in ,

எனக்கு நானே பின்னிய வலை (சிறுகதை) – மைதிலி ராமையா

எழுத்தாளர் மைதிலி ராமையா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

பெரிய சிக்கல்ல மாட்டி மீண்டிருக்கேங்க. எல்லாம் என்னாலதான். துருவித்துருவி யாராவது கேட்டா எனக்கு எதையும் மூடி வச்சுக்கத் தெரியாது. அதனாலதான் இவ்வளவு பெரிய இடர்பாட்டில விழுந்து எழுந்திரிச்சு இருக்கேன். சொல்லிடறேன் உங்ககிட்டயும் நம்ம வாயில  தான் எதுவும் தங்காதே. 

     ஆனா தயவு செய்து நீங்க என்ன மாதிரி யார்கிட்டயும் சொல்லிடாதீங்க.

     நானும் பிரேமாவும் ரொம்ப ரொம்ப நெருக்கமான தோழிகள். பிறந்தது முதலே ஒரே ஊரில் ஒரே பள்ளியில் என்று இருந்ததில் மிக ஆழமான நட்பாக மாறிவிட்டது.

    ஓரளவு படிப்போடு,  பள்ளி செல்வதற்கு இருவரின் வீட்டிலும் முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. 

     சில வருடங்களுக்குப் பிறகு வரன் தேடும் படலம் ஆரம்பமானது. பிரேமா வீட்டில் தான் முதலில் பார்க்கத் தொடங்கினார்கள். பல வரன்கள் தட்டிப் போனபின், கடைசியாக வங்கியில் வேலை பார்க்கும் ஒரு வரன் வந்து கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருந்தது.

     நான் கூட நிறைய அவளை கேலி செய்து கொண்டே இருந்தேன். “இன்னும் கொஞ்ச நாள்தான் அப்பறமெல்லாம் என் பேரு கூட மறந்துடுவ இல்ல. வேலை பாக்கற மாப்பிள்ளை, ஊர் ஊரா மாத்தல் வந்துகிட்டு இருக்கும். விதவிதமான ஊருக்கெல்லாம் போய் நெறைய ஃபிரண்ட்ஸ் புடிச்சிடுவ. அப்பறம் இந்த பட்டிக்காட்டு ஃபிரண்டையா  நியாபகம் வச்சிருக்கப்போற” என்று.

     “போடி நீ வேற உன்னையெல்லாம் மறப்பேனா. அத்தோட இன்னும் ஒண்ணும் கூடி வரலடி.  அவங்க நிறைய எதிர் பாக்கறாப்ல தெரியுது. அவ்வளவுக்கு நாங்க எங்க போறதாம்” என்றாள் பிரேமா.

     அவள் சொன்னது போலவே அந்த இடமும் தட்டிப் போய்விட்டது. இந்த நேரத்தில்தான் எங்க வீட்டில எனக்கும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சாங்க. ஆச்சரியப் படும்படி என்னைப் பார்க்க வந்த முதல் மாப்பிள்ளைக்கே என்னை மிகவும் பிடித்துப்போக, உடனடியாக கல்யாணம் நடந்தேறியது.

     அவர்களும் ஒன்றும் பெரிதாக டிமாண்ட் பண்ணவில்லை. எங்க வீடும் பிரேமா வீட்டைவிட கொஞ்சம் வசதியானது.

     எல்லாம் சேர்ந்து கடவுளின் கிருபையும் சேரவே எனக்கு நல்ல இடத்தில் நேரங்காலத்தில் கல்யாணம் நடந்துவிட்டது. அருமையான வாழ்க்கையாக இருந்திருக்க வேண்டிய என் வாழ்க்கையை நானே சிக்கலாக்கிக் கொண்டேன்.

    எனக்கு கல்யாணம் நடந்ததில், பிரேமா மனசுக்குள் என்ன நினைத்தாள் என்று தெரியாது என்னிடம் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.

     என்னை கலாட்டா பண்ணிக் கொண்டு, என் கல்யாணம் சம்மந்தமான அனைத்து வேலைகளிலும் எனக்கு உறுதுணையாக நின்று, பேருதவியாக இருந்தாள்.

    நானும் ஊருக்கு அம்மா வீட்டுக்கு வரும் போதெல்லாம் அவள் வீட்டுக்குத்தான் ஓடுவேன்.

     வீட்டின் பின்புறம் இருக்கும் கிணற்றடியில் உட்கார்ந்து மணிக் கணக்காக பேசிக் கொண்டிருப்போம்.

     எல்லாம் வாழப் போயிருக்கிற வீட்டு ஆளுங்களைப் பத்தியும், ஊரில உள்ள மற்ற சுவாரஸ்யமான கேரக்டர்ஸ் பத்தியும் நிறைய விஷயங்கள் சொல்லுவேன். மிக ஆர்வமாக ரசித்து கேட்டுக் கொண்டிருப்பாள்.

     அடுத்தமுறை ஊருக்கு போனால் விடாமல், ஏதோ தொடர்கதை படிப்பதுபோல் என்னாச்சு எதித்தவீட்டு கதை என்பாள்.

     நானும் சுவாரஸ்யமாக சொல்லத் தொடங்கி விடுவேன். என் எதிர்த்த வீட்டில்  ஜெகதா என்று ஒரு பெண் இருந்தாள்.  அவள் ஏதோ வயசுக் கோளாறில் கூடப்படிக்கும் பையனை விரும்பி இருக்கிறாள்.

     வீட்டிற்குத் தெரிந்து கண்டித்து, படித்துக் கொண்டிருந்த கல்லூரியை மாற்றி  என்னென்னவோ செய்து அந்தச்சின்னப் பெண்ணின் மனதை மாற்றி எவ்வித பிரச்சனையும் இன்றி சுமுகமாக முடித்து விட்டார்கள். 

     இந்த விஷயம் பற்றி ஒருமுறை அம்மா வீட்டுக்கு வந்தபோது பிரேமாவிடம் சொல்லி விட்டேன். அவ்வளவுதான் நான் ஊர்ப்பக்கம் வந்தாலே அப்புறம் அந்த ஜெகதாவோட லவ் மேட்டர் என்ன ஆச்சு ,உண்மையாவே விட்டுட்டாளா, இல்லே ரகசியமா கண்டினியூ பண்ணிகிட்டுதான் இருக்காளா இப்படி ஆயிரம் கேள்வி அதைப்பத்தியே கேட்டு துளச்சு எடுத்திடுவா.

       நானும் தெரிஞ்சதெல்லாம் அப்படி அப்படியே புட்டுபுட்டு வச்சிடுவேன். இந்த விஷயம் மட்டுமில்ல, அந்த ஜெகதாவோட அம்மா, அவங்க மருமகளுக்குத் தெரியாம வீட்டில உள்ள மளிகை பொருளையெல்லாம் எடுத்து விக்கறதையும், அந்த திருட்டுப் பொருளை குறச்ச விலைக்கு என் மாமியார் வாங்குறதையும் கூட சொல்லி வச்சிருக்கேன்.

     இப்ப பிரச்சனை எங்க வந்து நிக்குது தெரியுமா.  அதே ஜெகதாவோட அண்ணனுக்கு இவளை சாட்சாத் என் தோழி பிரமாவை பெண் கேட்டு வந்திருக்காங்க.

     முக்கால்வாசி முடிந்த மாதிரிதான். இப்போ என்  பிரேமாவா இருந்தவ எதிரி பிரேமாவா மாறிட்டா. நான் சொன்ன எல்லா சேதிகளையும் சம்மந்தப்பட்டவர்களிடம் சொல்லாம இருக்கனும்னா, அவளுக்கு நான் யாருக்கும் தெரியாம பத்து பவுனாச்சும் நகை கொடுக்கனுமாம்.

     இதுக்கும் நான்தான் காரணம். ஜெகதாவோட மூத்த அண்ணி பெரிய இடம் விதவிதமா நகை மேட்ச் மேட்ச்சா போடுவாங்க. அதனால யாரையும் மதிக்காம அலட்சியமா பாப்பாங்கன்னும் சொல்லி வச்சிருக்கேனே. 

    அவங்களுக்கு ஓரளவாவது ஈடு கொடுக்கனும்னா பிரேமா வீட்டில போடற நகை பத்தாது அதுக்குத்தான் இவ இப்படி வில்லியா மாறி மிரட்டறா. 

     நல்ல வாழ்க்கையை எப்படி நாசம் பண்ணி வச்சிருக்கேன் பாத்தீங்களா. யோசிச்சு யோசிச்சு மண்டை காஞ்சதுதான் மிச்சம். ஒரு வழியும் புலப்படவே இல்லை. 

     அம்மா வீட்டுக்கு போகனும் போகனும்னு குதிக்கிறவ என்ன அந்தப் பேச்சையே எடுக்காம இருக்கான்னு, மாமியார் வீட்டிலேயும்,

     ஏன் நம்ம வீட்டுக்கு வர ஆர்வம் காட்டாம இருக்கு பொண்ணுன்னு என் அம்மா வீட்டிலேயும் குழம்பிக்கிட்டு இருந்தப்ப, என் வீட்டுக்காரர் மட்டும் கரெக்டா கண்டு பிடிச்சிட்டார் இவ ஏதோ பிரச்சனையில இருக்கான்னு.

     கூப்பிட்டு வச்சு கொடஞ்சு கொடஞ்சு கேட்டதும் நான்தான் எப்படிக் கொட்டிடுவேன்னு உங்களுக்கே தெரியுமே. சகலத்தையும் ஒரு வாக்கு மூலமாவே கொட்டிட்டேன். 

      முதல்ல கோபமா உறுத்துப் பார்த்தார். அப்பறம் என் கண்ணீரைப் பார்த்ததும் கரைஞ்சிட்டார். 

     “சரி விடு இந்தக் கல்யாணம் நடக்காது. அவன் வேற ஒரு பெண்ணை விரும்புறான். அந்தக் கல்யாணத்தை நடத்தி வைக்கச் சொல்லி என்கிட்ட தான் உதவி கேட்டிருக்கான். இன்னிக்கு அவன் பேரன்ட்ஸ்கிட்ட இதப் பத்தி பேசலாம்னு இருக்கேன். ஒத்துக்க வச்சிடுவேன் இல்லேன்னாலும்… வேண்டாம் அதப்பத்தி இப்ப என்ன, பாக்கலாம்.

     அப்பறம் கம்பெனியில என்னை வெளிநாட்டுக்கு அனுப்ப திட்டம் வச்சிருக்காங்க. நான்தான் யோசனையா இருந்தேன். இப்ப அதை ஏத்துக்கறதா சொல்லிடறேன். இரண்டு வருஷம் ஆகும் இந்தியா வர, அதுக்குள்ள உன் எதிரித்தோழியும் லைஃப்ல செட்டிலாயிடுவா கவலைப்படாதேன்னு” சொல்லி தேற்றினார்.

     “இதெல்லாம் உடனே எல்லார்கிட்டயும்…” என்று அவர் தொடங்கும் போதே அவர் வாயைப் பொத்தி “இனிமே வாயே திறக்கமாட்டேன்” என்று என் வாயையும் இறுக்கி மூடிக் கொண்டேன்.

எழுத்தாளர் மைதிலி ராமையா எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கைப் பயணம்💗(சிறுகதை) – நாமக்கல் எம்.வேலு

    விளையாட்டு மோதிரம்! (சிறுகதை) – காந்திமதி உலகநாதன்