அக்டோபர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8_பகுதி 9_பகுதி 10 பகுதி 11 பகுதி 12
“நீங்கள் நால்வரும் நல்ல பேரெடுத்து வாழ்க்கையில் முன்னேறினால் உங்கள் சொந்தங்களே உங்களைத் தேடி வரும். தைரியமாக இருங்கள். தனிமை உங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். நன்றாக யோசியுங்கள். சந்தோஷமாக இருங்கள்” என்றார் இன்ஸ்பெக்டர்.
பத்து நாட்கள் கழித்து விஷ்ணு, சுகந்தி இருவருடனும் வல்லபி அங்கு சென்றாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று தான் போனார்கள். ஸிஸ்டர் நான்கு பெண்களையும் வரவழைத்தார்.
அவர்களுடைய சந்தோஷமான முகமும், நம்பிக்கையான பேச்சும் வல்லபிக்கு மிகவும் சந்தோஷம் கொடுத்தது. நால்வரும் ஓடி வந்து வல்லபியை சூழ்ந்து கொண்டனர். தாய்ப் பசுவைத் தேடி வரும் கன்றுக் குட்டிகளைப் பார்ப்பது போல் உணர்ந்தான் விஷ்ணு.
“டாக்டர், ஸிஸ்டர் எங்களைப் படிக்க வைப்பதாகச் சொன்னார். நாங்கள் என்ன படிப்பது என்று கூட முடிவு செய்து விட்டோம்” என்றாள் நர்மதா. இவளும் இன்னொரு பெண் தன்யாவும் திருமணம் ஆகாதவர்கள். அவளும் அவளை ஆமோதித்தாள்.
“அப்படியா?” என்றாள் வல்லபி. சிரித்துக் கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தார் சிஸ்டர்.
“டாக்டர் மேடம், நான், தன்யா இருவரும் நர்ஸிங் படிக்க விரும்புகிறோம். உங்களிடம் கேட்டுவிட்டுப் பிறகு மனுவைப் பூர்த்தி செய்யலாம் என்று நினைக்கிறோம்” என்றாள் நர்மதா.
“படிப்பது நீங்கள் தானே, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்ற வல்லபி. “நீங்கள் இருவரும் என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்?” என்றாள் மஞ்சளாவையும் அவளுடன் இருந்த மற்றொரு பெண்ணான காஞ்சனாவையும் பார்த்து.
“நாங்கள் ஆசிரியர் வேலைக்குப் படிக்க விரும்புகிறோம்” என்றனர் குரல்கள் கம்ம.
“அதற்கு ஏன் உங்கள் குரல் இப்படி கரகரத்து இருக்கிறது?” என்றாள் வல்லபி.
“எங்கள் குழந்தைகள் நினைவாகத்தான் நாங்கள் இந்த கோர்ஸை எடுக்க விரும்புகிறோம். முதலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற வேண்டும். பிறகு தான் டீச்சர் ட்ரெயினிங் எடுக்க முடியும் என்று சொல்கிறார்கள். வகுப்பிற்கு வரும் குழந்தைகள் வடிவில் எங்கள் குழந்தைகளைக் காண ஆசை” என்றனர் இருவரும் பெருமூச்சு விட்டபடி .
“நாங்கள் சொல்லும் வாய் வார்த்தைகள் உங்களைச் சமாதானம் செய்யாது. காலம் தான் உங்கள் வலியைப் போக்க வேண்டும்” என்றாள் வல்லபி கம்மிய குரலில். வல்லபியின் மனதிலிருந்து மஞ்சுளா, காஞ்சனாவின் கலங்கிய குரலும், வாடிய முகமும் மறையவில்லை.
அடுத்த நாள் ஜாகிங் போகும் போது வழக்கம் போல் விஷ்ணுவும் சேர்ந்து கொண்டான் .
“வல்லபி, இரவெல்லாம் தூங்கவில்லையா? உன் கண்களும், முகமும் தெளிவாக இல்லையே?” என்றான் விஷ்ணு.
“மஞ்சுளாவும், காஞ்சனாவும் குழந்தைகளுக்காக உருகியது என் மனதை விட்டு நீங்கவில்லை விஷ்ணு” என்றாள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்து.
“எல்லோருக்கும் பரிதாபப்படு, ஆனால் என்னைப் பற்றி மட்டும் நினைக்காதே” என்றான் விஷ்ணு.
“ஏன், உன்னைப் பற்றி நினைக்காமல் என்ன? சொல்ல வந்ததைப் புரியும் படி சொல் விஷ்ணு” என்றாள் வல்லபி ஓடிக் கொண்டே.
“நான் எத்தனை நாள் உன்னை நினைத்து தூங்காமல் ஏங்கித் தவிக்கிறேன் வல்லபி. நீ இதேப் போல் காலம் கடத்தினால், நாம் வாக்கிங் போகும் போதே ஏதாவது ஒரு அம்மன் கோயிலில் இருந்து தாலி எடுத்துக் கட்டி விடுவேன் ஜாக்கிரதை” என்றான்.
“போடா பூல், தாலி கட்டினால் மட்டும் பெண்டாட்டி ஆகிவிடுவேனா? இந்த பாலாஜியைப் பற்றி யோசித்தீர்களா? அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துத் தரவேண்டும் என்று நான் சொன்னதை மறந்து விட்டீர்களா?” வல்லபி.
“மறக்கவில்லை. அவனை மாமாவும், என் அப்பாவும் ஜெயிலில் போய் பார்த்துப் பேசி இருக்கிறார்கள். அவன் முன்பு போல் முரடனாக இல்லை. ஜெயில் அவனுக்கு ஒரு நல்ல பள்ளிக்கூடம் என்றார்கள். ஆதலால் இரண்டு ஆண்டுகள் தண்டனைக் காலம் முழுவதும் கழிந்து திருந்தி வரட்டும் என்று சொல்கிறார்கள்” விஷ்ணு.
“சிறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று நாம் போய் அவனைப் பார்த்து விட்டு வரலாமா விஷ்ணு?”
“ஓ.எஸ். தாரளமாகப் போய் பார்க்கலாம். அதற்கு முன் நம் திருமணம் எப்போது என்று கூறு. இரண்டு வருடங்கள் கழித்து அவன் விடுதலையான பிறகா?” என்றான் விஷ்ணு, ஓடிக் கொண்டிருந்த அவள் கைகளைப் பிடித்து நிறுத்தி.
கண்களைச் சிமிட்டி, கேலியாக விழுந்து விழுந்து சிரித்தாள் வல்லபி.
“நான் உன்னிடமும், மாமாவிடமும் பாலாஜியின் எதிர்காலம் குறித்த வாக்குறுதி தானே கேட்டேன். நீயே ஓவராகத் திங்க் பண்ணி கல்யாணத்தைத் தள்ளிப் போட்டால் நான் என்ன செய்வது?” என்றாள்
“அடிப்பாவி” என்றான் விஷ்ணு வியப்புடன்.
“பின் என்னவாம், அவன் குற்றத்தின் அளவு தெரியவில்லை. என்னை மட்டும் பயமுறுத்திப் பணம் பறித்தானா? பெண்களைக் கடத்தும் கும்பலுடன் அவனுக்கு என்ன தொடர்பு போன்ற விவரங்கள் தெரியவில்லை. அவன் தண்டனைக் காலம் முடியும் வரை என் வாழ்க்கையை நான் வீணாக்க முடியாது”
“முட்டாள், அதை முதலிலேயே விளக்கமாகச் சொல்ல வேண்டியது தானே. இந்த நேரம் நாம் திருமணம் முடிந்து ஹனிமூன் கூட கொண்டாடியிருக்கலாம்” என்றான் விஷ்ணு .
“நான் சரியாகத் தான் சொன்னேன். விஷ்ணு உன் I.Q. ரொம்ப கம்மி. அதனால் தான் நீ சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. என் விஷ்ணுவை அவ்வளவு நாள் பிரிந்திருக்க என்னால் மட்டும் எப்படி முடியும்?”” என்றாள் கண்களில் கண்ணீரும் முகம் முழுவதும் சிரிப்புமாக.
“போடி போக்கிரி” என்று கொஞ்சினான்.
ஒரு வாரம் கழித்து இருவரும் சிறை அதிகாரிகளின் அனுமதியுடன் பாலாஜியைப் பார்க்கச் சென்றனர். பாலாஜி இவர்களை எதிர்பார்க்கவில்லை, அவன் முகம் அவமானத்தினால் கறுத்தது .
“நான் உங்களை எதிர்பார்க்கவில்லை” என்று முனகினான். ””என்னை மன்னித்து விடுங்கள்” என்று கண்கள் கலங்க கரங்கள் கூப்பினான்.
“பரவாயில்லை, இப்போது உன் கோபம் சரியாகி விட்டதா? இந்தப் பெண் டாக்டர் வல்லபி யார் என்று தெரியுமா?””
“என் அக்கா” என்றான் பாலாஜி.
“அக்கா என்று தெரிந்தே நீ அவளைக் கழுத்தை நெறித்தது, கன்னத்தில் மாறி மாறி அடித்தது, அவள் நகைகளைப் பிடுங்கி விற்றது எல்லாம் நியாயமா?”
“விஷ்ணு மாமா, நான் ஒன்றும் ரொம்ப நல்லவன் இல்லை. ஆனால் பெண்களைத் துன்புறுத்தும் கொடியவனும் இல்லை. உங்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். ஆனாலும் என் அக்காவிடம் நான் இப்படி நடந்து கொண்டதற்குக் காரணம் என் உள்ளத்தில் ஏற்பட்ட பொறாமை தான். மேலும் என் அம்மாவின் தூண்டுதலும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எல்லோரிடமும் வெறுப்பும், பகையும் தூண்டிவிட்ட என் அம்மா இப்போது என்னைப் பார்த்தாலே அவமானம். அவர்களுடைய புது வாழ்க்கைக்கு ஆபத்து என்று என்னைப் பார்க்கவே மறுக்கிறார்கள்” என்றான் பாலாஜி வெறுப்புடன்.
அவனை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் வல்லபி.
“நான் ஒன்று கேட்டால் கோபப்பட மாட்டாயே பாலாஜி?” என்றாள் வல்லபி.
“கேளுங்கள், நான் உங்களுக்கு இழைத்த அநீதிக்கு நீங்கள் என்னை நன்றாக அடித்தால் கூட கோபம் வராது” என்றான் தலை குனிந்தவாறு.
“நீ என்னைக் கட்டிப் போட்டிருந்த போது, உன்னுடன் இரண்டு ஆட்கள் சுற்றிக் கொண்டு இருந்தார்கள் இல்லையா? அவர்கள் பெண்களைக் கடத்தும் கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் என்று போலீஸ் பிடித்ததே, அவர்களுடன் உனக்குத் தொடர்பு உண்டா?”
“சத்தியமாக அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது. உங்கள் மேல் உள்ள கோபத்தில் நான், உங்களை ஓர் அறையில் கட்டி வைத்ததைத் தெரிந்து கொண்டு, உங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிளாக்மெயில் செய்தார்கள். எனக்கு உங்களைப் பழிவாங்க வேண்டும் என்ற கோபத்துடன் நகைகளும் கிடைக்கவே நான் அத்துடன் ஓடி விட்டேன். போலீஸ் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது தான் எனக்கே அவர்களின் விஷயம் தெரியும். என் அக்காவையே அவர்களிடம் காட்டிக் கொடுத்த மகாபாவி நான்” என்றான் தலையில் அடித்துக் கொண்டு.
“பாலாஜி, நடந்ததற்கு வருத்தப்படாதே. இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும். உன் விஷ்ணு மாமா தான் என்னைக் காப்பாற்றி விட்டாரே. உன்னை ஜாமினில் எடுக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம், உனக்கு சம்மதமா?” வல்லபி.
“வேண்டாம் அக்கா. பெண்களைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடைய அந்த இருவரைவிட நான் தான் மோசமானவன். உடன்பிறந்த சகோதரி என்று தெரிந்தும் எந்தக் கயவனும் என்னைப் போல் நடந்திருக்க மாட்டான்” என்றான் தலை குனிந்தவாறு.
“நாங்கள் உனக்கு முன்ஜாமீன் வாங்கப் போகிறோம்” என்று தொடங்கினான் விஷ்ணு.
”வேண்டாம் மாமா, தண்டனைக் காலம் முடியும் வரை நான் இங்கேயே இருக்கிறேன்” என்றான் பாலாஜி பிடிவாதமாக.
“உன்னை சரியான பாதையில் செலுத்திய பிறகு தான் திருமணம் என்கிறாள் உன் அக்கா” என்றான் விஷ்ணு.
“இனி நான் பாதை மாற மாட்டேன் மாமா. நீங்கள் அக்காவை தைரியமாகத் திருமணம் செய்து கொள்ளலாம்” என்றான் பாலாஜி சிரித்துக் கொண்டே.
உற்சாக மிகுதியில், விஷ்ணு மதுரையிலிருந்து மல்லிகா, கனகாவையும் பெரியகுளத்திலிருந்து சுகந்தியையும் அழைத்துக் கொண்டு வல்லபியுடன் தாமரைக் குளம் சென்றான்.
“ஏன் எதற்கு எங்கே போகிறோம்?” என்று ஆயிரம் கேள்விகள் கேட்டாள் வல்லபி.
“சற்றே வாய் மூடி வா பெண்ணே” என்று அவளிடம் கூறிவிட்டு, தன் பெற்றோருக்குப் போன் செய்து அவர்களையும் மூர்த்தியின் வீட்டிற்கு வரவழைத்தான். கனகாவை எல்லோருக்கும் ஜூஸ் போடச் சொன்னான்.
பிறகு மூர்த்தியிடம், “மாமா, வல்லபி திருமணத்திற்கு சம்மதித்து விட்டாள். நீங்களும், மல்லிகா அத்தையும் என் பெற்றோருடன் நிச்சய தாம்பூலம் தட்டை இப்போதே மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று விஷ்ணு உற்சாகமாக கூறினான்.
“வல்லபி என்னை அப்பா என்று கூப்பிட்டால் தான், நான் தாம்பூலத் தட்டை மாற்ற முடியும்” என்றார் மூர்த்தி.
“நான் உங்களை அப்பா என்று கூப்பிடுவதா? எனக்கு உங்களை ஒரு பேஷண்ட்டாகத் தான் தெரியுமே தவிர, அப்பா என்று தெரியாது. என் அம்மா சொன்னால் தானே எனக்கு அப்பா யார் என்று தெரியும்” வல்லபி.
“மல்லிகா நீ சொல், வல்லபியின் அப்பா நான் தான் என்று சொல்”” என்றார் மூர்த்தி ஆவலுடன்.
“நீங்கள் அப்பாவாக எனக்கு எதுவும் செய்யவில்லை. பிறகு எப்படி உங்களை என் அப்பா என்று சொல்லுவார்கள்?”
அதுவரை அமைதியாக இருந்த மல்லிகா அப்போது தான் வாயைத் திறந்தாள்.
“அசடு மாதிரிப் பேசாதே வல்லபி. நீ இப்படியெல்லாம் பேசினால் என் கற்பையே சந்தேகப்படுவது போல். நான் தான் உனக்கு அம்மா என்றால் இவர் தான் உன் அப்பா. கோவலன் வழி மாறியதால் கண்ணகி அவனை ஒதுக்கி விடவில்லை. அதே மாதிரி தான் நானும். எங்கள் பிரிவை யாரும் சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்” என்றாள் மல்லிகா கோபமாக.
வல்லபி அவளை விந்தையாகப் பார்த்தாள். மூர்த்தி டக்கென்று மல்லிகாவின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“இது போதும் மல்லிகா. என் மனைவியின் இந்தப் பேச்சை மட்டுமே கொண்டு நான் என் வாழ்நாளில் மீதியை வாழ்ந்து விடுவேன்” என்று விம்மினார்.
மரகதம், தன் அண்ணாவை சமாதானம் செய்ய மூர்த்தியின் அருகில் வந்தாள்.
உடனே இராமச்சந்திரன், “மரகதம் இங்கே வா. கணவனும் மனைவியும் மனம் விட்டுப் பேசும் போது, நீ ஏன் நந்தி மாதிரி குறுக்கே போகிறாய்? இதேபோல் அவர்களுக்கிடையே போய் தான் இவ்வளவு பெரிய பிரிவு ஆயிற்று” என்று அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டார்.
“எனக்கு எவ்வளவு கோபமும், அவநம்பிக்கையும் உங்கள் மேல் ஏற்பட்டதோ, அதே அளவு பாலாஜிக்கும் ஏற்பட்டிருக்கும். அவனுடைய அந்த ஏமாற்றமும், கோபமும் எங்கள் மேல் திரும்பக் கூடாதென்று தான் நான் திரும்பத் திரும்ப அவனுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்கிறேன்” என்றாள் வல்லபி.
“நான் என்னுடைய அசையும், அசையாத சொத்துக்கள் எல்லாமே உன் பேரில் எழுதி செட்டில்மென்ட் டீட் செய்து ரெஜிஸ்டரும் செய்து விட்டேன். என் பெயரில் உள்ள ஐந்து ஏக்கர் காய்கறித் தோட்டத்தை முதலில் அவன் பொறுப்பில் கொடுக்கலாம். அவன் அதைக் கண்டபடி உபயோகிக்காமல், அதன் மேல் கடன் வாங்காமல் ஒழுங்காகப் பயிர் செய்து, லாபம் காட்டினால் பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம்” என்றார் மூர்த்தி.
“வெறும் ஐந்து ஏக்கரா?” வல்லபி.
“ஒரு ஏக்கர் ஐந்து கோடி வல்லபி. ஐந்து ஏக்கர் என்றால் இருபத்தி ஐந்து கோடி. அதை யாருக்காவது மனை போட்டு விற்காமல் இருக்கிறானா என்று முதலில் பார். அவன் ஒழுங்காக நடந்தால் மற்றதெல்லாம் பிறகு செய்யலாம்” மூர்த்தி.
வல்லபி, விஷ்ணுவின் நிச்சயதாம்பூலம் சிம்பிளாக, ஆனால் சிறப்பாக நடந்தது. புதிய நிச்சயதார்த்த புடவைகள் இல்லை, நகைகள் இல்லை, வெறும் தாம்பூலத் தட்டுடன் சரி.
ஆனால் விஷ்ணுவின் சந்தோஷத்தையும், அவன் செய்யும் கலாட்டக்களையும் பார்க்கும் போது வல்லபிக்கு, கோலாரில் உள்ளத் தங்கச் சுரங்கமும், கிம்பர்லியில் உள்ள வைரச் சுரங்கமும் சேர்ந்தாற்போல் அவனுக்குக் கிடைத்தது போல் தோன்றியது.
‘இந்த காதலுக்கு இத்தனை சக்தியா? நம்மையும், நம்மைச் சுற்றி உள்ள எல்லோரையும் மறக்கச் செய்கிறது. எங்கும் விஷ்ணு, எதிலும் விஷ்ணு, என்ற நினைப்பே. இன்னும் கொஞ்ச நாள் பிரிந்திருந்தால் அவன் நினைப்பில் பைத்தியம் பிடித்து விடுமோ?’ என்று பயந்தாள் வல்லபி.
கார் மெதுவாகத் தாமரைக் குளத்தில் இருந்து மதுரைக்குச் சென்று கொண்டிருந்தது. அந்த இன்பமான நினைவுகளை அசை போட்டுக் கொண்டு விஷ்ணுவின் அருகில் காரில் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தாள் வல்லபி. பின்னால் அவள் அம்மா மல்லிகாவும், கனகாவும் உட்கார்ந்து இருந்தார்கள்.
மல்லிகாவின் நினைவுகளோ மூர்த்தியைச் சுற்றிச் சுற்றி வந்தது. கடைசியில் வல்லபி அப்பா என்று கூப்பிட்டவுடனே, சின்னக் குழந்தை போல் அவளைத் தலைக்கு மேல் தூக்கி, கன்னத்தில் ஒரு முத்தமிட்டு ஒரு சுற்று சுற்றிய பிறகே அவளை இறக்கினார்.
“மாமா, என்ன வேலை செய்தீர்கள்? நானே பலமுறை தூக்க முயற்சி செய்து முடியாமல் தோல்வியை ஒப்புக் கொண்டு சரண்டர் ஆகியிருக்கிறேன். நீங்கள் உடம்பு முழுவதும் நோய்களை வைத்துக் கொண்டு என்ன வேலை செய்தீர்கள்?” என்று கோபித்துக் கொண்டான் விஷ்ணு.
வல்லபி அவனை லேசாக இடித்து, செல்லமாக முறைத்தாள்.
“போடா பூல். என் பலத்தைப் பற்றி உனக்குத் தெரியாது. உன் அத்தை மல்லிகாவைக் கேட்டுப் பார்” என்று மல்லிகாவையும் வம்பிற்கு இழுத்தார்.
மல்லிகா காதில் விழாதது போல் எழுந்து உள்ளே போனாள். பின்னால் சிரிப்பலைகள் எழுந்து அவள் கால்களைத் தடுமாற வைத்தது. சிரிப்பு இன்னும் பலமாக எழுந்து அவளை மேலும் தடுமாற வைத்தது.
இந்த “வல்லபி” நாவல் அச்சுப் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. நாவலை வாங்க விரும்பும் வாசகர்கள், கீழே பகிர்ந்துள்ள ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் QR Code Scan செய்து தொகையை செலுத்தி Screen Shot எடுத்து, 77082 93241 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியுடன் பகிருங்கள். விரைவில் புத்தகம் உங்களை வந்து சேரும். அல்லது 77082 93241 என்ற எண்ணில் அழைத்தும் ORDER செய்யலாம். நன்றி
(தொடரும் – திங்கள் தோறும்)
GIPHY App Key not set. Please check settings