in ,

தங்கமகள் (சிறுகதை) – ✍ சதிஷ், பெங்களூரு

தங்கமகள் (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 122)

“அப்பா நான் வாங்கிட்டேன், நான்…” என கத்தினாள் மயிலழகு, அவளுக்கு அழுகை வந்துவிட்டது, அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை

அவளருகில் நின்று கொண்டிருந்த கணேசன் தொலைபேசியை மயிலழகிடம் பெற்றுக்கொண்டு, “உங்க பொண்ணு தங்கம் ஜெயிச்சிட்டா போட்டியில, அத சொல்றதுக்கு தான் போன் பண்ணோம். நாளைக்கு காலைல கெளம்பி வந்துடுவோம்” என்பதை கூறியதும், மயிலழகின் தந்தையான கருப்பனுக்கு என்ன சொல்வது என்றே  புரியவில்லை

உடனே கணேசனிடம்  “ரொம்ப நன்றி சார். அத தவற எனக்கு தெரியில என்ன சொல்றதுன்னே. இந்த போனுக்கு தான் நானும் செண்பகமும் காத்திட்டு இருக்கோம், எங்க வயித்துல பால வாத்தீங்க. பாத்து பத்திரமா வந்துடுங்க சார்” என்று சொன்னதும்

“கண்டிப்பா கருப்பன். உங்க பொண்ணுகிட்ட பேசறீங்களா?” என கேட்டான் கணேசன். 

உடனே கருப்பன், “இல்ல சார், வேணாம் என் பொண்ணுகிட்ட இங்க வந்ததும் பேசறேன்!” என்று சொல்லி தொலைபேசியை வைத்து விட்டு,  அங்கிருந்த மளிகை கடைக்காரரிடம் எதுவுமே சொல்லாமல் அங்கிருந்து வீட்டிற்கு ஓடோடி சென்றான். 

“செண்பகம், நம்ம பொண்ணு மயிலு போட்டியில தங்கம் வாங்கிட்டாளாம். இப்ப தான் கணேசன் சார் சொன்னாரு, வா முதல்ல, நம்ம குலசாமி கருப்பண்ணசாமிக்கு பொங்க வச்சிட்டு வந்துடுவோம். அப்படியே வரும் போது எல்லாருக்கும் நெறய இனிப்பு பலகாரம் செய்யறதுக்கு பொருளெல்லாம் வாங்கின்னு வந்துடலாம்” என சொன்னதும் செண்பகத்துக்கு உச்சி குளிர்ந்தது

அது வரைக்கும் யாரிடமும் பேசாமல் அந்த மகமாயியை நினைத்து வாயில் பச்சைத்தண்ணி பல்லில் படாமல் இருந்தவள் “என்னய்யா சொல்ற, கனா ஏதாச்சும் கண்டியா என்ன?” என்று கேட்க 

“இல்லம்மா நான் சொல்றது நெசம் தான். இப்போ தான் மளிகை கடையில இருந்து போன் பேசிட்டு வரேன்மா, கணேசன் சார் தான் சொன்னாரு நாளைக்கு கெளம்பி வந்துடறாங்களாம்” என விளக்கியதும் 

“மகமாயி ஆத்தா என் பொண்ணு ஜெயிச்சிட்டா உனக்கு கோடி புண்ணியம்மா, வாய்யா இப்பவே போய் கருப்பண்ணசாமிக்கும் மகமாயிக்கும் எல்லாம் நேத்திக்கடனும் செஞ்சிட்டு வந்துடுவோம்.” என்று சொல்லி அங்கிருந்த தண்ணீர் சொம்பை கருப்பன் கொடுக்க அவள் அதை வாங்கி பருகினாள்

உடனே கருப்பன் சைக்கிளை எடுத்துக் கொண்டு பின்புறம் செண்பகத்தை உக்கார சொல்லி கிளம்பினான், பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலுக்கு

அவர்கள் கிளம்பிய நேரம் சாயங்காலம் என்பதால், இருட்டாகவே இருந்தது. மெதுவாக பாட்டு பாடிக் கொண்டே சென்றான். செண்பகம் வருடத்துக்கு முன்னான நினைவுகளுக்குள் சென்றாள்.  

செண்பகத்தின் ஊர் சென்னையில் இருந்து நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவேரிப்பாக்கம் எனும் இடத்தின் அருகில் உள்ள மேட்டுப்பாக்கம்

ஊருக்கு நாலு தெரு, தெருக்கு நாலு பேரு என்று சொல்வார்களே அது போல இருக்கும் அந்த கிராமம். அவள் பத்தாவது வரை படித்து அந்த ஊரிலே அதிகம் படித்தவளாக இருந்தாள். 

பத்தாவது படித்து முடித்த கையோடு வேலூரில் உள்ள சேண்பாக்கம் எனும் ஊரில் கூலி வேலை செய்யும் தன் தம்பி கருப்பனுக்கு கட்டி வைக்க முடிவு செய்தனர் செண்பகத்தின் பெற்றோர். 

தாய்மாமனை கல்யாணம் செய்தால் பிறக்கும் குழந்தைக்கு குறைபாடு வரலாம் என்பதை சினிமாவிலும் புத்தகத்திலும் படித்ததாக செண்பகம் எவ்வளவு சொல்லியும் யாரும் கேட்காமல் அவளுக்கு திருமணம் முடித்தனர்

திருமணத்திற்கு பின்னர் கருப்பன் செண்பகத்தை பூ போல தாங்கினான். செண்பகத்தை விட வயதில் பதினைந்து வருடம் மூத்தவனான கருப்பனுக்கு, செண்பகத்தை தூக்கி வளர்த்த பாசமும் தன் தமக்கையின் மகள் என்ற பாசமும் எப்போதும் இருந்தது. 

இப்போது அது காதலாகவும் மாறியது, தினமும் கூலி வேலை செய்யும் காசை கொண்டு கால் வயித்து கஞ்சி குடிச்சாலும் மிகவும் சந்தோஷமாகவே  வாழ்ந்தனர். கருப்பன் எந்த கெட்டப்பழக்கம் இல்லாமல் வேலை முடிந்ததும் நேரத்திற்கு வந்து செண்பகத்தை பார்த்து கொண்டான்

ஒரு வருடம் கழித்து அழகான பெண் குழந்தை பிறந்தது, செண்பகத்திற்கு முருகக்கடவுளை மிகவும் பிடிக்கும் அதனால் தன் மகளுக்கு மயிலழகு என்று பெயர் வைத்தாள். 

குழந்தைக்கு மூன்று மாதம் ஆகியும் காலில் எந்த அசைவும் இல்லை. மருத்துவர்களும் சிறிது காலம் போகட்டும் என்று சொல்லி சில மருந்துகளைக் குழந்தைக்கு தரச் சொன்னார்கள். 

ஆனால் அது எதுவும் பலனளிக்காததால் குழந்தைக்கு கால்களில் பிறவிலேயே இந்த பிரச்சனை வந்திருக்கலாம் என்றும் அதற்கு காரணம் அறிவியல் முறைப்படி தாய்மாமனை திருமணம் செய்ததால் பத்தில் ஒரு குழந்தைக்கு இப்படி நேரக்கூடும் என்ற முடிவுக்கு வந்தனர். 

செண்பகத்திற்கும் கருப்பனுக்கும் எப்படியாவது தன் மகளை சரி செய்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது, ஆனால் தினக்கூலியான கருப்பனுக்கு சொத்து என்று சொல்லும் அளவிற்கு இல்லாததால், செண்பகம் குடும்பமும் அவ்வளவு வசதி இல்லாததால் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வழியில்லாமல் திக்கற்று இருந்தனர். 

செண்பகத்தின் உறவினர்கள் எல்லாரும் அவர்களுக்கு ஆறுதலையோ பண 

உதவியோ செய்யாமல், மயிலழகு பிறந்த நேரம் சரியில்லை, ஜாதகம் சரியில்லை என்று பலவற்றை கூற, ஒரு கட்டத்தில் செண்பகத்தின் அம்மா கருப்பன் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து குழந்தைக்கு மருந்து கொடுத்துவிடலாம் என்று யோசனை கூறியவுடன்

செண்பகத்திற்கு கோபம் வந்து “அம்மா நான் இனிமே இங்க வர மாட்டேன், நானும் என் புருசனும் மயில பாத்துக்கறோம். அவள எங்க உசுர கொடுத்தாவது வளப்போம், நீ பேசினத என் புருசன் அதாவது உன் தம்பி கேட்டு இருந்தா அம்புட்டு தான். அக்கான்னு கூட பாத்துருக்கமாட்டாரு, உன்ன பொலி போட்டுருப்பாரு. நான் என் கல்யாணத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்துடுமோன்னு எவ்வளவோ சொன்னேன், யாருமே என் பேச்ச கேட்கல. என் புருசன் என்ன நல்லா பாத்துக்கறாரு இருந்தாலும் எங்களுக்கு பாரு இப்படி ஆயிடுச்சு. ஆனாலும் ஒரு பிஞ்சு குழந்தைய சாகடிக்க உனக்கு எப்படி தான் மனசு வந்துச்சோ தெரில” என்று சொல்ல 

“இல்லடி நான் என்ன சொல்றன்னா இந்த குழந்தை இல்லனா இன்னொன்னு வரும் உங்களுக்கு, இப்படி கஷ்டப்பட்டு வாழுவீங்களா கடைசி வரைக்கும் அந்த குழந்தை  வளந்து கஷ்டப்படறது பாத்தா நமக்கும் ரொம்ப வருத்தமா இருக்கும் அதான்” என சொல்லி முடிப்பதற்குள் 

“அம்மா, மயிலழகு என் முருகன் கொடுத்த தேவத. அந்த பிஞ்சு முகத்த பாரும்மா, எப்படிம்மா உனக்கு யோசிக்க தோணுது. சரி எனக்கு இன்னொரு குழந்த பொறந்தாலும் இப்படியே பொறக்காதுன்னு என்ன நிச்சயம். நாங்க ரெண்டு பேரும் எப்படியாவது அவள நல்ல படியா பாத்துக்கறோம். நீ அத பத்தி கவலபட வேணாம்” என்ற சொல்லிவிட்டு அவள் அடுத்த அரசு பேருந்தில் ஏறி மயிலழகை அழைத்து க்கொண்டு கருப்பன் வீட்டிற்கு வந்துவிட்டாள்

கருப்பன் வீட்டில் நிறைய மண்பொம்மைகளும் விளையாட்டு பொருட்களெல்லாம் வாங்கி வைத்து காத்திருந்தான். 

எதிர்பாராத நேரத்தில் வீட்டிற்கு செண்பகமும் மயிலழகும் வந்தவுடன் கருப்பனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. தன் குழந்தையை தூக்கி முத்தமிட்டபடி விளையாட்டு பொருட்களை கொடுத்து விளையாடி கொண்டிருந்தான். 

செண்பகம் சமயலறைக்கு சென்று இருந்த உணவை கொண்டு வந்து அமர்ந்தாள், செண்பகத்தின் முகத்தை பார்த்ததிலே ஏதோ பிரச்சனை என்று அறிந்து கொண்ட கருப்பன், எதுவும் பேசாமல் குழந்தையிடம் விளையாடி கொண்டிருக்க 

செண்பகம் கருப்பனை பார்த்து “ஏன்யா ஒருத்தி திடீர்னு வந்திருக்கா, என்ன ஏதுன்னு கேட்க மாட்டியா?” என்று கேட்டாள்

அதற்கு கருப்பன், “ஏன்மா உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது என் அக்காக்கும் உனக்கும் ஏதோ பிரச்சனைன்னு அப்பறம் நான் என்ன கேட்கறது. அதுவும் இல்லாம நம்ம புள்ளைய பாக்காம என்னால இருக்க முடியல, நீ வந்ததும் ஒரு விதத்துல நல்லது தானே. அதான் நான் எதுவும் கேட்கல” என கூற அவள் சிறிது கோபம் தணிந்தாள்

கருப்பனும் செண்பகமும் எல்லா கோவில்களுக்கும் சென்று தன் மகளுக்கு சரியாக வேண்டும் என்பதற்காக எல்லா வழிபாடுகளும் வேண்டுதல்களும் செய்தார்கள். குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து அன்பாகவும் பாசத்தோடும் அவளுக்கு குறை தெரியாமல் வளர்த்தனர்

இப்படியே மூன்று வருடம் சென்றது, மயிலழகு துரு துருவென இருந்தாள். ஆனால் அவள் கால் வளர்ச்சி உடலின் வளர்ச்சியை விட மிகவும் குறைவாகவே இருந்தது.  

ஒரு நாள் ஊரில் இருந்த குழந்தைகள் பூங்காவிற்கு சென்றனர் மூவரும், அதுவரை அவர்கள் கோவில் மருத்துவமனை தவிர வேறு எங்கும் சென்றதில்லை. 

விளையாடி கொண்டிருந்த பிள்ளைகளை பார்த்து விட்டு தன் தந்தையின் முகத்திற்கு நேராக வந்து  “அப்பா எல்லாரும் நடக்கறாங்க, என்னால மட்டும் ஏன்பா நடக்க முடியல?” என்று கேட்க 

செண்பகம் உடனே “அவங்க எல்லாரும் சாதா பிள்ளைங்க, நீ சாமி குழந்தம்மா. கோவில் உள்ள நம்ம முருகன்சாமி  நடந்து பாத்திருக்கியா, அது மாதிரி தான்” என்று சொல்ல 

“நான் பாத்திருக்கனே டிவியில முருகன்சாமி நடக்கறத, என்கிட்ட பொய் சொல்றீங்களா, பாருப்பா அம்மா பொய் சொல்றாங்க” என மழலை குரலில் சொல்ல கண்ணீர் ததும்பி திக்கற்று நின்றார்கள் கருப்பனும் செண்பகமும்

கருப்பன் தன் பிள்ளையை கட்டி அணைத்து “நான் இருக்கேன்டா செல்லம், உன்ன எங்க போனாலும் என் தோள்ல உக்கார வச்சி தூக்கிட்டு போக, முருகன் சாமி என்ன அனுப்பிச்சிருக்காரு அதுக்கு தான்” என்று சொல்லி குழந்தை மயிலழகை சமாளித்தான்

அவளும் ஒரு வழியாக தன் அப்பா சொன்னதை கேட்டு “சரி அப்பா, இப்போ என்ன தூக்கிட்டு போறீங்களா. வாங்க வீட்டுக்கு போகலாம்” என சொல்லி எல்லாரும் வழியில் கிடைக்கும் பொருட்களையும் தின்பண்டங்களையும் வாங்கிக் கொண்டு வீட்டை சென்றடைந்தனர்

வீட்டிற்கு சென்று மயிலழகை தூங்க வைத்து விட்டு இருவரது கவலையும் எப்படி மயிலழகு பெரியவள் ஆனதும் அவளை சமாதானம் செய்ய போகிறமோ என்ற அச்சத்திலே இருந்தனர். இப்படியே நாட்கள் சென்றது, 

அவளுக்கு ஐந்து வயது ஆனது அவளை பள்ளியில் சேர்க்க முடிவு செய்து சென்றார்கள் அங்குள்ள அரசு பள்ளியில் கருப்பனும் செண்பகமும். 

பள்ளிக்கு செல்லும் முன்பே, இந்த குழந்தை ஊனம் அதனால் இந்த பள்ளியில் சேர்த்தாலும் யார் அவளுக்கு பணிவிடை செய்வது, திடீரென்று அவளுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்றாலும்  யார் உதவி இல்லாமல் அவளால் செல்ல முடியுமா என்று அங்கு அருகில் இருந்தவர்கள் கருப்பனையும் செண்பகத்தையும் கேட்டது அவர்களை சிந்தனையில் ஆழ்த்தியது.  

மயிலழகு படுச்சுட்டி பெண், அம்மாவுக்கு அவளால் முடிந்த உதவிகளை செய்வாள். வீட்டிலேயே அவள் அம்மா அவளுக்கு படிப்பு சொல்லி கொடுக்க ஆரம்பித்தாள், வெளியில் எங்கு சென்றாலும் மயிலழகை பற்றி விசாரிப்பது செண்பகத்திற்கு பிடிக்கவில்லை. 

மயிலழகிற்கு ஆறு வயது ஆனது, கருப்பன் எப்போதும் மயிலழகின் பிறந்தநாளிற்கு கருப்பண்ணசாமிக்கு சென்று கெடாவிருந்து வைத்து விட்டு வருவான். விருந்து எல்லாம் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து மயிலழுகு உறங்கியபின் 

செண்பகம் கருப்பனை பார்த்து, “ஏன்யா நான் ஒரு யோசனை சொல்லுவேன், எனக்கு அது சரியா வரும்னு படுது. இந்த ஊர்ல நம்ம இருக்க வேணாம்யா. எல்லாரும் நம்ம பொண்ண வித்தியாசமா பாக்கறது எனக்கு பிடிக்கல.

அதுவும் இல்லாம இப்படியே நம்ம பொண்ண பள்ளியில சேர்க்காம இருக்க முடியாதுல. அதனால மெட்ராஸ்ல என் தோழி இருக்கா, அவ எனக்கு லெட்டர் போட்டிருந்தா அதுல அங்க ஒரு வீடு இருக்காம், எனக்கு ஒரு சின்ன வேல பாத்திருக்காளாம் 

அது பக்கத்துலயே நம்ம பொண்ணு மயிலுக்கு பள்ளி ஒண்ணு இருக்காம் அங்க அவள நல்லா பாத்துப்பாங்களாம், படிப்பும் சொல்லி தருவாங்கன்னு சொன்னா. நீயும் வந்து அங்க ஏதாவது வேல பாத்துக்கோ. நான் வேலைக்கு போயிட்டு பக்கத்துலயே மயில அப்பப்போ பாத்துக்கறேன். நீ என்னய்யா சொல்ற?” என கேட்க 

“என்னம்மா இப்படி கேட்கற? எனக்குனு இருக்கறது நீயும் மயிலு தானம்மா, நம்ம பொண்ணு மயிலுக்காக நான் இதக்கூட செய்ய மாட்டேனா. நம்ம நாளைக்கே கெளம்பிடலாம்” என்று சொல்ல 

“எனக்கு தெரியும்யா நீ ஒத்துப்பன்னு, உன்ன புருஷனா அடைய நான் ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன்யா. அப்பறம் நம்ம இந்த ஊர விட்டு போனாலும் அப்பப்போ வந்து நம்ம குலசாமிய கும்மிடுவோம். மயில பெரிய ஆளாகிட்டு இங்க வந்து பெரிய விருந்து வைக்கறோம்” என்று நம்பிக்கை வார்த்தைகளை சொன்னவுடன் அவர்கள் சிறிது நிம்மதியாக உறங்கினர். 

அடுத்த நாள் காலையிலே சீக்கிரமாக எழுந்து துணிமணிகள், பாத்திரங்கள் என்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு வீட்டை காலி செய்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டனர். 

மயிலுக்கு ஒன்றுமே புரியவில்லை, அவளுக்கு என்ன நடக்கிறது அவளை சுற்றி என்று? ஆனால் அவளுக்கு அங்கிருந்த விளையாட்டு பொருட்களெல்லாம் மூட்டையில் இருக்கிறதா என்ற கவனமே பெரிய அளவில் இருந்தது.  

சென்னைக்கு வந்தவுடன் செண்பகம் அவளுடைய தோழி வீட்டிற்கு கடிதத்தில் இருந்த முகவரியை வைத்து சென்றடைந்தாள். அங்கு அவளுடைய தோழி பொன்னம்மாளும் கணவன் கணேசனும் காத்திருந்தனர். 

பொன்னம்மாள் செண்பகத்தை பார்த்து, “வாங்க வாங்க உள்ளே, என்னடி நம்ம ரெண்டு பேரும் சந்திச்சி ரொம்ப நாள் ஆயிடுச்சுல?” என கேட்க 

“ஆமாம்டி ரொம்ப நாள் ஆயிடுச்சு! நெறய மாறி போயிடுச்சி!! சரி கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்று செண்பகம் கேட்க 

“வாடி இது உன் வீடு மாதிரி, உன்கிட்ட நெறய பேசணும் அப்படியே வீட்டையும் சுத்தி பார்க்கலாம். நீங்க பேசிட்டு இருங்க அவர் கிட்ட நாங்க காபி எடுத்துட்டு வரோம்” என சொல்லிட்டு அவளை அழைத்து சென்று விட்டாள் பொன்னம்மாள்

கணேசனும் கருப்பனிடம் அவனுடைய வேலையை பற்றி பேசிக் கொண்டிருந்தான். ஒரு தொழிற்சாலையில் வேலை இருப்பதாகவும் நாளை அழைத்து செல்வதாகவும் கூறினான். 

பேசிக்கொண்டிருக்கும் போதே மயிலழகையே பார்த்து கொண்டிருந்தான் கணேசன். காரணம் பொன்னம்மாளுக்கும் கணேசனுக்கும் கல்யாணம் ஆகி ஐந்து வருடம் ஆகியும் குழந்தை பாக்கியமில்லை அதனாலோ என்னவோ மயிலழகை பார்த்தவுடன் இனம்புரியாத பாசம் அவனுக்கு வந்தது

மயிலழகின் அருகில் சென்று “என்ன செல்லம் உனக்கு என்ன வேணும்? மாமா வாங்கி தரேன் கேளு” என கேட்டான் கணேசன். 

“எனக்கு எதுவுமே வேணாம் மாமா, அப்பா எனக்கு எல்லாமே வாங்கி கொடுப்பாரு.” என வெகுளிதனமாக சொன்னாள் மயிலழகு

“இந்த மாமா வாங்கி கொடுத்தா வாங்கிக்க மாட்டியா?” என்று ஒரு கரடி பொம்மையை அவளுக்காக வாங்கி வைத்ததை கொடுத்தான்

மயிலழகு தன் தந்தையை பார்த்து கருப்பன் சரி என்று சொன்னதும் அந்த பொம்மையை வாங்கிக் கொண்டாள். “நீங்க ரொம்ப நல்லா பொண்ண வளத்துருக்கீங்க”ன்னு கணேசன் சொல்ல, கருப்பனுக்கு மயிலழகை பார்த்து பெருமிதமாக இருந்தது. 

அடுத்த நாள் பொன்னம்மாள் செண்பகத்தின் குடும்பத்தைக் கூட்டி சென்று அவர்களுக்காக பார்த்த வீட்டில் குடியேற்றினாள். அப்படியே செண்பகத்திற்கு ஒரு துணி கடையில் வேலை வாங்கி கொடுத்து விட்டு மயிலழகை மாற்றுத் திறனாளிகளின் பள்ளிக்கு சென்று சேர்த்து விட்டாள். 

செண்பகம் பொன்னம்மாளை பார்த்து, “நாங்க உங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுக்கறோம்லடி, நீ செஞ்ச உதவிக்கு நான் என்ன செய்யப்போறேன்னு தெரில” என சொல்ல 

“சும்மா இருடி அப்படி எல்லா சொல்லாத, வேலைய பாரு அப்பறம் மயில ஸ்கூல்ல பத்திரமா பாத்துப்பாங்க நீ அவள நெனைச்சு கவலபட வேண்டாம்” என சாதாரணமாக பதில் அளித்தாள். 

மயிலழகிற்கு பள்ளியில் தன்னிச்சையாக எப்படி கையால் நடக்க சொல்லிப் பழகினார்கள், கூடவே பாடம் எல்லாவற்றயும் கற்று கொடுத்தனர். அவளும் நன்றாக படிக்க ஆரம்பித்தாள்

தினமும் செண்பகம் துணி கடையில் வேலையை முடித்துவிட்டு மயிலழகை கூட்டிக்கொண்டு வீட்டிற்கு செல்வாள். கருப்பனும் கணேசன் சொன்ன வேலையில் இருந்து வீட்டிற்கும் மயிலழகிற்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தான்.

கணேசன் மயிலழகிற்கு ஒரு சக்கர நாற்காலியை வாங்கித் தந்தான். தினமும் ஒரு மணி நேரமாவது வந்து அவளிடம் விளையாடி விட்டு செல்வான்

மயிலழகும் கணேசனிடம் மிகுந்த பாசமாக இருந்தாள். கணேசனுக்கு குழந்தையில்லை என்ற கவலையே இல்லாமல் செய்து விட்டாள் மயிலழகு

மயிலழகின் ஆறாம் பிறந்த நாளை ரொம்ப விமர்சையாக கொண்டாடினர் செண்பகமும் பொன்னம்மாளின் குடும்பமும்

வந்தவர்கள் எல்லாரும் மயிலழகின் குறைகளையே பேசி சென்றனர், சிலர் பொன்னம்மாளிடம் “இந்த நொண்டி பொண்ண நீங்க ரெண்டு பேரும் ஏன் தலையில தூக்கி வெச்சி ஆடறீங்கன்னு தெரில, இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ. உங்களுக்கு குழந்தையில்லைன்னா போய் ஏதாவது ஊனம் இல்லாத குழந்தைய தத்து எடுத்துக்கோங்களேன்” என்று ஆலோசனை எல்லாம் வழங்கினர். 

கணேசன் அவர்களிடம் மயிலழகு தான் பெறாத பெண் என்றும் அவளை பற்றி யாரும் எதுவும் பேச வேண்டாம் என்று தெளிவாக சொல்லி விட்டான். 

மயிலழகிற்கு இப்போது எல்லாம் புரிய ஆரம்பித்து விட்டது

அவள் கருப்பனிடம் சென்று, “என்னால தான மாமாவ எல்லாரும் திட்டறாங்கப்பா நம்ம இங்க இருக்க வேணாம்பா வாங்க நம்ம ஊருக்கே போயிரலாம்” என்று பெரிய மனுஷி போல பேச 

கருப்பன் உடனே “அப்படியெல்லாம் இல்லம்மா, உன்ன பாத்தத்துல இருந்துதான் கணேசன் மாமா ரொம்ப சந்தோஷமா இருக்கார். நம்ம போய்ட்டா அவரு ரொம்ப கஷ்ட படுவாரு அப்படியெல்லாம் பேசாதம்மா”என்று சொல்லி அவளுக்கு புரிய வைத்தான்

“சரிப்பா இனிமே நான் இப்படி பேச மாட்டேன்பா” என்று கூறிவிட்டு கணேசனிடம் விளையாட சென்றாள். 

ஒரு நாள் மயிலழகிடம் விளையாடி கொண்டிருக்கும் போது, அவள் தூரமாக பந்தை பளுவான தூக்கி போடுவதை பார்த்து கணேசனுக்கு ஒரு யோசனை தோன்றியது

மயிலுக்கு நன்றாக பயிற்சி கொடுத்தால் அவளை ஷாட் புட்டில் பெரிய ஆளாக ஆக்க முடியும் என்பதை கருப்பனிடமும் செண்பகத்திடமும் கூற

அவர்கள் உடனே “மயில நாங்க படிக்கவெச்சா போதுங்க, நாங்களே அன்றாடங்காட்சி, பயிற்சி கொடுக்கறதுக்கு பதிலா எங்ககிட்ட காசு இருந்தா அவளுக்கு வைத்தியமே பாத்திருப்போமே” என சொல்லி நிராகரித்தனர்

கணேசன் அதை அப்படியே விட்டு விடாமல்  பொன்னம்மாளிடம் சொல்ல, உடனே செண்பகத்தின் வீட்டிற்கு சென்று  “நாங்க மயிலழகு பயிற்சிக்கு தேவையானத எல்லாம் பாத்துக்குறோம், மயிலு உங்களுக்கு மட்டும் பொண்ணு இல்ல எங்களுக்கும் தான், அவள ஒரு பெரிய ஆளா ஆக்க முடியும்னு நாங்க நம்பறோம். ஆனா நீங்க இதுக்கு சரி சொன்னாதான் நாங்க செய்ய முடியும், அப்பறம் உங்க இஷ்டம்” என்று கொஞ்சம் கோபமாக சொல்லி விட்டு சென்றாள்

மயிலழகு தன் பெற்றோரிடம் வந்து, “நான் நல்லா பயிற்சி எடுப்பேன்பா, மாமா சொல்ற மாதிரி கண்டிப்பா நான் ஜெய்ச்சி காட்டுவேன்பா. நீங்க சரின்னு மட்டும் அவங்க கிட்ட சொல்லுங்க” என்றாள். 

அடுத்த நாள் கருப்பனும் செண்பகமும் ஒரு மனதாக மயிலழகின் பயிற்சிக்கு சரி சொல்ல, உடனே கணேசன் ஒரு ஷாட் புட் பயிர்ச்சாளரிடம் கொண்டு போய் சேர்த்தான். 

தினமும் பள்ளி முடிந்தவுடன் பயிற்சிக்கு அவனே கொண்டு போய் விட்டு அங்கேயே காத்திருந்து வீட்டிற்கு அழைத்து வந்தான். பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை எல்லாமும் வாங்கிக் கொடுத்தான். மயிலழகும் படிப்பு, பயிற்சி என்று இரண்டிலும் முதல் இடத்தில் இருந்தாள். 

அவள் பள்ளி ஆசிரியை ஒரு நாள் செண்பகத்தை அழைத்து மாணவர்களுக்கிடையே வருடாந்திர விளையாட்டு போட்டி இருப்பதாகவும், எல்லா பள்ளிகளும் அதில் கலந்து கொள்ளும் என்று சொல்லி மயிலழகை பரிந்துரைப்பதாக கூறினார்

அந்த போட்டி திருச்சியில் நடைபெற உள்ளதாகவும், அங்கு போய் வரும் செலவு, தங்கும் செலவுகள் அனைத்தும் பள்ளியே ஏற்கும் என்று கூறினார்

ஆனால் செண்பகம் தன் மகளை விட்டு பிரிய மனமில்லாமல் அதை நிராகரித்து வந்துவிட்டாள். அந்த பள்ளி ஆசிரியை பொன்னம்மாளிடம் இந்த விஷயத்தை சொல்ல”என்ன பையித்தியமா நீ? அவங்களே எல்லா செலவும் செய்றாங்களே, ஏன் நீ வேணாம்னு சொல்லிட்ட?” என கேட்க 

“இல்லடி, மயிலு எப்படி தனியா இருப்பா? அவளுக்கு எங்க துணை தேவை அது மட்டும் இல்லாம ஒரு வாரம் வேற நாங்க எப்படி அவள பிரிஞ்சி இருப்போம், அதனால தான் வேணாம்னு சொல்லிட்டேன்” என்றாள்

“என் வீட்டுக்காரரு இது நல்ல வாய்ப்புன்னு சொல்றாரு. அதுவும் இல்லாம இப்போ மயிலு வளந்துட்டா, ரொம்ப தைரியமான பொண்ணு அவ. இரு நான் அவகிட்டயே கேட்கறேன்” என்று செண்பகம் 

மயிலழகை அழைத்து “என்ன புள்ள நீ அந்த போட்டிக்கு போறீயா? நீ தான் 

பயிற்சி எடுக்கறியே, போனா தான உன் திறமை தெரிய வரும்” என சொல்லி முடிப்பதற்குள் 

“நான் போறேன் அத்த, அம்மா இப்படி தான் பயப்படுவாங்க. நான் தனியா என்ன பாத்துப்பேன் ஒரு வாரம் தான” என தைரியமாக சொல்ல 

“பாத்தியா உன் பொண்ணுக்கு இருக்குற தைரியம் கூட உனக்கு இல்ல, என்ன பண்ணுவியோ தெரியாது நாளைக்கே போய் மயிலு போட்டியில கலந்துப்பானு டீச்சர் கிட்ட சொல்ற” என கண்டிப்பாக கூறிவிட்டு சென்றாள். 

மறுநாள் காலையில் கணேசன் வீட்டிற்கு வந்து மயிலிடம் சென்று “நான் கோச்கிட்ட பேசிட்டேன், ஒரு வாரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் சொன்னார். அப்பறம் உனக்கு சொல்லி கொடுத்த மாதிரி விளையாட சொன்னாரு, சரியாம்மா பத்திரமா போயிட்டுவாம்மா” என சொல்லிவிட்டு சென்றான். 

மயிலழகும் எல்லா பள்ளிகளும் நடந்த போட்டியில் கலந்து கொண்டு ஷாட் புட்டின் எல்லா பிரிவுகளிலும் பதக்கங்களை குவித்தாள். போட்டியில் கலந்து கொண்டவர்கள் எல்லாரும் மயிலழகின் திறமையை பார்த்து வியந்தனர்

பள்ளி ஆசிரியை இந்த சந்தோஷமான விஷயத்தை பொன்னம்மாளிடம் சொல்ல, கணேசனும் பொன்னம்மாளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் சென்று இனிப்புடன் கருப்பனுக்கும் செண்பகத்திற்கும் சொல்ல. பெற்றோருக்கு கண்ணீர் வந்தது

மயிலழகு வீட்டிற்கு வந்தவுடன் கருப்பன் அவளுக்கு ஒரு பரிசு வாங்கி கொடுத்தான். அது ஒரு ஷாட் புட் பந்து. அவனே அதை தொழிற்சாலையில் தன் கையால் செய்து கொடுத்தான்

மயிலழகு அதை கண்டு பேரானந்தம் அடைந்தாள், “ரொம்ப நன்றிபா. நான் மாமா வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன்” என சொல்லிச்  சென்றாள். 

அங்கு சென்றதும் கணேசனும் மயிலழகிற்கு கடையில் வாங்கி வைத்திருந்த ஷாட் புட் பந்தை கொடுத்தான், பொன்னம்மாள் அவளுக்கு இனிப்புகளை வழங்கினாள். அப்பா கொடுத்த பந்தை பள்ளிக்கும், மாமா கொடுத்ததை கோச்சிடம் செய்யும் பயிற்சிக்கும் பயன்படுத்திக் கொண்டாள்

இந்த சிறிய வயதில் மயிலழகின்  தெளிவான முடிவுகளை பார்த்து இரண்டு குடும்பமே இன்புற்றது. வருடாவருடம் நடக்கும் போட்டிகளில் எல்லாம் கலந்து கொண்டு பரிசுகளையும் கோப்பைகளையும்  தட்டிச் சென்றாள் மயிலழகு

இப்படியே சென்று கொண்டிருந்த அவள் வயதுக்கு வந்தவுடன் அவளது பெற்றோரான கருப்பனும் செண்பகமும் பளு தூக்க வேண்டாம் என்று பயிற்சிக்கு செல்வதற்கு முட்டுக்கட்டை போட்டனர். 

பொன்னம்மாளும், கணேசனும் எவ்வளவு சொல்லியும் மயிலழகின் உடல்நிலையை கருத்தில் கொண்டு செண்பகம் அவளுக்கு பயிற்சி வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டாள். 

மயிலழகிற்கு ஷாட் புட் என்றால் உயிராகி விட்டது, அதை பயில கூடாது என்று சொன்னதும் அவளால் படிப்பில் கூட சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. கணேசன் ஒரு நாள் கருப்பனின் பட்டறைக்கு சென்று மயிலழகிற்கு ஷாட் புட் எவ்வளவு முக்கியம் என்பதையும் அதனால் அவள் வாழ்க்கையில் பல திருப்பங்கள் வரும் என்றும் எடுத்துரைத்தான். 

ஒருவழியாக கருப்பனும் சமாதானம் அடைந்து செண்பகத்திடம் “ஏன்மா நம்ம ஏன் இந்த ஊருக்கு வந்தோம், மயில நல்ல படியா பாதுக்கனோம் அதோட அவள பெரிய ஆளாக்கி ஊருல கேலி பேசின எல்லாருடைய வாயையும் அடைக்கணும்னு தானே இப்போ நம்மளே முட்டுக்கட்டையா இருந்தா எப்படிம்மா” என்று சொல்லி புரிய வைத்தான். 

அவளும் தன் தவறை உணர்ந்து மயிலிடம் சென்று அடுத்த நாளில் இருந்து பயிற்சிக்கு செல்ல சொன்னாள். மயிலழகு சந்தோஷத்தில் தன் தாயை கட்டி தழுவினாள். 

மாநிலவிலான போட்டியில் கலந்து கொண்டாள் மயிலழகு. சிறிது பயிற்சி குறைவினால் அவளால் அதில் ஜெயிக்க முடியவில்லை. 

கணேசன் மயிலழகை பார்த்து “இந்த தோல்விய கண்டு துவண்டு போகாத, இந்த வருஷம் இல்லனா அடுத்த வருஷம். நீ சாதிக்க பிறந்தவம்மா” என ஊக்கம் கொடுத்து அடுத்த வருட மாநிலவிலான போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றாள்

அவளுடைய இந்த வெற்றி காரணமாக மாநிலத்தின் சலுகைகளும் மாதந்தோறும் உதவி சம்பளமும் கிடைத்தது. மயிலழகு பள்ளி படிப்பு முடித்து கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள்

அங்கு எல்லாரும் முதலில் கேலியும் கிண்டலும் செய்தாலும் பின்னர் அவளுடைய சாதனைகளையும் தைரியத்தையும் பார்த்து ஆதரவு கொடுத்தனர்.

தேசிய அளவிலான ஷாட் புட் போட்டி நடக்க போவதாக அவளுடைய பயிற்சியாளர் கணேசனிடம் சொல்ல மயிலழகு தீவிர பயிற்சியில் இறங்கினாள். 

போட்டி நடக்குமிடம் டெல்லி என்பதால் அங்கு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் கணேசனே செய்தான்.கருப்பனும் செண்பகமும் ஊருக்கு சென்று எப்படியாவது இந்த போட்டியில் தன் மகள் ஜெயித்து விட வேண்டும், அப்படியே ஊருக்கு சென்று எல்லாரிடமும் தன் மகள் மயிலழகு வென்றுவிட்டாள் என சொல்ல காத்திருந்தனர். 

இப்படியே சுகமான நினைவுகளை நினைத்து முடிக்கும் போது, கோவில் வந்தடைந்தது. கருப்பண்ணசாமிக்கு பொங்கல் வைத்துவிட்டு கருப்பனும் செண்பகமும், அங்கிருந்த அனைவரையும் அழைத்து தன் மகள் மயிலழகு தேசிய அளவிலான ஷாட் புட் பந்தெறிதல் போட்டியில் தங்கம் வென்றதை கூறி இனிப்புகளை வழங்கினார்கள். 

அடுத்த நாள் கணேசன் மயிலழகை அழைத்து கொண்டு ஊருக்கு வந்து சேர எல்லாரும் அவளுக்கு தடபுடலாக வரவேற்பு கொடுக்க அவள் தன் பெற்றோர்க்கும் கணேசன் பொன்னம்மாளுக்கும் நன்றியை கூறி கட்டி அணைத்துக் கொண்டாள்

அங்கு இருந்தவர்களை பார்த்து  “ஊனம் என்பது உடலில் இருக்கலாம் மனதில் இருக்ககூடாது, இவர்கள் நாலு பேரு இல்லையென்றால் நான் இந்த நிலைக்கு சென்றிருக்க முடியாது. மாற்றுதிறனாளிகளும் சாதிக்க பிறந்தவர்கள் தான், அவர்களுக்கு ஊக்கம் கொடுங்கள் வசை பாடாதீர்கள்” என்று சொன்னதை கேட்டு ஊர் மக்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்டனர்

மயிலழகு ஒரு தங்கமகள் என்று கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் கூக்குரலிட, கூடி இருந்த அனைவரும் கரகோஷமிட்டனர். 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. மாற்றுத் திறனாளிகளையும் மதிக்கும் வழக்கம் இப்போதெல்லாம் பரவலாகக் காண முடியுமே. நல்ல கதை!

புன்னகை (சிறுகதை) – ✍ பா. பிரீத்தி, மதுரை

கரும்புகைக்குள் வாழ்க்கை (சிறுகதை) – ✍  நா.முத்துப்பாவை, விருதுநகர் மாவட்டம்