in ,

புன்னகை (சிறுகதை) – ✍ பா. பிரீத்தி, மதுரை

புன்னகை (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 121)

வீட்டிற்கு அருகிலுள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சிகளை முடித்து விட்டு, சற்று நேரம் ஓய்வெடுக்க அங்குள்ள பலகையில் அமர்ந்தான் செல்வன். அப்போது நெஞ்சோரத்தில் கடந்த கால நிகழ்வுகள் நினைவுகளாக துளிர் விட ஆரம்பித்தது. 

செல்வனுக்கு பத்து வயது இருக்கும் போது அவனின் தந்தை இறந்து விட்டார். சொந்த வீடு ஏலத்துக்கு போனது. ஊருக்கு ஒதுக்கு புறமாக ஒரு குடிசை போட்டு, மாத்து துணி கூட இல்லாமல், ஒரு வேளை சோறு சாப்பிட கூட இல்லாமல் ரெம்பவே கஷ்டப்பட்டனர்

சொந்தம் பந்தம் என்று யாரும் உதவி செய்யவில்லை. எல்லோரும் கேலி, கிண்டலாக பேசினர். சொந்தம் என்று சொல்லி வீட்டுக்கு வந்தா பண உதவி கேட்டு விடுவார்களோ என்று யாரும் வீட்டுக்கு கூட வருவதும் இல்லை. 

உதவி எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், சொந்தம் என்று நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் செல்வனின் அத்தை குடும்பத்தினர் மட்டும் வருவதுண்டு

செல்வன் பள்ளி சென்று தன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் வயதில் குடும்ப பாரத்தை சுமக்கும் கட்டாயம் ஏற்பட்டது. காரணம், வீட்டுக்கு மூத்த மகன், தம்பி ஒருவன் வேறு. வீட்டை விற்றும் அப்பா வாங்கிய கடன் முழுமையாக தீரவில்லை. 

அம்மா வேலைக்கு சென்று கொண்டு வரும் பணம் போதுமானதாக இல்லை. செல்வன் அப்போது இரண்டு முடிவுகள் எடுத்தான். ஒன்று வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் கடன் வாங்க கூடாது என்றும், மற்றொன்று, அம்மாவுக்கு உதவியாக இவன் வேலைக்கு போக வேண்டும் என்பதே. 

பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலைக்கு சென்றான். காலையில் ஐந்து மணிக்கே வேலைக்கு கிளம்பிடுவான். செய்தித்தாள் போடுவது,பால் பாக்கெட் போடுவது.பூ விற்க போவது. காலையில் சாப்பிட மாட்டான்

பள்ளியில் போடும் மதிய உணவு தான், அதிலும் கொஞ்சம் எடுத்து வைத்து இரவு சாப்பிடுவான்.தம்பியும் அப்படி தான். பள்ளி முடிந்ததும் மீண்டும் பூ விற்க போவான்.இரவு ரோட்டோரத்தில் உள்ள கடையில் வேலைக்கு போவான்

அவனின் அம்மா மில் வேலைக்கு போனார். தம்பியை எந்த ஒரு வேலைக்கு அனுப்பவில்லை. வரும் வருமானத்தை சிக்கனமாக பயன்படுத்தினர். அதுமட்டுமின்றி எப்பேர்ப்பட்ட கஷ்டத்திலும் தன் படிப்பை விடவில்லை. 

தம்பியை படிக்க வைக்கவும் தவறவில்லை. அதனாலே இன்று கடன் இல்லாமல், சொந்தமாக வீடு கட்டி, தம்பியையும் டாக்டருக்கு படிக்க வைத்து, கேலி கிண்டல் செய்தவர்கள் முன்னே தலை நிமிர்ந்து வாழ்கின்றனர். 

இதனை எண்ணியபடி கடந்த காலத்தில் முழ்கினான், செல்வன். கைபேசி ஒலித்தது, தென்றல் மெல்ல அவனை வருடி, கனவில் இருந்து நிஜத்திற்கு வரவழைத்து, கைபேசியை எடுத்தான். 

“அம்மா, சொல்லுங்க அம்மா” என்றான். 

“என்னப்பா இன்னும் கிளம்பலயா, சீக்கிரம் வாப்பா, பொண்ணு பார்க்க போகனும்”

“இதோ கிளம்பிட்டேன் அம்மா, வந்துடுவேன். நீங்க எல்லோரும் கிளம்பிட்டிங்களா?”

“ம்ம்ம்… நீ வந்து கிளம்புனதும் கிளம்ப வேண்டியது தான்”

“ம்ம்ம்” என்று கைபேசியை அனைத்து விட்டு, வீட்டுக்கு கிளம்பினான். 

பெண் பார்க்க சென்றனர். வழக்கம் போல் பெண்ணின் கையில் தேனீர் கொடுத்து அனுப்பினர், அனைவரும் எடுத்து குடித்துக் கொண்டு, அவர்களுக்குள் பேசினர்.

கூட்டத்தில் ஒருவர் “நம்மளே பேசிட்டு இருந்தா எப்படி, பொண்ணும் மாப்பிள்ளையும் பேசட்டும்” என்றார்

இருவரும் மொட்டை மாடிக்கு சென்று அரை மணி நேரத்திற்கு மேல் பேசி கொண்டிருந்தனர் பின்பு வந்தனர். 

“என்ன செல்வா பொண்ண பிடிச்சிருக்கா?” என்று செல்வனின் அம்மா கேட்டாள். 

“புடிக்காமலா அரை மணி நேரம் பேசிட்டு இருந்தாங்க” என்றார் பொண்ணின் மாமா. 

“அப்ப அடுத்த பேச்சு வார்த்தை பேச வேண்டியது தான்” என்றதும்

உடனே ஐயர், “வரும் ஞாயிறு நிச்சயதார்த்தம் வைச்சுகோங்க, அடுத்த மாதமே நல்ல மூகூர்த்தம் இருக்கு, அப்ப கல்யாணத்தை வைச்சுகோங்க” என்றார். அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். 

“என்ன யாமினி உனக்கு ஓ.கே தான? அப்பறம் என்ன எதுவும் கேட்கலைனு சொல்ல கூடாது” என்றார் பொண்ணின் மாமா. வெட்கத்தில் தலை குனிந்து நின்றாள், யாமினி. 

“சரி, அப்பிடியே வரதட்சணை என்னா ஏதுன்னு பேசிட்டா நல்லது” என்றார் செல்வனின் உறவினர் 

உடனே, “வரதட்சணை எதுவும் வேண்டாம்” என்றான் செல்வன் 

“அதெப்படி வரதட்சணை எதுவும் வாங்காமல், உனக்கு எதுவும் தெரியாது, சும்மா இரு” என்றார் உறவினர்

“ஆமா செல்வா, நீ நல்லா படிச்சிருக்க, நல்ல வேலையில் இருக்க, கை நிறைய சம்பளம் வாங்குற, அப்ப வரதட்சணை வாங்குனா தான நமக்கும் கௌரவமா இருக்கும்” என்றாள் செல்வனின் அம்மா

“அது இல்ல அம்மா, வரதட்சணை எல்லாம் எதுக்கு?”

“நீ ஏம்பா வரதட்சணைனு நினைக்கிற, அது கல்யாணத்துக்கு அவுங்க தர அன்பளிப்பா நினைச்சிக்கோ” என்றாள் அம்மா

“ஆமா தம்பி, உங்களுக்கு என்ன செய்யனும்னு சொல்லுங்க. சிறப்பா செஞ்சிருவோம்” என்றார் யாமினி அப்பா. 

செல்வன் எதுவும் பேசவில்லை. அவர்களுக்குள்ளே நூறு பவுன் நகை, கார், கல்யாண செலவு என பேசி முடிவு செய்தனர். பின்பு எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினர். 

நிச்சயதார்த்தம் பெரிய மண்டபம் பிடித்து வெகு சிறப்பாக நடந்தது. 

மருமகளுக்கு மாமியார் புடவையும், நகையும் வாங்கி கொடுத்தார். செல்வனும் வருங்கால மனைவிக்கு கைபேசியை பரிசளித்தான். நிச்சயதார்த்தம் அனைவரும் மகிழும் வண்ணம் சிறப்பாக நடந்து முடிந்தது. 

செல்வாவும் யாமினியும் கைபேசியில் பேசி கொள்வது, திருமணத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கும் போது சந்தித்து பேசி கொள்வது என இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்புணர்வு இருந்தது

ஊரே ஆச்சரியப்படும் அளவிற்குப் திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டு இருந்தனர். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, கல்யாணத்துக்கு முதல் நாளே வந்தனர்

கை, கால்களில் மருதாணி வைக்க, முறைமைகார ஆண்களும் பெண்களும் கேலி செய்வது, ஆட்டம் பாட்டம் என இரவு மகிழ்ச்சியாக இருந்தது

மறுநாள் விடிந்தது, மண்டபத்தில் உறவினர்களை வரவேற்பதும், நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்தவர்கள் ஒன்று கூடி பேசி சிரிப்பதும், அரட்டை அடிப்பதும், சமையல் வேலை கவனிப்பது, ஐயர் கேட்கும் பொருட்களை எடுத்து கொடுப்பது, பெண் அலங்காரம், மாப்பிள்ளை  அழைப்பு, ஆரத்தி எடுப்பது, சாமி கும்பிடுவது, மற்ற சடங்கு, சம்பர்தாயம்  செய்வது என கலகலப்பும் பரபரப்பும் இரண்டும் இணைந்து காணப்பட்டது. 

செல்வன் மேடையில் வந்து அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை புரிந்தும் புரியாத படியும் உச்சரித்து கொண்டு இருந்தான். மூகூர்த்த நேரம் நெருங்கியது

ஐயர் வழக்கம் போல், “மூகூர்த்ததுக்கு நேரம் ஆச்சு பொண்ண அழைச்சிட்டு வாங்க” என்றார். யாமினி மேடையை நோக்கி வந்தாள். 

அனைவருக்கும் ஆசிர்வாதம் செய்வதற்கு அட்சதை கொடுக்கப்பட்டது. யாமினியை மேடையில் அமர சொன்னதும், மாலையை கழற்றி விட்டு, “எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை” என்றாள்

அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். செல்வன் எழுந்து மாலையை கழற்றினான். 

யாமினியின் அம்மா அப்பா “என்ன சொல்றே, உன்ன கேட்டு தான எல்லா ஏற்பாடு பண்ணோம்” என்றனர்

“எனக்கு செல்வாவ பிடிக்கல” என்று சாதாரணமாக சொன்னாள். 

உடனே மேடை ஏறி வந்த செல்வனின் அம்மா, “என்னம்மா இப்படி சொல்ற? அன்னிக்கு கேட்டதுக்கு பிடிச்சிருக்குனு சொன்ன” என்றார்

“இப்ப எனக்கு பிடிக்கலை. கடையில் ஒரு பொருள் வாங்குனாலே பிடிக்கலைனா போய் மாத்திகிறோம். நான் நூறு பவுன் நகை, கார், பணம் கொடுத்து உங்க மகனை கல்யாணம் பண்றேன், எனக்கு பிடிக்கலைனு சொல்ல உரிமையில்லையா” என்றாள் யாமினி

“அத நீ முதல்லே சொல்லி இருக்கனும், இப்படி எல்லாரையும் வர வச்சு எங்கள அசிங்கப்படுத்துறியே. என் மகனோட மனசு எப்படி எல்லாம் கஷ்டபடும், நீ எல்லாம் ஒரு பொண்ணா” என்று கோவபட்டார். 

“உங்க பையன் என்ன புடிச்சிருக்கு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று சொல்லும் போது உங்க கெளரவம் தான் பெருசுனு சொன்னீங்க. ஒருவேளை நீங்க கேட்ட வரதட்சணை எல்லாம் எங்க அப்பாவால் கொடுக்க முடியலைனு சொன்னா. என் பையனுக்கு பிடிச்சி இருக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி இருப்பிங்களா?” என்றாள் யாமினி

“என்னடி இதெல்லாம், அப்பவே நீ சொல்லி இருக்க வேண்டியது தானே” என்றார் யாமினி அம்மா

“அப்பவே சொல்லி இருந்தா இவுங்களுக்கு புரிஞ்சி இருக்காது. சொல்ல வேண்டிய இடத்துல, சொல்ல வேண்டிய நேரத்துல சொன்னாதா புரியும் அம்மா” என்றாள் யாமினி

செல்வனின் அம்மா, ”தப்புதா, நான் செஞ்சது பெரிய தப்புதா என் புள்ளைக்கு உன்னையே கட்டி வைக்கனும்னு நினைச்சது பெரிய தப்பு தாம்மா” என்றார். 

“இப்ப கவலைபட்டு என்ன அத்தை பண்றது, உங்க பையன் கல்யாணம் நின்றது நின்றது தான்” என்று கிண்டலாக சொன்னாள் யாமினி. 

“என்ன அத்தைனு சொல்லாத, உனக்கு தான் கல்யாணம் நடக்காது. என் மகனுக்கு இப்பவே கல்யாணம் பண்றேன் பார்” என்றார்.

“ஐய்யோ, இவ்வளவு வரதட்சணை கொடுத்து உடனே கல்யாணம் முடியுமா?” என்றாள் யாமினி

“என் மதினியா மகள் துர்க்காக்கும் செல்வாக்கும் இப்ப கல்யாணம் பண்ணி காட்டுறேன்” என்றார்

“அப்ப வரதட்சணை எதுவும் வேண்டாமா?” என்றாள் யாமினி

“வரதட்சணை வாங்கி உன்னை மாதிரி திமிரு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்றதுக்கு, என் மதினியா மகளா கல்யாணம் பண்ணி வைக்கிறது நல்லது. வரதட்சணையும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம்” என்று சொல்லி விட்டு செல்வத்தின் அத்தையிடம் சென்று, “முதல்லே நான் துர்க்காவை பொண்ணு கேட்டு இருக்கனும், இப்ப தான் எனக்கு புத்தி வந்தது. உங்க மகளை என் மகனுக்கு இப்பவே கல்யாணம் பண்ணி கொடுங்க” என்று கண்ணீர் விட்டு கேட்டார். 

“நீங்க அழுகாதீங்க, என் மகளை செல்வானுக்கு திருமணம் செய்து கொடுக்கிறேன் என்றார் செல்வத்தின் அத்தை, சூழ்நிலையை புரிந்து கொண்டு. 

கலகலப்பில் ஆரம்பித்த கல்யாணம், இடையில் கலவரமாகி முடிவில் கல்யாணம் ஒரு வழியாக முடிந்தது. செல்வத்துக்கும் துர்க்காக்கும் மற்ற சடங்குகள் எல்லாம் முடிந்து, ஒரு வாரத்திற்கு பிறகு இருவரும் இணைந்து கோவிலுக்கு சென்றனர்

அங்கு சாமி கும்பிட்ட பிறகு இருவரும் பிரகாரத்தை சுற்றி வந்து ஓர் இடத்தில் அமர்ந்தனர். 

அப்போது துர்க்கா செல்வத்திடம்,“மாமா நான் உங்ககிட்ட ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?” என்றாள் துர்க்கா

“அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டேன் கேளு” என்றான். 

“அது வந்து மாமா, என்னையே புடிச்சி கல்யாணம் பண்ணிகிட்டீங்களா? இல்ல யாமினி வேனானு சொன்னதுக்காக பண்ணிக்கிட்டீங்களா?” என்றாள்

துர்க்கா கேட்பதை கவனிக்காமல் செல்வா அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். ‘என்னத்தை அப்படி பார்க்குறாரு’ என்று பார்த்தால், யாமினி நின்று கொண்டு இருந்தாள். 

துர்க்காவிற்கு கோவம் வந்தது. நேராக யாமினி இவர்களை நோக்கி வந்தாள். வந்து செல்வத்திடம், “என்ன மாப்பிள்ளை சார். எப்படி இருக்கீங்க? திருமண வாழ்க்கை எப்படி போகுது” என்று கேட்டாள்

“எனக்கு என்ன, சந்தோஷமா இருக்கேன்” என்று சிரித்தபடி சொன்னான் செல்வன்

“ம்ம்ம்… ரெண்டு பேரும் ஜோடியா சுத்தும் போதே தெரியுது” என்று கிண்டல் செய்தாள் யாமினி. 

இருவரும் பேசுவது புரியாமல் இருந்தாள் துர்க்கா

“என்ன துர்க்கா ஏன் அப்படி பாக்குறீங்க? நீங்க பார்க்குறத பாத்தா செல்வா இன்னும் உங்ககிட்ட நடந்த எதையும் சொல்லலை போல இருக்கே” என்றாள் யாமினி

செல்வன் சிரித்தபடி “இல்லை” என்று தலையாட்டினான்

உடனே யாமினி, “கல்யாணத்துல நடந்தது எல்லாம் எங்களோட திட்டம் தான்” என்றாள்

“திட்டமா?” என்று அதிர்ச்சி அடைந்தாள் துர்க்கா. நடந்த அனைத்தையும் கூறினாள் யாமினி

“என்னை பொண்ணு பார்க்க வரும் போதே உன் மாமா என்கிட்ட உன்ன காதலிக்கிறே விசயத்தை சொல்லி, அவுங்க அம்மா வரதட்சணைக்காக வேற பொண்ணுங்களை பார்க்குறாங்க, நீங்க என்னையே பிடிக்கலைனு சொல்லிருங்கனு சொன்னார்.

அப்ப நீங்களே சொல்ல வேண்டியது தானே என்றேன். அதுக்கு,  நான் சொன்னா கேட்க மாட்டாங்க அதா ஒவ்வொரு இடத்தையும் நானே தட்டி கழிக்கிறேன். அப்படியாவது என் துர்க்காவை எனக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களே என்றார்

அதா ஒரு திட்டம் தீட்டி கல்யாணம் வரை பொறுமையாக இருந்து கல்யாணத்தப்ப அப்படி ஒரு குண்ட தூக்கி போட்டோம்” என யாமினி கூறி முடிக்க

“எனக்காக நீங்க இவ்வளவு பெரிய உதவி பண்ணி இருக்கீங்க, உங்கள வாழ்க்கையில் மறக்க மாட்டேங்க” என்றான், செல்வன்.

“பரவாயில்லை, இதெல்லாம் ஒரு விசயமா?” என்று சாதாரணமாக சொன்னாள் யாமினி

“ஆமா, உங்க வீட்டுல எதுவும் சொல்லலையா?” 

“அதெப்படி எதுவும் சொல்லாம இருப்பாங்க துர்க்கா, ரெம்ப கோவபட்டு தாம்தூம்னு கத்துனாங்க”

“ஐய்யோ அப்பறம் என்ன ஆச்சு” என்று பதட்டத்துடன் கேட்டான் செல்வன். 

“நீங்க ஏன் இப்படி பதட்டப்படுறீங்க, அவங்ககிட்ட சில பல உண்மைகளை சொன்னேன், கோபம் குறைஞ்சிடுச்சி” என்றாள் யாமினி

“அப்படி என்ன சில பல உண்மைகள்” “உங்க காதலை வீட்டுலை சொன்னேன், கோவபட்டாங்க. எங்க காதலையும் சொன்னேன், ஓ.கே சொல்லிட்டாங்க, என்று சொல்லி வெட்கத்தில் தலைகுனிந்தாள் யாமினி. 

“நீங்க காதலிக்கிறீங்களா? யாருங்க?” என்றாள் துர்க்கா

“செல்வனின் தம்பி சிவா தான்” என்று சொன்னாள் யாமினி

“பார்றா… ஒன்னும் தெரியாதவன் போல் இருந்து கொண்டு என்ன வேலை பார்த்து இருக்கான்” என்றான் செல்வன்

“என்ன நீங்களே இப்படி சொல்றீங்க, அத்தைகிட்ட சொல்லி எங்க கல்யாணத்தையே நீங்க ரெண்டு பேரும் தா நடத்தனும்” என்றாள் யாமினி

“நாங்களா? அதுவும் அம்மாகிட்ட வேற சொல்லியா? ஓ.கே .ஓ.கே என்று இழுத்தான்” செல்வன்.  

“நீங்க தாங்க அத சொல்லி தான் எங்க அம்மா, அப்பாவை சமாதானம் செஞ்சேன்” என்றாள் யாமினி.

“நீங்க பதட்டபடாதீங்க, சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். நாங்க நடத்தி வைக்கிறோம். உங்க ரெண்டு பேர் கல்யாணத்தையும். நீங்க எங்க வீட்டுக்கு தான் மருமகளா வரனும்னு ஆண்டவன் முடிவு பண்ணிட்டான். அத மாத்தவா முடியும்” என்றான் செல்வன்

“ம்ம்ம்… சரிங்க நேரமாச்சு, நான் கிளம்புறேன்” என்று சொல்லி விட்டு போனாள் யாமினி

யாமினி போனதும் துர்க்கா செல்வனிடம், “எனக்காக இவ்வளவு பண்ணி இருக்கீங்க, என்னை அவ்வளவு பிடிக்குமா மாமா?”

முகத்தில் புன்னகையுடன், “நாங்க கஷ்டபட்ட போது நீங்க தான் எங்களுக்கு ஆறுதலா இருந்தீங்க, நாளைக்கே எங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் நீங்க தான் முன்னாடி வருவிங்க. அப்படி இருக்கும் போது இன்னிக்கு வசதி வந்துடுச்சினு உங்களை மறந்துட்டா, அப்பறம் எனக்கும்  எங்களை பார்த்து சிரிச்சவங்களுக்கும் என்ன வித்தியாசம். அது மட்டும் இல்ல, உன்னையே எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்டி குள்ளச்சி” என்றான். 

எப்போதும் செல்வன் துர்க்காவை அப்படி தான் கூப்பிடுவான். துர்க்கா வெக்கத்தில் தலை குனிந்தாள். துர்க்காவின் கையை பிடித்தான் செல்வன்

பின் இருவரும் கைக்கோர்த்த படி வீட்டுக்கு கிளம்பினர்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

வந்துட்டான்யா… வந்துட்டான்யா!! (சிறுகதை) – ✍ சக்தி ஸ்ரீநிவாஸன், சென்னை

தங்கமகள் (சிறுகதை) – ✍ சதிஷ், பெங்களூரு