in

தாயின் தவிப்பு (சிறுகதை) – ✍ பத்மா ராகவன்

ஏப்ரல் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ந்த ஆற்றில் நீர் ஓடிக்கொண்டே இருக்கும். எந்நாளும் வற்றாது. அதன்கரையில் ஒரு பிரமாண்டமான அரசமரம். வயது நூறோ இல்லை அதற்கும் மேலோ. யார் கண்டா?

ஆற்றுத்தண்ணீர் தரும் வளமையில் கப்பும் கிளையும் அடர்த்தியான இலைகளுமாக, அதன் அடியில் நின்றால் சூரிய வெளிச்சம் கண்ணில் தெரியாத அளவு படர்ந்து நிழல் தரும் பிரமாண்ட மரம் அது.

அதனடியில் ஒரு விநாயகரும், சில நாகர்களும் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் குடியேறி எத்தனை ஆண்டுகள் ஆகிறதோ, அவர்களே அறிவர்.

இந்த மரம் நிழல் மட்டுமா தருகிறது? பறப்பன, ஊர்வன போன்ற பல ஜந்துக்களுக்கு இருக்க இடம் அளிக்கிறதே. தத்தித் தாவும் குரங்குகளுக்கு இருப்பிடத்துடன் விளையாட்டு மைதானமும் இதுவே.

அந்தி மயங்கியதும் தங்கள் இருப்பிடமான இம்மரத்தில் அடைக்கலம் அடையும் பலவித பறவைகள் எழுப்பும் ஒலி அலாதியான சுநாதமாக மனதை மகிழ்விக்கும்.

சரி. கதைக்கு வருவோம்.

இம்மரத்தின் ஒரு கிளையில்தான், நம் கதாநாயகர் காக்கையாரின் கூடு இருக்கு. சமீபத்தில்தான் நாலு குஞ்சுகள் பொரித்திக்கிறது அக்காக்கை. 

குஞ்சு பொரித்த நாள்முதல், ஒருநாள் கூட நிம்மதி இல்லை அந்தத் தாய்க்கு. காரணம், இதன் கூட்டுக்குப் பக்கத்துக் கூடு, பருந்தாருடையது. அவர், குஞ்சுகளைப் பார்க்கும் பார்வை இருக்கிறதே… வயிற்றைக் கலக்குகிறது.

குஞ்சுகளுக்கு இரை தேடப் போயிருக்கும் சமயம், பருந்து நம் குழந்தைகளைக் கபளீகரம் செய்து விடுமோ என மனம் பதை பதைக்கிறது.

அது மட்டுமல்ல. கீழே உள்ள மரப்பொந்தில் நாகராஜா குடியிருக்கார். அசந்தால் லபக் செய்யக் காத்திருக்கிறார்.

போதாதற்கு இந்தக் குட்டிக் குரங்குகள் அடிக்கும் லூட்டி வேறு தாங்க முடியலை. கிளைக்குக் கிளை தாவி விளையாடும்போது, நம்ப வீட்டை குஞ்சுகளோடு சேர்த்துத் தள்ளி விட்டுவிடுமோ என்று நினைத்து அது வேறு வயிறு கலங்குகிறது.

ஆனால் இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட்டு, குழந்தைகளுடன் அங்கேயே காவல் இருக்க முடியுமா என்ன? புவ்வா யார் தருவா? பெத்த குழந்தைகளுக்குக் காவலிருக்கேன்னு பட்டினி போட எந்தத் தாய்க்குதான் மனசு வரும்? தவிக்கிறது தாய்மனம். குஞ்சுகளோ, திறந்த வாய் மூடாமல் பசி மயக்கத்துடன் அம்மாவையே பார்க்கும் போது, அனைத்தையும் மறந்து இரைதேட ஓடித்தானே ஆகணும்.

அந்தத் தவிப்பான தாய்க்கு, குழந்தைகளை விட்டு போகும் போது தெரிந்த விஷயம் ஒன்றே. பக்கத்திலுள்ள ஜெண்பக மரத்திலிருந்து உதிர்ந்த பூக்களின் இதழ்களை அலகால் கொத்தி மரத்தடி விநாயகரின் காலில் போட்டு, “நான் திரும்பி வரும்வரை என் குழந்தைகளுக்கு நீதான் காவல். ஜாக்ரதையா பாத்துக்கோ” எனக் கண்ணீர் மல்க ப்ரார்த்தித்து விட்டுதான் பறந்து போகும்.

ஆச்சு இன்னும் 3, 4 நாளில் குஞ்சுகளுக்குப் பறக்கத் தெரிந்துவிடும். அதுவரை காப்பாத்திட்டா கவலை இல்லை. இன்னிக்கு இரை தேடக் கெளம்பணும். ஆனால் பறவைகளுக்கே உள்ள அபூர்வ சக்தி, இன்று மதியத்துக்குமேல் பெருமழை வரப்போவதை கட்டியம் கூறுகிறது, குழந்தைகளோ பசியில்  தவிக்கிறது.

“சரி. சீக்கிரமே திரும்பிடலாம்” என்ற எண்ணத்துடன் வழக்கப்படி விநாயகரை வணங்கி பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, மனசில்லாமல் புறப்பட்டது அந்தத் தாய்ப்பறவை.

ஆனால் இன்று என்ன சோதனை? வெகுதூரம் பறந்தும் இரையே கிடைக்கலை. மழை வருவதற்குள் திரும்பணும் என்ற எண்ணம், பசிவாட்டத்தில் தவிக்கும் குழந்தைகளின் முகம், அவைகளைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் ஆபத்து ஏனப் பலவாறான யோசனையில், வெறியுடன் கண்மண் தெரியாமல் பறந்து வெகு தொலைவு வந்து விட்டது.

“அதோ அத்திமரம். நிறைய பழங்கள் விழுந்திருக்கே. இதோ இந்தப்பழம் நிறைய புழுக்களோடு இருக்கு. இவ்வளவு பழங்கள் இருந்தாலும் என்னால் ஒன்றுதானே எடுத்துப் போக முடியும்? இந்தப்புழு மிகுந்த பழத்தையே எடுத்துக்கறேன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும்” என்று நினைத்து பழத்தை அலக்கில் கொத்திக் கொணாடு திரும்ப வந்தவழியே பறந்தது.

அப்போதான் உறைத்தது தான் வெகுதூரம் வந்த விஷயம்.  “அய்யோ திரும்புவதற்குள் மழை புடிச்சுண்டுடுமே. குழந்தைகள் தவிக்குமே” என்ற பரபரப்பு தொத்திக்கொள்ள வேகமா பறந்தது.

என்ன பறந்து என்ன? திரும்புவதற்குள் அந்தி சாய்ந்து விட்டது. அரக்கப்பறக்க ஓடிவந்து பாத்தா, பலத்த காற்றுடன் பெரிய மழை பொழிந்து, மரத்திலிருந்த எல்லா பறவைகளின் கூடுகளும் காணாமல் போயிருந்தன. ஆற்றில் அடித்துப் போயிருக்க வேண்டும். மரத்தில் ஒரு ஜீவராசியும் இல்லே.

ஓ…என்று அழுதபடி மரத்தையும் தனது கூடு இருந்த இடத்தையும் சுற்றி சுற்றி வந்தது தாய்ப்பறவை. ஆண்டாண்டு அழுதாலும் மாண்டார் வருவாரோ.

“குழந்தைகள் போனபின் எனக்கு எதற்கு வாழ்வு. நானும் அவர்கள் வழியிலேயே இந்த ஆற்றில் குதித்து உயிரை விடுகிறேன்” போகுமுன்  அந்த விநாயகரைப் பாத்து, “காப்பாத்தாமல் கைவிட்டுட்டியேன்னு கேட்டுட்டு போறேன்” என்றபடி அழுதவாறு விநாயகர் சிலையின் முன் சென்று, அழுது அரற்றியபடி “துரோகி துரோகி” எனத் திட்டியது.

தவிப்பில் பெருகிய கண்ணீர், விநாயகரின் கால்களை அபிஷேகம் செய்தது. அனைத்தையும் கவனித்தபடி சிலையாய் இருந்தார் விநாயகர்.

“இது என்ன? ஏதோ கீச் கீச் சத்தம். எங்கிருந்து வரது?” சுற்றுமுற்றும் பார்த்தது தாய்பறவை. சற்று தூரத்தில் விநாயகர் மேல் சாற்றியிருந்த மழையில் நனைந்து ஈரமான வஸ்த்ரம் கிடந்தது. அங்கிருந்துதான் அந்த சப்தம்.

பரபரவென நடந்து ஓடி அலக்கால் அந்தத் துணியை விலக்கியது. என்ன ஆச்சரியம். அந்த வஸ்த்ரத்தின் அடியில் இப்பறவையின் கூடு. அதில் மிக பத்திரமாக குழந்தைகள். அவைபோட்ட சப்தம்தான் அது. தாயைக்கண்ட மகிழ்ச்சியில் கூப்பாடு போட்டது.

தன் குழந்தைகள் பத்திரமாக இருப்பதைப் பார்த்த அந்தத் தாயின் உணர்ச்சிகளை விவரிக்க வேண்டுமா? ஆனந்தக் கூத்தாடி முத்தமழை பொழிந்தது. விரக்தியில் தூக்கிப் போட்டிருந்த பழத்தை தேடி எடுத்துக் குழந்தைகளுக்கு ஊட்டி மகிழ்ந்தது. ஆனந்தத்தை வெளிப்படுத்தும் வழி தெரியாமல், கூட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது.

அப்போதுதான் அதற்கு உறைத்தது, இந்த அதிசயம் விநாயகப் பெருமானால்தான் சாத்யமாயிற்று என்பது. ஆம் அவர்தான் காற்றடிக்கும் போது கூடு ஆற்றில் விழாமல் தன் பக்கம் சேதமின்றி விழவைத்தது.

இலைகள் மூலம் மழைநீர் விழுந்து குழந்தைகள் நனைந்து குளிரில் தவிக்காமல் இருக்க தன் வஸ்தரத்தை பறக்கச் செய்து மூடியது. அனைத்துமே அவர் விளையாட்டுதான்.

யோசித்து யோசித்து அனைத்தையும் புரிந்து கொண்ட தாய்ப்பறவை, நூறு ப்ரதட்சணங்கள் செய்து, விநாயகப் பெருமானை வணங்கியது. திட்டியபோது எப்படிக் கல்லாய் உட்காந்திருந்தாரோ, இப்போ சந்தோஷப்புலம்பலைக் கேட்டும் அதே மாதிரி உக்காந்திருக்கார் அந்த பரமாத்மா.

நீதி… எந்தக் கடவுளும், தன்னை நம்பிய பக்தரைக் கைவிடுவதில்லை. எந்த விதத்திலாவது காப்பாற்றி விடுவார். கடவுள் இல்லையேல், உயிரினங்கள் வாழ்வதேது.? கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மெல்லப் பிறந்தது அன்பு (சிறுகதை) – ✍ பீஷ்மா

    எழுத்தாளர்களுக்கான உலக சாதனை பயணத்தில் பங்கேற்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு