ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
கருவேலங்காடு தனது பூக்களை உதிர்த்து தரையெல்லாம் மஞ்சள் கம்பளம் விரிந்திருந்தது. அருநிழல் ஆரவாரமமற்ற சூழல் கதிரவனும் மயங்கிக் கொண்டிருந்தான். மேகக்கூட்டங்கள் இலவம் பஞ்சாய் பறந்து கொண்டிருந்தன.
மனோகரன் வாத்தியார் நீலமலை பள்ளிக்கூடத்துக்கு மாத்தலாகி வந்து அன்றோடு இரண்டு மாதங்கள் மட்டுமே கழிந்திருந்தன. புத்தகம் படிப்பதற்காக அந்த ஊரைச் சுற்றி ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களை தேடிச் சென்று, அங்குள்ள பாறைகளில் அமர்ந்து, புத்தகத்தை தன்னை மறந்து படித்துக் கொண்டிருப்பார்.
அன்று கருவேலங்காட்டில் ஆள் நடமாட்டம் இல்லாத மதியம் 12 மணி வேளை, மனோகரன் வாத்தியார் புத்தகத்தில் லயித்து இருந்தார். மணி சத்தம் அருகில் கேட்க, அதன் திசை நோக்கி தன் கவனத்தை செலுத்த தொடங்கினார். மாடுகள் கூட்டம் கூட்டமாக கழுத்து மணியை அசைத்தவாறு மேய்ந்து கொண்டிருந்தன.
மயான அமைதி, சிறு சில்வண்டுகள் ரீங்காரத்தோடு தூரத்தில் ஒரு பறவை சோம்பல் முறிப்பது போல் உடலை வளைத்து வாயை பிளந்து செருமிக் கொண்டிருந்தது. ஓடையின் சலசலப்பு நாக்கை வரளச் செய்தது. புத்தகத்தை மரத்து வேரில் சாத்தியபடி ஓடையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் வாத்தியார்.
குறுக்கும் நெடுக்கமான பாதை, ஓடையின் உள்வாய்க்குள் கொண்டு சேர்த்தது. குருட்டுக்கோழி தவிட்டை விழுங்குவது போல் தண்ணீரை அள்ளி மடக்மடக்கென தன்னை மறந்து குடித்துக் கொண்டிருந்தவர், நீண்ட பெருமூச்சோடு ஓடையை சுற்றி பார்த்தார்.
ஓடையைச் சுற்றி பார்த்தவர் ஓடைக்கு வடக்கு புறமாக மேல் மேட்டில் யாரோ அமர்ந்து இருப்பது போல் தெரிந்ததும் வழியை மாற்றி அந்த மேட்டுப்பக்கமாக சிறு வாய்க்கால் போன்ற அணைக்கட்டில் ஏறி தொந்தி மணல்மேட்டை அடைந்தார் வாத்தியார்.
சற்றும் எதிர்பாராத ஒரு சூழல், பிணங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் புதைக்கப்பட்ட சிறு தடங்கலுடன் புதைகுழிகள் நிரம்பி இருந்தன. வெறித்து பார்த்தவாரே காராஞ்செடி பத்தைக்கு பின்னால் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரிந்ததும் “யார் அங்கே? யார் அங்கே?” என்றவாறு அந்த பத்தையின் அருகே சென்றுவிட்டார்.
இரு தினங்களுக்குள் புதைக்கப்பட்ட புதைக்குழியின் அருகே பாடைகள் கூட வாடாமல் மணம் வீசிக் கொண்டிருந்தது. அதன் அருகே 20 வயதுக்குள் இருக்கும் பெண்ணொருத்தி தன் பாவாடையில் கருவேலம் பூக்களை கட்டிக்கொண்டு அந்த புதைக்குழியின் அருகே மண்டி போட்டவாறு கருவேலம் பூக்களை அந்த புதைகுழியின் மீது தூவிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் தொறட்டி… பாடை மீது சாய்த்தப்பட்டிருந்தது. இந்த காட்சி வாத்தியாரை நிலைகுலைய செய்தது.
தன்னை தேற்றியவாறு, “ஏய் பொண்ணு… இங்கே என்ன பண்ற? அந்த பக்கமா போ” என்றார் வாத்தியார்.
கன்னுக்குட்டியை போல் துள்ளி எழுந்தாள் பவளம். கழுத்தை உடைத்த தொணியில் “யார் அவுக என்னை இங்கிருந்து போகச் சொல்ல” என்ற ஏக இழுப்போடு வாத்தியாரை மேலும் கீழும் ஆக பார்த்தாள் பவளம்.
வாத்தியார் சற்று இலகுவாக, “என்னம்மா நீ? இந்த உச்சி உருமல்ல இந்த இடத்துல இருக்கலாமா? அதான் அந்த பக்கம் போனு சொன்னேன். அதுல என்னம்மா தப்பு? உன் நல்லதுக்கு தானே நான் சொன்னேன்”.
விருட்டென்று எழுந்தவள் தொறட்டியை கையில் பிடித்தபடி, “யோவ் எனக்கு என்னய்யா நீ நல்லது செய்யப் போற?” என்று வாத்தியார் முன்னால் திமிரினாள்.
“எம்மாடியோவ்! பொண்ணு உனக்கு என்ன இப்படி கோபம் வருகிறது?” என சிலுமிசமாக பேசத் தொடங்கினார் வாத்தியார். “சரி நான் உன்ன போகச் சொன்னது தப்புதான், இதெல்லாம் உன் விருப்பம் என்ன மன்னிச்சிடு தாயே” என்றவாறு இரு கைகளை எடுத்து வணங்கினார் வாத்தியார்.
கொஞ்ச நேரத்தில் பவளம், வாத்தியாரிடம் வம்பும் சேட்டையுமாக பேசத் தொடங்க, “சரி யாருடைய புதைக்குழி இது? இவ்வளவு அழகாய் பூக்களை அடுக்கி அழகுபடுத்துகிறாய்” என்றார் வாத்தியார்.
“ஏன் உங்ககிட்ட சொல்லியே ஆகணுமா?” என்று நகர்ந்தாள் பவளம்.
“ஐயோ பொண்ணு… நீ விருப்பம் இல்லாம என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். உனக்கு ஏதோ என் மேல கோபம் அதிகமாவே இருக்கு. சரி உன் வேலையை நீ பாரு” என்பது போல் பக்கத்தில் இருந்த புல் பத்தை மேல் அமர்ந்தார்.
பாவாடையில் உள்ள தூசியை தட்டியபடியே வாத்தியார் பக்கத்தில் வந்து நின்றாள் பவளம்.
“என்ன தொண தொணன்னு பேசினீர்? இப்படி அமைதியாக இருக்கிறீங்க?”
“ஏம்மா நான் ஏதாவது கேட்பேன், நீ சண்டைக்கு வருவ… அதெல்லாம் உனக்கு எதுக்கு? நீ அலங்காரம் பண்ணிட்டியா கெளம்பு”
வாத்தியாரால் பவளத்தை எளிதில் கடந்து செல்ல இயலவில்லை. வாத்தியார் பவளத்தை விசித்திர படைப்பாக பார்க்க தொடங்கினார். எதார்த்தமான பேச்சு ஆனால் ஏராளம் ஏதோ மறைக்கப்பட்டிருப்பது போல் உள்ளார்ந்த வார்த்தைகள்.
பெரிதாக எதையோ எதார்த்த வார்த்தைகளினால் தன்னுள் புதைத்துக் கொள்கிறாளா? அப்படி என்ன போராட்டம் அவளுக்குள் நடக்கிறது? கடைசி வரை அங்கு புதைக்கப்பட்டிருப்பவர் யார்? என்று சொல்லாமலே சென்று விட்டாளே என்று வாத்தியார் யோசித்த சிறு நிமிடங்களில், மாடுகளை மேய்ச்சல் தழையில் இருந்து தூர விரட்டியவாறு பின் தொடர்ந்து கொண்டிருந்தாள்.
நீலமலை மலைவாசிகளின் வாழ்க்கைமுறை மிகவும் வித்தியாசமானவை என்பது அங்கு பேச்சுவழக்கில் அதிகம் காணப்படும். மறுநாள் கருவேலங்காட்டுக்குள் ஒரே கூச்சலாக இருந்தது. மாடு, ஆடு மேய்க்கும் சிறுவர்கள் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கு அவர் பவளத்தை எதிர்பார்க்கவில்லை. சிறுபிள்ளை போல் துள்ளி குதித்தவாறு “என்ன வாத்தியாரை கண்டுக்காம போறீங்க?” என்றவள் வாத்தியார் முன் ஓடி வந்து நின்றாள் அசைவில்லாமல்.
செய்வதறியாது வாத்தியார் சற்று நிதானமாக “தவறுதான் நாளையிலிருந்து கண்டுக்கிறேன் இப்ப வழியை விடுறியா?” என்றார் வாத்தியார்.
அன்று பாலமேடு கரையில் செங்கோரை திட்டு மௌனமாய் தென்றலுடன் பரிகாசம் செய்து கொண்டிருந்தது. இதயத்தை மயிலிறகாய் வருடியது போல் இதமாய் இருந்தது. புங்கமரம் பருத்த தண்டுகளுடன் கூரை போல் தன் இலைகளை வேய்ந்து நிழல் தந்தது. அங்கேயே மரத்தடியில் அமர்ந்து புத்தகத்தை படிக்க தொடங்கினார் வாத்தியார்.
ஆழ்ந்து பக்கங்கள் ஓடிக் கொண்டிருந்தன. இடைஇடையே ஏதோ ஒரு தடுமாற்றம் பவளத்தையே சுற்றிக் கொண்டிருந்தது. பிதற்றலாய் சில பக்கங்கள் வாத்தியாரை மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்தது.
பவளத்தை தேடி சென்றார் வாத்தியார். கூச்சலற்று வெறிச்சோடி இருந்தது கருவேலங்காடு. இன்றும் ஏமாற்றம், புத்தகத்தோடு வீட்டுக்கு கிளம்பினார் வாத்தியார். வழியெல்லாம் பெறுத்த யோசனை… முடிவில் அவள் என்ன பட்டா கத்தியா கழுத்தை வெட்டிடப் போறா… நாமே நாளை அவளிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நல்ல முடிவுக்கு பின்னால் வீட்டை அடைந்தார் வாத்தியார் .
மறுநாள் காலை 10 மணிக்கெல்லாம் மலைவாசி மக்கள் வசிக்கக் கூடிய காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார் வாத்தியார். பார்ப்பதற்கு சோலை போல பச்ச பசேல் என பார்க்கும் இடங்கள் எல்லாம் மலையும், ஓடையும் அழகிட்டு போயிருந்தது. கூட்டம் கூட்டமாக குடிசைகள் ஒரு பகுதியை தன் கையகப்படுத்தி வைத்திருந்தது. ஆடும், மாடும், கோழி குஞ்சுகளும் குடிசைகளை சுற்றி பட்டிபட்டியாக பிரித்து கட்டப்பட்டிருந்தது. மனசுக்குள் மகிழ்ந்தார் வாத்தியார்.
நல்லவேளை மாடு, ஆடுகள் இன்னும் மேய்ச்சலுக்கு போகவில்லை. அப்போ பவளம் வீட்டில்தான் இருக்க வேண்டும் என்ற நோக்கில் வேடப்பன் சன்னதி அருகில் உள்ள பாறையில் அமர்ந்து அந்த ஒத்தையடியை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் வாத்தியார். வாத்தியார் கனவு மெய்ப்பட்டது.
பவளம் ஆட்டு, மாட்டுக்கு பின்னால் பனங்கிழங்கை நெட்டி முறிப்பது போல் உடைத்து கையில் பாதியும், வாயில் பாதியுமாய் மென்று கொண்டு ஆட்டத்துடன் வந்து கொண்டிருந்தாள்.
வாத்தியாரை கண்டதும் சிறுபிள்ளை போல் அவர் அருகில் ஓடி வந்தவள் “என்ன வாத்தியார் ஐயா இந்த பக்கம் வந்திருக்கீங்க?” என்று பட்டாசு போல் வெடித்தாள் பவளம்.
காரியத்தோடு வாத்தியார், “ஆமா நேத்துதான் நான் உன்னை கண்டுக்காம இருந்தேனு வருத்தப்பட்டியே, அதான் உன்ன பாத்துட்டு போகலாம்னு வந்தேன்”
“அட போங்க வாத்தியாரே, என்னை விவரம் இல்லாத ஆளுனா நினைச்சீங்க? இதுக்கெல்லாம் யாராவது இம்புட்டு தூரம் வருவாங்களா?”
“ஐயோ! பவளம் நம்பு. நான் ஏன் உன்னிடம் பொய் சொல்லணும்?”
“அப்படியா! சொல்லுங்க நான் நம்பிட்டேன். என்ன விஷயமா என்ன பார்க்க வந்தீங்க? ஐயோ அதுக்கு முன்னாடி மாடெல்லாம் தூரம் போயிடுச்சு, வாங்க நடந்துக்கிட்டே பேசலாம்”
“ஓ தாராளமா… ஏன் பவளம் உங்களது வாழ்க்கை ஆனந்தமானது, தனி உலகம் நீ கொடுத்து வச்சவ போ” என்றார் வாத்தியார்.
“அட ஏன் வாத்தியாரே, நீங்க நினைப்பது போல் ஒன்றும் இல்லை. கஷ்டம் அழகான இடத்தில் இருந்தால் நம்மகிட்ட நெருங்காதா என்ன? என் வாழ்க்கை நீங்க ஒருநாள் வாழ்ந்து பாருங்க அப்பதான் என் நிலைமை உங்களுக்கு புரியும்” என்று இடுப்பை ஒடித்து, கண்ணை உருட்டி அழுத்து சளித்தாள்.
“அப்படி என்ன பெரிய கிழவி நீ? ரொம்ப வாழ்க்கையில கஷ்டப்பட்டுட்ட” என்றார் வாத்தியார். தன் இலக்கை நோக்கி பவளத்திடம் வார்த்தைகளை கோர்த்தார் வாத்தியார்.
“அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது. இங்க பாருங்க வாத்தியாரே, நல்ல புல்லு இங்க கிடக்குது மாடெல்லாம் மேய்ச்சல்ல போகுது. இந்த நெகல்ல நான் உட்கார போறேன்… நீங்க போறீகளா? இருக்கீகளா?”
தொண்டையில மீனு முள்ளு மாட்டிக்கிட்டது போல தவதாரினித்து வழிந்தார் வாத்தியார். “என்ன பவளம் என்னை விரட்டுவதிலேயே குறியா இருக்கிற? நானும் உன் கூட கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேனே”
“இருந்துட்டு போங்க எனக்கென்ன” என்றாள் பவளம்.
“பாத்தியா பவளம் இரண்டு நாட்களுக்கு முன் சுடுகாட்டில பார்த்தோம், ஆனால் இன்று இவ்வளவு நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டோம்” அதோடு தொடர்ந்தார் வாத்தியார். “ஏன் பவளம் அப்புறம் பூ வைத்து அலங்காரம் செய்யப் போனியா இல்லையா?”
“இல்ல வாத்தியாரே எனக்கு எங்க போக முடியுது? போகணுமுனுதான் நினைக்கிறேன்” அலுத்தவாறு மரத்தடியில் சாய்ந்தாள் பவளம்.
“ஆமா பவளம் அந்த புதகுழி யாருடையது? உனக்கு விருப்பம் இருந்தா சொல்லு, அதுக்காக பேசாம போயிடாதே” என்று படபடத்தார் வாத்தியார்.
“இதுக்கு ஏன் நான் பேசாம போகணும்? அது என் தோழி மாதினி. போன வாரம் வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் தான் மாடு மேய்ச்சோம். இங்குள்ள ஒவ்வொரு செடி கொடிக்கும் எங்கள நல்லா தெரியும். என்ன பண்ண? செத்து போயிட்டா” என்று எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தாள் பவளம்.
பவளத்தின் ஒவ்வொரு வார்த்தையும் வாத்தியார் தலையில் இடியாய் இறங்கி கொண்டிருந்தது. ஏதோ ஒரு புதுவித உணர்வு, மூச்சு விட தடுமாறினார். பவளம் உண்மையில் பொண்ணா? இல்லை மலைவாழ் மக்களின் வெள்ளச்சி அம்மனா? என்ற குழப்பம் வாத்தியாரை சூழ்ந்தது.
தன் தோழியினுடைய மரணத்தை இவளால், அதாவது ஒரு சாதாரண மனிதனால் இவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதில் வாத்தியார் விடாப்பிடியாக இருந்தார். ஆனாலும் பவளத்திடம் தொடர்ந்து பேச முயற்சித்தார்.
“ஏன் பவளம் உன் தோழியின் மரணம் உனக்கு எந்த வருத்தத்தையும் தரவில்லையா? இவ்வளவு இயல்பாக உன் தோழியின் மரணத்தை எடுத்துக் கொள்வதை பார்த்தால் உன்னை நான் எப்படி புரிந்து கொள்வது?”
“வாத்தியாரே என்ன இவ்வளவு சின்ன புள்ளையா இருக்கீங்க? மருந்து அடிக்கடி சாப்பிடறோம்ல அதான் மாதினி செத்ததுக்கு காரணம்னு எங்க பெரியவங்க பேசிக்கிட்டாங்க. எங்க இனத்தில மாதினி மாதிரி நிறைய பொண்ணுங்க செத்து இருக்காங்க, அதுனால நானும் ஒருநாள் செத்துப் போயிடுவேனு எனக்கு தெரியும்… இதுக்கு ஏன் வாத்தியாரே நான் அழனும்?”
அதிர்ந்தார் வாத்தியார். பவளத்தை இடைமறித்து “என்ன மருந்து? எதுக்கு சாப்பிடுறீங்க? எனக்கு ஒன்னும் புரியல, என்ன அது சொல்லு” என்றார்.
“ஐயோ வாத்தியாரே எங்க ஜனத்தில பொண்ணுங்க அதிகம் இல்லைங்க, ஆம்பளைங்க நிறைய பேர் இருக்காங்க. எல்லாருக்கும் ஒரு பொண்ண திருமணம் செய்து வைக்க முடியலங்க, அதனால நாங்க தான் எல்லாரையும் சந்தோஷப்படுத்துவோமுங்க. அதுல வாயில வவுத்துல வந்துட்டா எங்க பெரியவங்க நாடி நோட்டத்துல தரித்து இருப்பது ஆணா, பெண்ணான பாப்பாங்க. பெண்ணா இருந்தா பெத்துக்குவோமுங்க, ஆணா இருந்தா மருந்து தின்னு கலச்சிடுவோமுங்க. அப்படி அடிக்கடி தின்னும் போது தவறுதலாயிட்டா இறந்து போறது வழக்கமுங்க” என்றதும், பவளம் சற்றும் எதிர்பார்க்கவில்லை வாத்தியார் தன்னை மறந்து அழுது கொண்டு இருப்பாரென்று.
“வாத்தியாரே ஏன் அழறீங்க? நான் எதுவும் தப்பா சொல்லிட்டேனா சொல்லுங்க” என்று வாத்தியாரை பிடித்து உலுக்கினாள் பவளம்.
“அம்மா தாயே” என்று பவளத்தை இரு கைகளை எடுத்து வணங்கி தேம்பி தேம்பி அழுதார் வாத்தியார்.
“நீ வெள்ளச்சி அம்மனே தான் தாயே ஐயோ. கொடுமைகளை தாண்டிய கொடுமை அம்மா நீ அனுபவித்துக் கொண்டிருப்பது அம்மா” என்று பவளத்தின் கால்களை இறுக பற்றிக் கொண்டு கதறி அழத்தொடங்கினார் வாத்தியார்.
பவளம் எவ்வளவு முயற்சி செய்தும் வாத்தியாரை சமாதானம் செய்ய முடியவில்லை. புலம்பியவாறு நீண்டநேரம் தன் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தடுமாறி தள்ளாடினார் வாத்தியார்.
“பவளம்…. பவளம்….” என்றவாறு இரு கைகளை தரையில் ஊன்றி எழ முயற்சி செய்து கொண்டே, “அன்று நீ பாடையின் மீது தொரட்டியை சாய்த்து வைத்திருக்கும் போதே நினைத்தேன் உன்னிடம் ஏதோ ஒன்று இருக்கிறதென்று.
பவளம், இதைத்தான் நான் உன்னிடம் இருந்து தெரிந்து கொள்ள போகிறேன் என்று தெரிந்திருந்தால் உன்னை நான் பின் தொடர்ந்து வந்திருக்க மாட்டேன். தாயே உன் தோழியின் புதைகழியிலேயே என்னையும் புதைத்து விட்டாயே பவளம்.
பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள விரும்பாத சமூகத்திற்கு நான் உன் மூலமாக விமோட்சத்தை தேடி கொடுக்கப் போகிறேன் என்னுடன் வா பவளம். நானே உன்னை பாதுகாத்து ஒருவனுக்கு உன்னை மனைவியாக அலங்கரிக்கிறேன். என்னோடு வந்துவிடு பவளம். எதுவும் மறுத்து பேசாதே, என்னோடு வந்துவிடு பவளம்” என்று கூறிக் கொண்டிருந்தார் வாத்தியார்.
மனித இனம் என்பது இயற்கையோடு தொடர்புடையது. அதன் பரிணாமத்தை மனிதன் மாற்ற முயற்சிக்கும் போது தான் மனிதனே மனிதனை தண்டணைகளுக்கு உள்ளாக்கி விடுகிறான் பவளம்.
“வாத்தியார் ஐயா, நீங்க சொல்லுவதெல்லாம் எனக்கு ஒண்ணுமே புரியல. எனக்காக ஒன்னு செய்வீங்களா? உங்களால முடிந்தால் இன்னொரு மாதினியோ, பவளமோ உருவாகாமல் தடுக்க முயற்சி செய்யுங்கள். வாயை பிளந்து கொண்டு ஆண் பிள்ளைகளை பெற்றெடுக்கும் இந்த அறிவற்ற சமூகத்திடம் சொல்லுங்கள், நாங்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடுகாட்டின் முகவரியை”
“பவளம் நான் சொல்வதைக் கேளு… உன் உயிர் தான் முக்கியம். நான் இதை வெட்ட வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன்”
“வாத்தியார் ஐயா, நாங்கள் ஒரு முடிந்த கதை. நான் இப்பொழுது தங்கள் கூட வந்தால் நான் ஒரு சுயநலவாதியாக மாறி விடுவேன். நான் மரணத்தில் விழும்பில் இருக்கும் உயிருள்ள பிணம். இந்த காட்டுக்கும், செடிகளுக்கும், கொடிகளுக்கும் நன்றாக தெரியும் நாங்கள் எந்த பாவமும் அறியாதவர்கள் என்று. படிப்பறிவு இல்லை, அதனால் தான் இப்படி வாழ்கிறோம் என்று நினைக்க வேண்டாம். காடுதான் எங்கள் உலகம். இந்த சூழலில் என் மக்களுக்காக இதை செய்வதை பெருமையாக நினைக்கும்படி என் மூதாதையர்களின் வழிகாட்டுதல் என்பது மேலும் இதற்கு ஒரு காரணமாய் அமைந்திருக்கின்றன”
“பவளம் இதற்கு உயிர் போகும் அளவுக்கு நீங்கள் தன்னலமற்று இருப்பதற்கு என்ன காரணம்?”
“வாத்தியாரே! எனக்கு அப்பா யார் என்று கூட தெரியாது. என் அம்மாவிடம் கேட்டு பலன் இல்லை. இன்று, நேற்று அல்ல வாத்தியாரே… எங்கள் மக்கள் யாரும் பெண் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று நினைக்கவில்லை. எங்கள் குலத்தில் பெண் பிள்ளைகள் அதிகம் பிறப்பதில்லையே தவிர இதற்கு எந்த விதத்திலும் நாங்கள் காரணம் இல்லை. வாத்தியாரே! ஆண் என்பவன் யார்? ஒரு ஆணாக உங்களுக்கு தெரியாதா? கொடிய மிருகத்தையும் மிஞ்சிய உடல் தேவைக்கு நாங்கள் மருந்தாகின்றோமே தவிர, இதற்கு இந்த உலகம் எந்த பெயர் கொடுத்தாலும் பரவாயில்லை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்”
“சரி பவளம்.. நான் எவ்வளவோ உன்னிடம் எடுத்து சொல்லி விட்டேன், நீ பிடிவாதமாக இருக்கிறாய். உன் பிரச்சனைக்கு உடனேயே என்னால் தீர்வு காண முடியாது, ஆனால் இதை என்னால் இப்படியே விட்டு விடவும் முடியாது. கூடிய விரைவில் உன் கதையை இந்த உலகம் அறிய செய்வேன். பின் உன்னை நான் மீண்டும் சந்திப்பேன் பவளம்” என்றவர், பவளத்தை விட்டு பிரிய முடியாமல் பவளத்தை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே காட்டை கடந்தார் வாத்தியார்.
(முற்றும்)
கண்ணீர் விட்டு இந்தக் கதையின் இறுதிப் பகுதியை வாசித்து முடித்தேன். அருமை அருமை