in ,

கரும்புகைக்குள் வாழ்க்கை (சிறுகதை) – ✍  நா.முத்துப்பாவை, விருதுநகர் மாவட்டம்

கரும்புகைக்குள் வாழ்க்கை (சிறுகதை)

ந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 123)

னல் பறக்கும் புழுதிக்காற்று தேகத்தை உருக்கிக் கொண்டிருந்தது. அருகில் உயர்ந்து நிற்கும் தென்னங்கீற்று அனல் காற்றுடன் போர் புரிந்து முடிந்தவரை குளிர்ச்சியை பரப்பிக் கொண்டிருந்த இரவு வேளை. நிலவு மேகங்களுக்குள் ஒளிந்து அந்த ஊரையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

கூரைகள் மேய்ந்து நீண்ட நாட்கள் ஆனதால் கூரை இடுக்குகள் கோபித்துக் கொண்டு, ஒன்றுக்கொன்று பிரிந்து ஓட்டை போட்ட குடிசை வீடு

“குமரா எங்க இருக்க? சாப்ட வாயா ராசா, சீக்கிரம் உறங்கனும். அம்மா காலைல வேலைக்கு போகனும்ல”

“இந்தா வாரேன்மா, ஆனா நீ ஊட்டி விட்டா தான் சாப்பிடுவேன்”

“பதினொரு வயசாச்சு, இன்னும் ஊட்டி விடும்மா ஊட்டி விடும்மான்னு சொல்லு, சின்ன பிள்ள மாதிரி” என்று ராக்கு தன் மகனை கோபமும் கொள்ளாமல் கொஞ்சலும் இல்லாமல் கட்டளை தோரணையில்

“இனிமே நீதான் குமரா போட்டு சாப்டுக்கனும், பெரிய பையனாகிட்டீல” என்று தட்டில் சோற்றை வைத்துக் கொண்டு, தென்னை மரத்தடியில் அமர்ந்தாள் ராக்கு

குமரன் அம்மாவின் வார்த்தைகள் ஒன்றையும் கவனி்க்காதவன் போல, “அம்மா நிலாவ பாரேன், நம்ம வீட்டுப் பக்கத்துல தான இருந்துச்சு, இப்ப பாரு அதுக்குள்ளயும் நகர்ந்து நகர்ந்து பாண்டியன் வீட்டு பக்கம் போயிருச்சு”

“உங்க அம்மா உன்ன வஞ்சால ராசா! அது நால நிலாவுக்கு கோபம் வந்து பாண்டியன் வீட்டுப் பக்கம் போயிருச்சு”

“நீ சொல்லுறது உண்மையா அப்பத்தா?”

“ஆமா ராசா அதே கோவிச்சுக்கிட்டு நிலா கிளம்பிருச்சு”

“அம்மா, அப்ப இனிமே நானே சாப்டுக்கிறேன், நீ திட்டாத. நிலா நம்ம வீட்டுப் பக்கத்துலயே இருக்கட்டும்” என்ற குமரனின் வெகுளி மனம் தன் தாயிடம் வெளிப்பட்டது

ராக்கு கலகலவென சிரித்தாள். “குமரா நான் உன்ன திட்டுனதுனால நிலா கோவிச்சுக்கிட்டு போகல. மேகம் தான் குமரா நகர்ந்து போகும், நிலா அங்கன தான்யா இருக்கும்” என்று கூறிக் கொண்டே, சோற்றுடன் கருவாட்டுக் குழம்பினை சேர்த்து கலந்து சிறு சிறு உருண்டையாய் உருட்டி குமரனுக்கு சிரித்துக் கொண்டே ஊட்டினாள்

“அம்மா நிலா நகருர மாதிரி இருக்குமா?”

அங்கம்மாள் சிரித்தாள், “அப்பத்தா  இப்போ  எதுக்கு நீ சிரிக்கிற?”

“என் செல்ல ராசா, நிலா நகருதுன்னே வச்சிக்கிட்டாலும், உன்ன உங்கம்மா திட்டுனதுக்கு நிலா ஏன் ராசா கோவிச்சுக்கிட்டு போகனும். உங்க அம்மா திட்டுனத கேக்க நிலாவுக்கு காது இருக்குதா என்ன?” என்று அங்கம்மா பேரனின் வெகுளித்தனத்தை கேலி செய்து, காதுகளில் அணிந்த தண்டட்டிகள்  ஆடும்படி குலுங்கி குலுங்கி சிரித்தாள்

“அப்பத்தா சிரிக்காத, நிலாவுக்கு காது இல்ல தான், அம்மா திட்டுனத கேக்காது தான். ஆனால் நிலாவுல வடை சுடுற பாட்டிக்கு காது இருக்கும்ல”

“அப்புடி கேழுடா என் சிங்கக்குட்டி, அதான நிலாவுல வடை சுடுற பாட்டிக்கு காது இருக்கும்ல” என்று மகனோடு சேர்ந்து ராக்கும் தந்தனத்தா போட ஆரம்பித்தாள்

அதுவரை கேலி செய்து சிரித்துக் கொண்டிருந்த அங்கம்மாள் பதில் கூறவும் முடியாமல் கேள்வி கேட்கவும் முடியாமல் வாயடைத்துப் போனாள்

ஏனென்றால், நேற்றைக்கு முதல் நாள் தான் குமரனுக்கு நிலாவில் பாட்டி வடை சுடும் கதையைக் கூறினாள் அங்கம்மாள். அதனால், குமரனின் கேள்விக்கு பதில் கூற முடியவில்லை அங்கம்மாவாள்

குமரனிடம் வாய் போட்டியில் தோற்றுப் போனாள் அங்கம்மாள். இருந்தாலும் பேரனின் அறிவுத்தனமான கேள்விகளைக் கண்டு மனதுக்குள் சந்தோசம் கொண்டாள்.

“அம்மா அம்மா அங்க பாரு அங்க பாரு”

“என்னயா குமரா? என்ன அங்க?”

“அம்மா தூரத்துல பாரு கருவலே காட்டுக்கு நேரா யாரோ வேட்டுப் போடுராங்க வானத்து மேல பாரும்மா. அழகா மின்னுது பாரு அந்த வேட்டு, அம்மா அம்மா நாளைக்கு எனக்கு ஒன்னு வாங்கிக் கொடும்மா, அந்த வேட்டு மாதிரியே”

திடீரென்று அங்கம்மாள் அழ ஆரம்பித்தாள், “அப்பத்தா எதுக்கு அப்பத்தா அழுகுற?” குமரன் அங்கம்மாவிடம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தான்

“சொல்லு அப்பத்தா, சொல்லு அப்பத்தா, ஏன் திடீர்னு அழுகுற?”

அங்கம்மாள் ஒன்றும் கூறாதவலாய் எழுந்து வீட்டிற்க்குள் சென்று முந்தானை சேலையை தரையில் விரித்துப் படுத்துக் கொண்டாள்

“அப்பத்தா சொல்லு அப்பத்தா” என்று குமரன் எழுந்து அங்கம்மாள்  பின்னே சென்றான்

“ஒன்னும் இல்ல குமரா, நீ இங்க வா. கொறவயித்துல எழுந்து போகாத, வந்து சாப்பிடு வா” என்று குமரனை அமர்த்தி உணவினை ஊட்டினாள் ராக்கு

குமரன் மீண்டும், “அம்மா ஏ அம்மா அப்பத்தா அழுகுறா?”    

“அதுலா ஒன்னும் இல்ல விடு, நீ சாப்டு. அப்போ தான் அம்மா நாளைக்கு வரும்போது மத்தாப்பு வாங்கி வருவேன்”

“அம்மா என்க்கு இப்போ நம்ம பார்த்த வேட்டு வாங்கித்தாமா”

“அதுலாம் பெரிய  பையனா ஆன அப்புறமா பொறுத்துர  வேட்டு, அம்மா உனக்கு இப்போ நீ போடுர மாதிரி மத்தாப்பு வாங்கித் தாரேன்” என்று  தன்னிடம் அந்த வேட்டு வாங்கும் அளவுக்கு வசதி இல்லை என்று  குமரனிடம் குடும்ப வறுமையைக் வெளிப்படுத்தாமல், வயதைக் காரணம் காட்டி குமரனை சமாதானப்படுத்தினாள் ராக்கு.

“ஆமா அம்மா நம்ம பாண்டி அண்ணே அப்படித்தேன், அன்னைக்கு இந்த வேட்டு வெடிச்சு கையில பட்டுறுச்சுமா. நானு பெருசா ஆன அப்புறமா இந்த வேட்டு வாங்கித்தாமா, இப்ப எனக்கு மத்தாப்பு வாங்கித்தாமா. ஆனா சிகப்பு  ஒன்னு, பச்ச ஒன்னு, மஞ்சள் ஒன்னு, அப்புறம் இருக்குற எல்லா நிறத்துலயும் எனக்கு மத்தாப்பு வாங்கித்தாமா? உண்மையாவே நாளைக்கு மத்தாப்பு வாங்கிட்டு  வருவியாமா?”

“ஆமா நாளைக்கு வேலைக்கு போயிட்டு வரும் போது வாங்கியாரேன். சாயங்காலம் நீயும் பாண்டியனும் மத்தாப்பு பொறுத்துங்க” என்று குமரனின் எண்ணத்தை திசை திருப்பினாள்

குமரனின் சிறு பிள்ளைக் குணம் மேலோங்க, அவன்  அங்கம்மாளை மறந்து மத்தாப்பினை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டாள்

“அம்மா அங்க எதுக்குமா இந்த நேரத்தல வேட்டு போடுராங்கம்மா? ஆனா பாக்க அழகா இருக்குலம்மா”

“அது கழிவு வேட்டு குமரா, அதான் இந்த நேரத்துல போடுராங்க, அதுல ஒன்னு ரெண்டு வெடிக்கும் ராசா. நீ தண்ணிய குடியா, அம்மா தட்டக் கழுவிட்டு வாரேன். போ போயி அப்பத்தா பக்கத்துல படுத்து தூங்கு, நானும் வாரேன்” என்று குமரனை உள் அனுப்பி விட்டு, ராக்கு செம்புத் தண்ணீர் ஊற்றி தட்டினைக் கழுவிய போது, அவளது கண்ணீரும்  சேர்ந்து தட்டினைக் கழுவியது

ஆம் ராக்கு கண் கலங்கி அழுதாள். அவள் கண்ணீர் துளிகள் தண்ணீருடன் தண்ணீராக தரையில் விழுந்தது. தட்டோடு சேர்த்து முகத்தையும் கழுவி விட்டு, வீட்டிற்குள் நுழைந்தாள் ராக்கு

தன் முந்தானை கொண்டு முகத்தினை துடைத்து தரையில் படுத்தாள். குமரன்  வேகமாக உருண்டு வந்து ராக்கிடம் படுத்துக் கொண்டு, “அம்மா நாளைக்கு வரும் போது மத்தாப்பு வாங்கிட்டு வருவிலம்மா?”

“ஆமா குமரா கண்டிப்பா வாங்கிட்டு வருவேன்”

“அம்மா நாளைக்கு மத்தாப்பு வாங்கிட்டு வருவிலம்மா” என்று கேட்டுக் கொண்டே குமரன் ராக்கினைக் கட்டிக் கொண்டு உறங்கி விட்டான்

ராக்கு குமரனின் தலைமுடியை தடவிக் கொண்டே  உறங்கிவிட்டாள்

பொழுது விடிந்தது. சூரியன் அன்று ஏனோ இருளை கிழித்துக் கொண்டு உதித்தது. நண்பகல் வெயிலை காலையிலேயே சுட்டெரித்துக் கொண்டிருந்தது. குமரன் எழுந்திருத்தான்.

“குமரா சீக்கிரம் கிளம்பு பள்ளிக்கூடத்துக்கு நேராச்சு”

“சரி அப்பத்தா, அம்மா வேலைக்கு போயிருச்சுல?”

“போயிட்டா குமரா ஏன் கேக்குற?”

“இன்னைக்கு சாயங்காலம் வரும் போது அம்மா எனக்கு மத்தாப்பு வாங்கி வாரேன்னு சொல்லிருக்கு”

“ஓ அப்புடியா, சரி சரி பாண்டியன் வந்துட்டன் தேடி. போ ரெண்டு பேரும் பள்ளிக்கூடம் போயிவாங்க”

“ஏய் பாண்டி, இன்னைக்கு எங்க அம்மா மத்தாப்பு வாங்கியாரேன்னு சொல்லிருக்கு. சாயங்காலம் வா, நம்ம மத்தாப்பு பொறுத்துவோம்”

“குமரா நானும் நாளைக்கு எங்க அம்மாவ வாங்கியார சொல்லுவேன்” என்று பேசிக் கொண்டே குமரனும் பாண்டியனும்  பள்ளிக்கூடத்தை அடைந்தனர்

வாய்ப்பாடு சொல்லி முடித்து, படம் பட்டம் என ஆரம்பித்து நண்பகல் வரையிலும், குமரனின் கண்களிலும் மனதிலும் நேற்று வானத்தில் பார்த்த வண்ணங்களையும், மத்தாப்பையும் மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்தான்

நண்பகல் ஆனது. பையில் இருந்து தட்டினை எடுத்துக் கொண்டு குமரனும் பாண்டியனும் சத்துணவுக்காக பள்ளி வரிசையில் நின்றனர்.

திடீரென்று ஓர் சத்தம் கேட்டது. டமார்…. டமார் என்ற அந்த சத்தம் ஒரு நிமிடம் பள்ளிக்கூடத்து  கட்டிடங்களையே அதிரச் செய்தது. குமரன் கையில்  பிடித்திருந்த தட்டு ஒரு நிமிடம் அதிர்ந்தது

குமரன் நடப்பது என்ன என்பது  அறியாமல் திகைத்து நின்ற நேரத்துக்குள் மீண்டும் டமார் ….டமார் என்ற சத்தம் இடைவெளியின்றி கேக்கத் தொடங்கியது

“ஐயையோ பயர் ஆபிஸ் வெடிச்சுரிச்சு போலயே, ஏக சத்தம் கேக்குதே?” என்று சத்துணவு ஊழியர்கள்,பள்ளி ஆசிரியர்கள் என எல்லோரும் எழுந்து கருவேலங்காட்டை நோக்கி ஓடினர். 

என்ன   நடக்கிறது  என்பதே அறியாமல் அவர்களோடு தானும் இறங்கி ஓடினான் குமரன்

கருவேலங்காடே ஒரே புகை மண்டலமாக சூழ்ந்திருந்தது

“ஐய்யையோ என் பிள்ளையக் காணோமே…எங்கம்மாளக் காணோமே…ஏ ஆத்தா போயிட்டியா? அப்பா எங்க அப்பா இருக்க?அம்மா எங்க அம்மா இருக்க? ஐயையோ ராசா!என்ய விட்டுட்டு போயிட்டியே? ஏங்க என்ன விட்டுட்டு போயிட்டிங்களே? இந்த சிறுக்கிய முண்டச்சி ஆக்கிட்டு போயிட்டிங்களே?” என்ற அழுகையும் குமுறலும் கதறுலும் ஊரையே ஒப்பாரிக் கோலமாக்கியது

அந்த கரும்புகைக்குள் ஒவ்வொருவரும் தங்கள் உறவுகளைத் தேடி அலைந்தனர். அங்கம்மாள் அந்தக் கூட்டத்துக்குள் குமரனை அடையாளம் கண்டு ஓடி வந்து கட்டி அணைத்துக் கொண்டாள்

“ராசா குமரா, அப்பத்தாக்கு முடிஞ்ச வரைக்கும் தேடிட்டேன்யா?அம்மால காணோம்யா? இந்த பாதகத்தி மகளுக்கு சரியா கண்ணும்  தெரியல ராசா, நீ போயி அம்மால தேடிப் பாருயா” என்று தன் வார்த்தைகளை முழுங்கி முழுங்கி பேசினாள் அங்கம்மாள்

குமரனுக்கு ஒன்றும் புரியவில்லை எனினும், பயத்தோடும் பதட்டத்தோடும்  தன் தாயினைத் தேடி அந்த கரும்புகைக்குள் நுழைந்தான்

“அம்மா எங்கம்மா இருக்க? அம்மா எங்கம்மா இருக்க?” என்று கத்தினான்

அவன் கால் வைக்கும் இடமெல்லாம் சடலங்களும், மனித உறுப்புகளுமாக கிடந்தது. அதைக் காண காண பயமும் நடுக்கமும் கொண்டான் குமரன்

அதுவரை சிறுவனாக இருந்த குமரன், இந்த நிகழ்வினைக் கண்டதும் மனதளவில் பெரியவனாக பக்குவப்பட்டுக் போனான்

‘நம்ம அம்மா எங்க போயிருப்பா? நம்ம அம்மாளுக்கு ஒன்னும் ஆகிருக்காது. நம்ம அம்மா ஆபிஸ் வெடிக்கையில எங்கயாச்சும் கடைக்கு போயிருப்பா’ என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டான்

‘எங்கயாச்சும் போயிருக்கனும் அவளுக்கு எதும் ஆகிருக்கக் கூடாது எல்லக்காளி’ என்றும்  கடவுளை  வேண்டிக் கொண்டே,மனதை ஒருநிலைப்படுத்தி அமர்ந்திருந்தான்.

“ஏயா குமரா……ஏயா குமரா…..ஐய்யையோ” என்ற அலறல் கேட்டது.

‘இது நம்ம பாண்டியன் அம்மா குரல் தான’ என்று எழுந்து ஓடினான்

தூரத்தில் ஓர் கூட்டம் நின்றது. அந்த கூட்டம், அருகில் இருந்த வேப்பமரத்தினை அண்ணாந்து பார்த்து தலையில் தலையில் அடித்துக் கொண்டது.

குமரன் வேகமாக ஓடினான். கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். கருப்பு பிண்டம் ஒன்று மரத்தின் கிளைகளுக்கு இடையில் தொங்கிக் கொண்டிருந்தது

“குமரன் இல்ல இல்ல என் அம்மா இல்ல….”

“உன் அம்மாதே குமரா” என்று பாண்டியன் அம்மா அழுதாள்.

குமரன் அது தன் அம்மா தான் என்று ஏற்றுக் கொள்ளவில்லை. ”என் அம்மா இல்ல என் அம்மா இல்ல” என்று தலையில் கை வைத்து வேப்பமரத்தடியில் மண்டியிட்டு அழுதான்

மண்டியிட்ட இடத்தில், தரையில் ஓர் நெலிந்த இரும்பு கிடந்தது. குமரன் தன் கண்ணீரைத் துடைத்து விட்டு வேகமாக அந்த இரும்பினை எடுத்து கையில் வைத்து தடவித் தடவிப் பார்த்த அடுத்த கணம் “அம்மா…..அம்மா….” என்ற அவனின் அலறல் சத்தம் கேட்டு, கருவேலஞ் சீமையையே கண்ணீர் விட்டுக் கதறியது 

ஆம், குமரன் பெட்டிக் கடையில் பரிசு எடுத்த போது, அவனுக்கு விழுந்த மோதிரத்தை ஓடி வந்து தன் அம்மாவுக்கு முதன் முதலாக போட்டு விட்டான். அந்த மோதிரம் தான் அது 

தன் தாயின் இரத்தக் கரையும், கரும்புகைகளையும் சுமந்து, நெலிந்து ஓர் இரும்பாய் அங்கு கிடந்தது அந்த மோதிரம்

“காலையில கஞ்சிச்சோறு தூக்கி வந்த ஏ ஆத்தா

மாலை வீடு வர மாட்டனு இந்த பாதகத்தி காண்கலையே

மூணு முடிச்சு போட்ட உம்புருசன் போயி

மூணு வருசம் ஆகலையே

போயிட்டியே ஏ ஆத்தா”

என்று அங்கத்தாயி, , குமரனின் அப்பத்தா ஒப்பாரி வைத்தாள்

“அப்பன்தே விட்டு போயிட்டியான்னா, நீயும் விட்டு போயிட்டியே ராக்கு. இந்த ஒத்தப் பிள்ளைய அனாதை ஆக்கிட்டு போயிட்டிகளே ரெண்டு பேரும்” என்று ஊர் மக்கள் குமரனைக் கட்டிப் பிடித்து அழுதனர்

குமரன் “அம்மா அம்மா” என்று கதறினான்

“அப்பா அழுகாதப்பா… அழுகாதப்பா, நம்ம ராக்கு அப்பத்தா நம்ம கூட தான் இருப்பாங்க அப்பா, அழுகாதப்பா” என தேற்றினான் குமரனின் பிள்ளை

ஆம், வருடங்கள் உருண்டோடி,  இப்போது குமரனுக்கு திருமணமாகி ஓர் மகன் இருக்கிறான். அவன் தான் பெற்றவள் நினைவில் தன்னை மறந்து அழும் தன் தந்தை குமாரனை சமாதானம் செய்து கொண்டிருக்கிறான்

“அம்மா, அப்பாவ அழுக வேணாம்னு சொல்லும்மா”

“அழுகாதிங்க ப்ளீஸ், தீபாவளி அதும் அழுகாதிங்க” என்று குமரனின் மனைவி ஆறுதல் சொன்னாள்.

“வாங்க அப்பா, நம்ம போயி மத்தாப்பு பொறுத்துவோம்” என பிள்ளை அழைக்க

“வா போவோம்” பழைய நினைவில் இருந்து தன்னை மீட்டு, மகனுடன் மத்தாப்பு பொறுத்த சென்றான் குமரன்

“அப்பா இந்தாங்க உங்களுக்கு ஒரு மத்தாப்பு, அம்மாக்கு ஒரு மத்தாப்பு, எனக்கு ஒரு மத்தாப்பு வாங்க பொறுத்துவோம்” என்ற குமரனின் மகன், திடீரென, “அப்பா நம்ம இந்த மத்தாப்ப பொறுத்த வேணாம்பா?” என்றான்

“ஏன் மணி?” என குமரன் கேட்க 

“நம்ம ராக்கு அப்பத்தா மாதிரி எத்தனையோ உயிர் போயிருக்குனா, நமக்கு இது வேணாம்பா. இனிமே இத நாம வாங்காம இருந்துக்கலாம்பா” என்றான் பிள்ளை

குமரன் தன் மகனின் கருணை உள்ளத்தை கண்டு மகிழ்ந்தவன், “மணி… நம்ம பட்டாசு பொருத்துனா என்னைக்காவது பத்துப் பதினைந்து உயிர்கள் தான் போகும். ஆனா நம்ம பட்டாசு வாங்கலனா, தினம் தினம் எத்தனையோ உயிர்கள் பட்டினி கிடந்து சாகும்”

“ஏன் அப்பா அப்படி சொல்றிங்க?”

“மணி… நம்ம ஊர சுத்தி பதினெட்டு கிராமம் இருக்கு. அத்தனை கிராமமும் அந்த ஒத்த பயர் ஆபிஸ்ஸ நம்பித்தே இருக்கு. அங்க வேலை செஞ்சாதே அவங்க வயித்துக்கு சோறு”

குமரனின்  மனைவி குறுக்கிட்டாள், “ஏங்க  பயர் ஆபிஸ் இல்லனா என்ன? நிலம் இருக்குல விவசாயம் பண்ணலாம்லங்க?”

“இல்ல லெட்சுமி, அது நடக்காத காரியம். எங்க கிராமத்த சுத்தி நிலம் இருக்கு. ஆனா, விவசாயம் பண்ண முடியாத வறண்ட நிலம். அத்தனையும் வானம் பார்த்த பூமி, மழை வந்தாதே எங்களுக்கு விளைச்சல். சுத்தி பயர் ஆபிஸ் இருக்கதால வருசம் வார பருவமழை  கூட கையெடுத்து கும்பிட்டு ஓடிரும்

எங்க பதினெட்டுபட்டி கிராமமும், அந்த பயர் ஆபிஸ நம்பித் தான் இருக்கு. இப்ப நம்ம பட்டாசு வாங்கலைன்னா அதனால பாதிக்கப்படப்போறது நம்ம கிராம மக்கள் தான்”

“அப்போ வாங்க அப்பா, நம்ம சந்தோசமா மத்தாப்பு பொறுத்துவோம்” என பிள்ளையும்

“ஆமாங்க வாங்க” என மனைவியும் அழைக்க

“சரி வாங்க” என்று குமரன் தன் மனைவி மகனுடன் மத்தாப்பு பொறுத்தினான்.

மத்தாப்பு சரசரவென்று பற்றி பொறிந்தது. அதில் தெரிந்த வண்ணங்களை பார்த்த குமரனுக்கு, தான் சிறு வயதில் தன் அம்மாவுடன் வானத்தில் கண்ட வண்ணங்கள் மட்டுமே நினைவுக்கு வந்தது

இந்த மத்தாப்பின் ஒவ்வொரு வண்ணங்களுக்கு பின்பும், எத்தனை உயிர்களின் உழைப்பு கண்ணீர் வேதனை உயிர்  ஒழிந்திருக்கிறது என்று தன்  மனதுக்குள்ளேயே நினைத்து வருந்திக் கொண்டான்

மணியின் கையில் இருந்த மத்தாப்பு எரிந்து அணைந்தது

“அம்மா எனக்கு சிகப்பு மத்தாப்பு வேணும்மா?” என்றான்

அதனைக் கேட்டக் குமரன் வானத்தை நோக்கி அண்ணாந்து பார்த்து, “கடைசி வரை எனக்கு நீ சிகப்பு மத்தாப்பு வாங்கி வரவே இல்லையே அம்மா?” என்றபோது குமரனின் கண்ணீர் துளிகள் அவன் எரித்து முடித்த மத்தாப்பு கம்பிகளின் மேல் விழுந்தது

விழுந்தது  குமரனின் கண்ணீர் துளிகள் மட்டுமல்ல, குமரனைப் போன்று தன் தாய் தந்தையை பறிகொடுத்து தவிக்கும் எத்தனையோ தொழிலார்களின் பிள்ளைகளின் கண்ணீரும் தான்

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தங்கமகள் (சிறுகதை) – ✍ சதிஷ், பெங்களூரு

    பயந்து ஓடிய பயம் ❤ (சிறுகதை) – ✍ மாலா உத்தண்டராமன், கடலூர் மாவட்டம்