2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
வேதா அந்த வீட்டுக்கு மூன்றாவது மருமகளாக வந்தவள். மூத்த மருமகள் மாமியாரின் தம்பி பெண் மாதவி. இரண்டாவது மருமகள் தாரிணி, மாமியாரின் நாத்தனார் பெண்.
நாமதான் வெளியில இருந்து வந்திருக்கோம் எப்படி நடத்துவார்களோ என பயந்தபடியே தான் புகுந்த வீட்டிற்கு வந்தாள் வேதா. ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக நிலைமை அங்கு தலைகீழாக இருந்தது.
மாமியாருக்கு தம்பி பெண் என்று மாதவியிடம் தனிப்பாசமும், கணவனை இழந்து பச்சைக்குழந்தையுடன் கால்கட்டாய் வந்து சேர்ந்த நாத்தனார் பாக்கியத்தின் பெண் தாரிணி மீது துவேஷமும் இருப்பதை வந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டாள். ஆனால் வீட்டில் உள்ள மற்ற அனைவருக்கும், மாமனாருக்கும் அவள் மிகவும் பிரியத்துக்குரியவளாகவேதான் இருந்தாள்.
குழந்தையில் இருந்தே ஒன்றாக வளர்ந்ததால், இவள் கணவர் பெரிய மைத்துனர், கடைக்குட்டி மைத்துனர், மற்றும் நாத்தனாரின் பிள்ளைகள் வரை எல்லோருமே அவளிடம் ஒரு வாத்சல்யத்துடன் தான் பழகினர்.
இரண்டாவது மைத்துனர் ஒருபடி அதிகமாக பாசம் வைத்து விடவே மாமியார் விருப்பம் இல்லாமலே இந்தக் கல்யாணத்திற்கு சம்மதம் கொடுத்திருக்கிறார். அவள் அம்மா இப்பவும் இங்கேதான் இருக்கிறார். மாமியாரின் வெறுப்புக்கு இதுவும் ஒரு காரணம்.
இதில் இன்னொரு கொடுமை என்னன்னா, மூன்றாவது மருமகள் வேதாவிற்கும் குழந்தை பிறந்த பிறகும், அவளுக்கு அந்த பாக்கியம் கிடைக்காமல் போனதுதான்.
நிறைய மனக்குறையுடனும், மற்றவர்கள் குத்தல் பேச்சு, பார்வை இவற்றையும் சகித்துக் கொண்டு தாரிணி பட்ட வேதனையைப் பார்த்து அதிகமாக வருந்தியவள் வேதாதான்.
இவளும் கோவில் கோவிலாக வேண்டிக் கொண்டு, தன் அம்மாவிடம் கேட்டு சில பரிகாரங்கள் பண்ணிக் கொண்டு, தவிப்புடனே இருந்தாள்.
சில வருட காத்திருப்புக்குப் பிறகு தாரிணி உண்டான போது, எல்லோரையும் விட அதிகம் மகிழ்ந்தது இவள்தான் என்றே சொல்லலாம்.
அதன் பிறகும், பாவம் தாரிணி அக்கா, மசக்கை என்று அம்மா வீட்டுக்குப் போய் பத்து நாள் சீராடிட்டு வர வாய்ப்பு கூட இல்லையே என நினைத்து அவளுக்குப் பிடித்ததாக பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுத்தாள்.
தனக்கு அம்மா வீட்டில் என்னென்ன உபசாரங்கள் நடந்தது என யோசித்து யோசித்து அவளுக்கு செய்தாள். ஆனால் தாரிணி மனதிலோ அவள் அம்மாவின் மனதிலோ என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்ததே இல்லை வேதா.
அவர்களோ, தங்களது இயலாமையை, இல்லாமையை வார்த்தையால் குத்தாமல் செயலால் குத்துவதாகத் தான் நினைத்து வந்திருக்கிறார்கள்.
தாரிணிக்கு வளைகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவளுக்குப் போடுவதற்கும் வருபவர்களுக்கு வைத்துக் கொடுப்பதற்கும் வாங்கி வந்த வளையல்களை பிரித்து இரு டப்பாக்களில் பத்திரமாக வைத்துக் கொண்டிருந்த வேதாவிடம்,
“வளையல்களை எங்கிட்ட கொடுத்திடு வேதா. குழந்தைங்க கையில பட்டுதுன்னா உடைஞ்சிடும். அது பெரிய அபசகுனம் ஆயிடும்” என்று சொல்லி வாங்கிக் கொண்டு போனார் தாரிணியின் அம்மா.
போகும்போதே கால் தடுக்கி தடுமாறியதில் வளையல் டப்பாவை கீழே விட்டு விட்டார். பதறிப்போய் அவரைத் தாங்கிப் பிடித்த வேதா வளையல்கள் உடைந்திருப்பதைப் பார்த்து மிகவும் சங்கடப்பட்டாள்.
ஆனாலும் சமாளித்துக் கொண்டு, “இதை பெரிசா எடுத்துக்காதீங்கம்மா, தாரிணி அக்காகிட்டயும் சொல்லி பயமுறுத்த வேண்டாம். நானே காதுங்காதும் வச்சாப்ல யாருக்கும் தெரியாம வேற வாங்கி வந்திடறேன்” என்று சொல்லி நிலமையை சமாளித்தாள்.
ஆனால் மனசுக்குள் ஒரு உறுத்தல் இருக்கவே கடவுளை பிரார்த்தித்தபடியே நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தாள்.
பிரசவத்திற்கு நாள் நெருங்கிவிட்ட நேரத்தில் பெரிய ஓர்ப்படி மாதவியின் அப்பா திடீரென்று இறந்து விடவே, தாரிணிக்கு துணைக்கு வேதாவை வைத்துவிட்டு அனைவரும் கிளம்பி விட்டனர். பின்னரும் மாமியாரும், மாதவியும் பதினாறாம் நாள் காரியம் வரை அங்கேயே தங்கி வர முடிவெடுத்து தங்கிவிட்டனர்.
காலை ஐந்து மணிக்கு எழுந்தால் இரவு பதினோரு மணிக்கு தாரிணிக்கு குங்குமப்பூ போட்ட பால் கொடுத்து விட்டு வரும் வரை வேலை சரியாக இருந்தது வேதாவிற்கு.
தாரிணியும் அவள் அம்மாவும் எதையுமே கண்டுகொள்வதில்லை. வீட்டில் யாராவது பிள்ளைகளோ, மாமனாரோ இருக்கும் நேரத்தில் வேதாவுக்கு உதவுவது போல் கூடவே நிற்பார்கள். இதையெல்லாம் துளியும் புரிந்து கொள்ளவில்லை வேதா.
ஒரு நாள் அண்ணன் தம்பிகள் நால்வரும் ஒன்றாக உட்கார்ந்து இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, கடைக்குட்டி மைத்துனர் ஒரு பெரிய நீலக்கல்லை எடுத்து எல்லோரிடமும் காட்டினார்.
தன் மேலாளர் தனக்கு பரிசாகக் கொடுத்ததாகவும் கூறினார். அண்ணன் தம்பிகள் எல்லாரும் வாங்கி வாங்கி பார்த்து ஆளுக்கொரு கருத்தை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“விலை அதிகமிருக்கும், விற்றுவிட்டு வேறு ஏதாவது வாங்கிக் கொள்” என்றும், “அப்படியே மோதிரமாக செய்து போட்டுக் கொள் கெத்தாக இருக்கு” என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் தான் தாரிணிக்கு பிரசவவலி எடுக்கத் தொடங்கியது. எல்லோருமே பதறியடித்து எழுந்து காரை கொண்டு வந்து மருத்துவமணைக்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.
வேதாவும் தேவையான பொருட்களை முன்பே ரெடி செய்து வைத்திருந்ததால் எடுத்துக் கொண்டு தாமதமின்றி புறப்பட்டு விட்டாள். வழிநெடுக தாரிணிக்கு தைரியம் சொல்லிக் கொண்டும் மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டும் சென்றாள். நல்லபடியாக குழந்தை பிறந்து வீட்டிற்கும் அழைத்து வந்தாகி விட்டது. மாமியாரும் வந்து விட்டார்.
குழந்தையை பார்க்க வந்தவங்க எல்லாம் வேதாவைப் புகழ்ந்து தள்ளினார்கள். “தனியாக எல்லாத்தையும் பொறுப்பா பாத்துகிட்டா” என்று. “பாவம் வேலையும் ஜாஸ்தி அதான் இளச்சு கருத்தும் போயிட்டா. இவதான் பிரசவம் ஆனவமாதிரி இருக்கா” என்று கூட சிலர் சொன்னார்கள்.
பெயர் சூட்டு விழா முடிந்து, தூரத்து சொந்தங்கள் எல்லாரும் போன பிறகு வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, அந்த நீலக்கல்லை அம்மாகிட்ட காட்டுடா என மூத்தவர் சொல்ல, அப்போதுதான் அந்த நியாபகம் எல்லோருக்கும் வந்தது. அது எங்கே எங்கே என எல்லோருமே தேடினார்கள் கிடைக்கவில்லை.
அப்போது தாரிணி சொன்னாள். “வீட்டில் வேதா மட்டும் தனியாக இருந்தாள்ல அப்பதான் யாராவது வீட்டுக்கு வந்தவங்க எடுத்துட்டுப் போயிருப்பாங்க. பாவம் அவளுக்கு இங்க உள்ளவங்களைப் பத்தி தெரியாதில்லையா. டவுன்ல வளர்ந்த பொண்ணு. நானெல்லாம் தனியா இருந்தாலும் இங்கேயே இருந்து பழகினதால, கிச்சன் வேலையா இருந்தாலும் வாசல் வரைக்கும் கண்ணு அலை பாஞ்சுகிட்டேதான் இருக்கும். அவ சமையல்ல முழுகிட்டாள்னா அக்கம் பக்கம் என்ன நடக்குதுன்னே தெரியாது. அதான் அவ தனியா இருக்கிற சமயம் பார்த்து யாரோ அடிச்சிட்டாங்க. ஹூம், நல்ல விலை போகும்னீங்க. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போச்சு. விடுங்க ஒட்டறதுதான் ஒட்டும், அவளை குறை சொல்லி என்ன ஆகப்போகுது” என நீளமாகப் பேசி என்னவோ வேதாதான் தொலைத்தவள்னு உறுதியாப் பேசிட்டு எழுந்து போய் விட்டாள்.
அவள் என்ன சொல்ல வருகிறாள் என சுத்தமாகப் புரியவில்லை வேதாவுக்கு. பாராட்டுகிறாளா, குத்தம் சொல்றாளா என்று.
“நான் யாரையும் உள்ளேயே விட்டதில்லையே கதவை தாள் போட்டுட்டுதானே வேலை பார்த்தேன்” என்று இவள் தரப்பை இவள் சொன்னபோது அதைக்கேட்க அங்கே யாரும் இல்லை.
ஒட்டு மொத்த குடும்பமும் கூடி இருந்த இடத்தில நாசூக்கா நம்பளை அசிங்கப்படுத்திட்டாளே என்று மனசுக்குள் ஒரு குடைச்சல் இருந்து கொண்டே இருந்தது.
கணவனிடம் இதைப் பற்றி சொன்னபோது, “ஒண்ணும் தப்பா சொல்லலையே, நீயா ஏன் கற்பனை பண்ணிக்கிற” என்று கேட்டு இன்னும் நோகடித்தான்.
ஒருநாள் முன் ஹாலில் இருந்த மேசையில் இருந்து பேனா எடுப்பதற்காக அதன் இழுப்பறையைத் திறந்த வேதா, உள்ளே இரண்டு பலகைகளாக இருக்கும் இழுப்பறையில் பிளவுகள் இடையை ஏதோ சிக்கி இருப்பது தெரியவே அவசரமாக அதை ஒரு குச்சியால் நெம்பி எடுத்துப் பார்த்தாள். சாட்சாத் அதே நீலக்கல்தான். யாரோ கையில் வைத்திருந்தவர்கள் அவசரத்தில் டிராயரில் போட்டு விட்டு போயிருந்திருக்கிறார்கள்.
வேதா யோசித்தாள் இதை கொடுத்து தன் பெயரில் உள்ள களங்கத்தைப் போக்கலாமா அல்லது இதை யாராவது கஷ்டப்படும் ஏழைக்கு கொடுத்திடலாமா? வந்த பெயர் வந்ததுதான், கவனக்குறைவானவள் என்று. மனசுக்குள் எரிந்து கொண்டிருந்த கோபத்தால் விதவிதமாக யோசித்துக் கொண்டு நின்றாள் வேதா.
தான் மிகவும் ஏமாளியாக யதார்த்தவாதியாக இருந்து விட்டோம். அவளுக்காக எவ்வளவு யோசிச்சு யோசிச்சு செஞ்சோம். மாமியாரும், மூத்த ஓர்ப்படியும் சில நேரங்கள்ல தாரிணியை அலட்சியமாக நடத்தற போது கூட நாம தான கரைஞ்சு உருகினோம். நம்மகிட்ட இவளுக்கு என்ன துவேஷம்.
இல்லைன்னா அவர் சொல்ற மாதிரி கற்பனை பண்ணிக்கிறேனா என்றெல்லாம் குழம்பிக் கொண்டிருந்த போது ஒரு நாள், பாக்கியமும் தாரிணியும் இவளைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததை யதேச்சையாக காதில் வாங்கி விட்டாள் வேதா.
“அம்மா! எப்படி பேசினேன் பாத்தியா. அத்தைக்கு எப்பவுமே மாதவி ஒசத்திதான். அவ இடத்தை நான் ஒரு நாளும் பிடிக்க முடியாது. அது தெரிஞ்ச கதை. ஆனா எனக்கப்பறம் வந்த வேதா இப்படி எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கறது எனக்கு சரியாப்படலை. அத்தையும் அவ பக்கம் சாஞ்சிடக் கூடாதுன்னுதான் சரியா அவ தலையில ஒரு கொட்டு கொட்டினேன். அதுவும் கொட்டுறது தெரியாம. இன்னொரு விஷயம் தெரியுமா அந்த நீலக்கல் நான் தான் கடைசியா கையில வச்சிருந்தேன். அலமலப்பில எங்க வச்சேன்னு நியாபகம் இல்ல. என் பெட்டி எதிலாவது தான் இருக்கும் தேடி எடுத்துத் தரேன். வித்துட்டு குழந்தைக்கு ஏதாவது நகை நீ போட்ட மாதிரி போட்டுடு. ஒரு கல்லுல எத்தனை மாங்கா பாத்தியா” என்று.
எனவேதான் இப்போது வில்லத்தனமான யோசனைகள் வேதாவுக்குள் வந்து வந்து போகின்றன. இதை தாரிணியோட அறையில எங்காவது வச்சு மாட்டி விடுவோமா என்று கூட தோன்றியது அவளுக்கு.
சே என்ன இது சீரியல் வில்லி மாதிரி என்று தன்னையே திட்டிக் கொண்டாள். யாராவது ஏழைப்பெண் திருமணத்துக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும். இப்ப நாம கண்டுபிடிச்சுக் கொடுத்தாலும் நாமளே எடுத்து வச்சிருந்திட்டு, கெட்டபெயர் வந்ததால்தான் கொடுக்குறோம்னு கூட கிளப்பி விடுவா அவ.
அவளோட சாதுரிய பேச்சில இவங்க யாருக்கும் அது தப்பாவேத் தெரியாது. இந்த டிராயர்லேயே போட்டுடுவோம்னா ஒண்ணு அவளே எடுத்திடலாம். அல்லது யார் கையில கிடச்சாலும் நான்தான் கொண்டு வந்து போட்டுட்டேன்னு சொல்லவும் தயங்க மாட்டாள்.
வேண்டாம் வில்லத்தனமும் வேண்டாம். விளக்கம் சொல்லவும் வேண்டாம். வித்திட்டு தர்மமே பண்ணிடுவோம் என்ற முடிவுக்கே வந்தாள் வேதா.
பழுதில்லா பால் போல வந்தவளை, குடம் பாலில் துளி விஷம் கலந்தாற் போல துவேஷம் கொள்ள வைத்து விட்டாள் தாரிணி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
நல்லவர்களை நல்லவர்களாக இருக்க விட மாட்டார்கள் என்பதை வலியுறுத்துகிறது. அருமை மா!
மனம் நிறை மகிழ்வுடன் நன்றிகள்ம்மா