in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 13) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12

“எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள் அம்மா. உன் அண்ணி கூட ஞாயிற்றுக்கிழமை உன்னை வந்து பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள்” என்றான்.

“மத்தியானம் சாப்பாட்டிற்கு வருவது போல் வந்து விடுங்கள் அண்ணா”

“அட நீ வேறே அம்மா. இதுதான் சாக்கு என்று  குழந்தைகள் வீட்டுப்பாடம் படிக்க மாட்டார்கள். சாயந்திரம் வந்து ஒரு மணி நேரம் இருந்து விட்டு திரும்பி விடுகிறோம். கல்யாண சாப்பாடு தான் இருக்கிறதே, எல்லோரும் வந்து ஒரு பிடி பிடிக்கிறோம்” என்று சிரித்த சரவணன், “வத்சலாவைப் போய்ப் பார்த்தீர்களா சியாமளா ?” என்று கேட்டான்.

“போய்ப் பார்த்தோம். மாலை வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தார்கள், ஆனால் ஏனோ வரக் காணோம்” என்றாள்.

‘சரவணனிடமோ அல்லது முருகேசனிடமோ பேசும் போது தனக்கு எந்தத் தயக்கமும் தோன்றவில்லை, ஆனால்  வத்சலாவின் கணவரிடம் மட்டும் தன்னால் ஏன் பேச முடியவில்லை. ஏன்… பேசப் பிடிக்கவில்லை என்று கூட சொல்லலாம்’ என்று நினைத்துக் கொண்டாள் சியாமளா.

மாதவனை அட்மிட் செய்திருந்த மருத்துவமனையும் வந்து விட, ஆட்டோவைப் பார்க் செய்தான் சரவணன். சியாமளாவிடம் சாப்பாடும் தண்ணீரும் எடுத்து வந்த பையைக் கொடுக்காமல், சரவணனே வார்டிற்கு எடுத்து வந்தான்.

ஐ.சி.யு.விலிருந்து ஸ்பெஷல் வார்டிற்கு மாதவனை மாற்றியிருந்தார்கள். நிர்மலாவும் விக்னேஷும் உள்ளே உட்கார்ந்து கொண்டு ஏதோ பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தார்கள். மாதவன் கண்களை மூடிப் படுத்திருந்தார். இவர்கள் காலடி சத்தத்தில் தான் கண்களை விழித்துப் பார்த்தார்.

சியாமளா வாழையிலையை வைத்து அவர்கள் இருவருக்கும் சாப்பாடு வைத்தாள். “சியாமளா, நீங்கள் இருவரும் இவ்வளவு செய்வதே அதிகம்… இதில் சாப்பாடெல்லாம் வேறே எடுத்து வருகிறீர்களே” என்றாள் நிர்மலா.

“இன்று ஒரு நாள் தானே அக்கா, தினம் ஹோட்டலில் சாப்பிட்டால் நன்றாக இருக்காது” என்றாள் சியாமளா.

மாதவனுக்கு மருத்துவமனை உணவு தான் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், சியாமளா பாத்திரங்களை லேசாக அலம்பி எடுத்துக் கொண்டாள்.

“விக்னேஷ், நாளையிலிருந்து நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள். தினமும் எங்கள் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தால் உங்கள் பிழைப்பு என்னாவது? இன்று இரவு வீட்டில் போய் தூங்கி ரெஸ்ட் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கே இங்கு பொழுது போகவில்லை. இன்னும் ஒரு எக்ஸ்-ரே எடுத்து விட்டு இரண்டு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து செய்து விடுவார்கள். ஏதாவது தேவையென்றால் நானே கூப்பிடுகிறேனே ப்ளீஸ்” என்றாள் நிர்மலா. சரவணனும் அவர்களோடு கொஞ்ச நேரம் பேசி விட்டு மூவருமாகக்  கிளம்பினார்கள்.

வத்சலாவும் அவள் கணவரும் குழந்தையோடு மறுநாள் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டார்கள். தர்ஷணா இரவு படித்து விட்டுப் படுக்கவே இரவு இரண்டு மணி ஆகி விடுவதால் காலை எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பாள். விக்னேஷும் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். விஷ்ணு எழுந்து டிபன் சாப்பிட்டு விட்டு ஸ்கூலுக்குப் போக தயாராக இருந்தான். அத்தையும் சியாமளாவும் அடுப்படியில் இருந்தனர்.

வரும்போதே வத்சலா, “அம்மா” என்று கூவிக் கொண்டே வந்தாள்.  அவள் கணவர் கௌசிக், ஜீன்ஸும் டீஷர்ட்டுமாகப் பார்க்க ஹீரோ மாதிரி இருந்தார், ஆனால் கண்களில் மட்டும் கசாப்புக் கடைக்காரன் பார்வை. வத்சலா கத்திய சப்தத்தில் தர்ஷணாவும் விக்னேஷும் எழுந்து வந்தனர். தர்ஷணாவைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டான் கௌசிக்.

“இந்த செகண்ட்  ஹீரோயின் யார் வத்சலா?” என்றான் கௌசிக். அவன் கண்கள் அப்போது பார்த்த பார்வைக்கும், அவன் முகத்திற்கும் சம்பந்தமில்லை.

“நான் ஹீரோயின் இல்லை, ராட்சசி… பிய்த்துப் போட்டு விடுவேன், ஞாபகமிருக்கட்டும்” என்று உறுமி விட்டு குளிக்கப் போய் விட்டாள் தர்ஷணா. அவள் கோபத்தையும் வார்த்தைகளையும் கேட்டு திகைத்து நின்று விட்டான் கௌசிக்.

தர்ஷணா கொடுத்த பதில் விக்னேஷிற்கு திருப்தியாக இருந்தது. தலை குளித்ததால் தலையில் சுற்றிய மெல்லிய ஈரிழைத் துவாலையோடு சியாமளாவும் அவளைத் தொடர்ந்து அம்மாவும் வெளியே வந்தார்கள்.

“வாருங்கள்” என்று இருவரையும் பொதுவாக அழைத்து விட்டு, “உட்காருங்கள், காஃபி எடுத்து வருகிறேன்” என்று சமையலறைக்குள் சென்று விட்டாள் சியாமளா. வத்சலாவின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டாள் அம்மா.

அப்போது ஸ்கூல் யுனிபார்ம் போட்டுக் கொண்டு, காலில் சாக்ஸோடு உள்ளே வந்த விஷ்ணு, “அக்கா… லஞ்ச் பாக்ஸ் கொடு, ஸ்கூல் பஸ் வரும் நேரமாகிவிட்டது” என்று லஞ்ச் பாக்ஸை வாங்கிக் கொண்டான். மாமா வாங்கிக் கொடுத்த  நைக்கீ ஷூ-வையும் போட்டுக் கொண்டு வெளியே போய் பஸ்ஸுக்காக்க் காத்திருந்தான்.

“அடேயப்பா, மொத்தக் குடும்பமும் இங்கே தான் டேரா போட்டிருக்கிறதா?” என்றான் கௌசிக் கேலியாக.

விக்னேஷின் அம்மாவிற்குக் கூட கௌசிக்கின் பேச்சுப் பிடிக்கவில்லை என்பதை அவள் முகமே காட்டிக் கொடுத்தது.

சூழ்நிலையை மாற்றுவதற்காக சிரித்துக் கொண்டே, “தர்ஷணாவை இரண்டாவது ஹீரோயின் என்றீர்கள், முதல் ஹீரோயின் யார்?” என்று கேட்டாள் வத்சலா. அவன் தன்னைத் தான் சொல்லப் போகிறான் என்று திடமாக நம்பினாள்.

“முதல் ஹீரோயின் சியாமளா தான்” என்றான் இளித்துக் கொண்டே.

“மாப்பிள்ளைக்கு அந்நியப் பெண்களிடம் மரியாதையுடன் எப்படி பேசுவதென்று தெரியவில்லை” என்றான் விக்னேஷ் உள்ளடக்கிய கோபத்துடன்.

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அம்மாவே ஏதாவது  திட்டி விடுவாள் என்று பயந்த வத்சலா, வாங்கி வந்த பூக்களையும் பழங்களையும் ஒரு தட்டில் எடுத்து வைத்தாள். கணவன் பேச்சிலுள்ள வக்கிரத்தையும் குரோதத்தையும் புரிந்து கொண்டாள் வத்சலா, ஆனால் ஏன் இப்படிப்  பேசுகிறான் என்று புரியவில்லை.

அப்போது சமையலறையிலிருந்து சியாமளா, “வத்சலா அக்கா” என்று அழைத்தாள்.

“என்ன சியாமளா?”  என்று கேட்டுக் கொண்டு உள்ளே போனவள், இரண்டு டம்ளர் டீ யோடு வந்தாள்.  ஒன்றைத் தன் கணவனிடமும் ஒன்றை விக்னேஷிடமும் கொடுத்தாள்.

தர்ஷணா, விக்னேஷ் மாமா வாங்கிக் கொடுத்த அழகான, காஸ்ட்லியான சுடிதரோடு, ஷேம்பூ போட்டு குளித்த தலைமுடி பறக்க சமையலறைக்கு வந்தாள். பசிக்கு இறை தேடும் வேங்கை… ஆட்டுக் குட்டியைப் பார்ப்பது போல அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் கௌசிக். அதையும் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் விக்னேஷ்.

சமையலறையிலிருந்து லஞ்ச் பாக்ஸோடு வந்த தர்ஷணா, அத்தையிடமும், வத்சலாவிடமும் விடைபெற்றுக் கொண்டு, சற்று தள்ளி நின்றிருந்த விக்னேஷிடம் ஏதோ சொல்லி சிரித்து விட்டு சிட்டாகப் பறந்து விட்டாள்.

வீட்டின் சூழலைப் புரிந்து கொண்டாள் வத்சலா. விக்னேஷிற்கு கோபம் அதிகமானால் கையை நீட்டி விடுவான் என்பதும் நன்கு தெரியும், அதனால் எல்லோரிடமும் சீக்கிரமே விடை பெற்று கௌசிக்கையும் இழுத்துக் கொண்டு போய் காரில் ஏறினாள். அவர்கள் கிளம்பி காரில் ஏறிச் சென்றதும், தலையில் அடித்துக் கொண்டாள் அத்தை.

“அவன் தன் போக்கை மாற்றிக் கொள்ளவேயில்லை அம்மா” என்றான் விக்னேஷ்.

“நரி எப்படி நன்றியுள்ள நாயாகும்? வத்சலாவின் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ?” என்றாள் அத்தை சலித்துக் கொண்டே.

வத்சலாவும் அவள் கணவனும் சென்ற பிறகு, சியாமளா வெளியே வந்து அவசர அவசரமாகப் பள்ளிக்கு கிளம்பினாள். விக்னேஷ்  வழக்கம் போல் சியாமளாவைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல தயாராகாமல், லுங்கி பனியனோடு உட்கார்ந்திருந்தான். நேற்று முழுவதும் மருத்துவ மனையில் இருந்த களைப்பு, இன்று இந்த கௌசிக் நடந்து கொண்ட முறையால் வந்த கோபம்.

“மாமா, நான் பஸ்ஸோ அல்லது ஆட்டோவோ பிடித்துக் கொண்டு ஸ்கூலுக்குப் போகவா?” என்றாள் லேசான பயத்துடன்.

“மேலே ஷர்ட்டை மட்டும் போட்டுக் கொண்டு வந்து விடுகிறேன், உன்னை டிராப் செய்து விட்டு வந்து நான் ரெடியாகிக் கொள்கிறேன்” என்றவன், அம்மாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஆட்டோவில் போகும் போது, “மாமா, என் மேல் கோபமா?” என்றாள் லேசான பயத்துடன்.

“சியாமளா, நீ ஏன் அநாவசியமாக பயப்படுகிறாய்? அந்த கௌசிக் பேசியதற்கு நீ என்ன செய்வாய். என் சியாமளியை எனக்கு நன்றாகத் தெரியும்” என்றவன், அவளை திரும்பிப் பார்த்து சிரித்தான். பின்னால் உட்காரந்திருந்த சியாமளா, அவன் தோள் மேல்  தனது வலது கையினை வைத்தாள்.

“ஏன் மாமா சிரிக்கிறீர்கள்?”

“தர்ஷணா  கோபத்துடன் சொன்னாளே, நான் ஹீரோயின் இல்லை ராட்சசி என்று… அதை நினைத்துக் கொண்டேன்” என்றவன்  மறுபடியும் சிரித்தான். சியாமளாவும் அவனோடு சேர்ந்து சிரித்தாள்.

“அறிமுகமில்லாதவரிடம் அவள் அப்படிப் பேசியது தவறில்லையா?”

“முன் பின் தெரியாத ஒரு பெண்ணை, ஒருத்தன்  வார்த்தைகளால் அசிங்கப்படுத்தினால் அந்தப் பெண் அதைக் கேட்டுக் கொள்ள வேண்டுமா? தர்ஷணா தன் மனதில் உள்ள கோபத்தை வெளிப்படுத்தினாள். அவள் தைரியத்தை நான் மதிக்கிறேன்” என்றான் விக்னேஷ்.

அன்று சவாரி முடிந்து விக்னேஷ் வீட்டிற்கு வரவே இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது . அத்தைக்கு சீக்கிரம் சாப்பாடு போட்டு மாத்திரைகளையும் கொடுத்த சியாமளா, பிளட் டெஸ்டும் செய்தாள். விஷ்ணுவிற்கும் தர்ஷணாவிற்கும் சாப்பாடு போட்டு பாடம் என்று படிக்க அனுப்பி விட்டாள் .

விக்னேஷ்  இரவில் வீட்டிற்கு வந்த பிறகும் எவ்வளவு நேரமானாலும் தினமும் குளித்து விடுவான்.  “இல்லையென்றால் காற்றில் பறக்கும் தூசுகளும் வியர்வையும் சேர்ந்து கசகசப்பாய் இருக்கும், தூக்கம் வராது” என்பான். அவன் குளித்து விட்டு வருவதற்குள் சாதத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சூடு பண்ணி விட்டாள் சியாமளா. எல்லாவற்றையும் கொண்டு வந்து வைத்தவள், இரண்டு சாப்பாடு தட்டும் வைத்தாள்.

“சியாமளா, இன்னுமா நீ சாப்பிடவில்லை? மணி பத்தரை ஆகி விட்டதே. நீ சாப்பிட்டு எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டுப் படுத்துக் கொள்ள வேண்டியது தானே. ரெஸ்ட் எடுத்து வேலை செய்ய வேண்டும் சியாமளா, இப்படி ஓய்வில்லாமல் வேலை செய்தால் உன் உடம்பு கெட்டு விடும்” என்றான் பரிவுடன்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ரட்சகன் (குறுநாவல் – பகுதி 6) – சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    வாழ நினைத்தால் வாழலாம் (சிறுகதை) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை