in

பிறப்பின் ரகசியம் (சிறுகதை)- ✍ சியாமளா வெங்கட்ராமன்

ஜூன் 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ர்ஜுன் தாரணி இருவரும் யு.எஸ்’இல் இருந்து இந்த முறை வந்தது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களை கூடியவரை அனைத்தையும் நிதானமாக பார்க்க வேண்டும், அதைப் பற்றிய விவரமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே.

அதுவும் முக்கியமாக முதலில் திருவாரூர் சென்று சோழர் தமிழர்களின் வரலாற்றில் கட்டிடக்கலைகளை நிதானமாக பார்க்க வேண்டும், மற்றும் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளின் பிறந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்பதே அவர்களுடைய எண்ணம். எனவே சென்னை வந்ததும் அவனுக்கு தெரிந்த ட்ராவல்ஸ் மூலம் ஒரு காரை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு முதலில் திருவாரூர் வந்தான்.

திருவாரூர் வந்ததும் விஜயபுரத்திலிருந்த ‘ஆர்யாஸ்’ லாட்ஜில் சென்று ஒரு ரூம் புக் செய்து கொண்டு குளித்து டிபன் சாப்பிட்டுவிட்டு நேராக பெரிய கோவில் சென்றான். முதலில் கமலாம்பாள் சன்னதிக்கு சென்று அம்பாளை தரிசித்து விட்டு மற்ற சன்னதிகளுக்கு செல்லலாம் என்று நினைத்து முதலில் கமலாம்பாள் சன்னதிக்கு வந்தார்கள். 

அவர்கள் வந்த சமயம் கர்ப்பகிரகத்தில் குருக்கள் இல்லை. அப்போது அங்கு வந்த கோவில் சிப்பந்தியிடம் குருக்களை பற்றி கேட்டான். 

உடனே அந்த சிப்பந்தி “பிரகாரத்தில் ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, குருக்கள் அங்கு சென்றிருக்கிறார்” என கூறினான்

உடனே அர்ஜுன், “நாமும் தமிழ்நாட்டில் திருமணம் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது, எனவே பிரகாரத்தில் நடக்கும் திருமணத்தை போய் பார்க்கலாம் வா” என்று கூறி பிரகாரத்திற்கு சென்றான்.

அங்கு திருமணம் நடப்பது என்பது உண்மை, ஆனால் திருமணப் பெண், மாப்பிள்ளை, சாஸ்திரிகள், குருக்கள் மற்றும் ஒரு பெண்மணி மட்டுமே இருந்தனர். அர்ஜுனன் தம்பதியருக்கு ஒரே ஆச்சரியம். இருந்தாலும் யாரிடமும் ஒன்றும் கேட்காமல் ஒரு ஓரமாக நின்று திருமணத்தை கவனித்தார்கள். 

சாஸ்திரிகள் மந்திரம் கூறி திருமாங்கல்யத்தை அந்த பெண்மணியிடம் காட்டி ஆசி வாங்கியதும் மணமகனிடம் கொடுத்து பெண்ணின் கழுத்தில் மாங்கல்யத்தை கட்ட சொன்னார். குருக்கள் கொடுத்த அம்பாள் மாலையை இருவரும் மாற்றிக் கொண்டார்கள்.

உடனே சாஸ்திரிகள் “அம்பாளுக்கு போய் நமஸ்காரம் செய்யுங்கள்” என்றார்.

உடனே மாப்பிள்ளை தன் மனைவியைப் பார்த்து “என் தெய்வத்திற்கு முதல் நம் காரம் செய்வோம்” என்று கூறி அந்த பெண்ணின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.

இதைப் பார்த்த தாரணி “கோயிலில் அம்பாள் இருக்க யாரோ ஒரு பெண்மணிக்கு நமஸ்காரம் செய்கிறார்களே” என்று குசுகுசு என கூறினாள்.

இதை கவனித்த மணமகன் இவர்கள் அருகில் வந்து “இதோ கருவறையில் இருக்கும் கமலாம்பாளை விட என்னை கருவில் சுமக்காத தாய் இவள்” என்று கண்களில் நீர் மல்க கூறினான்.

இதைக் கேட்ட தாரணி, “நீங்கள் சொல்வது எனக்கு புரியவில்லையே” என்று கேட்க மணமகன் அருண் “சொல்கிறேன் கேளுங்கள்” என்று கூறத் தொடங்கினான்.

“இதோ நிற்கும் என் அம்மா… என்னை குழந்தை முதல் இன்று வரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்த்தார்கள். நானும் நன்றாக படித்து பட்டப்படிப்பை முடித்து வேலைக்கு பல இடங்களில் விண்ணப்பித்தேன். அதற்கு ஒரு கம்பெனியில் இருந்து ஆர்டர் வந்த தபாலுடன் வேறு ஒரு தபாலையும் தவறுதலாக எங்கள் வீட்டு தபாலுடன் கொடுத்து விட்டு சென்று விட்டார். எங்கள் வீட்டு எண் 8 மற்றொரு தபால் 18 என்ற வீட்டிற்கு உரியது. அதில் ஒன்று என்ற எண் சரியாக பதியாதால் எங்கள் வீட்டில் கொடுத்து விட்டார் போல் உள்ளது. அந்த தபாலில் உள்ள பெயரை பார்த்து அதே தெருவில் உள்ள பதினெட்டாம் நம்பர் என்று வீட்டிற்கு சென்று அந்த தபாலை கொடுக்கச் சென்றேன்.

“சார்” என்று நான் குரல் கொடுத்ததும், உள்ள இருந்து “இதோ வருகிறேன்” என்று கூறியவாறு ஒரு அழகான பெண் கதவை திறக்க நான் திகைத்து நின்றேன். அந்தத் திகைப்பில் இருந்து மீளாமலேயே வீட்டிற்கு வந்தேன். என் மனம் அவளை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. 

மறுநாளே வேலையில் சேர்வதற்கு சென்னைக்கு சென்றேன். மனம் மட்டும் அந்தப் பெண்ணின் முகமே வந்து என்னை அலைகழித்தது. அடுத்த வாரமே ஆபீஸில் மூன்று நாட்கள் தொடர்ந்து லீவு வந்தது, எனவே அம்மாவைப் பார்க்க திருவாரூர் வந்தேன். காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு நானும் அம்மாவும் ஊஞ்சலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம் என் அம்மா சென்னை வாழ்க்கையை பற்றி கேட்க நானும் சொல்ல ஆரம்பித்தேன். 

“எல்லாம் நன்றாக இருக்கிறது ஆனால் சாப்பாடு தான் சரியாக இல்லை” என்று  கூறினேன்.

உடனே  என் அம்மா “உனக்கு சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ண வேண்டியது தான், பெண் பார்க்க ஆரம்பிக்கிறேன்” என்று கூறினார்கள்.

அதைக் கேட்ட நான், “18 நம்பர் வீட்டில் இருப்பவர்கள் நம் குலத்தை சார்ந்தவர்கள் தான் என்று தெரிகிறது. அவர்கள் வீட்டில் நான் ஒரு பெண்ணை பார்த்தேன். எனக்கு அவளை பிடித்திருக்கிறது நீங்கள் அவளை எனக்கு கேளுங்கள்” என்று கூறினேன்.

அதைக் கேட்ட என் அம்மா, “பருத்தி புடவையாய் காய்த்து விட்டது” என்று கூறினார்கள். 

உடனே நான் “அவர்கள் வீட்டிற்கு போய் என் விருப்பத்தை கூறி பெண் கேட்கிறேன்” என்றேன். 

என் அம்மாவும் “இந்த காலத்தில் அதுவும் சரிதான்” என்று கூறினார்கள். உடனே நான் அவர்கள் வீட்டிற்கு சென்று என் விருப்பத்தை அந்த பெண்ணின் அப்பாவிடம் கூறினேன்.

அதை  கேட்டதும் அவர் மிகுந்த கோபத்துடன் என்னை பார்த்து, “தகப்பன் பேர் தெரியாத உனக்கு என் பெண்ணை தர தயாராக இல்லை.. வெளியே போ” என கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக வெளியே அனுப்பினார். அவமானத்தால் கூனி குறுகி வெளியே வந்த நான் என் அம்மாவிடம் அங்கு நடந்ததை கூறி அழுதேன்.

அதைக் கேட்ட என் அம்மா “உனக்காக நான் போய் அவர்களிடம் பெண் கேட்கிறேன்” என்று கூறி கூறி விறுவிறுவென்று அவர்கள் வீட்டிற்கு சென்றார்கள்.

அவர்கள் வீட்டிற்கு சென்ற என் அம்மா அந்தப் பெண்ணின் அப்பாவிடம், “என் பையன் உங்கள் மகளை விரும்புகிறான் அவனுக்கு நீங்கள் திருமணம் செய்து கொடுங்கள்” என்று கேட்க

அவர் என் அம்மாவை பார்த்து “கணவன் இறந்தபின் இந்தப் பிள்ளையை பெற்றவள் தானே நீ! இவனுக்கு அப்பன் யார் என்று தெரியாது. அப்படிப்பட்ட இவனுக்கு என் பெண்ணை கொடுக்க தயாராக இல்லை, வெளியே போ” என்று என் அம்மாவை பலவாறாக வசைபாடினார்.

அதுவரை பொறுமையாக இருந்த என் அம்மா, “யாருக்கு அப்பன் தெரியாது. என் கணவர் தான் அவன் அப்பா” என்று ஆக்ரோஷத்துடன் உரத்த குரலில் கூற அங்கு இருந்த அனைவரும் வாயடைத்து நின்றனர்.

“இதுவரை சத்தியத்தை மீறக்கூடாது என்று மறைத்து வைத்திருந்த உண்மையை இனியும் கூறாதிருந்தால் என் பையனின் வாழ்க்கை சீரழிந்து விடும். அதை வெளி உலகத்திற்கு கூறும் நேரம் வந்துவிட்டது” என்று கூறத் தொடங்கினாள்.

“எனக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் ஏற்படவில்லை. நான் என் கணவரை மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தியும் அவர் என் மீது கொண்டிருந்த அன்பினால் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்கிடையில் அவர் வியாபார விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று தங்க தொடங்கினார். ஒரு தடவை வெளியூரில் இருந்து வரும் பொழுது ஜுரத்துடன் வந்தார். வந்து படுத்தவர் எழுந்திருக்காமலேயே இறந்து விட்டார், நான் தனிமரம் ஆனேன்.

ஒரு நாள் ஒரு பெண்ணிடம் இருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் ஒரு பெண் தான் கும்பகோணத்தில் இருப்பதாகவும், உடனே வந்து பார்க்கும்படி எழுதி இருந்தாள். முன்பின் தெரியாத ஒருத்தியை எதற்காக பார்க்க வேண்டும்? என அசட்டையாக இருந்தேன். அடுத்த வாரம் மறுபடியும் அதே பெண்ணிடம் இருந்து உடனே வந்து பார்க்கும்படி மன்றாடி கேட்டுக்கொண்டு எழுதி இருந்தாள்.

சரி இவ்வளவு தூரம் நம்மை வந்து பார்க்கும்படி கேட்கிறாளே என்று கும்பகோணத்திற்கு அவள் கொடுத்த அட்ரஸில் சென்று பார்த்தேன். அந்த வீட்டு கதவு வெறுமனே சாத்தியிருந்தது. உள்ளே ஒரு கட்டிலில் கிழித்த நாராய் ஒருபெண் படுத்திருந்தாள். அவள் பக்கத்தில் ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. என்னை கையால் ஜாடை காட்டி கிட்டே அழைத்தாள். மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தாள். 

“என் பெயர் அலமு. எனக்கு அம்மா கிடையாது. என் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார், என் சித்தி என்னை மிகவும் கொடுமைப்படுத்தினாள். நான் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே இருந்தேன், ஆனால் அதற்கும் சோதனை வந்தது. எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தால் போல் ஒரு பணக்கார கிழவனுக்கு என்னை திருமணம் செய்ய ஏற்பாடு செய்தாள். இது என்னால் பொறுக்க முடியவில்லை, எனவே வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்து ஒரு கிணற்றில் விழ கிணற்றின் சுவரில் ஏறி நின்றேன். 

அப்போது அந்த வழியே வந்த உங்கள் கணவர் என்னை பிடித்து நிறுத்தி என்னை காப்பாற்றினார். என் கதையை கேட்டார், உடனே யாருக்கும் தெரியாமல் என்னை இந்த ஊருக்கு அழைத்து வந்து ஒரு மஞ்சள் கயிற்றை என் கழுத்தில் கட்டி இந்த வீட்டில் என்னை குடிவைத்தார். என் மனைவி மிக நல்லவள் அவளுக்கு தெரியாமல் நான் செய்த இந்த காரியத்திற்கு உடனே உன்னை அழைத்துக் கொண்டு செல்ல முடியாது. சமயம் வரும்போது நான் அவளிடம் கூறி உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றார்.

அதற்குள் நான் கர்ப்பமானேன். சரி குழந்தை பிறந்ததும் அழைத்துச் செல்கிறேன் என்றார். ஆண் குழந்தை பிறந்தது. ஊருக்கு சென்று குழந்தை பிறந்த செய்தியை கூறி உன்னை அழைக்க போகிறேன் என்று கூறி சென்றவர் வரவே இல்லை. ஆனால் தெரிந்தவர் மூலக் அவர் இறந்த செய்தி வந்தது, அதைக் கேட்டு நான் மனம் உடைந்து படுத்த படுக்கையானேன்.

அந்தத் தெரிந்தவர் மூலம் உங்கள் வீட்டு அட்ரஸை தெரிந்து உங்களுக்கு கடிதம் எழுதினேன். மருத்துவர் நான் பிழைப்பது அரிது என்று கூறிவிட்டார். அவர் மூலக் பெற்ற இந்தக் குழந்தையை நான் இறக்கும் முன் உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்து கடிதம் எழுதினேன்” என்று கூறிக் கொண்டே இருக்கும் பொழுதுமூச்சு திணறல் ஏற்பட்டது.

உடனே அவளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு அவள் என்னிடம் “எந்த காலத்திலும் என் மூலம் பிறந்தவன் என்று என் பிள்ளைக்கு தெரியக்கூடாது, தெரிந்தால் தன் பிறப்பின் மீது வெறுப்பு ஏற்படும். எனவே நம் கணவர் மூலம் பிறந்ததால் இவனை உங்கள் பிள்ளை என்று ஏற்று கடைசி வரை அவனை காப்பாற்றுங்கள்” எனக் கூறி சத்யம் வாங்கிக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் எல்லாம் அவள் மூச்சு பிரிந்தது. அப்போது நான் மாயவரத்தில் இருந்தேன் அவன் பிறப்பின் ரகசியம் தெரிந்தால் என் கணவருக்கு அவப்பெயர் ஏற்படும் என்று எண்ணி நான் உடனே வீட்டை மாற்றிக் கொண்டு திருவாரூர் வந்தேன். எப்படியோ என் கணவர் இறந்தது தெரிந்து என் குழந்தை எனக்கு தவறான முறையில் பிறந்தது என்று யாரோ கதை கட்டிவிட்டார்கள். அந்த வதந்தி எல்லா இடங்களிலும் பரவியது. என் பையனும் அதுதான் உண்மை என்று எண்ணினான். இப்பொழுது சொல்லுங்கள் என் பையன் அப்பன் தெரியாதவனா?” என்று கூறி முடித்தாள்

அதுவரை கதவிற்கு பின்னால் நின்றிருந்த நான் என் அம்மாவின் காலில் விழுந்து இதுவரை உலக  மக்களின் அவச்சொல்லை பொருட்படுத்தாமல் என்னை தன்மகன் என்று போற்றி வளர்த்த அம்மாவை எண்ணி கதறினேன்.

என் அம்மாவின பேச்சைக் கேட்ட பின் பிரியா தன் அப்பாவிடம் “தனக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும் பரவாயில்லை, தன் கணவருக்கும் அந்த பெண்ணிற்கும் அவப்பெயர் வராமல் காப்பாற்றிய இவர்களுக்கு மருமகளாக இருப்பது எனக்கு பூரண சம்மதம். எனவே நான் அவர்களுடன் போகிறேன்” என்று கூறி என் வீட்டிற்கு வந்து விட்டாள்.

“என்னை நம்பி வந்த அவளையை என் அம்மா எனக்கு திருமணம் கமலாம்பாள் முன்னிலையில் செய்து வைத்துள்ளார்கள். என் தன்னலமற்ற தியாகி ஆன என் அம்மாவின் முன் யாருடைய ஆசீர்வாதம் எங்களுக்கு தேவையில்லை எனத் தோன்றுகிறது” என கண்ணீர் மல்க கூறி நிறுத்தினான் அருண்.

இதைக் கேட்ட அர்ஜுன் தாரணி இருவரும் “மகாபாரதத்தில் கர்ணனின் பிறப்பை கண்ணனின் சத்தியத்திற்கு கட்டுப்பட்டு, கடைசி வரை குந்திதேவி மறைத்து காப்பாற்றினாளோ… அதே போன்று உங்கள் தாயார் சத்தியத்தை காப்பாற்றிய நவீன குந்தி தேவி” என்று கூறி அந்தத் தாயின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பிரிவு (சிறுகதை)- ✍ இரா.அனிதா ராஜேந்திரன்

    தரையில் விழுந்த மீன்கள் (நாவல் – பகுதி 5) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி