்கியவர் அந்த போட்டாக்காரரிடம் சென்றார்
“தம்பி நான் யார் தெரியுமா? நீ பாட்டுக்கு உருட்டுற? ஆளு யாரு எவருனு தெரிஞ்சு பேசு. வேற ஊர்ல தொழில் பண்ண வேணாமா. உன்னை சொல்லி தப்பில்ல, மரியாதை தெரியாத உன்னெல்லாம் போட்டோ எடுக்க விட்டானே அவனப் பிடிக்கறேன்”
“குமரேசா” தனது சம்பந்தியிடம் தீவிரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தவரின் காதுகளில் புயலாய் அடித்தது மாமா குரல்
எந்த வில்லங்கத்தை முதலில் சமாளிப்பது என்ற குழப்பத்தில்… இருவரில் தெரிந்த பிசாசை எதிர் கொள்வது என்று இவரிடம் வந்தார்.
“என்ன மாமா, இன்னும் சாப்பிடப் போகலியா?”
“அதெல்லாம் இருக்கட்டும், நான் தான் நமக்கு தெரிஞ்ச நல்ல புள்ளைங்கள சொல்லியிருக்கேன்ல. எங்க இருந்து இவனப் புடிச்ச? மரியாதைத் தெரியாதப் பையனா இருக்கிறான். என் மரியாதையக் கெடுத்துக்கிறதுக்கா உன் வீட்டு கல்யாணத்துக்கு வந்தேன்”
சம்பந்தி இவருடன் சேர்ந்துக் கொண்டார். “அதே தாங்க நானும் சொல்றேன். நிச்சயதார்த்தத்துல நான் சொன்ன விஷயத்துக்கெல்லாம் தலய தலய ஆட்டிட்டு, நேத்தும் இன்னிக்கும் நடக்கிற ஏற்பாடெல்லாம் தலை கீழால்ல இருக்குது”
மாமா அத்துடன் விடவில்லை. மணமேடையைப் பார்வையிட்டபடி, “என்ன குமரேசா, மணமேடை அலங்காரம் சரியில்லயே. நம்ம சின்னராசு கைவண்ணம் எனக்குத் தெரியுமே. அவன விட்டுட்டு ஏன் வேற ஆளப் புடிச்ச? பார்வையாவேயில்ல”
பேச்சு எங்கெங்கோ திசைத் திரும்புவதை அறிந்த சிற்றப்பா, “சம்பந்தி அங்க பாருங்க உங்க வீட்ல தேடறாங்கப் போல, உங்க ஜனங்க எல்லாம் பந்திக்குப் போயிட்டாங்களானுப் பாருங்க” என்றதும் அவர் நகர்ந்தார்
“மாமா… ஏதோ தெரியாம இந்தாளுங்கள வச்சிட்டேன். வாங்க சாப்பிடலாம் தம்பி, நீங்களும் போய் சாப்பிடுங்கப்பா”
சிற்றப்பாவுக்கு எப்படி முத்து மாமாவை சமாளிப்பதென்றேப் புரியவில்லை.. சாப்பாடுக் கூடத்திற்குச் சென்றதும் மாமா உட்காரும் இடத்தைத் தேடினார். நடுவரிசையைப் பிடித்தார் எங்களுக்கும் சேர்த்து
இலையில் ஏற்கனவே உணவுப் பரிமாறப்பட்டிருந்தது. உடனே மாமாவிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
“ஏம்ப்பா, ஆளு வந்தப்பிறகுப் பரிமாறக் கூடாதா? அப்படி என்ன அவசரம்? அன்னத்தைக் காக்க வைக்கலாமா? ஒருத்தருக்குப் பத்துப் பேர் இருக்கீங்க… பொறுமையாத் தான் பரிமாறினா என்ன?”
பிறகு இலையை நோட்டமிட்டார். இனிப்பு இருக்க வேண்டிய இடத்தில் கேசரிப் போன்று ஒரு வகை இருந்தது. எங்களுக்கு எல்லாம் பிடித்திருந்தது
“தம்பி, இங்க வாப்பா… என்ன இது?” என்று பரிமாறுபவரைக் கேட்டார்
“இதுங்களா… பைனாப்பிள் புட்டிங், பழக் கேசரி. இதாங்க இப்ப எல்லாக் கல்யாணத்திலேயும் பேமஸ்”
“சமையல் காண்ட்ராக்ட் யாரு?” கேட்டார் முத்து மாமா
“நம்ம நல்லகண்ணு அண்ணன் தாங்க” பதில் சொல்லியபடி பரிமாறுபவர் நகர, அதிருப்தியுடன் சாப்பிடத் தொடங்கிய மாமாவின் கண்களில் தென்பட்ட குமரேசன், பந்தி விசாரிக்கும் சம்பிரதாயத்துடன் அங்கு வந்தார்
அச்சமயம் பார்த்தா சம்பந்தியும் வர வேண்டும். எங்கள் எதிரில் தான் மாப்பிள்ளை வீட்டார் அமர்ந்தனர்
“தம்பி, மாமாவிற்கு இட்லி வை, சாம்பார் போடு” பேச்சில் இனிமைக் கூட்டினார் சிற்றப்பா
“உன் கவனிப்பு அப்புறம் இருக்கட்டும். ஏம்ப்பா, கல்யாணத்துக்கு ஸ்வீட்டு போடும் போது நம்மப் பக்கத்து வழக்கம் லட்டு, மக்கன்பேடா தானே. அத விட்டுட்டு என்னது இது கேசரி மாதிரி… வாயில வெக்க முடியல”
உண்மையிலேயே மிக அருமையாக இருந்தது அந்த பழ புட்டிங். ஒரே மாதிரியான இனிப்புகளை சாப்பிட்ட நாவிற்கு, டூட்டிஃப்ரூட்டி, பூசணிவிதை, செர்ரி, சேர்த்த அந்த இனிப்பு, புதுச்சுவை தந்தது
எதிரில் அமர்ந்திருந்த சம்பந்தி, தம் பங்கிற்கு தன் ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
“நேத்து வரவேற்புக்கு நீங்க வரவில்ல இல்லே, ரசகுல்லா போட்டாங்க. மத்த எல்லாமே நம்ம பக்கத்து சாப்பாடா இல்ல. நம்ம ஊரு சனத்துக்குப் பிடிச்ச மாதிரியே இல்ல. யாரும் வாயைத் திறக்கலியேத் தவிர, ஒருத்தரும் திருப்தியா சாப்பிடல” என அவர் அங்கலாய்த்ததும், மீண்டும் மாமா ஆரம்பித்தார்
“இட்லி வடை பொங்கல் தான் காலைல முகூர்த்தத்துக்குப் போடுவாங்க. பொங்கலுக்குள் பதிலா இடியாப்பம் போட்டிருக்கு. வடகறி இருந்தாலாவது நல்லாருந்திருக்கும். கடலக்குழம்புப் போடறான் (சென்னாவைத் தான் அவ்வாறுக் கூறுகிறார்). நம்ம சாம்பமூர்த்தியத் தான சமையலுக்குப் புக் பண்ணச் சொன்னேன். ஏன் வேறாளப் போட்ட?”
“இல்ல மாமா, பொண்ணும் பையனும் சென்னையில தானப் படிச்சாங்க. அவங்க சிநேகிதங்க, கூட வேலைப் பார்க்கிறவங்கல்லாம் வர்ரதால இந்த மாதிரி மெனு வேணும்னு முன்னமே சொன்னாங்க. ஃபோட்டாக்காரத் தம்பி, சமையல் எல்லாமே அவங்க ஏற்பாடு தான். சம்பந்திக்கு மாப்ள எல்லாத்தயும் சொல்லி இருப்பாருன்னு நினைச்சேன்”
பிள்ளையை விட்டுக் கொடுக்க முடியாமல் திருதிருவென விழித்த சம்பந்தியும், “என்ன செய்றது, இந்த காலத்துப் பசங்க போக்குல நாமப் போக வேண்டியிருக்கு. சரி சம்பந்தி, மறுவுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணிட்டீங்களா? சொந்தக்காரங்க கிளம்பிடப் போறாங்க”
“இதோ பந்தியெல்லாம் முடிஞ்சதும் ஆரம்பிக்க வேண்டியது தான்.”
அவர்கள் இருவரும் நழுவிக் கொள்ள, ஒருவழியாக மாமாவும் கை கழுவ எழுந்தார். அதோடு பேச்சும் முடிந்தது.
இப்படித் தான் எந்த விசேஷத்திற்கு சென்றாலும், மாமா தமது இருப்பைக் காட்டவே, ஏதாவது வம்பை ஆரம்பிப்பார். பின் அவரே சமாதானத் தூதுவராகி பஞ்சாயத்தை முடித்து வைப்பார்.
இதுவரை, எங்கள் நினைவு தெரிந்து, ஒரு முப்பது நிகழ்வுகளுக்காவதுப் போய் இருப்போம். முதலில் அவர் சுபாவம் தெரியவில்லை. ஆனால் அவரை நன்குப் புரிந்துக் கொண்டோம் பின், அவர் விசேஷங்களுக்கு வருகைப் தரும் போது நாங்கள் எங்களுக்குள் கூறிக் கொள்வது வந்துட்டான்யா வந்துட்டான்யா
இது எங்கள் குரல் மட்டுமல்ல., அந்த விசேஷத்திற்கு அழைத்தவர்கள் (ஏன் தான் அழைத்தோம்?), வருகைப் புரிந்த மற்ற உறவினர்கள் (மனுஷனா இவன்…. குறை சொல்றதுக்கே வருவான் போல), பணியாளர்கள் (இவன் திருந்தவே மாட்டானா?) இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுவது தெரிந்தும், மனிதர் தம் நக்கீரன் பணியை செவ்வனே செய்து வருகிறார்.
இதோ ஆறு மாதங்கள் கடந்து விட்டன. ஆனால் கடந்த மூன்று மாதமாக மாமாவின் வரவு முற்றிலுமாக தென்படவில்லை. திடீரென்று நேற்று மனிதர் தனது மகளின் திருமணப் பத்திரிக்கையோடு வீட்டிற்கு வந்தார்.
அது தான் விஷயமா? கல்யாணப் பிஸியில் தான் மாமா சமீபகாலமாக தம் தொல்லை வரவை நிறுத்திக் கொண்டார் போலும்
மூன்று மாதத்தில்… அவரவர் வீட்டு விசேஷங்களில் இவர் கால் படாததால் மகிழ்ந்தவர் எண்ணிக்கை… விரைவில் கணக்கெடுக்கப்படும்.
இதோ கிளம்பி விட்டோம், திருமணத்திற்கு மிகுந்த ஆர்வத்துடன். உனக்கேன் இந்த ஆர்வம்?
எங்களுக்கு மட்டுமா? பலருக்கும். என்ன பட்டியல் நீளும்.. அவரால் நேரடியாகவும் (அழைத்து பெருந் தவறிழைத்தோர்), மறைமுகமாகவும் (அவரால் பணிவாய்ப்புப் பறிக்கப்பட்டவர்கள், கான்ட்ராக்ட் இழந்தவர்கள்) பாதிக்கப்பட்டவர்கள்…. எங்களைப் போல் ( அவர் செய்கைகள், மிரட்டல்தொனி, இடக்குமடக்குக் கேள்விகள் தரும் டைம்பாஸுக்காக) என்று அனைவருமே படையெடுத்தோம்.
திருமணத்திற்கு வந்தக் கூட்டம் மனிதரை மிரள வைக்குமா? சமாளிப்பாரா? இல்லை சவாலை ஏற்பாரா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
முதலில் எப்படி எங்களை எல்லாம் வரவேற்கிறார் என்று பார்ப்போம். கண்களை உருட்டி… கம்பீர நடை நடந்து வரும் அஞ்சாசிங்க மகராஜன், இடுப்பில் துண்டுக்கட்டி, மிகுந்த பவ்யத்துடன் மிக விழைவுடன், அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்
எப்போதும் விடைத்த மார்போடு, வெற்றிப் புன்னகையுடன் (எல்லோரையும் கேள்வியாலேயேக் கட்டிப் போட்ட மமதைத் தந்தது) வலம் வரும் மனிதர், முதுகு முன் வளைய (அவ்வளவு பணிவாம்) ஏதோ இராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பவர் போல இயந்திர மனிதனாய் உலாவி வந்தார்
பொறியில் சிக்கிய எலி போல் இருந்த அவரது மருள் பார்வை எங்களுக்குப் புதியது. அவர் மற்ற வீட்டு திருமண விசேஷங்களில் சுட்டிக் காட்டியக் குறைகள் அத்தனையும், அவர் இப்போது ஏற்பாடு செய்திருக்கும் இந்த திருமண நிகழ்வுகளில் நிறைந்து இருந்தது.
வருவோரை வரவேற்க சந்தனம், கற்கண்டு, பன்னீர், ரோஜாக்கள் எல்லாம் இருந்தன. ஆனால் ஆள் தான் எவரும் இல்லை. மாப்பிள்ளையின் தந்தை கோபத்துடன் வந்தார்.
“என்ன முத்து, வர்றவங்கள கூப்பிடக் கூட ஆளில்லை. நான் தான் நிக்கணும் போல”
“மன்னிச்சுக்குங்க சம்பந்தி, எல்லாப் பொண்ணுங்களும் மேக்கப் பண்ணிட்டு வர்ரேன்னு சொன்னாங்க. இன்னும் காணல, இதோ நான் போய் அனுப்பறேன்”
முத்துமாமாவை பேரிட்டு அழைக்கும் இவரை எங்கேப் பிடித்தார்? விசாரிப்போம்
சென்னையில் எம்.என்.ஸி. நிறுவனத்தில் பணிபுரியும் முத்துமாமாவின் மகள் நித்யா, தன்னுடன் பணிபுரியும் ஸ்நேகனை விரும்ப, தொழிலதிபரான அவனது தந்தை பல ஒப்பந்தங்களுக்குப் பிறகு சம்மதம் தெரிவிக்க, இதோ அரங்கேறுகிறது திருமணம்.
ஓ அதனால் தான் இவ்வளவு பவ்யமா?
இது போன்ற பல குளறுபடிகளை, சம்பந்தி தேடித் தேடி கண்டறிந்துக் குறை கூற, முத்து மாமா சமாளிப்புத் திலகமாக (எங்கேயோ கேட்ட குரல்…. இப்பட்டத்தை ஏற்கனவே சுமந்த குமரேசன் சிற்றப்பா இந்த கண்கொள்ளாக் காட்சியை கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தையும் காதில் போட்டுக் கொள்ளவும்) எல்லா விஷயங்களையும் சரி செய்வதிலேயே சோர்வானார்.
ஆனால் எங்களால் முடிந்த அளவிற்கு அவரது சமாளிப்பில் எல்லாம் எங்கள் பங்களிப்பை அளித்தோம். இருந்தும் சம்பந்தியின் கோபத்திற்கு ஈடுக் கொடுக்க முடியவில்லை.
ஆனால், உறவினர் திருமணங்களில் சவுண்ட் பாராட்டியாக வலம் வந்த முத்து மாமா, இப்படி வாய்மூடி சாதுவாக இருக்க வைத்த அவரது தந்தை ஸ்தானம், மகள் மேல், அவள் நல்வாழ்வின் மேல் அவர் கொண்டப் பாசத்தையே உணர்த்தியது
பின் சீட்டில் அவரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்க, நடந்த (தமது வீட்டு விசேஷங்களில்) நிகழ்வுகளையெல்லாம் ரீவைண்ட செய்துப் பார்த்து கேள்விகளை எல்லாம் தயார் செய்து வைத்திருந்த,….. அவரால் பாதிக்கப்பட்ட சமூகமெல்லாம், இப்போது அவர் நிலைப் பார்த்து பரிதாபப்பட்டதோடு, அவரை உயர்வாக வைத்து மதிப்பீடு செய்தது
வயதில் மூத்த (ஒன்றும் அதிகமில்லை… 90 தான்) மாடசாமி தாத்தா குரல் கம்ம தழுதழுத்தார்
“ஆனானப்பட்ட விசுவாமித்திரனே, தான் பொண்ணு சகுந்தல துஷ்யந்தனோட சேர்ந்து வாழறதுக்காக, தேவாதி தேவர்களையே துதிபாடாத வணங்கா முடியா இருந்தவரு, வசிஷ்டர் ஆசிரமத்துக் குடிலுக்குள்ள நுழைய தலை குனிஞ்சுப் போனாரு. வேற நேரமா இருந்தா, வசிஷ்டர இல்ல வெளியே வர வச்சிருப்பாரு. அந்த நிலம தான் நம்ம முத்து நிலமயும், பாசத்துக்காக பணிஞ்சுப் போறதுத் தப்பில்ல”
பெரியவர் சொல்வதும் சரி தான். மூத்தோர் சொல்வார்த்தை அமிழ்தம் அல்லவா. அடங்கியவன் எவனும் குறைந்துப் போவதில்லை. பொறுத்தவன் தான் பூமியாள்வான்
வந்திருந்த முத்து மாமாவின் ஒட்டு மொத்த உறவுக்கும் தோன்றியதும் இப்படித் தான். திருமணமும் இனிதே நடந்தது.
இந்நிகழ்வு நடந்து சில நாட்கள் கழித்து உறவினரின் திருமண வரவேற்பில் நாங்கள். முன்புக் குறிப்பிட்ட அதேப் பாணியில் முன் வரிசையில் அமரந்தாலும் பார்வை வாசலை நோக்கி
இதோ வந்துவிட்டார் எங்கள் கம்பீர நாயகன். குறை மட்டுமேக் கண்ட கண்களில் மாற்றம். அலைபாய்ந்தக் கண்கள் சாந்தத்தைப் பொழிந்தன. மாற்றம் புரிந்தது. மனதார இரு வீட்டாருக்கும் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு திருமணம் இனிது நிறைவேற துணை நின்றார்.
இப்போதும் நாங்கள் கூறுவோம், கிண்டலுக்காக அல்ல… பெருமையாக! வந்துட்டான்யா… வந்துட்டான்யா!!! எல்லோரின் நலம் விரும்பியாக… (மரியாதை நிமித்தம் வந்துட்டார்யா…வந்துட்டார்யா!!)
(முற்றும்)
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings